இன்றைக்கு சுவிசேஷங்களானவை சமூகத்தில் எந்த வடிவினில் வழங்கப்பட்டு வருகின்றனவோ அந்த வடிவிலேயே தான் பரிசுத்த ஆவியானவர் அவற்றை வழங்கி இருக்கின்றார் என்ற ஒரு தவறான நம்பிக்கை சமூகத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. அந்த தவறான நம்பிக்கையினால் தவறாக வழிநடத்தப்படாது இருக்க வேண்டும் என்றால் மேற்கூறிய அனைத்தினையும் வாசகர்கள் தங்களின் நினைவினில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் சுவிசேஷத்தில் இருக்கும் வசனங்களில் சிலவற்றை தேவை அற்றது என்று ஒதுக்கித் தள்ளுவதும் சில வசனங்களை மற்ற வசனங்களைக் கொண்டு தெளிவாக விளக்குவதும் குற்றமான செயல்கள் அல்ல என்பதனையும் வாசகர்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். மாறாக அவ்வாறு செய்யாமல், வெறுமன ஒரு சில வசனங்களை மட்டுமே புனிதமானவை என்று கருதிக் கொண்டிருப்பது தான் அறிவுக்கு ஒவ்வாத செயலாக இருக்கின்றது என்பதையும் அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நான் சுவிசேஷ நூல்களை புனிதமான நூல்கள் என்றோ அவை பரிசுத்த ஆவியினிடம் இருந்து நேரடியாக நமக்கு அருளப்பட்டு இருக்கின்றன என்றோ கருதவில்லை. அவ்வாறு இருக்கையில் ,சமயம் சார்ந்த படைப்புகளில் காலத்தில் எஞ்சி நிற்கும் வெறும் வரலாற்றுச் சின்னங்கள் என்று அவற்றை நான் கருதுவதற்கு சாத்தியக்கூறுகள் மேலும் குறைவானதாகவே தான் இருக்கும் என்பதனை வாசகர்கள் நினைவிற்கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றேன். சுவிசேஷங்களில் இருந்து கிடைக்கப்பெறும் இறைவனைப் பற்றியப் பார்வையையும் சரி, வரலாற்றினைப் பற்றியப் பார்வையும் சரி நான் நன்கறிவேன். இருந்தும் அந்தச் சுவிசேஷங்களை நான் வேறு நிலையில் இருந்தே காணுகின்றேன். எனவே சுவிசேஷங்களைப் பற்றித் திருச்சபைகள் கொண்டிருக்கும் பார்வையினை வைத்தோ அல்லது இன்று நம்மிடையே இருக்கும் படித்த மக்கள் அவற்றைப் பற்றிக் கொண்டிருக்கும் வரலாற்றுப் பார்வையினை வைத்தோ வாசகர்கள் தங்களைக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்றே வேண்டிக் கொள்கின்றேன். திருச்சபையின் பார்வையையோ அல்லது படித்த மக்களின் வரலாற்று நோக்குப் பார்வையையோ இவ்விரண்டில் நான் எதனையும் கொண்டிருக்கவில்லை.

கிருத்துவத்தை ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வாகவோ அல்லது தெய்வீகமான வெளிப்பாடாகவோ நான் கருதவில்லை. மாறாக வாழ்வுக்கு அர்த்தத்தினைத் தரும் ஒரு போதனையாகவே நான் அதனைக் காணுகின்றேன். வரலாற்று நிகழ்வுகளைக் குறித்த தேடல்களோ அல்லது இறைவனைக் குறித்த தேடல்களோ என்னை கிருத்துவத்தில் கொண்டு வந்து சேர்க்கவில்லை. மாறாக என்னுடைய ஐம்பதாவது வயதில் நான் கொண்ட நான் யார் என்றத் தேடலும் என்னுடைய வாழ்வின் அர்த்தம் என்ன என்றத் தேடலுமே என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தது. நான் யார்? என்னுடைய வாழ்வின் அர்த்தம் என்ன என்றே நான் கேள்விகளை என்னிடமும் சரி என்னைச் சுற்றி இருந்தப் படித்த மக்களிடமும் சரி, கேட்டேன். அதற்கு அவர்களிடம் இருந்து எனக்கு விடையாகக் கிட்டியது 'தற்செயலாக ஒன்று சேர்ந்த அணுக்களின் சேர்க்கை தான் நான். வாழ்வென்பதில் அர்த்தம் ஏதும் இல்லை, வாழ்வென்பதே துன்பம் தான்' என்ற பதில் தான். அதனைக் கேட்ட நான் மிகுந்த துன்பத்தில் வீழ்ந்தேன். என்னுடைய வாழ்வினை முடித்துக் கொள்ளவே விரும்பினேன். ஆனால் சிறு வயதினில் நான் நம்பிக்கைக் கொண்டிருந்தவனாக இருந்த பொழுது வாழ்வென்பது அர்த்தமுள்ள ஒன்றாகவே எனக்குத் தோன்றி இருந்தது. அது எனக்கு நன்றாக நினைவில் இருந்தது. மேலும் என்னைச் சுற்றிப் பொருளாசையினால் கெடுக்கப்படாதிருந்த பெருந்திரளான மக்கள் வாழ்வென்பது அர்த்தமுள்ள ஒன்று என்பதனில் நம்பிக்கைக் கொண்டே இருந்தனர் என்றே நான் அறிந்தும் இருந்தேன். எனவே என்னுடைய வட்டத்தினில் இருந்த அந்த படித்த மனிதர்கள் வாழ்வினைக் குறித்து எனக்குத் தந்த விளக்கத்தின் மெய்த்தன்மையை நான் சந்தேகிக்கலானேன். மெய்யான வாழ்வினைக் குறித்து கிருத்துவம் கொடுக்கும் விளக்கத்தினைப் புரிந்துக் கொள்ள நான் முற்பட்டேன். எனவே வாழ்வென்ற ஒன்று இருக்கின்றது என்று நம்பிக்கை கொண்டிருந்த மனிதர்களின் வாழ்விற்கு வழிக்காட்டிக் கொண்டிருந்த கிருத்துவ போதனைகளில் நான் கிருத்துவத்தை தேட ஆரம்பித்தேன். நம்முடைய இயல்பு வாழ்வினில் கடைபிடிக்கப்படும் கிருத்துவத்தைக் குறித்து நான் படிக்கலானேன். அவ்வாறே அதனைக் கிருத்துவத்தின் மெய்யான கருத்துக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் ஆரம்பித்தேன்.

கிருத்துவ போதனைகளின் மூலமாக இந்தச் சுவிசேஷங்களே இருக்கின்றன. அவற்றிலேயே தான் நான் மெய்யான வாழ்வினை வாழ்ந்துக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்வினை வழிநடத்திக் கொண்டிருக்கும் ஆவியினைக் குறித்த விளக்கங்களைக் கண்டறிந்தேன். ஆனால் வாழ்க்கைக்குரிய தூயநீராக இருக்கும் அவற்றுடன் தவறுதலாக சேறும் சகதியும் கலந்து இருப்பதனைக் கண்டேன். சேறும் சகதியும் அந்தத் தூயநீரினைக் களங்கப்படுத்தி இருந்த காரணத்தினாலேயே தான் என்னால் அந்தத் தூயநீரினை முதலில் கண்டுக் கொள்ள முடியாது இருந்தது. அந்த நீரின் தூயத்தன்மையினை அந்தச் சேறும் சகதியும் என்னிடமிருந்து மறைத்து வைத்திருந்தன. உயர்ந்தத் தன்மையுடையதான கிருத்துவ போதனைகளுடன், அவற்றுக்கு அன்னியமான எபிரேய போதனைகளும் திருச்சபை போதனைகளும் ஒருசேர கலந்து இருப்பதனை நான் கண்டேன்.

துர்நாற்றம் வீசக்கூடிய கழிவுகளைக் கொண்டிருக்கும் பையினைப் பெற்றுக் கொண்ட ஒரு மனிதனைப் போன்றே என்னுடைய நிலைமையும் இருந்தது. நீண்டகாலத்திற்கும் போராட்டத்திற்கும் பின்னரே அவன் அந்தக் குப்பைகளின் மத்தியில் விலைமதிப்பில்லாத முத்துக்கள் இருப்பதனைக் கண்டுக் கொள்கின்றான். நாற்றமடித்துக் கொண்டிருந்த அந்த அழுக்கினை அவன் வெறுத்ததற்கு அவனைக் குறைக் கூற இயலாது என்பதனை அப்பொழுது அவன் உணர்ந்துக் கொள்கின்றான். அதனைப் போன்றே விலைமதிப்பில்லாத அந்த முத்துக்களை குப்பைகளோடு சேர்த்து பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்த மக்களின் மீது அவன் குறைக்கூற இயலாது என்பதையும் அவன் உணர்ந்துக் கொண்டான். அவர்கள் அவனுடைய அன்பிற்கும் மதிப்பிற்கும் மாத்திரமே உரியவர்கள் என்பதனை அவன் அறிந்துக் கொண்டான்.


நான் ஒளியினை அறிந்து இருக்கவில்லை. மேலும் வாழ்க்கையினில் கண்டறிவதற்கு என்று எந்த ஒரு உண்மையான ஒளியும் இல்லை என்றே நான் எண்ணியும் இருந்தேன். ஆனால் மனிதர்கள் அந்த ஒளியின் மூலமாகவே வாழ்கின்றார்கள் என்பதனை நான் உணர்ந்துக் கொண்டப் பின்பு அந்த ஒளியின் மூலத்தினைக் குறித்து தேடலானேன். இறுதியில் அவற்றை சுவிசேஷங்களில் நான் கண்டு கொண்டேன். திருச்சபைகள் தவறான அர்த்தங்களைத் தந்து அந்த ஒளியினை மறைத்து வைத்திருந்தாலும் அந்த ஒளியினை நான் சுவிசேஷங்களில் இருந்து கண்டுக் கொண்டேன். அந்த ஒளியின் மூலத்தினை நான் கண்டடைந்த பொழுது மிகுந்த ஆச்சர்யமடைந்தேன். என்னுடைய வாழ்வினைக் குறித்தும் மற்றவர்களின் வாழ்வினைக் குறித்தும் நான் கொண்டிருந்த அனைத்துக் கேள்விகளுக்கும் அங்கே நான் விடைகளைக் கண்டறிந்தேன். அந்த விடைகள் மற்றத் தேசங்களில் இருந்து நான் ஏற்கனவே அறிய வந்திருந்த கருத்துக்களோடு முற்றிலுமாக ஒத்துப் போயின. மேலும் இங்கே நான் கண்டறிந்த கருத்துக்கள் மற்ற அனைத்து கருத்துக்களை விடவும் மிகவும் உயர்ந்து நின்றன.

நான் இறைவனைக் குறித்த கேள்விகளுக்கோ அல்லது வரலாற்றினைக் குறித்த கேள்விகளுக்கோ விடையினைத் தேடிக் கொண்டிருக்கவில்லை. மாறாக வாழ்வினைக் குறித்த கேள்விகளுக்கே விடையினைத் தேடிக் கொண்டிருந்தேன். எனவே எனக்கு, இயேசு என்பவர் கடவுளா இல்லையா என்பதோ அல்லது பரிசுத்த ஆவியானவர் எவரில் இருந்து தோன்றுகின்றார் என்பதோ முக்கியமான கேள்விகள் அல்ல. அவற்றைப் போன்றே எந்த சுவிசேஷம் எவரால் எழுதப்பட்டது என்ற கேள்வியோ அல்லது இந்த வசனங்களை இயேசு கூறி இருப்பாரா இல்லையா என்பதனைப் பற்றிய கேள்வியோ எனக்குத் தேவை இல்லாததும் முக்கியமில்லாததுமாகவே இருந்தது. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளாக மனிதகுலத்தினை ஞானமடைய வைத்துக் கொண்டிருக்கும் ஒளியே எனக்கு முக்கியமானதாக இருந்தது. இந்த ஒளியே என்னை ஞானமடைய வைத்தது. இன்றும் என்னுள் ஒளியூட்டிக் கொண்டே இருக்கின்றது. அந்த ஒளியே எனக்கு முக்கியமானதொன்றாக இருக்கின்றது. மாறாக அந்த ஒளியினை எந்தப் பெயரினைக் கூறி அழைப்பது என்பதோ அல்லது எந்த நூலினில் எவர் எவரெல்லாம் தங்களது கருத்துக்களை இடைச்செருகலாக சேர்த்து உள்ளார்கள் என்பதோ எனக்கு ஒரு பொருட்டாகப்படவில்லை.

ஒருவேளை சுவிசேஷ புத்தகங்களானவை தற்காலியமாக கண்டுப்பிடிக்கப்பட்டு இருந்திருந்தாலோ அல்லது இயேசுவின் போதனைகள் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளாக தவறான விளக்கங்களால் பாதிக்கப்பட்டிராமல் இருந்திருந்தாலோ என்னுடைய இந்த முன்னுரையானது இத்துடன் முடிவிற்கு வந்திருக்கும். ஆனால் இப்பொழுதோ இயேசுவின் போதனைகளை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால், இயேசுவின் கருத்துக்களுக்குத் தவறான விளக்கங்கள் எந்த வழிகளில் எல்லாம் வழங்கப்பட்டு வருகின்றன என்பதனைப் பற்றியும் அவருடைய கருத்துக்கள் எவ்வாறு மறைக்கப்பட்டு இருக்கின்றன என்பதனைப் பற்றியும் நாம் கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது.

தொடரும்...!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி