சென்ற பதிவில் 'முதலாளி, சுய சார்பு தொழிற்சாலை, இயந்திரங்கள், மனிதர்கள்' என்று ஒரு சிறு கதையினைக் கண்டோம். இப்பொழுது அந்த கதையினைத் தான் நாம் கிருத்துவர்களின் நம்பிக்கையினோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

அனைத்தையும் உருவாக்கிய அந்த முதலாளியாக இறைவன் இருக்கின்றார். அவர் உருவாக்கிய அந்த 'சுய சார்புத் திறன்' கொண்ட தொழிற்சாலையாக இந்த உலகம் இருக்கின்றது. அதில் இருக்கும் திறன் வாய்ந்த இயந்திரங்களாக 'மரங்கள், விலங்குகள், பறவைகள்' என்று ஓரறிவு முதல் ஐந்தறிவு படைத்த உயிரினங்கள் இருக்கின்றன (விலங்குகள் பறவைகள் போன்றவை எவ்வாறு படைக்கப்பட்டனவோ அவ்வாறு மட்டுமே தான் அவற்றால் இருக்க முடியும். அவற்றால் அவற்றின் குணத்தை மாற்ற முடியாது. அதனால் தான் அவற்றிற்கு கிருத்துவ நம்பிக்கையின்படி நியாயத் தீர்ப்பு கிடையாது. எனவே அவற்றை இயந்திரங்களாக நாம் இங்கே கருதி இருக்கின்றோம்). மனிதர்களாக மனிதர்களே இருக்கின்றோம். மனிதர்களுக்கு உதவி செய்வதற்காக உருவாக்கப்பட்ட அந்த 'சுய சிந்தனையுடைய' இயந்திரங்களாக தேவதைகள்/தேவர்கள் இருக்கின்றனர். மனிதர்களின் மீது பொறாமை கொண்டு அவர்களுள் பிரிவினைகளை உருவாக்கிய அந்த ஒற்றை 'சுய சிந்தனையுடைய' இயந்திரமாய் சாத்தான் இருக்கின்றான் (சாத்தான் என்பவன் வீழ்ந்த தேவ தூதன் என்ற விடயத்தினை நினைவிற் கொள்ளவும்).

இந்நிலையில் பொறாமையால் வீழ்ந்த அந்த இயந்திரத்தின் தூண்டுதலால் கேடுற்ற அந்த மனிதர்களையும், அந்த மனிதர்களின் செயல்களால் பாழாகிக் கொண்டிருக்கின்ற அந்த தொழிற்சாலையையும் மற்ற இயந்திரங்களையும் காப்பாற்றுவதற்கு அந்த முதலாளியே, வேறு யாரும் அறியாத வண்ணம், ஒரு தொழிலாளியாக வந்து அந்த 'பொறாமையால் வீழ்ந்த' இயந்திரத்தினை வெல்ல வேண்டுமா என்ன? என்ற கேள்வியினையும் இயந்திரத்தினை படைத்த அந்த முதலாளியால் அந்த இயந்திரத்தை அழிக்க முடியாதா? அல்லது அதன் வடிவமைப்பை மாற்றி அமைக்க முடியாதா? இல்லையேல் அந்த மனிதர்கள் அனைவரையும் துரத்திவிட்டு அவர்களுக்கு பதிலாக 'சுய சிந்தனையற்ற' இயந்திர மனிதர்களை வடிவமைத்து அவர்களை அந்த தொழிற்சாலையில் பயன்படுத்திக் கொள்ள முடியாதா? என்ற கேள்வியினையும் தான் நாம் சென்ற பதிவின் இறுதியில் கண்டிருந்தோம்.

இதே கேள்விகளைத் தான் நாம் கிருத்துவ சமயக் கோட்பாட்டின் முன்பாகவும் வைக்க வேண்டி இருக்கின்றது.

இறைவன் உலகினைப் படைத்தார். அந்த உலகத்தினை ஆண்டு கொள்ளுமாறு மனிதர்களிடம் அவர் தந்தார். சாத்தான் மனிதனை பாவம் செய்ய வைத்தது, அதன் விளைவாக மனிதன் பாவியானான்...மரணமும் உலகினுள் வந்தது. பின்னர் இறைவன் மனிதனாக வந்து மனிதனுடைய பாவத்திற்காக இரத்தம் சிந்தினார். இறைவன் தனக்காக செய்த தியாகத்தை எண்ணி மனிதன் அவரை வணங்கி ஏற்றுக் கொள்ள வேண்டும். இறைவன் மீண்டும் இந்த உலகத்திற்கு வருவார்...அப்பொழுது அவர் முற்றிலுமாக சாத்தானை வெற்றிக் கொள்வார். அப்பொழுது அவரை எந்த மக்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்களோ அவர்களை எல்லாம் அவர் தன்னுடன் அழைத்துக் கொள்வார். இறைவனை ஏற்றுக் கொள்ளாத மக்கள் மரித்துப் போவர். இது தான் கிருத்துவ சமயத்தின் இன்றைய கோட்பாடாகும். இதனைத் தான் இன்றைக்கு திருச்சபைகள் போதித்துக் கொண்டிருக்கின்றன, அதனை அப்படியே கேள்வி ஏதும் கேட்காமல் கிருத்துவ மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நம்மால் அப்படி இருக்க முடியாது. நாம் கேள்விகளை எழுப்பத் தான் வேண்டி இருக்கின்றது.

சாத்தான் மனிதர்களை கெடுக்கின்றான்...அதன் விளைவாக பாவமானது உலகத்தில் நுழைந்து உலகினையும் மனிதர்களையும் நாசமாக்குகின்றது என்பதெல்லாம் சரி தான். ஆனால் இங்கே கேள்வி என்னவென்றால் சர்வ வல்லமை படைத்த இறைவன் எதற்காக மனிதனாக வர வேண்டும்? சாத்தானை வெல்வதற்காக இறைவன் மனிதனாக வந்தார் என்று கூறினால் இங்கே மேலும் இரண்டு கேள்விகள் எழும்புகின்றன...

சர்வ வல்லமை படைத்த இறைவனால், மனிதனாக வந்தால் மட்டும் தான் சாத்தானை வெல்ல முடியுமா?

இறைவனுடன் சரிக்கு சமமாக போட்டியிடும் அளவுக்கு சாத்தான் வல்லமைப் பெற்றவனா?

'நிச்சயமாக இல்லை' என்பதே இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடையாக இருக்கின்றது. 'சாத்தானே மரித்துப் போ' என்று இறைவன் கூறினால் சாத்தான் மரித்துப் போய் விடுமே. இறைவனின் ஒரு படைப்பான ஒரு தேவ தூதன் தானே அது. எவ்வாறு தான் உருவாக்கிய இயந்திரத்தை அழிப்பதற்கு ஒரு முதலாளிக்கு அனைத்து ஆற்றலும் இருக்கின்றதோ, அதனைப் போன்றே தான் உருவாக்கிய தேவ தூதன் சரியாக பணி செய்யாவிட்டால் அவனை இறைவனால் அழிக்க முடியுமே...ஒரு நொடியில் அழித்து விட முடியுமே...அவ்வாறு இருக்க, அவர் எதற்காக மனிதனாக வந்து சாத்தானுடன் மோத வேண்டும்?

சரி இருக்கட்டும்...இறைவன் ஏதோ ஒரு காரணத்திற்காக மனிதனாக வந்தார் என்றே இப்போதைக்கு வைத்துக் கொள்வோம். ஆனால், மனிதனாக வந்த இறைவன் சாத்தானுடன் நேரடியாக மோதவில்லை...மாறாக சாத்தான் தான் அவரை சோதிக்கின்றது. இறைவனை சாத்தானால் சோதிக்க முடியுமா? முடியாது...அவ்வாறு இருக்க இயேசுவை சாத்தான் சோதித்தது எவ்வாறு? இறைவனை சோதிக்கும் வண்ணம் ஆற்றலினை சாத்தான் எப்படி பெற்றது? சர்வ வல்லமை பெற்ற இறைவன் எதற்காக சாத்தான் தன்னை சோதிப்பதை ஏற்றுக் கொண்டார்?

சரி இருக்கட்டும்...இறைவன் ஏதோ ஒரு காரணத்திற்காக சாத்தான் தன்னை சோதிப்பதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால் எதற்காக அவர் மரணிக்க வேண்டும்...அல்லது பலியாக வேண்டும்? மனிதர்கள் செய்த பாவத்திற்காக அவர் பலியானார் என்றால், மனிதர்களின் பாவம் இறைவனை விட பெரியதாகி விட்டதா என்ன? இறைவன் மரணித்தால் மட்டுமே தான் மனிதர்களின் பாவமானது போகுமா என்ன? பாவமானது அவ்வளவு ஆற்றல் மிக்கதா என்ன? இறைவன் கூறியதை செய்யாதிருப்பது தானே பாவம் ஆகும்...அவ்வாறு இருக்க, 'சரி...நான் கூறியதை நீ செய்யவில்லை...ஆனால் இம்முறை உன்னை நான் மன்னித்து விடுகின்றேன்.' என்று இறைவன் மனிதர்களை மன்னித்து விட்டாலே போதுமே, பாவம் என்று ஒன்றும் இல்லாது போய் விடுமே. அவ்வாறு இருக்க, மனிதர்களின் பாவத்திற்காக இறைவன் எதற்காக பலியாக வேண்டும்.

பாவத்தையும் சாத்தானையும் ஒரு நொடியில் அழித்து விட கூடிய இறைவன், அவ்வாறு செய்யாமல், மனிதனாக வந்து உயிர் துறப்பது என்பது எதற்காக?

இறைவன் மனிதனாக வருவது, பலியாவது போன்ற மிகப்பெரிய விடயங்களை, வெகு சாதாரணமான நிகழ்வுகள் போன்றே இன்றைக்கு கிருத்துவர்கள் கருதிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கின்றனர். மாறாக நாம் மேலே கண்டு இருக்கும் கேள்விகளைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று கூட அவர்கள் கருதுவது கிடையாது.

'இறைவன் மனிதராக வந்தார்...நம்முடைய பாவங்களுக்காக பலியானார். அவரை ஏற்றுக் கொண்டால் நமக்கு நித்திய வாழ்வு கிடைக்கும்.' என்று திருச்சபைகள் அவர்களுக்கு கூறி இருக்கக்கூடிய விடயங்களை மட்டுமே அவர்கள் கூறிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால், அவர்கள் சிந்திக்காத அந்த கேள்விகளைப் பற்றி நாம் சிந்தித்ததாகத் தான் வேண்டி இருக்கின்றது...!!!

சிந்திப்போம்...!!!

பி.கு:
மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

1 கருத்துகள்:

before going to subject of GOD we must know the definition of GOD
As common definition of GOD is, HE is having super power more than livings or man(or jeevatmas)

No thinking is come out from the man or angles without HIS desires

Then how an angle is getting jeopardies without HIS desires
So, from the above history we come to know that GOD only created both (MAN & SAITAN)
From the Hindu puranas we come to know that even though GOD is having more power HE
can't do as HE lilkes all times.

When DEVAS (Angles) asked GOD to Kill a ASURA
HE didn't do immediatly, HE replied the DEVAS to wait till TIME come

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி