சென்ற பதிவில் 'இராயனுக்கு உரியதை இராயனுக்குத் தாருங்கள்' என்று இயேசு ஏன் கூறினார் என்பதனைக் குறித்தே நாம் கண்டோம். இப்பொழுது அதனைக் குறித்தே தான் நாம் மேலும் சற்று காண வேண்டி இருக்கின்றது.

இறைவன் அனைத்தையும் அனைவருக்கும் பொதுவாக இருக்கும்படியே தான் படைத்து இருக்கின்றார். இயற்கை மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்கின்றது. அனைத்தும் இலவசமாகவே மனிதர்களுக்குத் தரப்பட்டு இருக்கின்றது. மனிதர்களுக்குள் வேறுபாடுகளை இயற்கை காண்பதில்லை...இறைவனும் காண்பதில்லை. இதனை இயேசு கூறிய 'இறைவன் நல்லோர் மீதும் தீயோர் மீதும் ஒன்றினைப் போலவே தான் சூரியனை உதிக்கப் பண்ணுகிறார். அவர்களுள் வேறுபாடுகள் காணாமல் அனைவரின் மீதும் மழையினைப் பொழிய செய்கின்றார்' என்ற வசனங்களின் மூலமாக நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. இறைவன் மனிதர்களுள் வேறுபாடு காணாது அவர்களை ஒன்றாகவே காணுகின்றார். அதுவே அவரது விருப்பமாக இருக்கின்றது.

ஆனால் மனிதர்களோ ஒற்றுமையாக இருப்பதில்லை. அவர்கள் தங்களுக்குள்ளேயே பல்வேறு பிரிவுகளாக பிரிந்து இருக்கின்றனர். 'நான்' என்ற ஆணவத்தினால் வருகின்ற சுயநலமும், பணம் மற்றும் பொருட்களால் வருகின்ற பேராசையும் மனிதர்களை ஒற்றுமையாக இருக்க முடியாதபடிக்கு பிரித்து வைத்திருக்கின்றன. இந்த சுயநல சிந்தனைகளும் பேராசையும் இறைவனிடம் இருந்து வருவதில்லை, அவை சாத்தானிடம் இருந்து வருகின்றன. 'பணம்' இறைவன் படைத்த ஒன்றல்ல. அது மனிதன் படைத்த ஒன்று. 'இலவசமாக பெற்றீர்கள்...இலவசமாக கொடுங்கள்' என்ற இயேசுவின் கூற்றுக்கு முற்றிலும் எதிராக இருக்கின்ற ஒன்று அது. அதனை வைத்துத் தான் தீமையானது மக்களைப் பிரிக்கின்றது. இதனை இயேசு நன்றாக அறிவார்.
 
அதனால் தான் அவர் தெளிவாக செல்வத்திற்கும் இறைவனுக்கும் துளியளவு கூட தொடர்பில்லை என்று கூறி இருக்கின்றார். 'ஒன்று ஒருவன் பணத்திற்காக வேலை செய்து கொண்டிருக்க வேண்டும்...இல்லையேல் இறைவனுக்காக வேலை செய்து கொண்டிருக்க வேண்டும். ஒன்று அவன் பணத்தை தன்னுடைய எசமானனாக கொண்டிருக்க வேண்டும்...இல்லையேல் இறைவனை எசமானனாக கொண்டிருக்க வேண்டும். மாறாக ஒரே நேரத்தில் இரண்டு எசமானர்களுக்கு ஒருவனால் வேலை செய்து கொண்டிருக்க முடியாது.' என்பதே இயேசுவின் கூற்றாக இருக்கின்றது. இதன் அடிப்படையில் தான் நாம் 'இராயனுக்கு உரியதை இராயனுக்குத் தாருங்கள்' என்ற இயேசுவின் கூற்றினைக் காண வேண்டி இருக்கின்றது.

"ஒருவன் உன்னிடமிருந்து பணத்தையோ அல்லது பொருளையோ கேட்கின்றானா, அதனை அவனிடமே தந்து விடு. மனிதன் உருவாக்கிய அவற்றுக்காக நீ சண்டையிடாதே. எப்பொழுது நீ விட்டுக் கொடுக்கின்றாயோ அப்பொழுது நீ பேராசை/ஆசை என்கின்ற தீய குணத்தினை வென்றவன் ஆகின்றாய். இறைவனின் அருளும் உன்னுள் கூடுகின்றது. இறைவனின் மகன் நீ என்கின்ற ஒரு நிலைக்கு நீ உரித்தவனாகின்றாய். தீமை உன்னிடம் தோற்று விடுகின்றது. அதே சமயம், உன்னிடம் இருந்து பொருளை கேட்பவனுக்குள் இருக்கின்ற தீமையை மேலும் வளர விடாதவாறே நீ செய்தும் விடுகின்றாய். மனிதர்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகளாகவே இருக்கின்றனர். எனவே, அவன் இப்பொழுது தீமையில் விழுந்து இருந்தாலும், உன்னுடைய அந்த தீமையற்ற தியாகச் செயலினால் அவனும் நிச்சயமாக இன்றில்லாவிடில் வேறு என்றாவது மாற கூடும். ஆனால் முக்கியமான விடயமாக நீ தீமையை வென்று விட்டாய்.

மாறாக நீயும் அவனுடன் அந்த பொருளுக்காக சண்டையிட்டுக் கொண்டாய் என்றால் தீமையானது உன்னுள் நுழைவதற்கு நீயும் வழி வகுத்தவனாகின்றாய். அவனுள்ளும் தீமை தொடர்ந்து வளரும்...உன்னுள்ளும் தொடர்ந்து வளரும். உங்களில் யார் வென்றாலும் சரி...இறுதியில் தீமையே வென்று இருக்கும். எனவே பொருள்/பணம் என்று மனிதன் படைத்த எதுவாக இருந்த போதிலும் அவற்றைப் பொருட்படுத்தாது தியாகம் செய்வதற்கு தயாராக இருங்கள். அரசன் உங்களிடம் இருந்து வரியினைக் கேட்கின்றானா...கொடுத்து விடுங்கள். பணத்திற்கும் இறைவனுக்கும் தொடர்பில்லை. ஆனால் நீங்களோ இறைவனின் குழந்தையாக இருக்கின்றீர்கள். எனவே இறைவனின் கட்டளைகளுக்கு மட்டும் நீங்கள் கட்டுப்பட்டு இருக்க வேண்டி இருக்கின்றது. இறைவனுக்கு சொந்தமான உங்களை, இறைவனின் விருப்பத்திற்கு எதிரான காரியத்தினை செய்வதற்காக யார் வற்புறுத்தினாலும் அதற்கு இணங்காதீர்கள். இறைவனுக்கு மட்டுமே நீங்கள் உரியவர்களாக இருக்கின்றீர்கள். எனவே இறைவன் கூறிய கட்டளைகளான,
 
  1. கோபம் கொள்ளாதீர்கள். அனைத்து மக்களிடமும் சமாதானத்துடனேயே இருங்கள்.

2. விபச்சாரத்தின் மூலம் உங்களை நீங்களே மகிழ்வித்துக் கொள்ளாதீர்கள்.

3. எவரிடத்தும் எக்காலத்திற்கும் எவ்விதமான உறுதிமொழியினையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

4. தீமையினை எதிர்க்காதீர்கள். எவரையும் நியாயந்தீர்க்காதீர்கள், மனித சட்டத்தினிடமும் செல்லாதீர்கள்.

5. வெவ்வேறு நாடுகளிடையே பிரிவுகளை உருவாக்காதீர்கள். உங்களுடைய நாட்டு மக்களை நேசிப்பதைப் போன்றே பிற நாட்டவர்களையும் நேசியுங்கள்.
 
இவற்றை நீங்கள் தவறாது கடை பிடிக்க வேண்டி இருக்கின்றது. இவற்றில் இருந்து உங்களை யாரும் விலக்க முடியாது. அவர்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது. நீங்கள் இறைவனின் பிள்ளைகள். எவருக்கும் அடிமைகளில்லை." என்பதே தான் அவர் கூறிய முழுமையான அர்த்தமாகும். நிற்க.
 
இது எல்லாம் நடைமுறை சாத்தியமாக முடியுமா என்கின்ற கேள்வி இயல்பாகவே பலருக்கும் வரும். நிச்சயமாக கடினம் தான்...ஆனால் முடியாதது இல்லை. அவற்றுக்காகத் தான் ஆன்மீகம் சார்ந்தோர் உழைக்க வேண்டும். அது மட்டுமே தான் அவர்களது வேலையாக இருக்கின்றது.
 
இன்று கிருத்துவர்களுக்கு மற்ற சமயத்தினருக்கும் வழிபாட்டு முறையினைத் தவிர வேறு பெரிய வித்தியாசங்கள் கிடையாது. வாழ்க்கை முறையானது கிட்டத்தட்ட ஒன்றாகவே தான் இருக்கின்றது. எனவே அவர்களுக்கு இயேசுவின் இந்த கூற்றுகள் நிச்சயமாக கடினமானதாகத் தான் தோன்றும்.

அதில் வியப்பில்லை..ஏனென்றால் கிருத்துவம் என்பது எளிமையான ஒரு கோட்பாடு அல்ல. சர்வ வல்லமை படைத்த இறைவன் மனிதனாக வந்து மரணிப்பது என்பது சொல்வது போல் அவ்வளவு எளிதான கோட்பாடு அல்ல தான். இதனைக் கூறாத அனைத்து திருச்சபைகளும் கிருத்துவ மக்களை ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கின்றன. இதனை கிருத்துவ மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

முற்றும்.

பி.கு:
 
இயேசு, கிருத்துவ நூலின் வசனங்கள் என்று கிட்டத்தட்ட ஒரு கிருத்துவ சமய கருத்துரையினைப் போன்றே இந்த கட்டுரையானது தோன்றினாலும் ( :) நிச்சயமாக அப்படித்தான் தோணும்.) இவற்றில் மனித சமூதாயத்திற்கான உண்மைகளும் இருக்கின்றன என்பதாலேயே தான் பதிவிடுகின்றேன் (நான் கிருத்துவ சமயத்தினைச் சார்ந்தவன் அல்ல என்பதையும் இங்கே கூறிக் கொள்ள விழைகிறேன்).

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி