ஒரு ஊரில் ஒரு திறமையான முதலாளி ஒருவர் இருக்கின்றார். அவர் ஒரு தொழிற்சாலையைத் துவங்க எண்ணுகின்றார்.அந்த தொழிற்சாலையானது ஒரு சுயசார்புத் தொழிற்சாலையாக இருக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருக்கின்றது. எனவே அவர் அதற்கேற்றார்ப் போல் பல்வேறு இயந்திரங்களை வடிவமைக்கின்றார். அந்த பல்வேறு இயந்திரங்களின் பணிகள் வேறாக இருந்த போதிலும், அவை மிகவும் சீராக ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையபடிக்கு அருமையாக இயங்கும் வண்ணமே இருந்தன. எந்த பணிக்காக அந்த இயந்திரங்கள் படைக்கப்பட்டனவோ அந்த பணியினை அந்த இயந்திரங்கள் எவ்விதமான குழப்பமுமின்றி மிகவும் நேர்த்தியாக செய்யும் வண்ணம் சிறந்த வழிமுறைகளால் உருவாக்கப்பட்டு இருந்தன.

அந்த இயந்திரங்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்த அந்த முதலாளி, அந்த இயந்திரங்களை நிர்வாகித்து அவை தரும் பொருட்கள் பயனுள்ளவைகளாக இருக்கும் வண்ணம் அவற்றை மேற்பார்வை செய்து பயன்படுத்திக் கொள்ள எவராவது வேண்டுமே என்றே எண்ணுகின்றார். அவர் முன்னே இரண்டு வாய்ப்புகள் இருந்தன...ஒன்று, இயந்திர மனிதர்களை உருவாக்கி அவற்றை பயன்படுத்திக் கொள்வது...மற்றொன்று, சாதாரண மனிதர்களை பயன்படுத்திக் கொள்வது. இந்த இரண்டில் தான் எதையேனும் அவர் தேர்வு செய்ய வேண்டி இருந்தது.

'இயந்திரங்களை நிர்வாகிப்பதற்கு இயந்திரங்கள் எதற்கு...நாம் மனிதர்களை வைத்துக் கொள்வோம்' என்று எண்ணியே அவர் அந்த பொறுப்பினை மனிதர்களிடம் தருகின்றார். 'இங்கே பாருங்கள்...இந்த தொழிற்சாலையானது ஒரு சுயசார்பு தொழிற்சாலையாகும்...இங்கே உங்கள் அனைவரின் தேவைக்கும் போதுமான பொருட்களை இந்த இயந்திரங்களால் தாராளமாக உற்பத்தி செய்ய முடியும்...உங்களின் பணி அவற்றை நன்கு பராமரித்து தொழிற்சாலையை நன்றாக பேணுவது மட்டுமே தான். எனக்கு வேண்டியதெல்லாம் என்னுடைய இந்த அரிய கண்டுப்பிடிப்பு அனைவருக்கும் பயன் தரும் வண்ணம் இருப்பது மட்டுமே தான்' என்று கூறி அந்த தொழிற்சாலையில் அவர்கள் அனைவரையும் தொழிலாளிகளாக சேர்த்துக் கொள்கின்றார். அவர்களுக்கு உதவவும், அவர்களுக்கு இக்கட்டான சில சூழலில் வழிகாட்டுவதற்கும் சில சுயமாக சிந்திக்கும் ஆற்றலினைக் கொண்ட இயந்திரங்களையும் அவர் அங்கே வைக்கின்றார்.

அந்த மனிதர்களும் அந்த தொழிற்சாலையில் வேலை செய்யத் துவங்குகின்றனர். சிலர் சிறிய இயந்திரங்களைப் பார்த்துக் கொள்ளுகின்றனர். சிலர் பெரிய இயந்திரங்களைப் பார்த்துக் கொள்ளுகின்றனர். இயந்திரங்களின் அளவுகள் வேறுபட்டாலும், அந்த ஒவ்வொரு இயந்திரங்களின் சேவையும் அந்த தொழிற்சாலையின் 'சுய சார்புத் தன்மைக்கு' மிகவும் இன்றியமையாததாக இருந்தன. எனவே அந்த தொழிற்சாலையில் 'முக்கியமான வேலை என்றோ 'முக்கியமற்ற வேலை' என்றோ எதுவும் கிடையாது. அனைத்து வேலைகளும் முக்கியமான வேலைகளாகவே இருந்தன. இதனை அந்த மனிதர்கள் ஆரம்பத்தில் அறிந்திருந்தனர். ஆனால் காலமானது நகர நகர அதனை அவர்கள் மறந்து விட்டனர்.

அந்த மனிதர்களுக்கு உதவுவதற்கென்று வைக்கப்பட்டு இருந்த அந்த 'சுயமாக சிந்திக்கும் ஆற்றலினை' உடைய இயந்திரங்களுள் ஒன்று மனிதர்களைக் கண்டு பொறாமைப்பட ஆரம்பித்தது. 'நாமும் அவர்களைப் போல் சுயமாகத் தான் சிந்திக்கின்றோம்...இருந்தும் நாம் அவர்களுக்கு சேவை செய்யவே வேண்டி இருக்கின்றது. முதலாளி அவர்களை அவ்வளவு பெரிய இடத்தில் வைத்திருக்கின்றார். இது சரியல்ல...முதலாளி அவர்களின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையானது தவறென்று அவருக்கு புரிய வைப்போம்' என்று எண்ணியே அந்த இயந்திரமானது மனிதர்களுக்குள் வேறுபாடுகளை உண்டாக்கத் துவங்குகின்றது.

'சிறிய இயந்திரங்களை இயக்குகின்றவர்களை விட அதிகமான வேலையை பெரிய இயந்திரங்களை இயக்குகின்றவர்கள் செய்கின்றார்கள், எனவே அவர்கள் சிறிய இயந்திரங்களை இயக்குகின்ற அந்த மனிதர்களை விட சிறந்தவர்கள் என்றும் அவர்கள் அதிகமான உற்பத்திப் பொருள்களை எடுத்து வைத்து கொள்ள வேண்டும்' என்பன போன்ற வார்த்தைகளின் மூலமாக அந்த இயந்திரமானது மனிதர்களை பிரிக்கத் துவங்குகின்றது. வெகு விரைவில் பொறாமை, பேராசை, பயம், ஆணவம் என்கின்ற பல காரணிகளால் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு அந்த இயந்திரங்களையும் பாழாக்கிக் கொண்டு இருக்கத் துவங்குகின்றனர். வெகு விரைவில் 'சுய சார்புத் திறனுடன்' இருந்த அந்த தொழிற்சாலையும் அதன் ஆற்றலை இழக்கத் துவங்குகின்றது.

இந்நிலையில்,நடக்கின்ற அனைத்து செயல்களையும் கண்டு கொண்டிருக்கின்ற அந்த முதலாளியானவன் செய்ய வேண்டிய காரியம் என்னவாக இருக்கும்?

  • அனைத்து மனிதர்களையும் நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக இயந்திர மனிதர்களை (சுய சிந்தனையற்ற இயந்திரங்கள்) உருவாக்கி அவற்றின் பொறுப்பில் தொழிற்சாலையை கொடுக்கலாம்.

  • அல்லது மனிதர்களுக்கு அனைத்தையும் தெளிவாக விளக்கிவிட்டு அவர்களுள் பிரச்சனை செய்பவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று எச்சரிக்கையும் செய்துவிட்டு, அவர்களுள் பிரிவினையைத் தூண்டிய அந்த 'சுய சிந்தனையுடைய' இயந்திரத்தை ஒழித்து விடலாம்.

இவற்றை பண்ணுவதற்கு அந்த முதலாளிக்கு ஆற்றலும் இருக்கின்றது அதிகாரமும் இருக்கின்றது...எனவே இந்த செயல்கள் தாம் அவருக்கு எளிதான செயல்களாக இருக்கும். அதனை விடுத்து அந்த முதலாளியே வேறு யாரும் அறியா வண்ணம் தொழிலாளியாக வந்து தான் அந்த பிரச்சனையைத் தீர்க்க முடியுமா என்ன? இல்லைதானே...!!! மேலே சொன்ன இரண்டு தீர்வுகள் தானே சரியானதாக இருக்கக்கூடும்.

இதன் அடிப்படையில் தான் நாம் இறைவன் மனிதனாக உலகிற்கு வந்ததாக கூறப்படும் செய்தியை காண வேண்டி இருக்கின்றது...!!!

காணலாம்...!!!

பி.கு:
மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

0 comments:

பயணிகள்

Blog Archive

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி