ஆனால் ஒருவன் தன்னைத் தானே ஒழுக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அந்த கோட்பாடானது விரைவில் வலுவிழக்க ஆரம்பித்தது. ‘ஒன்று அனைத்தும் வேண்டும் அல்லது எதுவும் வேண்டாம்’ என்று கோரக்கூடிய கர்வமுள்ள மனிதர்களும், உடற் சார் சிந்தனைகளுடைய மனிதர்களும் அங்கே தோன்றலாயினர். அனைத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் தீய காரியங்களைச் செய்யத் துவங்கினர். அவ்வாறு அவர்களால் அச்செயல்களில் வெற்றி பெற இயலவில்லை என்றால் அவர்கள் தற்கொலை செய்துக் கொள்ளத் துவங்கினர். ‘நாம் ஒரு சூன்யமே…’ என்ற கோட்பாட்டினையும், நித்தியமான அமைதிக்காக தன்னைத் தானே ஒன்றுமில்லாது அழித்துக் கொள்வது என்ற கோட்பாட்டினையும் வலியுறுத்தும் சமயங்கள் அங்கே தோன்றலாயின.

அர்த்தமேதும் இல்லாத அந்த செயல்களின் மூலமாக இறுதியில் அம்மக்கள் களைப்படைந்தனர். அவர்களது முகத்தில் துயரும் தோன்றலாயிற்று. அதனைக் கண்ட அம்மக்கள் துயருறுவது அழகானது என்றும் துயரத்தில் தான் சிந்தனையானது அடங்கி இருக்கின்றது என்றும் கூறத் துவங்கினர். அவர்களது பாடல்களில் அவர்கள் துயரத்தினையே பாடினார்கள். நான் அவர்கள் மத்தியிலே அவர்களுக்காக கண்ணீர் சிந்திக் கொண்டே நடந்தேன். அவர்கள் கபடமற்றவர்களாகவும் தூய்மையானவர்களாகவும் முகத்தில் எவ்விதமான துயரும் இல்லாதிருந்த பொழுது நான் அவர்களை நேசித்ததை விட இப்பொழுது நான் அவர்களை மேலும் அதிகமாக தான் நேசிக்கின்றேன். அவர்கள் வசித்திருந்த பூமியானது சொர்கமாக இருந்த பொழுது அதனை நான் எவ்வளவு நேசித்தேனோ அதனை விட அதிகமாக, பாழ்பட்ட அவர்களது இந்த பூமியினை, அதன் மீது துயர் வந்திருக்கும் இந்த ஒரே காரணத்திற்காக, நான் இப்பொழுது நேசிக்கின்றேன்.

அந்தோ…நான் எப்பொழுதும் துயரத்தினையும் வருத்தத்தினையும் நேசித்தே தான் வந்திருக்கின்றேன். ஆனால் அவை என்னுடைய துயரங்களாகவும் வருத்தங்களாகவும் இருந்த பொழுது மட்டுமே நான் அவற்றை நேசித்து இருந்து இருக்கின்றேன். ஆனால் இப்பொழுதோ, அவர்கள் துயரப்படுவதையும் வருத்தப்படுவதையும் கண்டு நான் கண்ணீர் சிந்துகின்றேன். அவர்கள் மீது இரக்கமும் படுகின்றேன். என்னை நானே வெறுத்துக் கொண்டும் கடிந்துக் கொண்டும் வருத்தத்தோடு அவர்களை நோக்கியே நான் எனது கைகளை நீட்டுகின்றேன்.  அவர்களுடைய அனைத்துப் பாடுகளுக்கும் நானே, நான் ஒருவனே தான் காரணம் என்றே நான் அவர்களிடம் கூறினேன். அவர்களுக்கு அந்த சீரழிவினையும் அந்த பொய்யினையும் கொண்டு வந்தவன் நானே என்றே நான் கூறினேன். என்னை ஒரு சிலுவையில் அறையுமாறு நான் அவர்களை கெஞ்சினேன். சிலுவையினை எவ்வாறு செய்வது என்பதையும் நான் அவர்களுக்கு சொல்லித் தந்தேன். என்னை நானே கொலை செய்துக் கொள்ள எனக்கு வலுவில்லை…என்னால் அவ்வாறு செய்ய முடியவுமில்லை.

அவர்களது துயரத்தினை அவர்களிடம் இருந்து நீக்க வேண்டும் என்றே நான் விரும்பினேன். அவர்களுக்காக நான் துயரப்பட வேண்டும் என்றே நான் ஏங்கினேன்…எனது இறுதிச் சொட்டு இரத்தத்தினையும் அந்த துயரத்தினால் சிந்த வேண்டும் என்றே நான் ஏங்கினேன். ஆனால் அவர்கள் என்னைக் கண்டு சிரிக்க மட்டுமே செய்தனர். இறுதியில் நான் ஏதோ ஒரு வகையான ‘புனித முட்டாள்’ என்றே அவர்கள் கருதவும் செய்தனர். அவர்களுக்கு எது சரி என்று படுகின்றதோ அதனையே தான் அவர்கள் பெற்று இருக்கின்றனர் என்றும், அவர்களது நிலையானது வேறு எப்படியும் இருந்திருக்க முடியாது என்றுமே அவர்கள் என்னிடம் உறுதியாக கூறினார்கள். நான் அவர்களுக்கு ஆபத்தினை விளைவிப்பவனாக மாறி வருகின்றேன் என்றும் நான் அமைதியாக இல்லாவிடில் என்னை ஒரு பையித்தியக்கார விடுதியினில் அடைத்து வைக்க வேண்டி இருக்கும் என்றுமே அவர்கள் இறுதியில் கூறினார்கள். அந்நொடியில் என்னுடைய இதயத்தினை பயங்கர சோகமானது தாக்கியது. அதன் விளைவாக எனது இதயமானது உடைந்தது போன்றும் நான் மரணமடையப் போவதனைப் போன்றுமே நான் உணர்ந்தேன். அந்நொடியில்…நான் அக்கனவில் இருந்து விழித்து எழுந்தேன்.
நான் விழித்தெழுந்தப் பொழுது கிட்டத்தட்ட விடிந்திருந்தது. நான் அமர்ந்திருந்த அதே கை நாற்காலியிலேயே நான் நினைவு திரும்பி இருந்தேன். எனக்கு முன்னே இருந்திருந்த அந்த மெழுகுவர்த்தியானது கிட்டத்தட்ட முழுவதுமாய் எரிந்து முடிந்திருந்தது. அந்த கப்பல் தலைவனின் அறையில் இருந்தவர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அபூர்வமான ஒரு அமைதி நான் இருந்த அந்த இடத்தில் நிலவிக் கொண்டிருந்தது.

மிகுந்த ஆச்சர்யத்துடன் நான் துள்ளி எழுந்தேன். அந்த மாதிரி அதுவரை என்னுடைய வாழ்வினில் எதுவும் நடந்ததே இல்லை…சின்ன சின்ன விடயங்கள் கூட புதிதாகத் தான் இருந்தன…உதாரணத்திற்கு, என்னுடைய கை நாற்காலியில் நான் அதுவரை உறங்கிப் போனதே கிடையாது. நான் அவ்வாறு நின்று கொண்டு நிதானமாய் அனைத்தையும் நினைவுப் படுத்திக் கொண்டிருக்கும் பொழுது குண்டுகள் நிரப்பப்பட்டு தயாராக இருந்த எனது கைத் துப்பாக்கியானது எனது கண் முன்னே தோன்றியது. ஆனால் அந்த நொடியே அதனை நான் என்னை விட்டு விலக்கித் தள்ளினேன். நான் எனது கைகள் இரண்டையும் உயரே உயர்த்தி நித்தியமான உண்மையினை நோக்கி அழைத்தேன்…இல்லை…சரியாக சொல்லுவதென்றால் நான் அழைக்கவில்லை…மாறாக அழுதேன். ஒரு பரமானந்த நிலை கட்டுக்கடங்காத ஆனந்தம் என்னை முழுமையாக ஒரு உயர்ந்த நிலைக்கு உயர்த்திக் கொண்டிருந்தது. ஆ…வாழ்க்கை…அது தான் எவ்வளவு முக்கியமானது…ஆம்…அத்துடன் போதிப்பதும் தான்…!!! அந்த நொடியே நான் போதிக்கத் துவங்க வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டேன்…ஆம்…என்னுடைய வாழ்க்கை முழுமையும் நான் போதித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றே நான் முடிவு செய்துக் கொண்டேன். நான் போதிப்பதற்காக வெளிஉலகினுள் செல்லப் போகின்றேன்…போதிக்க வேண்டும் என்றே நான் விரும்பவும் செய்கின்றேன். எதனை நான் போதிக்கப் போகின்றேன்? உண்மையினை…!!! எனது சொந்தக் கண்களினாலேயே நான் அதனை, அதனது முழுமையான மகிமையிலே கண்டேன். அதனையே நான் போதிக்கப் போகின்றேன்.

அந்த நொடியில் இருந்து நான் போதித்துக் கொண்டே தான் இருக்கின்றேன். உங்களுக்குத் தெரியுமா, இப்பொழுதெல்லாம், யார் என்னைக் கண்டு சிரிக்கின்றார்களோ அவர்களைத் தான் நான் மற்ற அனைவரையும் விட அதிகமாக நேசிக்கின்றேன். ஏன் அவ்வாறு இருக்கின்றேன் என்பது எனக்குத் தெரியவில்லை…மேலும் அதனை விளக்கவும் எனக்குத் தெரியவில்லை…இருந்தும் அது அவ்வாறே இருந்து விட்டு போகட்டும். நான் இப்பொழுதே குழம்பத் துவங்கி விட்டேன் என்றே அவர்கள் கூறுகின்றார்கள். அதாவது, இப்பொழுதே நான் குழம்பத் துவங்கி விட்டால் பின்னர் நான் எவ்வாறு இருப்பேன் என்றே அவர்கள் கூறுகின்றார்கள். ஆம்…உண்மை தான்…இப்பொழுது நான் சிறிது குழப்பம் அடையத் தான் செய்கின்றேன்…ஒருவேளை பின்னர் அது மோசமாகவும் போகலாம். ஆனால், எவ்வாறு போதிப்பது, எந்தச் செயல்களைக் கொண்டு…எந்த வார்த்தைகளைக் கொண்டு போதிக்க வேண்டும் என்று கண்டுப்பிடிப்பதற்கு முன்னர் நிச்சயமாய் நான் ஒரு சில சமயம் குழப்பமடையத் தான் போகின்றேன். ஏனென்றால் போதிப்பது என்பது எளிதான ஒரு காரியம் அல்ல…அது கடினமான ஒன்றாகும். அது எனக்கு மிகவும் தெளிவாக, ஒரு பகலைப் போன்றே புலப்படுகின்றது.

ஆனால் குழப்பமே அடையாத ஒரு மனிதன் இங்கே எங்கேனும் இருக்கின்றானா? அனைவரும் ஒன்றினை நோக்கியே தான் சென்றுக் கொண்டிருக்கின்றனர். துறவியாக இருந்தாலும் சரி திருடனாக இருந்தாலும் சரி ஒன்றினை நோக்கியே தான் அவர்கள் வெவ்வேறு பாதைகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இது பழமையான ஒரு உண்மையாகும். ஆனால் இங்கே புதிதாக என்ன இருக்கின்றது என்றால் : நான் மிகவும் குழப்படைந்து விட மாட்டேன். ஏனென்றால் நான் உண்மையினை கண்டிருக்கின்றேன். இந்த பூமியில் வாழக் கூடிய தன்மையினை இழக்காமலேயே மக்களால் மகிழ்ச்சியாகவும் அழகாகவும் வாழ முடியும் என்பதனை நான் கண்டறிந்து இருக்கின்றேன். தீமை தான் மனிதர்களின் இயல்பான குணம் என்பதனை என்னால் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அதனை நான் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன். எனது இந்த நம்பிக்கையினைக் கண்டு அவர்கள் அனைவரும் என்னை நோக்கி சிரிக்கின்றார்கள். ஆனால் என்னால் எவ்வாறு அதனை நம்பாமல் இருக்க முடியும்…நான் அந்த உண்மையினைக் கண்டேன்…நிச்சயமாக அதனை எனது மனதானது உருவாக்கி இருக்கவில்லை…நான் அதனைக் கண்டேன்…ஆம்…அதனைக் கண்டேன்…அதனது உயிருள்ள பிம்பமானது என்னுடைய ஆன்மா முழுமையையும் நிறைத்துக் கொண்டிருந்தது. அந்த உண்மையினை அதனது முழுமையான நிறைவுப் பெற்றத் தன்மையிலேயே நான் கண்டேன்..எனவே மக்களால் அந்த நிலையினை அடைய முடியாது என்பதனை நான் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். நிலைமை இப்படி இருக்க என்னால் எப்படி குழம்பிப் போக முடியும்?

சில நேரங்களில் நான் வழிமாறிப் போகக் கூடும்…அது நிச்சயம்…ஒரு சில சமயம் நான் மற்றவர்களின் கூற்றினைப் பேசிக் கொண்டிருக்கவும் கூடும்…ஆனால் அவை அனைத்தும் நீண்ட காலம் நீடிக்காது. நான் கண்டிருந்த அந்த உண்மையான காட்சியானது எப்பொழுதும் என்னுடன் இருந்துக் கொண்டு, என்னை வழிநடத்திக் கொண்டும் திருத்திக் கொண்டும் இருக்கும். ஆ…நான் வலிமையும் புத்துணர்ச்சியும் நிறைந்து இருக்கின்றேன். ஆயிரமாண்டுகள் ஆனாலும் சரி…நான் என்னுடைய பாதையில் பயணித்துக் கொண்டே தான் இருக்கப் போகின்றேன்.

உங்களுக்குத் தெரியுமா…அவர்கள் அனைவரையும் நான் பாழாக்கி விட்டேன் என்ற விடயத்தினை முதலில் மறைக்க வேண்டும் என்று தான் நான் நினைத்தேன்…ஆனால் அது தவறாகும்…நான் ஏற்கனவே செய்து விட்ட முதல் தவறாகும். ஆனால் அந்த உண்மையானது, நான் பொய் சொல்லுகின்றேன் என்றே என்னிடம் மெதுவாய் கூறியது…பின்னர் அதுவே நான் தவறினை செய்யாத வண்ணம் என்னைப் பாதுகாத்து வழிநடத்திச் சென்றது.

ஆனால்…சொர்கத்தினை எவ்வாறு உருவாக்குவது? அது எனக்குத் தெரியாது. ஏனென்றால் அதனை என்னால் வெறும் வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. என்னுடைய அந்த கனவிற்குப் பின்னர் நான் பெரும்பாலான வார்த்தைகளை, அதாவது முக்கியமான வார்த்தைகளைத் தொலைத்து விட்டேன். சரி…அது அவ்வாறே இருக்கட்டும்…பிரச்சனையில்லை. நான் தொடர்ந்து பயணித்துக் கொண்டே தான் இருப்பேன்…தொடர்ந்து பேசிக் கொண்டே தான் இருப்பேன்…நான் கண்டவற்றை தெளிவாக விவரிக்க முடியாது போனாலும் கூட நான் நிச்சயமாய் அவற்றை விட்டு விட மாட்டேன்…ஏனென்றால் நான் உண்மையினை எனது சொந்த கண்களினாலேயே கண்டு இருக்கின்றேன்.
ஆனால் இதனை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அது ஒரு கனவு…ஒரு பிரமை..அவ்வளவே என்றே அவர்கள் கூறுகின்றார்கள். அவ்வாறு கூறுவதில் ஏதோ மிகப் பெரிய பொருள் இருப்பதனைப் போன்று அவர்கள் பெருமையும் அடைந்துக் கொள்ளுகின்றார்கள். கனவா?…எது கனவு? நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை ஒரு கனவில்லையா?

ஒருவேளை அந்த சொர்க்கமானது இங்கே வராமலே போகக்கூடும் (அதனை என்னால் புரிந்துக் கொள்ள முடிகின்றது), இருந்தாலும் நான் தொடர்ந்து அதனைப் பற்றி போதித்துக் கொண்டே தான் இருப்பேன். ஆ…எவ்வளவு எளிதான ஒரு காரியம் அது…ஒரு நாளில்…ஒரு மணி நேரத்தில்…அனைத்தையும் நம்மால் ஒழுங்குப்படுத்தி விட முடியும். நம்மை நேசிப்பதனைப் போன்றே மற்றவரையும் நேசிப்பதே இங்கே மிகவும்  முக்கியமானதொன்றாக இருக்கின்றது…அதனைத் தவிர வேறொன்றுமே இங்கே தேவை இல்லை. அவ்வாறே நாம் நேசித்தோமே என்றால் எப்படி அனைத்தையும் சரி செய்வது என்பதனை நாம் உடனடியாக அறிந்துக் கொள்ள முடியும். ஆனாலும் இந்த பழைய உண்மையானது, அது திரும்பத்திரும்ப கோடிக்கணக்கான முறை கூறப்பட்டு இருந்தாலும், நம்முடைய வாழ்வின் அடிப்படையாக அமையும் வண்ணம் நம்முடைய மனதினில் வேர் கொள்ளவே இல்லை.

‘வாழ்வினைக் குறித்த விழிப்புணர்வே வாழ்வினை விட முக்கியமானது…மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்றிருக்கும் சட்டங்களைக் குறித்த அறிவே, மகிழ்ச்சியாக இருப்பதனை விட முக்கியமானது’ என்றிருக்கும் இந்த கோட்பாடுகளை எதிர்த்தே நாம் போராட வேண்டி இருக்கின்றது. நான் நிச்சயம் போராடுவேன்…ஆ…அனைவரும் இதனையே விரும்பினார்களே என்றால் இங்கே அனைத்தையும் உடனடியாக சரி செய்து விட முடியும்.

மேலும் நான் அந்த சிறுமியினை தேடிக் கண்டுப்பிடித்தேன்…எனது பயணத்தை நான் தொடர்ந்துக் கொண்டே இருப்பேன்…பயணித்துக் கொண்டே இருப்பேன்…!!!
முற்றும்...!!!
முந்தைய பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9

பி.கு:
‘The Dreams of a Ridiculous man’ என்ற பியோதர் தஸ்தோவஸ்கியின் நூலின் மொழிபெயர்ப்பு முயற்சியே இது ஆகும்.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு