ஆம்…அவர்களை நான் கெடுத்ததோடு தான் அந்த கனவானது ஒரு முடிவிற்கு வந்தது. அது எவ்வாறு அப்படி நிகழ்ந்திருக்க கூடும் என்பது எனக்குத் தெரியவில்லை, ஆயினும் அவை அனைத்தும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றன. அக்கனவானது ஆயிரமாயிரம் ஆண்டுகளை கடந்து பயணித்துக் கொண்டிருந்தாலும் அதனது முழுமையான வடிவத்தைப் பற்றிய ஒரு எண்ணத்தினை என்னுள் விட்டுத் தான் அது சென்று இருந்தது. அவர்களது வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது நான் ஒருவன் தான் என்பதனை மட்டும் நான் அறிந்திருந்தேன். பல்வேறு தேசங்களை தாக்கும் ஒரு பிளேக் கிருமியினைப் போல், முன்னர் ஒரு பாவமும் அறியாதிருந்த அந்த மகிழ்ச்சியான பூமியினை நான் தாக்கி இருந்தேன்.

அவர்கள் பொய் சொல்ல கற்றுக் கொண்டார்கள். அதனை நேசிக்கவும் அவர்கள் தொடங்கினார்கள். பொய்யினது அழகினை அவர்கள் இரசிக்கத் துவங்கினார்கள். ஒருவேளை அது ஒரு விளையாட்டாக ஒரு நகைச்சுவையின் பொருட்டு தோன்றி இருந்து இருக்கலாம். ஆனால் அவ்வாறு தொடங்கிய அந்த பொய்யானது அவர்களது இதயத்தினைத் துளைக்கத் துடங்கியது. அதனை அவர்கள் விரும்பவும் செய்தார்கள். அதனைத் தொடர்ந்து விரைவில் உடற் சார்ந்த சிந்தனைகளும் அங்கே எழும்பப் பெற்றன. அந்தச் சிந்தனைகள் பொறாமையினை விளைவித்தன…பொறாமையோ கொடூரமான செயல்களுக்கு வழி வகுத்தது. ஆ…எனக்கு தெரியவில்லை…எனக்கு நினைவும் இல்லை…ஆனால் விரைவில் அங்கே முதல் முறையாக இரத்தமும் சிந்தப்பட்டது. அதனைக் கண்ட அவர்கள் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள். அதன் விளைவாக அவர்கள் தனித் தனியாக பிரிந்துச் செல்லத் துவங்கினர். அவர்களுள் கூட்டணிகளும் உருவாகத் தொடங்கின, ஆனால் இம்முறை அக்கூட்டணிகளோ அவர்கள் ஒவ்வொருவருக்கு எதிராக இருக்கும்படியே இருந்தன. அவர்கள் ஒருவரை ஒருவர் கடிந்துக் கொள்ளவும் குற்றம் சொல்லவும் தொடங்கினர். முதல் முறையாக அவர்கள் அவமானம் என்ற ஒன்றினை உணர்ந்தார்கள். விரைவில் அவமானம் என்பது ஒரு தன்மையாகவே அங்கே மாறியது.

விரைவில் கௌரவம் என்ற ஒன்றும் அவர்களுக்குள் எழத் துவங்கியது. ஒவ்வொரு கூட்டணியும் தங்களுக்கென்று கொடிகளை உயர்த்த ஆரம்பித்தனர். அவர்கள் விலங்குகளை கொடுமைப்படுத்தத் துவங்கினர். அதனைக் கண்ட விலங்குகள் அவர்களை விட்டு விலகி காட்டுக்குள் சென்று வாழத் துவங்கின. அவைகள் அவர்களுக்கு எதிரிகளாக மாறின. பிரிவினைகளுக்கும் தனிமைப்படுத்தப்படுதலுக்கும் அங்கே போராட்டங்கள் எழத் துவங்கின. தனிப்பட்ட வகையில் ‘நான்’ என்றும் ‘நீ’ என்றும் ஒருவரிடம் இருந்து மற்றவர் பிரிந்து இருப்பதற்காகவும் அவர்கள் போராடத் துவங்கினார்கள். பல்வேறு மொழிகளை அவர்கள் பேசத் துவங்கினர்.

துயர் என்றால் என்னவென்பதை அவர்கள் அறிந்தனர். அதனை அவர்கள் நேசிக்கவும் தொடங்கினர். துயருக்காக அவர்கள் ஏங்கவும் செய்தனர். துயரினாலேயே உண்மையினை அடைய முடியும் என்றும் அவர்கள் எண்ணலாயினர். பின்னர் அவர்களுக்குள் அறிவியல் என்ற ஒன்றும் பிறந்தது. எப்பொழுது அவர்கள் தீமையானவர்கள் ஆனார்களோ அப்பொழுது அவர்கள் ‘சகோதரத்துவம்’, ‘மனிதநேயம்’ என்பனவற்றைப் போன்ற தலைப்புகளை பற்றி பேசவும் அவற்றை அறிந்துக் கொள்ளவும் தொடங்கினர். எப்பொழுது அவர்கள் குற்றவாளிகளானார்களோ அப்பொழுது அவர்கள் சட்டங்களை இயற்றத் துவங்கினர். அவ்வாறு இயற்றப்பட்ட சட்டங்கள் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவர்களே அதனைப் பின்பற்றிக் கொண்டு அவற்றைப் பரப்ப ஆரம்பித்தனர்.

அவர்கள் எதனை இழந்திருந்தார்கள் என்பதனை அவர்கள் மறந்துவிட்டு இருந்தார்கள். ஒருகாலத்தில் அவர்கள் பாவமற்றவர்களாக மகிழ்ச்சியாக இருந்து இருந்தார்கள் என்ற ஒன்றையே அவர்கள் நம்புவதற்கு மறுத்தார்கள். அவ்வாறு அவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்று கூறியதனைக் கேட்டு அவர்கள் சிரித்தார்கள். அது ஒரு கனவு என்றே அவர்கள் கூறினார்கள். அவர்கள் முன்பிருந்த நிலையினை அவர்களால் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியவில்லை. இருந்தாலும் ஆச்சர்யவசமாய், எந்த நிலையினை அவர்கள் ஒரு கற்பனைக் கதை என்றுக் கூறி இருந்தார்களோ எதனைக் குறித்து அவர்கள் நம்பிக்கையினை இழந்து இருந்தார்களோ, அந்த நிலைக்காகவே அவர்கள் ஏங்கிக் கொண்டு இருந்தனர். அவர்கள் மீண்டும் மகிழ்ச்சியாகவும் பாவமற்றவர்களாகவும் இருக்க விரும்பினர். குழந்தைகளைப் போன்று அவர்கள் அவர்களது இதயத்தின் விருப்பத்திற்கு கட்டுண்டனர். அதன் விளைவாக அவர்கள் அவர்களுக்கென்று கோவில்களைக் கட்டிக் கொண்டு அவர்களது மனதில் எந்த சிந்தனை இருந்ததோ அதனையே கும்பிட ஆரம்பித்தனர். அந்த சிந்தனையானது, அதாவது அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் பாவமற்றவர்களாகவும் இருக்க முடியும் என்ற அந்த சிந்தனையை நடைமுறை சாத்தியமற்றது என்றும் அடையவே முடியாத ஒன்று என்றும் அவர்கள் கூறினாலும், அவற்றினை அடைவதற்காகவே அவர்கள் கண்ணீரினை சிந்திக் கொண்டும் வணங்கிக் கொண்டும் இருந்தனர். இருந்தும், ஒரு சமயம் அவர்கள் தொலைத்திருந்த அந்த அருமையான வாழ்வினை எவராவது அவர்களுக்கு முன்னே காண்பித்து ‘நீங்கள் மீண்டும் அந்த நிலைக்கு செல்ல விரும்புகின்றீர்களா?’ என்றே கேட்டு இருந்தாரென்றால், அவர்கள் நிச்சயமாக அதனை மறுத்து தான் இருப்பார்கள்.

“நாங்கள் ஏமாற்றுக்காரர்களாகவும் கொடுரமானவர்களாகவும் அநீதி செய்பவர்களாகவும் இருக்கின்றோம் என்றால், அதனை நாங்களும் அறிந்தே தான் இருக்கின்றோம். அதற்காக கண்ணீர் சிந்திக் கொண்டும், எங்களை நாங்களே வருத்திக் கொண்டும் தண்டித்துக் கொண்டும் தான் நாங்கள் இருக்கின்றோம். ஒருவேளை எங்களை நியாயம் தீர்க்கப் போகின்ற அந்த இரக்கமிகுந்த நீதிபதியானவர் (அவரது பெயர் எங்களுக்குத் தெரியாது) தரப் போகின்ற தண்டனைகளை விட நாங்களே எங்களுக்கு அதிகமாக தண்டனைகளை தந்து கொண்டும் இருக்கலாம். ஆனால் எங்களிடம் அறிவியல் இருக்கின்றது. அதனைக் கொண்டே நாங்கள் மீண்டும் உண்மையினை அறிந்துக் கொள்வோம். ஆனால் இப்போதைக்கு, உணர்வுகளை விட அறிவே சிறந்தது என்றும், வாழ்வினை விட வாழ்வினைக் குறித்த உணர்வே உயர்வானது என்றே நாங்கள் ஏற்றுக் கொள்ளுவோம். அறிவியலானது எங்களுக்கு ஞானத்தை தரும்…அந்த ஞானமானது விதிகளை கண்டுப்பிடிக்க உதவும்…மகிழ்ச்சியினைப் பற்றிய அந்த விதிகளைக் குறித்த அறிவே மகிழ்ச்சியினை விட உயர்வானது.” என்றே அவர்கள் என்னுடைய கூற்றுக்கு இப்பொழுது பதில் அளிக்கின்றனர்.

ஆம்…அவர்கள் அவ்வாறு தான் பதில் அளித்தனர். அவ்வாறு பதில் அளித்த பின்னர், அவர்கள் அனைவரும் தன்னைத் தானே மற்ற அனைவரையும் விட மிக அதிகமாக நேசித்துக் கொண்டனர். வேறு எப்படியும் அவர்களால் இருந்தும் இருக்க முடியாது. அவர்கள் தங்களைச் சார்ந்தவர்களைக் குறித்தே மிகவும் பொறாமை அடைந்தபடியினால், மற்றவர்களை மட்டம் தட்டவும் அவமானப்படுத்தவும் மிகவும் கடினமாக முயற்சிகளைச் செய்தனர். அதற்காகவே அவர்களது வாழ்வினை அவர்கள் அர்ப்பணித்துக் கொண்டனர். அதன் விளைவாக அடிமைத்தனம் எழுந்தது. சிலர் மனமார்ந்தே அடிமைகளாக இருக்கவும் முன் வந்தனர். வலு குறைந்தவர்கள் தங்களை விட வலுவானவர்களுக்கு முன்னர் தாமாகவே கட்டுப்பட்டனர். அவர்களை விட வலு குறைந்தவர்களை அடக்கி ஆள வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அவ்வாறு வலுவானவர்களுக்கு முன்னே கட்டுப்பட்டனர்.

நீதிமான்களும் அவர்களுக்கு மத்தியில் தோன்றினர். அவர்கள் அம்மக்களுக்காக கண்ணீர் சிந்தி, அவர்களது குறைகளைச் சுட்டிக் காட்டி, அவர்களது பெருமையினைப் பற்றியும், ஒற்றுமையாக எப்படி வாழ வேண்டும் என்பதனைப் பற்றியும், எவ்வாறு அவர்கள் வெட்கமின்றி வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனைப் பற்றியும் அவர்களுக்கு எடுத்துக் கூறினர். அவர்களை அம்மக்கள் ஏளனம் செய்தனர். சில நேரம் கல்லாலும் அடித்தனர். புனித இரத்தமானது அவர்களது கோயில் கற்களிலேயே சிந்தப்பட்டது.

மற்றொருபுறமோ, மக்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதற்காக பல்வேறு வழிகளை கண்டுப்பிடித்த வண்ணமே பலர் தோன்றலாயினர். ஒருவன் தன்னைத்தானே மற்றவர்களை விட அதிகமாக நேசித்துக் கொள்ளுவதனை மாற்றிக் கொள்ளாமலும் அதே நேரத்தில் மற்றவர்களுக்கு எவ்விதமான இடையூறுகளையும் செய்யாமலும் இருப்பதன் மூலமாக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழக் கூடிய ஒரு சமூகத்தினை உருவாக்க முடியும் என்றே அவர்கள் கூறினர். அவர்களது அந்த எண்ணத்தின் விளைவாகவே பல்வேறு யுத்தங்களும் நிகழப் பெற்றன. அறிவியலும் அதன் விளைவாக வரும் ஞானமும், தன்னைத் தானே ஒருவன் நன்றாக பார்த்துக் கொள்ளுவதும் ஆகிய இவைகளே மக்களை ஒற்றுமையாக ஒன்றுப்பட்டு ஒரு சமூகமாக வாழ நிர்பந்திக்கும் என்றே யுத்தமிட்ட அந்த அனைத்து தரப்பினரும் நம்பவும் செய்தனர். ஆகவே, அத்தகைய ஒரு நிலையினை விரைவாக கொண்டு வருவதற்காக ‘ஞானிகளான’ அவர்கள், அவர்களது அந்த எண்ணத்தைப் புரிந்துக் கொள்ள முடியாத ‘ஞானமற்ற’ மற்ற அனைவரையும், தங்களது வெற்றியினை அவர்கள் தடுத்து விடாமல் இருப்பதற்காக, விரைவில் அழித்து விட வேண்டும் என்றே முயன்றனர்.

தொடரும்…!!!

முந்தைய பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |

பி.கு:
‘The Dreams of a Ridiculous man’ என்ற பியோதர் தஸ்தோவஸ்கியின் நூலின் மொழிபெயர்ப்பு முயற்சியே இது ஆகும்.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு