நமது உலகமானது ஒரு முப்பரிமாண உலகம். ஒரு இடத்தினில் நாம் நின்றுக் கொண்டு இருக்கின்றோம் என்றே வைத்துக் கொள்வோம். நம்மால் அந்த இடத்தில் இருந்துக் கொண்டு மேல் நோக்கி குதிக்க முடிகின்றது. முன்னால் நடந்து செல்ல முடிகின்றது. ஓரமாக நகரவும் முடிகின்றது. இவ்வாறு நம்மால் அந்த முப்பரிமாணங்களுள் பயணிக்க முடிகின்றது. நம்முடைய உலகானது ஒரு முப்பரிமாண உலகாக இருப்பதினால் தான் நம்மால் அவ்வாறு பயணிக்க முடிகின்றது. இதனை நம்மில் அனைவரும் அறிவர். ஒரு சாதாரண திரைப்படத்திற்கும் 3D திரைப்படத்திற்கும் இடையில் இருக்கின்ற வித்தியாசத்தினை நாம் அனைவரும் அறிவோம் தானே.

ஆனால் இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அந்த முப்பரிமாண வெளியினில் நாம் மட்டுமே இருப்பதில்லை…நம்முடன் வில்லங்கமான வேறொன்றும் இருந்துக் கொண்டே தான் இருக்கின்றது…அதான் நேரம்!!! முப்பரிமாணம் இருக்கின்றது…அதில் நம் விருப்பப்படி நம்மால் பயணிக்க முடிகின்றது. ஆனால் முப்பரிமாணத்துடன் நேரம் என்ற ஏதோ ஒன்று இருக்கின்றது…அதில் நம்மால் பயணிக்க முடிவதில்லை. நினைத்த பொழுதில் கடந்த காலத்திற்கோ அல்லது எதிர் காலத்திற்கோ நம்மால் சென்று வர முடிவதில்லை. எப்பொழுதும் நம்மால் நிகழ்காலம் என்ற ஒன்றில் மட்டுமே வாழ முடிகின்றது. அது ஏன்? காலத்தினில் நம்மால் பயணிக்க முடியாதா? என்ற கேள்விகளை, நேரத்தினை ஒரு பரிமாணமாகக் கொண்டு, அறிவியலானது ஆராய்ந்துக் கொண்டு தான் வருகின்றது.

அறிவியலின் கூற்றுப்படி, ஒரு மனிதன் அவனது ஐம்புலன்களால் எதனை அறிந்து இருக்கின்றானோ, அவற்றைப் பற்றி மட்டும் தான் அவனால்/அவனது மூளையினால் சிந்திக்க முடியும். இல்லாத ஒன்றினைப் பற்றியோ அல்லது அறிந்திராத ஒன்றினைப் பற்றியோ ஒருவனால் ஏதும் அறிந்துக் கொள்ள முடியாது. காரணம் – இல்லாத ஒன்றினையோ அல்லது நிகழ்ந்திராத ஒன்றினையோ எவ்வாறு ஒருவனால் அவனுடைய ஐம்புலன்களைக் கொண்டு அறிந்துக் கொள்ள இயலும்? முடியாது தானே. எனவே நடந்திராத ஒன்றினை ஒருவனால் அறிந்துக் கொள்ளவே முடியாது என்பதே அறிவியலின் கூற்றாக இருக்கின்றது.

இதனை கொஞ்சம் தெளிவாக விளக்குவது நன்றாக இருக்கும் என்றே நான் எண்ணுகின்றேன். இன்று கடலினில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவாகி இருக்கின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு நாளை மழை இந்த இந்த ஊரினில் பெய்யும் என்பதனை நம்மால் கூற முடியும். அதாவது மழையானது பெய்து இருக்கவில்லை இருந்தும் நாம் அதனை அறிந்து இருக்கின்றோம். இது வேறு கதை. காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானால் மழை பொழியும் என்பதனையும் அது எங்கே பெய்யும் என்பதனையும் நாம் நம்முடைய அறிவினில் ஏற்கனவே அறிந்து இருக்கின்றோம். ஆகவே நம்முடைய அறிவினை வைத்து நாம் சரியாக அதனை கணிக்கின்றோம். இது முழுக்க முழுக்க நம் அறிவும் அனுபவமும் சார்ந்தது. இந்த வகையான கணிப்புகளைப் பற்றி நாம் மேலே கூறி இருக்கவில்லை. மாறாக ஐம்புலன்களை வைத்து கணிக்க முடியாத ஒரு நிகழ்வினைப் பற்றியே நாம் கூறுகின்றோம். உதாரணத்திற்கு, சம்பந்தமே இல்லாத ஒருவன், சம்பந்தமே இல்லாத மற்றொருவருக்கு எதிர் காலத்தில் இப்படி நடக்கும் என்று கூறி, அவன் கூறிய படியே அனைத்தும் நடப்பது என்கின்ற ஒன்றினை அறிவியலால் ஏற்றுக் கொள்ளவே முடியாது (நான் இங்கே ஜாதகத்தினைப் பற்றிக் கூறவில்லை என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இது ஒரு எடுத்துக்காட்டு அவ்வளவே). காரணம்…அறிவியலின் கூற்றுப்படி,

1) ஐம்புலன்களால் அறிந்திராத ஒருவனை, ஒருவனால் தெரிந்துக் கொண்டிருக்கவே முடியாது.
2) எதிர்காலம் என்பது நிகழாத காலம்…அப்படிப்பட்ட ஒரு காலத்தினில் ஐம்புலன்களால் அறிந்துக் கொள்ள முடியாத ஒன்றினை ஒருவனால் கணிக்கவே முடியாது.

ஆனால் இங்கே தான் அறிவியலுக்கு ஒரு மாபெரும் சிக்கல் காத்திருக்கின்றது. அது என்னவென்றால் மனிதர்களுள் பலர், ஏன் நம்மில் பலரும் கூட சில நிகழ்வுகள் நிகழும் பொழுது அவை ஏற்கனவே நிகழ்ந்ததைப் போன்ற ஒரு உணர்வினை உணர்ந்து இருப்போம்.

அதாவது ஒரு நபருடன் நாம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று நாம் ஏற்கனவே அதே இடத்தில் அதே நபருடன் அதே மாதிரி…ஏன்..அதே வார்த்தைகளைப் பேசியது போன்ற ஒரு உணர்வினை அடைந்து இருப்போம். சில நேரங்களில் நாம் அடுத்து என்ன பேசப் போகின்றோம் அதற்கு அவர் என்ன பேசுவார் என்பதனைக் கூட நாம் அறிந்து தான் இருப்போம். அதாவது ஏற்கனவே நிகழ்ந்த ஒரு நிகழ்வு மீண்டும் மறுமுறை நிகழ்ந்துக் கொண்டிருப்பதனை போன்றே நாம் உணர்ந்து இருப்போம். ஆனால் அதற்கு முன்னர் நாம் அந்த மனிதரைப் பார்த்தே இருக்க மாட்டோம்…அந்த இடத்திற்கும் சென்று இருக்க மாட்டோம். ஆனால் அந்த நிகழ்வானது நடந்திருக்கின்றது என்பதனைப் போன்ற ஒரு உணர்வு மட்டும் நம்முடைய மனதினில் இருந்து கொண்டே இருக்கும்.

இத்தகைய ஒரு உணர்வினை ஐம்புலன்களால் விளக்க முடியாது. எனவே அறிவியலாலும் இதனைத் தெளிவாக விளக்க முடியாது இருக்கின்றது. ஆனால் விளக்க முடியவில்லை என்ற காரணத்தினால் அவ்வாறு ஒரு உணர்ச்சியானது தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை என்று கூறுவது சரியான ஒன்றாக இருக்குமா? இப்பதிவினை படிப்பவர்கள் பலருக்கும், ஏன் கிட்டத்தட்ட அனைவருக்கும் அத்தகைய ஒரு அனுபவம் வந்து இருக்கும் என்றே நான் நம்புகின்றேன். அதனை நமக்கு விளக்கத் தெரியாமல் இருக்கலாம்….இருந்தும் அந்த அனுபவத்தினை நாம் உணர்ந்து இருப்போம் தானே…அதனை ஐம்புலன்களைக் கொண்டு எவ்வாறு விளக்குவது?

சரி இருக்கட்டும்…இப்பொழுது நம்மால் அத்தகைய உணர்வினை விளக்க முடிகின்றதா என்றே காணலாம்…அதற்கு நாம் கனவுகளைப் பற்றியே காண வேண்டி இருக்கின்றது. காண்போம்…!!!

தொடரும்…!!!

பி.கு:

மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி