அன்பான அம்மா…அருமையான குழந்தைகள்…என்றிருந்த அழகான ஒரு சிறு குடும்பம் அது. அருமையான குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினைத் தருவது என்பது ஒரு அன்பான அம்மாவிற்கு மிகவும் பிடித்த ஒரு விடயமாகத் தானே இருக்கும். அதற்கேற்றார்ப் போலவே ஆரோக்கியமான உணவினைத் தயாரிக்கும் வண்ணம் வீட்டு சமையற்கூடத்தினில் பொருட்களும் அநேகம் இருந்தன. அந்த அம்மாவும், தனது குழந்தைகளுக்கு அப்பொருட்களை பயன்படுத்தி உணவினை செய்துக் கொண்டே வந்தாள். சமையலில் அனுபவம் கூட கூட, அவளது சமையலறிவும் வளர்ந்தது. புதிதாய் பல பொருட்களை அவள் செய்யலானாள். தனது வீட்டினில் இருக்கும் பொருட்களின் அளவினைக் கணக்கில் கொண்டு, சிக்கனமாக அவற்றை பயன்படுத்தி ஆரோக்கியமான உணவுகளை தனது குழந்தைகளுக்காக அவள் தயாரித்து தந்து கொண்டிருந்தாள். சில உணவுப் பொருட்களை அவள் தனது அண்டை வீட்டாருக்கும் சேர்த்தே செய்து தருவாள். அதனை உண்ட அவர்களும், அந்த உணவின் சுவை அறிந்து அதனை எவ்வாறு செய்வது என்பதனை அவளிடம் கேட்டு அறிந்துக் கொண்டனர். அவளும் அவர்கள் அனைவருக்கும் தன்னுடைய அறிவினை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொண்டாள். மேலும் அவளுக்கு தெரியாதவற்றை அவர்களிடம் இருந்தும் கற்றுக் கொண்டாள். அவ்வாறு ஒவ்வொருவரும் தங்களது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துக் கொண்டு ஆரோக்கியமான உணவினையும் உறவினையும் வளர்த்துக் கொண்டு இனிதே அங்கே வாழ்ந்து வந்தனர். இது ‘மெய்டு இன் வீட்டு’ கதை.

இனி ‘மேக் இன் வீடு’ கதைக்கு வருவோம்…

அதே குடும்பம் தான் இங்கேயும். ஒரு நாள் அந்த குழந்தைகள் இனிப்பு பலகாரம் செய்யும் ஒருவனைத் தெருவில் கண்டு, அவனிடம் இருந்து பலகாரத்தினை வாங்கி சாப்பிடுகின்றார்கள். அந்த சுவை ஏனோ அவர்களுக்குப் பிடித்துப் போக அவனை அவர்களது அம்மாவிடம் அழைத்துக் கொண்டு வந்து அவனைப் போன்றே அப்பலகாரத்தினை செய்து தருமாறு கேட்கின்றார்கள். குழந்தைகள் ஆசையுடன் கேட்பதினால் அந்த அம்மாவும் அவனிடம் அந்த பலகாரத்தினை எப்படி செய்வது என்று தனக்கு சொல்லித் தருமாறு கேட்கின்றாள். ஆனால் அவனோ, அவனுடைய அறிவினை அவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள மறுத்து விடுகின்றான். மாறாக அவன் அவர்களுக்கு பலகாரத்தினை செய்து தர வேண்டும் என்றால், அவர்கள் அவன் கூறும் செயல்களை அப்படியே செய்ய வேண்டும் என்றும் அவர்களது வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே அவன் அப்பலகாரங்களை செய்வான் என்றுமே கூறுகின்றான். மேலும் அவ்வாறு செய்யப்படும் பலகாரங்களை அவன் அவனது கடைக்கு எடுத்துக் கொண்டு போய் விற்பதற்கும் அவர்கள் சம்மதிக்க வேண்டும் என்றும் அவன் கூறுகின்றான். குழந்தைகளுக்கு அவனது பலகாரங்களின் மீது ஆசை இருக்கின்ற காரணத்தினால் அந்த அம்மாவும் அவனது கோரிக்கைகளுக்கு சம்மதம் தெரிவிக்கின்றாள். அவனும் அவர்களது வீட்டினில் இருந்தவாறே பலகாரங்களை செய்யத் துவங்குகின்றான்.

‘அதை எடுங்கள்…இதை எடுங்கள்’ என்று அவன் போடும் கட்டளைக்கு அவர்கள் கட்டுப்பட்டு அவனுக்கு ஏற்பவே இருக்கத் துவங்குகின்றனர். ‘பலகாரத்தினை தயாரிக்க பொருட்கள் இருக்கின்றன…அவையும் இலவசமாக கிடைக்கின்றன…இந்நிலையில் நாம் எந்தளவு பலகாரங்களைத் தயாரிக்கின்றோமோ அந்தளவு நாம் நமது கடையினில் அவற்றை விற்பனை செய்து இலாபம் ஈட்டிக் கொள்ளலாம்” என்ற வணிக நோக்கிலே அவனும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் அவனுக்கு இலாபகரமாக இருக்கும்படி பயன்படுத்தத் துவங்குகின்றான். செய்யும் பலகாரங்களில் சிலவற்றை அந்த குழந்தைகளுக்குத் தந்து அவர்கள் தொடர்ந்து ஆவலுடன் இருக்கும் வண்ணமே செய்கின்றான். அந்த குழந்தைகளும் அவன் அவர்களுக்கு தொடர்ந்து பலகாரம் தந்துக் கொண்டே இருப்பான் என்ற நம்பிக்கையினில் காத்துக் கொண்டே இருக்கின்றனர்.

தனது சமையற்கட்டினில் எசமானியாக இருந்த அந்த அன்னையோ இப்பொழுது அவன் கூறும் செயல்களை மட்டுமே செய்யும் வேலையாளாகிப் போனாள். அனுபவத்தால் வந்த அவளது அறிவோ இப்பொழுது ஒன்றுமில்லாது போய் விட்டது. பலகாரம் அதிகம் செய்ய வேண்டும் என்ற அவனது இலக்கின் காரணமாக அவளுக்கு அவளுடைய அண்டை வீட்டாரிடம் பழகும் நேரமும் குறைந்து விட்டது. அப்படி இருக்கையில், ஒருநாள் அவளது வீட்டில் இருந்த பொருட்கள் காலியாகி விட்டன. அதனைக் கண்ட அந்த வணிகனோ, இனிமேல் அவன் செய்வதற்கு அங்கே ஒன்றும் இல்லை என்ற நிலையில், அவன் அது வரை செய்த பலகாரங்களை எடுத்துக் கொண்டு அவர்களது வீட்டினை விட்டு கிளம்பி விடுகின்றான். உணவுப் பொருட்கள் ஏதுமற்ற நிலையில், தனது அறிவும் பயனற்று போன நிலையில், அண்டை வீட்டாரிடம் உறவும் அற்றுப் போன நிலையில் செய்வதறியாது அந்த அன்னை நிற்கின்றாள். பலகாரத்தினை உண்டே பழகிய அக்குழந்தைகள் அந்த வணிகனின் கடைக்கு முன்னர் பலகாரம் வாங்கிக் கொள்ள வரிசையில் நிற்க ஆரம்பிக்கின்றனர்…அப்பலகாரமானது நல்லதா அல்லது கெட்டதா என்று அறியாத நிலையினில்.

முற்றும்…!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு