ஒரு வழியாக முதல் புத்தகத்தினை எழுதி முடித்தாயிற்று...சரியாக சொல்ல வேண்டும் என்றால் மொழிப்பெயர்த்து முடித்தாயிற்று என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் லியோ டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய 'Gospel in Brief ' என்ற நூலினைத் தான் தமிழினில் 'சுவிஷேசங்களின் சுருக்கம்' என்று நான் மொழிபெயர்த்து இருக்கின்றேன். இப்பொழுது அந்த நூலினைப் பற்றியும் அதனை எதற்காக நான் மொழிபெயர்த்திருக்கின்றேன் என்பதனைப் பற்றியும் உங்களிடம் சிறிது மேலோட்டமாக பகிர்ந்துக் கொள்ள விரும்புகின்றேன்.

டால்ஸ்டாய் என்றாலே சிறு கதைகளும், உலக பிரசித்திப் பெற்ற காவியங்களான 'போரும் அமைதியும்' 'அன்னா கரெநேனா' என்பன போன்ற நூல்களும் தான் பலரின் நினைவிற்கு வரும். ஆனால் டால்ஸ்டாய் அவர்களுக்கு பலரும் அறியாத வேறொரு முகமும் இருக்கத்தான் செய்கின்றது. வாழ்வென்றால் என்னவென்ற ஒரு தேடலினை மேற்கொண்ட ஒருவன், இறுதியில் மக்கள் அனைவரும் ஒன்றிணைத்து மகிழ்ச்சியுடன் வாழ்வதே வாழ்வின் நோக்கமாகும் என்பதனையும், அவ்வாறு மக்கள் அனைவரையும் ஒற்றுமையாக வாழ வழி செய்வதே இங்கே ஒவ்வொருவரின் கடமையாகும் என்பதனையும் கண்டு கொண்டு, ஒரு ஆன்மீகப் பொது உடைமைவாதியாக அதற்காக போராடிய ஒரு வரலாறே டால்ஸ்டாயின் மற்றொரு முகமாகும்....இந்த நூல் டால்ஸ்டாயின் அந்த ஆன்மீகப் பொதுவுடைமைவாத முகத்தினையே பிரதிபலிக்கின்றது.

நிச்சயமாக இந்த நூல் அனைவருக்குமான ஒரு நூல் அல்ல...இந்த நூல் குறிப்பாக நான்கு தரப்பினரை குறி வைத்து எழுதப்பட்டு இருக்கின்றது.
  • கிருத்துவர்கள்
  • சமயங்களில் ஆர்வம் கொண்டவர்கள்
  • நாத்திகர்கள்/பொதுவுடைமைவாதிகள்
  • வாழ்வென்றால் என்னவென்ற தேடலினை கொண்டவர்கள்
இந்த நான்கு தரப்பு மக்கள் அல்லாது, டால்ஸ்டாயின் மற்ற காவியங்களை மனதிற் வைத்துக் கொண்டு அதனைப் போன்றே இந்த நூலும் இருக்கும் என்ற எண்ணத்துடன் இந்நூலினை படிக்கும் நண்பர்களுக்கு இந்நூலானது ஏற்றதாக இருக்குமா என்பதனை என்னால் கூற முடியவில்லை. சரி இருக்கட்டும்...இப்பொழுது இந்த நூலின் சாரம் என்னவென்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

வாழ்வினைக் குறித்து கிருத்துவம்...மன்னிக்கவும்...வாழ்வினைக் குறித்து இயேசு எதனைக் கூறி இருக்கின்றார் என்பதே இந்த நூலின் மையக் கருத்தாக இருக்கின்றது. ஏன் என்றால் இயேசுவின் கருத்துக்களை கிருத்துவ திருச்சபைகள் முற்றிலுமாக மக்களிடம் இருந்து மறைத்து வைத்து இருக்கின்றன என்றும், வாழ்வென்றால் என்னவென்று ஒருவன் அறியாத நிலையிலேயே ஆன்மீக நிறுவனங்கள் ஒருவனை வைத்து இருக்கின்றன என்றே டால்ஸ்டாய் அவர்கள் ஆன்மீக நிறுவனங்களை, கிருத்துவ திருச்சபைகளை சாடுகின்றார்.

"கிருத்துவம் என்ற பெயரிலேயே, இயேசுவின் கருத்திற்கு மாறாக இருக்கின்ற திருச்சபையின் கருத்தானது இயேசுவின் கருத்தாகப் போதிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது. இதுவே தவறான விளக்கங்களைப் பரப்புவதற்கு அதிகமாக பயன்படுத்தப்படுகின்ற ஒரு வழியாகும். நாம் அனைவரும் இந்தத் தவறான விளக்கத்தினைக் கொண்டே வளர்ந்தும் இருக்கின்றோம். திருச்சபையின் போதனைகளானவை இயேசுவின் போதனைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட போதனைகளாகவே இருக்கின்றன." என்ற தனது கூற்றுக்கு தகுந்த ஆதாரங்களையும் டால்ஸ்டாய் தந்தே தான் இருக்கின்றார். அதன் விளைவாக இந்த நூல், கிருத்துவ சபைகளின் ஆதிக்கத்தில் இருந்த ரஷ்யாவினில் அன்று தடைசெய்யப்பட்டதொரு நூலாக இருந்தது என்பதில் நமக்கு வியப்பொன்றும் இல்லை தான்.

நம்பிக்கையற்ற ஒருவனாக இருந்த நிலையில் இருந்து, வாழ்வென்றால் என்னவென்ற தேடலினை தன்னுடைய ஐம்பதாவது வயதினில் மேற்கொண்ட ஒருவனாக மாறி, இறுதியில் வாழ்வினுடைய அர்த்தத்தினை இயேசுவின் கருத்துகளில் இருந்து அறிந்துக் கொண்ட ஒருவனின் மனதினில் என்ன கேள்விகள் இயல்பாக வருமோ அதே கேள்விகள் தான் டால்ஸ்டாய் அவர்களுக்கும் வருகின்றது.

ஏன் இது நாள் வரை வாழ்வென்றால் என்னவென்று எனக்கு புலப்படாமல் இருந்தது? ஆன்மீக நிறுவனங்களும் திருச்சபைகளும் எதற்காக வாழ்வினைப் பற்றி எனக்கு போதிக்காமல் வெறும் சடங்குகளையும் அதிசயங்களையும் பற்றி மட்டுமே எனக்கு போதித்து வந்து கொண்டிருக்கின்றன? ஏன் அந்த திருச்சபைகளுக்குள் இத்தனை வேறுபாடு?

இந்த கேள்விக்கான விடைகளைத் தேடும் பொழுது, அனைத்து திருச்சபைகளும் தங்களது சுய ஆதாயத்திற்காகவே இயேசுவின் பெயரைக் கூறிக் கொண்டு, இயேசுவின் கருத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை போதித்து வந்து கொண்டிருக்கின்றன என்பதனை அவர் காணுகின்றார். வெறும் அதிசயங்களையும் சடங்குகளையும் முன்னிறுத்தி வைத்துவிட்டு இயேசுவின் கருத்துக்களை புறக்கணிக்கும் ஒரு செயலினையே அனைத்து திருச்சபைகளும் செய்து கொண்டிருக்கின்றன என்பதனையும் அவர் காணுகின்றார். திருச்சபைகளின் அந்த நடவடிக்கைகளினால் இயேசுவின் கருத்துக்கள் மக்களைச் சென்றடையாமல் இருப்பதனையும், மக்கள் இயேசுவின் கருத்துக்களை விட அவர் செய்த அதிசயங்களையையே பெரிதாக கருதிக் கொண்டு அர்த்தமற்ற வாழ்வினை வாழ்ந்துக் கொண்டிருப்பதனையும் அவர் காணுகின்றார்.

அந்நிலையில், இயேசுவின் வாழ்வில் இருந்து அனைத்து அதிசயங்களையும் எடுத்து விட்டு, இயேசு கூறிய விடயங்களின் மெய்யான அர்த்தத்தினை மட்டும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க கூடிய ஒரு நூலாக இந்நூலினை டால்ஸ்டாய் அவர்கள் எழுதி இருக்கின்றார்.

"கிருத்துவத்தை ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வாகவோ அல்லது தெய்வீகமான வெளிப்பாடாகவோ நான் கருதவில்லை. மாறாக வாழ்வுக்கு அர்த்தத்தினைத் தரும் ஒரு போதனையாகவே நான் அதனைக் காணுகின்றேன். வரலாற்று நிகழ்வுகளைக் குறித்த தேடல்களோ அல்லது இறைவனைக் குறித்த தேடல்களோ என்னை கிருத்துவத்தில் கொண்டு வந்து சேர்க்கவில்லை. மாறாக என்னுடைய ஐம்பதாவது வயதில் நான் கொண்ட ‘நான் யார்’ என்ற தேடலும் ‘என்னுடைய வாழ்வின் அர்த்தம் என்ன ’ என்ற தேடலுமே என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தது." என்று கூறுகின்ற டால்ஸ்டாய் அவர்கள், இந்த நூலின் வாயிலாக வாழ்வினைக் குறித்து தான் அறிந்தவற்றை தன்னுடைய சகோதரர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுகின்றார்.

விவிலியத்தின் புனிதத்தன்மை, அதிசயங்கள் போன்ற அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும் டால்ஸ்டாய் அவர்கள் வாசகர்கள் முன்னே முன்வைப்பது ஒன்றினைத் தான்...ஒன்றினை மட்டும் தான்...!!! அதிசயங்கள் இல்லாத இயேசுவின் வாழ்வினையும் அவரது கருத்துக்களையும் மட்டுமே தான் அவர் இந்த நூலின் வாயிலாக நம் முன்னே வைக்கின்றார். திருச்சபைகள் போதித்துக் கொண்டிருக்கும் தவறான விளக்கங்களில் இருந்து இயேசுவின் போதனைகள் எவ்வாறு மாறுபட்டு இருக்கின்றன என்பதனை சுவிஷேசங்களில் இருந்தே நமக்கு தெளிவாக அவர் விளக்குகின்றார்.

சமயங்களைப் பற்றியும் வாழ்வினைப் பற்றியும் நாம் கண்டு வந்து கொண்டிருக்கும் நமது பயணத்திலே இந்த புத்தகம் ஒரு முக்கியமான புத்தகமாகும்.

"இறைவன் மக்களுக்குப் போதிப்பதற்காகவே உலகிற்கு வந்திருந்தார் என்றால், தன்னுடைய போதனைகளை அவர் தெளிவாகக் கூறி இருப்பார். அவருடைய நோக்கே போதிப்பதாக இருக்கும் பட்சத்தில் அவர் போதித்த கருத்துக்கள் ஒரே அர்த்தத்தினைத் தான் கொண்டிருக்கக்கூடும். நிச்சயமாக பல்வேறு விதமான முரண்பட்ட விளக்கங்களை அவருடைய போதனையானது கொண்டிருக்காது. உண்மையினை வெளிப்படுத்துவதற்காக இறைவன் உலகிற்கு வந்தார் என்றால் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணமே அவர் அதனை வெளிப்படுத்தி இருப்பார். அவர் அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர் இறைவனாக இருக்க முடியாது. மேலும் இறைவனாலேயே மனிதர்களுக்குத் தெளிவாகப் புரிய வைக்க இயலாத வண்ணமே தெய்வீக உண்மைகள் இருந்தன என்றால் நிச்சயமாய் மனிதரால் அவற்றை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியாது." - லியோ டால்ஸ்டாய்

பி:கு:
  1. இந்த நூலில் இருக்கும் டால்ஸ்டாயின் முன்னுரையினை முதலில் படிக்கவும்.
  2. சுவிசேஷங்கள் என்பன இயேசுவின் வாழ்வினைப் பற்றியும் அவரது போதனைகளைப் பற்றியும் எழுதப்பட்ட புத்தகங்கள் ஆகும்.
புத்தகத்தினை வெளியிட்டோர் : பாரதி புத்தகாலயம்

கனவினையும் மரணத்தினையும் ஆன்மாவினையும் பற்றி நாம் கண்டு வந்துக் கொண்டிருக்கும் இத்தொடரினில் 'ஒரு நிகழ்வானது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் பொழுது...அது ஏற்கனவே நிகழ்ந்திருப்பதனைப் போன்ற ஒரு உணர்வினை நாம் உணர்வது எதனால்?' என்பதனையே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் மிக முக்கியமான கேள்வியினை காண வேண்டி இருக்கின்றது.

'ஆன்மாவினது ஆற்றலின் எல்லை என்ன?' என்கின்ற கேள்வி தான் அது.

சமயங்களின் கூற்றின்படி இறைவனின் ஒரு பகுதி தான் ஆன்மா. ஆகையால் தான் ஆன்மாவினை உடைய மனிதனால் இந்த உலகினை ஆள முடிகின்றது. அனைத்தையும் அவன் காண்கின்றான்...அனைத்தினைப் பற்றியும் அவன் அறிகின்றான்...அறிந்து அதனை மாற்றவும் செய்கின்றான். இந்த ஆற்றலினை ஒரு மனிதனுக்கு வழங்குவது அவனது ஆன்மா என்றே சமயங்கள் கூறுகின்றன.

அதனை மெய்ப்பிப்பதனைப் போன்றே பல நிகழ்வுகளையும் நாம் அறிய வருகின்றோம் தான். உதாரணமாக,
செவ்விந்தியப் பழங்குடி மக்களைப் பற்றிய கதை ஒன்று உண்டு. அவர்கள் வசிக்கும் இடத்தில் மழை பெய்ய வேண்டுமென்றால் அவர்கள் அனைவரும் ஒன்றாக ஒன்றிணைந்து மழை பெய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். அவ்வாறு அவர்கள் அனைவரது சிந்தனையும் மெய்யாக ஒன்றுபட்டு இருக்கும் பொழுது அங்கே மழையும் பொழியுமாம்.

அதனைப் போன்றே தான் நாம் குறி சொல்லும் மக்களையும் காண வேண்டி இருக்கின்றது. போலியான நபர்கள் பலர் இருப்பீனும், மெய்யான நபர்களும் இங்கே இருக்கத் தான் செய்கின்றனர். அவர்கள் தங்களது மனதினை ஒருமுகப்படுத்துவதன் மூலமாக அதன் ஆற்றலினை பெருக்கிக் கொள்ளுகின்றனர். அவ்வாறு அவர்கள் பெற்ற அந்த ஆற்றலின் மூலமாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதனை அவர்கள் கூறுகின்றனர். (முதலில் நான் இவற்றை நம்பியதில்லை என்றாலும் அனுபவங்களின் மூலமாக இவற்றில் உண்மை இருப்பதனை அறிந்திருப்பதால் இதனைப் பற்றி இங்கே கூறி இருக்கின்றேன்)

இத்தகைய ஆற்றலினை வழங்கக் கூடியத் தன்மையினை ஆன்மாவானது பெற்று இருக்கின்றது. எப்பொழுது ஒரு மனிதனானவன் தனது ஆன்ம பலத்தினை பெருக்கிக் கொள்ளுகின்றானோ அப்பொழுது அவன் அந்த ஆற்றலினை அறிந்துக் கொள்ளுகின்றான். சரி இருக்கட்டும்...ஆன்மாவின் ஆற்றலினைப் பற்றி சிறிது கண்டாயிற்று...இப்பொழுது அது எவ்வகையில் நம்முடைய கேள்விக்கு பதிலளிக்கப் போகின்றது என்பதனையே நாம் காண வேண்டி இருக்கின்றது.

சென்ற பதிவினில் நாம் கிருத்துவத்தில் இருந்து ஒரு நிகழ்வினைக் கண்டு இருந்தோம். தன்னுடைய சீடன் ஒருவன் தன்னை மூன்று முறை மறுப்பான் என்று இயேசு கூறுகின்றார்...அதன்படியே அச்சீடனும் இயேசுவை மூன்று முறை மறுக்கின்றான். இதனையே நாம் விரிவாக சென்ற பதிவினில் கண்டு இருந்தோம். இப்பொழுது அந்நிகழ்வினையே நாம் மீண்டும் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

இயேசுவின் நிலை:

இயேசுவை ஒரு மனிதனாகவே தான் நாம் இங்கே காண வேண்டி இருக்கின்றது. கிருத்துவத்தின்படி இயேசு சாத்தானின்(ஆசையின்) தூண்டுதல்களில் இருந்து விலகி தியானத்தின் மூலம் தன்னுடைய ஆவியின் ஆற்றலினை அறிந்து கொள்ளுகின்றார். எனவே அவரது ஆன்ம நிலை வேறு. தனது ஆன்மாவின் ஆற்றலினை இயேசு அறிந்து இருக்கின்றார். அத்தகைய ஆன்மாவானது தனக்கு கட்டுப்பட்டு இருக்கக் கூடிய உலகினைப் பார்க்கின்றது...அங்கே பல்வேறு ஆன்மாக்களும் உலாவிக் கொண்டிருக்கின்றன. அவை அனைத்தையும் அவரால், இயேசுவின் ஆன்மாவினால், காண முடிகின்றது. அந்த ஆன்மாக்கள் இருக்கின்ற நிலையினையும் அவரால் உணர முடிகின்றது. சில ஆன்மாக்கள் அவரை கைது செய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன...சில ஆன்மாக்களோ அவரை விசாரிக்க ஆயுத்தமாகிக் கொண்டிருக்கின்றன...இவ்வாறு ஒவ்வொரு ஆன்மாவின் நிலையினையும் அவரால் அறிந்து உணர்ந்துக் கொள்ள முடிகின்றது. அதன் அடிப்படையிலேயே அவரால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று கூற முடிகின்றது.

சீடர்கள் மற்றும் மற்ற மக்களின் நிலை:

இயேசுவின் சீடர்களோ அல்லது மற்ற மக்களோ தங்களது ஆன்ம பலத்தினைப் பற்றி அறியாதே இருந்தார்கள். அவர்களது ஆன்மாவானது எத்தகைய புரிதலினைக் கொண்டிருந்ததோ அதன் அடிப்படையிலேயே தான் அவர்களது செயல்களும் இருந்தன. அதாவது தன்னுடைய ஆற்றலினை அறியாத நிலையிலேயே தான் அவர்களது ஆன்மாவானது இருந்தது.

இவ்வாறு இரண்டு வெவ்வேறு நிலைகளில் ஆன்மாவானது இருப்பதனை நாம் காணுகின்றோம். ஒன்று தன்னுடைய ஆற்றலினை அறிந்துக் கொண்ட நிலை...மற்றொன்று தன்னுடைய ஆற்றலினை அறிந்துக் கொள்ளாத நிலை. தன்னுடைய ஆற்றலினை அறிந்துக் கொண்ட நிலையினில் ஒரு ஆன்மாவினால் மற்ற ஆன்மாக்களையும் அறிந்துக் கொண்டு, 'என்ன நடக்கும்' என்று கூற முடிகின்றது. ஆனால் ஆற்றலினை அறிந்துக் கொள்ளாத நிலையிலோ, தன்னுடைய புரிதலினை அடிப்படையாக கொண்டு மட்டுமே ஒரு ஆன்மாவானது இருக்கின்றது. நிற்க.

மேலே நாம் கண்டிருப்பது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே...இதனை அனைவரும் நம்புவர் என்றோ அல்லது ஏற்றுக் கொள்ளுவர் என்றோ நாம் எண்ணுவது முட்டாள் தனமாகும். மேலும் அவ்வாறு அவர்கள் நம்ப வேண்டும் என்பதும் நமது குறிக்கோள் அல்ல. ஏனென்றால் சில மக்கள் சமயங்கள், இறைவன் என்று நாம் பெயர்களை பயன்படுத்தி இருப்பதினால் மட்டுமே நாம் மேலே கூறி இருப்பதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சில மக்களோ நாம் அவ்வாறு பெயர்களைக் கூறி இருப்பதனால் மட்டுமே அவற்றை ஏற்றுக் கொள்வார்கள். இவ்விரண்டினையுமே நாம் இங்கே விரும்பவில்லை. நமது இலக்கானது இங்கே என்னவென்றால், இந்த விடையங்களைக் குறித்து மக்களை சிந்திக்க வைப்பது மட்டுமே தான். ஒரு நூலினில் கூறி இருக்கின்றது என்பதினால் மட்டுமே ஒன்றினை நம்புவது என்பது முட்டாள்தனமாகும். மாறாக நம்மால் எதனை உணர முடிகின்றதோ அதனை நம்புவதே தெளிவான ஒரு செயலாக அமையும்.

ஒரு நிகழ்வானது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் பொழுது...அது ஏற்கனவே நிகழ்ந்திருப்பதனைப் போன்ற ஒரு உணர்வினை நம்மில் பலரும் உணர்ந்து இருப்போம். இதனை நாம் நூல்களில் இருந்து அறிந்துக் கொள்ளவில்லை...உணர்வதினால் அறிந்து இருக்கின்றோம்...இப்பொழுது இத்தகைய ஒரு உணர்வினையே நாம் மேலே கண்டுள்ள எடுத்துக்காட்டின் மூலமாக விளக்க வேண்டி இருக்கின்றது.

நாம் கடந்த பதிவுகளில் கண்டிருக்கின்றோம்...நம்முடைய உடலானது உறங்கிக் கொண்டிருக்கின்ற பொழுது நம்முடைய ஆன்மாவானது உறங்குவதில்லை என்று...அது விழித்துக் கொண்டே தான் இருக்கின்றது. அவ்வாறு விழித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் செயலினை நம்மால் வரையறை செய்ய இயலாது...காரணம் ஆன்மாவின் ஆற்றல் அத்தகையது. நாம் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது நம்முடைய காரண அறிவானது துடிப்பாக இருப்பதில்லை...மாறாக ஆன்மாவின் உணர்வுகளே மேலோங்கி இருக்கின்றது. அந்நிலையில் ஆன்மாவானது சுதந்திரமாக செயல்படுகின்றது...அவ்வாறே தன்னுடைய ஆற்றலினையும் சுதந்திரமாக செயல்படுத்துகின்றது.

அதாவது...உடலானது உறங்கிக் கொண்டிருக்கின்றது...இந்த உலகியல் அனுபவங்களின் மூலமாக நாம் பெற்று இருக்கும் காரண அறிவும் துடிப்பாக இல்லை...இந்நிலையில் ஆன்மாவானது சுதந்திரமாக செயல்படுகின்றது...சில நேரங்களில் அது தான் கண்டிருந்த காட்சிகளையும் அனுபவங்களையும் கொண்டு சிந்திக்கின்றது (ஊ.தா - பேய் கனவுகள்...மற்ற கனவுகள்), சில நேரங்களில் உறங்குவதற்கு முன்னர் நாம் எதனைக் குறித்து நம்முடைய அறிவினைக் கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தோமோ அதனைக் குறித்து அது சிந்திக்கின்றது (உ.தா - ஊர் வரும் பொழுது சரியாக முழிப்பு வருவது...புதிய விடைகள்)...மேலும் சில நேரங்களில் ஆன்மாவானது இந்த உலகினையும் மற்ற ஆன்மாக்களின் நிலையையும் காணுகின்றது...இந்த நிலையினில் தான் நம்முடைய கேள்விக்கு பதில் இருக்கின்றது.

சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆன்மாவானது, சில நேரங்களில் இந்த உலகினை முழுமையாக காணுகின்றது...நடந்த நிகழ்வுகள்...நடக்கின்ற நிகழ்வுகள்...மற்ற ஆன்மாவின் நிலைகள்...போன்றவற்றை கண்டு...அதன் அடிப்படையில் எந்த நிகழ்வு நிகழும் என்பதனை அது அறிந்துக் கொண்டு அந்த நிகழ்வை அது காணுகின்றது...!!!

அதாவது நம்முடைய/தன்னுடைய நிலையும் ஆன்மாவிற்கு தெரியும்...அதாவது நாம் கொண்டிருக்கும் ஆசைகள், சிந்தனைகள், அறிவு போன்றவற்றை ஆன்மாவானது அறிந்து இருக்கின்றது. அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் இவன்/நான் எங்கு செல்வேன் என்பதனையும் எதற்காக செல்வேன் என்பதனையும் அது அறிந்துக் கொள்ளுகின்றது. அதனைப் போன்றே தான் சுதந்திரமாக, காரண அறிவின் தாக்கம் இல்லாது, இருக்கின்ற பொழுது அது மற்ற ஆன்மாக்களையும் காணுகின்றது...தன்னுடைய ஆற்றலின் விளைவால் அந்த மற்றொரு ஆன்மாவின் சிந்தனை/தன்மை போன்றவற்றை அது அறிந்துக் கொள்ளுகின்றது. அதன் அடிப்படையில் அந்த ஆன்மாவானது எங்கு செல்லும் என்பதனையும் எதற்காக செல்லும் என்பதனையும் அது அறிந்துக் கொள்ளுகின்றது.

அதாவது...நான் இருக்கின்ற நிலையில் நான் ஒரு அலுவலகத்திற்கு செல்ல வேண்டி வரும் என்பதனை என்னுடைய ஆன்மாவானது அறிந்துக் கொள்ளுகின்றது...அதனைப் போன்றே அங்கே வந்து சேரக் கூடிய தன்மையினை உடைய மற்றொரு ஆன்மாவினையும் அது உணர்ந்துக் கொள்ளுகின்றது...இரண்டு ஆன்மாக்களும் சந்திக்கும் என்றும் அவை எதற்காக சந்திக்கும் என்றும் தன்னுடைய ஆற்றலின் மூலமாக அறிந்துக் கொள்ளுகின்ற ஆன்மாவானது...அந்த சந்திப்பினை ஒரு முறை காட்சியாக கண்டு கொள்ளுகின்றது...அது ஆன்மாவின் நினைவில் பதிந்துக் கொள்ளுகின்றது.

அந்த நினைவு தான், அந்த நிகழ்வானது உண்மையில் நிகழும் பொழுது 'இது ஏற்கனவே நடந்து இருக்கே' என்ற எண்ணத்தினை நம்முள் விளைவிக்கின்றது...அதாவது நம்முடைய ஆன்மாவானது அந்த நிகழ்வினை ஏற்கனவே கண்டு விட்டது...அந்த நினைவும் நம்முடைய மனதில் பதிந்து விட்டது...ஆனால் அந்த நிகழ்வு பிற்காலத்தில் தான் நிகழ்கின்றது...ஆகையால் தான் அந்த நிகழ்வினை நாம் முன்னரே கண்டு இருப்பது போன்றும்...அடுத்து நாம் இதனைத் தான் பேசுவோம் என்றோ அல்லது மற்றவர் இதனைத் தான் செய்வார் என்றோ நம்மால் யூகிக்க முடிகின்றது. அவ்வாறு யூகிப்பதும் பெரும்பாலும் சரியாகவே இருக்கவும் செய்கின்றது.

இதனால் தான் ஒரு நிகழ்வானது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் பொழுது...அது ஏற்கனவே நிகழ்ந்திருப்பதனைப் போன்ற ஒரு உணர்வினை நாம் பெறுகின்றோம்...சரி இருக்கட்டும்...!!!

கிட்டத்தட்ட இந்த தொடரின் முடிவிற்கு வந்து விட்டோம்...இது வரை நாம் கண்ட விடயங்களை சுருக்கமாக கண்டு விட்டு இத்தொடரினை முடிவு செய்வோம்...!!!

அடுத்த பதிவில் முடியும்...!!!

பி.கு:
 
மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

சில சம்பவங்கள் நிகழும் பொழுது, அவை ஏற்கனவே நிகழ்ந்து இருப்பதனைப் போன்ற உணர்வினை நாம் சில முறை பெற்று இருப்போம். அதனைப் பற்றியே தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு கிருத்துவத்தில் வரும் ஒரு நிகழ்வினை நாம் காண்பது நலமாக இருக்கும். அந்த நிகழ்வு இது தான் :

தன்னை யூதர்கள் கைது செய்வார்கள் என்றும் அவ்வாறு அவர்கள் அவரை கைது செய்யும் பொழுது அவருடைய சீடர்கள் அனைவரும் அவரை விட்டுவிட்டு ஓடி விடுவார்கள் என்றுமே இயேசு கூறுகின்றார். அதனை கேட்ட பேதுரு என்கின்ற சீடன் ஒருவன், மற்றவர்கள் இயேசுவை விட்டு விலகிச் சென்றாலும் அவன் அவரை விட்டு செல்ல மாட்டான் என்றே உறுதி கூறுகின்றான். ஆனால் அதற்கு இயேசுவோ, மறுநாள் விடியற்பொழுதினில் சேவல் கூவுவதற்கு முன்னர் மூன்று முறை அவன் அவரை மறுப்பான் என்றே கூறுகின்றார். அவர் கூறியதனைப் போன்றே 'இயேசுவை தனக்கு தெரியாதென்று' அவன் மூன்று முறை கூறியதாக கிருத்துவத்தில் வருகின்றது. இங்கே தான் நாம் ஒரு கேள்வியினைக் காண வேண்டி இருக்கின்றது.

1) ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல் இருக்கின்றது. அதன்படி தான் பேதுரு 'உங்களை நான் மறுக்க மாட்டேன்' என்று இயேசுவிடம் கூறுகின்றான். அந்நிலையில் எதற்காக இயேசு அவனை நோக்கி 'நீ நாளை மூன்று முறை என்னை மறுப்பாய்' என்று கூற வேண்டும்? அல்லது எப்படி அவரால் அவ்வாறு கூற இயலும்?

அதாவது...நீ நாளை இதனைத் தான் செய்வாய் என்று தெளிவாக கூறி விட்டால், அங்கே அவனுடைய சிந்தனைக்கோ அல்லது சுயமாக முடிவெடுக்கும் திறனுக்கோ என்ன வேலை இருக்கின்றது?

கிருத்துவத்தின்படி இயேசு கடவுள். கடவுளே ஒருவனை நோக்கி நீ இதனைத் தான் செய்வாய் என்று கூறி விட்டால், அவனால் அதனை மாற்ற இயலுமா? இயேசுவை மறுக்க கூடாது என்ற எண்ணத்தினை பேதுரு உறுதியாக கொண்டிருந்தாலும், இயேசுவே 'நீ என்னை மறுப்பாய்' என்று கூறிய பின்னர், அவனால் அவரை மறுக்காது இருக்க முடியுமா? அவ்வாறு அவன் மறுக்காது இருந்திருத்தால் இயேசு கூறியது நடக்காது போய் இருக்குமே. அவர் பொய்/தவறாக கூறியதாக போய் இருக்குமே. ஆனால் இறைவன் எதனையும் தவறாக கூற முடியாதே. அந்நிலையில் பேதுருவினால் இயேசுவை மறுக்காமல் இருந்து இருக்க முடியுமா என்ன? அவனுக்கு சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல் பயன்பட்டு இருக்குமா என்ன? அப்படி இருக்க இயேசு எதற்காக அவ்வாறு அவன் தன்னை மறுப்பான் என்று கூறி இருக்க வேண்டும்?

ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமாக முடிவெடுக்கும் உரிமை இருக்கின்றது. ஆனால், நீ இதனைத் தான் எதிர்காலத்தில் செய்வாய் என்று உறுதியாக ஒருவர் கூறும் பொழுது அந்த சுயமாக முடிவெடுக்கும் உரிமை கேள்விக்குள்ளாகின்றது.

'இதனைத் தான் நான் செய்வேன் என்று சொல்லுகின்றீர்கள். ஆனால் நான் அதனை செய்ய விரும்பவில்லை என்றால் என்னால் என்னால் அதனை செய்யாது இருக்க முடியுமா அல்லது என் விருப்பத்திற்கு மாறாக அதனைத் தான் நான் செய்துக் கொண்டிருப்பேனா?...அவ்வாறு என் விருப்பத்திற்கு மாறாக நான் செய்வேன் என்றால் இங்கே என்னுடைய விருப்பத்திற்கும் சுயமாக முடிவெடுக்கும் திறனுக்கும் பயன் என்ன?' என்கின்ற கேள்வி இயல்பாகவே அந்த சூழலில் எழத் தான் செய்யும். இப்பொழுது இக்கேள்விக்குத் தான் நாம் பதிலினைக் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு கிருத்துவத்தில் நாம் கண்ட அந்த நிகழ்வினையே மீண்டும் காணலாம்...வேறு கோணத்தில்.

யூதர்கள் தன்னை கைது செய்வார்கள் என்று இயேசு கூறிய பொழுது அவருடைய சீடர்கள் யாரும் அதனை பெரிதாக கருதவில்லை. அத்தகைய ஒரு நிகழ்வானது உடனடியாக நிகழ்வும் என்று அவர்களில் ஒருவன் கூட கற்பனை செய்து இருக்கவில்லை. இயேசுவை கைது செய்ய முடியாது என்றும் அவ்வாறு ஏதேனும் நடந்தாலும் ஏதேனும் அதிசயம் பண்ணி அவர் தப்பி விடுவார் என்றுமே அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அத்தகைய தெளிவினைத் தான் அவர்களது ஆன்மாவானது பெற்று இருந்தது. இயேசு அதனை அறிவார். தன்னுடைய சீடர்களின் புரிதலையும் அவர்களது ஆன்மாவினது நிலையினையும் அவர் நன்கறிந்து இருந்தார். ஆகையால் தான் அவர்கள் தன்னை விட்டு விலகி ஓடுவர் என்று அவரால் கூற முடிந்தது.

இயேசு கைது செய்யப்படுவார் என்பதனை அவரது சீடர்கள் எவரும் நம்பி இருக்கவில்லை. ஆனால் அவர்களது அந்த நம்பிக்கையினை உடைக்கும் வண்ணம் எப்பொழுது இயேசு கைது செய்யப்பட்டாரோ, அப்பொழுது என்ன செய்வது என்பதனை அறியாது அவர்கள் தப்பி ஓடினர். ஏனென்றால் அவர்களது ஆன்மாவின் தெளிவு அந்நிலையில் தான் இருந்தது. சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல் அவர்களிடம் அப்பொழுதும் இருக்கத் தான் செய்தது...அவர்களால் ஓடாமல் இருந்து இருக்க முடியும் தான்...ஆனால் அந்த ஆற்றலினை பயன்படுத்தும் தெளிவு அவர்களிடம் அங்கே இல்லாது இருந்தது. இயேசுவை அவர்கள் தெளிவாக புரிந்துக் கொள்ளாமல் தான் இருந்தனர். இயேசு அவர்களுக்கு இராஜ்யத்தினை மீட்டுக் கொடுப்பார் என்றே அவர்கள் நம்பி இருந்தனர். அவரை யாரும் கைது செய்ய முடியாது என்றும் அவர்கள் நம்பி இருந்தனர். ஆனால் அவர்களது நம்பிக்கைக்கு மாறாக எப்பொழுது இயேசு கைது செய்யப்பட்டாரோ அப்பொழுது 'என்னயா நடக்குது...கைது செய்ய முடியாது என்று எண்ணிக் கொண்டிருந்தோம்...ஆனால் இயேசுவை கைது செய்து விட்டார்களே...இனி நம்மையும் அல்லவா பிடித்துக் கொள்வார்கள்...என்ன செய்வது...' என்ற குழப்பத்தின் காரணமாகவும் பயத்தின் காரணமாகவும் அவரது சீடர்கள் அவரை விட்டு விலகி ஓடினர். அவர்களால் வேறொன்றும் செய்து இருக்க முடியாது...காரணம் அவர்களது புரிதல் அந்நிலையில் தான் இருந்தது.

அதே நிலை தான் பேதுருவுக்கும். இயேசுவை அவனாலும் முழுமையாக புரிந்துக் கொள்ள முடியாத ஒரு நிலை தான் இருந்தது. அதனால் தான் போர் வீரர்கள் இயேசுவை கைது செய்ய வரும் பொழுது, ஒரு வாளினை எடுத்து ஒரு வீரனின் காதினை வெட்ட அவன் முயன்றான். 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு' என்ற இயேசுவின் போதனையினை அவன் முழுவதுமாக புரிந்து இருக்கவில்லை. அதனை இயேசுவும் அறிவார். மேலும் மற்ற சீடர்களை விட பேதுரு தன்னிடம் அதிகம் நம்பிக்கையினை உடையவனாக இருந்தான் என்பதனையும் அவர் அறிந்து இருந்தார். அதனை மெய்ப்பிப்பது போன்றே தான் பேதுரு மட்டும், இயேசு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துக் கொண்டு செல்லும் பொழுது , அவரை பின்தொடர்ந்து செல்லுகின்றான். வேறு சீடர்கள் எவரும் அவ்வாறு செல்லவில்லை. ஏனென்றால் 'இயேசு எப்படியாவது தப்பி விடுவார்' என்ற நம்பிக்கை பேதுருவிடம் அதிகமாக இருந்தது. அவரை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது என்றே அவன் நம்பி இருந்தான். ஆனால் எப்பொழுது யூதர்கள் இயேசுவை குற்றவாளியாக முடிவு செய்து அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று முடிவு செய்தார்களோ அப்பொழுது பேதுரு கொண்டிருந்த அந்த மிச்ச நம்பிக்கையும் கேள்விக்குள்ளானது. பயம் அவனை ஆட்கொண்டது. எனவே தான் எங்கே நம்மையும் பிடித்து தண்டனைக்கு உள்ளாக்கி விடுவரோ என்ற அச்சத்தினால் அவன் இயேசுவை மறுத்தான்.

இவை அனைத்தையும் இயேசு முன்னமே அறிந்து தான் இருந்தார். தன்னுடைய போதனைகளையும் தன்னையும் தன்னுடைய சீடர்கள் முழுமையாக புரிந்துக் கொள்ளவில்லை என்பதனை அவர் அறிந்து இருந்தார். அவர்களது ஆன்மாவானது அடைந்திருந்த புரிதலின் அளவினையும் அவர் அறிந்து இருந்தார். அதன் அடிப்படையிலேயே தான் அவர், அவரது சீடர்கள் அவரை விட்டு விலகி ஓடுவர் என்றும் பேதுரு தன்னை மறுத்தளிப்பான் என்றும் கூறினார்.

இயேசுவின் சீடர்களால் அவரை விட்டு ஓடாமலும், பேதுருவினால் இயேசுவை மறுக்காமலும் இருந்திருக்க முடியும் தான். அவர்களுக்கு அந்த உரிமை, சுயமாக முடிவெடுக்கும் உரிமை இருக்கத் தான் செய்தது. ஆனால் ஒவ்வொரு மனிதனும் அவனது புரிதலின் அடிப்படையிலேயே தான் முடிவெடுக்கின்றான். எனவே இயேசுவின் சீடர்களும் அவர்களது புரிதலின் அடிப்படையிலேயே தான் முடிவெடுத்தனர்.

'இயேசுவை யாரும் எதுவும் செய்து விட முடியாது...அவர் தேர்ந்து எடுக்கப்பட்டவர்...அவர் இசுரவேலரின் இராஜ்யத்தினை மீட்டுக் கொடுப்பார்' என்றே அவர்கள் நம்பி இருந்தனர். ஆனால் அவர்களுடைய நம்பிக்கைக்கு மாற்றாக அங்கே காரியங்கள் நிகழ்ந்த பொழுது, இயல்பாக ஒரு மனிதன் என்ன செய்வானோ அதனையே தான் அவர்கள் செய்து இருந்தனர்.அவர்களது புரிதலின் அளவினை அறிந்திருந்த இயேசுவும் அதன் அடிப்படையிலேயே தான் அவர்கள் எதனை செய்வார்கள் என்பதனை முன் கூட்டியே கூற முடிந்தது.

அதாவது நீ இதனைத் தான் செய்வாய் என்று இயேசு எவரையும் சபிக்கவில்லை...மாறாக அவர்களது ஆன்மாவானது இருந்த நிலையினை அடிப்படையாக கொண்டு அவர்கள் எதனை செய்வர் என்பதனை அவர் முன் கூட்டியே கூறினார். சரி இருக்கட்டும்...இப்பொழுது இந்த சம்பவத்தினை வைத்து எப்படி 'சில சம்பவங்கள் நிகழும் பொழுது, அவை ஏற்கனவே நிகழ்ந்து இருப்பதனைப் போன்ற உணர்வினை நாம் சில முறை பெற்று இருப்போம்' என்பதனை விளக்க முடியும் என்றே காணலாம்...!!!

தொடரும்....!!!

பி.கு:
மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

நம்முடைய கனவுகளில் சுதந்திரமாக சிந்தித்துக் கொண்டிருப்பது நம்முடைய ஆன்மா தான் என்றே நாம் சென்ற பதிவினில் கூறி இருக்கின்றோம். இப்பொழுது அதைப் பற்றியே தான் நாம் சற்று விரிவாக பார்க்க வேண்டி இருக்கின்றது...முதலில் இரண்டு நிகழ்வுகளைக் கண்டு விடலாம்...!!!

முதல் நிகழ்வு: நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்த தருணம் அது. என்னுடைய விலங்கியல் பாட ஆசிரியர் ஒருவர், பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது இடையிடையில் தன்னைப் பற்றிக் கூறிக் கொள்வதனை வழக்கமாக கொண்டிருப்பவர். அப்படி ஒருநாள் அவர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது கனவினைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

'கடினமான கணக்கு ஒன்றிற்கு விடையினை அறிய முடியாமல் நான் சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது உறங்கி விட்டேன்...ஆனால் என்னுடைய கனவினில் நான் அப்புத்தகத்தின் பக்கங்களை திருப்பிக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் இருந்தேன்...இறுதியாக நான் விழித்து எழுந்த பொழுது அக்கணக்கிற்கான விடையினை நான் அறிந்து இருந்தேன்...கனவில் அவ்விடையினை நான் கண்டு பிடித்து இருந்தேன்' என்றே அவர் கூறினார்.

"டேய்...சார் கனவிலேயே படிக்கிறாரு டோய்...பெரிய ஆளு தான்" என்று நண்பர்களுடன் அவரை நம்பாது அமைதியாக கிண்டல் அடித்துக் கொண்டு சிரித்தது இன்றும் நினைவில் இருக்கத் தான் செய்கின்றது. ஏனெனில் இத்தகைய விடயங்கள் பொதுவாக நம்ப முடியாதவை தான்...அனுபவங்கள் கிட்டும் வரை!!! ஆனால் இன்று அந்நிகழ்வுகளை எல்லாம் நினைவுக்கூரும் பொழுது அவற்றை நிச்சயம் நம்பவோ/மறுபரிசீலனை பண்ணவோ தான் வேண்டி இருக்கின்றது. காரணம் அனுபவங்கள். பலரும் அத்தகைய அனுபவங்களைப் பெற்றுத் தான் இருக்கின்றனர். நீண்ட நாள் தேடிக் கொண்டிருந்த விடைகளை சிலர் கனவுகளில் கண்டு அறிந்து இருக்கின்றனர். இது எப்படி சாத்தியமாகின்றது?

இரண்டாம் நிகழ்வு: இதனை நம்மில் பலரும் கடந்து வந்து இருப்போம். இரவு நேரப் புகை வண்டிப் பயணங்களின் பொழுதோ அல்லது பேருந்துப் பயணங்களின் பொழுதோ, நாம் இறங்க வேண்டிய ஊர் வந்து சேரும் பொழுது அது வரை அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த நாம் திடுக்கிட்டு எப்படியோ எழுந்து விடுவோம். அது வரை நன்கு உறங்கிக் கொண்டு இருந்திருப்போம். வழியில் வேறு எத்தனை ஊர்கள் வந்தன என்பதனை எல்லாம் நாம் அறிந்து இருக்க மாட்டோம். கனவுகளின் மத்தியில் உலாவிக் கொண்டே இருந்திருப்போம். ஆனால் எப்பொழுது நாம் இறங்க வேண்டிய ஊர் வருகின்றதோ அப்பொழுது சரியாக நமக்கு விழிப்பு வந்து விடுகின்றது. சில நேரங்களில் இவ்வாறு நமக்கு முழிப்பு வராவிடிலும், பல நேரங்களில் பலருக்கும் கிட்டி இருக்கும் ஒரு அனுபவம் தான் இது.

இப்பொழுது இவற்றுக்கு தான் நாம் விடையினைக் காண வேண்டி இருக்கின்றது. நாம் சென்ற பதிவினில் கண்டு இருக்கின்றோம்...உடலானது உறங்கும் பொழுது உடல் உறுப்புக்கள் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன என்று. அவற்றைப் போன்றே தான் ஆன்மாவானதும், என்ன செய்யலாம் என்று எண்ணியவாறே விழித்துக் கொண்டு தான் இருக்கின்றது. சமயங்களின் கூற்றின் படி 'ஐம்புலன்களை அமைச்சராக வைத்து கொண்டு, அவற்றின் கூற்றுகளை அடிப்படையாக கொண்டு அரசாளும் ஒரு அரசனைப் போன்றே தான் ஆன்மாவானது இருக்கின்றது. (சிவஞானபோதம்)' அதாவது ஐம்புலன்களின் மூலமாக பெற்ற அறிவினை வைத்து செயலாற்றும் தன்மையினை ஆன்மாவானது கொண்டிருக்கின்றது. உதாரணத்திற்கு பேய்படம் ஒன்றினை நாம் காணும் பொழுது கண்களின் வழியாக பேயின் உருவத்தினையும் செவியின் வழியாக பேயின் அலறலையும் ஆன்மாவானது அறிந்துக் கொள்ளுகின்றது. அவை பயம் தரும் வண்ணம் இருப்பதனால் ஆன்மாவானது பயப்படுகின்றது.

'பேயானது உண்மையில் என்னைத் துரத்தினால்' என்னவாகும் என்ற சிந்தனையின் விளைவாக, பேயினைப் பற்றியும் தான் இருக்கின்ற இடத்தினைப் பற்றியும் தன்னுடைய மூளையில் பதிந்து இருக்கும் விடயங்களை வைத்து தன்னை அப்பேய் துரத்துவதாக ஆன்மாவானது, உறங்கும் பொழுது ஒரு சிந்தனையை உருவாக்கி கொள்கின்றது. அதன் விளைவாகத் தான் நன்கு பழக்கப்பட்ட இடத்தில் பேய்கள் துரத்துவதனைப் போன்ற கனவுகள் எழுகின்றன.

அதனைப் போன்றே தான் மேலே நாம் கண்ட இரண்டு நிகழ்வுகளும் நிகழ்கின்றன...ஒரு விடயத்தினைக் குறித்து நாம் முழு மனதாக சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்...அப்படியே நாம் உடல் அசதியினால் உறங்கிப் போய் விடுகின்றோம். ஆனால் நம்முடைய ஆன்மாவோ விழித்துக் கொண்டே தான் இருக்கின்றது...அப்படியே அந்த விடயத்தினைப் பற்றி தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே தான் இருக்கின்றது. அதனால் தான் நாம் உறங்கி எழுகின்ற பொழுது சில கேள்விகளுக்கு விடைகள் சட்டென்று புலனாகின்றன...சில புதிய விடயங்களும் புலனாகின்றன. ஏனென்றால் உடலானது அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஆன்மாவானது தொடர்ந்து இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது.

ஆகையால் தான் பயணத்தின் பொழுது நாம் உறங்கிக் கொண்டிருந்தாலும், 'இந்த ஊரில் நாம் இறங்க வேண்டும்' என்கின்ற சிந்தனையை ஆன்மாவானது கொண்டிருப்பதினால், அந்த ஊரானது வந்து விடுகின்ற பொழுது நாம் நம்மை அறியாமலேயே விழித்து விடுகின்றோம்.

 சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய உடலானது உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஆன்மாவானது உறங்காது விழித்துக் கொண்டே தான் இருக்கின்றது. உறங்குவதற்கு முன்னால் நாம் எந்த வேலையையாவது முழு மனதுடன் செய்து வந்துக் கொண்டிருந்தோமேயானால், நாம் உறங்கியதற்குப் பின்னரும் கூட ஆன்மாவானது அந்த வேலையைக் குறித்து சிந்தித்துக் கொண்டே தான் இருக்கின்றது. இதற்கு எடுத்துக்காட்டாய் நாம் பயணம் செய்யும் பொழுது சரியான நேரத்தில் சரியான ஊரில் நாம் விழித்து எழும் நிகழ்வினையும், விடை அறியா கேள்விகளுக்கு உறங்கி எழுந்த உடன் விடை அறிந்து விடும் நிகழ்வினையும் எடுத்துக்காட்டாய் கொள்ளலாம்.

மேலும் நாம் உறங்குவதற்கு முன்னர் எந்தொரு குறிப்பான விடயத்தினைப் பற்றியும் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை என்றால், ஆன்மாவானது, நம்முடைய மூலையினில் பதிவாகி இருந்த மற்ற விடயங்களை எடுத்துக் கொண்டு அதனைப் பற்றி சிந்திக்கத் துவங்குகின்றது. அதன் விளைவாகத் தான் சாதாரண கனவுகள் ஏற்படுகின்றன.

மேலும் ஆன்மீகவாதிகளின் கூற்றின்படி கனவுகளில் இறைவன் ஆன்மாவினை வழிநடத்துவதும் உண்டு. உதாரணத்திற்கு மகாயான பௌத்தத்தின் கூற்றின்படி

'சம்போக காயா நிலையில் புத்தர் ஒவ்வொரு போதிசத்துவரையும் தனது தர்மகாயா நிலையுடன் ஒன்றிணைக்கின்றார். கனவுகள் மூலமாகவோ அல்லது காட்சிகள் மூலமாகவோ சம்போக காயா நிலை புத்தர் ஒவ்வொரு போதிசத்துவரையும் வழிநடத்துகின்றார்.'

இதைப் போன்ற விடயங்கள் அனைத்து சமயங்களிலும் காணப்படுகின்றன. சரி இருக்கட்டும், ஆன்மாவின் சிந்தனைகளே கனவுகள் என்றே நாம் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது சில சம்பவங்கள் நிகழும் பொழுது, அவை ஏற்கனவே நிகழ்ந்து இருப்பதனைப் போன்ற உணர்வினை நாம் பெற்று இருக்கின்ற நிலையினைத் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது.

காணலாம்...!!!

பி.கு:
மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

கனவுகள் விசித்திரமானவை என்றும் அவை பலவகைப் படும் என்றுமே நாம் முன்னர் கண்டிருக்கின்றோம். மேலும் தூக்கத்தில் வரும் சிந்தனைகள் என்று கனவுகளை விளக்கலாம் என்றும் கண்டிருக்கின்றோம்.இப்பொழுது அந்த கனவுகளைப் பற்றியே தான் விரிவாக காண வேண்டி இருக்கின்றது.

உடலானது தனக்குரிய ஓய்வினை உறக்கத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ளுகின்றது என்றே நாம் கண்டோம். அத்தகைய தூக்கத்தின் பொழுது, நம்முடைய புலன்களும் ஓய்வெடுக்கத் தான் செய்கின்றன. விழித்து இருக்கும் பொழுது நாம் அவற்றை பயன்படுத்துவதனைப் போன்று உறங்கும் பொழுது நாம் அவற்றை பயன்படுத்துவதில்லை. அதாவது நாம் உறங்கும் பொழுது ஐம்புலன்களுக்கும் பெரிதாக வேலை ஒன்றும் இருப்பதில்லை. உடல் தனது ‘தூக்க’ நிலையில் தேவையான உறுப்புக்களை மட்டும் இயக்கிக் கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றது.

ஆனால் கனவிலோ நம்முடைய ஐம்புலன்களையும் நாம் பயன்படுத்திக் கொண்டு சிந்தித்துக் கொண்டு தான் இருக்கின்றோம். அதாவது நாம் உறங்கும் பொழுது நம்முடைய ஐம்புலன்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன அத்துடன் நம்முடைய சிந்தனையும் தான்…ஆனால் அதே நேரம் கனவிலோ நம்முடைய ஐம்புலன்கள் மும்மூரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன அத்துடன் சிந்தனையும் தான். இதனை எவ்வாறு விளக்குவது என்றே நாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது நம் முன்னே ஒரு கேள்வியினை சமயங்கள் வைக்கின்றன :

உடல் ஓய்வெடுக்கின்றது சரி…ஆனால் உடலுடன் சேர்ந்து ஆன்மா ஓய்வெடுக்கின்றதா இல்லை ஆன்மாவானது எப்பொழுதும் போல் இருந்துக் கொண்டிருக்கின்றதா? இக்கேள்விக்கான விடையினை சமயங்கள், ‘ஆன்மா எப்பொழுதும் போல் தான் இருந்துக் கொண்டிருக்கின்றது’ என்றே கூறுகின்றன. அதனைத் தான் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.

அனைத்து மனிதர்களின் உடலும், நிறம்..குறைபாடுகள்…போன்ற விடயங்கள் நீங்கலாக ஒன்றைப் போலவே இயங்குகின்றது. இருதயமாகட்டும், மூளையாகட்டும், எலும்பாகட்டும்…அனைத்தும் ஒன்றைப் போலவே இருக்கின்றன. ஆகையால் தான்  ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதனின் உறுப்புக்களை கொண்டு உதவ முடிகின்றது. அனைத்தும் ஒன்றைப் போன்றே இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் ஒன்றைப் போல் இருப்பதில்லை. இதனை நாம் அறிவோம். நம்முடைய வேறுபாடு நம்முடைய சிந்தனையில் அடங்கி இருக்கின்றது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சிந்தனைகளைக் கொண்டிருக்கின்றோம். இங்கேயும் நமக்கு ஒரு கேள்வி இருக்கத்தான் செய்கின்றது…ஒரே மாதிரியான உடலினைக் கொண்டிருந்தும் ஏன் நம்முடைய சிந்தனைகள் வேறுபட்டு இருக்கின்றன?

இதற்கு விடையாய் நமக்கு கிட்டுகின்ற பதில் இது தான். மனிதனின் சிந்தனை அவனது சூழலிற்கு ஏற்ப மாறுகின்றது…அவன் வளர்ந்த சூழல்…அவனது சமூகம்…அவன் காணுகின்ற விடயங்கள் இவற்றினை அடிப்படையாகக் கொண்டு அவனது மூளையானது பல சிந்தனைகளைத் தோற்றுவிக்கின்றது. ஆகையால் சூழலானது ஒருவருக்கு ஒருவர் மாறுபடுவதனால் ஒருவருக்கு ஒருவர் சிந்தனையும் மாறுபடுகின்றது. அத்தகைய மாற்றத்திற்கு காரணம் மூளை தான், என்று மூளையினையே அவர்கள் அனைத்திற்குமான காரணியாக கூறுகின்றனர். இதைத் தான் நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டியிருக்கின்றது.

மனிதர்கள் அனைவரின் உடலும் ஒன்றினைப் போன்றே இயங்குகின்றது. அனைவரின் இருதயமும் ஒன்றைப் போன்று தான் துடிக்கின்றது. அப்படி அது சற்று மாறித் துடித்தது என்றால் இருதயம் சரியாக வேலைப் பார்க்கவில்லை என்றும் நோய் என்றும் கூறுகின்றோம்…அதனைப் போன்றே தான் மற்ற உறுப்புக்களுக்கும்…மனிதர்களின் உடலின் வெப்பம் அனைவருக்கும் ஒன்றைப் போன்றே இருக்கின்றது…மனிதன் பாலைவனத்தில் இருந்தாலும் சரி பனி பிரதேசத்தில் இருந்தாலும் சரி…உடலின் வெப்பம் 98.4 டிகிரி தான் இருக்கின்றது. அதில் மாற்றம் ஏற்பட்டாலோ நாம் நோய் என்றும் உடல் சரியில்லை என்றும் கூறுகின்றோம். அனைத்தும் அவ்வாறு இருக்க, தோற்றத்திலும் அமைப்பிலும் அனைவருக்கும் ஒன்றினைப் போன்றே இருக்கின்ற இந்த மூளையானது மட்டும் எப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி வேலை செய்கின்றது? அதன் இயக்கமும் ஒன்றினைப் போன்று தானே இருக்க வேண்டும்? ஏழ்மையான சூழலில் ஒருவன் இருந்தாலும் பணம் மிகுந்த சூழலில் ஒருவன் இருந்தாலும் அவனுடைய உடலின் மற்ற பாகங்கள் எவ்வாறு ஒன்றைப் போல் வேலை செய்கின்றனவோ அதனைப் போன்று தானே அவனுடைய மூளையும் ஒன்றினைப் வேலை செய்ய வேண்டும்? அதனை விடுத்து அது மட்டும் ஏன் வெவ்வேறு சிந்தனைகளை உருவாக்குகின்றது?

சரி ஒரு உதாரணத்திற்கு விலங்குகளை எடுத்துக் கொள்வோம்…அவைகளுக்கும் மூளை இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் ஆச்சர்யவசமாக அவைகள் அனைத்தின் மூளையும் ஒன்றினைப் போன்றே தான் வேலை செய்கின்றது. அதாவது அனைத்து சிங்கங்களும் ஒன்றினைப் போல் தான் சிந்திக்கின்றன. அவற்றின் சிந்தனைகள் மாறுவதில்லை. எந்தொரு சிங்கமும் அமைதிக்காக தியானம் செய்வதோ அல்லது மற்ற விலங்குகள் அனைத்திற்காகவும் உழைத்து தன்னுடைய வாழ்வினைத் தியாகம் செய்வதோ இல்லை. அதனைப் போன்றே அனைத்து புலிகளின் சிந்தனையும் ஒன்றினைப் போன்றே இருக்கின்றது. ஒரு புலியின் நடவடிக்கையினை வைத்தே மற்ற புலிகளின் குணங்களை நாம் கணித்து விடலாம். இதனைப் போன்றே தான் மற்ற பறவை இனங்கள் விலங்கினங்கள் என்று அனைத்திற்கும் இருக்கின்றது. அவைகள் அனைத்திற்கும் மூளை இருக்கின்றது. அவைகளின் மற்ற உடல் உறுப்புக்கள் எவ்வாறு ஒன்றினைப் போல் வேலை செய்கின்றதோ அதனைப் போன்றே தான் அவற்றது மூளையும் வேலை செய்கின்றது.

இந்நிலையில் எதனை வைத்து மனிதனின் மூளை மட்டும் ஒருவருக்கொருவர் வித்தியாசமாக செயல்படுகின்றது என்று கூறுவதனை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும்? அனைத்து மூளையும் ஒன்றினைப் போன்றே இருக்கக் கூடிய நிலையில் அனைத்து சிந்தனைகளும் ஒன்றினைப் போன்றே அல்லவா இருக்க வேண்டும். ஏன் அவ்வாறு இல்லாது சிந்தனைகள் மாறுகின்றன…மேலும் மாறிக் கொண்டே ஏன் அவை இருக்கவும் செய்கின்றன?

இந்த கேள்விக்கு விடையினை நாம் தேடினோம் என்றால் விடையாய் வருவது ‘மனிதனின் மூளையின் செயல்பாடு ஒன்றாகத் தான் இருக்கின்றது ஆனால் அதனை பயன்படுத்தும் ஆன்மா தான் அதனை பல்வேறு விதமாக பயன்படுத்துகின்றது, அதன் விளைவாகத் தான் அத்தனை வேறுபாடுகள் இங்கே நிகழப் பெற்றுக் கொண்டிருக்கின்றன’ என்பது தான். அந்த ஆன்மா தான் மனிதனுக்கு சுயமாக/சுதந்திரமாக சிந்திக்கும் ஆற்றலினை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

மிருகங்களின் சிந்தனைகள்  வரையறைக்குள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதனால் தான் ஒரு சிங்கத்தால் சிங்கமாக மட்டுமே இருக்க முடியும்…ஒரு கிளியால் கிளியாக மட்டுமே இருக்க முடியும்…அவற்றின் மூளையும் அவை அவ்வாறு இருப்பதற்கு மட்டுமே பயன்படும். அவற்றிற்கு வேறு சுதந்திரம் கிடையாது. அதனால் தான் ஒரு புலியினை நன்கு கவனித்தாலே நம்மால் அனைத்து புலிகளின் இயல்பினையும் கணிக்க முடிகின்றது. ஏன் என்றால் அவை அனைத்தின் இயல்பும் ஒன்றாகவே தான் இருக்கும். வேறு எப்படியும் அவற்றால் இருக்க முடியாது. ஒரு புலியின் மூளை அதனை ஒரு புலியாகவே தான் வைத்திருக்கும்.

ஆனால் மனிதனின் சிந்தனையோ எந்தொரு வரையறைக்குள்ளும் கட்டுப்பட்டு இருப்பதில்லை….அவனுக்கு சுதந்திரம் இருக்கின்றது…அந்தச் சுதந்திரத்தினை அவனுக்கு அவனது ஆன்மாவானது வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்த சுதந்திரத்தினை மனிதனானவன் பயன்படுத்திக் கொள்ளுகின்ற விதத்தினில் தான் அனைத்து வேறுபாடுகளும் அடங்கி இருக்கின்றன. சரி இருக்கட்டும்…சும்மா ஆன்மா ஆன்மா என்று கூறி விட்டால் போதுமா? அந்த ஆன்மா என்ற ஒன்று இருப்பதற்கு சான்றுகள் எங்கே? என்ற கேள்விகளுக்கு விடையாய் தான் கனவுகள் இருக்கின்றன.

ஏனென்றால் நம்முடைய கனவுகளில் சிந்தித்துக் கொண்டும் ஐம்புலன்களைப் பயன்படுத்திக் கொண்டும் உலாவிக் கொண்டிருப்பது ஆன்மா தான்…!!!

அதனையே இப்பொழுது காணலாம்…!!!

பி.கு:

மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

நாம் இது வரை கண்டு வந்திருப்பவைகளை சற்று சுருக்கமாக காண்பது நலமாக என்றே எண்ணுகின்றேன்.

மரணத்திற்குப் பின்னர் ஒன்றுமே இல்லை என்றே அறிவியல் கூறுகின்றது. மரணம் என்பது முடிவல்ல, அதற்கு பின்னும் வேறு ஏதோ ஒன்று இருக்கின்றது என்றே சமயங்கள் கூறுகின்றன. இவ்விரண்டு கூற்றுகளில் அறிவியலின் கூற்றினைப் பற்றியே நாம் இது வரை கண்டு இருக்கின்றோம். வாழ்வின் சில விடயங்களுக்கு எவ்வாறு இன்றைய ஐரோப்பிய அறிவியலினால் பதில் அளிக்க முடியாது இருக்கின்றது என்பதனையும் நாம் மேலோட்டமாக கண்டு இருக்கின்றோம். அதாவது,
தம்மைத்தாமே புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றலினை உடைய செல்கள் எதனால் அவ்வாற்றலினை இழக்கின்றன? என்பதனைக் போன்ற கேள்வியிற்கும்

கனவுகள் எதனால் உருவாகின்றன? ஏன் உருவாகின்றன? அவற்றின் அர்த்தம் யாது? என்பன போன்ற கேள்விகளுக்கும் இன்று வரை அறிவியலால் தகுந்த பதிலினைத் தர முடியாமல் தான் இருக்கின்றது. பிற்காலத்தில் அதனால் அக்கேள்விகளுக்கு விடையினைத் தர முடியுமா? அதனை நாம் பொறுத்திருந்து தான் காண வேண்டி இருக்கின்றது. எனவே இப்போதைக்கு மரணத்திற்குப் பின்பு ஒன்றுமே இல்லை என்ற அறிவியலின் கூற்றினை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. சரி…இப்பொழுது நாம் சமயங்களின் கூற்றினை காண்போம்.

மரணத்தினை சமயங்கள் எவ்வாறு விளக்குகின்றன என்று கண்டோமே என்றால் ‘உயிர்/ஆன்மா’ என்ற ஒன்று எப்பொழுது உடலினை விட்டு நீங்குகின்றதோ அப்பொழுது மரணம் நிகழ்கின்றது என்றே சமயங்கள் கூறுகின்றன (இங்கே உயிரும் ஆன்மாவும் ஒன்றா அல்லது இரண்டும் வேறா என்ற கேள்விகளும் இருக்கத்தான் செய்கின்றன…ஆனால் அவை இந்த பதிவிற்கு முக்கியம் இல்லாததால் அந்த விடயத்தினைப் பற்றி நாம் இங்கே காண வேண்டியதில்லை). அதாவது உயிர் என்ற ஒன்று இருக்கும் வரை உடலானது இயங்கிக் கொண்டே இருக்கின்றது. எப்பொழுது உயிரானது பிரிகின்றதோ அப்பொழுது உடலானது அழிகின்றது. இது தான் சமயங்கள் தரும் விளக்கம் ஆகும். இதனைச் சற்று விரிவாக காண்போம்.

நமது உடலானது செல்களால் உருவாகி இருக்கின்றது. அப்படி செல்களால் உருவாகி இருக்கின்ற உடலினை உயிரானது இயக்கிக் கொண்டிருக்கின்றது. உடலின் இயக்கம் முழுக்கவே உயிரினைச் சார்ந்து இருக்கின்றது. அணுக்களின் இயங்கும்/புதுப்பித்துக் கொள்ளும் தன்மை உயிரின் மூலமாகவே சாத்தியப்படுகின்றது. ஆகையால் தான் உயிர் எப்பொழுது பிரிகின்றதோ அப்பொழுது உடலினது இயக்கம் (அணுக்களின் புதுப்பித்துக் கொள்ளும்/இயங்கும் தன்மை) நின்று போய் உடல் தனது அழிவினைச் சந்திக்கின்றது.

இதனால் தான், அணுக்கள் அனைத்தும் புதிதாக இருக்கக்கூடிய உடலினை ஒரு இளைஞர் பெற்று இருந்தாலும், எப்பொழுது உயிர் அவரை விட்டு பிரிகின்றதோ அப்பொழுது அவர் மரணமடைகின்றார். அவருடைய உடலில் அனைத்தும் சரியாக இருக்கின்றன…இருந்தும் அவற்றை இயக்கக் கூடிய ஆற்றல், அதாவது உயிர் அங்கே இல்லை. எனவே அவர் மரணமடைகின்றார். அதனால் தான் இறந்த ஒருவருக்கு அறிவியல் எந்த பாகத்தினை மாற்றினாலும் அவரால் உயிர்த்தெழ முடிவதில்லை. காரணம் அறிவியலால் பாகங்களை வழங்க முடியும்..ஆனால் அந்த பாகங்களை இயக்கக் கூடிய உயிரினை வழங்க முடியாது. சரி இருக்கட்டும். உடலினை உயிர் இயக்குகின்றது என்றே நாம் கண்டிருக்கின்றோம். ஆனால் இதனை அனைவரும் நம்ப வேண்டும் என்பதில்லை. சிலர் நிச்சயமாக இக்கூற்றினை மறுக்கத் தான் செய்வர்.

‘உயிர் என்ற ஒன்று இருக்கின்றது என்று நீங்கள் சொல்லுகின்றீர்கள்…ஆனால் அதனை நாங்கள் எப்படி நம்புவது? அணுக்கள் இயங்குகின்றன என்று நாங்கள் கூறுகின்றோம்…அதனை உங்களுக்கு நாங்கள் காட்டவும் செய்கின்றோம்…அவை ஏன் இயங்காது போகின்றன என்பதனைக் குறித்து நாங்கள் ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்கின்றோம்…பிற்காலத்தில் அதனையும் நாங்கள் கண்டறியலாம். ஆனால் உடலுக்கு அப்பாற்பட்டு உயிர்/ஆன்மா என்ற ஒன்று இருக்கின்றது என்று நீங்கள் சொல்வதனை எவ்வாறு நம்ப முடியும்?’ என்றே அவர்கள் கேள்விகளும் எழுப்பக் கூடும். அக்கேள்விக்கும் விடையினை நாம் தேட வேண்டி தான் இருக்கின்றது.

உயிருள்ள மனிதன் ஒருவனுக்கும் உயிரற்ற ஒருவனுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டினை நம்மால் அறிந்துக் கொள்ள முடிகின்றது. அனைவராலும் அதனை அறிந்துக் கொள்ள முடியும் தான். மரணம் என்ற ஒன்று (அதாவது உயிரானது பிரிந்துச் செல்லுகின்ற நிகழ்வானது) அவ்வேறுபாட்டினை நமக்கு தெளிவாக உணர்த்துகின்றது தான். ஆனால், மரணத்தின் மூலமாக அல்லாது, வேறு வகையில் உயிர்/ஆன்மா என்ற ஒன்று இருப்பதனை நம்மால் அறிந்துக் கொள்ள முடியுமா? என்றே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. ஏனென்றால் மரணத்திற்குப் பின் என்ன இருக்கலாம் என்று கூறுவதனை அனுபவித்துப் பார்க்காத வரையில் உண்மையானது என்னவென்பதனை எவராலும் உறுதியாக கூறவோ நம்பவோ முடியாது.

அதாவது ஒருவன் தனது மரணத்திற்குப் பின்னர் தீர்ப்பு நாளிற்காக காத்து இருப்பான் என்றே நம்பி இருக்கலாம்…மற்றொருவன் மறுபிறவியில் நம்பிக்கையினைக் கொண்டிருக்கலாம்…ஆனால் அவற்றை அவன் அனுபவிக்காத வரை அவை வெறும் நம்பிக்கைகளாகத் தான் இருக்க முடியும். அவை நடக்கலாம், நடக்காமலும் போகலாம். மரணமடைந்த பின்னர் எவராவது வந்து சொல்லிவிட்டுச் சென்றால் தான் நம்மால் அதனை அறிந்துக் கொள்ள முடியும். எனவே மரணத்தினை மட்டுமே வைத்து உயிர் என்ற ஒன்று இருக்கின்றது என்று கூறுவது போதுமானதாக இருக்காது. எனவே வேறு எவ்வழியிலாவது, ஒரு மனிதன் தான் உயிருடன் இருக்கும் பொழுதே, உடலினைத் தவிர்த்த வேறொன்று தன்னிடம் இருக்கின்றது என்பதனை அறிய முடியுமா என்றே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

அப்படி அறிய முடியுமா என்ற கேள்விக்கு ‘ஆம்…’ என்றே விடையினை அளித்துக் கொண்டிருக்கின்றன கனவுகள்….!!!

மீண்டும் கனவு காண்போம்…!!!

தொடரும்…!!!

பி.கு:

மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

சென்ற பதிவினில் உடல் தனக்குரிய ஓய்வினை தூக்கத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளுகின்றது என்று கண்டோம். அதே நேரம் உடலின் சக்தியினை மீறக்கூடிய வண்ணம் மனம் என்ற ஒன்றும் இருக்கத்தான் செய்கின்றது என்றும் கண்டோம். இப்பொழுது அந்த மனதினைத் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது.

மனம் என்றால் என்ன? அது நமது உடலில் எங்கே இருக்கின்றது? எளிதானதாக தோன்றக் கூடிய இந்தக் கேள்விகளுக்கு விடைகள் எளிதாக கிடைப்பதில்லை தான். இங்கே அறிவியலானது மனதிற்கு தர முயன்றுக் கொண்டிருக்கும் விளக்கங்களை நாம் காண வேண்டியதில்லை என்றே எண்ணுகின்றேன். எனவே மனதினை நம்முடைய பார்வையில் இருந்தே நாம் காண முற்படலாம். அதற்கு நாம் ஒரு எடுத்துக்காட்டினை எடுத்துக் கொள்வது நலமாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன். அதுவும் என்னுடைய கனவுகளின் மூலமாக விளக்க முற்படுவது இன்னும் எளிதாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.

நான் சிறுவனாக இருந்த பொழுது பேய்களுக்கு அஞ்சுவேன். நிச்சயமாக வேறு யார் சொல்லியோ அல்லது பேய்களைப் பற்றிய படம் ஏதோ ஒன்றினை கண்டதினால் தான் பேய்கள் என்ற ஒன்றினைப் பற்றிய எண்ணமானது என்னுடைய மனதினில் பதிந்து இருக்க வேண்டும். அப்பொழுது ஒரு சில கனவுகளும் வரும்…நான் வசித்து வந்த வீதியில் பேய்கள் மறைந்து இருக்கும்…அவை என்னையும் எனது குடும்பத்தினரையும் துரத்தும்…நான் அஞ்சி ஓடுவேன்…தொலைவில் ஒரு சந்து இருக்கும்…அதனில் சென்று விட்டால் பேய்களிடம் இருந்து தப்பி விடலாம் என்றே நான் அக்கனவினில் நம்பிக் கொண்டிருப்பேன்…அவ்வாறே நான் அந்த சந்தினில் நுழைந்தவுடன் நான் தப்பிக்கவும் செய்வேன். அத்துடன் அந்த கனவும் முற்றுப் பெறும்.

இங்கே நாம் காண வேண்டிய விடயம் என்னவென்றால், அக்கனவினில் நிகழ்ந்த நிகழ்வுகளை நான் எங்கேயும் கண்டு இருந்து இருக்க வாய்ப்பே இல்லை. அவற்றினை நான் சிந்தித்து இருக்கவும் முடியாது. அப்படி இருக்க அந்த நிகழ்வுகள் என்னுடைய மூளையினில் பதிந்து இருக்கவும் வாய்ப்பில்லை. ஆனால் என்னுடைய கனவினில் நான் அந்நிகழ்வுகளைக் கண்டேன்…கண்டேன் என்று சொல்வதனை விட அந்த நிகழ்வுகளில் நான் இருந்துக் கொண்டு இருந்தேன்…அக்கனவினில் நான் பேய்களைக் கண்டேன்…அவற்றை நம்பினேன்…அவற்றிடம் இருந்து ஓடினேன்…எனது இதயமானது துடித்துக் கொண்டிருந்ததை உணர்ந்தேன்…அவற்றிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்துக் கொண்டும் இருந்தேன்… அனைத்தையும் நான் செய்துக் கொண்டிருந்தேன். அதாவது ஏற்கனவே நிகழ்ந்த நிகழ்வொன்றினை, ஒரு திரைப்படத்தினை மீண்டும் கான்பதனைப் போன்று நான் கண்டு கொண்டிருக்கவில்லை…மாறாக நிகழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வினில் நானே வாழ்ந்துக் கொண்டிருந்தேன். இது எதனால் சாத்தியமாயிற்று?

மூளையினாலா? விழித்து இருக்கும் பொழுது தானே ஒரு மனிதனால் எதனையும் செய்யவோ அல்லது அறியவோ முடியும். அந்நிலையில் நான் உறங்கிக் கொண்டிருக்கின்ற பொழுது என்னால் எப்படி என்னுடைய மூளையினை பயன்படுத்தி இருக்க முடியும்? அல்லது என்னுடைய மூளையானது என்னுடைய உதவி இல்லாமலேயே இயங்கிக் கொள்ளும் தன்மையினைப் பெற்று இருக்கின்றதா? சரி என்னுடைய உதவி இல்லாமலேயே மூளையானது சிந்தித்து கனவினை உருவாக்குகின்றது என்றால், அந்த கனவினில் பயந்து ஓடிக் கொண்டே எவ்வாறு தப்பிப்பது என்று மூளையினை பயன்படுத்திக் கொண்டிருக்கும் அந்த சிறுவன் யார்? அவன் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மூளை எந்த மூளை? பின்னர் விழித்து எழுந்தவுடன் நடந்தவை அனைத்தும் கனவு தான் என்று உறுதிப்படுத்துவது எந்த மூளை?

இந்த கேள்விகளுக்கு எவ்வாறு நாம் விடையினை கூறுவது? செல்களால் ஆன மூளை ஒன்று, தானாக ஒரு கனவினை உருவாக்குகின்றது. பின்னர் அக்கனவினை உண்மை என்றே அது நம்பவும் செய்து தப்பிக்க சிந்திக்கவும் செய்கின்றது. பின்னர் விழித்து எழுந்த பின்னர் நடந்தது உண்மை அல்ல ஒரு கனவு என்றே அது அறிந்து கொள்ளுகின்றது. இதில் அர்த்தம் ஏதேனும் இருக்கின்றதா?

உடலானது உறங்கும் பொழுது மூளையானது உறங்குவதில்லை. அந்நிலையில் உறங்குவதும் விழித்து எழுவதும் மூளைக்கு தொடர்பில்லாத ஒன்று. உறங்கும் பொழுதும் விழித்து இருக்கும் பொழுதும் எப்படி இதயமானது துடித்துக் கொண்டே இருக்கின்றதோ அப்படியே தான் மூளையும் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது. அந்நிலையில் தூங்கும் பொழுது கனவினை உண்மை என்று நம்பியது என்றும் எழுந்தவுடன் அது பொய் என்று அறிந்தது என்றும் நாம் மூளையினைப் பற்றி கூறினோம் என்றால் அது பொருத்தமில்லாத ஒன்றாகத் தான் இருக்கும்.

இந்நிலையில் தான் நாம் அக்கேள்விகளுக்கு வேறு ஏதேனும் பொருத்தமான விடைகள் இருக்கின்றனவா என்றே காண வேண்டி இருக்கின்றது. அதாவது நான் உறங்கிக் கொண்டு இருக்கின்றேன்…ஆனால் அதே நேரம் நான் கனவிலும் உலாவிக் கொண்டு சிந்தித்துக் கொண்டு இருக்கின்றேன்…இந்நிலையில் உறங்கிக் கொண்டிருப்பது  நானா அல்லது கனவினில் உலாவிக் கொண்டிருப்பது யார்? நான் யார்? என்ற அந்த கேள்விக்கே விடையினை நாம் தேட வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் வேறு ஒரு கனவினைக் பற்றி காண்பது உதவியாக இருக்கும்…!!! பொதுவெளிகளில் கருத்துக்களைக் கூறும் பொழுது, சுய அனுபவங்களின் வாயிலாக அல்லாது அனைவருக்கும் பொதுவாக இருக்கும் விடயங்களின் அடிப்படையிலேயே விளக்கங்களை அளிப்பது தான் பொதுவாக எப்பொழுதும் சரியானதொன்றாக இருக்கும்…ஆயினும் சில நேரங்களில் வேறு வழி இல்லாது போய் விடத் தான் செய்கின்றது. காரணம் மற்ற அனைத்தையும் விட அனுபவங்களே மிகுந்த திறமை வாய்ந்த ஆசான்களாக இருக்கின்றன. சரி..இப்பொழுது நாம் மற்றுமொரு கனவினையே காண வேண்டி இருக்கின்றது. இதுவும் என்னுடைய ஒரு அனுபவம் தான்.

அது 2010 ஆம் வருடம். நான் ஹைதராபாதில் பணி செய்து வந்துக் கொண்டிருந்த காலம். மேலும் கால்பந்து உலகக்கோப்பை நடந்துக் கொண்டிருந்த காலம் வேறு…எனக்கு கால்பந்தில் சிறிது ஆர்வம் அதிகம்…ஆனால் கால்பந்து போட்டிகளை காண முடியாதொரு சூழ்நிலை…காரணம் அனைத்துப் போட்டிகளும் நள்ளிரவில் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன…மேலும் எனது அறையில் இருந்த தொலைகாட்சியில் அந்த போட்டிகள் தெரியவும் செய்யாது. அந்நிலையில் பிரேசில் அணிக்கும் வடகொரியா அணிக்கும் இடையில் போட்டி நடைபெறவிருந்த இரவில் நான் ஒரு கனவு கண்டேன்…கொஞ்சம் விசித்திரமான கனவு தான். அந்த கனவினை விவரிக்க என்னால் முடியவில்லை ஆகையால் கீழே இருக்கும் படத்தினைக் காணவும்.


அதில் வழக்கமாக இருக்கும் கோல்போஸ்டினைப் போல் இல்லாது ஒரு பக்கம் இருக்கும் கோல்போஸ்ட் வேறு மாதிரி இருந்தது. அப்படி இருக்கும் கோல்போஸ்டினில் ஒருவன் கோல் போடுவதைப் போல் அந்த கனவு இருந்தது. காலையில் எழுந்த பொழுது அந்த கனவானது தெளிவாக நினைவில் இருந்தது…கூடவே 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது என்ற எண்ணமும் தான். எவ்வாறு அந்த கோல் கணக்கும் செய்தியும் என் நினைவிற்கு வந்தது என்று எனக்குத் தெரியாது. எழுந்தவுடன் மீண்டும் கனவு கண்ட அந்த கோலினைப் பற்றி சிந்தித்துப் பார்க்கின்றேன்…சிரிப்பு தான் வந்தது…’கனவே டே…அது எப்படி ஒரு கோல் போஸ்ட் அப்படி திரும்பி இருக்கும்…அதுல எப்படி ஒருத்தன் கோல் போடுறான்…நல்ல கனவு’ என்று எண்ணிக் கொண்டே, போட்டியின் விவரங்களை அறிந்துக் கொள்வதற்காக தொலைக்காட்சியை போடுகின்றேன். செய்தி தொலைகாட்சியினில் பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது என்று கூறிக் கொண்டிருக்கின்றார்கள். ‘என்னடா…எப்படி’ என்று எண்ணிக் கொண்டிருப்பதற்குள், அவர்கள் காண்பித்த ஒரு கோல் என்னை மிரளத் தான் வைத்தது. நான் கனவு கண்டிருந்ததைப் போன்றே ஒருவன் (மைகான்) ஒரு கோலினைப் போட்டிருந்தான் (அதனைக் காண ‘maicon goal vs north korea 2010 world cup’ என்று யூடுப் அல்லது கூகிளில் தேடவும்) . எனது கனவிற்கும் அந்த கோலிற்கும் இருந்த ஒரே வித்தியாசம் அந்த கோல் போஸ்ட் மைதானத்தில் சரியாக இருந்தது மட்டும் தான்.என்னாலேயே என்னை நம்ப முடியவில்லை…எப்படி இது சாத்தியமாயிற்று…ஏன் சாத்தியமாயிற்று? தெரியவில்லை. இருந்தும் அது அத்தகைய முதல் நிகழ்வும் இல்லை…இறுதி நிகழ்வும் இல்லை. மேலும் பலருக்கும் இத்தகைய அனுபவங்கள் வாய்க்கப்பட்டு தான் இருக்கின்றது. இங்கே தான் அறிவியல் பதிலளிக்க முடியாமல் சிந்தித்துக் கொண்டிருக்கின்றது. ஒரு மனிதனால் தன்னுடைய ஐம்புலன்களைக் கொண்டு எவற்றை அறிய முடியுமோ அதனை மட்டும் தான் அவனால் அறிய முடியும்…அனைத்தும் அவனது மூளையினைச் சார்ந்தே இருக்கின்றது என்றுக் கூறும் அறிவியலால், இதனை எவ்வாறு விளக்க முடியும்?
முடியாது..நிச்சயம் முடியாது.

ஆகையால் வெறும் செல்களின் சேர்க்கை தான் மனிதன் என்றும், செல்கள் தம்மைத்தாமே புதுப்பித்துக் கொள்ள முடியாது செயல் இழக்கின்ற நிலை தான் மரணம் என்றும் அறிவியல் கூறும் கூற்றுக்களை நாம் மறுக்க வேண்டி இருக்கின்றது.

ஆனால் மறுத்தல் மட்டுமே இங்கு போதாது…மாறாக மேலே நாம் கண்ட நிகழ்வுகளுக்கு விளக்கமும் அளிக்க/தேட வேண்டிய கடமை நமக்கு இருக்கத் தான் செய்கின்றது. ஏனென்றால் வெறும் செல்களின் கூட்டு அல்லவே நாம்…எனவே தேடலாம்…!!!

தொடரும்…!!!

பி.கு:

மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

கனவுகள்….இப்பொழுது இவற்றைப் பற்றியே தான் நாம் காண வேண்டி இருக்கின்றது. ஆனால் அதற்கு முன்னர் ஒன்றினைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இப்பதிவுகள் சிந்திக்கத் தூண்டுவதற்கும், கருத்துக்களை அறிந்துக் கொள்வதற்கும், அனுபவங்கள் மூலமாக பெற்ற விடயங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதனையும் மட்டுமே தங்களுடைய இலக்காக கொண்டு இருக்கின்றன. மாறாக கண் மூடித் தனமாக நான் சொல்வது மட்டும் தான் உண்மை என்று பிறரை நம்பச் செய்யும் நோக்கம் இங்கே கிடையாது. நானும் கற்றுக் கொண்டு தான் இருக்கின்றேன்…எனவே கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. சரி இருக்கட்டும் இப்பொழுது கனவுகளைப் பற்றியே நாம் காண்போம்.

கனவுகள் சற்று விசித்திரமானவை தான். சில கனவுகள் மிகவும் துல்லியமாக விவரங்களைக் கொண்டிருக்கும். அதே நேரத்தில் வேறு சில கனவுகளோ நம்ப முடியாத விடயங்கள் பலவற்றைக் கொண்டு அமைந்திருக்கும். சில கனவுகள் நாம் தூங்கி எழுந்தாலும் கூட நம்முடைய நினைவினில் இருந்துக் கொண்டே இருக்கும்…வேறு கனவுகளோ நாம் விழித்து எழுந்தவுடன் முற்றிலுமாக மறந்து போய் இருக்கும்…மேலும் ஒரு சில கனவுகளில் ஒரு கனவுக்குள்ளேயே நாம் மற்றொரு கனவினைக் காண்பதாக கனவு கண்டுக் கொண்டிருப்போம். இவ்வாறு பல வகையான கனவுகள் இருக்கத் தான் செய்கின்றன. அதனை நம்மில் பலரும் பல நேரங்களில் அறிந்து/உணர்ந்து இருப்போம். அதில் நமக்கு எவ்விதமான சந்தேகமுமில்லை. ஆனால் ஏன் கனவுகள் இருக்கின்றன? அவற்றின் பயன் என்ன? என்கின்ற கேள்விகளில் தான் நமக்கு பலவிதமான சந்தேகங்கள் இருக்கின்றன. சரி, நமக்கு சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் முதலில் அறிவியலானது அச்சந்தேகங்களுக்கு என்ன விடையினை அளிக்கின்றது என்பதனை காண்பதுதானே முறையாக இருக்கும்.

கனவுகளைப் பற்றி அறிவியலால் தெளிவாக விளக்க முடியாத ஒரு நிலை தான் இன்று வரை நிலவிக் கொண்டிருக்கின்றது. ‘அனைத்தும் மூளையினைச் சார்ந்தே இருக்கின்றது’ என்பதே அறிவியல் பொதுவாக கொடுக்கும் விடையாக இருக்கின்றது. அதாவது ஒரு மனிதனானவன் உறங்கும் பொழுது அவனுடைய உடல் உறுப்புக்கள் உறங்குவதில்லை…அவை எப்பொழுதும் போல் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றன. அந்நிலையில் அவன் உறக்கத்தில் இருக்கும் பொழுது அவனுடைய மூளையானது தொடர்ந்து இயங்கிய வண்ணம், அவன் அதுவரை கண்டிருந்த காட்சிகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எப்படியோ கனவுகளை உருவாக்குகின்றது. இது தான் அறிவியலின் பொதுவான கூற்றாக இருக்கின்றது. மேலும், கனவுகள் ஏன் வருகின்றன…அவற்றுக்கு ஏதேனும் காரணம்/பலன் இருக்கின்றதா? என்பனவற்றைப் பற்றிய சந்தேகங்கள் ஐரோப்பிய அறிவியலுக்கும் இருக்கத்தான் செய்கின்றது. துல்லியமான ஒரு பதிலினை அதனால் இன்று வரை தர முடியவில்லை. ஐரோப்பிய அறிவியலினை குறை கூற வேண்டும் என்பதற்காக இதனை நான் கூறவில்லை. மாறாக அது தான் உண்மையான நிலையாக இருக்கின்றது. சரி இருக்கட்டும்…இப்பொழுது அச்சந்தேகங்களுக்கு விடையென்று ஏதேனும் இருக்கின்றனவா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

கனவென்றால் என்ன? உறக்கத்தில் வருகின்ற சிந்தனைகள் என்று நாம் கனவினை விளக்கலாம் அல்லவா. இந்நிலையில் கனவினைப் பற்றி நாம் காண வேண்டும் என்றால் முதலில் நாம் உறக்கத்தினைப் பற்றியும் சிந்தனைகளைப் பற்றியுமே காண வேண்டி இருக்கின்றது. முதலில் உறக்கத்தினைப் பற்றியே காணலாம்.

உறக்கம் என்பது உடலின் ஒரு செயல்பாடு. நம்முடைய வாழ்வினில் நாம் இரண்டு வகையான வேலைகளைச் செய்ய வேண்டி இருக்கின்றது. ஒன்று உடல் ரீதியான வேலைகள்…மற்றொன்று மன ரீதியான வேலைகள். இந்த இரண்டு வகையான வேலைகளைச் செய்வதற்கான ஆற்றல் நம்மிடமே இருக்கின்றது. உடல் ரீதியான வேலையினை அதிகம் செய்பவர்களுக்கு உடல் ரீதியான ஆற்றல் அதிகமாக செலவாகின்றது. அதனைப் போன்றே மன ரீதியான வேலையினை அதிகம் செய்பவர்களுக்கு மன ரீதியான ஆற்றல் அதிகமாக செலவாகின்றது.

ஆனால் ஒரு உடலால் தொடர்ந்து ஒரு மனிதனுக்கு தேவையான ஆற்றலினை தடையில்லாது வழங்கிக் கொண்டிருக்க முடியாது. அதற்கும் ஓய்வு வேண்டும். அந்த ஓய்வு தான் உறக்கம். உறக்கத்தின் பொழுது, ஒரு உடலானது, முக்கியமான சில செயல்பாடுகளைத் தவிர மற்ற பல செயல்பாடுகளுக்காக செலுத்தப்படும் ஆற்றலினைக் குறைத்துக் கொண்டு தனக்குத் தேவையான ஓய்வினையும் ஆற்றலினையும் சேமித்துக் கொள்ளுகின்றது. அதாவது தன்னைத்தானே அது சீர் செய்துக் கொள்ளுகின்றது. அதனால் தான் நாம் நன்றாக தூங்கி எழுந்தவுடன் புத்துணர்ச்சியினை உணருகின்றோம். அதனால் தான் இன்றைய மருத்துவர்களும் கூட இரத்தப் பரிசோதனைக்கு ஒருவரை அதிகாலையில் தூங்கி எழுந்தவுடன் வரச் சொல்லுகின்றனர். ஏனென்றால் அப்பொழுது தான் உடலானது அதன் உண்மையானத் தன்மையுடன் இருக்கும். எனவே உறக்கம் என்பது ஒரு உடலானது தனக்குத் தானே எடுத்துக் கொள்ளும் ஒரு ஓய்வு ஆகும். ஒருவருக்கு அடிக்கடி உறக்கம் வருகின்றது என்றாலோ அல்லது ஒருவிதமான தளர்ச்சியினை உணர்ந்தாலோ அவருடைய உடலுக்கு போதுமான ஆற்றல் கிட்டவில்லை என்றே அர்த்தமாகும். சரி இருக்கட்டும்…உறக்கம் என்பது உடலுக்குரிய ஓய்வு என்றே நாம் கண்டு இருக்கின்றோம்.

ஆனால் உடல்ரீதியான உழைப்பினை மட்டுமே ஒருவன் கொண்டிருப்பதில்லை. மன ரீதியான உழைப்பினையும் ஒருவன் கொண்டு தான் இருக்கின்றான். உடல் ரீதியான உழைப்பிற்கு உறக்கத்தின் மூலமாக நம்முடைய உடலானது ஓய்வு எடுத்துக் கொள்ளுகின்றது. ஆனால் மன ரீதியான உழைப்பிற்கு/குழப்பத்திற்கு எதன் மூலமாக ஓய்வு எடுத்துக் கொள்ளுவது?

நமக்கே தெரியும்….நாம் அதிகமாக அலைந்திருந்தாலோ அல்லது உடல் வேலையினைச் செய்திருந்தாலோ நாம் விரைவில் உறங்கி விடுவோம். ‘அடிச்சிச் போட்டாப்ல தூங்குறான்’ என்றே கூறவும் செய்வர். ஆனால் அதே சமயம் உடல் உழைப்பு கம்மியாக இருந்து மன உளைச்சல் அல்லது மன ரீதியான சிந்தனைகள்/வேலைகள் அதிகமாக இருந்தது என்றால் நம்மால் உறங்க முடியாது. அதனால் தான் மன ரீதியான குழப்பங்கள் உடையவர்களுக்கு தூக்க மாத்திரைகள் தேவைப்படுகின்றன. மேலும் தூக்க மாத்திரைகள் அனைத்து மக்களுக்கும் வேலை செய்கின்றனவா என்றால், இல்லை என்று தான் பதில் வரும். காரணம் மனமானது உடலினை விட மிகுந்த வலிமையினைப் பெற்று இருக்கின்றது. அதனால் தான் உடலினை உறங்க வைக்கக் கொடுத்திருக்கும் மருந்தினை மீறியும் மனமானது சில நேரங்களில் இயங்கிக் கொண்டே இருக்கின்றது. அத்தகைய மனதினைப் பற்றித் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்!!!

பி.கு:
 
மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

நமது உலகமானது ஒரு முப்பரிமாண உலகம். ஒரு இடத்தினில் நாம் நின்றுக் கொண்டு இருக்கின்றோம் என்றே வைத்துக் கொள்வோம். நம்மால் அந்த இடத்தில் இருந்துக் கொண்டு மேல் நோக்கி குதிக்க முடிகின்றது. முன்னால் நடந்து செல்ல முடிகின்றது. ஓரமாக நகரவும் முடிகின்றது. இவ்வாறு நம்மால் அந்த முப்பரிமாணங்களுள் பயணிக்க முடிகின்றது. நம்முடைய உலகானது ஒரு முப்பரிமாண உலகாக இருப்பதினால் தான் நம்மால் அவ்வாறு பயணிக்க முடிகின்றது. இதனை நம்மில் அனைவரும் அறிவர். ஒரு சாதாரண திரைப்படத்திற்கும் 3D திரைப்படத்திற்கும் இடையில் இருக்கின்ற வித்தியாசத்தினை நாம் அனைவரும் அறிவோம் தானே.

ஆனால் இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அந்த முப்பரிமாண வெளியினில் நாம் மட்டுமே இருப்பதில்லை…நம்முடன் வில்லங்கமான வேறொன்றும் இருந்துக் கொண்டே தான் இருக்கின்றது…அதான் நேரம்!!! முப்பரிமாணம் இருக்கின்றது…அதில் நம் விருப்பப்படி நம்மால் பயணிக்க முடிகின்றது. ஆனால் முப்பரிமாணத்துடன் நேரம் என்ற ஏதோ ஒன்று இருக்கின்றது…அதில் நம்மால் பயணிக்க முடிவதில்லை. நினைத்த பொழுதில் கடந்த காலத்திற்கோ அல்லது எதிர் காலத்திற்கோ நம்மால் சென்று வர முடிவதில்லை. எப்பொழுதும் நம்மால் நிகழ்காலம் என்ற ஒன்றில் மட்டுமே வாழ முடிகின்றது. அது ஏன்? காலத்தினில் நம்மால் பயணிக்க முடியாதா? என்ற கேள்விகளை, நேரத்தினை ஒரு பரிமாணமாகக் கொண்டு, அறிவியலானது ஆராய்ந்துக் கொண்டு தான் வருகின்றது.

அறிவியலின் கூற்றுப்படி, ஒரு மனிதன் அவனது ஐம்புலன்களால் எதனை அறிந்து இருக்கின்றானோ, அவற்றைப் பற்றி மட்டும் தான் அவனால்/அவனது மூளையினால் சிந்திக்க முடியும். இல்லாத ஒன்றினைப் பற்றியோ அல்லது அறிந்திராத ஒன்றினைப் பற்றியோ ஒருவனால் ஏதும் அறிந்துக் கொள்ள முடியாது. காரணம் – இல்லாத ஒன்றினையோ அல்லது நிகழ்ந்திராத ஒன்றினையோ எவ்வாறு ஒருவனால் அவனுடைய ஐம்புலன்களைக் கொண்டு அறிந்துக் கொள்ள இயலும்? முடியாது தானே. எனவே நடந்திராத ஒன்றினை ஒருவனால் அறிந்துக் கொள்ளவே முடியாது என்பதே அறிவியலின் கூற்றாக இருக்கின்றது.

இதனை கொஞ்சம் தெளிவாக விளக்குவது நன்றாக இருக்கும் என்றே நான் எண்ணுகின்றேன். இன்று கடலினில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவாகி இருக்கின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு நாளை மழை இந்த இந்த ஊரினில் பெய்யும் என்பதனை நம்மால் கூற முடியும். அதாவது மழையானது பெய்து இருக்கவில்லை இருந்தும் நாம் அதனை அறிந்து இருக்கின்றோம். இது வேறு கதை. காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானால் மழை பொழியும் என்பதனையும் அது எங்கே பெய்யும் என்பதனையும் நாம் நம்முடைய அறிவினில் ஏற்கனவே அறிந்து இருக்கின்றோம். ஆகவே நம்முடைய அறிவினை வைத்து நாம் சரியாக அதனை கணிக்கின்றோம். இது முழுக்க முழுக்க நம் அறிவும் அனுபவமும் சார்ந்தது. இந்த வகையான கணிப்புகளைப் பற்றி நாம் மேலே கூறி இருக்கவில்லை. மாறாக ஐம்புலன்களை வைத்து கணிக்க முடியாத ஒரு நிகழ்வினைப் பற்றியே நாம் கூறுகின்றோம். உதாரணத்திற்கு, சம்பந்தமே இல்லாத ஒருவன், சம்பந்தமே இல்லாத மற்றொருவருக்கு எதிர் காலத்தில் இப்படி நடக்கும் என்று கூறி, அவன் கூறிய படியே அனைத்தும் நடப்பது என்கின்ற ஒன்றினை அறிவியலால் ஏற்றுக் கொள்ளவே முடியாது (நான் இங்கே ஜாதகத்தினைப் பற்றிக் கூறவில்லை என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இது ஒரு எடுத்துக்காட்டு அவ்வளவே). காரணம்…அறிவியலின் கூற்றுப்படி,

1) ஐம்புலன்களால் அறிந்திராத ஒருவனை, ஒருவனால் தெரிந்துக் கொண்டிருக்கவே முடியாது.
2) எதிர்காலம் என்பது நிகழாத காலம்…அப்படிப்பட்ட ஒரு காலத்தினில் ஐம்புலன்களால் அறிந்துக் கொள்ள முடியாத ஒன்றினை ஒருவனால் கணிக்கவே முடியாது.

ஆனால் இங்கே தான் அறிவியலுக்கு ஒரு மாபெரும் சிக்கல் காத்திருக்கின்றது. அது என்னவென்றால் மனிதர்களுள் பலர், ஏன் நம்மில் பலரும் கூட சில நிகழ்வுகள் நிகழும் பொழுது அவை ஏற்கனவே நிகழ்ந்ததைப் போன்ற ஒரு உணர்வினை உணர்ந்து இருப்போம்.

அதாவது ஒரு நபருடன் நாம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று நாம் ஏற்கனவே அதே இடத்தில் அதே நபருடன் அதே மாதிரி…ஏன்..அதே வார்த்தைகளைப் பேசியது போன்ற ஒரு உணர்வினை அடைந்து இருப்போம். சில நேரங்களில் நாம் அடுத்து என்ன பேசப் போகின்றோம் அதற்கு அவர் என்ன பேசுவார் என்பதனைக் கூட நாம் அறிந்து தான் இருப்போம். அதாவது ஏற்கனவே நிகழ்ந்த ஒரு நிகழ்வு மீண்டும் மறுமுறை நிகழ்ந்துக் கொண்டிருப்பதனை போன்றே நாம் உணர்ந்து இருப்போம். ஆனால் அதற்கு முன்னர் நாம் அந்த மனிதரைப் பார்த்தே இருக்க மாட்டோம்…அந்த இடத்திற்கும் சென்று இருக்க மாட்டோம். ஆனால் அந்த நிகழ்வானது நடந்திருக்கின்றது என்பதனைப் போன்ற ஒரு உணர்வு மட்டும் நம்முடைய மனதினில் இருந்து கொண்டே இருக்கும்.

இத்தகைய ஒரு உணர்வினை ஐம்புலன்களால் விளக்க முடியாது. எனவே அறிவியலாலும் இதனைத் தெளிவாக விளக்க முடியாது இருக்கின்றது. ஆனால் விளக்க முடியவில்லை என்ற காரணத்தினால் அவ்வாறு ஒரு உணர்ச்சியானது தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை என்று கூறுவது சரியான ஒன்றாக இருக்குமா? இப்பதிவினை படிப்பவர்கள் பலருக்கும், ஏன் கிட்டத்தட்ட அனைவருக்கும் அத்தகைய ஒரு அனுபவம் வந்து இருக்கும் என்றே நான் நம்புகின்றேன். அதனை நமக்கு விளக்கத் தெரியாமல் இருக்கலாம்….இருந்தும் அந்த அனுபவத்தினை நாம் உணர்ந்து இருப்போம் தானே…அதனை ஐம்புலன்களைக் கொண்டு எவ்வாறு விளக்குவது?

சரி இருக்கட்டும்…இப்பொழுது நம்மால் அத்தகைய உணர்வினை விளக்க முடிகின்றதா என்றே காணலாம்…அதற்கு நாம் கனவுகளைப் பற்றியே காண வேண்டி இருக்கின்றது. காண்போம்…!!!

தொடரும்…!!!

பி.கு:

மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

மரணத்திற்குப் பின்….ஏதேனும் இருக்கின்றதா அல்லது இல்லையா என்றே நாம் கண்டு வருகின்றோம். மரணத்தினைப் பற்றிப் பேசுவது என்பது நிச்சயமாக ஒரு ருசிகர தலைப்பாக இருக்காது தான். மரணத்தினைப் பற்றியே ஒருவன் சிந்தித்துக் கொண்டிருந்தான் என்றால் அவனால் வாழவே முடியாது போய் விடும். ஆகையால் தான் அர்த்தமற்றதாக தோன்றும் இந்த வாழ்வினில் மரணத்தினைப் பற்றிய சிந்தனைகளை மறப்பதற்காகவும் வாழ்ந்தாக வேண்டிய நேரத்தினை கவலையின்றி தன் விருப்பம் போல் செலவழித்துக் கொள்வதற்காகவும் மனிதன் பல்விதமான கேளிக்கைகளை தனக்குத் தானே உருவாக்கிக் கொள்கின்றான். சரி இருக்கட்டும்…மனிதனையும் கேளிக்கைகளையும் பற்றி நாம் வேறு பதிவினில் கண்டு கொள்ளலாம்…இப்பொழுது நாம் நம்முடைய தேடலினையே தொடர வேண்டி இருக்கின்றது. மரணத்திற்குப் பின்பு என்ன? என்ற கேள்விக்கு சமயங்கள் கூறுகின்ற விடயங்களையும் அறிவியலானது கூறுகின்ற விடயங்களையுமே நாம் மேலோட்டமாக கண்டு இருக்கின்றோம். அதன் படி,

அனைத்து சமயங்களும், அவை கொண்டுள்ள நம்பிக்கைகளில் மாறுபாடுகள் இருந்தாலும், இறப்பிற்கு பின் வாழ்வென்று ஒன்று இருக்கின்றது என்றும் மரணமானது முடிவல்ல என்றுமே கூறுகின்றன. ஆனால் அறிவியலோ, மரணம் என்ற ஒன்றுடன் ஒருவனுக்கு அனைத்தும் முடிந்து விடுகின்றது என்றே கூறுகின்றது. இவற்றில் நாம் எதனை நம்புவது என்ற கேள்வியே இப்பொழுது நம் முன்னே நின்றுக் கொண்டிருக்கின்றது. அதனைத் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது…முதலில் நாம் அறிவியலில் இருந்தே தொடங்குவோம்.

சென்ற பதிவிலேயே நாம் கண்டு இருக்கின்றோம் அறிவியலானது உயிர் என்ற ஒன்றினையோ அல்லது ஆன்மா என்ற ஒன்றினையோ நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது. அதனால் அதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. காரணம் ஐம்புலன்களினால் வருகின்ற அறிவினை வைத்து உயிரினையோ அல்லது ஆன்மாவினையோ அறிவியலால் அறிந்துக் கொள்ள முடியாது. அவ்வாறு தன்னால் அறிந்துக் கொள்ள முடியாத ஒன்றினை அறிவியலால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. ஆகையால் அறிவியலால், அதாவது ஐரோப்பிய அறிவியலால் உயிர் என்ற ஒன்றினை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதன் கூற்றுப்படி,
இந்த உடலானது செல்களால் உருவாகி இருக்கின்றது. நம்முடைய தோல் முதற்கொண்டு இருதயம், மூளை என்று அனைத்து உடல் உறுப்புக்களும் செல்களாலேயே ஆகி இருக்கின்றன. அந்த செல்கள் அனைத்தும் பல்வேறு பணிகளைச் செய்கின்றன. மேலும் இந்த செல்களானவை தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளக் கூடிய தன்மை வாய்ந்தவை. அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தினில் பழைய செல்லானது அழிந்து அதற்கு பதிலாக முற்றிலுமாக புதிய ஒரு செல்லானது தோன்றி விடும். அதாவது, 10 வருடங்களுக்கு முன்பு நம்முடைய எலும்புகளில் இருந்த செல்கள் எவையும் இப்பொழுது இருக்காது…அவை அனைத்தும் அழிந்துப் போய் முற்றிலுமாக புதிய செல்களால் நம்முடைய எலும்பானது இப்பொழுது உருப்பெற்று இருக்கின்றது. சுருக்கமாக கூற வேண்டும் என்றால் நம்முடைய எலும்பானது புதிய எலும்பாக மாறி இருக்கின்றது. சரி இருக்கட்டும்…செல்களின் இந்த தன்மையினாலேயே, அதாவது தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளக் கூடிய தன்மையினாலேயே இந்த உடலானது இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஒரு கட்டத்தில் அச்செல்களால் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ள முடியாது போய் விடுகின்றது. அச்சூழலில் உடலானது அழிந்து விடுகின்றது. இந்த நிலையே மரணம். இது தான் அறிவியல்.

தன்னுடைய ஐம்புலன்களை வைத்து உடலினை அறிவியல் காணுகின்றது…அதனால் செல்களை காண முடிகின்றது…செல்கள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளுவதனையும் அதனால் காண முடிகின்றது. அவ்வாறு செல்கள் இயங்கிக் கொண்டிருக்கையில் உடலானது இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பதனையும் அது காணுகின்றது. அவ்வாறே எப்பொழுது அந்த செல்களின் இயக்கம் நின்று போய் விடுகின்றதோ அப்பொழுது உடலின் இயக்கமும் நின்று விடுகின்றது என்பதனையும் தனது ஐம்புலன்களின் வழியாக அறிவியல் காணுகின்றது. எனவே தான் அறிந்த அந்த அறிவினைக் கொண்டு செல்களின் இயக்கம் வாழ்க்கை…செல்களின் இயக்கமின்மை மரணம் என்றே அது கூறுகின்றது.

ஆனால் இந்த கூற்றில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன…ஒரு செல்லானது தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது…’புதுப்பித்தல்’ என்ற அந்த செயலின் மூலமாக பழைய செல்லானது அழிந்து கழிவாக வெளியேற புதிய செல்லானது தோற்றம் பெறுகின்றது. இந்நிலையில் எவ்வாறு அந்த ‘புதுப்பிக்கும்’ செயலானது திடீரென்று நின்று போகின்றது? எதனால் ஒரு செல்லின் இயக்கம் தடைபடுகின்றது? இயங்கிக் கொண்டு இருக்கும் ஒன்று திடீரென்று இயங்காமல் போகின்றது…அந்நிலையில், இயங்கிக் கொண்டிருந்த அது எதனால் இயங்கிக் கொண்டிருந்தது என்றும் திடீரென்று எதனால் அது இயங்காமல் போயிற்று என்றும் விடையினை ஒருவர் தந்தாகத் தான் வேண்டி இருக்கின்றது. ஆனால் இந்த கேள்விக்கு தான் அறிவியலால் எளிதாக விடையினைத் தர முடியாது இருக்கின்றது.

‘வயதாகி விடுவதால் இயக்கம் தடைபடுகின்றது’ என்ற ஒரு பதில் வரத் தான் செய்கின்றது. ஆனால் இதிலும் கேள்விகள் இருக்கத் தான் செய்கின்றன. நம்முடைய செல்கள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொண்டிருக்கின்றமையினால் பழைய செல்கள் என்பதே நம்முடைய உடலில் கிடையாது. அந்நிலையில் வயதாகின்றது என்றால் எதற்கு வயதாகின்றது? செல்களுக்கா? அல்லது வேறு ஏதேனும் ஒன்றிற்கா?

சரி…வயதாவதால் தான் செல்களின் இயங்கும் தன்மை குறைந்து மரணம் சம்பவிக்கின்றது என்றே வைத்துக் கொள்வோம்…அந்நிலையில், இளைஞன் ஒருவன் இருதய கோளாறினால் இறந்து விடுகின்றான் என்றால், அவன் இறந்ததற்குப் பின்னர் அவனுக்கு சரியான இருதயம் ஒன்றினையோ அல்லது இருதயத்தின் வேலையினை செய்யக் கூடிய ஒரு பொருளினையோ வைத்தால் அவன் உயிர்த்தெழ வேண்டுமே? ஏனென்றால் அவனது உடல் இன்னும் இளமையாகத் தானே இருக்கின்றது. அந்நிலையில் செல்களும் இயங்கும் தன்மையினைக் கொண்டே தானே இருக்க வேண்டும்? ஆனால் அவ்வாறு நிகழ்வது இல்லையே…தற்சமயம் வரைக்கும் இறந்தவன் இறந்தவனாகத் தானே இருக்கின்றான். இதற்கு என்ன விடை என்றால் அறிவியலிடம் அதற்கான பதில்கள் இன்று வரை கிடையாது. அவர்கள் ஆராய்ச்சிகள் செய்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள்…ஆனால் இன்று வரை அக்கேள்விகளுக்கு விடைகள் கிடையாது. எதிர் காலத்தில் கிட்டுமா…அதனைப் பொறுத்திருந்து தான் காண வேண்டும். அனைத்தும் மூளையினைச் சார்ந்தே இருக்கின்றது என்பதே அவர்கள் இன்றளவில் தருகின்ற பெருவாரியான பதிலாக இருக்கின்றது. நிற்க.

செல்கள், அது இது என்று கொஞ்சம் பள்ளிக்கூட அறிவியல் வகுப்பினை இப்பதிவு நினைவுப் படுத்தி தான் இருக்கும்…யப்பா…பள்ளிகூடத்துல தான் இத எல்லாம் படிக்கணும்னு இருந்திச்சினா இங்கேயுமா என்கின்ற ஒரு எண்ணமும் எழக் கூடும்…ஆனால் வேறு வழியில்லை...இவற்றைப் பற்றி நாம் சிந்தித்தாகத் தான் வேண்டி இருக்கின்றது. சரி இப்பொழுது நமது உலகினைப் பற்றியே நாம் சிறிது காண வேண்டி இருக்கின்றது...காணலாம்...!!!
தொடரும்…!!!

பி.கு:

மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

ஒரு வழியாக தஸ்தோவஸ்கியின் ‘கேலிக்குரிய மனிதனின் கனவு’ என்ற நூலினை மொழிப்பெயர்த்து முடித்தாயிற்று. இப்பொழுது அந்த நூலினை மொழிப்பெயர்த்த காரணத்தினைத் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் நாம் சில விடயங்களைப் பற்றி பார்க்க வேண்டி இருக்கின்றது…சாதாரண விடயங்கள் தான்…மரணம்…மரணத்திற்குப் பின்…கனவு…என்று நாம் அனைவரும் அறிந்திருக்கும் விடயங்களைப் பற்றியே தான் நாம் சிறிது பார்க்க வேண்டி இருக்கின்றது.

மரணம் என்றால் என்னவென்று நாம் அனைவரும் அறிந்தே தான் இருக்கின்றோம்…நம்முடைய உடலின் இயக்கம் நின்று போய் விடுகின்றது…உடலும் அழிந்து விடுகின்றது…நாம் என்ற ஒரு நபர் இந்த உலகில் இல்லாது போய் விடுகின்றோம்…!!! இதனை அனைவரும் அறிந்தே தான் இருக்கின்றோம்…எனவே இதனைப் பற்றி மேற்கொண்டு நாம் காணப்போவதில்லை…!!!

ஆனால்…மரணத்திற்குப் பின்னர் என்ன? என்ற கேள்வி வரும் பொழுது தான் பலவிதமான எண்ணங்களும் கருத்துக்களும் எழுந்த வண்ணம் இருக்கின்றன. மரணத்திற்குப் பின்னர் ஏதேனும் இருக்கின்றதா அல்லது ஒன்றுமே இல்லையா? என்ற கேள்விக்கு விடையினை பல்வேறு விதமாக பல்வேறு சமயங்களும் வழங்கிக் கொண்டு இருக்கின்றன. அச்சமயங்கள் கூறும் கூற்றுகளில் எந்த கூற்று உண்மையானது என்பதனை அனுபவத்தால் அன்றி நம்மால் தற்போதைக்கு அறிந்துக் கொள்ள முடியாது…எனவே இப்போதைக்கு அச்சமயங்கள் கூறும் கூற்றுகள் சரியானவையா இல்லையா என்ற ஆராய்ச்சியினை விடுத்து, அவை கூறுகின்ற கூற்றுகள் யாவை என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

சமணமும் பௌத்தமும் – மனிதன் இறப்பிற்கு பின்னால் அவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மீண்டும் பிறக்கின்றான். அவன் விலங்காய் பிறக்கலாம்…பறவையாய் பிறக்கலாம்…மனிதனாகவும் பிறக்கலாம். எப்பொழுது அவன் தியானம் செய்து பற்றுகளை நீக்கி முக்தி அடைகின்றானோ அவன் அப்பொழுது மீண்டும் பிறப்பதில்லை. இதுவே சமண பௌத்த கொள்கையாகும். இதற்கு பெயர் பிறவிச் சுழற்சிக் கொள்கை. இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால் மனித பிறவியில் மட்டுமே ஒருவனால் முக்தியினை அடைய முடியும். அதுவும் சமண சமயத்தின் ஒரு பிரிவிலுள்ள நம்பிக்கையின்படி ஒருவன் ஆணாக பிறந்தால் மட்டுமே தான் முக்தி அடைய முடியும். இவை சமணம் மற்றும் பௌத்த சமயங்களின் நம்பிக்கைகள்.

இந்து சமயம் - மரணத்திற்கு பின்பு என்னவாகும் என்பதனைக் குறித்த இந்து மதத்தின் பார்வைகள் ஒவ்வொரு பிரிவுகளுக்கிடையேயும் சிறிது மாறுபட்டு தான் இருக்கின்றது. பல பிரிவுகள் பொதுவாக  பிறவிச் சுழற்சிக் கொள்கையினை ஏற்றுக் கொள்ளுகின்றன. சில பிரிவுகளோ பிறவிச் சுழற்சிக் கொள்கையினை மறுக்கின்றன. ஆனால் பௌத்த சமண சமயங்களில் காணப்படும் பிறவிச் சுழற்சிக் கொள்கைக்கும் இந்து சமயத்தில் காணப்படுகின்ற கொள்கைக்கும் சில வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பௌத்த சமண கொள்கைகளில் இறை நம்பிக்கை கிடையாது…அனைத்தும் மனித முயற்சியிலேயே அடங்கி இருக்கின்றது. ஆனால் இந்து சமய நம்பிக்கைகளிலோ பெரும்பாலும் முக்தி அடைவதற்கு மனித முயற்சி மட்டுமே போதாது, இறைவனின் அருளும் வேண்டும் என்ற நம்பிக்கை அடங்கி இருக்கின்றது. ஆயினும் மனித முயற்சி மட்டுமே போதும் என்றுக் கூறும் பிரிவுகளும் இந்து சமயத்தில் இருக்கத் தான் செய்கின்றன. மேலும் சொர்க்கம் நரகம் ஆகியவற்றினைப் பற்றிய நம்பிக்கைகளும் இந்து சமயத்தில் இருக்கத் தான் செய்கின்றன.

இசுலாம் - இசுலாமின் நம்பிக்கையின்படி மக்கள் இறந்ததற்கு பின்பு தீர்ப்பு நாளுக்காக காத்து இருப்பர். அந்த தீர்ப்பு நாளின் அன்று இறைவன் மக்கள் அவர்கள் செய்த பாவ புண்ணியங்களின் படி அவர்களை சொர்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ அனுப்புவார். இச்சமயம் மறுபிறப்பினை ஏற்றுக் கொள்ளாது. மனிதன் இவ்வுலக வாழ்வில் மரித்தாலும் அவன் ஒரு ஆன்மீக நிலையில் உயிர் பெற்றுத் தான் இருப்பான் என்றும் அவன் அந்த இறுதி நாளுக்காக காத்துக் கொண்டிருப்பான் என்பதுமே இசுலாமின் நம்பிக்கையாகும்.

கிருத்துவம் - கிருத்துவமும் மறுபிறப்பினை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் அதனைத் தவிர்த்து மரணத்திற்கு பின்பு என்னவாகும் என்பதனைக் குறித்த கிருத்துவத்தின் பார்வைகள் ஒவ்வொரு பிரிவுகளுக்கிடையேயும் சிறிது மாறுபட்டு தான் இருக்கின்றது. சில பிரிவுகளின் கூற்றின் படி மனிதன் இறந்ததற்கு பின்னர் உடனேயே அவன் செய்த பாவ புண்ணியக் கணக்குகளின் படி சொர்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ அனுப்பப்பட்டு விடுகின்றான். சில நம்பிக்கைகளின் படி மனிதன் அவனது மரணத்திற்கு பின்னர் ஒரு இடைப்பட்ட உலகினில் அவனது பாவங்கள் கழியும் வரை இருக்கின்றான்…பின்னர் அவன் சொர்கத்திற்கு தயாராகின்றான். வேறு சில நம்பிக்கைகளின்படி மனிதன் இறந்த உடனேயே சொர்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ செல்வதில்லை..மாறாக இறுதியான தீர்ப்பு நாள் அன்றே அவன் செய்த பாவ புண்ணியக் கணக்குகளுக்கு ஏற்ப அவன் சொர்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ செல்லுகின்றான். சில கிருத்துவர்கள் நரகம் என்ற ஒன்றையே ஏற்றுக் கொள்வதும் இல்லை. மேலும் சொர்க்கம் மற்றும் நரகம் ஆகியவற்றினைப் பற்றிய சிந்தனைகளிலும் கிருத்துவர்களிடம் மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன. சிலரோ சொர்க்கமும் நரகமும் உண்மையாகவே இருக்கின்ற இடங்கள் என்று கூறுவர்..வேறு சிலரோ சொர்க்கமும் நரகமும் உணர்ச்சி நிலைகள் என்பர்…அதாவது இறைவனுடன் இருப்பது சொர்க்கம்..இறைவனை விட்டு விலகி இருப்பது நரகம் என்றே அவர்கள் கூறுவர்…சரி இருக்கட்டும்…பொதுவாக கூற வேண்டும் என்றால் கிருத்துவம் மறுப்பிறப்பினை ஏற்றுக் கொள்வதில்லை…மரணத்திற்குப் பின்னர் மனிதன் அவனது செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பினை எதிர்பார்த்து இருக்கின்றான்.

அறிவியல் (இதுவும் இப்பொழுது ஒரு வகையான சமயம் தான்) – அறிவியல் உயிர் என்ற ஒன்று இருப்பதனையே ஏற்றுக் கொள்ளாது. அதனால் உயிரினை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. ஏனென்றால் ஐம்புலன்களைக் கொண்டு அதனால் எதனை உணர்ந்து ஆராய்ச்சி செய்ய முடியுமோ அதனை மட்டுமே தான் அறிவியலால் நம்ப முடியும். ஆனால் உயிர் என்ற ஒன்றினையோ அல்லது ஆன்மா என்ற ஒன்றினையோ அதனால் ஐம்புலன்களைக் கொண்டு எவ்வாறு அறிய முடியும். எனவே அதன் பார்வையில், உயிர் என்றும் ஆன்மா என்றும் எதுவும் கிடையாது. செல்கள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளுகின்ற தன்மையினால் ஒருவன் இயங்கிக் கொண்டு இருக்கின்றான். எப்பொழுது அந்த செல்களால் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ள முடியவில்லையோ அப்பொழுது ஒருவனது இயக்கம் நின்று விடுகின்றது. அந்த தன்மையினையே மரணம் என்று அறிவியல் அழைக்கின்றது. அந்நிலையில் மரணத்திற்கு அப்பால் ஒன்றுமே கிடையாது என்பதே அறிவியலின் பார்வையாகும்.

மிகவும் மேலோட்டமாகவே நாம் மேற்கண்ட அந்த சமயங்களின் நம்பிக்கைகளை கண்டு இருக்கின்றோம். அதுவே இங்கே நம்முடைய நோக்கத்திற்கு போதுமானதாகவும் இருக்கின்றது. மாறாக, நாம் அந்த ஒவ்வொரு சமய கூற்றுகளை ஆராயத் துவங்கினோம் என்றால், நாம் பல்வேறு தத்துவங்களைப் பற்றியும் அவற்றின் தோற்றங்கள் அவற்றின் விளக்கங்கள் மற்றும் அவை ஏன் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு இருக்கின்ற என்பதனைப் பற்றியும் மிகவும் விரிவாக காண வேண்டி வரும். ஆனால் இப்போதைக்கு அவை நமக்குத் தேவை இல்லை (இப்போதைக்கு மட்டுமே அவை தேவை இல்லை…ஆனால் நிச்சயம் அவற்றை நாம் காண வேண்டும்).

சரி…இப்போதைக்கு நாம் கண்டு இருக்கின்ற  விடயங்களை வைத்து இரண்டு பிரிவுகளை உருவாக்கலாம்,
ஒரு பிரிவு – மரணத்திற்கு பின் வாழ்வு இருக்கின்றது என்ற பிரிவு (அறிவியலைத் தவிர்த்து அனைத்து சமயங்களும்)
மற்றொரு பிரிவு – மரணத்திற்கு பின் ஒன்றுமே இல்லை என்ற பிரிவு (அறிவியல்)

இப்பொழுது இந்த வேறுபாட்டினைப் பற்றியே தான் நாம் காண வேண்டி இருக்கின்றது…காண்போம்…கனவு காண்போம்…!!!

தொடரும்….!!!

பி.கு:

மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

ஆனால் ஒருவன் தன்னைத் தானே ஒழுக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அந்த கோட்பாடானது விரைவில் வலுவிழக்க ஆரம்பித்தது. ‘ஒன்று அனைத்தும் வேண்டும் அல்லது எதுவும் வேண்டாம்’ என்று கோரக்கூடிய கர்வமுள்ள மனிதர்களும், உடற் சார் சிந்தனைகளுடைய மனிதர்களும் அங்கே தோன்றலாயினர். அனைத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் தீய காரியங்களைச் செய்யத் துவங்கினர். அவ்வாறு அவர்களால் அச்செயல்களில் வெற்றி பெற இயலவில்லை என்றால் அவர்கள் தற்கொலை செய்துக் கொள்ளத் துவங்கினர். ‘நாம் ஒரு சூன்யமே…’ என்ற கோட்பாட்டினையும், நித்தியமான அமைதிக்காக தன்னைத் தானே ஒன்றுமில்லாது அழித்துக் கொள்வது என்ற கோட்பாட்டினையும் வலியுறுத்தும் சமயங்கள் அங்கே தோன்றலாயின.

அர்த்தமேதும் இல்லாத அந்த செயல்களின் மூலமாக இறுதியில் அம்மக்கள் களைப்படைந்தனர். அவர்களது முகத்தில் துயரும் தோன்றலாயிற்று. அதனைக் கண்ட அம்மக்கள் துயருறுவது அழகானது என்றும் துயரத்தில் தான் சிந்தனையானது அடங்கி இருக்கின்றது என்றும் கூறத் துவங்கினர். அவர்களது பாடல்களில் அவர்கள் துயரத்தினையே பாடினார்கள். நான் அவர்கள் மத்தியிலே அவர்களுக்காக கண்ணீர் சிந்திக் கொண்டே நடந்தேன். அவர்கள் கபடமற்றவர்களாகவும் தூய்மையானவர்களாகவும் முகத்தில் எவ்விதமான துயரும் இல்லாதிருந்த பொழுது நான் அவர்களை நேசித்ததை விட இப்பொழுது நான் அவர்களை மேலும் அதிகமாக தான் நேசிக்கின்றேன். அவர்கள் வசித்திருந்த பூமியானது சொர்கமாக இருந்த பொழுது அதனை நான் எவ்வளவு நேசித்தேனோ அதனை விட அதிகமாக, பாழ்பட்ட அவர்களது இந்த பூமியினை, அதன் மீது துயர் வந்திருக்கும் இந்த ஒரே காரணத்திற்காக, நான் இப்பொழுது நேசிக்கின்றேன்.

அந்தோ…நான் எப்பொழுதும் துயரத்தினையும் வருத்தத்தினையும் நேசித்தே தான் வந்திருக்கின்றேன். ஆனால் அவை என்னுடைய துயரங்களாகவும் வருத்தங்களாகவும் இருந்த பொழுது மட்டுமே நான் அவற்றை நேசித்து இருந்து இருக்கின்றேன். ஆனால் இப்பொழுதோ, அவர்கள் துயரப்படுவதையும் வருத்தப்படுவதையும் கண்டு நான் கண்ணீர் சிந்துகின்றேன். அவர்கள் மீது இரக்கமும் படுகின்றேன். என்னை நானே வெறுத்துக் கொண்டும் கடிந்துக் கொண்டும் வருத்தத்தோடு அவர்களை நோக்கியே நான் எனது கைகளை நீட்டுகின்றேன்.  அவர்களுடைய அனைத்துப் பாடுகளுக்கும் நானே, நான் ஒருவனே தான் காரணம் என்றே நான் அவர்களிடம் கூறினேன். அவர்களுக்கு அந்த சீரழிவினையும் அந்த பொய்யினையும் கொண்டு வந்தவன் நானே என்றே நான் கூறினேன். என்னை ஒரு சிலுவையில் அறையுமாறு நான் அவர்களை கெஞ்சினேன். சிலுவையினை எவ்வாறு செய்வது என்பதையும் நான் அவர்களுக்கு சொல்லித் தந்தேன். என்னை நானே கொலை செய்துக் கொள்ள எனக்கு வலுவில்லை…என்னால் அவ்வாறு செய்ய முடியவுமில்லை.

அவர்களது துயரத்தினை அவர்களிடம் இருந்து நீக்க வேண்டும் என்றே நான் விரும்பினேன். அவர்களுக்காக நான் துயரப்பட வேண்டும் என்றே நான் ஏங்கினேன்…எனது இறுதிச் சொட்டு இரத்தத்தினையும் அந்த துயரத்தினால் சிந்த வேண்டும் என்றே நான் ஏங்கினேன். ஆனால் அவர்கள் என்னைக் கண்டு சிரிக்க மட்டுமே செய்தனர். இறுதியில் நான் ஏதோ ஒரு வகையான ‘புனித முட்டாள்’ என்றே அவர்கள் கருதவும் செய்தனர். அவர்களுக்கு எது சரி என்று படுகின்றதோ அதனையே தான் அவர்கள் பெற்று இருக்கின்றனர் என்றும், அவர்களது நிலையானது வேறு எப்படியும் இருந்திருக்க முடியாது என்றுமே அவர்கள் என்னிடம் உறுதியாக கூறினார்கள். நான் அவர்களுக்கு ஆபத்தினை விளைவிப்பவனாக மாறி வருகின்றேன் என்றும் நான் அமைதியாக இல்லாவிடில் என்னை ஒரு பையித்தியக்கார விடுதியினில் அடைத்து வைக்க வேண்டி இருக்கும் என்றுமே அவர்கள் இறுதியில் கூறினார்கள். அந்நொடியில் என்னுடைய இதயத்தினை பயங்கர சோகமானது தாக்கியது. அதன் விளைவாக எனது இதயமானது உடைந்தது போன்றும் நான் மரணமடையப் போவதனைப் போன்றுமே நான் உணர்ந்தேன். அந்நொடியில்…நான் அக்கனவில் இருந்து விழித்து எழுந்தேன்.
நான் விழித்தெழுந்தப் பொழுது கிட்டத்தட்ட விடிந்திருந்தது. நான் அமர்ந்திருந்த அதே கை நாற்காலியிலேயே நான் நினைவு திரும்பி இருந்தேன். எனக்கு முன்னே இருந்திருந்த அந்த மெழுகுவர்த்தியானது கிட்டத்தட்ட முழுவதுமாய் எரிந்து முடிந்திருந்தது. அந்த கப்பல் தலைவனின் அறையில் இருந்தவர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அபூர்வமான ஒரு அமைதி நான் இருந்த அந்த இடத்தில் நிலவிக் கொண்டிருந்தது.

மிகுந்த ஆச்சர்யத்துடன் நான் துள்ளி எழுந்தேன். அந்த மாதிரி அதுவரை என்னுடைய வாழ்வினில் எதுவும் நடந்ததே இல்லை…சின்ன சின்ன விடயங்கள் கூட புதிதாகத் தான் இருந்தன…உதாரணத்திற்கு, என்னுடைய கை நாற்காலியில் நான் அதுவரை உறங்கிப் போனதே கிடையாது. நான் அவ்வாறு நின்று கொண்டு நிதானமாய் அனைத்தையும் நினைவுப் படுத்திக் கொண்டிருக்கும் பொழுது குண்டுகள் நிரப்பப்பட்டு தயாராக இருந்த எனது கைத் துப்பாக்கியானது எனது கண் முன்னே தோன்றியது. ஆனால் அந்த நொடியே அதனை நான் என்னை விட்டு விலக்கித் தள்ளினேன். நான் எனது கைகள் இரண்டையும் உயரே உயர்த்தி நித்தியமான உண்மையினை நோக்கி அழைத்தேன்…இல்லை…சரியாக சொல்லுவதென்றால் நான் அழைக்கவில்லை…மாறாக அழுதேன். ஒரு பரமானந்த நிலை கட்டுக்கடங்காத ஆனந்தம் என்னை முழுமையாக ஒரு உயர்ந்த நிலைக்கு உயர்த்திக் கொண்டிருந்தது. ஆ…வாழ்க்கை…அது தான் எவ்வளவு முக்கியமானது…ஆம்…அத்துடன் போதிப்பதும் தான்…!!! அந்த நொடியே நான் போதிக்கத் துவங்க வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டேன்…ஆம்…என்னுடைய வாழ்க்கை முழுமையும் நான் போதித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றே நான் முடிவு செய்துக் கொண்டேன். நான் போதிப்பதற்காக வெளிஉலகினுள் செல்லப் போகின்றேன்…போதிக்க வேண்டும் என்றே நான் விரும்பவும் செய்கின்றேன். எதனை நான் போதிக்கப் போகின்றேன்? உண்மையினை…!!! எனது சொந்தக் கண்களினாலேயே நான் அதனை, அதனது முழுமையான மகிமையிலே கண்டேன். அதனையே நான் போதிக்கப் போகின்றேன்.

அந்த நொடியில் இருந்து நான் போதித்துக் கொண்டே தான் இருக்கின்றேன். உங்களுக்குத் தெரியுமா, இப்பொழுதெல்லாம், யார் என்னைக் கண்டு சிரிக்கின்றார்களோ அவர்களைத் தான் நான் மற்ற அனைவரையும் விட அதிகமாக நேசிக்கின்றேன். ஏன் அவ்வாறு இருக்கின்றேன் என்பது எனக்குத் தெரியவில்லை…மேலும் அதனை விளக்கவும் எனக்குத் தெரியவில்லை…இருந்தும் அது அவ்வாறே இருந்து விட்டு போகட்டும். நான் இப்பொழுதே குழம்பத் துவங்கி விட்டேன் என்றே அவர்கள் கூறுகின்றார்கள். அதாவது, இப்பொழுதே நான் குழம்பத் துவங்கி விட்டால் பின்னர் நான் எவ்வாறு இருப்பேன் என்றே அவர்கள் கூறுகின்றார்கள். ஆம்…உண்மை தான்…இப்பொழுது நான் சிறிது குழப்பம் அடையத் தான் செய்கின்றேன்…ஒருவேளை பின்னர் அது மோசமாகவும் போகலாம். ஆனால், எவ்வாறு போதிப்பது, எந்தச் செயல்களைக் கொண்டு…எந்த வார்த்தைகளைக் கொண்டு போதிக்க வேண்டும் என்று கண்டுப்பிடிப்பதற்கு முன்னர் நிச்சயமாய் நான் ஒரு சில சமயம் குழப்பமடையத் தான் போகின்றேன். ஏனென்றால் போதிப்பது என்பது எளிதான ஒரு காரியம் அல்ல…அது கடினமான ஒன்றாகும். அது எனக்கு மிகவும் தெளிவாக, ஒரு பகலைப் போன்றே புலப்படுகின்றது.

ஆனால் குழப்பமே அடையாத ஒரு மனிதன் இங்கே எங்கேனும் இருக்கின்றானா? அனைவரும் ஒன்றினை நோக்கியே தான் சென்றுக் கொண்டிருக்கின்றனர். துறவியாக இருந்தாலும் சரி திருடனாக இருந்தாலும் சரி ஒன்றினை நோக்கியே தான் அவர்கள் வெவ்வேறு பாதைகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இது பழமையான ஒரு உண்மையாகும். ஆனால் இங்கே புதிதாக என்ன இருக்கின்றது என்றால் : நான் மிகவும் குழப்படைந்து விட மாட்டேன். ஏனென்றால் நான் உண்மையினை கண்டிருக்கின்றேன். இந்த பூமியில் வாழக் கூடிய தன்மையினை இழக்காமலேயே மக்களால் மகிழ்ச்சியாகவும் அழகாகவும் வாழ முடியும் என்பதனை நான் கண்டறிந்து இருக்கின்றேன். தீமை தான் மனிதர்களின் இயல்பான குணம் என்பதனை என்னால் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அதனை நான் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன். எனது இந்த நம்பிக்கையினைக் கண்டு அவர்கள் அனைவரும் என்னை நோக்கி சிரிக்கின்றார்கள். ஆனால் என்னால் எவ்வாறு அதனை நம்பாமல் இருக்க முடியும்…நான் அந்த உண்மையினைக் கண்டேன்…நிச்சயமாக அதனை எனது மனதானது உருவாக்கி இருக்கவில்லை…நான் அதனைக் கண்டேன்…ஆம்…அதனைக் கண்டேன்…அதனது உயிருள்ள பிம்பமானது என்னுடைய ஆன்மா முழுமையையும் நிறைத்துக் கொண்டிருந்தது. அந்த உண்மையினை அதனது முழுமையான நிறைவுப் பெற்றத் தன்மையிலேயே நான் கண்டேன்..எனவே மக்களால் அந்த நிலையினை அடைய முடியாது என்பதனை நான் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். நிலைமை இப்படி இருக்க என்னால் எப்படி குழம்பிப் போக முடியும்?

சில நேரங்களில் நான் வழிமாறிப் போகக் கூடும்…அது நிச்சயம்…ஒரு சில சமயம் நான் மற்றவர்களின் கூற்றினைப் பேசிக் கொண்டிருக்கவும் கூடும்…ஆனால் அவை அனைத்தும் நீண்ட காலம் நீடிக்காது. நான் கண்டிருந்த அந்த உண்மையான காட்சியானது எப்பொழுதும் என்னுடன் இருந்துக் கொண்டு, என்னை வழிநடத்திக் கொண்டும் திருத்திக் கொண்டும் இருக்கும். ஆ…நான் வலிமையும் புத்துணர்ச்சியும் நிறைந்து இருக்கின்றேன். ஆயிரமாண்டுகள் ஆனாலும் சரி…நான் என்னுடைய பாதையில் பயணித்துக் கொண்டே தான் இருக்கப் போகின்றேன்.

உங்களுக்குத் தெரியுமா…அவர்கள் அனைவரையும் நான் பாழாக்கி விட்டேன் என்ற விடயத்தினை முதலில் மறைக்க வேண்டும் என்று தான் நான் நினைத்தேன்…ஆனால் அது தவறாகும்…நான் ஏற்கனவே செய்து விட்ட முதல் தவறாகும். ஆனால் அந்த உண்மையானது, நான் பொய் சொல்லுகின்றேன் என்றே என்னிடம் மெதுவாய் கூறியது…பின்னர் அதுவே நான் தவறினை செய்யாத வண்ணம் என்னைப் பாதுகாத்து வழிநடத்திச் சென்றது.

ஆனால்…சொர்கத்தினை எவ்வாறு உருவாக்குவது? அது எனக்குத் தெரியாது. ஏனென்றால் அதனை என்னால் வெறும் வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. என்னுடைய அந்த கனவிற்குப் பின்னர் நான் பெரும்பாலான வார்த்தைகளை, அதாவது முக்கியமான வார்த்தைகளைத் தொலைத்து விட்டேன். சரி…அது அவ்வாறே இருக்கட்டும்…பிரச்சனையில்லை. நான் தொடர்ந்து பயணித்துக் கொண்டே தான் இருப்பேன்…தொடர்ந்து பேசிக் கொண்டே தான் இருப்பேன்…நான் கண்டவற்றை தெளிவாக விவரிக்க முடியாது போனாலும் கூட நான் நிச்சயமாய் அவற்றை விட்டு விட மாட்டேன்…ஏனென்றால் நான் உண்மையினை எனது சொந்த கண்களினாலேயே கண்டு இருக்கின்றேன்.
ஆனால் இதனை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அது ஒரு கனவு…ஒரு பிரமை..அவ்வளவே என்றே அவர்கள் கூறுகின்றார்கள். அவ்வாறு கூறுவதில் ஏதோ மிகப் பெரிய பொருள் இருப்பதனைப் போன்று அவர்கள் பெருமையும் அடைந்துக் கொள்ளுகின்றார்கள். கனவா?…எது கனவு? நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை ஒரு கனவில்லையா?

ஒருவேளை அந்த சொர்க்கமானது இங்கே வராமலே போகக்கூடும் (அதனை என்னால் புரிந்துக் கொள்ள முடிகின்றது), இருந்தாலும் நான் தொடர்ந்து அதனைப் பற்றி போதித்துக் கொண்டே தான் இருப்பேன். ஆ…எவ்வளவு எளிதான ஒரு காரியம் அது…ஒரு நாளில்…ஒரு மணி நேரத்தில்…அனைத்தையும் நம்மால் ஒழுங்குப்படுத்தி விட முடியும். நம்மை நேசிப்பதனைப் போன்றே மற்றவரையும் நேசிப்பதே இங்கே மிகவும்  முக்கியமானதொன்றாக இருக்கின்றது…அதனைத் தவிர வேறொன்றுமே இங்கே தேவை இல்லை. அவ்வாறே நாம் நேசித்தோமே என்றால் எப்படி அனைத்தையும் சரி செய்வது என்பதனை நாம் உடனடியாக அறிந்துக் கொள்ள முடியும். ஆனாலும் இந்த பழைய உண்மையானது, அது திரும்பத்திரும்ப கோடிக்கணக்கான முறை கூறப்பட்டு இருந்தாலும், நம்முடைய வாழ்வின் அடிப்படையாக அமையும் வண்ணம் நம்முடைய மனதினில் வேர் கொள்ளவே இல்லை.

‘வாழ்வினைக் குறித்த விழிப்புணர்வே வாழ்வினை விட முக்கியமானது…மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்றிருக்கும் சட்டங்களைக் குறித்த அறிவே, மகிழ்ச்சியாக இருப்பதனை விட முக்கியமானது’ என்றிருக்கும் இந்த கோட்பாடுகளை எதிர்த்தே நாம் போராட வேண்டி இருக்கின்றது. நான் நிச்சயம் போராடுவேன்…ஆ…அனைவரும் இதனையே விரும்பினார்களே என்றால் இங்கே அனைத்தையும் உடனடியாக சரி செய்து விட முடியும்.

மேலும் நான் அந்த சிறுமியினை தேடிக் கண்டுப்பிடித்தேன்…எனது பயணத்தை நான் தொடர்ந்துக் கொண்டே இருப்பேன்…பயணித்துக் கொண்டே இருப்பேன்…!!!
முற்றும்...!!!
முந்தைய பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9

பி.கு:
‘The Dreams of a Ridiculous man’ என்ற பியோதர் தஸ்தோவஸ்கியின் நூலின் மொழிபெயர்ப்பு முயற்சியே இது ஆகும்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி