மனிதனின் வாழ்விற்குத் தேவையான அற விடயங்களை வள்ளுவர் அறத்துப்பாலில் விளக்குகின்றார். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வில் ஒன்று துறவறத்தை மேற்கொள்ளலாம். அல்லது இல்லறத்தை மேற்கொள்ளலாம். இவ்விரண்டு அறத்தினுள் இல்லறமே சிறந்தது என்று வள்ளுவர் கருதியதினால் தான் அதனை முதலில் வைத்து இருக்கின்றார். ஆணும் பெண்ணும் இணைந்து சமூகத்தில் நல்லறமாக இல்லற வாழ்வினை நடத்த வள்ளுவர் கூறும் வழிமுறைகள் என்னவென்றால்...

இல்வாழ்க்கை – அறவழியில் இல்லற வாழ்வினை நடத்துவதே மனிதனின் கடமையாகும்.

வாழ்க்கைத் துணைநலம் – மனைவியின் சிறப்பினைப் பொறுத்தே இல்லறத்தின் சிறப்பு விளங்கப் பெறுகின்றது

புதல்வரைப் பெறுதல் – நற்பண்புகளுடன் உடைய புதல்வரை உருவாக்குவதிலேயே ஒரு தம்பதியினரின் சிறப்பும் கடமையும் அடங்கி இருக்கின்றது. 

அன்புடைமை – அன்புடன் இருக்கும் தன்மையே மனிதன் உயிருடன் இருக்கும் தன்மைக்கு சான்றாகும். அன்பே ஒருவனை இறைவனுடன் இணைக்கின்றது. அன்பினை அடிப்படையாகக் கொண்டே இல்லத்தை மக்கள் அமைத்துக் கொள்ள வேண்டும்.

விருந்தோம்பல் – இல்லறமாக வாழ்வது என்பது மக்கள் ஒன்றிணைந்து மற்ற மக்களுக்கு உதவிகள் செய்வதற்காகவே. அனைவருக்கும் உதவும் சமூகத்தினை உருவாக்குவதே இல்லறம் பூண்டவர்களின் கடமையாகும்.

இனியவைக்கூறல் – அன்பினை அடிப்படையாகக் கொண்டு வஞ்சம் சிறிதும் அற்ற இனியச் சொற்களை உள்ளத்தில் இருந்து கூறுவோர் உலகில் தீமையை வென்று நன்மையைப் பரப்புகின்றனர். அதுவே மனிதர்களுக்கு அழகான ஒரு அணிகலனாக இருக்கின்றது. இனிமையான நல்ல சொற்களே இல்லத்திலும் சரி சமூகத்திலும் சரி நிறைந்து இருக்க வைப்பதே இல்லத்தாரின் கடமையாகும்.

செய்ந்நன்றி அறிதல் – எவ்வித பலனையும் கருதாது மற்றவர்களுக்கு உதவுவதே ஒருவனுக்கு கடமையாக இருக்கின்றது. அத்தகைய உதவியினை மறவாது அதனை நினைவிற் கொண்டு அதனைப் போல் தாமும் மற்றவருக்கு உதவ வேண்டும் என்று எண்ணுவதே உதவியினைப் பெற்றவர்களுக்குச் சிறந்த அறமாக இருக்கின்றது. 

நடுவு நிலைமை – மக்களுள் பாரபட்சம் பார்க்காமல் நன்மையின் பக்கம் நடுநிலையோடு நிற்பதே ஒருவனின் தலையாய கடமையாகும்.

அடக்கமுடைமை – ஒருவன் தன்னைத் தானே மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்தவனாக கருதிக் கொள்ளாது எப்பொழுதும் அடக்கமாக பணிவுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் தன்னைத் தானே உயர்த்துகின்றவர்கள் தாழ்த்தப்படுவார்கள். தன்னைத் தானே தாழ்த்துகின்றவர்களோ உயர்த்தப்படுவார்கள்.
 
ஒழுக்கமுடைமை – ஒழுக்கம் உடையவர்களே மேன்மையான சமூகத்தினை உருவாக்குகின்றார்கள். எனவே இல்லறம் மேற்கொள்வோர் ஒழுக்கத்தினை உயிரினும் மேலாக கருதி அதன் அடிப்படையில் மேன்மையான குணங்களைக் கொண்ட சமூகத்தினை உருவாக்கிட வேண்டும்.

பிறனில் விழையாமை – ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கைக்கு மாறாக நடக்கும் மக்கள் இழிவான ஒரு சமூகத்தினை உருவாக்குகின்றார்கள். கடவுளிடம் இருந்து விலகி தீமையின் கட்டுப்பாட்டுக்கு கீழ் செல்லும் அவர்கள் உயிரோடு இருந்தாலும் இறைவனின் முன்னர் இறந்தவர்களுக்கு சமமாவார்கள். நல்ல மக்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று இறைவன் வகுத்த கொள்கையோடு இறைவனுடன் ஒன்றிணைந்து இருப்பர்.

பொறையுடைமை – தீயினைத் தீயினால் அணைக்க முடியாது. அதனைப் போன்றே தீமையை தீமையால் அழிக்க முடியாது. எனவே தனக்கு ஒருவர் தீமையினச் செய்து இருந்தால் அதனைப் பொறுமையாகப் பொறுத்து மன்னித்து அருள வேண்டும். அன்பினாலேயே தீமையை வெல்ல முடியும். எனவே இல்லறம் புரிவோர் எக்கணமும் பொறுமையுடன் அன்பாலேயே அனைத்துப் பிரச்சனைகளையும் அணுக வேண்டும்.

அழுக்காறாமை – பொறாமை என்பது ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய எதிரி ஆகும். ஆள் இல்லாத வீட்டினில் பாம்புகள் குடிக் கொள்வது போல அன்பில்லாத இதயத்தினில் பொறாமை போன்ற தீய குணங்கள் குடியேறிக் கொண்டு அந்த இதயத்தினை அழித்து விடுகின்றன. எனவே இல்லறம் புரிவோர் அத்தகைய தீய குணத்தினை தங்களது இல்லத்திலும் சரி தாங்கள் வாழும் சமூகத்திலும் சரி நுழைய விடாத வண்ணமே வாழ வேண்டும்.

வெஃகாமை – பிறரது பொருளினை கவர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சமூகத்தில் ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கை கொள்ளாது சந்தேகப்படும் நிலையினை உருவாக்கி விடுகின்றது. ஒற்றுமையாக இருக்கும் சமூகத்தினை உருவாக்காது ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி மட்டுமே எண்ணிக் கொள்ளும் ஒரு மிருக சமூகத்தினை உருவாக்குகின்றது. இல்லறம் மேற்கொள்வோர் அவ்வாறு பிறரின் பொருட்களின் மீது ஆசைக் கொள்ளாது ஒற்றுமையாக அன்புடன் இருக்கும் ஒரு சமூகத்தினையே உருவாக்கிட வேண்டும்.

புறங்கூறாமை – ஒருவரைப் பற்றி அவர் இல்லாத பொழுது புறங் கூறும் செயலானது அவர் நம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையினை உடைக்கத் தக்கதாக இருக்கின்றது. அவ்வாறு ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையற்று இருக்கும் நிலையினில் இருக்கும் சமூகத்திலேயே தான் தீய குணங்கள் செழித்து வளர்கின்றன. எனவே இல்லறம் மேற்கொள்வோர் புறங் கூறாது இருப்பது என்பது மிகவும் முக்கியமானதொன்று.

பயனில சொல்லாமை – பயனற்ற தீய விடயங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பது தீமையையே பரப்புகின்து. மனிதனால் அவனுடைய வாழ்வினில் பல நன்மைகளை செய்ய முடியும் இருந்தும் அவ்வாறுச் செய்யாமல் பயனற்ற தீய சொற்களையே ஒருவன் பேசி வருவான் என்றால் அவன் தனது வாழ்வினை பயனற்ற ஒன்றாக ஆக்குவதுடன் அவன் வாழும் சமூகத்தினை தீய சமூகமாகவும் ஆக்குகின்றான். எனவே இல்லறம் மேற்கொள்வோர் பயனற்ற காரியங்களிலும் சொற்களிலும் நேரத்தை விரயமாக்காது இருக்க வேண்டும்.

தீவினையச்சம் – தீமையை பார்ப்பதால், கேட்பதால், பேசுவதால் தீமையானதே பரவுகின்றது. தீமையை தீமையால் அழிக்க முடியாது. தன்னைச் சுற்றி இருக்கும் சூழ்நிலைகளைப் பொறுத்தே ஒரு சராசரி மனிதன் தனது வாழ்வினை அமைத்துக் கொள்கின்றான். எனவே நம்முடைய செயல்கள் மற்றவர்களை பாதிக்கும் என்று கருதி தீமையானச் செயல்களைச் செய்வதற்கு இல்லறம் மேற்கொள்வோர் அச்சம் கொள்ள வேண்டும்.

ஒப்புரவறிதல் – இறைவன் அளித்த இந்த வாழ்வானது நாம் வாழும் காலத்தில் நம்முடன் வாழும் மக்களுடன் ஒன்றாக இணைந்திருந்து ஒவ்வொருவரும் பிறருக்கு உதவிக் கொண்டு சகோதரர்களாக வாழ்வதற்காகத் தான். பிறருக்கு உதவுவதிலேயே வாழ்வின் அர்த்தமானது அடங்கி இருக்கின்றது. எனவே இல்லறம் மேற்கொள்வோர் பிறருக்கு உதவும் குணத்தினை சமூகத்தினில் வளர்க்கும் வண்ணமே வாழ வேண்டும்.

ஈகை – பிறருக்கு தருவதனால் வரும் ஒருவன் அடையும் மகிழ்ச்சியே உண்மையான இன்பமாகும். அடுத்தவருக்கு உதவியாக இருக்கும் வண்ணம் வாழும் வாழ்வே மெய் வாழ்வாகும். எனவே இல்லறம் மேற்கொள்வோர் எப்பொழுதும் தங்களால் இயன்ற வண்ணம் ஈகை குணத்தினை சமூகத்தினில் வளர்க்க வேண்டும்.  

புகழ் – தான் மறைந்தப் பின்னரும் தன்னுடைய செயல்களால் இறவாத் தன்மையினை ஒருவன் அடைவதே அவன் வாழ்வினை நன்றாக வாழ்ந்ததற்கு அர்த்தமாகும். சுய நலமாக தன்னை மற்றும் பார்த்துக் கொண்டு வாழ்ந்த மனிதர்கள் உயிரோடு இருந்தும் மரித்தவர்களாக இருக்கின்றனர். தாங்கள் வாழும் காலத்தில் சமூகத்தில் மற்ற மக்களுக்காக அன்பால் உழைத்தவர்களே இறந்த பின்பும் புகழோடு வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்தகைய புகழையே இல்லறம் மேற்கொள்வோர் நாட வேண்டும்.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு