பொதுவாக ஒவ்வொரு சமயத்தினைச் சார்ந்தவர்களிடமும் ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை இருக்கத்தான் செய்கின்றது. அவர்கள் புனிதமாகக் கருதும் புனித நூல்கள் எவ்விதமான மாற்றங்களையோ அல்லது இடைச்செருகல்களையோ கொண்டிராது, அவர்களது இறைவன் முதலில் எவ்வாறு அந்த நூலினைத் தந்தானோ அவ்வாறே இன்றுவரை அந்த நூல் இருந்து வருகின்றது என்ற நம்பிக்கையைத் தான் அவர்கள் கொண்டு இருக்கின்றார்கள்.

ஆனால் வரலாற்றை நாம் கண்டோம் என்றால் உண்மை நிலையோ வேறாகத் தான் இருக்கின்றது. அனைத்து சமயங்களின் நூல்களும் காலங்களில் பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டு வந்தே தான் இருக்கின்றன. அதற்கான காரணம் எளிது.

மக்களின் மத்தியில் எந்த கருத்து பரவலான ஆதரவைப் பெற்று இருக்கின்றதோ அக்கருத்தினை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கே மக்களில் பலர் முயல்வர் என்பது இயல்பான ஒரு விடயம். இந்த நூற்றாண்டில் மக்கள் ஆட்சியின் மத்தியில் எழுந்து இருக்கும் திராவிடக் கொள்கையையே பலர் தங்களது சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டிருப்பதை நாம் கண்டுக் கொண்டு தானே இருக்கின்றோம். அப்படி இருக்கையில் மன்னராட்சிக் காலம் உலகம் முழுவதும் பரவி இருந்த காலங்களில் மக்களின் மத்தியில் எழுந்த சமயக் கருத்துக்களை அரசர்கள் தங்களது நலனுக்காக பயன்படுத்திக் கொள்வது என்பது நடக்கக்கூடிய ஒன்று தானே. அது தான் நடந்தும் இருக்கின்றது.

கிருத்துவ கருத்துக்கள் மக்களிடையே பரவியதைக் கண்ட ரோம பேரரசன் கிருத்துவ கருத்துக்களை தனக்கு சாதமாக வருவது போல் மாற்றி ஏற்றுக் கொண்டு கிருத்துவ சமயத்தினை கைப்பற்றிக் கொண்டான் என்பது வரலாறு. அதே போல் பக்தி இயக்கத்தின் விளைவாய் எழுந்த சமயக் கருத்துக்களான சைவ வைணவ கருத்துக்களை மாற்றி அதனை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு அதனைஆரியர்களான பிராமணர்கள் கைப்பற்றிக் கொண்டனர் என்றதும் வரலாறு.

அவ்வாறு அரசியலால் கைப்பற்றப்பட்ட சமயக் கருத்துக்கள் காலம்தோறும் அவர்களுக்கு ஏற்ப மாற்றம் கண்டே வந்து இருக்கின்றன. வரலாற்று நிகழ்வுகள் அவ்வாறு இருக்க தன்னுடைய சமய நூலானது எவ்விதமான மாற்றமுமே இல்லாமல் முதலில் இருந்தவாறே இப்பொழுதும் இருக்கின்றது என்றுக் கூறுவது ஒன்று அவ்வாறு கூறுபவரின் அறியாமையைக் குறிக்கும் அல்லது அவ்வாறு கூறுபவர் அந்த சமய நூலில் நிகழ்ந்த மாற்றத்தினால் ஆதாயம் அடைந்து இருக்கின்றார் என்பதனையே குறிக்கும். சரி இருக்கட்டும் இப்பொழுது நாம் கிருத்துவ சமய நூலான விவிலியத்தையே காண வேண்டி இருக்கின்றது.

அனைத்து சமயங்களைச் சார்ந்தவர்களும் கூறுவதனைப் போல கிருத்துவச் சமயத்தினைச் சார்ந்தவர்களும் தங்களது நூலானது எவ்விதமான மாற்றங்களோ அல்லது இடைச்செருகல்களோ இல்லாமல் இறைவன் அளித்த வண்ணமே இருக்கின்றது என்றே கூறுகின்றனர். மேலும் மற்ற சமய நூல்களை எல்லாம் சாத்தானின் நூல்கள் என்றுக் கூறும் பழக்கமும் அவர்களுள் ஒரு சிலரிடம் இருக்கத்தான் செய்கின்றது. இந்நிலையில் தான் நாம் விவிலியத்தினைப் பற்றி சிறிது பார்க்க வேண்டி இருக்கின்றது.

முதலில் ருசிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (Leo tolstoy) தன்னுடைய 'இயேசுவின் வாழ்க்கை - சுவிசேஷக் சிறுவரைவு (Gospel in brief - life of jesus)' என்ற நூலில் என்ன சொல்லுகின்றார் என்றே கண்டு விடலாம்.

"வாசகர்கள் ஒன்றினை நிச்சயம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். தத்துவஞானிகளான பிளாட்டோ(Plato), பிலோ(Philo), மார்கஸ் அரேலியஸ்(Marcus Aurelius) அவர்களைப் போல் அல்லாது இயேசு அவராக எந்த ஒரு புத்தகத்தையும் எழுதி வைக்கவில்லை. மேலும் சாக்ரடீசைப்(Socrates) போல் படித்த மக்களுக்கு தன்னுடைய போதனைகளை அவர் வழங்கவும் இல்லை.மாறாக பெரும்பாலும் கல்வி அறிவு பெற்றிராத மக்களிடமே அவர் பேசியும் போதித்தும் வந்தார். அவர் இறந்து வெகு காலத்திற்குப் பின்னரே மக்கள் அவரைக் குறித்துக் கேள்விப்பட்டதை எழுதி வைக்க ஆரம்பித்தனர்.

மேலும் வாசகர்கள் அக்காலத்தில் இயேசுவைக் குறித்து எழுதப்பட்ட பல்வேறுக் குறிப்புகளில் இருந்தே திருச்சபையானது முதல் மூன்று சுவிசேஷங்களைத் தேர்ந்து எடுத்தது என்பதனை நினைவுக்கூர வேண்டும். பின்னர் அவர்கள் நான்காவது சுவிசேசத்தையும் அவ்வாறே தேர்ந்து எடுத்தனர். அவ்வாறு திருச்சபை ஆனது இயேசுவைக் குறித்து எழுதப்பட்ட பல்வேறு குறிப்புகளில் இருந்து சிறந்ததைத் தேர்ந்து எடுக்கும் பொழுது பல்வேறு குழப்பமான பகுதிகளையும் அவர்கள் தேர்ந்து எடுக்கத்தான் வேண்டி இருந்தது. ஆகையால் தேர்ந்து எடுக்கப்படாத குறிப்புகளில் காணப்படும் மோசமான பகுதிகளைப் போல் தேர்ந்து எடுக்கப்பட்ட சுவிசேஷங்களிலும் மோசமான பல பகுதிகள் இருக்கின்றன என்பதனையும் வாசகர்கள் நினைவிற் கொள்ள வேண்டும்.

மேலும் தேர்ந்து எடுக்கப்பட்ட இந்த சுவிசேஷங்களும் ஆயிரக்கணக்கான மனிதர்களின் மூளைகளாலும் கைகளாலும் உருவாக்கப்பட்டு இருக்கும் படைப்புகள் தான் என்பதையும் வாசகர்கள் நினைவிற்கொள்ள வேண்டும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அவைகளில் பல பகுதிகள் சேர்க்கப்பட்டும், விமர்சிக்கப்பட்டும் வந்தே தான் உள்ளன. நான்காம் நூற்றாண்டில் இருந்து நம்முடைய கைகளுக்கு வந்துள்ள படைப்புகள் எவ்விதமான நிறுத்தக் குறியீடுகளும் இல்லாமல் தொடர்ச்சியான எழுத்துக்களாக இருக்கும் வண்ணமே அமைந்து உள்ளன. எனவே அந்த நூல்களைப் படித்துப் புரிந்துக் கொள்வதில் வேறுபாடுகள் நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளிலேயே எழத் துவங்கி விட்டன. அப்படி எழுந்த வேறுபாடுகளினால் இன்று நம்மிடையே கிட்டத்தட்ட ஐம்பதினாயிரம் வகையான சுவிசேஷங்கள் உலாவிக் கொண்டிருக்கின்றன"

மேலே லியோ டால்ஸ்டாய் கூறி இருக்கும் கருத்தினைச் சுருக்கமாக காண வேண்டும் என்றால் - விவிலியத்தில் எந்த பகுதியையும் இயேசு எழுதவில்லை. இயேசுவை அறிந்தவர்கள் அல்லது கிருத்துவ சமயத்தினரின் நம்பிக்கைக்கு ஏற்ப பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்பட்ட மக்கள் எழுதிய பல்வேறு குறிப்புகளில் ஒரு சில மட்டுமே விவிலியத்தில் தொகுக்கப்பட்டு இருக்கின்றது. அவ்வாறு தேர்ந்து எடுக்கப்பட்ட குறிப்புகளிலும் மோசமான தெளிவில்லாத தவறான பகுதிகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படிப்பட்ட பகுதிகள் காலம்தோறும் மக்களால்அவர்களுக்கு ஏற்றார்ப் போல் மாற்றம் செய்யப்பட்டே வந்து இருக்கின்றன. நிற்க.

விவிலியத்தைப் பற்றிய டால்ஸ்டாயின் கூற்று ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. அவரைப் போன்று காலங்களில் இன்னும் பலரும் இந்தக் கருத்துக்களைக் கூறித் தான் சென்று உள்ளனர். இருந்தும் சான்றுகள் இன்றி நாம் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. விவிலியத்தில் மாற்றங்கள் இருக்கின்றது என்று யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் ஆனால் சான்றுகள் இன்றி நான் நம்ப மாட்டேன் என்று கூறும் கிருத்துவர்கள் இருக்கத்தான் செய்வர். அவ்வாறு சான்றுகளைச் சோதித்துப் பார்த்து அறிந்துக் கொள்வது தான் நன்மையான செயலாகவும் இருக்கும். அவர்களுக்காக இந்த படம்,



இதில் விவிலியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு பகுதிகளுக்குள் எவ்வாறு முரண்பாடுகள் காணப்படுகின்றன என்பது சிறு சான்றுகளுடன் காட்டப்பட்டு உள்ளது. (இதனை தமிழில் தர வேண்டும் என்றே முயன்றேன். ஆனால் ஆங்கில விவிலியத்தில் உள்ள முரண்பாடுகள் இவை என்பதால் ஆங்கிலத்திலேயே தந்து விட்டேன். இந்தத் தகவலை நான் கண்டெடுத்த இணையத்தளத்தின் சுட்டியினை கீழே தந்து உள்ளேன்).

ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூல்களிலேயே இவ்வளவு வேறுபாடுகள் இருந்தால், அதுவும் தகவல்களைச் சேகரிக்கும் வசதிகளும் நூல்களை அச்சடிக்கும் வசதிகளும் பெருமளவு வளர்ந்து இருக்கும் இந்தக் காலத்தில், அக்காலத்தில் எவ்வளவு மாற்றங்கள் நடந்து இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அதுவும் குறிப்பாக, இலத்தின் மொழியில் இருந்து ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் விவிலியத்தை மொழிப்பெயர்க்க முயன்றவர்களை திருச்சபையானது உயிரோடு எரித்த வரலாற்றினைக் காணும் பொழுது நிச்சயம் பல்வேறு மாற்றங்கள் விவிலியத்தில் செய்யப்பட்டு தான் உள்ளன என்பது புலனாகின்றது. அதனை எல்லாம் நாம் காண வேண்டும் என்றால் முதலில் விவிலியம் என்றால் என்னவென்றும் அதன் காலகட்டத்தில் நிலவிய சூழலினைக் குறித்தும் நாம் அறிந்துக் கொள்ளத்தான் வேண்டி இருக்கின்றது. ஆனால் அது இங்கே தேவை இல்லை என்பதனால் அதனை வேறொரு பதிவில் விரிவாகக் காணலாம்.

இங்கே கிருத்துவ சமயத்தினை சார்ந்தவர்கள் சிந்திக்க வேண்டியது என்னவென்றால்,

  • ஏன் ஆங்கில மொழியாக்கங்களில் இவ்வளவு வேறுபாடுகள் இருக்கின்றன?
  • இயேசுவும் அவரது சீடர்களும் பேசிய மொழி அரமேயம். அவ்வாறு இருக்க விவிலியத்தின் மூல நூல்கள் கிரேக்கம் என்று ஏன் திருச்சபைக் கூற வேண்டும்?
  • இலத்தின் மொழியில் இருந்து மற்ற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்தவர்களை, அவர்கள் விவிலியத்தை பொது மக்கள் புரிந்துக் கொள்ளுமாறு மொழிபெயர்த்தனர் என்ற ஒரே காரணத்திற்காக உயிரோடு எரித்தது ஏன்?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் கிருத்துவர்கள் விடையினைத் தேடினார்கள் என்றால் அவர்களுக்கு விடையாய் கிடைப்பது - ஆம். விவிலியத்தில் மாற்றங்கள் இருக்கின்றன என்பது தான். அதற்கு அவர்கள் உண்மையை ஆராய வேண்டும். ஆராய்வார்களா?

எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்; பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்" 1 - தெச.5 : 21 22 

தொடர்புடைய பதிவுகள்:


மேலே ஆங்கில விவிலிய நூல்களுள் இருக்கும் வேறுபாடுகளை நான் அறிந்துக் கொண்ட இணையத்தளம் - 

2 கருத்துகள்:

அற்புதமான அதே சமயம் ஆழமான பார்வை .காலத்திர்க்கு ஏற்ற மாற்றங்கள் மிக முக்கியம் என்பதை இவ்வளவு பெரிய பதிவு சொல்கிறது .

தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே...ஆனால் நீங்கள் இப்பதிவினைத் தவறாக புரிந்துக் கொண்டீர்களோ என்றே நான் ஐயம் கொள்கின்றேன்.

//காலத்திர்க்கு ஏற்ற மாற்றங்கள் மிக முக்கியம்// என்று நான் இங்கே கூற வரவில்லை. மாறாக காலத்தில் சில மனிதர்களின் நலன்களுக்கு ஏற்ப சமய நூல்களில் மாற்றங்கள் பல செய்யப்பட்டு உள்ளன என்றே தான் நான் கூறி இருக்கின்றேன்.

நன்றி

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு