சென்ற பதிவினில் இரண்டு இனக்குழுக்கள் போரினால் ஒன்றிணையும் பொழுது, தோற்ற இனக்குழுவானது முற்றிலுமாக அடிமைகளாகவும் எதிரிகளாகவும் மாறி விடுகின்றது என்றே நாம் கண்டோம். கூடவே நான்கு வருணம் எனப்படும் பிரிவுகளில் முதல் மூன்று வர்ணங்கள் ஆரியர்களையும் இறுதி இரண்டு வர்ணங்கள் அடிமைகளையும் எதிரிகளையும் குறிக்கின்றன என்பதனையும் கண்டோம்.

பிராமணர் - வேத வேள்வி செய்வோர் (ஆரியர்)
க்ஷத்ரியர் - அரசாள்வோர் (ஆரியர்)
வைசியர் - வணிகம் செய்வோர் (ஆரியர்)
சூத்திரர் - அடிமைகள் (திராவிடர்)
பஞ்சமர் - எதிரிகள் (திராவிடர்)

இதைத் தான் நாம் இப்பொழுது சற்று விரிவாகக் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் முதலில் ஒரு நிகழ்வினை இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. பெரிய நிகழ்வு தான்...மராட்டிய மன்னன் சிவாஜியின் பட்டமேற்பு விழாவென்றால் சும்மாவா என்ன? ஆனால் கி.பி பதினேழாம் நூற்றாண்டில் நடந்துக் கொண்டிருக்கும் அந்த விழாவினில் ஒரு சிறு பிரச்சனை இருந்துக் கொண்டு தான் இருக்கின்றது. பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை...அன்றிருந்த பழக்க வழக்கங்களின்படி சமய பெரியோர்களாக அங்கே கருதப்பட்ட பிராமணர்கள், சிவாஜிக்கு முடிசூட்ட மறுக்கின்றனர். அவ்வளவே. அதற்கு அவர்கள் காரணமாய் கூறிய விடயம் 'சிவாஜி க்ஷத்ரியன் அல்ல...ஆகவே அவனுக்கு முடி சூட்டும் சடங்கினை நாங்கள் செய்ய மாட்டோம்' என்பதே ஆகும். இக்கட்டான அந்தச் சூழலில் சிவாஜியின் நண்பரான அவாஜி என்பவர் சிவாஜியின் வம்சாவழி வரலாற்றினை சிறிது மாற்றி சிவாஜி என்பவர் மேவாரில் இருக்கும் இராஜ்புட் வம்சத்தினரின் வழியில் வந்தவர் என்றே கூறுகின்றார். அவ்வாறு அவர் கூறுவதற்கு காரணம் இராஜ்புட் வம்சத்தினை சத்திரியர்கள் என்றே பிராமணர்கள் ஏற்றுக் கொண்டு இருந்தனர். எனவே சிவாஜியும் இராஜ்புட் வம்சம் என்று கூறி விட்டால் அவரை சத்திரியர் என்றே பிராமணர்கள் ஏற்றுக் கொள்வார்கள் தானே. எனவே தான் அவர் அவ்வாறு கூறுகின்றார். அதனை பிராமணர்கள் தீவிர சிந்தனைக்குப் பின்னர் ஏற்றுக் கொண்டு சிவாஜிக்கு உரிய சடங்குகளைச் செய்கின்றனர். ('சூத்திரர்கள் யார்' என்ற அம்பேத்கரின் நூலில் இருக்கும் தகவல்)

சிவாஜி தனியான பல இராஜ்யங்களை தன் வசம் வைத்து இருந்தாலும் அவரை சத்திரியன் என்று பிராமணர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக அவரை எப்பொழுது இராஜ்புட் வம்சாவழியைச் சார்ந்தவர் என்ற கருத்து எழுகின்றதோ அப்பொழுது அவரை அவர்கள் சத்திரியர் என்று ஏற்றுக் கொள்ளுகின்றனர். அதாவது பிராமணர்களின் பார்வையில் இராஜ்புட் வம்சத்தினைச் சார்ந்தவர்கள் சத்திரியர்களாக அறியப்படுகின்றனர். நிற்க

இங்கே நாம் காண வேண்டிய விடயம் என்னவென்றால் பிராமணர்களால் சத்திரியர்கள் என்று அறியப்படும் இராஜ்புட்டுகள் - இந்தியர்கள் அல்ல என்பதே ஆகும். அவர்கள் இந்திய தேசத்தின் மேல் பல்வேறு காலங்களில் படையெடுத்து வந்த ஹுன்னேர்கள், சகர்கள், குஷானர்கள் போன்ற பல்வேறு அந்நிய இனக்குழுக்களைச் சார்ந்தவர்கள். அவர்கள் யாரும் இந்திய தேசத்தினைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆனால் கி.பி ஏழாம் நூற்றாண்டிற்கு பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வட இந்தியாவினைக் கைப்பற்றினர் என்பது நம்முடைய பாட புத்தகத்தினில் காணப்படாத ஒரு வரலாறு. அவ்வாறு அவர்கள் ஒன்றிணைந்த பொழுது அவர்களுக்கு அவர்கள் இட்டுக் கொண்ட பெயர் தான் இராஜ்புட். கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் இராஜ்புட் என்ற பெயர் இருந்தமைக்கான சான்றுகள் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட இராஜ்புட்களைத் தான் சத்திரியர்கள் என்று பிராமணர்கள் கூறி இருக்கின்றனர்.

இந்திய தேசத்தினைச் சார்ந்த அரசரான சிவாஜியை சூத்திரன் என்று கூறிய பிராமணர்கள், அந்நிய நாட்டினில் இருந்து வந்த ராஜ்புட்களை சத்திரியர்கள் என்று கூறி இருக்கின்றனர். ஏன் அவர்கள் அவ்வாறு கூற வேண்டும் என்றே நாம் கண்டோம் என்றால் மீண்டும் நான்கு வருணத்தில் வந்து நாம் நிற்க வேண்டி இருக்கின்றது.

சகர்கள், ஹுன்னேர்கள், குஷானர்கள், சுங்கர்கள் போன்ற அந்நிய நாட்டினைச் சார்ந்தவர்கள் ஆரியர்கள் என்ற பொதுப் பெயரில் ஒன்றிணைந்து வட இந்தியாவின் ஆட்சியைப் பிடிக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஆரியர்கள். எனவே அவர்களில் அரசாள்பவர்கள் க்ஷத்ரியர்களாக அறியப்படுகின்றனர். ஆரியப் பிரோகிதர்களான பிராமணர்களும் அவர்களின் சக ஆரியர்களான இராஜ்புட்களை அறிந்துக் கொண்டு அவர்களை சத்திரியர்கள் என்று உரிமைப் பாராட்டுகின்றனர். அதே சமயம் அவர்கள் ஆட்சியினை திராவிடர்களிடம் (இந்திய மக்களிடம்) இருந்து வட இந்தியாவினில் பறித்து இருக்கின்றனர். எனவே அந்த மக்கள் அனைவரையும் சூத்திரர் என்றே அவர்கள் கருதவும் செய்து இருக்கின்றனர். அதாவது வட இந்தியாவினைப் பிடித்த அந்நியர்களின் கூட்டம் தாங்கள் கைப்பற்றிய இடத்தை ஆரியவர்த்தம் என்று அழைத்துக் கொண்டு தங்களிடையே மூன்று பிரிவுகளை வகுத்துக் கொள்கின்றது.

பிரோகிதர் (பின்னாளில் பிராமணர்) - சமய வழிபாடுகளைச் செய்பவர்
க்ஷத்ரியர் - ஆள்பவர்
வைசியர் - வணிக வேலைகளைச் செய்பவர்.

இந்தப் பிரிவுகள் அனைத்தும் ஆரியர்களையே குறிக்கும். ஆரியர்கள் கைப்பற்றிய இடத்தில் இருந்த இந்திய மக்கள் அனைவரும் சூத்திரர்கள் என்றே அழைக்கப்பட்டனர். அதாவது ஆரியர்களின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட இந்திய மக்கள் அனைவரும் சூத்திரர்கள் ஆயினர். எனவே தான் அடிமைகள் என்று குறிக்கப்படும் சொல்லான சூத்திரர்கள் என்பது அம்மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்தப் பிரிவுகள் முழுக்க முழுக்க ஆரியர்களால் உருவாக்கப்பட்ட பிரிவுகளே ஆகும். அவர்கள் எந்த இடங்களில் ஆட்சி செய்கின்றனரோ அந்த இடங்களில் மட்டுமே இந்தப் பிரிவுகள் இருக்கும். மாறாக மற்ற இடங்களில் அப்பிரிவுகளுக்கு எந்தொரு அர்த்தமும் இருக்காது. உதாரணமாக வட இந்தியாவினை கைப்பற்றிய ஆரியர்களின் மத்தியில் மட்டுமே பிரோகிதர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய பிரிவுகள் இருக்க முடியும். மாறாக அவர்களின் ஆட்சிகளுக்கு உட்படாத ஏனைய அரசுகளில், உதாரணமாக தமிழக அரசுகளையே எடுத்துக் கொள்ளலாம், அப்பிரிவுக்கு எந்த ஒரு செல்வாக்கும் இருக்காது. எனவே தான் அவர்களை ஆரியர்கள் பஞ்சமர்கள் அல்லது எதிரிகள் என்றே குறித்து வைக்கின்றனர். காரணம் ஆரியர்களின் பிரிவுகளும் அவர்களது தேசத்து சட்ட நூலான மனு தர்மமும் ஏனைய அரசுகளில் துளி கூட செல்வாக்குப் பெறாது. இந்தியாவில் அப்பொழுது இருந்த மற்ற அரசுகள் ஆரியர்களின் அந்த அரசுக்கு எதிரியாக இருந்தமையினால் அவர்களை பஞ்சமர் என்றே ஆரியர்கள் குறித்து வைக்கின்றனர்.

எனவே ஆரியர்களின் பார்வையில், பிராமணர் சத்திரியர் வைசியர் என்பன அவர்களின் மத்தியில் இருந்த தொழிற் பிரிவுகள் (இவற்றில் பிற்காலத்தில் அரசியல் பலத்தோடு சமயங்களின் செல்வாக்கையும் சூழ்ச்சிகளால் பெற்றமையினால் பிராமணர்கள் மிகவும் உயர்ந்தவர்களாக மாறி விட்டனர். அது பெரிய கதை. அதனை நாம் மற்ற பதிவுகளில் கண்டு வருகின்றோம்).

சூத்திரர் - ஆரியர்களின் ஆட்சிக்கு உட்பட்ட இந்திய மக்கள். இவர்கள் ஆரியர்களின் மனுதர்ம சட்டத்திற்கு உட்பட்டவர்கள். எனவே தான் இவர்களை அடிமைகள் என்று ஆரியர்கள் அழைக்கின்றனர்.
பஞ்சமர் - ஆரியர்களின் ஆட்சிக்கு உட்படாத மற்ற இந்திய ஆட்சியைச் சார்ந்தவர்கள். இவர்களிடம் மனு தர்மமும் செல்லாது ஆரியர்களின் வர்ணாஸ்ரம தர்மமும் செல்லாது. எனவே தான் இவர்களை பஞ்சமர்கள் என்று ஆரியர்கள் அழைக்கின்றனர். மேலும் இவர்கள் கடவுளிடம் இருந்து தோன்றவில்லை என்றும் அவர்கள் கூறிச் சென்று உள்ளனர்.

இதனால் தான் கிட்டத்தட்ட இந்திய மக்கள் தொகையில் 90% பேர் சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும் இருக்கின்றனர். 10% பேர் மட்டும் பிராமணர்களாகவும், சத்திரியர்களாகவும் வைசியர்களாகவும் இருக்கின்றனர்.

அதனால் தான் சிவாஜி அரசனாக இருந்தாலுமே அவன் இந்திய மண்ணைச் சார்ந்தவனாக இருந்ததினால் அவனை சூத்திரன் என்றே அவர்கள் அழைத்தனர். மேலும் இன்று தமிழகத்தில் உயர் சாதியாக அறியப்படும் சைவ வெள்ளாளர், பிள்ளைமார் போன்ற சாதிகளும் ஆரிய நான்கு வர்ணம் என்று வரும் பொழுது 'சற் சூத்திரர் - சிறந்த அடிமை' என்றே அழைக்கப்படுகின்றனர்.

அதாவது தமிழ் நாட்டில் சைவ வெள்ளாளர்கள் உயர்ந்த சாதி. ஆனால் ஆரியர்களின் பார்வையில் அவர்கள் சிறந்த அடிமைகள். காரணம் என்ன? ஒரு இந்தியன் மனு தர்மத்தின்படி அல்லது நான்கு வர்ணத்தின் படி என்றுமே ஒரு சூத்திரனாகவோ அல்லது பஞ்சமனாகவோ தான் இருக்க முடியுமே அன்றி அவனால் ஒரு பிராமணனாகவோ அல்லது சத்திரியனாகவோ ஆக முடியாது. இதைத் தமிழ் தேசியம் பேசுவோர் அறிந்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அறியாமல் தமிழர்களிடம் இருந்த தொழிற்பிரிவுகள் தான் நான்கு வர்ணமாக மாறி இருக்கின்றது என்றே கூறிக் கொண்டு இருந்தீர்கள் என்றால் நிச்சயமாய் தமிழர்களின் வரலாறு மீண்டு வர வாய்ப்பே இருக்காது.

அவர்கள் ஏற்கனவே அனைத்தையும் அவர்களின் வசதிக்கு ஏற்றாப்போல் மாற்றி வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். இதில் நீங்களாய் போய் நாங்களும் ஏமாறத் தயார் என்றே கூறினீர்கள் என்றால் நிலைமை மோசமாகத் தான் போகும்.

எனவே தொழில் அடிப்படையில் அமைந்த சாதிப் பிரிவுகள் என்பது வேறு.

பள்ளர், பறையர், நாடார், வெள்ளாளர், தேவர், கவுண்டர், நாயுடு, ரெட்டியார், நாயக்கர் - போன்றவைகள் சாதிய பிரிவுகள். (இவற்றுக்கு இடையே எப்பொழுது எவ்வாறு ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன என்பது வேறு வரலாறு. அதனையும் நாம் பின்னர் காணலாம்)

பிராமணர், சத்திரியர், வைசியர் - என்பன ஆரியர்களின் பிரிவுகள். அவர்களின் பார்வையில் நாம் மேலே கண்டுள்ள அனைத்து சாதிகளும், அது தமிழர்களின் சாதியப் பிரிவுகளாக இருக்கட்டும் அல்லது தெலுங்கு மக்களின் சாதிப் பிரிவுகளாக இருக்கட்டும், ஒன்று அடிமைகள் என்று அர்த்தம் பொதிந்த சூத்திரப் பிரிவினைச் சார்ந்ததாக இருக்கும் அல்லது எதிரி என்று முத்திரைக் குத்தப்பட்ட பஞ்சமர் பிரிவினைச் சார்ந்ததாக இருக்கும். அவ்வளவே.

எனவே சாதிப் பிரிவுகளும் நான்கு வர்ணமும் ஒன்று என்று கூறுவது ஒன்று அறியாமையில் கூறும் ஒன்றாக இருக்கும். அல்லது மீண்டும் திராவிட இனத்தினை அடிமைப்படுத்தும் சூழ்ச்சியின் குரலாகவே இருக்கும்.

சாதிப் பிரிவுகளும் வர்ணப் பிரிவுகளும் ஒன்றல்ல!!!!

அவ்வளவே!!!

தொடர்புடைய இடுகைகள்:

தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்...!!!
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 1
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 2
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 3
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 4
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 5
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 6
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 7
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 8
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 9
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 10
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 11
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 12

 

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி