உவமை 3:

சில மனிதர்கள் நடந்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அவர்களது பாதையினைத் தொலைத்து விட்டு இருந்ததினால் அவர்கள் அது வரை நடந்து வந்துக் கொண்டிருந்த சமமான மிருதுவான பாதையில் இருந்து விலகி முட் செடிகளும் சதுப்பு நிலங்களும் நிறைந்து இருந்த வழியில் நடந்துக் கொண்டிருந்தனர். நேரம் செல்லச் செல்ல அவர்கள் முன்னேறிச் செல்வதும் கடினமானதொன்றாக மாறிக் கொண்டே வந்தது.

அந்நிலையில் அப்பயணிகள் இரண்டுக் குழுக்களாக பிரிந்தனர். ஒரு குழுவினரோ தாங்கள் சரியான பாதையில் இருந்து தொலையவில்லை என்றும் தொடர்ந்துப் பயணித்தால் அவர்களின் இலக்கினை அவர்கள் அடைந்து விடுவர் என்றும் அவர்களை அவர்களே உறுதிப்படுத்திக் கொண்டு தாங்கள் சென்றுக் கொண்டிருந்த வழியிலேயே தொடர்ந்துச் செல்ல முடிவு செய்தனர். மற்றொரு குழுவினரோ, தாங்கள் இப்பொழுது பயணித்துக் கொண்டிருக்கும் வழி நிச்சயம் தவறான வழியாக இருக்கும் காரணத்தினால் தான் இன்னும் அவர்கள் சென்றுச் சேர வேண்டிய இடம் வரவில்லை என்று கருதி சரியான வழியினைக் கண்டுபிடிப்பதற்கு அனைத்து திசைகளிலும் நிற்காமல் வேகமாகச் செல்ல வேண்டும் என்றே முடிவு செய்தனர். அவ்வாறு அனைத்து திசைகளிலும் சென்று பார்த்தால் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு சேர்க்கும் வழியினை நிச்சயம் அவர்கள் எதிர்கொள்வர் என்றே அவர்கள் கருதினர்.

அனைத்து பயணிகளும் இவ்விரு சிந்தனைகளால் இரு குழுக்களாக பிரிந்து இருந்தனர். சிலர் தொடர்ந்து அவர்கள் சென்றுக் கொண்டிருந்த பாதையிலேயே முன்னேற முடிவு செய்தனர். மற்றவர்களோ அனைத்து திசைகளிலும் பயணிக்க முடிவு செய்தனர்.

இவ்விரு குழுக்களோடும் சேராது தனித்து இருந்த ஒரு மனிதனும் அங்கே இருக்கத் தான் செய்தான். அவன் அவ்விரு குழுவினரின் முடிவினையும் ஏற்றுக் கொள்ளாது அவர்களிடம் தொடர்ந்து அதே வழியிலேயே பயணம் செய்வதற்கு முன்னும் அல்லது அனைத்து திசைகளிலும் சென்று சரியான வழி ஏதேனும் தென்படுகின்றதா என்று தேடுவதற்கு முன்னும் அவர்கள் அனைவரும் சற்று நின்று நிதானமாக அவர்கள் இருக்கும் சூழ்நிலையைப் பற்றிய அனைத்து விடயங்களையும் சிந்தித்து அந்த சிந்தனையின் மூலம் வரும் கருத்தின்படி என்ன செய்வது என்று முடிவு செய்வதே நலமாக இருக்கும் என்றான்.

ஆனால் அப்பயணிகள் அவர்களின் நிலையைக் குறித்து மிகுந்த அச்சத்தில் இருந்தனர். மேலும் ஒரு வழியாக தொடர்ந்து நகரப் போகின்றோம் என்ற உற்சாகத்திலும் இருந்தனர். கூடவே அவர்கள் வழியினை தொலைக்கவில்லை மாறாக எங்கோ ஒரு சிறு தொலைவு அளவில் மட்டுமே பாதை மாறி விட்டது மீண்டும் எளிதில் விரைவில் பாதையினை அடைந்து விடுவோம் என்றும் மனதளவில் கருதினர். அவர்களின் அச்சத்தை எங்காவது நகர்ந்துக் கொண்டே இருப்பதன் மூலம் மறந்து விடலாம் என்ற சிந்தனையிலும் அவர்கள் மூழ்கி இருந்தனர். அதனால் நாம் எங்கும் நகராது சிறிது நிதானமாக யோசித்து பின்னர் முடிவெடுக்க வேண்டும் என்ற அவனது கருத்து அவர்களின் மத்தியில் தீவிர எதிர்ப்பையும் கிண்டலையும் பழிச் சொற்களையும் பெற்றது.

"இது கோழைத்தனம் மற்றும் சோம்பல்தனம் ஆகியவற்றின் அறிவுரை..." என்றனர் சிலர்.

"எங்கும் செல்லாமல் இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டுமா...ஆகா..நமது இலக்கினை அடைய மிகச் சிறந்த யோசனை இது" என்றே கிண்டல் செய்தனர் மற்றவர்கள்.

"போராடுவதற்கும் உழைப்பதற்கும் தடைகளை கடப்பதற்கும் தான் நம்மிடத்து வலிமை தரப்பட்டு உள்ளது...மக்களும் அதற்காகத் தான் இருக்கின்றோம்..மாறாக கோழையைப் போல் தடைகளை கண்டு ஒடுங்குவதற்கு அல்ல" என்றனர் சிலர்.

"தவறான திசையில் சென்றுக் கொண்டே நாம் திசையினை மாற்றாமல் பயணித்தோம் என்றால் நிச்சயம் நம்முடைய இலக்கினை நாம் அடைய மாட்டோம்...அவ்வாறே தான் ஒரு திசையில் இருந்து மற்றொரு திசைக்கு மாறி மாறி பயணித்தாலும் இலக்கினை அடையப் போவதில்லை. நாம் நம்முடைய இலக்கினை அடைய வேண்டும் என்றால் நாம் சூரியன் மற்றும் நட்சத்திரங்களை வைத்து நாம் பயணிக்க வேண்டிய திசையினை கணித்து அவ்வழியில் பயணிக்க வேண்டும். அதற்கு நாம் சற்று நிற்க வேண்டும். நிற்க வேண்டும் என்றால் ஒரு வேலையும் செய்யாமல் நிற்க வேண்டும் என்பதல்ல மாறாக நின்று நிதானமாக நாம் இருக்கும் சூழலை ஆராய்ந்து நாம் செல்ல வேண்டிய உண்மையான பாதையினை கண்டறிந்து பின்னர் தயக்கமின்றி அப்பாதையில் பயணிக்க வேண்டும்" என்றே பெருவாரியான மக்களிடம் இருந்து பிரிந்து இருந்த அம்மனிதன் எடுத்துக் கூறினாலும் அவனது பேச்சினை அங்கே எவரும் கேட்க வில்லை.

முதல் குழுவினர் தொடர்ந்து தாங்கள் பயணித்துக் கொண்டிருந்த வழியிலேயே பயணிக்க துவங்கினர். இரண்டாவது குழுவினரோ ஒவ்வொரு திசையாக பயணிக்க ஆரம்பித்தனர். ஆனால் இருவரும் இறுதி வரை அவர்களின் இலக்கினை அடையவில்லை...முட்களும் சதுப்பு நிலங்களும் மிக்க பகுதியில் இருந்து வெளியேறவும் இல்லை...அவர்கள் இன்னும் அலைந்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

இதே நிலைமை தான் எனக்கும் நேர்ந்தது, நாம் பயணித்துக் கொண்டிருக்கும் பாதை உழைப்புச் சுரண்டல் என்ற அடர்ந்த கானகத்துள்ளும், நாடுகளின் முடிவில்லா ஆயுத வளர்ச்சி என்ற நம்மை முழுங்கி விடும் புதைக்குழியினுள்ளும் திசை மாறிச் சென்றுக் கொண்டிருப்பதைக் கண்டு நாம் சரியான பாதையில் தான் சென்றுக் கொண்டிருக்கின்றோமா என்ற சந்தேகத்தினை வெளிக்காட்ட நான் முயன்ற பொழுது அதே நிலைமை தான் எனக்கும் நேர்ந்தது.

"இது நாம் செல்ல வேண்டியப் பாதை அல்ல. அனேகமாக நாம் நமது பாதையைத் தொலைத்து விட்டோம். ஆகையால் தொடர்ந்து தவறான பாதையில் செல்வதற்கு மாறாக சற்று நின்று நமக்கு அருளப்பட்டுள்ள பொதுவானதாகவும் என்றும் நிலையானதாகவும் இருக்கின்றன உண்மையின் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு நம்முடைய நிலையை ஆராய்ந்துப் பார்த்து நாம் செல்ல வேண்டிய திசையில் தான் சென்றுக் கொண்டிருக்கின்றோமா என்று சிந்திப்பது நமக்கு நலமாக அமையும்." என்றே நான் கூறினேன்.

ஆனால் என்னுடைய கூற்றிற்கு யாரும் விடைப் பகிரவில்லை. "இந்த இந்த காரணத்தினால் நாங்கள் பாதை மாறவில்லை என்றும் தவறிழைக்க வில்லை என்றும் என்று எங்களால் உறுதியாக கூற முடியும்" என்று ஒருவரும் காரணங்களைக் கூற முன்வரவில்லை. மேலும், "நாங்கள் தவறிழைத்து விட்டோம், இருப்பினும் நாங்கள் எங்களது பயணத்தை நிறுத்தாமலேயே எங்களது தவறினைத் திருத்திக் கொள்ளும் கேள்விக்கு அப்பாற்பட்ட வல்லமை மிக்க கருவி இதோ எங்களிடத்து இருக்கின்றது" என்றும் எவரும் கூற முன்வரவில்லை. எவரும் எதையும் கூறவில்லை...இருந்தும் அவர்கள் என் மீது கோபம் கொண்டு என்னுடைய ஒற்றைக் குரலை மூழ்கடிக்கும் வண்ணம் அவர்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பினர்.

"இன்று இருக்கும் நிலையிலேயே நாம் காலத்தை விட்டுப் பின்னாடி நிற்கின்றோம்...இந்நிலையில் இவன் நமக்கு சோம்பேறித்தனத்தையும்...சோம்பி இருப்பதையும் போதிக்கின்றான்" என்று அவர்களுள் சிலர் கூறினர். மேலும் சிலர் "வேலை செய்யாது இருப்பதா...மக்களே இவன் குரலுக்கு செவி சாய்க்காதீர்கள்...தொடர்ந்து முன்னேறுங்கள்" என்றுக் கூறினர். அவர்களைப் பொறுத்தவரை இரட்சிப்பு என்பது அவர்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பாதையில், அது எந்த பாதையாக இருந்தாலும் சரி, தொடர்ந்து பயணிப்பதிலேயே அடங்கி இருக்கின்றது அல்லது ஒவ்வொரு திசையாக மாறி மாறி அலைவதினாலேயே இரட்சிப்பினை அவர்கள் கண்டடைந்து விடுகின்றனர்.

"நிற்பதனால் என்ன பயன்...ஏன் சிந்திக்க வேண்டும்...எவ்வளவு வேகமாக நகர முடியுமோ அவ்வளவு வேகமாக நகருங்கள்...எல்லாம் சரியாக வரும்" என்றே அவர்கள் கூறுகின்றனர்.

மக்கள் அவர்களது வழியினைத் தொலைத்து விட்டனர், அதனால் அவர்கள் துயரப்படவும் செய்கின்றனர். இந்நிலையில் நாம் இன்று இருக்கும் தவறான நிலைக்கு நம்மை உட்படுத்திய நமது வேகமான போக்கினை அதிகரிப்பதற்கு பதிலாக அந்த வேகமான போக்கினை நிறுத்துவதற்கே நமது வல்லமை மிக்க ஆற்றலை பெருவாரியாக நாம் பயன்படுத்த வேண்டி இருக்கின்றது என்றே தோணுகின்றது. அவ்வாறு நின்றால் மட்டும் தான் நம்மால் நாம் இருக்கும் நிலைமையின் தன்மையினை அறிந்துக் கொள்ளவும், அவ்வாறு அறிந்துக் கொண்டு ஒவ்வொரு மனிதனின் இதயமும் ஆவலுடன் எதிர்நோக்கும் உண்மையான நல்லதை நோக்கி எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதையும் அறிந்துக் கொள்ள முடியும். அந்த உண்மையான நல்லது என்பது தனி ஒரு மனிதனுக்குரியது அல்ல, ஒரு குழுவினைச் சேர்ந்த மனிதர்களுடையதும் அல்ல மாறாக ஒட்டு மொத்த மனித குலத்திற்கே உரியதாகும்.

ஆனால் மக்கள் அவர்களால் கற்பனை செய்ய முடிகின்ற அனைத்தையும் உருவாக்குகின்றார்கள், ஒன்றைத் தவிர. தவறான செய்கைகளால் அவர்களது வாழ்க்கையின் துயரத்தன்மையை கூட்டிக்கொண்டு இருக்கும் நிலையை சற்று நிருத்துவதனைத் தவிர அவர்கள் அனைத்தையும் செய்கின்றனர். அத்தவறான செய்கைகளை செய்யாமல் நிறுத்தி யோசிப்பதே அவர்களை அவர்களது நிலையில் இருந்து காப்பாற்றக் கூடிய ஒன்றாகும்.

மக்கள் அவர்களது வாழ்வின் துயரத்தன்மையை உணருகின்றனர், அதில் இருந்து விடுபடவும் அவர்களால் இயன்ற அனைத்தையும் செய்கின்றனர். ஆனால் எந்த ஒன்று அவர்களின் வாழ்வினை எளிதாக்குமோ அந்த ஒன்றினை அவர்கள் செய்வதற்கு மறுக்கின்றனர்...அந்த ஒன்றினைச் செய்யுங்கள் என்ற அறிவுரையும் வேறு எதனைக் காட்டிலும் அவர்களுக்கு எரிச்சலூட்டுகின்றது.

நாம் வழி தொலைந்து விட்டோம் என்பதில் சந்தேகம் இருக்குமானால், நாம் எந்தளவு பாதை மாறி இருக்கின்றோம் என்பதையும் எந்தளவு ஆழமாக நமது துயரம் இருக்கின்றது என்பதையும் நமக்கு சந்தேகமின்றி தெளிவாக நிருபித்துக் கொண்டு இருக்கின்றன, "முதலில் நம்மை நாம் நின்று சரி பார்ப்போம்" என்ற அறிவுரைக்கு கிட்டும் பதில்கள்.

இவையே நிரூபிக்கின்றன நாம் எந்தளவு பாதை தவறி இருக்கின்றோம் என்று.

முற்றும்...!!!

பி.கு:

இது இரசிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் கட்டுரையான 'Three Parables' என்பதன் ஒரு பகுதியின் எனது தமிழ் மொழிபெயர்ப்பே ஆகும்.

முந்தையப் பதிவுகள் : 1 | 2

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு