தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன...!!!
 
முதல் மதிப்பெண்கள் பெற்றோர், மாணவ மாணவியர்களின் தேர்ச்சி விகிதங்கள், மாவட்டவாரியான தேர்ச்சி விகிதங்கள் ஆகியவைகளைப் பற்றிய கருத்துக்களும் பாராட்டுக்களும் விவாதங்களும் எங்கும் நிச்சயம் நடைப்பெற்றுக் கொண்டே இருக்கக் கூடிய ஒரு தருணம் தான். கூடவே அன்றைய பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளிக்கூட நினைவுகளையும் தாங்கள் தங்களது மதிப்பெண்களைப் பெற்ற தருணங்களையும் சிறிதே அசைப் போட்டுக் கொள்ளும் தருணமும் தான்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இன்றைய பள்ளி ,மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை நோக்கி கனவுகளுடனும், அன்றைய பள்ளி மாணவர்கள் தங்களது கடந்த காலத்தை பெருமூச்சுடனான நினைவுகளுடனும் கண்டுக் கொண்டு இருக்கும் ஒரு தருணம். இதில் நாம் அந்த எதிர்காலத்திற்கான கனவுகளையும் சரி பெருமூச்சினை விட வைக்கும் நினைவுகளையும் சரி கண்டோம் என்றால் அவற்றில் ஆயிரம் ஆயிரம் விடயங்கள் பொதிந்து இருக்கும். நிச்சயம் அவைகள் முக்கியமானவைகள் தாம்...!!!

இத்தருணத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சிலருடன் ஒரு பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு சென்ற பொழுது நிகழ்ந்த நிகழ்வினை இங்கே கூற விரும்புகின்றேன்.

நான் காமராஜர் பிறந்த ஊரினைச் சேர்ந்தவன். வேறு எந்த பெருமையும் பெரிதாக இல்லாத நிலையில் "காமராஜர் எங்க ஊரு தெரியுமாடே.." என்றே பெருமைப் பேசித் திரிந்தவர்களும் ஒருவன். பெருமைப் பேசுவதைத் தவிர காமராஜருக்காக வேறு ஏதாவது செய்து இருப்போமா என்றால் சந்தேகமே.

ஆனால் ஒன்றை மட்டும் செய்துக் கொண்டு இருந்தோம்...தொடர்ந்து 25 வருடங்களாக அரசு பள்ளித் தேர்வுகளில் மாவட்டங்களின் தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்திலே முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருந்தோம்.

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அந்த சாதனையைக் குறித்து மாவட்டத்தில் அனைவருக்கும் ஒருவித பெருமை இருக்கத் தான் செய்தது. "நம்ம உண்மையிலேயே அவ்வளவு நல்லா படிக்குறோமா?" என்றே சந்தேகம் மனதினில் இருந்தாலும் வருடங்கள்தோறும் வந்த தேர்வு முடிவுகள் சாதனைக்கான வருடத்தினைக் கூட்டிக் கொண்டே செல்ல வேறு முடிவிற்கு வர இயலவில்லை.

இந்நிலையில் தான் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சிலருடன் ஒரு பள்ளியில் விழா ஒன்றிற்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. பயண தூரம் அதிகமாக இருந்ததால் மெதுவாக அவர்களிடம் இத்தலைப்பினைப் பற்றி பேச ஆரம்பித்தேன்.

"ஐயா...நம்ம மாவட்டம் மட்டும் எல்லா வாட்டியும் தேர்ச்சி விகிதத்தில முதலா வருதே...அது எப்படிங்கையா" என்றே ஆரம்பித்தேன்.

"அது ஒண்ணும் இல்லடே...நம்ம ஊர்காரங்களுக்கு படிப்புதேன் எல்லாம்...வேற வழி கிடையாது...மற்ற மாவட்டத்துல எல்லாம் வயலு...விவசாயம் அப்படி இப்படின்னு பொழைக்க வழி இருந்துச்சி...ஆனா நம்ம ஊரு பக்கம் படிச்சாத்தான் பொழைக்க வழி...அதுனால நம்ம ஊரு பக்கம் பெரியவங்க எல்லாம் நெறைய பள்ளிக்கூடத்த கட்டினாங்க...படிக்க வரவனும் ஒழுங்கா படிச்சான்...வாத்தியார் அடிச்சாலும்..சரி அடி வாங்கியாவது படிக்கலாமே அப்படின்னு இருந்தான்...ஆனா மற்ற ஊர்ல வாத்தியார் அடிச்சாருனா...அவன் என்னை என்ன அடிக்குறது அப்படின்னு கோச்சிக்கிட்டு அவன் அவன் வயலுல போயி வேல பார்க்க ஆரம்பிச்சுடுவானுங்க...அதனால நம்ம மாவட்டம் மற்ற மாவட்டத்த விட நல்ல மதிப்பெண்களையும் தேர்ச்சி விகிதத்தையும் தந்துச்சி...அப்படியே தொடர்ந்து கொஞ்ச வருசமா அப்படியே முதல் இடத்துல இருந்ததால அதுவே ஒரு இலக்கா மாறிடுச்சி...புதுசா வர வாத்தியாரும் "முன்னாடி இருந்த வாத்தியார் காலத்துல இருந்த சாதனை நம்ம இருக்கும் போது போச்சினா நல்லா இருக்காது..அதுனால நல்லா சொல்லித் தரனும்" அப்படின்னு நெனச்சி உழைக்க தொடர்ந்து முதல் இடத்துல இருக்கோம்...அவ்வளவு தாம்டே...மற்றபடி வேற ஒண்ணும் கெடையாது...ஆனா இனியும் இருப்போமானு தெரியாதுடே..." என்றார்.


"ஏன்யா அப்படி சொல்றீங்க..?" என்றேன்.

 
"பின்ன என்னடே...இப்ப எல்லாம் எவன் படிப்பையும் வாத்தியாரையும் மதிக்குறான்...படிப்ப வியாபாரமா பாக்குறான்...சொல்லிக்கொடுக்குற வாத்தியார பசங்கள எப்படியாச்சும் கசக்கிப் பிழிஞ்சி நூத்துக்கு நூறு எடுக்க வைக்குற இயந்திரமா பாக்குறான்...முன்னாடி எல்லாம் படிக்காம இருந்து இருந்தாலும் படிப்போட மதிப்பு தெரிஞ்சி ஊரு முழுக்க பள்ளிக்கூடம் கட்டி விட்டாங்க...ஆனா இப்ப அந்த பள்ளிகூடத்துல எல்லாம் படிச்சவன் தான் மேல ஒக்காந்துக்கிட்டு படிப்ப வித்துகிட்டு இருக்கான்...படிக்காதவனுக்கு தெரிஞ்ச படிப்போட அருமை படிச்சவனுக்கு தெரியலையே...இப்ப கூட எங்களுக்கு சொல்லிக் கொடுத்த வாத்தியார பார்த்தோம்னா மரியாதையோட தான் பேசுவோம்...ஆனா இப்ப எப்படிடே நெலம இருக்கு...வாத்தியாரும் பையனுமே சேர்ந்து தண்ணி அடிக்குறான்...அப்புறம் எப்படிடே வாத்தியார பையன் மதிப்பான்...அவன் சொல்லிக் கொடுக்குறத அவன் கேப்பான்? எல்லாத்தையும் கெடுத்து குட்டிச் சுவராக்கிப் புட்டானுவ...பையனுங்களுக்கு சொல்லிக் கொடுக்கணும் அப்படின்னு எவன்டே இப்ப வாத்தியார் வேலைக்கு வரான்...எல்லாவனும் வேற வேல கெடைக்காம வாத்தியாரா வரான்...இவன் எப்படி ஒழுங்கா பாடத்த சொல்லிக் கொடுப்பான்...இவன் சொல்லிக் கொடுக்க நெனச்சாலும் மேல இருக்குறவன் எனக்கு நூத்துக்கு நூறு கொடு அப்படினுல கேக்குறான்...இதுல எங்க போயி பையன புரிஞ்சிகிட்டு சொல்லிகுடுக்குறது. போதாக்குறைக்கு இந்த சினிமா வேற...முன்னாடி எல்லாம் எல்லா வேலையையும் முடிஞ்சதுக்கு அப்புறமா சாயங்கால நேரத்துல என்னிக்காச்சும் தான் இந்த கூத்து கீத்துன்னு நடக்கும்...அதுவும் பொழுதுபோக்குன்னு தான்...ஆனா இப்ப பாரு...எல்லாமே இந்த சினிமாவும் சினிமாக்காரனுங்களும் தான்...இவன் படிக்குறதே நாலு காசு சம்பாதிச்சி சினிமா பார்க்கத்தான் போலல இருக்கு...அப்படில இப்பலாம் இருக்கானுங்க...காலங்காத்தாலையே சினிமா கொட்டாயிலல இவனுங்க போய் நிக்குரானுங்க...ஆள்றதும் சினிமாக்காரன்...பள்ளிக்கூடத்துல ஏதாவது நிகழ்ச்சினா அங்கேயும் சினிமாக்காரன்...அவனுக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம்...இல்லைனா இவனைப் பார்த்தா அந்த பையனுங்க என்ன கத்துப்பானுங்க அப்படின்னு எவனாவது கேட்டானா...எவனுக்கும் அக்கறை கிடையாது...அவன் அவனுக்கு அவன் பொழப்பு ஓடணும்...அப்புறம் எப்படி பையன் ஒழுங்கா இருப்பான்..இந்தா நம்ம ஊர்லையே வாத்தியார ஒரு ஒன்பதாப்பு படிக்குற பையன் கத்தியாலல குத்தி இருக்கான்...இன்னும் கொடுமை வகுப்புலயே கஞ்சா அடிச்சி மாட்டி இருக்கானுங்க...இது எல்லாம் நல்லதுக்கா...ஆனா இத பத்தி எல்லாம் கவலைப் படாம ஒரு மக்கம் அரசாங்கமே அவன குடிக்க சொல்லிக்கிட்டு இருக்கு...இன்னொரு பக்கம் வெறும் மதிப்பெண் மட்டும் எடுக்குற பிராய்லர் கோழியா அவன இந்த பள்ளிக்ககூடங்கள் மாத்திகிட்டு இருக்கு...பையன் சிந்திக்கவே கூடாது அப்படினே படிப்ப சொல்லிக் கொடுத்துகிட்டு இருக்கானுங்க...அதுலையும் குறிப்பா இந்த நாமக்கல் பக்கம் இருக்குற பள்ளிக்கூடத்தை பத்தி கேள்விப்பட்டு இருப்ப...இருக்குறதுலையே மோசமான அந்த பள்ளிக்கூடங்கள்ல தான் எல்லா பெற்றோரும் அவங்க பசங்கள வெறும் மதிப்பெண்ணுக்காக சேர்க்க நெனைக்கிறாங்க...பெத்தவங்களே அப்படி நினைக்கும் போது வியாபாரமா கல்விய விக்குறவனுக்கு என்ன கவலை...இந்த நெலமைல எல்லா ஊருமே அவனுங்கள போலத்தேன் மாறப் பாக்குதுங்க...அதனால தரமான கல்வியோ இல்ல ஆசிரியரோ இல்லாம தான் போகும்...அதனால...அந்த நிலைல...தொடர்ந்து இந்த சாதனை எல்லாம் நம்மகிட்ட இருக்கும்னு சொல்ல முடியாதுடே...ஒழுங்கான கல்வியே இருக்காதாம் அப்புறம் என்ன இதுக்கு சாதனை கழுத குதிரைன்னு கேக்குறேன்..." என்றவாறே அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்த அவருடைய கூற்றில் இருந்த விடயங்களைக் குறித்து சிந்தித்தவாறே என்ன செய்யலாம் என்றே யோசிக்க ஆரம்பித்தேன்.


ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது...படிக்காதவங்களுக்கு தெரிஞ்சி இருந்த படிப்போட அருமை படிச்சவங்களுக்கு சுத்தமா தெரியல...அவங்களை பொருத்தவரை கல்வினா வியாபாரம்...அறிவுனா மதிப்பெண். அவ்வளவே...!!!


இந்நிலையில்...


"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"


என்பன போன்றவை வெறும் வார்த்தைகளின் சேர்க்கைகளாகவே இருக்குமே தவிர அவற்றில் யாதொரு அர்த்தமும் இருக்கப்போவதில்லை....இன்றைய இளைய சமூகம் ஆர்வமாய் பெற்று இருக்கும் மதிப்பெண்களைப் போன்றே...!!!


சிந்திக்க வைப்பதே கல்வி...!!!
நற்பண்புகளையும்...மனிதத்தையும் வளர்ப்பதே கல்வி...!!!
உதவும் மனப்பாங்கையும் சகோதரத்துவத்தையும்...நல்ல சமூகத்தை கட்டமைக்கும் கடமை உணர்ச்சியையும் வளர்ப்பதே கல்வி...!!!

இன்று நாம் கற்பது கல்வி அல்ல...வெறும் புத்தகங்கள்!!!

2 கருத்துகள்:

நல்ல பகிர்வு.

இப்ப எல்லாம் எவன் படிப்பையும் வாத்தியாரையும் மதிக்குறான்...படிப்ப வியாபாரமா பாக்குறான்...சொல்லிக்கொடுக்குற வாத்தியார பசங்கள எப்படியாச்சும் கசக்கிப் பிழிஞ்சி நூத்துக்கு நூறு எடுக்க வைக்குற இயந்திரமா பாக்குறான்..

முற்றிலும் உண்மை.

Excellent article anna...

Namakkal is not only famous for POULTRY, SCHOOLS(like poultry)too..

Every year they produce state rankers, the fact behind that is that...

the parents from other districts who want their son or daughter(the student who already excel in studies) to become a state ranker, admits them in the schools at namakkal, erode area due to their advertisement.

Some times who becomes a top ranker from other district, that credits goes to that schools.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு