முந்தையைப் பதிவு

விசுவாச எழுச்சிக்குப் பயன்படும் புனித தோமா வழிக் கிருத்துவம்:

புனித தோமாவைப் போன்று மக்கள் ஆட்சிக் கால மக்கள் எதையும் மூடத்தனமாக நம்பாமல், அறிவுக்கேற்ற நிலையில் புரிந்துக் கொள்ள முயலுகின்றார்கள். இதனால் அறிவுக்கேற்ற நிலையில் விளக்கப்படாத எதையும் மூடத்தனமாக ஏற்றுக் கொண்டு நம்ப மக்கள் ஆட்சிக்கால மக்கள் தயாரில்லை. புனித தோமா இந்தியா வந்த பொழுது, இந்தியா அறிவுக்கேற்ற கேள்விகள் கேட்கும் நிலையிலேயே இருந்ததை இந்திய ஆன்மீக வரலாறு நமக்குக் காட்டுகிறது.

ஆன்மீகத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாத வினோத நிலை இந்தியாவில் இருந்தது. அது என்ன? பொதுவாக ஆன்மீகக் கொள்கை என்பது கடவுளை நம்பும் கொள்கை என எண்ணப்படுகின்றது. இந்தியாவைப் பொறுத்த அளவில் அந்த எண்ணம் தவறு என்பதைக் காட்டுகிறது.

கடவுளை அறியா பௌத்த மதமும், கடவுளை மறுக்கும் சமண மதமும் இந்தியாவில் தோன்றி வளர்ந்த பெருமைக்குரிய மதங்கள் ஆகும். இவை இரண்டும் வழிபாட்டோடு நிற்காமல் அவற்றிற்குரிய தத்துவங்களோடு கூடிய மதங்களாக வளர்ச்சி பெற்று, ஏறத்தாழ 500 ஆண்டுகள் இந்தியர் உள்ளங்களில் ஊடுருவி வளர்ந்திருந்தன.

வழிபாடு உலகில் மனிதர் எங்கெங்கு வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் இருந்திருக்கிறது. ஆனால் மதங்கள் அனைத்தும் ஆசியாக் கண்டத்தில் மட்டுமே உருவாகி வளர்ந்துள்ளன. மதங்கள் அனைத்தும் அடிப்படையில் 5 கேள்விகளுக்கு பதில் கொடுப்பனவாக இருக்கின்றன.

1. பிறக்கும் முன் நான் இருந்தேனா?
2. இருந்தால் எவ்வாறு இருந்தேன்?
3. இறந்தபின் நான் இருப்பேனா?
4. இருந்தால் எவ்வாறு இருப்பேன்?
5. இந்த நான்கு விடைகளின் அடிப்படையில் இந்த உலகில் நான் வாழ வேண்டிய முறை என்ன?

மேலேயுள்ள ஐந்து கேள்விகளுக்கும் கடவுளை மறுக்கும் சமண மதம், பிறவிச் சுழற்சிக் கொள்கையின் அடிப்படையில் பதில் கொடுக்கிறது. சமண சமயத்தின் பிறவிச் சுழற்சிக் கொள்கையையே பௌத்தமும் மேற்கொண்டது. இந்த பிறவிச் சுழற்சிக் கொள்கை இந்தியாவில் தோன்றிய இந்திய மதங்களுக்கு மட்டுமே உரிய ஒரு தனிச் சிந்தனை.

'இதனால் கடவுள் இருக்கின்றார்' என்று கூறிய உடனேயே இவ்வாறு கூறுகிறவரை மூட நம்பிக்கையாளர் என எண்ணி நகைக்கும் நிலை இந்தியாவில் இருந்தது. இதனால் கடவுள் இருக்கின்றார் என்பதை கடவுளை அறியா அவர்களுக்கு அறிவியல் வழியில் விளக்க வேண்டிய இன்றியமையாமை இந்தியாவில் ஏற்படுகிறது. இதை விளக்கிய பின்னரே, கடவுள் மனிதனாக இந்த உலகில் பிறந்து, மனிதனுக்கு மீட்பைக் கொடுக்கிறார் என்பதை அறிவியல் வழியில் நிலை நாட்ட முடியும்; நிலை நாட்ட வேண்டும்.

"கடவுள் இருக்கின்றார்" என்பதையும் "கடவுள் மனிதனாகப் பிறந்து, மீட்பை நிலைநாட்டி இருக்கின்றார்" என்பதையும் நிலைநாட்ட எவ்வளவு முயற்சியும், பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்தலும் தேவை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டிய கடமை இன்றைய நமக்கு ஏற்படுகிறது.

கடவுளை அறியா பௌத்த சிந்தனைக்கும், கடவுளை மறுக்கும் சமண சிந்தனைக்கும் அடிப்படைச் சிந்தனையாக, தமிழ் நாட்டில் தோன்றிய ஆசீவக சிந்தனை இருப்பதாக அண்மைக்கால ஆராய்ச்சியாளர்கள் உரிமை பாராட்டுகின்றார்கள். அதற்குரிய காரணகாரியங்களையும் விளக்குகின்றார்கள். இது எண்ணிப்பார்க்க வேண்டிய புதிய கோணமாக இருக்கிறது. இதனால் இந்திய ஆன்மீகச் சிந்தனைக்கு தமிழர் சிந்தனையே அடிப்படையாக இருக்கிறதென்பது விளங்குகிறது.

ஆன்மீகமாகிய ஆற்றின் இரு கரைகள்

ஆன்மீகமாகிய ஆற்றின் இருகரைகளாக ஆத்திகமும் நாத்திகமும் விளங்குவது இயல்பான ஒன்றேயாகும். அந்த இயல்பின்படியான ஆன்மீக வளர்ச்சிப் படிகளை நாம் தமிழ் நாட்டில் பார்க்க முடியும். ஆத்திகரான தவத்திரு குன்றக்குடி அடிகளாரும், நாத்திகரான தந்தை பெரியாரும் இணை பிரியா நண்பர்கள் மட்டுமல்லாது, இருவரும் ஒரே மேடையில் இணைந்து பேசிய பெருமை தமிழ் உலகத்தின் பெருமையாகும். இருவரும் ஒரே குறிக்கோளில் இணைந்தவர்கள். அதுவே சமுதாய நன்மை; மனித நேயம் ஆகும்.

தமிழ்நாட்டைத் தவிர மற்ற நாடுகளில் இத்தகைய, இணைப்பைப் பார்த்தல் அரிது. இதைப்போன்றே அறிவியலும் ஆன்மீகமும் இணைந்து செல்ல வேண்டும் என்பது அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் கருத்து.

"Science Without Religion is Lame
Religion Without Science is Blind"

என்னும் ஐன்ஸ்டீன் கருத்து உருவாவதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து நோக்கிச் சிந்தித்த பெருமையுடையது தமிழ்நாடு. உலகில் தமிழ் மொழியில் மட்டுமே அறிவியலும் ஆன்மீகமும் இணைந்து "ஆன்மவியல்" என்னும் கல்வி வளர்ந்து உள்ளது. இதில் அறிவியல், மெய்யியல், இறையியல், ஆணவவியல் ஆகிய நான்கும் அடங்கி இருக்கின்றன.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.
2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்
மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி