முந்தையப் பதிவு

பழைய ஏற்பாட்டு ஆவியும் புதிய ஏற்பாட்டு ஆவியும்:

பழைய ஏற்பாட்டிலுள்ள யோவேல் தீர்க்கதரிசி கூறியுள்ளபடி, புதிய ஏற்பாட்டில் அபோஸ்தலர் இரண்டாம் அதிகாரத்தில் பரிசுத்த ஆவி இறங்கியதாக இயேசு கிருத்துவின் சீடர்கள் நம்பியமையை (அப்.2: 16-21) நாம் பார்க்கின்றோம்.

"தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது." (அப்.2: 16)

யோவேல் கூறி இருந்த ஆவிக்கும் இங்கே இறங்கிய ஆவிக்கும் உள்ள வேற்றுமையை சீடர்கள் உணர முடியாமல் போனமைக்குக் காரணம், இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை உணராமையும், இயேசு கிருத்து யூதா கோத்திரத்தில் பிறந்த இசுரவேலர் எதிர்பார்த்த யூத அரசனாகிய மேசியா என நம்பியமையுமேயாகும்.

பழைய ஏற்பாட்டு ஆவி, அழித்தல் தொழிலைச் செய்யுமாறு தூண்டுவது என்பதை, பழைய ஏற்பாட்டில், கிதியோன், சிம்சோன் போன்றவர்கள் ஆவியைப் பெற்றவுடன் செய்த கொலைகளால் நாம் அறிகின்றோம். அவ்வாறே யோவேல் கூறிய தீர்க்கதரிசனத்திலும்,

"உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; " (யோவேல் : 3: 10)

"யூதா புத்திரரின் தேசத்திலே குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்குச் செய்த கொடுமையினிமித்தம் எகிப்து பாழாய்ப்போகும்; ஏதோம் பாழான வனாந்தரமாகும்." (யோவேல் : 3: 19)

"நான் தண்டியாமல் விட்டிருந்த அவர்களுடைய இரத்தப்பழியைத் தண்டியாமல் விடேன்; கர்த்தர் சீயோனிலே வாசமாயிருக்கிறார்." (யோவேல் : 3: 21)

என்னும் பகுதிகள் அவர்களைக் கொலை செய்யத் தூண்டும் பகுதிகளாகக் காட்டப்படுகின்றன.

ஆனால் பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய ஆவி கொலை செய்யும் ஆவி அன்று என்பதை நாம் அறிவோம்.

இந்த இரண்டு ஆவிகளுக்கும் உள்ள வேற்றுமையை இயேசு கிருத்து தெளிவாகத் தம் சீடர்களிடம் விளக்கியமையை நாம் அறிவோம்.

"அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள். அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி, மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார்." (லூக்கா 9: 54- 56)

இதில் பழைய ஏற்பாட்டு ஆவிக்கும் புதிய ஏற்பாட்டு ஆவிக்கும் உள்ள வேறுபாடு தெளிவாக விளக்கப்படுகிறது.

பழைய ஏற்பாட்டு ஆவி அழிக்கும் வேலையைச் செய்கிறது; புதிய ஏற்பாட்டு ஆவி இரட்சிப்பின் வேலையைச் செய்கிறது என்பதில் ஐயம் இல்லை.

"அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது." (அப்போஸ்தலர் 2:2-3)

1.பலத்தக்காற்று
2. முழக்கம்
3. வீடு முழுவதையும் நிரப்பிற்று
4. அக்கினிமயமான நாவுகள்
5. ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தது

இது இயற்கையை மீறிய செயல். இதை மனிதன் உருவாக்க முடியாது. இது கடவுளின் செயல்; யூதர்கள் யோவேலின் வழி நடக்கப் போவதாக எதிர்பார்த்தபடியே இது நடந்ததாக பேதுரு யூதமுறைப்படி அவருடைய நம்பிக்கையில் விளக்குவதை இதே அதிகாரத்தின் 19 முதல் 21 வரையிலான வசனங்கள் காட்டுகின்றன.

பரிசுத்த ஆவியானவர் வரும் பொழுது இங்கே பேதுரு விளக்கியபடியே நடக்கும் என்று இயேசு கிருத்து அவருடைய சீடர்களுக்குக் கூறி இருப்பதை மத்தேயு 24 ஆம் அதிகாரத்தில் 29 முதல் 31 வரையுள்ள வசனங்கள் வழி நாம் அறிகின்றோம்.

"அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்." (மத். 24: 29-31)

இந்த இடத்தில் இயேசு கிருத்து கூறி இருப்பதும், பரிசுத்த ஆவி வரும் பொழுது நடந்த நிகழ்ச்சிகளும், மனிதரால் உருவாக்கக்கூடிய நிகழ்ச்சிகள் அல்ல. இறைத்திட்டதின் செயல்பாடு. கடவுள் பரிசுத்த ஆவியாக வந்த இரண்டாம் வருகையின் நிகழ்ச்சிகள். அனுபவப் பூர்வமாகக் காணப்படக் கூடியவை.

"அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்." (மத். 24:40)

போன்ற வசனங்கள் இவற்றை வெளிப்படுத்துகின்றன.

பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படும் அனுபவமுடையவர்களுக்கு இவற்றைப் புரிந்து கொள்ளுவதில் எந்தச் சிக்கலுக்கும் இடம் இல்லை.

யோவேல் கூறி இருக்கும் ஆவி வேறு, இயேசு கிருத்து விளக்கிய இரண்டாம் வருகையின் ஆவி வேறு என்பதையும் நாம் அறிவோம்.

தொடரும்...!!!

பி.கு:
1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.
 
2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்
மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி