ஒரு சிறு கதையில் இருந்தே ஆரம்பிப்போம்.
 
ஒருவன் ஒரு சிறிய நிறுவனத்தில் பணி புரிந்துக் கொண்டு இருந்தான். அவனது வீட்டில் இருந்து அவனது நிறுவனத்திற்கு செல்லும் வழியில் ஒரு 5000 பேர் கொண்ட சிறிய கிராமம் இருந்தது. அந்த கிராமத்திற்கு பேருந்து வசதி அரசாங்கத்தால் செய்துத் தரப்பட்டு இருக்கவில்லை. அவனோ தினமும் அவனது சொந்த வாகனத்திலேயே வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு சென்று வந்துக் கொண்டு இருந்தான்.
 
அவ்வாறிருக்க ஒரு நாள் அவன் அவனது அலுவலகத்திற்கு அவன் சென்றுக் கொண்டிருக்கும்  ஒரு முதியவர் உதவிக் கோரி நிற்க அவரின் அருகே வண்டியை நிறுத்தி "என்னங்கையா என்னாச்சி?" என்றே வினவுகிறான்.
 
அதற்கு அந்த பெரியவர் "இல்ல தம்பி...சந்தையில இருந்து இப்ப தான் திரும்பி வரேன்...அந்த கிராமம் தான் எங்க சொந்த ஊரு...அதுக்கு தான் போயிக்கிட்டு இருக்கேன்...ஆனா அங்க போக பேருந்து வசதி இந்த நேரத்துக்கு கிடையாது...ரொம்ப தூரம் வேற போகணும்...நீங்க அந்த வழியாத் தானே போறீங்க...என்ன கொஞ்சம் அங்க இறக்கி விட்டுறீங்களா.." என்றே கேட்க
 
சரி நம்மால் இயன்ற உதவி தானே என்று எண்ணியவாறே "சரிங்கையா...ஏறிக்கோங்க" என்று கூறியவாறே அவரை ஏற்றிக் கொண்டு அவரது கிராமத்தில் அவரை கொண்டு சேர்த்து விடுகின்றான். பெரியவரும் நன்றிக் கூறி விடைப் பெற்றுக் கொள்கின்றார்.
 
அடுத்த நாளும் அதே வழியில் வரும் பொழுது அதே இடத்தில் அதே பெரியவரைக் காணுகின்றான். இம்முறை சற்று சுற்றியும் பார்க்கும் பொழுது அப்பெரியவரைப் போன்றே பலரும் கிராமத்திற்குச் செல்ல காத்திருப்பதைக் காணுகின்றான். "ஐயோ..பாவம்...அவ்வளவு தூரம் இவர்கள் எங்கனம் நடந்துச் செல்வார்கள்...நாம் தனியாகத் தானே போகின்றோம்...உதவினால் என்ன தவறு..." என்று எண்ணியவாறே மீண்டும் உதவிக் கேட்ட அந்தப் பெரியவரை அழைத்துக் கொண்டு அவரை அவரது கிராமத்தில் இறக்கி விட்டுவிட்டு அவனது அலுவலகத்திற்கு செல்கின்றான்.
 
அங்கே அவன் நண்பர்களிடம் அந்த கிராமத்து மக்கள் படும் இன்னலைப் பற்றிக் கூற இயல்பிலேயே உதவும் குணம் படைத்த அவனது நண்பர்களும் உதவ முன்வருகின்றனர்.
 
அடுத்த நாள் அவனும் அவனது நண்பர்களும் பேருந்து வசதி இல்லாது கிராமத்திற்கு செல்ல கடினப்படும் மக்களுக்கு உதவியாக தாங்கள் அலுவலகத்திற்கு செல்லும் பொழுது அவர்களைத் தங்களது வாகனங்களில் ஏற்றிக் கொண்டு அவர்களது கிராமத்தில் அவர்களை இறக்கி விட்டுச் செல்லத் துவங்கினர்.

இவ்வாறே நாட்கள் நகர்கின்றன. அந்த கிராமத்து மக்களுக்கு உதவியவாறே அவனும் அவனது நண்பர்களும் தங்களது 'பிறர்க்கு உதவும் குணநலனை' மேம்படுத்திக் கொள்ள அனைத்தும் நன்றாகவே செல்கின்றது. ஆனால் காலங்கள் நகர நகர அவர்கள் செய்யும் காரியத்தில் ஏதோ பிழை இருப்பதாகவே அவனுக்குத் தோன்றுகின்றது. ஆனால் இன்ன பிழை என்று உறுதியாக கணிக்க இயலாத காரணத்தினால் அவன் தொடர்ந்து உதவிக் கொண்டே இருக்கின்றான். அந்த நிலையில் தான் தொடர்ந்து சில தினங்கள் அவனால் உடல் நலக் குறைவுக் காரணமாக அலுவலகத்திற்கு செல்ல இயலாது போகின்றது. பின்னர் உடல் மீண்டும் நலமாக ஆன பின்பு மீண்டும் அலுவலகம் செல்லும் பொழுது வழியில் அதே முதியவரைப் பார்க்க அவரின் அருகே வண்டியை நிறுத்துகின்றான்.

"என்ன தம்பி...இத்தனை நாளா காணோமே தம்பி உங்கள...என்னாச்சி...ரொம்ப சிரமப்பட்டு போயிட்டோம் நாங்க" என்றவாறே அவனது வண்டியில் அவர் ஏறி அமர, அவனது மனதில் நீண்ட நாட்களாக உறுத்திக் கொண்டு இருந்த பிழை என்னவென்பது அந்நொடியில் அவனுக்கு புலனானது. அதனை எண்ணிக் கொண்டே பெரியவரை அவருடைய ஊரில் இறக்கி விட்டு விட்டு அவனது அலுவலகத்திற்கு சென்று நண்பர்களைக் காணுகின்றான். அவர்களும் அவனைப் போன்றே ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பது அவனுக்குத் தெரிய வருகின்றது. உதவுவது நல்லது தான் இருந்தும் அவர்கள் செய்யும் உதவியில் அடிப்படையான ஒரு பிழை இருப்பதாய் அவர்களும் உணர்ந்து இருக்கின்றனர். ஆனால் அவன் தெளிவடைந்தது போல் அவர்கள் இன்னும் தெளிவடையாமலே இருக்கின்றனர்.

அதனைக் கண்ட அவன் சிரித்தவாறே பேச ஆரம்பிக்கின்றான்...

"நம்ம உதவி பண்ணல டே...உதவியா ஆரம்பிச்ச ஒரு விசயத்த வேலையாவே பார்த்துகிட்டு இருக்கோம்...அது தான் பிரச்சனை...பள்ளிகூடத்துல ஒருத்தன் பேனா கொண்டு வரலைனா நம்மகிட்ட இருக்குற இன்னொரு பேனாவ கொடுத்து உதவுறது உதவி...ஆனா யார் யார்ட எல்லாம் பேனா இல்ல...என்கிட்டே உங்களுக்கு உதவ பேனா இருக்கு...தேவபட்டவங்க வந்து வாங்கிக்கோங்க அப்படின்னு உதவிய முழுநேரமா பண்றது உதவி இல்லடே...அது வியாபாரம்...நமக்கும் சரி அவனுக்கும் சரி இலாபம் வராத வியாபாரம்...நீ இருக்குற வரைக்கும் அவன் பேனாவே வாங்க மாட்டான்...இல்ல அவன்ட ஏன் பேனா இல்லைனே யோசிக்க மாட்டான்...அது போல தாம்டே இப்ப நம்ம பண்றதும்...உதவியா ஆரம்பிச்ச ஒரு விசயம் இப்ப நம்ம வேலையாவே மாறிடுச்சி.

நெனச்சி பாருங்கடே...இன்னிக்கு நம்ம எல்லாவனும் வரல இல்ல வேற இடத்துக்கு போயிட்டோம் அப்படினா அந்த மக்கள் என்னடே பண்ணுவாங்க...மறுபடியும் பழைய மாதிரியே தான இருப்பாங்க...அப்படினா நம்ம பண்றது உதவியாடே...உண்மைய சொல்லனும்னா நம்ம அவங்களுக்கு உதவி பண்ணல துரோகம் தான் பண்றோம்...!!!

நெனச்சி பாரு...இப்ப நம்ம வேலைய நம்ம சரியா செய்யலைனா நம்ம அலுவலகத்தில நம்மள வேலைக்கு வச்சி இருப்பானுங்களா இல்லையா...நிச்சயம் தொரத்தி விட்டுருவானுங்க...சரி தான...இப்ப யோசிச்சி பாரு....5000 பேரு இருக்குற ஊருக்கு அதுவும் அடிக்கடி சன நடமாட்டம் இருக்குற ஒரு இடத்துக்கு பேருந்து வசதிய ஏற்படுத்தி தாரது யாரோட வேலடே...நம்ம வேலையா இல்ல நம்ம தேர்ந்து எடுத்து இருக்குற அரசாங்கத்தோட வேலையா...அரசாங்கத்தோட வேலைதான...அதுக்குத் தான நீயும் வரி கட்டுற நானும் வரி கட்டுறேன்...அந்த ஊர் மக்களும் வரி கட்டுறாங்க...காசையும் கொடுத்துபுட்டு அந்த காச வச்சி எல்லாருக்கும் நல்லது பண்ண ஒருத்தனை தேர்ந்தும் எடுத்துபுட்டு, அதுக்கப்புறமும் வேல நடக்கலைன்னு நம்மளே அந்த வேலைய பாக்குறது அப்படிங்கிறது சரியா?

அப்புறம் எதுக்கு ஒருத்தன தேர்ந்து எடுத்து அவன்ட காசையும் கொடுக்கணும் அப்படிங்கிறேன்...கூட்டி கழிச்சி பார்த்தா அவன் செய்ய வேண்டிய வேலையத்தான் நம்ம உதவியா பண்ணிக்கிட்டு இருக்கோம்...அவன் கடமைய அவன் செய்யாம நம்ம எல்லாரோட காசையும் சுருட்டிகிட்டு போறதுக்குத்தான் நம்மோட இந்த சேவை பயன்படுது...கடைசி வரைக்கும் அவன் அவனோட கடமைய செய்யவே மாட்டான்...ஆனா அவன கேள்வி கேட்டு அவர்களோட உரிமைய பெற வேண்டிய மக்களோ...அவர்களுக்கு வேண்டியது நம்ம மூலமா கிடைக்குது அப்படின்னு அமைதியாவே இருந்துருவாங்க...நம்ம இல்லைனா நம்மள போலவே வேற யாராவது வருவானுங்க அப்படினே காத்துக் கிடந்து காலத்த கடத்திருவாங்க...கடைசி வரைக்கும் அரசாங்கம் அதனோட வேலைய செய்யல அபப்டின்னு அத மட்டும் கேள்வி கேக்க மாட்டானுங்க...!!!

தப்புடே...கடலுக்கு பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்து மக்கள் பசியால செத்துகிட்டு இருக்கும் போது மீன கொடுத்து அவங்கள காப்பாத்தலாம்...ஆனா தொடர்ந்து மீன நம்மளே கொடுத்துகிட்டு இருந்தோம்னா அது அந்த மக்கள நம்மள சார்ந்து இருக்க செய்யுற ஒரு செயல்டே...அவன் சுதந்திரமாவே இருக்க மாட்டான்...மாறா...அவனுக்கு கடலப் பத்தியும் மீன் பிடிக்கவும் சொல்லிக் கொடுத்தோம்னா...அவன் கடைசி வரைக்கும் மறுபடியும் பசியால சாவுற நிலைமைக்கு போக மாட்டான்...சொந்த கால்ல நிப்பான்...எவன் தயவும் அவனுக்கு தேவை இல்ல...அவன் இன்னும் பல பேருக்கு உதவி பண்ணுவான்...மீன் பிடிக்க கத்து தந்தவனையும் மறக்க மாட்டான்...அது தாம்டே உதவி...பதிலா அவனுக்கு மீனையே தந்துகிட்டு இருந்தோம்னா கடைசி வரைக்கும் அவன அடிமையாவே வச்சிக்கிட்டு இருக்குறதுக்கு சமம்டே...!!!

அத தாம்டே நாம பண்ணிக்கிட்டு இருக்கோம்...ஏன் பேருந்து வசதி இல்ல... ஏன் அரசாங்கம் ஒண்ணுமே பண்ண மாட்டேங்குது அப்படிங்கிற கேள்வி அவனுக்கு வரவே வராத படி நம்ம மறைமுகமா செய்றோம்டே...உண்மையான உதவி அவன சிந்திக்க வைக்கணும்டே...அங்க தான் நாம தப்பு பண்றோம்...ஆனா இனியும் இந்த தப்ப பண்ண வேண்டாம்...நாளைக்கே அந்த மக்கள் கிட்ட போயி அவங்க ஊருக்கு ஒழுங்கான பேருந்து வசதி வர என்ன பண்ணனும்...எப்படி பண்ணனும்...யார கேக்கணும் அப்படிங்கிற விசயத்த எல்லாம் சொல்லலாம்...கூடவே இருந்து எல்லாத்தையும் சரி பண்ணலாம்...அப்படி பண்ணா தான நாம இல்லைனாலும் அந்த மக்கள் கஷ்ட படாம இருப்பாங்க...என்னடே நான் சொல்றது...சரி தான"

என்றவாறே அவன் அவனது பேச்சினை முடிக்க அவனது கருத்தில் இருந்த உண்மையை உணர்ந்த அவனது நண்பர்களும் அவன் கூறியதைப் போல் தங்களால் எவ்வாறு அந்த கிராமத்து மக்களுக்கு நிரந்தர தீர்வினை முறையாக கொண்டு செல்ல முடியும் என்பதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கின்றனர்.

ஒரு மாற்றம் அந்தச் சமூகத்தில் மலர ஆரம்பிக்கின்றது.

நிற்க...!!!

சிறு கதை அப்படின்னு சொல்லி ஆரம்பிச்சது பெரிய கதையாயிடுச்சி. என்ன செய்வது கூற வேண்டிய கருத்துக்கள் அவ்வளவு இருக்கின்றன.

உதவி செய்வது என்பது ஒரு அருமையான குணம்...மனிதத்தின் வெளிப்பாடு...ஆனால் இன்றைய சூழ்நிலையில் நம்முடைய உதவும் குணத்தையே தங்களின் இலாபத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் பெருகி உள்ள நிலையில் உதவி என்றால் என்ன என்பதையும் அதனைச் சுற்றி இருக்கும் அரசியலையும் நாம் நிச்சயம் கண்டாகத்தான் இருக்கின்றது.

மேலே நாம் கதையில் கண்ட நண்பர்கள் அன்னியர்கள் அல்ல...நிச்சயம் நாம் அவர்களுள் ஒருவராக இருக்கக் கூடும்...இயன்றவரை நம்மால் அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தம்முள் வாய்க்கப் பெற்றவர்கள் அனைவரும் அந்த நண்பர்களைப் போன்றே இருப்பர். உதவி செய்ய வாய்ப்பு கிட்டினால் நிச்சயம் உதவி செய்வர்...!!!

இருந்தும்...மேலே நாம் கண்ட கதையில் எவ்வாறு உண்மையாகவே உதவிப் புரிய வேண்டும் என்று எண்ணியே அந்த நண்பர்கள் புரிந்த உதவி, உண்மையான உதவியாக அமையவில்லையோ...அதனைப் போன்றே இன்று நம் சமூகத்தில் தூய எண்ணத்தின் படி பலர் செய்யும் பல சேவைகள் உண்மையான உதவியாக அமையாமல் மாறாக எவருக்கு உதவ வேண்டும் என்றே எண்ணுகின்றார்களோ அவர்களுக்கே பெரும் தீங்காக அமைந்து விடுகின்றது.

இதனைப் பற்றித் தான் நாம் விரிவாக காண வேண்டி இருக்கின்றது...!!!

காணலாம்...!!!

தொடரும்...!!!

பி.கு:
இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும். வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

5 கருத்துகள்:

நாம் உதவி என்று நினைப்பதை மிக சரியான மாறுபட்டகோணத்திலிருந்து அனுகியிருக்கிறீர்கள் நண்பரே !

பசியென்று வருபவனுக்கு நாம் பிடித்த மீனை சமைத்துகொடுப்பதில் தப்பிலை, அது தர்மம் ! ஆனால் நீங்கள் செய்யும் தர்மம் அவனை வாழ்நாள் முழுவதும் காக்காது ! அவனின் பசி அடங்கியபிறகு அவனுக்கும் மீன் பிடிக்கும் வழிமுறைகளை கற்றுவிப்பதுதான் உதவி ! அதுவே அவனுக்கான் வாழ்நாள் பலன் !!

நல்ல கட்டுரை. தொடருங்கள்.

நேரமிருப்பின் என் வலைப்பூவுக்கு வருகைதந்து உங்களின் எண்ணங்களை பதியுங்கள்

நன்றி

saamaaniyan.blogspot.fr

பயன்மிக்க தொடா். தொடா்ந்து எழுதுங்கள்.

very good thinking. i will continue your blog

பயனுள்ள கட்டுரை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

சிந்தனையைத் தூண்டும் கட்டுரை....”எங்கு சேவை அதிகமாக நடக்கிறதோ அல்லது தேவப்படுகிறதோ அங்கு அரசு தன் கடைமையைச் செய்யத்தவறிவிட்டது” என்று அழகாக விளக்கியுள்ளீர்கள் :)

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி