இன்றைய காலத்தில் பிறருக்கு நாம் உதவ வேண்டுமே என்று  நல்லெண்ணத்தில் செய்கின்ற உதவி, உண்மையிலேயே அவர்களுக்கு உதவியாக இருப்பதை விட அவர்களுக்கு மறைமுகமாக கெடுதலையே செய்கின்றது என்றே சென்ற பதிவில் கண்டு இருந்தோம்.

சற்றுப் புதிராக இருக்கும் இந்த விடயத்தினைப் பற்றித் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதனை எளிதாகக் காண ஒரு சிறு எடுத்துக்காட்டினை எடுத்துக் கொள்வோம்,

அரசாங்கப் பள்ளியில் ஒரு ஏழை மாணவி படித்துக் கொண்டு வருகின்றாள். அவளது குடும்ப வருமானமோ மிகவும் குறைவு, இருந்தும் கல்வியின் மீது இருக்கும் ஆவலால் தொடர்ந்து படித்துக் கொண்டு வருகின்றாள். ஏழை மாணவர்களுக்கு உதவ அரசு வழங்கும் இலவச சீருடைத் திட்டம் அவளுக்கு உதவுகின்றது. இந்நிலையில் தரமற்ற சீருடைகளை அரசாங்கம் மாணவர்களுக்குத் தர வெகு விரைவிலேயே அந்த ஆடைகள் கிழியத் துவங்குகின்றன. வேறு ஆடை வாங்கிக் கொள்ள குடும்ப சூழல் உதவாத நிலையிலும் கிழிந்த ஆடையை அணிந்துக் கொண்டு பள்ளிக்கு செல்ல இயலாத நிலையிலும் அந்தப் பெண் தனது படிப்பினை நிறுத்த நேருகிறது. இந்த நிலையில் நல்ல மனம் படைத்த படித்த ஒருவர் அப்பெண்ணின் நிலையைக் கண்டு வருந்தி அந்த பெண்ணின் படிப்பிற்கு உதவும் வண்ணம் புதிய ஆடைகள் வாங்கிக் கொடுத்து உதவுகின்றார். அவருடைய உதவியைப் பெற்ற அந்த பெண்ணும் தொடர்ந்து படிக்க பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்கின்றாள். நிற்க

இங்கே அந்த மனிதர் அந்த பெண்ணின் படிப்பிற்கு அவரால் இயன்ற உதவியினை செய்து இருக்கின்றார்.

இதில் நாம் குறையினைக் கூறுவதற்கு யாதொரு முகாந்திரமும் இல்லை. மனிதம் மிக்க எவரும் இச்செயலையே செய்து இருப்பர். நம்மிடத்து பொருள் அதிகமாக இருக்கின்றது...அதே நேரத்தில் இன்றியமையாத தேவையுடன் சிலர் அல்லல் படுகின்றனர் அந்நிலையில் தம்மிடம் இருக்கும் மிகுதியான பொருளினைக் கொண்டு இல்லாதவர்களுக்கு உதவுவது என்பது மிகவும் சரியானதொரு செயலே. இதில் நாம் குறை கூறுவதற்கு ஒரு காரணியும் கிட்டப் போவதில்லை.

ஆனால் இங்கே தான் நாம் வேறு சில விடயங்களைக் காண வேண்டி இருக்கின்றது...

1) சீருடை கிழிந்து விட்டது எனவே புதிய சீருடை வாங்கித் தந்தாயிற்று...நல்லது, ஆனால் புதிய சீருடை மற்றுமொரு தருணத்தில் கிழிந்துப் போய் விட்டாலோ அல்லது அடுத்த வருடமும் இதே நிலை உருப்பெற்றாலோ மீண்டும் மீண்டும் நாம் புதிய சீருடையினை வாங்கித் தந்துக் கொண்டே இருக்க முடியுமா?

2) ஒரு பெண்ணுக்கு நடந்தது போல் பல்வேறு பேருக்கு நடந்தது என்றால் அனைவருக்கும் புதிய ஆடைகளை வாங்கித் தர முடியுமா?

மேலே உள்ள கேள்விகளுக்கு முடியும் அல்லது முடியாது என்ற இரண்டில் ஒன்றே விடையாக வர முடியும். அவ்விரண்டு விடைகளைப் பற்றியுமே நாம் காண வேண்டி இருக்கின்றது. முதலில் 'தொடர்ந்து புதிய ஆடைகள் வாங்கித் தந்துக் கொண்டே இருக்க முடியாது' என்ற விடையினையே காண்போம்..ஏனென்றால் இயல்பான விடை அதுவாகத் தான் நடைமுறையில் இருக்க கூடும்.

உதவி செய்ய முடியாது:

"தொடர்ந்து எல்லாம் உதவி செய்ய முடியாதுங்க...மனசுக்கு உதவனும்னு பட்டுச்சி...காசும் இருந்துச்சி...உதவுனேன்...ஆனா அதையே தொடர்ந்து செய்றது அப்படிங்கிறது இயலாத ஒரு காரியம்..." என்பது மேலே கண்ட கேள்விகளுக்கு ஒரு சாராரின் விடையாக இருக்கக் கூடும். இயல்பான பதில் தான். காரணம் ஒரு தனி சராசரி மனிதனால் இன்றைய நிலையில் அவனுடைய வலிமைக்கு உட்பட்ட உதவிகளையே செய்ய இயலும்...அதற்கு மாறாக செய்ய இயலாது. இந்த நிலையில் தான் ஒரு கேள்வி எழுகின்றது?

"தொடர்ந்து உதவி செய்ய இயலாத நிலையில், நாம் யாருடைய படிப்பு நின்றுப் போக கூடாது என்று எண்ணி உதவினோமோ, அப்பெண்ணுடைய படிப்பு நின்று தான் போகப் போகின்றது. இந்நிலையில் நம்மால் என்ன செய்ய இயலும்?"

ஒன்றும் செய்ய இயலாது. விதியையும் நம்முடைய இயலாமையையும் எண்ணி நாட்டினையும் நாட்டு நடப்பையும் திட்டிக் கொண்டே செல்ல வேண்டியது தான்.

இந்த நிலையில் தான் நாம் சில விடயங்களைக் காண வேண்டி இருக்கின்றது.

1) அரசாங்கம் எதற்காக இலவச சீருடைத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும்?

2) தனது மகளுக்கான சீருடையைக் கூட வாங்க முடியாத பொருளாதார நிலையில் பலர் உள்ள பொழுது, பிறரின் படிப்பிற்காக உதவி செய்யும் வண்ணம் பொருளாதார வசதியினை உடைய சிலரும் இருக்கின்றனர் என்று அரசுக்குத் தெரியுமா தெரியாதா?

இந்த கேள்விகளைப் பற்றித் தான் இங்கே நாம் கண்டாக வேண்டி இருக்கின்றது.

ஒரு அரசு என்பது மக்களிடம் இருந்து என்றுமே தனியான ஒன்றாக இருத்தல் இயலாது. மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்டது தான் அரசு. மனிதன் இனக் குழுக்களாக இருந்த போதும் சரி இன்று தேசங்களாக வளர்ந்து இருக்கும் போதிலும் சரி அரசு என்பது அந்த அரசின் குடிமக்களின் நலனுக்காக இருக்கும் ஒன்றே அன்றி வேறல்ல.

இந்நிலையில் நமது அரசாங்கத்திற்கு மிகவும் தெளிவாகத் தெரியும், தனது குடிமக்களாக வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களும் இருக்கின்றனர்...மிகுதியாக வருமானம் வாய்க்கப் பட்டவர்களும் இருக்கின்றனர் என்று. அதனால் தான் தனது அடிப்படையான கடமையான தனது குடிமக்கள் அனைவருக்கும் உரிய உரிமைகளையும் தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக தனது குடிமக்களின் வருமான வரம்பினை வைத்துக் கொண்டு வரியினை இட்டு அனைத்து மக்களுக்கும் உரிய கடமையினை அது ஆற்றுகின்றது.

கல்வி என்பதும் ஒரு அரசின் அத்தகைய கடமையே ஆகும். தனது குடிமக்கள் அனைவருக்கும் தரமான கல்வியினை தர வேண்டியது ஒரு அரசின் கடமை. அதற்காகத் தான் அது காலங்களில் பல திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தியவாறே இருக்கின்றது.

உதா. உண்பதற்கு உணவில்லாத காரணத்தினால் தான் குழந்தைகள் பள்ளிகளுக்கு வரவில்லை என்று அறிந்த காமராசர் இலவச மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்து அனைவரும் கல்வியினைப் பெற வழி புரிந்தார்.

அவர் மாணவர்களுக்கு உதவியினை செய்யவில்லை. அது அவரது கடமை. அவரது கடமையைத் தான் அவர் செய்தார்...அதற்காகத் தான் அவருக்கு பதவியையும் உரிமையையும் தந்து வரியையும் செலுத்தி நாட்டினை ஆளும் பொறுப்பில் வைத்து இருந்தோம்.

இதனைப் போன்றே தான் அரசின் இலவச சீருடைத் திட்டத்தையும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

தனது மக்களுக்கு சீருடையை வாங்கித்தர வழி இல்லாத பல்வேறு குடும்பங்கள் இங்கே உள்ளன என்பதை அரசு அறியாமல் இல்லை...அதனை அது அறிந்த நிலையினில் தான் இலவச சீருடைத் திட்டத்தையே அரசு கொண்டு வந்து இருக்கின்றது. அவ்வாறு திட்டத்தினைக் கொண்டு வர வேண்டியது அரசின் கடமை.

இந்நிலையில் சீருடையை தரமானதாக தரவில்லை என்றால் அரசு தனது கடமையை ஒழுங்காகச் செய்யவில்லை என்று தான் பொருள்படும். ஒழுங்காகச் செயல்படாத அரசினை கேள்விக் கேட்கும் உரிமை அனைத்து மக்களுக்கும் இருக்கின்றது. அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கேள்வி கேட்டால் அரசுக்கு பதில் அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. காரணம் மக்களால் தான் அரசு இருக்கின்றதே ஒழிய அரசினால் மக்கள் இல்லை.

சீருடை இல்லாத காரணத்தினால் மாணவர்களின் கல்வி கற்கும் நிலை பாதிக்கப்படுகின்றது என்றால் அந்த முழுப் பொறுப்பும் அரசினையே சாரும்...காரணம்,

1) சீருடையை வாங்கக் கூட முடியாத பொருளாதார நிலையில் தனது குடிமக்களில் பலரை அந்த அரசாங்கம் வைத்து இருக்கின்றது

2) கல்வியின் இன்றியமையாமையை அறிந்தும் அனைவரும் அக்கல்வியினைப் பெரும் வண்ணம் திட்டங்களை ஒழுங்காகச் செயல்படுத்தாது இருக்கின்றது.

அதாவது அரசு தனது கடமையை ஒழுங்காகச் செய்யாது இருக்கின்றது.

இது நிச்சயமாக நல்லதொரு நாட்டிற்கோ அல்லது சமூகத்திற்கோ அடையாளம் அல்ல...இந்த நிலை தொடர்ந்தால் நிச்சயம் மிகப் பெரிய கேடுகள் தான் வரக் கூடும்.

இந்நிலையில் அரசாங்கத்தினை அதனது கடமையை ஒழுங்காகச் செய்யச் சொல்லி வலியுறுத்துவதே ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அதனைச் செய்வதே மெய்யான நிலை நிற்கக்கூடிய முடிவுகளுக்கு வழிவகுக்கக் கூடும். இதற்கு மாறாக வேறு தீர்வுகள் என்பன கிடையாது.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால்,

அரசாங்கம் தனது மக்களுக்காக திட்டங்கள் போடுவதோ அல்லது அரசாங்க திட்டங்கள் ஒழுங்காக நடைபெறாது போனால் மக்கள் அரசாங்கத்தைக் கேள்விக் கேட்பதோ 'உதவிகள் அல்ல' ஆனால் 'கடமைகள்'. உதவிகளை செய்யலாம் அல்லது செய்யாது போகலாம் அவை தனி மனிதரைப் பொறுத்தவை...ஆனால் கடமைகள் என்பன நிச்சயம் செய்தாக வேண்டியவைகள். அவைகள் தனி மனிதனைப் பொருத்தவைகள் அல்ல. சமூகமே அக்கடமைகள் மூலமாகத் தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றது. நிற்க

சுருக்கமாக காண வேண்டும் என்றால்,

ஒரு சிறுவனைப் படிக்க வைக்க வேண்டியது அவனது பெற்றோருக்கு கடமை. அவனைப் படிக்க வைக்க அவர்களால் இயலாத நிலையில் அவனது படிப்பிற்கு அவனது மாமா செய்வது உதவி.

மாமா நிச்சயமாக உதவி செய்யலாம் அதில் தவறில்லை...ஆனால் அச் சிறுவனை படிக்க வைக்க வசதிகள் இருந்தும் தங்களது கடமைகளை அவனது பெற்றோர் ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் அவனது பெற்றோரின் கடமையை அவர்களுக்கு உணர்த்தி அவர்களை அவனது படிப்பிற்கு பொறுப்பினை ஏற்றுக் கொள்ள செய்வதே அவர் புரியும் உண்மையான உதவியாகும். இல்லையேல் அப்பையனின் பெற்றோர் பொறுப்பு இல்லாமலேயே வாழ்ந்து விடுவர். அந்த பையனின் வாழ்கையும் கேள்விக் குறியாகி விடும்.

அதனைப் போன்று தான் அரசாங்கமும், சேவை புரிவோரும் இருக்கின்றனர். அன்பினால் சேவை புரிவது என்றுமே தவறில்லை...ஆனால் பிறரின் கடமையாக இருக்கும் ஒன்றை நாம் உதவியாகச் செய்வது, அவர்கள் அவர்களது கடமையை செய்யாமல் இருக்க உதவுமானால் அவ்வுதவியினை நாம் தொடர்ந்து புரிவது நிச்சயம் சரியானதொன்றாக அமையாது. அது மாபெரும் தீங்குகளுக்கே வழி வகுக்கும். இந்நிலையில் அவர்களை அவர்களது கடமையை செய்யுமாறு ஒன்றிணைந்து வலியுறுத்துவதே மெய்யான உதவியாகும்...அதுவே மாற்றத்திற்கு வழி வகுக்கும்.

சரி இருக்கட்டும்...இதுவரை "ஒரு அளவிற்கு மேல் உதவி புரிய இயலாது" என்ற கூற்றினைக் கண்டோம்...இப்பொழுது "எந்த அளவிற்கும் உதவியினைப் புரிய முடியும்" என்ற கூற்றினைத் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது.

காணலாம்....!!!

பி.கு:

இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும். வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

முந்தையப் பதிவு

ஒரு சிறு கதையில் இருந்தே ஆரம்பிப்போம்.
 
ஒருவன் ஒரு சிறிய நிறுவனத்தில் பணி புரிந்துக் கொண்டு இருந்தான். அவனது வீட்டில் இருந்து அவனது நிறுவனத்திற்கு செல்லும் வழியில் ஒரு 5000 பேர் கொண்ட சிறிய கிராமம் இருந்தது. அந்த கிராமத்திற்கு பேருந்து வசதி அரசாங்கத்தால் செய்துத் தரப்பட்டு இருக்கவில்லை. அவனோ தினமும் அவனது சொந்த வாகனத்திலேயே வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு சென்று வந்துக் கொண்டு இருந்தான்.
 
அவ்வாறிருக்க ஒரு நாள் அவன் அவனது அலுவலகத்திற்கு அவன் சென்றுக் கொண்டிருக்கும்  ஒரு முதியவர் உதவிக் கோரி நிற்க அவரின் அருகே வண்டியை நிறுத்தி "என்னங்கையா என்னாச்சி?" என்றே வினவுகிறான்.
 
அதற்கு அந்த பெரியவர் "இல்ல தம்பி...சந்தையில இருந்து இப்ப தான் திரும்பி வரேன்...அந்த கிராமம் தான் எங்க சொந்த ஊரு...அதுக்கு தான் போயிக்கிட்டு இருக்கேன்...ஆனா அங்க போக பேருந்து வசதி இந்த நேரத்துக்கு கிடையாது...ரொம்ப தூரம் வேற போகணும்...நீங்க அந்த வழியாத் தானே போறீங்க...என்ன கொஞ்சம் அங்க இறக்கி விட்டுறீங்களா.." என்றே கேட்க
 
சரி நம்மால் இயன்ற உதவி தானே என்று எண்ணியவாறே "சரிங்கையா...ஏறிக்கோங்க" என்று கூறியவாறே அவரை ஏற்றிக் கொண்டு அவரது கிராமத்தில் அவரை கொண்டு சேர்த்து விடுகின்றான். பெரியவரும் நன்றிக் கூறி விடைப் பெற்றுக் கொள்கின்றார்.
 
அடுத்த நாளும் அதே வழியில் வரும் பொழுது அதே இடத்தில் அதே பெரியவரைக் காணுகின்றான். இம்முறை சற்று சுற்றியும் பார்க்கும் பொழுது அப்பெரியவரைப் போன்றே பலரும் கிராமத்திற்குச் செல்ல காத்திருப்பதைக் காணுகின்றான். "ஐயோ..பாவம்...அவ்வளவு தூரம் இவர்கள் எங்கனம் நடந்துச் செல்வார்கள்...நாம் தனியாகத் தானே போகின்றோம்...உதவினால் என்ன தவறு..." என்று எண்ணியவாறே மீண்டும் உதவிக் கேட்ட அந்தப் பெரியவரை அழைத்துக் கொண்டு அவரை அவரது கிராமத்தில் இறக்கி விட்டுவிட்டு அவனது அலுவலகத்திற்கு செல்கின்றான்.
 
அங்கே அவன் நண்பர்களிடம் அந்த கிராமத்து மக்கள் படும் இன்னலைப் பற்றிக் கூற இயல்பிலேயே உதவும் குணம் படைத்த அவனது நண்பர்களும் உதவ முன்வருகின்றனர்.
 
அடுத்த நாள் அவனும் அவனது நண்பர்களும் பேருந்து வசதி இல்லாது கிராமத்திற்கு செல்ல கடினப்படும் மக்களுக்கு உதவியாக தாங்கள் அலுவலகத்திற்கு செல்லும் பொழுது அவர்களைத் தங்களது வாகனங்களில் ஏற்றிக் கொண்டு அவர்களது கிராமத்தில் அவர்களை இறக்கி விட்டுச் செல்லத் துவங்கினர்.

இவ்வாறே நாட்கள் நகர்கின்றன. அந்த கிராமத்து மக்களுக்கு உதவியவாறே அவனும் அவனது நண்பர்களும் தங்களது 'பிறர்க்கு உதவும் குணநலனை' மேம்படுத்திக் கொள்ள அனைத்தும் நன்றாகவே செல்கின்றது. ஆனால் காலங்கள் நகர நகர அவர்கள் செய்யும் காரியத்தில் ஏதோ பிழை இருப்பதாகவே அவனுக்குத் தோன்றுகின்றது. ஆனால் இன்ன பிழை என்று உறுதியாக கணிக்க இயலாத காரணத்தினால் அவன் தொடர்ந்து உதவிக் கொண்டே இருக்கின்றான். அந்த நிலையில் தான் தொடர்ந்து சில தினங்கள் அவனால் உடல் நலக் குறைவுக் காரணமாக அலுவலகத்திற்கு செல்ல இயலாது போகின்றது. பின்னர் உடல் மீண்டும் நலமாக ஆன பின்பு மீண்டும் அலுவலகம் செல்லும் பொழுது வழியில் அதே முதியவரைப் பார்க்க அவரின் அருகே வண்டியை நிறுத்துகின்றான்.

"என்ன தம்பி...இத்தனை நாளா காணோமே தம்பி உங்கள...என்னாச்சி...ரொம்ப சிரமப்பட்டு போயிட்டோம் நாங்க" என்றவாறே அவனது வண்டியில் அவர் ஏறி அமர, அவனது மனதில் நீண்ட நாட்களாக உறுத்திக் கொண்டு இருந்த பிழை என்னவென்பது அந்நொடியில் அவனுக்கு புலனானது. அதனை எண்ணிக் கொண்டே பெரியவரை அவருடைய ஊரில் இறக்கி விட்டு விட்டு அவனது அலுவலகத்திற்கு சென்று நண்பர்களைக் காணுகின்றான். அவர்களும் அவனைப் போன்றே ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பது அவனுக்குத் தெரிய வருகின்றது. உதவுவது நல்லது தான் இருந்தும் அவர்கள் செய்யும் உதவியில் அடிப்படையான ஒரு பிழை இருப்பதாய் அவர்களும் உணர்ந்து இருக்கின்றனர். ஆனால் அவன் தெளிவடைந்தது போல் அவர்கள் இன்னும் தெளிவடையாமலே இருக்கின்றனர்.

அதனைக் கண்ட அவன் சிரித்தவாறே பேச ஆரம்பிக்கின்றான்...

"நம்ம உதவி பண்ணல டே...உதவியா ஆரம்பிச்ச ஒரு விசயத்த வேலையாவே பார்த்துகிட்டு இருக்கோம்...அது தான் பிரச்சனை...பள்ளிகூடத்துல ஒருத்தன் பேனா கொண்டு வரலைனா நம்மகிட்ட இருக்குற இன்னொரு பேனாவ கொடுத்து உதவுறது உதவி...ஆனா யார் யார்ட எல்லாம் பேனா இல்ல...என்கிட்டே உங்களுக்கு உதவ பேனா இருக்கு...தேவபட்டவங்க வந்து வாங்கிக்கோங்க அப்படின்னு உதவிய முழுநேரமா பண்றது உதவி இல்லடே...அது வியாபாரம்...நமக்கும் சரி அவனுக்கும் சரி இலாபம் வராத வியாபாரம்...நீ இருக்குற வரைக்கும் அவன் பேனாவே வாங்க மாட்டான்...இல்ல அவன்ட ஏன் பேனா இல்லைனே யோசிக்க மாட்டான்...அது போல தாம்டே இப்ப நம்ம பண்றதும்...உதவியா ஆரம்பிச்ச ஒரு விசயம் இப்ப நம்ம வேலையாவே மாறிடுச்சி.

நெனச்சி பாருங்கடே...இன்னிக்கு நம்ம எல்லாவனும் வரல இல்ல வேற இடத்துக்கு போயிட்டோம் அப்படினா அந்த மக்கள் என்னடே பண்ணுவாங்க...மறுபடியும் பழைய மாதிரியே தான இருப்பாங்க...அப்படினா நம்ம பண்றது உதவியாடே...உண்மைய சொல்லனும்னா நம்ம அவங்களுக்கு உதவி பண்ணல துரோகம் தான் பண்றோம்...!!!

நெனச்சி பாரு...இப்ப நம்ம வேலைய நம்ம சரியா செய்யலைனா நம்ம அலுவலகத்தில நம்மள வேலைக்கு வச்சி இருப்பானுங்களா இல்லையா...நிச்சயம் தொரத்தி விட்டுருவானுங்க...சரி தான...இப்ப யோசிச்சி பாரு....5000 பேரு இருக்குற ஊருக்கு அதுவும் அடிக்கடி சன நடமாட்டம் இருக்குற ஒரு இடத்துக்கு பேருந்து வசதிய ஏற்படுத்தி தாரது யாரோட வேலடே...நம்ம வேலையா இல்ல நம்ம தேர்ந்து எடுத்து இருக்குற அரசாங்கத்தோட வேலையா...அரசாங்கத்தோட வேலைதான...அதுக்குத் தான நீயும் வரி கட்டுற நானும் வரி கட்டுறேன்...அந்த ஊர் மக்களும் வரி கட்டுறாங்க...காசையும் கொடுத்துபுட்டு அந்த காச வச்சி எல்லாருக்கும் நல்லது பண்ண ஒருத்தனை தேர்ந்தும் எடுத்துபுட்டு, அதுக்கப்புறமும் வேல நடக்கலைன்னு நம்மளே அந்த வேலைய பாக்குறது அப்படிங்கிறது சரியா?

அப்புறம் எதுக்கு ஒருத்தன தேர்ந்து எடுத்து அவன்ட காசையும் கொடுக்கணும் அப்படிங்கிறேன்...கூட்டி கழிச்சி பார்த்தா அவன் செய்ய வேண்டிய வேலையத்தான் நம்ம உதவியா பண்ணிக்கிட்டு இருக்கோம்...அவன் கடமைய அவன் செய்யாம நம்ம எல்லாரோட காசையும் சுருட்டிகிட்டு போறதுக்குத்தான் நம்மோட இந்த சேவை பயன்படுது...கடைசி வரைக்கும் அவன் அவனோட கடமைய செய்யவே மாட்டான்...ஆனா அவன கேள்வி கேட்டு அவர்களோட உரிமைய பெற வேண்டிய மக்களோ...அவர்களுக்கு வேண்டியது நம்ம மூலமா கிடைக்குது அப்படின்னு அமைதியாவே இருந்துருவாங்க...நம்ம இல்லைனா நம்மள போலவே வேற யாராவது வருவானுங்க அப்படினே காத்துக் கிடந்து காலத்த கடத்திருவாங்க...கடைசி வரைக்கும் அரசாங்கம் அதனோட வேலைய செய்யல அபப்டின்னு அத மட்டும் கேள்வி கேக்க மாட்டானுங்க...!!!

தப்புடே...கடலுக்கு பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்து மக்கள் பசியால செத்துகிட்டு இருக்கும் போது மீன கொடுத்து அவங்கள காப்பாத்தலாம்...ஆனா தொடர்ந்து மீன நம்மளே கொடுத்துகிட்டு இருந்தோம்னா அது அந்த மக்கள நம்மள சார்ந்து இருக்க செய்யுற ஒரு செயல்டே...அவன் சுதந்திரமாவே இருக்க மாட்டான்...மாறா...அவனுக்கு கடலப் பத்தியும் மீன் பிடிக்கவும் சொல்லிக் கொடுத்தோம்னா...அவன் கடைசி வரைக்கும் மறுபடியும் பசியால சாவுற நிலைமைக்கு போக மாட்டான்...சொந்த கால்ல நிப்பான்...எவன் தயவும் அவனுக்கு தேவை இல்ல...அவன் இன்னும் பல பேருக்கு உதவி பண்ணுவான்...மீன் பிடிக்க கத்து தந்தவனையும் மறக்க மாட்டான்...அது தாம்டே உதவி...பதிலா அவனுக்கு மீனையே தந்துகிட்டு இருந்தோம்னா கடைசி வரைக்கும் அவன அடிமையாவே வச்சிக்கிட்டு இருக்குறதுக்கு சமம்டே...!!!

அத தாம்டே நாம பண்ணிக்கிட்டு இருக்கோம்...ஏன் பேருந்து வசதி இல்ல... ஏன் அரசாங்கம் ஒண்ணுமே பண்ண மாட்டேங்குது அப்படிங்கிற கேள்வி அவனுக்கு வரவே வராத படி நம்ம மறைமுகமா செய்றோம்டே...உண்மையான உதவி அவன சிந்திக்க வைக்கணும்டே...அங்க தான் நாம தப்பு பண்றோம்...ஆனா இனியும் இந்த தப்ப பண்ண வேண்டாம்...நாளைக்கே அந்த மக்கள் கிட்ட போயி அவங்க ஊருக்கு ஒழுங்கான பேருந்து வசதி வர என்ன பண்ணனும்...எப்படி பண்ணனும்...யார கேக்கணும் அப்படிங்கிற விசயத்த எல்லாம் சொல்லலாம்...கூடவே இருந்து எல்லாத்தையும் சரி பண்ணலாம்...அப்படி பண்ணா தான நாம இல்லைனாலும் அந்த மக்கள் கஷ்ட படாம இருப்பாங்க...என்னடே நான் சொல்றது...சரி தான"

என்றவாறே அவன் அவனது பேச்சினை முடிக்க அவனது கருத்தில் இருந்த உண்மையை உணர்ந்த அவனது நண்பர்களும் அவன் கூறியதைப் போல் தங்களால் எவ்வாறு அந்த கிராமத்து மக்களுக்கு நிரந்தர தீர்வினை முறையாக கொண்டு செல்ல முடியும் என்பதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கின்றனர்.

ஒரு மாற்றம் அந்தச் சமூகத்தில் மலர ஆரம்பிக்கின்றது.

நிற்க...!!!

சிறு கதை அப்படின்னு சொல்லி ஆரம்பிச்சது பெரிய கதையாயிடுச்சி. என்ன செய்வது கூற வேண்டிய கருத்துக்கள் அவ்வளவு இருக்கின்றன.

உதவி செய்வது என்பது ஒரு அருமையான குணம்...மனிதத்தின் வெளிப்பாடு...ஆனால் இன்றைய சூழ்நிலையில் நம்முடைய உதவும் குணத்தையே தங்களின் இலாபத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் பெருகி உள்ள நிலையில் உதவி என்றால் என்ன என்பதையும் அதனைச் சுற்றி இருக்கும் அரசியலையும் நாம் நிச்சயம் கண்டாகத்தான் இருக்கின்றது.

மேலே நாம் கதையில் கண்ட நண்பர்கள் அன்னியர்கள் அல்ல...நிச்சயம் நாம் அவர்களுள் ஒருவராக இருக்கக் கூடும்...இயன்றவரை நம்மால் அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தம்முள் வாய்க்கப் பெற்றவர்கள் அனைவரும் அந்த நண்பர்களைப் போன்றே இருப்பர். உதவி செய்ய வாய்ப்பு கிட்டினால் நிச்சயம் உதவி செய்வர்...!!!

இருந்தும்...மேலே நாம் கண்ட கதையில் எவ்வாறு உண்மையாகவே உதவிப் புரிய வேண்டும் என்று எண்ணியே அந்த நண்பர்கள் புரிந்த உதவி, உண்மையான உதவியாக அமையவில்லையோ...அதனைப் போன்றே இன்று நம் சமூகத்தில் தூய எண்ணத்தின் படி பலர் செய்யும் பல சேவைகள் உண்மையான உதவியாக அமையாமல் மாறாக எவருக்கு உதவ வேண்டும் என்றே எண்ணுகின்றார்களோ அவர்களுக்கே பெரும் தீங்காக அமைந்து விடுகின்றது.

இதனைப் பற்றித் தான் நாம் விரிவாக காண வேண்டி இருக்கின்றது...!!!

காணலாம்...!!!

தொடரும்...!!!

பி.கு:
இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும். வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.


இறுதிப் பகுதி - ஆன்மீகப் பொது உடைமை

"மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்" - லூக்.12:20

இவ்வுலகப் பொருளுக்காகவும், இவ்வுலக ஆட்சிக்காகவும் பைபிளைப் பயன்படுத்தும் ஐரோப்பியர், விளக்கைக் கையில் வைத்துக் கொண்டு, ஆழ்குழியில் விழும் குருடர்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

இவ்வுலகப் பொருளுக்காகவும் செல்வாக்கிற்காகவும் ஐரோப்பியரின் மூளைச் சலவைப்படையின் ஊழியக்காரர்களாக வாழ்நாளை வீண் நாளாகக் கழிக்கும் ஊழியக்காரர்கள் என்று அழைக்கப்படுகின்றவர்களைப் பார்த்து,

"நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்றுப் போங்கள்" என்று (மத் 7:13)

என்றும்

"நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்" (மத். 7:19)

கடவுளே மனிதனாக வந்து கற்றுக் கொடுத்தவற்றை ஊழியக்காரர் சிந்தனைக்குப் படைக்கின்றேன்.

" எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும் இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." (மத்: 23: 37-39)

"இது முதல் என்னைக் காணாதிருப்பீர்கள்" என்று வருத்தத்துடன் கூறியவர் மறைந்தே போய் விடவில்லை. திரும்பவும் காணப்பட்டார். உரிய காலத்தில் பரலோக இராஜ்யம் மலர்ந்தது.

பூலோக அரசின் ஆட்களாகிய யூதர்களாலும், ரோமர்களாலும் அது மறைக்கப்பட்டாலும், மன்னர் ஆட்சிக் காலம் மறைந்து மக்கள் ஆட்சிக் காலம் மலர்ந்து வரும் இக்காலத்தில் பரலோக இராஜ்யம், உலக மக்கள் ஆட்சியாக முழுமையடையப் போகிறது என்பதில் ஐயம் இல்லை.

பரலோக இராஜ்யமாகிய ஆன்மீகப் பொதுஉடைமை மலர்வதற்கான அறிகுறிகள் இருக்கின்றனவா? என்னும் கேள்விக்கு "ஆம்" என்னும் பதில் வரலாற்று வழியில் கிடைக்கிறது.

ஆன்மீகத்தை மேலை நாடுகள் கையில் வைத்துக் கொண்டு ஆன்மீகத்திற்கு எதிரான தனியுடைமை நாடுகளாக இருக்கின்றன.

மனித நேயத்திற்குரிய பொது உடைமையைக் கையில் வைத்திருக்கும் கீழை நாடுகள், மனித நேயத்திற்கு எதிரான அடக்கு முறையால், அரசியல் பொது உடைமையைச் செயல்படுத்தி வருகின்றன.

இந்த இரண்டையும் இணைத்து அரவணைப்பவரே உலக இரட்சகராகிய நம்முடைய இயேசு கிருத்து.

இயேசு கிருத்து காட்டியுள்ள பரலோக இராஜ்யமாகிய ஆன்மீகப் பொது உடைமையை உலக மக்கள் அனைவரும் புரிந்துக் கொள்ளக்கூடிய முறையில் ஆறாவது அறிவுக்குரிய அறிவியல் வழியில் விளக்கும் ஊழியக்காரர்களின் படை புறப்பட்டால் வெற்றியடைவதற்கு காலம் கனிந்து இருக்கின்றது.

உலக மக்கள் அனைவரும் போரின்றி அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ விரும்பும் காலம் இது. சமாதானப் பிரபுவாகிய இயேசு கிருத்துவின் நற்செய்தியை ஆறாவது அறிவிற்குரிய அறிவியல் வழியில் புனித தோமாவின் நற்செய்திப் பணியின் விளைவாகிய தமிழர் ஆன்மவியல் அடிப்படையில் விளக்கிக்காட்டும் பொழுது அதை மறுப்பவர் எவரும் இருக்க இயலாது.

இன்று உலகில், பயங்கரவாதம் நடைபெறுவதற்குக் காரணம், மனித நேயமற்ற அடக்குமுறை, ஒவ்வொரு நாட்டிலுமுள்ள பெரும்பான்மையினர் அந்நாட்டிலுள்ள சிறுபான்மையினரை நியாயமில்லாமல் நசுக்குதல், நசுக்கப்படும் சிறுபான்மையினருக்கு நீதி வழங்க, அந்த நாட்டைத் தாண்டி உலக அளவில் நீதிமன்றம் இல்லை.

ஐக்கிய நாடுகள் சபை நாடுகளுக்கிடையே ஒற்றுமையை உருவாக்க முயலுகிறது. வீட்டோ அதிகாரமுள்ள ஐந்து நாடுகளின் கைப்பாவையாக ஐ.நா சபை செயல்படுவதைத் தவிர அதற்கு வேறு வழி இல்லை.

அகில இந்தியாவில் இருந்த 56 நாடுகளுக்கும் 56 படைகள் இந்தியாவில் இருந்தன.

இந்தியா ஒரே மக்களாட்சி நாடாக ஆனவுடன் 56 படைகள் மறைந்து ஒரு படை மட்டும் போதுமானதாயிற்று.

இதைப்போன்று உலக நாடுகள் அனைத்தும் இணைந்து ஒரே நாடு என்னும் நிலையில் உலக மக்கள் ஆட்சி அமைந்தால் இப்பொழுது படைகளுக்காகத் தனித் தனி நாடுகள் செய்யும் செலவுகள் அத்தனையும் மறைந்து விடும்.

அடுத்த கிரகத்திலிருந்து நம் உலகைப் பாதுகாக்கும் அமைப்பு மட்டுமே போதுமானதாகி விடும். உலகின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குக் காவல் துறை மட்டுமே போதுமானதாகி விடும்.

உலக மக்கள் ஆட்சி அமைந்தால் உலக மக்கள் அனைவருக்குமான உலக நீதிமன்றம் அமையும், உலக மக்கள் அனைவருக்கும் அப்பொழுது நீதி கிடைக்கும், பயங்கரவாதம் மறைந்து விடும்.

இதற்கு உழைக்கக்கூடியவர்கள் சமாதான கர்த்தராகிய இயேசு கிருத்துவின் ஊழியக்காரர்களே. இந்த ஊழியக்காரர்களுக்கு பயன்படும் கருவி தமிழர் ஆன்மவியல். இந்த ஊழியக்காரர்கள் எந்த மதத்தையும் சேர்ந்தவர்கள் அல்லர். கிருத்துவைச் சேர்ந்தவர்கள், கிருத்து காட்டிய பரலோக இராஜ்ய வாழ்க்கை முறையாகிய ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறைக்கு உழைப்பவர்கள்.

அப்பொழுது உலகம் முழுவதும் ஒரே மனதையும் ஒரே மேய்ப்பரும் இருப்பார்.

அந்த மேய்ப்பர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிருத்து என்பதில் ஐயம் இல்லை.

எப்படி எனில்,

"காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று,தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்." (எபேசியர் 1: 9,10)

என்னும் வேத வசனங்களின் நிறைவேறுதலாக அது இருக்கும்.

பூலோகத்தில் நடைபெறும் பரலோக இராஜ்யத்தில்

"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்"
என்னும் நிலையும்
"யாதும் ஊரே; யாவரும் கேளிர்"

என்னும் நிலையும் இருக்கும். அனைவரும் இணைந்து ஆன்மீகப் பொது உடைமை வாழ்க்கை முறையையுடைய பரலோக இராஜ்யத்தில் மகிழ்வுடன் வாழ்வர். இதற்கு நம்மை ஒப்படைப்போமாக.

முற்றும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்
மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

முந்தையைப் பதிவு

விசுவாச எழுச்சிக்குப் பயன்படும் புனித தோமா வழிக் கிருத்துவம்:

புனித தோமாவைப் போன்று மக்கள் ஆட்சிக் கால மக்கள் எதையும் மூடத்தனமாக நம்பாமல், அறிவுக்கேற்ற நிலையில் புரிந்துக் கொள்ள முயலுகின்றார்கள். இதனால் அறிவுக்கேற்ற நிலையில் விளக்கப்படாத எதையும் மூடத்தனமாக ஏற்றுக் கொண்டு நம்ப மக்கள் ஆட்சிக்கால மக்கள் தயாரில்லை. புனித தோமா இந்தியா வந்த பொழுது, இந்தியா அறிவுக்கேற்ற கேள்விகள் கேட்கும் நிலையிலேயே இருந்ததை இந்திய ஆன்மீக வரலாறு நமக்குக் காட்டுகிறது.

ஆன்மீகத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாத வினோத நிலை இந்தியாவில் இருந்தது. அது என்ன? பொதுவாக ஆன்மீகக் கொள்கை என்பது கடவுளை நம்பும் கொள்கை என எண்ணப்படுகின்றது. இந்தியாவைப் பொறுத்த அளவில் அந்த எண்ணம் தவறு என்பதைக் காட்டுகிறது.

கடவுளை அறியா பௌத்த மதமும், கடவுளை மறுக்கும் சமண மதமும் இந்தியாவில் தோன்றி வளர்ந்த பெருமைக்குரிய மதங்கள் ஆகும். இவை இரண்டும் வழிபாட்டோடு நிற்காமல் அவற்றிற்குரிய தத்துவங்களோடு கூடிய மதங்களாக வளர்ச்சி பெற்று, ஏறத்தாழ 500 ஆண்டுகள் இந்தியர் உள்ளங்களில் ஊடுருவி வளர்ந்திருந்தன.

வழிபாடு உலகில் மனிதர் எங்கெங்கு வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் இருந்திருக்கிறது. ஆனால் மதங்கள் அனைத்தும் ஆசியாக் கண்டத்தில் மட்டுமே உருவாகி வளர்ந்துள்ளன. மதங்கள் அனைத்தும் அடிப்படையில் 5 கேள்விகளுக்கு பதில் கொடுப்பனவாக இருக்கின்றன.

1. பிறக்கும் முன் நான் இருந்தேனா?
2. இருந்தால் எவ்வாறு இருந்தேன்?
3. இறந்தபின் நான் இருப்பேனா?
4. இருந்தால் எவ்வாறு இருப்பேன்?
5. இந்த நான்கு விடைகளின் அடிப்படையில் இந்த உலகில் நான் வாழ வேண்டிய முறை என்ன?

மேலேயுள்ள ஐந்து கேள்விகளுக்கும் கடவுளை மறுக்கும் சமண மதம், பிறவிச் சுழற்சிக் கொள்கையின் அடிப்படையில் பதில் கொடுக்கிறது. சமண சமயத்தின் பிறவிச் சுழற்சிக் கொள்கையையே பௌத்தமும் மேற்கொண்டது. இந்த பிறவிச் சுழற்சிக் கொள்கை இந்தியாவில் தோன்றிய இந்திய மதங்களுக்கு மட்டுமே உரிய ஒரு தனிச் சிந்தனை.

'இதனால் கடவுள் இருக்கின்றார்' என்று கூறிய உடனேயே இவ்வாறு கூறுகிறவரை மூட நம்பிக்கையாளர் என எண்ணி நகைக்கும் நிலை இந்தியாவில் இருந்தது. இதனால் கடவுள் இருக்கின்றார் என்பதை கடவுளை அறியா அவர்களுக்கு அறிவியல் வழியில் விளக்க வேண்டிய இன்றியமையாமை இந்தியாவில் ஏற்படுகிறது. இதை விளக்கிய பின்னரே, கடவுள் மனிதனாக இந்த உலகில் பிறந்து, மனிதனுக்கு மீட்பைக் கொடுக்கிறார் என்பதை அறிவியல் வழியில் நிலை நாட்ட முடியும்; நிலை நாட்ட வேண்டும்.

"கடவுள் இருக்கின்றார்" என்பதையும் "கடவுள் மனிதனாகப் பிறந்து, மீட்பை நிலைநாட்டி இருக்கின்றார்" என்பதையும் நிலைநாட்ட எவ்வளவு முயற்சியும், பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்தலும் தேவை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டிய கடமை இன்றைய நமக்கு ஏற்படுகிறது.

கடவுளை அறியா பௌத்த சிந்தனைக்கும், கடவுளை மறுக்கும் சமண சிந்தனைக்கும் அடிப்படைச் சிந்தனையாக, தமிழ் நாட்டில் தோன்றிய ஆசீவக சிந்தனை இருப்பதாக அண்மைக்கால ஆராய்ச்சியாளர்கள் உரிமை பாராட்டுகின்றார்கள். அதற்குரிய காரணகாரியங்களையும் விளக்குகின்றார்கள். இது எண்ணிப்பார்க்க வேண்டிய புதிய கோணமாக இருக்கிறது. இதனால் இந்திய ஆன்மீகச் சிந்தனைக்கு தமிழர் சிந்தனையே அடிப்படையாக இருக்கிறதென்பது விளங்குகிறது.

ஆன்மீகமாகிய ஆற்றின் இரு கரைகள்

ஆன்மீகமாகிய ஆற்றின் இருகரைகளாக ஆத்திகமும் நாத்திகமும் விளங்குவது இயல்பான ஒன்றேயாகும். அந்த இயல்பின்படியான ஆன்மீக வளர்ச்சிப் படிகளை நாம் தமிழ் நாட்டில் பார்க்க முடியும். ஆத்திகரான தவத்திரு குன்றக்குடி அடிகளாரும், நாத்திகரான தந்தை பெரியாரும் இணை பிரியா நண்பர்கள் மட்டுமல்லாது, இருவரும் ஒரே மேடையில் இணைந்து பேசிய பெருமை தமிழ் உலகத்தின் பெருமையாகும். இருவரும் ஒரே குறிக்கோளில் இணைந்தவர்கள். அதுவே சமுதாய நன்மை; மனித நேயம் ஆகும்.

தமிழ்நாட்டைத் தவிர மற்ற நாடுகளில் இத்தகைய, இணைப்பைப் பார்த்தல் அரிது. இதைப்போன்றே அறிவியலும் ஆன்மீகமும் இணைந்து செல்ல வேண்டும் என்பது அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் கருத்து.

"Science Without Religion is Lame
Religion Without Science is Blind"

என்னும் ஐன்ஸ்டீன் கருத்து உருவாவதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து நோக்கிச் சிந்தித்த பெருமையுடையது தமிழ்நாடு. உலகில் தமிழ் மொழியில் மட்டுமே அறிவியலும் ஆன்மீகமும் இணைந்து "ஆன்மவியல்" என்னும் கல்வி வளர்ந்து உள்ளது. இதில் அறிவியல், மெய்யியல், இறையியல், ஆணவவியல் ஆகிய நான்கும் அடங்கி இருக்கின்றன.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.
2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்
மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

 
"நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
 அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
 எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!" - அவ்வையார்
 
 
"ஏ நிலமே...!!! சில இடங்களில் நீ காடாகவும் இருக்கின்றாய்...சில இடங்களில் நாடாகவும் இருக்கின்றாய்...சில இடங்களில் பள்ளமாகவோ அல்லது மேடாகவோ இருக்கின்றாய்...அப்பேற்பட்ட நீ நல்ல மக்கள் எங்கே இருக்கின்றனரோ அவ்விடத்தில் நல்ல நிலமாகவும் திகழ்கின்றாய்...வாழ்க நீ" என்றே அவ்வையார் பாடிச் சென்று இருக்கின்றார். எளிமையான பொருள் தானே...இப்பொழுது இதன் அடிப்படையில் தான் நமது சமூகத்தை நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.
 
ஒரு இடத்தில் இருக்கும் மக்களின் தன்மையைப் பொறுத்தே நிலத்தின் தன்மை அமையப் பெறுகின்றது. நல்ல மக்கள் இருக்கும் இடம் நல்ல இடமாகவும்...தீய மக்கள் இருக்கும் இடம் தீய இடமாகவும் இருக்கின்றது. இதன் அடிப்படையில் கண்டோம் என்றால்,
 
அன்பு, பரிவு, நல்லொழுக்கம், விருந்தோம்பல், முதலிய நற்பண்புகளை உடைய மக்கள் வசிக்கும் இடமும் சரி நாடும் சரி நல்லவைகளாகவே திகழும்.
 
அதே நேரம் கோபம், பேராசை, பயம், பகை, பொறாமை முதலிய தீய குணங்களை உடைய மக்கள் அதிகம் வசிக்கும் இடமும் சரி நாடும் சரி தீயவனவாகவே திகழும்.
 
இதனை மறுத்தல் இயலாது. இதன் அடிப்படையிலேயே தான் நாம் நமது நாட்டினைக் காண வேண்டி இருக்கின்றது. அவ்வாறே கண்டோம் என்றால் நிச்சயம் நமது நாட்டினை நாம் நல்லதொரு நாடாக காண முடியாது. காரணம் பெருன்பான்மையான மக்கள் நல்ல குணம் மிக்கவர்களாக இன்று இல்லை. அதற்கான காரணத்தைத் தான் நாம் இப்பொழுதுக் காண வேண்டி இருக்கின்றது.
 
இன்று நாம் மன்னராட்சிக் காலத்தைக் கடந்து மக்களாட்சிக் காலத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றோம். மன்னராட்சிக் காலம் என்பது வேறு...மக்களாட்சிக் காலம் என்பது வேறு.
 
மன்னராட்சிக் காலத்தில் மன்னரின் சொல் தான் அனைத்தும்..."மன்னன் எவ்வழி ..மக்கள் அவ்வழி..." என்றே அனைத்தும் மன்னனின் செயல்பாடுகளை நம்பியே இருந்தன. மக்களுக்கு பெரிதாக உரிமைகளோ அல்லது பொறுப்புகளோ இருக்காது. மன்னனுக்கு பின்னர் மன்னனின் மகன் அரசாள வருவான். இந்த நிலையில் மக்கள் அவர்களுக்கு பிடிக்காத ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் புரட்சி தான் ஒரே வழியாக இருக்கும். ஆனால் அரசனை எதிர்த்து புரட்சி என்பது நிச்சயம் வன்முறையால் ஒடுக்கப்படும் என்பதால் பெரும்பாலும் புரட்சிகள் வெறும் எண்ணத்துடனே நின்றுப் போய் விடும். காரணம் பெருவாரியான மக்கள் அமைதியான வாழ்வையே விரும்புகின்றார்கள்...அச்சத்தின் காரணமாக "நமக்கேன் வம்பு" என்றே பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி நின்று விடுகின்றார்கள். மன்னராட்சிக் காலத்தின் நிலை இது.

ஆனால் மக்களாட்சிக் காலத்தில் நிலை வேறு...இங்கு மக்கள் எவ்வழியோ...அரசாள்பவன் அவ்வழியாக இருக்க வேண்டி இருக்கின்றது. காரணம் தங்களை ஆளும் தகுதியை மக்களே ஒருவனுக்கு அவனைத் தேர்ந்து எடுப்பதன் மூலம் தருகின்றனர். அதனால் மக்களை நம்பியே ஆள்பவர்கள் இருக்கின்றார்கள். இங்கே ஆள்பவர்கள் சரி இல்லை என்றால் மக்கள் பெரிய புரட்சிகளெல்லாம் செய்ய வேண்டியதில்லை...மாறாக அவர்களின் மத்தியில் இருக்கும் மற்றொரு நல்ல நபரை தேர்ந்து எடுப்பதன் மூலம் ஆட்சி மாற்றத்தை அவர்களே கொண்டு வந்துவிடலாம். ஆட்சி மாற்றத்திற்கு தேவை எல்லாம் மக்கள் ஒன்றாக சேர்ந்து இருப்பதும் அவர்கள் சிந்திக்கும் திறமையைப் பெற்று இருப்பதுமே ஆகும். நிற்க.

இந்த நிலையில், அதாவது மக்களாட்சிக் காலம் உலகெங்கும் பரவி உள்ள நிலையில், எந்த ஒரு நாட்டின் மக்கள் ஒற்றுமையாகவும் நற்பண்புகள் மிக்கவர்களாகவும், சிந்திப்பவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்கள் நல்லவர்களை அவர்களின் மத்தியில் இருந்து தேர்ந்து எடுத்து அவர்களை வழிநடத்த ஆட்சிப் பொறுப்பை அவர்களிடம் கொடுப்பர். அந்த நல்லாட்சியில் அந்த நாடும் நல்ல நாடாக இருக்கும். நல்ல நாட்டிற்கு நல்ல குடிமக்களே இன்றியமையாதத் தேவை என்பதை உணர்ந்த ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களும் மக்களை சிந்திப்பவர்களாகவும் நற்பண்புகள் உடையவர்களாகவும் வைத்து இருப்பர். அது தான் நல்ல தலைவர்களின் அடையாளம்.

ஆனால் இங்கே தான் மற்றொரு விடயம் ஒளிந்து இருக்கின்றது. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவன் நல்லவனாக இல்லை...ஆனால் அவனுக்கு ஆட்சியினை விட்டுச் செல்லவும் மனசில்லை என்று வைத்துக் கொள்வோம்...இந்நிலையில் அவனுக்கு அவனது ஆட்சியினை தக்க வைத்துக் கொள்ள இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன...

1) வன்முறையின் மூலம் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது (ஆனால் மக்களாட்சிக் காலத்தில் இது உதவாது)

2) மக்களே அவனது ஆட்சியை தொடர அவனையே மீண்டும் தேர்ந்து எடுக்க வேண்டும். ஆனால் மக்களாட்சிக் காலத்தில் தீயவன் ஒருவன் ஆள்வதை மக்கள் அனுமதிக்க வேண்டும் என்றால் ஒன்று மக்கள் சிந்திக்கத் தெரியாதவர்களாக இருக்க வேண்டும்..அல்லது தம்மைப் பற்றி மட்டுமே கவலைக் கொண்டு அச்சத்தால் ஒற்றுமை இன்றி இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே மீண்டும் அவனால் ஆட்சிக்கு வர இயலும்.

இந்த விடயங்களைக் கொண்டே நாம் நமது நாட்டினை இன்றுக் காண வேண்டி இருக்கின்றது.

இன்று நமது ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இல்லை இருந்தும் அவர்கள் தான் தொடர்ந்து ஆட்சிப் புரிந்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த நிலை சிந்திக்கவும் ஒற்றுமையாகவும் இருக்கத் தெரிந்த மக்கள் இருக்கும் ஒரு நாட்டில் நிலை பெற்று இருக்க யாதொரு வாய்ப்பும் இல்லை. ஆனால் நமது சமூகத்தை நாம் உற்றுப் பார்த்தோம் என்றால் நமது மக்கள் சிந்திப்பவர்களாகவும் இல்லை அச்சமின்றி ஒற்றுமையாக இருப்பவர்களாகவும் இல்லை. மாறாக அவர்கள்,

1) சிந்திக்கத் தெரியாதவர்களாகவும்
2) கடன்காரர்களாகவும்
3) குடிகாரர்களாகவும்

இருக்கின்றனர். இவர்கள் இவ்வாறு இருப்பதற்கு காரணம் அந்த அரசியல்வாதிகள் வகுத்து இருக்கும் திட்டங்களே ஆகும்.

 
ஒருவன் சிந்திக்க வேண்டும் என்றால் அவன் கல்வியினைப் பெற்று இருக்க வேண்டும். ஒருவனது கல்வியறிவு தான் அவனை சிந்திக்க வைக்கின்றது. மக்களாட்சிக் காலத்தில் ஆள்பவர்களால் மக்களின் கல்வியை தடுக்க முடியாது. காரணம் கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை. இந்நிலையில் எவன் ஒருவன் கல்வியை தடுக்க முயல்கின்றானோ அவன் சமூகத்தின் ஆதரவினை இழந்து விடுகின்றான். இந்நிலையில் ஆள்பவர்களால் கல்வியினைத் தடுக்க முடியாது. ஆனால் அவர்களால் கல்வி முறையினை கட்டுப்படுத்த முடியும். அதனை வைத்தே அவர்கள் சிந்திக்க வைக்காத எதற்கும் பயனற்ற கல்விமுறையைக் கொண்டு சிந்திக்கத் தெரியாத ஒரு சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்...காரணம் மக்கள் சிந்திக்காத வரை தான் அவர்களுக்கு நல்லது. ஆகையால் சிந்திக்க வைக்காத கல்விமுறையையே அவர்கள் ஊட்டி வளர்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

ஆனால் கல்வி முறையை வைத்து மட்டும் ஒரு மனிதனின் சிந்தனையை கெடுக்க முடியாது என்பதை அவர்கள் நன்கு அறிந்து தான் இருக்கின்றனர்.இந்நிலையில் அவர்களுக்கு கை கொடுப்பது மது வகைகள் ஆகும். கற்றவனையும் சிந்திக்க வழியில்லாதவனாக செய்யும் மதுவினை சமூகத்தினுள் பரப்பி மக்களைக் குடிகாரர்களாக மாற்றுவதின் வாயிலாக சிந்திக்க இயலாத ஒரு சமூகத்தினைக் கட்டமைத்துக் கொண்டு அதில் அசைக்க முடியாத சக்தியாக அவர்கள் உலா வந்துக் கொண்டு இருக்கின்றனர்.

"கள்ளுண்ணாமை" யை வலியுறுத்தாத தமிழ் இலக்கியங்களே இல்லை என்றே கூறலாம்...அப்பேற்பட்ட ஒரு தேசத்திலே "தமிழ் வாழ்க" என்றுக் கூறிக் கொண்டு மதுவினைப் பரப்புவது என்பது எத்தகைய சதிச் செயல் என்பதனை சிந்திப்பவர்கள் அறிவார்கள்.

ஆனால் இன்னும் பிரச்சனை இருக்கத் தான் செய்கின்றது... அனைவரும் சிந்திக்காதவர்களாகவும் இருப்பதில்லை அனைவரும் மதுவையும் குடிப்பதில்லை...இந்நிலையில் அத்தகைய மக்கள் ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து கேள்விகளை எழுப்பினால் சிந்திக்காத மனிதனும் சிந்திக்க ஆரம்பித்து விடுவான்...பின்னர் ஆட்சி ஆட்டம் கண்டு விடும். இதையும் ஆட்சியாளர்கள் நன்றாக அறியத்தான் செய்வார்கள். இதற்கு தீர்வாக அவர்கள் கண்டு பிடித்த ஒரு விடயம் தான் "கடன்",

ஒருவன் சிந்திக்கின்றானா...நல்லது.
மது போன்றவைகளுக்கு அடிமையாகவில்லையா...நல்லது.
அவனை கடன்காரனாக்கி விடு...அவன் நமக்குத் தொல்லை தர மாட்டான்.

இது தான் ஆள்பவர்களின் தாரக மந்திரமாக இருக்கின்றது. "கடன்" வாங்குவது என்பது மிகவும் எளிதான ஒரு செயல்...தேவை இல்லாத பொருள்களை கடனில் வாங்க மக்களும் சிறிதளவு பேராசையையும் பொறாமையையும் கெளப்பி விட்டால் போதும்...

"அட இப்ப விலை கம்மியா கிடைக்குதே...கடன வாங்கி அத வாங்கிட்டோம்னா அப்புறம் மெதுவா அடைச்சிக்கலாம்...அதான் கடன் தர வங்கிங்க இருக்கே..." என்றவாறே கடன் வாங்க மக்கள் தயாராக இருக்கின்றனர். காரணம் மது குடிப்பது போன்று கடன் வாங்குவது என்பது தவறான ஒன்றாக இன்று நமது சமூகத்தில் பார்க்கப்படவில்லை.

கூடவே மக்களின் இன்றியமையாத தேவைகளையும் கடன் வாங்கித் தான் பெற முடியும் என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டால், அதுவும் அந்த கடனை அரசாங்க வங்கிகளே தந்தன என்றால் நிச்சயம் மக்கள் கடன் வாங்கத் தான் தலைப்படுவர்.

 
கல்வி, தொழில், உறைவிடம் போன்ற முக்கியமான, மக்களின் இன்றியமையாத தேவைகளை கடன் பெற்றால் தான் பெற முடியும் என்ற நிலையைக் கொண்டு வந்து விட்டால் கடன் வாங்காது இருக்க மக்களால் முடியாது. இந்நிலையில் பெரும்பான்மையான மக்கள் கடன்காரர்களாகி விடுவர். இது தான் அரசாங்கத்திற்கு தேவை...காரணம் குடிக்காரர்களும் சரி கடன்காரர்களும் சரி...அரசாங்கத்திற்கு எதிராக..ஏன் எதற்கு எதிராகவும் குரலினை எழுப்ப மாட்டார்கள்.

குடிகாரர்கள் முழுக்க முழுக்க குடிக்கு அடிமையாகி விட்டு இருப்பர்...அவர்களுக்கு அவர்களது உலகம் குடியினைச் சுற்றியே இருக்கும்...பொழுதுபோக்கிலேயே காலத்தைக் கழிக்க விரும்புவர்...அரசாங்கத்தை எதிர்த்து அவர்களின் குரலினை அவர்கள் எக்காலமும் எழுப்ப மாட்டார்கள்.

கடன்காரர்களின் நிலைமையோ இன்னும் பரிதாபம்...அவர்களுக்கு நடப்பது தவறென்று தெரியும்...ஏதாவது செய்து மாற்றிட மாட்டோமா என்ற எண்ணமும் மனதினுள் இருக்கும்...ஆனால் அதனை எல்லாம் பயம் ஓரம்கட்டி விடும்..."ஏதாவது பிரச்சனையில் சிக்கி விட்டு பின்னர் கடனுக்குரிய வட்டியைக் கட்ட வழியின்றி சென்று விட்டால் கடன் ஏறிக் கொண்டே போகுமே...அதனை நாம் தானே கட்ட வேண்டி இருக்குமே...எதற்கு நமக்கு தேவை இல்லாத வம்பு...நமக்கு ஏற்கனவே நமது கடன் பிரச்சனை இருக்கின்றது...அதனைக் கவனிப்போம்...வேறு எவன் எக்கேடுக் கெட்டால் நமக்கு என்ன?" என்றே அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய பயம் அவர்களை மற்றவர்களிடம் இருந்து பிரித்து தனியாக்குவதுடன் அவர்களின் உணர்ச்சிகளையும் கட்டிப்போட்டு விடுகின்றது.

இது தான் அரசாங்கத்திற்கு வேண்டும்...மக்கள் ஒற்றுமையாகவும் இருக்கக் கூடாது...சிந்திக்கவும் கூடாது...அச்சமின்றியும் இருக்க கூடாது. அதற்காகத் தான் அது மதுவையும் கடனையும் வாரி வாரி வழங்குகின்றது. இதில் இருக்கும் அரசியலை உணராது இருக்க சிந்திக்க வைக்காத கல்வி முறையையும் ஊட்டி வளர்த்து பாதுகாக்கிறது.

அதாவது,

சிந்திக்க வைக்காத ஒரு கல்வி முறை..அந்த கல்வி முறையை கற்க கடன் வாங்கியாக வேண்டும்...கூடவே மதுவினைக் குடிக்க தூண்டும் ஒரு சமூக அமைப்பு..இதனைத் தான் இன்றைக்கு நமது நாடு வளரும் இளம் தலைமுறையினருக்கு தந்துக் கொண்டு இருக்கின்றது. தன்னைச் சுற்றி நடக்கும் அரசியலை அறிந்துக் கொள்ளும் முன்னரே ஒருவனை இந்த அரசு கையறு நிலைக்கு கொண்டு சென்று விடுகின்றது. அங்கே தான் அந்த அரசின் வெற்றி அடங்கி இருக்கின்றது.

காமராஜரின் காலத்தில் இலவசமாகவும் அரசாங்கத்தின் கையிலும் இருந்தக் கல்வி இன்று தனியார் வசமாகவும் காசிருந்தால் மட்டுமே கிடைக்கக் கூட ஒரு பொருளாகவும் இருக்கின்றது.

கிராமத்திற்கு கிராமம் நூலகம் இருக்கின்றதோ இல்லையோ...தெருவிற்கு தெரு மதுபானக் கடைகள் இருக்கின்றன...!!!

கல்வியினை முடித்து தனது கனவுகள் என்ன? தான் என்ன ஆக வேண்டும்...எனது திறமைகள் என்ன? என்பதை ஒருவன் அறியும் முன்னரே அவனைக் கடன்காரன் ஆக்கி..கடனை அடைத்து விட்டு என்னவேண்டும் என்றாலும் செய் என்று ஒரு முடிவில்லாத சக்கரத்தினுள் இந்த சமூகம் அவனை தள்ளி விட்டு விடுகின்றது.அவனும் அவனைப் பற்றி அறிந்துக் கொள்ளாமலே சுழல ஆரம்பித்து விடுகின்றான். பாவம் அவனது கல்வி முறை அவனுக்கு சிந்திக்கச் சொல்லித்தரவில்லை. இப்படிப்பட்ட ஒருவன் எவ்வாறு நாட்டில் புரட்சியையோ மாற்றத்தையோ கொண்டு வர முடியும்...அவனது இயலாமையை நொந்துக் கொண்டே காலத்தைக் கடத்த வேண்டும் என்றால் முடியும்...அவனுக்கு ஆறுதலாக மதுவையும் அரசே தருகின்றது. நிற்க

இது தான் நிலைமை...பெரிய சதி வலையினை மேலோட்டமாகத் தான் நாம் இங்கே கண்டுள்ளோம்...இருந்தும் இப்போதைக்கு இது போதும். உங்கள் அரசாங்கம் உங்களை ஒற்றுமை உள்ளவர்களாகவும் சிந்திப்பவர்களாகவும் இருப்பதை விரும்பவில்லை.

"மக்கள் கடன் வாங்கினால் தான் வங்கிகள் செயல்பட முடியும்...நாடும் இயங்க முடியும்" என்று அரசியல்வாதிகள் கூறுவது உண்மை தான். காரணம் நாம் கடனினை வாங்கினால் தான் அரசாங்கத்தை எதிர்க்க மாட்டோம்...அப்படி இருந்தால் தானே அவர்கள் அரசாள முடியும்...அதனால் தான் அவர்கள் கடன் வாங்க மக்களை தூண்டுகின்றனர்...மூளைச் சலவை செய்கின்றனர்...கூடவே கடனினை வாங்கியே ஆக வேண்டிய நிலைக்கு மக்களை வலுக்கட்டாயமாக கொண்டு வருகின்றனர்.

இன்றைய அரசுக்கு தேவை,

கடன்காரர்களும் குடிகாரர்களும் தான்...இருவராலும் எந்த ஒரு மாற்றமும் நிகழப் பெறாது.

வருந்தத்தக்க விடயமாக நமது நாட்டினில் மக்களுள் பெரும்பாலானோர் அந்த இரண்டு பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவிலாவது வந்து விடுவர்...நீங்களே சிந்தியுங்கள்,

1) குடி பழக்கம் உள்ளவர்
2) கடனில் இருப்பவர்
3) மேலே உள்ள இரண்டுமே இருக்கின்றவர்
4) மேலே உள்ள இரண்டுமே இல்லாதவர்

இந்த நான்கு பிரிவுகளில் நமது மக்கள் அல்லது நாம் எந்த பிரிவில் வருவோம் என்றே எண்ணிக் பாருங்கள். நிச்சயமாய் 20 வருடங்களுக்கு முன்னர் நாலாவது பிரிவில் எண்ணிக்கை அதிகமாக இருந்து இருக்கும்...ஆனால் இன்றோ மூன்றாவது பிரிவின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும். இதில் தான் நமது வீழ்ச்சியும் அரசியல்வாதிகளின் வெற்றியும் அடங்கி இருக்கின்றது. (இவை மட்டுமே காரணம் கிடையாது...இன்னும் பல இருக்கின்றன...ஆனால் இந்த பதிவில் நாம் அவற்றைப் பற்றிப் பார்க்க நேராததால் அவற்றைக் குறிக்கவில்லை)

 
சரி இருக்கட்டும்...பிரச்சனைகளின் தன்மையையும் காரணத்தையும் மேலோட்டமாக கண்டாயிற்று...இதற்கான தீர்வினைக் காணாது விட்டோமென்றால் நாம் இது வரை கண்டவை வெறும் எழுத்துக்களாய்ப் போய் விடும்...எனவே நம்மால் என்ன செய்ய இயலும்...என்ன செய்ய வேண்டும் என்றும் நாம் காண்பது தான் நலமாக இருக்கும்...

1) "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்ற பழைய தத்துவத்தின் வழி பேராசையை குறைத்து நமக்கு இன்றியமையாத தேவைகளில் மட்டுமே கவனத்தினை செலுத்த முயல்வது.

2) "இன்றியமையாத தேவை" என்ன என்பதில் ஒவ்வொருக்கும் கருத்து வேறுபாடுகள் நிச்சயம் இருக்கும் என்பதனால் தேவைகள் என்று கருதுபவைகளை கடனின்றி வாங்க முயல்வது. இன்றைய நிலையில் கல்வி போன்ற விடயங்களின் விலையினை மாற்ற அரசியல் மாற்றங்கள் தேவையாக இருக்கின்றன, எனவே அரசியல் மாற்றங்கள் நிகழும் வரை மாணவனை கடன் வாங்காதே என்றுக் கூறுவது அவனுடைய படிப்பினை மறைமுகமாக நிறுத்துவதாகவே அமையும்...எனவே இன்றைய நிலைக்கு ஆடம்பரம்/பேராசை காரணமாக வாங்கும் பொருட்களையாவது கடனின்றி வாங்க முயல்வது.

3) இயன்றவரை கடன் அட்டை முதலியவற்றை பயன்படுத்தாமல் இருப்பது.

4) நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்கிக் கொள்ளாது பொருள் மோகத்தை விடுத்து சேமிக்க துவங்குவது.

5) குடிப்பது எனது தனி உரிமை அதில் குறை கூற யாருக்கும் உரிமை இல்லை என்று எண்ணாமல், நாம் குடிப்பது மற்றவரையும் (பள்ளிக் குழந்தைகள் முதற்கொண்டு) குடிக்க தூண்டுகிறது என்பதையும் அது ஒரு நிலையில்லாத சமூகத்தை உருவாக்குகின்றது என்பதையும் உணர்ந்து பொறுப்புணர்ச்சியுடன் குடியை நிறுத்த முயல்வது.

6) நண்பர்கள் குடித்தார்கள் என்றால் பொழுதுபோக்கிற்காக அவர்களுடன் சேர்ந்து குடிக்க பழகாமல், அவர்களின் மேலும் நமது சமூகத்தின் மீதும் உண்மையான அக்கறையுடன் அவர்களை குடியை நிறுத்துமாறு நட்புடனும் உரிமையுடனும் கூற முயல்வது

7) சிந்திக்கும் நண்பர்கள் சேர்ந்து சிந்தனைகளை ஒன்றிணைத்து மற்ற மக்களையும் எவ்வாறு சிந்திக்க வைப்பது என்று எண்ணத் துவங்குவது

8) அன்பால் ஒற்றுமையுடன் இருக்க முயல்வது

9) நற்பண்புகளையும், நல்ல குணங்களையும் சமூகத்தில் பரப்புவது

இவை மட்டுமே தீர்வுகள் கிடையாது...மேலும் சிந்திக்கச் சிந்திக்க தீர்வுகள் நிச்சயம் புலப்படத் தான் செய்யும்...அதற்கு நாம் சிந்திக்க வேண்டும்...!!!

செய்வோமா...நாம் செய்வோமா...!!!


முந்தையப் பகுதி

சாத்தானையும் பயன்படுத்துகிறவர் கடவுள்

கடவுள் சாத்தானையும் பயன்படுத்துகிறவர். ஏனெனில் சாத்தான் கடவுளை மீறி எதுவும் செய்ய இயலாது. இதற்கு பைபிளில் சான்றுகள் இருக்கின்றன. சாத்தானையே பயன்படுத்துகின்றவர் என்றால் அவரால் ஐரோப்பியர்களை பயன்படுத்த முடியாதா?

இன்று வரை நூல்களையும் அழியாமல் பாதுகாத்து வந்திருக்கின்றார்கள். நூல்களும் அழியாமல் பாதுகாக்கப்பட்டமையால் தான் அவற்றின் அடிப்படையில் நாம் ஆய்ந்து உண்மை வரலாற்றை வெளியேக் கொண்டு வர வாய்ப்புக் கிடைத்து உள்ளது. இன்று உலகம் முழுவதும், அனைத்து நாடுகளிலும், அனைத்து பிரிவு மக்களிடத்திலும் பைபிள் இருக்கின்றதென்றால் இதற்கு காரணம் ஐரோப்பியர். கிருத்தவ மதம் இன்று ஓர் உலகப் பெரும் மதமாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஐரோப்பியரே.

பரிசுத்த ஆவியானவர்

பைபிள் உருவாகாத காலத்தில் செயல்பட்ட பரிசுத்த ஆவியானவர் பைபிள் செல்லாத இடங்களிலும், பைபிளுக்கு தவறாக விளக்கம் கொடுக்கப்படும் இடங்களிலும் கூட அவருடைய செயலை யாரும் கட்டுப்படுத்த முடியாதல்லவா? எல்லா காரியங்களையும் அதனதன் காலத்தில் சிறப்பாக செயல்படுத்துகிறவர் பரிசுத்த ஆவியானவர்.

மக்கள் ஆட்சியும் விசுவாசத் தளர்ச்சியும்

மன்னர் ஆட்சிக் காலம் மறைந்து மக்கள் ஆட்சிக் காலம் உலகம் உழுவதும் மலர்ந்துக் கொண்டிருக்கின்ற இந்த காலத்தில், மக்கள் ஆட்சிக் காலச் சிந்தனையின் விளைவாகக் கேள்விகள் கேட்கத் தொடங்கும் பொழுது சரியான விடை கிடைக்காமையால் விசுவாசம் தளர்ந்து, வேறு மதங்களுக்கும், கடவுள் நம்பிக்கையற்றவர்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஐரோப்பியர் ஆட்சி செய்யும் இடங்களில் திருச்சபைகள் காலியாகி திருச்சபைக் கட்டடங்கள், விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எப்படியாவது ஆட்கள் வந்தால் போதும் என்னும் நிலையில் ஓரினச் சேர்க்கையாளர்களை அவர்கள் அங்கீகரித்து அவர்களுடைய திருமணங்கள் திருச்சபைகளில் நடத்தப்படுகின்றன.

ஓரினச் சேர்க்கையாளர்கள் போதகர்களாகவும், பேராயர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர். கிறித்தவக் கோவில்களுக்கு ஆட்கள் வந்தால் போதும் என்னும் நிலைக்கு ஐரோப்பியர்கள் சென்று கொண்டிருக்கின்றார்கள். இதை ஆன்மிகம் என்று எவ்வாறு கூற முடியும்? இவையாவும் மன்னர் ஆட்சிக் காலப்பிடியில் இருந்து விடுபட்டு, மக்கள் ஆட்சிக்காலம் நடைபெறுவதால் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள், கிருத்தவ மதம் பற்றி மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் பதில் கொடுத்து, மக்களுடைய விசுவாசத்தைப் பாதுகாக்கும் ஆற்றல் ஐரோப்பியர்களிடம் இல்லை.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.
 
 
2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்
மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன...!!!
 
முதல் மதிப்பெண்கள் பெற்றோர், மாணவ மாணவியர்களின் தேர்ச்சி விகிதங்கள், மாவட்டவாரியான தேர்ச்சி விகிதங்கள் ஆகியவைகளைப் பற்றிய கருத்துக்களும் பாராட்டுக்களும் விவாதங்களும் எங்கும் நிச்சயம் நடைப்பெற்றுக் கொண்டே இருக்கக் கூடிய ஒரு தருணம் தான். கூடவே அன்றைய பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளிக்கூட நினைவுகளையும் தாங்கள் தங்களது மதிப்பெண்களைப் பெற்ற தருணங்களையும் சிறிதே அசைப் போட்டுக் கொள்ளும் தருணமும் தான்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இன்றைய பள்ளி ,மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை நோக்கி கனவுகளுடனும், அன்றைய பள்ளி மாணவர்கள் தங்களது கடந்த காலத்தை பெருமூச்சுடனான நினைவுகளுடனும் கண்டுக் கொண்டு இருக்கும் ஒரு தருணம். இதில் நாம் அந்த எதிர்காலத்திற்கான கனவுகளையும் சரி பெருமூச்சினை விட வைக்கும் நினைவுகளையும் சரி கண்டோம் என்றால் அவற்றில் ஆயிரம் ஆயிரம் விடயங்கள் பொதிந்து இருக்கும். நிச்சயம் அவைகள் முக்கியமானவைகள் தாம்...!!!

இத்தருணத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சிலருடன் ஒரு பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு சென்ற பொழுது நிகழ்ந்த நிகழ்வினை இங்கே கூற விரும்புகின்றேன்.

நான் காமராஜர் பிறந்த ஊரினைச் சேர்ந்தவன். வேறு எந்த பெருமையும் பெரிதாக இல்லாத நிலையில் "காமராஜர் எங்க ஊரு தெரியுமாடே.." என்றே பெருமைப் பேசித் திரிந்தவர்களும் ஒருவன். பெருமைப் பேசுவதைத் தவிர காமராஜருக்காக வேறு ஏதாவது செய்து இருப்போமா என்றால் சந்தேகமே.

ஆனால் ஒன்றை மட்டும் செய்துக் கொண்டு இருந்தோம்...தொடர்ந்து 25 வருடங்களாக அரசு பள்ளித் தேர்வுகளில் மாவட்டங்களின் தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்திலே முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருந்தோம்.

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அந்த சாதனையைக் குறித்து மாவட்டத்தில் அனைவருக்கும் ஒருவித பெருமை இருக்கத் தான் செய்தது. "நம்ம உண்மையிலேயே அவ்வளவு நல்லா படிக்குறோமா?" என்றே சந்தேகம் மனதினில் இருந்தாலும் வருடங்கள்தோறும் வந்த தேர்வு முடிவுகள் சாதனைக்கான வருடத்தினைக் கூட்டிக் கொண்டே செல்ல வேறு முடிவிற்கு வர இயலவில்லை.

இந்நிலையில் தான் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சிலருடன் ஒரு பள்ளியில் விழா ஒன்றிற்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. பயண தூரம் அதிகமாக இருந்ததால் மெதுவாக அவர்களிடம் இத்தலைப்பினைப் பற்றி பேச ஆரம்பித்தேன்.

"ஐயா...நம்ம மாவட்டம் மட்டும் எல்லா வாட்டியும் தேர்ச்சி விகிதத்தில முதலா வருதே...அது எப்படிங்கையா" என்றே ஆரம்பித்தேன்.

"அது ஒண்ணும் இல்லடே...நம்ம ஊர்காரங்களுக்கு படிப்புதேன் எல்லாம்...வேற வழி கிடையாது...மற்ற மாவட்டத்துல எல்லாம் வயலு...விவசாயம் அப்படி இப்படின்னு பொழைக்க வழி இருந்துச்சி...ஆனா நம்ம ஊரு பக்கம் படிச்சாத்தான் பொழைக்க வழி...அதுனால நம்ம ஊரு பக்கம் பெரியவங்க எல்லாம் நெறைய பள்ளிக்கூடத்த கட்டினாங்க...படிக்க வரவனும் ஒழுங்கா படிச்சான்...வாத்தியார் அடிச்சாலும்..சரி அடி வாங்கியாவது படிக்கலாமே அப்படின்னு இருந்தான்...ஆனா மற்ற ஊர்ல வாத்தியார் அடிச்சாருனா...அவன் என்னை என்ன அடிக்குறது அப்படின்னு கோச்சிக்கிட்டு அவன் அவன் வயலுல போயி வேல பார்க்க ஆரம்பிச்சுடுவானுங்க...அதனால நம்ம மாவட்டம் மற்ற மாவட்டத்த விட நல்ல மதிப்பெண்களையும் தேர்ச்சி விகிதத்தையும் தந்துச்சி...அப்படியே தொடர்ந்து கொஞ்ச வருசமா அப்படியே முதல் இடத்துல இருந்ததால அதுவே ஒரு இலக்கா மாறிடுச்சி...புதுசா வர வாத்தியாரும் "முன்னாடி இருந்த வாத்தியார் காலத்துல இருந்த சாதனை நம்ம இருக்கும் போது போச்சினா நல்லா இருக்காது..அதுனால நல்லா சொல்லித் தரனும்" அப்படின்னு நெனச்சி உழைக்க தொடர்ந்து முதல் இடத்துல இருக்கோம்...அவ்வளவு தாம்டே...மற்றபடி வேற ஒண்ணும் கெடையாது...ஆனா இனியும் இருப்போமானு தெரியாதுடே..." என்றார்.


"ஏன்யா அப்படி சொல்றீங்க..?" என்றேன்.

 
"பின்ன என்னடே...இப்ப எல்லாம் எவன் படிப்பையும் வாத்தியாரையும் மதிக்குறான்...படிப்ப வியாபாரமா பாக்குறான்...சொல்லிக்கொடுக்குற வாத்தியார பசங்கள எப்படியாச்சும் கசக்கிப் பிழிஞ்சி நூத்துக்கு நூறு எடுக்க வைக்குற இயந்திரமா பாக்குறான்...முன்னாடி எல்லாம் படிக்காம இருந்து இருந்தாலும் படிப்போட மதிப்பு தெரிஞ்சி ஊரு முழுக்க பள்ளிக்கூடம் கட்டி விட்டாங்க...ஆனா இப்ப அந்த பள்ளிகூடத்துல எல்லாம் படிச்சவன் தான் மேல ஒக்காந்துக்கிட்டு படிப்ப வித்துகிட்டு இருக்கான்...படிக்காதவனுக்கு தெரிஞ்ச படிப்போட அருமை படிச்சவனுக்கு தெரியலையே...இப்ப கூட எங்களுக்கு சொல்லிக் கொடுத்த வாத்தியார பார்த்தோம்னா மரியாதையோட தான் பேசுவோம்...ஆனா இப்ப எப்படிடே நெலம இருக்கு...வாத்தியாரும் பையனுமே சேர்ந்து தண்ணி அடிக்குறான்...அப்புறம் எப்படிடே வாத்தியார பையன் மதிப்பான்...அவன் சொல்லிக் கொடுக்குறத அவன் கேப்பான்? எல்லாத்தையும் கெடுத்து குட்டிச் சுவராக்கிப் புட்டானுவ...பையனுங்களுக்கு சொல்லிக் கொடுக்கணும் அப்படின்னு எவன்டே இப்ப வாத்தியார் வேலைக்கு வரான்...எல்லாவனும் வேற வேல கெடைக்காம வாத்தியாரா வரான்...இவன் எப்படி ஒழுங்கா பாடத்த சொல்லிக் கொடுப்பான்...இவன் சொல்லிக் கொடுக்க நெனச்சாலும் மேல இருக்குறவன் எனக்கு நூத்துக்கு நூறு கொடு அப்படினுல கேக்குறான்...இதுல எங்க போயி பையன புரிஞ்சிகிட்டு சொல்லிகுடுக்குறது. போதாக்குறைக்கு இந்த சினிமா வேற...முன்னாடி எல்லாம் எல்லா வேலையையும் முடிஞ்சதுக்கு அப்புறமா சாயங்கால நேரத்துல என்னிக்காச்சும் தான் இந்த கூத்து கீத்துன்னு நடக்கும்...அதுவும் பொழுதுபோக்குன்னு தான்...ஆனா இப்ப பாரு...எல்லாமே இந்த சினிமாவும் சினிமாக்காரனுங்களும் தான்...இவன் படிக்குறதே நாலு காசு சம்பாதிச்சி சினிமா பார்க்கத்தான் போலல இருக்கு...அப்படில இப்பலாம் இருக்கானுங்க...காலங்காத்தாலையே சினிமா கொட்டாயிலல இவனுங்க போய் நிக்குரானுங்க...ஆள்றதும் சினிமாக்காரன்...பள்ளிக்கூடத்துல ஏதாவது நிகழ்ச்சினா அங்கேயும் சினிமாக்காரன்...அவனுக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம்...இல்லைனா இவனைப் பார்த்தா அந்த பையனுங்க என்ன கத்துப்பானுங்க அப்படின்னு எவனாவது கேட்டானா...எவனுக்கும் அக்கறை கிடையாது...அவன் அவனுக்கு அவன் பொழப்பு ஓடணும்...அப்புறம் எப்படி பையன் ஒழுங்கா இருப்பான்..இந்தா நம்ம ஊர்லையே வாத்தியார ஒரு ஒன்பதாப்பு படிக்குற பையன் கத்தியாலல குத்தி இருக்கான்...இன்னும் கொடுமை வகுப்புலயே கஞ்சா அடிச்சி மாட்டி இருக்கானுங்க...இது எல்லாம் நல்லதுக்கா...ஆனா இத பத்தி எல்லாம் கவலைப் படாம ஒரு மக்கம் அரசாங்கமே அவன குடிக்க சொல்லிக்கிட்டு இருக்கு...இன்னொரு பக்கம் வெறும் மதிப்பெண் மட்டும் எடுக்குற பிராய்லர் கோழியா அவன இந்த பள்ளிக்ககூடங்கள் மாத்திகிட்டு இருக்கு...பையன் சிந்திக்கவே கூடாது அப்படினே படிப்ப சொல்லிக் கொடுத்துகிட்டு இருக்கானுங்க...அதுலையும் குறிப்பா இந்த நாமக்கல் பக்கம் இருக்குற பள்ளிக்கூடத்தை பத்தி கேள்விப்பட்டு இருப்ப...இருக்குறதுலையே மோசமான அந்த பள்ளிக்கூடங்கள்ல தான் எல்லா பெற்றோரும் அவங்க பசங்கள வெறும் மதிப்பெண்ணுக்காக சேர்க்க நெனைக்கிறாங்க...பெத்தவங்களே அப்படி நினைக்கும் போது வியாபாரமா கல்விய விக்குறவனுக்கு என்ன கவலை...இந்த நெலமைல எல்லா ஊருமே அவனுங்கள போலத்தேன் மாறப் பாக்குதுங்க...அதனால தரமான கல்வியோ இல்ல ஆசிரியரோ இல்லாம தான் போகும்...அதனால...அந்த நிலைல...தொடர்ந்து இந்த சாதனை எல்லாம் நம்மகிட்ட இருக்கும்னு சொல்ல முடியாதுடே...ஒழுங்கான கல்வியே இருக்காதாம் அப்புறம் என்ன இதுக்கு சாதனை கழுத குதிரைன்னு கேக்குறேன்..." என்றவாறே அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்த அவருடைய கூற்றில் இருந்த விடயங்களைக் குறித்து சிந்தித்தவாறே என்ன செய்யலாம் என்றே யோசிக்க ஆரம்பித்தேன்.


ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது...படிக்காதவங்களுக்கு தெரிஞ்சி இருந்த படிப்போட அருமை படிச்சவங்களுக்கு சுத்தமா தெரியல...அவங்களை பொருத்தவரை கல்வினா வியாபாரம்...அறிவுனா மதிப்பெண். அவ்வளவே...!!!


இந்நிலையில்...


"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"


என்பன போன்றவை வெறும் வார்த்தைகளின் சேர்க்கைகளாகவே இருக்குமே தவிர அவற்றில் யாதொரு அர்த்தமும் இருக்கப்போவதில்லை....இன்றைய இளைய சமூகம் ஆர்வமாய் பெற்று இருக்கும் மதிப்பெண்களைப் போன்றே...!!!


சிந்திக்க வைப்பதே கல்வி...!!!
நற்பண்புகளையும்...மனிதத்தையும் வளர்ப்பதே கல்வி...!!!
உதவும் மனப்பாங்கையும் சகோதரத்துவத்தையும்...நல்ல சமூகத்தை கட்டமைக்கும் கடமை உணர்ச்சியையும் வளர்ப்பதே கல்வி...!!!

இன்று நாம் கற்பது கல்வி அல்ல...வெறும் புத்தகங்கள்!!!


விவிலியத்தில் கிருத்துவ வாழ்க்கை முறை விரிவாக இல்லையே ஏன்?

புதிய ஏற்பாட்டில் கிருத்தவ வாழ்க்கை முறையைக் கூறும் பகுதி, பழைய ஏற்பாட்டில் யூத வாழ்க்கை முறையைக் கூறும் பகுதி விரிவாக இருப்பதைப் போன்று விரிவாக இல்லையே - ஏன்?

கிருத்தவர்களை வேட்டையாடிய ரோம அரசர்கள் உருவாக்கியுள்ள புதிய ஏற்பாட்டில் கிருத்தவ வாழ்க்கை முறையை விரிவாகச் சேர்த்தால் அப்பகுதியில், கிருத்தவர்கள் ரோம ஆட்சியாளர்களின் பிடியில் பட்ட பாடுகளின் அனுபவமாகத்தானே இருக்கும்; அதை எப்படி ரோம ஆட்சியாளர்களின் புதிய ஏற்பாட்டில் சேர்க்க முடியும்?. முடியாது.

இது முதல் காரணம், இரண்டாம் காரணம், கிருத்தவ மதப் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில், கிருத்தவ வாழ்க்கை முறைப்பகுதி இல்லாமல் இருப்பதால் தானே, கிருத்தவ அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கு பழைய ஏற்பாட்டுப் பகுதிகளை மேற்கோளாக வாசிக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்படுகிறது.

இதன் வழி இயேசு கிருத்துவின் ஆன்மீகச் செய்தி பழைய ஏற்பாட்டின் அரசியல் செய்திக்கு உட்படுத்தப்படுகிறது. இவற்றை உள்ளத்தில் கொண்டே ரோம ஆட்சியாளர்களால், புதிய ஏற்பாட்டில் கிருத்தவ வாழ்க்கை முறை பற்றிய செய்திகள் இணைக்கப்படவில்லை.

இவற்றை நாம் அறிய வேண்டுமானால் பைபிளை விட்டு திருச்சபை வரலாற்றுக்கு போக வேண்டி இருக்கிறது. இது ஐரோப்பிய ஆட்சியாளர்களின் இயேசு கிருத்துவின் இரட்சிப்பின் செய்திக்கு எதிரான திட்டமிட்ட சதியாகும்.

இந்த திட்டமிட்ட சதிகளால் ஐரோப்பியர்கள் அடைந்துள்ள இலாபங்கள் யாவை?

இன்று வரை உலகில் வாழ்ந்த உலகளாவிய ஆட்சியாளர்களில் முன்னிலையில் இருப்பவர்கள் ஐரோப்பியாவில் வாழும் ஐரோப்பியர்களும், ஐரோப்பாவிலிருந்து வேறு நாடுகளில் குடியேறி அங்கு ஆட்சி அமைத்த ஐரோப்பியர்களும் மட்டுமே.

இந்த நிலை இவர்களுக்கு கிடைக்க காரணமாக இருப்பவை இவர்களால் தொகுக்கப்பட்ட பைபிளும், பைபிளுக்கு இவர்களுடைய அரசியல் நோக்கில் இவர்களால் போதிக்கப்பட்டு வரும் விளக்கங்களுமே ஆகும்.

இவர்களால் தொகுக்கப்பட்ட பைபிளும், பைபிளுக்கு இவர்கள் கொடுக்கும் விளக்கங்களும், கடந்த ஆண்டுகளாக கிருத்தவ மதம் என்னும் நிலையில் ஐரோப்பியர் தலைமையிலேயே இன்று வரை இயங்கி வருகின்றன. இவர்களை மீறி யாரும் இதில் நுழையவும், இயங்கவும் முடியாதபடி கிருத்தவ மதத்தின் சட்டதிட்டங்கள் ஒரு சர்வாதிகார அமைப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

ஆகவே ஐரோப்பியர்களிடம் இரண்டு வகையான படைகள் இருக்கின்றன.

1. மற்றவர்களுடைய உடலை அடிமைப்படுத்த பயன்படும் படைக்கருவிகளைக் கொண்ட போர்ப் படை

2. மற்றவர்களுடைய உள்ளத்தை மூளைச் சலவை செய்து அடிமைப்படுத்தும் கிருத்தவ மதத் தலைவர்களும் பிரச்சாரர்களும் அடங்கிய மூளைச் சலவைப்படை.

கற்றுக் கொடுத்தல் வேறு; மூளைச் சலவை செய்தல் வேறு.

கற்றுக் கொடுத்தல் மற்றவர்களைச் சிந்திக்கவும், கேள்விகள் கேட்கவும் தூண்டுதல்.

மூளைச் சலவை செய்தல் நம்பு, சிந்திக்காதே, கேள்விகள் கேட்காதே என்று சிந்தனையைத் தடுத்தல்.

உடலை வன்முறையின்வழி அடிமைப்படுத்தும் போர்ப்படை அரசியல் களத்திலும், உள்ளத்தை மூளைச் சலவைச் செய்து அடிமைப்படுத்தும் படை, ஆன்மீகக் களத்திலும் இடைவிடாது வேலை செய்துக் கொண்டு இருக்கின்றன.

இதனால் ஐரோப்பியர் தங்கள் இனம் குறித்தும், நிறம் குறித்தும், தங்கள் ஆட்சி குறித்தும், செல்வம் குறித்தும், செல்வாக்குக் குறித்தும் பெருமைக் கொண்டு மற்றவர்களை அற்பமாக எண்ணும் ஆணவ நிலையில் இருக்கின்றனர் என்பதும், இயேசு கிருத்துவின் இரட்சிப்பு என்பது இவர்களுக்கு பயன்படும் ஒரு கருவி என்பதும் இவர்களுடம் நாம் நடத்திய கடிதப் போக்குவரத்தின் வழி நமக்குப் புரிந்தது.

"போப்பாண்டவர் பதவி" எனபது கிருத்துவின் மீட்பைச் சிறப்பிக்கும் பதவி என நாம் நம்பி, போப்பாண்டவருக்கு கடிதம் எழுதிய பொழுது, அப்பதவி ரோம ஆட்சியாளர்களின் அரசியலுக்கான பதவி என்பதை நாம் புரிந்துக் கொள்ளுமாறு போப்பாண்டவரின் பதில் இருந்தது.

போப்பாண்டவர் தேர்தலில் உள்ள குறைகளை நாம் சுட்டிக்காட்டி அதை நிறைவு செய்வதற்கான வழிவகைகளை நாம் எழுதிய பொழுது அவர்களால் அதற்கு பதில் எழுத இயலவில்லை.

அவ்வாறே உலகம் முழுவதிலும் உள்ள ஆங்கிலத்திருச்சபையின் தலைவராகிய "Arch Bishop of Canterbury" யுடன் நடத்திய கடிதப் போக்குவரத்திலும், இங்கிலாந்து ஆட்சியாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பதவியே திருச்சபைத் தலைவர் பதவி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியதாயிற்று.

அவ்வாறே பெந்தகொஸ்தே சபைக் கொள்கையின் உலக தலைவர்களோடு நடத்திய கடிதப் போக்குவரத்தும், அவர்களுடைய அரசியல் சிந்தனையையே நாம் புரிந்து கொள்ள வேண்டியதாயிற்று.

இன்று உலகிலுள்ள இனவெறி, நிறவெறி, ஜாதிவெறி அனைத்தையும் ஐரோப்பியர், கிருத்தவ மதத்தின் வழி எவ்வாறு பாதுகாத்து வளர்த்து வருகின்றார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியதாயிற்று.

இவர்கள் இவ்வாறு நடந்துக் கொள்வதற்கு அடிப்படைக் காரணம் என்ன? - அறியாமை

இவர்கள் கையில் விளக்கை வைத்துக் கொண்டு குழியில் விழுவது ஏன்? குருட்டாட்டம். மனிதனுக்கும், குரங்குக்கும் ஐரோப்பியர்களுக்கு வேறுபாடு தெரியாது.

ஐரோப்பியர்கள் எக்காலத்திலும் ஆன்மீகச் சிந்தனை உள்ளவர்கள் அல்லர் என்பது வரலாறு. வணிகத்தில் சிறந்தவர்கள். மற்றவர்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்வதில் வல்லவர்கள்.

"Man is a Social Animal" என நம்புகிறவர்கள்:

இவர்கள், அறிவியலில், அதாவது உடலைப்பற்றிய ஆய்வாகிய அறிவியலில் சிறந்தவர்கள். உலகிலுள்ள உயிரினங்களுக்கு இருக்கும் உயிரைப் பற்றியும், மனிதருக்கு மட்டுமே இருக்கும் ஆன்மாவைப் பற்றியும், மனிதருக்கு ஆன்மாவைக் கொடுத்த கடவுளைப் பற்றியும், கடவுளை உணர முடியாது தடுக்கும் ஆணவம் பற்றியும் இவர்களுக்குத் தெரியாது.

ஐரோப்பாவில் எந்த மதமும் உருவாகவில்லை. உலக மதங்கள் அனைத்தும் ஆசியாவில் மட்டுமே உருவாகியுள்ளன. இதனால் ஆன்மீக விசயத்தில் ஐரோப்பியர்களைக் குறை கூறிப் பயனில்லை. ஐரோப்பா ஒரு குளிர் கண்டம். இதனால் ஐரோப்பியர்கள் இயற்கையுடன் போராட வேண்டும். அவர்களுடைய கவனம் அதில் செல்லவில்லையானால் அவர்கள் இயற்கையால் அழிக்கப்பட்டு விடுவார்கள்.

ஆகவே அவர்கள் தங்கள் கவனத்தை எல்லாம் இவ்வுலக வாழ்விற்காகவே செலவழிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்காகவே தங்கள் நேரத்தைச் செலவழிக்கின்றார்கள். இதனால் இந்த உலக வாழ்வு நிலையில், அரசியலிலும், வணிகத்திலும் சிறந்து விளங்குகின்றார்கள்.

ஆன்மிகம் அவர்கள் கையில் மாட்டிக் கொண்டதே தவிர, அவர்கள் ஆன்மீகத்தை தேடிச் சென்று கண்டடைந்தவர்கள் அல்லர். ரோம அரசனாகிய கான்ஸ்டன்டின் ஆட்சியில் கிருத்துவம் இயல்பாக அவனுடைய அரவணைப்பின் கீழ் வந்தது. அதுவும், அரசியல் வெற்றிக்கான அவனுடைய காட்சியில் சிலுவையைப் போன்ற சின்னம் அவனுடைய அரசியல் வெற்றிக்குப் பயன்பட்டமையால், கிருத்துவத்தை அரவணைத்தான். பின்னரும் இவர்கள் வளர ரோம ஆட்சியாளர் கிருத்துவத்தை அவர்களுடைய அரசியலுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளுவது ஆட்சியாளர்களின் இயல்பு.

அந்த இயல்பின்படி அவர்கள் செய்து வருகின்றார்கள். இதனால் அவர்களைக் குறை கூறிப் பயனில்லை.

தொடரும்...!!!

பி.கு:
 
1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.
 
2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்
மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842
 
3) பெந்தகோஸ்தே தலைவர்கள் என்று பலர் இருக்கின்ற காரணத்தாலும், அச்சபைப் பிரிவு அண்மைக்காலத்தில் தோன்றியதாக இருப்பதாலும், அவர்களுடன் நடத்திய கடிதப் போக்குவரத்துத் தவிர, மற்ற இருபெரும் அமைப்புகளுடனும் நடத்திய கடிதப் போக்குவரத்து இந்த நூலின் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது.

நெறைய பேச வேண்டி இருக்குங்க...ஊருக்குள்ள அம்புட்டு நடக்குது...ஆனா எல்லாத்தையும் கவனிக்கவும் மாத்தவும் யாருக்குங்க நேரம் இருக்கு நமக்கு இருக்குற வேலைய பாக்குறதுக்கே நேரம் சரியா இருக்கு...இருந்தாலும் சில விசயமெல்லாம் சொல்லித் தான் ஆக வேண்டி இருக்குங்க...என்ன பண்றது நாட்டு நெலம அப்படி இருக்கு...
 
எல்லாம் ஆரம்பிச்சது இந்த டாடா கம்பெனிகாரன் வெளம்பரத்துல தானுங்க. ஏதோ 'டாடா வாட்டர் பிளஸ்' ஆம்...இது தண்ணிக்கும் மேலேயாம்...அப்படின்னு அவனுங்களே சொல்லிக்கிட்டானுங்க...அட என்னடா இது தண்ணின்னு சொல்றானுங்க ஆனா தண்ணிக்கும் மேல அபப்டின்னு சொல்றானுங்களே...அப்படி என்னத்தான் இருக்குன்னு பார்த்தோம்னா...அந்த தண்ணில செம்பு இருக்காம். அது உடம்போட நோய் எதிர்ப்பு சக்திய கூட்டிடுதாம்...அதனால அந்த தண்ணிய குடிச்சா ஆரோக்கியமா இருப்போமாம். இப்படி சொல்லி தண்ணிய பாட்டிலே அடைச்சி வியாபாரம் பண்ண வந்துட்டானுங்க.
 
ஆகா நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் தண்ணீரா...மாபெரும் கண்டுபிடிப்பு அப்படின்னு கொண்டாடி இருக்கலாம் தான்...ஆனா பிரச்சனை என்னன்னா இது ஒண்ணும் புதிய விசயமே இல்லை அப்படிங்கிறது தான்.
 
சின்ன வயசுல எங்க வீட்ல எல்லாம் தண்ணிய செம்புப் பானைல தான் வச்சி இருப்பாங்க...அந்த தண்ணிய குடிச்சிபுட்டு ஆடாத ஆட்டமும் இல்லை...சுத்தாத இடமும் இல்லை...தண்ணி மாறிடுச்சி அதுனால உடம்புக்கு சேரல அப்படின்னு படுத்ததும் கிடையாது. ஆடுற இடத்துல எல்லாம் தண்ணி எங்க கிடைக்குமோ அங்க எல்லாம் கிடைக்குற தண்ணிய குடிச்சிபுட்டு ஆடிகிட்டே இருப்போம்.
 
ஆனா பாருங்க மக்களே...ஒழுங்கா இருந்தவனுங்ககிட்ட 'உங்க தண்ணில கிருமி இருக்கு...குடிச்சா நோய் வரும்' அப்படின்னு பீதிய கிளப்பியே 'மினெரல் வாட்டர்' ஐ வியாபாரம் பண்ண ஆரம்பிச்சானுங்க...கூடவே தண்ணீர் ஐ சுத்தப்படுத்தும் கருவிகள் அப்படின்னு இன்னொரு பக்கமும் வியாபாரத்த பெருக்குனானுங்க. கிருமி, நோய் அப்படின்னு பயத்த உண்டு பண்ணியே நம்மகிட்ட இருந்தத அழிச்சிபுட்டு அவனுக்கு எது காச தருமோ அத தலைல கட்டுனானுங்க.
 
என்ன ஆச்சி மக்கழே...இப்ப எல்லா வீட்லயும் அவனுங்க குடுக்குற மினெரல் வாட்டர் தான். ஆனா குழந்தைங்க ஆரோக்கியமா இருக்குதுங்களா...ஒரு வீட்டு தண்ணிய குடிச்சுட்டு அடுத்த வீட்டு தண்ணிய குடிச்சாலே தண்ணி சேரல அப்படின்னு நோயில் படுத்துடுதுங்க...நோய் எதிர்ப்பு சக்தி அப்படின்னு ஒண்ணு ஊசியோ இல்லை மாத்திர போட்டாலோ தான் வருது...இயற்கையாவே நோய் எதிர்ப்பு சக்தி இன்றைய குழந்தைகள் கிட்ட ரொம்ப கம்மியாயிடுச்சி. அதாவது காசையும் குடுத்துபுட்டு நம்மள நம்மளே நோயாளியாவும் ஆக்கிக்கிறோம்.
 
இப்ப பாருங்க மக்கழே...
 
நம்ம முன்னாடி எத வழக்கமா வச்சி இருந்தோமோ...அதையையே ஏதோ புதுசு மாதிரி நம்மகிட்டயே வந்து விக்குறானுங்க...செம்பு கலந்த தண்ணிய குடிச்சா நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா ஆகுமாம் (டேய்...அதைத் தான்டா நாங்க மொதல குடிச்சிக்கிட்டு இருந்தோம்). ஆனா இந்த ரெண்டுக்கும் நடுவுல என்ன நடந்து இருக்குனு நீங்களே பார்த்துகோங்க மக்கழே...
 
1) நம்மகிட்ட இயல்பாகவே இருந்த ஒரு அறிவை பயத்தால் இழந்து இருக்கோம்.
2) இலவசமாக குடிச்சிக்கிட்டு இருந்த தண்ணிய காசு கொடுத்து வாங்க ஆரம்பிச்சி இருக்கோம்.
3) ஆரோக்கியமான ஒரு சமூகம் நோய்வாய்பட்ட ஒரு சமூகமா மாறி இருக்கோம்.
 
இப்ப நம்ம எத தொலச்சோமோ அதையே புது வியாபாரமா கொண்டு வந்து இருக்கானுங்க...இலவசமா எத குடிச்சிக்கிட்டு இருந்தோமோ அத இப்ப காச கொடுத்து குடிக்க சொல்றானுங்க...அம்புட்டு தான் மக்கழே...இது நியாயமா மக்கழே...விட்டா எங்கள் காற்று காற்றுக்கும் மேலே...இதில் ஆக்சிஜென் இருக்குது அப்படின்னு சொல்லி காத்தையும் விப்பானுங்க...இது நியாயமா மக்கழே!!!
 
ஆகையால் மக்கழே...சொந்தமா வீட்டுக்கு வீடு ஒரு செம்புப் பானையை வாங்கி வச்சிகோங்க மக்கழே...ஆரோக்கியமான தண்ணிய இலவசமாகவே குடித்து வளம் பெருக மக்கழே...
 
1) செம்புக் கலந்த தண்ணி இயற்கையாகவே உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.
2) அதனால் வலுவான புதிய இளைய தலைமுறை வளரும்...அதற்கு காசிருந்தால் தான் தண்ணீர் என்ற நிலை தெரியாது.
3) செம்பு பானைகள் பொதுவாக கனமாக இருப்பதனால் அதனை தூக்கி வைத்து சுமப்பது என்பது உடலுக்கான உடற்பயிற்சியாகவும் அமையும் (குடும்பத் தலைவர்களுக்கு உதவும்)
 
சரி மக்கழே...இப்போ கெளம்புறேன்...அடுத்த பிரசாரத்துல சந்திப்போம்...!!!
 
வரேன் மக்கழே...!!!

முந்தையப் பதிவு

பழைய ஏற்பாட்டு ஆவியும் புதிய ஏற்பாட்டு ஆவியும்:

பழைய ஏற்பாட்டிலுள்ள யோவேல் தீர்க்கதரிசி கூறியுள்ளபடி, புதிய ஏற்பாட்டில் அபோஸ்தலர் இரண்டாம் அதிகாரத்தில் பரிசுத்த ஆவி இறங்கியதாக இயேசு கிருத்துவின் சீடர்கள் நம்பியமையை (அப்.2: 16-21) நாம் பார்க்கின்றோம்.

"தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது." (அப்.2: 16)

யோவேல் கூறி இருந்த ஆவிக்கும் இங்கே இறங்கிய ஆவிக்கும் உள்ள வேற்றுமையை சீடர்கள் உணர முடியாமல் போனமைக்குக் காரணம், இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை உணராமையும், இயேசு கிருத்து யூதா கோத்திரத்தில் பிறந்த இசுரவேலர் எதிர்பார்த்த யூத அரசனாகிய மேசியா என நம்பியமையுமேயாகும்.

பழைய ஏற்பாட்டு ஆவி, அழித்தல் தொழிலைச் செய்யுமாறு தூண்டுவது என்பதை, பழைய ஏற்பாட்டில், கிதியோன், சிம்சோன் போன்றவர்கள் ஆவியைப் பெற்றவுடன் செய்த கொலைகளால் நாம் அறிகின்றோம். அவ்வாறே யோவேல் கூறிய தீர்க்கதரிசனத்திலும்,

"உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; " (யோவேல் : 3: 10)

"யூதா புத்திரரின் தேசத்திலே குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்குச் செய்த கொடுமையினிமித்தம் எகிப்து பாழாய்ப்போகும்; ஏதோம் பாழான வனாந்தரமாகும்." (யோவேல் : 3: 19)

"நான் தண்டியாமல் விட்டிருந்த அவர்களுடைய இரத்தப்பழியைத் தண்டியாமல் விடேன்; கர்த்தர் சீயோனிலே வாசமாயிருக்கிறார்." (யோவேல் : 3: 21)

என்னும் பகுதிகள் அவர்களைக் கொலை செய்யத் தூண்டும் பகுதிகளாகக் காட்டப்படுகின்றன.

ஆனால் பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய ஆவி கொலை செய்யும் ஆவி அன்று என்பதை நாம் அறிவோம்.

இந்த இரண்டு ஆவிகளுக்கும் உள்ள வேற்றுமையை இயேசு கிருத்து தெளிவாகத் தம் சீடர்களிடம் விளக்கியமையை நாம் அறிவோம்.

"அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள். அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி, மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார்." (லூக்கா 9: 54- 56)

இதில் பழைய ஏற்பாட்டு ஆவிக்கும் புதிய ஏற்பாட்டு ஆவிக்கும் உள்ள வேறுபாடு தெளிவாக விளக்கப்படுகிறது.

பழைய ஏற்பாட்டு ஆவி அழிக்கும் வேலையைச் செய்கிறது; புதிய ஏற்பாட்டு ஆவி இரட்சிப்பின் வேலையைச் செய்கிறது என்பதில் ஐயம் இல்லை.

"அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது." (அப்போஸ்தலர் 2:2-3)

1.பலத்தக்காற்று
2. முழக்கம்
3. வீடு முழுவதையும் நிரப்பிற்று
4. அக்கினிமயமான நாவுகள்
5. ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தது

இது இயற்கையை மீறிய செயல். இதை மனிதன் உருவாக்க முடியாது. இது கடவுளின் செயல்; யூதர்கள் யோவேலின் வழி நடக்கப் போவதாக எதிர்பார்த்தபடியே இது நடந்ததாக பேதுரு யூதமுறைப்படி அவருடைய நம்பிக்கையில் விளக்குவதை இதே அதிகாரத்தின் 19 முதல் 21 வரையிலான வசனங்கள் காட்டுகின்றன.

பரிசுத்த ஆவியானவர் வரும் பொழுது இங்கே பேதுரு விளக்கியபடியே நடக்கும் என்று இயேசு கிருத்து அவருடைய சீடர்களுக்குக் கூறி இருப்பதை மத்தேயு 24 ஆம் அதிகாரத்தில் 29 முதல் 31 வரையுள்ள வசனங்கள் வழி நாம் அறிகின்றோம்.

"அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்." (மத். 24: 29-31)

இந்த இடத்தில் இயேசு கிருத்து கூறி இருப்பதும், பரிசுத்த ஆவி வரும் பொழுது நடந்த நிகழ்ச்சிகளும், மனிதரால் உருவாக்கக்கூடிய நிகழ்ச்சிகள் அல்ல. இறைத்திட்டதின் செயல்பாடு. கடவுள் பரிசுத்த ஆவியாக வந்த இரண்டாம் வருகையின் நிகழ்ச்சிகள். அனுபவப் பூர்வமாகக் காணப்படக் கூடியவை.

"அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்." (மத். 24:40)

போன்ற வசனங்கள் இவற்றை வெளிப்படுத்துகின்றன.

பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படும் அனுபவமுடையவர்களுக்கு இவற்றைப் புரிந்து கொள்ளுவதில் எந்தச் சிக்கலுக்கும் இடம் இல்லை.

யோவேல் கூறி இருக்கும் ஆவி வேறு, இயேசு கிருத்து விளக்கிய இரண்டாம் வருகையின் ஆவி வேறு என்பதையும் நாம் அறிவோம்.

தொடரும்...!!!

பி.கு:
1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.
 
2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்
மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி