இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பு:

இது ஓர் அற்புதப் பிறப்பு. கடவுளால் திட்டமிடப்பட்ட பிறப்பு. இந்த பிறப்பை பற்றி மரியாள் உலகத்திற்குக் கூற இயலா நிலை.

தன் வயிற்றில் பிள்ளை உற்பத்தியாகி இருப்பதற்குக் காரணம் தன் கணவனாகிய யோசேப்பு இல்லை என்னும் உண்மையை மரியாள் வெளியே கூறினால், யூத மதச் சட்டத்தின்படி அவர் கல்லெறிந்து கொலை செய்யப்படுவார். இதனால்,

"மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்." (லூக். 2:19)

என்றும்,

"அவருடைய (இயேசு கிருத்துவினுடைய) தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்." (லூக். 2:51)

என்றும் குறிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னர் நாம் பார்த்துள்ளபடி, பேதுருவோ, யோவானோ, பவுலோ இயேசு கிருத்து யோசேப்பிற்குப் பிறந்தவர் என்பதைச் சிறிதும் சந்தேகப்படவில்லை.

இயேசு கிருத்து தம் ஊழியத்தைத் தொடங்கிய பொழுது அவருடைய ஞானம் அவர் வாழ்ந்த ஊர்க்காரர்களுக்கு வியப்பாக இருந்தது.

"இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா" (மத். 13:55) என்றும்,
"இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா" (லூக். 4:52) என்றும்
 
கூறியதை நாம் பார்க்கின்றோம். மேலும்

"தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்" என்று தேவையுடையவர்கள் அவரிடத்தில் வேண்டிக் கொண்டதையும் நாம் பார்க்கின்றோம்.

இதனால் அவர் வாழ்ந்தபோது, யூத மக்கள் அனைவரும் அவர் தாவீதின் கோத்திரத்தில் பிறந்த யோசேப்பின் மகன் என்றே நம்பினார்கள்.

இந்த நம்பிக்கையே அவருடைய சீடர்களுக்கும், பவுலுக்கும் இருந்ததை நாம் பார்க்கின்றோம்.

இயேசு கிருத்துவின் விண்ணேற்றத்திற்குப் பின்னர், இரண்டாம் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த பேதுரு, பவுல் போன்ற தலைவர்கள் எல்லாரும் கொல்லப்பட்ட பின்னர் இந்த வரலாறுகளை எழுதப் பலர் புறப்பட்டனர். பவுலோடு நற்செய்திப் பணியாற்றிய லூக்காவும் வரலாறு எழுத முற்பட்டார். அப்பொழுது,

"ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும்" (லூக். 1:3)

என்று தாம் வரலாறு எழுதத் தொடங்கியதைக் கூறுகின்றார்.

இவர் இவ்வாறு கன்னி மரியாளிடத்திலும் விசாரித்து அறிந்த பின்னர், இயேசு கிருத்து யூதா கோத்திரத்தில் பிறந்த யோசேப்புக்குப் பிறந்தவர் அல்லர் என்பதையும், பரிசுத்த ஆவியினால் பிறந்த கடவுளின் மகன் என்பதையும் உணர்ந்து, கன்னிப்பிறப்பின் நிகழ்ச்சியை விரிவாக எழுதுகின்றார் என்பதை நாம் பார்க்கின்றோம்.

ஆகவே இரண்டாம் வருகை இன்னமும் நடைபெறவில்லை என்று நம்புவதற்கு இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பை அறியா நிலையே முக்கிய காரணம்.

இயேசு கிருத்துவின் கன்னிப் பிறப்பை உணர்ந்தவர்கள், அவரை யூத குலத்தில் பிறந்தவர் என்றோ, யூதர்கள் எதிர்பார்த்த யூத அரசனாகிய மேசியா என்றோ, அந்த மேசியா வரக் காத்திருக்கின்றோம் என்றோ நம்பவும் கூறவும் மாட்டார்கள்.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி