இயேசு கிருத்து உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய பரலோக இராச்சியத்தைப் பற்றிக் கூறி, பரலோக இராச்சியத்தைப் பூலோகத்திலேயே உருவாக்கவே தாம் வந்திருப்பதைக் கூறுகிறார்.

அவருடைய சீடர்களோ, யூதர்கள் இழந்து போன இராஜ்ஜியமாகிய பூலோக இராச்சியத்தை மீண்டும் அவர்களுக்கு கொடுக்க வந்தவராக அவரை நம்பினார்கள்.

முரண்பட்ட இரண்டு இராஜ்யங்கள்:

இவை ஒன்றுக்கொன்று எதிரான முரண்பட்ட இரண்டு நிலைகளாக இருக்கின்றன. பரலோக இராஜ்ஜியக் கருத்துக்கு எதிரானது பூலோக இராசியக் கருத்து என்பது பைபிளில் விளக்கப்படுகின்றது. எவ்வாறு?

பூலோக இராஜ்ஜியம் வன்முறையால் உருவாவது.

"ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான்;
 பலரைக் கொன்றவன் பட்டம் ஆள்வான்"

என்பது உலகம் முழுவதற்கும் பொருந்தும். வன்முறையும் கொலையுமே பூலோக இராஜ்யங்கள் உருவாகக் காரணமானவை.

இதனால், வன்முறைக்கும் கொலைக்கும் காரணமான சாத்தானுடைய கையிலே இப்பூலோக இராஜ்யங்கள் இருப்பதாக லூக்கா 4 ஆம் அதிகாரத்தின் 5 முதல் 8 வரையுள்ள வசனங்களின் வழி விளக்கப்படுகிறது.

பரலோக இராசியம் மனமாற்றத்தால் உருவாவது. மனமாற்றத்தை ஏற்படுத்துவது இயேசு கிருத்துவின் நற்செய்தி. இயேசு கிருத்துவின் நற்செய்தி அறிவிக்கப்படுவதற்குக் காரணமானவர் பரிசுத்த ஆவி.

ஆகவே, பரிசுத்த ஆவியால் உருவாக்கப்படுவது பரலோக இராஜ்யம்.

வன்முறை, கொலை முதலிய செயல்களுக்குக் காரணமான சாத்தானால் உருவாக்கப்படுவது பூலோக இராஜ்யம்.

இயேசு கிருத்து பரலோக இராஜ்யத்தை இந்த பூலோகத்தில் உருவாக்க வந்த கடவுளின் மகன்.

புரிந்துக் கொள்ள இயலாமை:

அவர் பரலோக இராஜ்யத்தை இப்பூலோகத்திலே உருவாக்க வந்த கடவுளின் மகன் என்பது அவருடைய சீடர்களால் புரிந்து கொள்ள இயலாமலிருந்தமையே, இயேசு கிருத்துவின் இரண்டாம் வருகையை அவர்கள் புரிந்து கொள்ளுவதில் அவர்களுக்கு இருந்த சிக்கல் ஆகும்.

ஏன் அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை?

1. இயேசு கிருத்து யூத மதத்தில் பிறந்தவர். அவருடைய சீடர்கள் அனைவரும் யூத மதத்தில் பிறந்தவர்கள்.

2. யூத மதம் மேசியாவாகிய ஒரு அரசரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது.

3. அந்த மேசியாவாகிய அரசன் யூதா கோத்திரத்தில் பிறப்பார் என்பது பழைய ஏற்பாட்டிலுள்ள தீர்க்க தரிசனங்களின் வெளிப்பாடு.

4. இயேசு கிருத்து யூதா கோத்திரத்தில் பிறந்த யோசேப்பின் மகன் என்று அறியப்பட்டார்.

5. பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் கூறியுள்ள தீர்க்கதரிசனங்கள் இயேசு கிருத்துவில் நிறைவேறியதாக நம்பினார்கள்.

6. அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, இயேசு கிருத்து கொலை செய்யப்பட்டாலும், அவர் திரும்ப உயிரோடு எழுந்தது மட்டுமல்லாமல், திரும்பவும் வருவார் என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

7. இதனால், அவர் இறந்ததற்கும், திரும்பவும் உயிர்த்தெழுந்தமைக்கும் நாங்கள் சாட்சிகள் என்று அவர்கள் உறுதியாக எந்தத் தடையையும் பற்றிக் கவலைப்படாமல் சாட்சி கூறினார்கள்.

8. அவர் கூறிச் சென்றபடி, இரண்டாம் வருகையில் அவர் திரும்ப வரக் காத்திருக்கின்றார்கள்.

9. இந்தக் காத்திருத்தலே இன்று வரை வழிவழியாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.

10. இதன்படி இன்றும் அந்த நிலை போதிக்கப்பட்டு வருகிறது.

11. இன்று மொத்த பைபிளையும் கையில் வைத்திருப்பவர்களே பரலோக இராசியத்திற்கும் பூலோக இராசியதிற்கும் வேறுபாடு தெரியாமல் போதித்துக் கொண்டிருக்கையில், பைபிள் முழுமையாக உருவாகாத அந்தக் காலத்தில் சீடர்களால் புரிந்து கொள்ள இயலாமல் இருந்ததில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

சீடர்களால் அறிய முடியாதிருந்த இரண்டு காரியங்கள்:

1. இயேசு யூதா கோத்திரத்தில் பிறந்த யோசேப்பிற்குப் பிறந்தவர் இல்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதாவது இயேசு கிருத்துவின் கன்னிப் பிறப்பு அவர்களுக்குத் தெரியவில்லை.

2. பூலோகத்தில் பரலோக இராஜ்யத்தை உருவாக்க வந்த கடவுளின் மகனே இயேசு கிருத்து என்பதையும் அவர்கள் அறிந்து இருக்கவில்லை. அதாவது பரலோக இராஜ்ஜியம் பற்றி அவர்களுக்குத் தெரியாது.

இவை இரண்டையும் இயேசு கிருத்துவின் சீடர்களால் ஏன் அறிய முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி