விவிலியத்தில் இணைத்தல் - யாக்கோபு நிருபம்

இயேசு கிருத்துவின் சகோதரராகிய யாக்கோபின் நிருபம் புதிய ஏற்பாட்டில் இணைக்கப்பட்டு உள்ளது. எதற்காக? அவருடைய யூத மத விசுவாசத்திற்காக; கிருத்துவ விசுவாசத்திற்காக அன்று.

"அனனியா சப்பீராள் மரணத்திற்குப் பின்னர், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று." (அப். 5:11)
"மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை" (அப். 5:13) 

காரணம் அனனியா சப்பீராளிடம் பேதுரு நடந்துக் கொண்ட முறை கிருத்து போதித்த முறை அன்று; அன்பின் முறை அன்று; ஆணவத்தின் முறை ஆகும்.

இதனால், பேதுருவின் தலைமை, இயேசு கிருத்துவின் சகோதரராகிய யாக்கோபிடம் சென்றது என்பதைப் பார்க்கின்றோம்.

"மறுநாளிலே பவுல் எங்களைக் கூட்டிக்கொண்டு, யாக்கோபினிடத்திற்குப் போனான்;" (அப். 21:18)

இது ஆரம்ப கால யூதக் கிருத்தவர்களின் நிலையை வெளிப்படுத்துகிறது.

இயேசு கிருத்துவின் சகோதரராகிய யாக்கோபு, மற்றவர்களுடன், உயிர்த்தெழுந்த கிருத்துவைக் கண்டவர் என்று 1.கொரிந்தியர் 15 ஆம் அதிகாரத்தில் பவுல் கூறி உள்ளார்.

"பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்" - 1 கொரி (15:7)

சகோதரர் என்னும் முறையில் உயிர்த்தெழுந்த கிருத்துவைத் தாயோடும் மற்றவர்களோடும் பார்த்தவரே, (அப். 1:14) தவிர, பவுலைப் போன்று மனம் மாறி கிருத்துவை ஏற்றுக் கொண்டவராக பைபிளில் குறிப்பு இல்லை.

"அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்." (அப். 1:14)

இயேசு கிருத்து உயிரோடு இருந்த காலத்தில் இயேசு கிருத்துவின் சிறப்பை உணர முடியாமல் கேலியாகப் பேசியவர்களில் இவரும் உண்டு. (யோவான் 7: 3-5)

"அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம். பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்." (யோவான் 7: 3-5)

ஆகவே யூத மத நம்பிக்கையிலிருந்து இவர் மாறியமைக்கான சான்று பைபிளில் இல்லை.

1. யூத மத நம்பிக்கையின்படி புறஜாதியாரை யூதர்களுக்குச் சமமானவர்கள் என்பதை இவர் ஏற்றுக் கொள்ளவில்லை. (அப். 15:13-21)

2. இதனால் புறஜாதியாரோடு ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவதை இவர் எதிர்த்தார் என்று கலாத்தியர் 2:11-15 இன் வழி நாம் அறிகின்றோம்.

இவர் எதிர்த்தமையால் இவரைச் சேர்ந்த யூதர்களும் பேதுருவை எதிர்த்ததையும், இதனால் பேதுரு மாய்மாலம் பண்ணியதையும், பவுல் முகம் முகமாய் எதிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டமை கூறப்பட்டு உள்ளது.

3. பவுல் யூத மதக் கொள்கையிலிருந்து விலகி, கிருத்துவ இயக்கக் கொள்கையைப் போதித்தமையைத் தவறு என்று கண்டித்து அதற்குத் தண்டனை கொடுத்ததை அப். 21:21-24 காட்டுகிறது. 

"புறஜாதிகளிடத்திலிருக்கிற யூதரெல்லாரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம்பண்ணவும், முறைமைகளின்படி நடக்கவும் வேண்டுவதில்லையென்று நீர் சொல்லி, இவ்விதமாய் அவர்கள் மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படி போதிக்கிறீரென்று இவர்கள் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீரென்று இவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாகக் கூட்டங்கூடுவார்கள்.ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்லுகிறபடி நீர் செய்யவேண்டும்;"(அப். 21:21-24)

4. இயேசு கிருத்துவின் பலியால் மீட்படைந்து கிருத்துவ இயக்கத்தை நடத்திய பவுலின் கொள்கை தவறானது என்று கண்டித்ததுடன் இயேசு கிருத்துவின் பலிக்கு எதிராக மீண்டும் எருசலேம் கோவிலில், யூத முறையின்படி பலியிடக் கட்டளையிட்டார். வேறு வழியின்றி அப்போதைய திருச்சபைத் தலைவரான யாக்கோபின் கட்டளையை நிறைவேற்ற தான் பலியிட உடன்படுவதாக பவுல் அறிவித்தார். (அப். 21:26)

"அப்பொழுது பவுல் அந்த மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும் சுத்திகரிப்பு செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காக வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான்." (அப். 21:26)

5. அவரால் எழுதப்பட்ட யாக்கோபு நிருபம் கிருத்தவர்களுக்காக எழுதப்பட்டது அன்று.  சிதறி இருக்கின்ற பன்னிரண்டு கோத்திரத்திற்கு எழுதப்பட்டது. (யாக். 1:1)

"தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது:" (யாக். 1:1)

சிதறியிருக்கும் 12 கோத்திரத்தில் உள்ள கிருத்தவர்களுக்குக் கூட எழுதப்படாமல், கிருத்துவ இயக்கத்திற்குத் தொடர்பே இல்லாத யூத மதத்தவருக்கு எழுதப்பட்ட நிருபம். கிறித்தவக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரண்பட்ட யூதர்களுக்கு யாக்கோபு எழுதிய நிருபம் பைபிளின் கிருத்துவப் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் இணைக்கப்பட்டது ஏன்?

6. இந்த நிருபம் புதிய ஏற்பாட்டின் வைப்பு முறையில் பேதுரு நிருபங்களுக்கு முன்னர் வைக்கப்பட்டு இருக்கும் முறை ரோம ஆட்சியாளர்களின், கிருத்துவக் கொள்கைக்கு எதிரான யூத மதக் கொள்கையின் பற்றுதலை வெளிப்படுத்துகிறது.

பவுல் பன்னிருவரில் ஒருவர் அல்லர். சிறப்பாகத் தேர்ந்து எடுக்கப்பட்டவர். அவருடைய நிருபங்களும் சிறப்பானவை. அவை வரிசையாகத் தொகுக்கப்பட்டு உள்ளன. கிருத்தவ விசுவாசத்திற்காகப் பவுலைத் தண்டித்த யூத விசுவாசத்தை உடைய யாக்கோபின் நிருபம் பேதுருவின் நிருபங்களுக்கு முன்னர் சிறப்பிடம் கொடுக்கப்பட்டு இருப்பதற்கு ரோமர்களின் அரசியலே காரணம்; ஆன்மிகம் அன்று.

இந்த நிருபம் கிருத்துவப் பகுதியில் இணைக்கப்பட்டு இருப்பதற்கும் ரோம ஆட்சியாளர்களின் அரசியல் தேவையே காரணம் ஆகும்.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி