விவிலியத்தில் திரித்தல் - இரண்டாம் வருகை

ரோமர்கள் கிருத்துவத்தை அரவணைத்து தங்கள் அரசியலுக்கு அடிமைப்படுத்தி வருவதனால், இயேசு கிருத்துவின் ஆன்மீகச் செய்திகள் அனைத்தும் ரோம ஆட்சியாளர்களின் அரசியலுக்கு ஆதரவான செய்திகளாகத் திரிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு திரிக்கப்பட்ட செய்திகளில் ஒன்றே இரண்டாம் வருகை பற்றிய செய்தி என்பது விளங்குகிறது.

இதில் திரிப்பதற்கு என்ன இருக்கிறது? பேதுரு, யோவான், பவுல் போன்றவர்களின் நம்பிக்கைகளும் எழுத்துக்களும் தானே அப்படியே கொடுக்கப்பட்டு உள்ளன. ஒன்றையும் கூட்டியதாகவும் குறைத்ததாகவும் தெரியவில்லையே? அப்படி இருக்க தொகுத்தவர்களை எப்படிக் குறை கூறலாம்? என்னும் கேள்வி நியாயமாகத் தோன்றலாம். ஆழ்ந்து நோக்கினால் அதில் நியாயமில்லை என்பது புரியும். எவ்வாறு?

நாம் முன்பு பார்த்தவாறு இயேசு கிருத்துவின் கன்னிப் பிறப்பை, பேதுரு, யோவான், பவுல் போன்றவர்கள் அறிய இயலாத சூழலில், அவர்கள் தங்கள் நம்பிக்கையை எழுதி உள்ளார்கள்.

இவர்கள் இறந்த பின்னர், புதிய சூழலில் லூக்கா அனைத்தையும் விசாரித்துத் தெளிவாக எழுதிய பிறகு, பழைய நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு அதன் மீது தங்கள் அரசியல் ஆதாயக் கருத்துகளை உருவாக்கிப் போதித்து வருவது எவ்வளவு பெரிய மோசடி செயலாகும் என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது. இதுவரை நாம் பார்த்து வந்துள்ளவாறு, இன்றும் உலகம் முழுவதுமுள்ள கிருத்தவர்கள் எதிர்பார்க்கும் இரண்டாம் வருகை பற்றி ஐரோப்பியர் தலைமை தாங்கி நடத்தி வரும் போதனைகள் யாவும் அவர்களால் திரிக்கப்பட்ட போதனைகள் என்பதை யாரால் மறுக்க முடியும்?

கடவுளின் இரண்டாம் வருகையாகிய பரிசுத்த ஆவியானவரின் வருகையை மறைத்து, யூத மேசியாவின் வர இருக்கும் வருகையாகத் திரித்து போதித்து வருவது மோசடி என்று கூறுவதைத் தவிர வேறு எவ்வாறு கூறுவது?

விவிலியத்தில் வெட்டல் - பவுல் கொல்லப்பட்டமை

திருச்சபை வரலாற்றைக் கூறும் அப்போஸ்தலர் நடபடிகளை எழுதியுள்ள லூக்கா, கி.பி 84இல் இறந்துள்ளார். அதுவரை எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்து அறிந்து எழுதி உள்ளார். இவர் பவுலுடன் மிக நெருக்கமாக அவருடைய ஊழியத்தில் செயல்பட்டு உள்ளார்.

பவுல், பேதுரு போன்றவர்கள் ரோம ஆட்சியாளர்களால் கொலை செய்யப்பட்ட பிறகே திருச்சபை வரலாற்றை எழுதத் தொடங்கி உள்ளார்.

பவுல் கைது செய்யப்பட்டு, ரோமாபுரியில் காவலில் வைக்கப்பட்டு இருந்த பொழுது அவருடன் தாம் இருந்ததைப் பற்றி எழுதி உள்ளார்.

இதுவரை எழுதி உள்ள லூக்கா, பவுல் கொலை செய்யப்பட்ட பின்னர் எழுதத் தொடங்கிய நூலில் பவுல் ரோம ஆட்சியாளர்களால், கொலை செய்யப்பட்ட வரலாற்றை ஏன் எழுதவில்லை? என்னும் கேள்வி எழுகின்றது.

பவுல், பேதுரு போன்ற தலைவர்கள் ரோம ஆட்சியாளர்களால் கொலை செய்யப்பட்ட வரலாற்றை லூக்கா எழுதவில்லையா? அல்லது அந்த நூலைத் தொகுத்த ஆட்சியாளர்கள் பவுல், பேதுரு போன்ற தலைவர்கள் கொலை செய்யப்பட்ட வரலாற்றை வெட்டி விட்டார்களா? என்னும் கேள்விக்கு, ரோம ஆட்சியாளர் மேல் வாசிக்கின்றவர்களுக்கு வெறுப்பு வரும் பகுதியை வெட்டி நீக்கி விட்டார்கள் என்பதே இயல்பான பதில் ஆகும்.

அதாவது ரோம ஆட்சியாளர்களால் தொகுக்கப்பட்ட புதிய ஏற்பாடாகிய 27 நூல்களில் ரோமர்களின் மேல் வாசிக்கிறவர்களுக்கு வெறுப்பு வரும் பகுதிகள் வெட்டப்பட்டன என்பதில் ஐயம் இல்லை. இது ஆட்சியாளர்களுக்கு உரிய இயல்பு.

தொடரும்...!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு