உடலும் உயிரும் எவ்வாறு இயங்குகின்றன என்றே நாம் கண்டு வருகின்றோம்...!!!


உலகமும் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது. ஒரு பொழுதும் அது ஓய்வுக் கொண்டு இருப்பதில்லை. அதுவும் சிற்றுடலைப் போன்றே பல விதிகளின் படி செம்மையாக இயங்கிக் கொண்டே இருக்கின்றது. இன்றைய அறிவியல் இதனைப் பற்றித் தான் இயங்கவியல் என்றுக் கூறுகின்றது. உலகம் ஒரு சடப் பொருள் அல்ல...அது இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது. அவ்வுடலுக்கென்று பல்வேறு பணிகள் இருக்கின்றன...அவைகள் செம்மையாக நடைப்பெற்றுக் கொண்டு இருக்கின்றன...எப்பொழுது அப்பணிகளில் பிரச்சனைகள் நிகழ்கின்றதோ அப்பொழுது அதற்கேற்ற பின்விளைவுகள் நிகழப் பெறுகின்றன. இருந்தும் உலகமும் தன்னிச்சையாக மீண்டும் அனைத்தையும் இயல்பு நிலைக்கு கொண்டு வர தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்ளத் தான் செய்கின்றது.

எவ்வாறு ஒரு உடல் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்கின்றதோ அதனைப் போன்றே உலகும் அதனை அதன் இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சிகளைச் செய்யும் வல்லமையைப் பெற்று இருக்கின்றது. இது தான் இயற்கை. இவை அனைத்தும் விதிகளின் படியே நிகழ்கின்றது. ஆனால் சிற்றுடலால் தானாக இயங்க முடியாது. உயிர் இருந்தால் தான் இயங்க முடியும். அதைப் போல் தான் பேருடலான உலகின் நிலையும்.

சிற்றுடலான மனித/உயிரினங்களின் உடல் எவ்வாறு பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டு இருக்கின்றதோ அதனைப் போன்று தான் இந்த பிரபஞ்சமும் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

எவ்வாறு உயிர் இன்றி சிற்றுடலால் இயங்க முடியாதோ அவ்வாறே உயிர் இன்றி பேருடலால் இயங்க முடியாது. சிற்றுடலை இயக்க சிற்றுயிர் இருப்பதனைப் போன்று பேருடலை இயக்க பேருயிர் இருக்கின்றது.

எவ்வாறு உயிர் பிரிந்தப் பின் சிற்றுடல் பேருடலுடன் கலக்கின்றதோ அதனைப் போன்றே சிற்றுயிர் பேருயிரிடம் கலக்கின்றது.

இந்த இயக்கம் முழுவதும் நெறிப்பட்ட விதிகளின் வழியே நடைப்பெறுகின்றன. உடலின் விதிகளை அறிவதை நாம் மருத்துவம் என்கின்றோம்...பேருடலின் விதிகளை அறிவதை அறிவியல் என்கின்றோம். இங்கே நாம் உடலையும் உயிரையும் பற்றி மட்டுமே கண்டு இருக்கின்றோம். ஆன்மாவைப் பற்றி நாம் காணவில்லை. பிரச்சனை இல்லை இப்பொழுது காணலாம்...!!!

உலகிற்கு என்று உடல் இருக்கின்றது அதனை இயக்கும் உயிரும் இருக்கின்றது என்று நாம் கண்டோம். அதனைப் போன்றே உயிரினங்களுக்கும் உடல் இருக்கின்றது அதனை இயக்கம் உயிரும் இருக்கின்றது என்றும் கண்டோம் சரி. ஆனால் உயிரினங்களில் மனிதனுக்கு மட்டும் சிறப்பாக ஆன்மா என்று ஒன்று இருக்கின்றது என்று கூறுகின்றோமே அது எப்படி என்றே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

இந்த உலகத்தினை நாம் உற்றுக் கவனித்தோம் என்றால் அனைத்து உயிரினங்களையும் கட்டுப்படுத்தி ஆட்சிப் புரியும் வல்லமையை மனிதன் பெற்று இருக்கின்றான் என்பது புலனாகின்றது. அவனது உடல் இயங்கும் முறையினைப் பற்றியும் அவனால் அறிய முடிகின்றது...அவன் வசிக்கும் உலகம் இயங்கும் முறையைப் பற்றியும் அவனால் அறிய முடிகின்றது...அதனை மாற்றும் வல்லமையையும் அவன் பெற்று இருப்பதையும் அவனது செயல்களால் அறிய முடிகின்றது.

மற்ற உயிரினங்கள் ஆண்டாண்டுக் காலமாக எப்படி இருந்தனவோ அதனைப் போன்றே தொடர்ச்சியாக இருக்க மனிதன் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கின்றான்...அனைத்தையும் அறிந்துக் கொண்டு, ஆக்கிக் கொண்டு, அழித்துக் கொண்டு...!!!

இந்த வல்லமையை அவன் மட்டும் பெற்று இருப்பதற்கு காரணம் என்று இறை நம்பிக்கையாளர்கள் கூறுவது அவன் ஆன்மாவை பெற்று இருக்கின்றான். உலகையும் உயிர்களையும் படைத்த இறைவன் மனிதனுள் ஆன்மாவை வைத்து இருப்பதன் மூலம் அவனுக்கு இவ்வுலகத்தின் மேலும் உயிர்களின் மேலும் ஆதிக்கத்தை தந்து இருக்கின்றார் என்பதே அவர்களின் கூற்று.
 
//உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6 - இது சவுலின் கூற்று. (கிருத்துவம்)
 
உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. – திருமந்திரம் (சைவம்)

அதனால் இவ்வுலகத்தின் விதிகள் அனைத்தையும் தனது முயற்சியால் அறிந்துக் கொள்ளும் வல்லமை மனிதனுக்கு உண்டு...அவனால் அனைத்தையும் அறிந்துக் கொள்ள முடியும் இறைவனைத் தவிர. இறைவனை அவன் அறிய வேண்டும் என்றால் இறைவனாக அவனுக்கு உணர்த்த வேண்டும்...இறைவன் உணர்த்தாமல் மனிதனால் இறைவனை அறிய முடியாது(இங்கு தான் மாயை என்ற ஒன்று வருகின்றது...இதனைப் பற்றி இன்னொரு பதிவில் காணலாம்) . இறைவன் மனிதனுக்கு ஆன்மாவின் மூலமாகத் தான் உணர்த்த முடியும். எப்பொழுது இறைவன் உணர்த்துகின்றானோ அப்பொழுது மனிதன் இறைவனின் அடி நோக்கிச் செல்வான் என்பதே சமயங்களின் கருத்தாகும்.

அதனைப் போன்றே எவ்வாறு உயிர் பிரிந்தப் பின் சிற்றுடல் பேருடலுடன் கலக்கின்றதோ அதனைப் போன்றே இறைவனின் ஒரு பகுதியான ஆன்மாவும் இறைவனை சென்று அடையும். இது தான் சமயங்களின் கருத்தாகும்.

ஆனால் இக்கருத்துக்கள் வெளி வராத வண்ணம் அனைத்து சமயங்களும் அரசியலால் அடிமைப்படுத்தப் பட்டுக் கிடக்கின்றன. ஆகையால் பிரபஞ்சத்தில் வேறு எங்காவது உயிர்கள் இருக்கா என்று அறிவியல் தேடுமே ஒழிய பிரபஞ்சத்தின் உயிர் என்ன என்று அதனால் தேடல் இயலாது. தன்னுடைய ஐம்புலன்களுக்கு தென்படும் உடலினை ஆய்வு செய்யுமே தவிர அதனால் உயிரைப் பற்றியோ அல்லது ஆன்மாவைப் பற்றியோ அல்லது இறைவனைப் பற்றியோ அறிந்துக் கொள்ள முடியாது.

காரணம் மனிதனால் இறைவன் உணர்த்தினால் மட்டுமே தான் இறைவனை உணர முடியும். அந்நிலையில் இறைவனைப் பற்றி உணர்ந்தவர்கள் கூறியதை மனிதனுக்கு கூறி அவனை நல்வழிப் படுத்த வேண்டிய கடமை சமயங்களையும் இறை நம்பிக்கையாளர்களையும் சேருகின்றது. ஆனால் இன்றைக்கு அவைகள் அனைத்தும் அரசியலுக்கு பலியாகி இருப்பதனால் உண்மை மறைந்து தான் இருக்கின்றது.

அட சரிங்க...இறைவன் உணர்த்தினால் ஆன்மா உணர்ந்து விடும் அப்படின்னு சொல்றீங்க சரி...அப்படினா கடவுள் எல்லா மனுசனையும் உணர வச்சிரலாம்ல...ஏன் எப்படி வைக்காம மனுசன் துன்பப்படுறத பார்த்துகிட்டு இருக்காரு? என்ற கேள்வி இங்கே எழ வாய்ப்பு இருக்கின்றது... இங்கே தான் நாம் மாயையைப் பற்றியும் இன்னும் சில விடயங்களைப் பற்றியும் காண வேண்டி இருக்கின்றது...

காணலாம்...!!!

தொடரும்....

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

உடல் உயிர் மற்றும் ஆன்மாவினைப் பற்றியே இப்பதிவுகளில் நாம் கண்டு கொண்டு வருகின்றோம். உயிர் வேறு ஆன்மா வேறு என்றும், ஆன்மா மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்றும் நாம் கூறி இருக்கின்றோம். அதனை முன்னிட்டு நண்பர்கள் சில கேள்விகளையும் மாற்றுக் கருத்துகளையும் முன் வைத்து இருக்கின்றனர். இப்பொழுது நாம் அவற்றிற்குத் தான் விடையினைக் காண வேண்டி இருக்கின்றது.

அதற்கு முன் முந்தையப் பதிவுகளைப் படித்திராவிடில் படித்து விட்டு தொடர்வது நலமாக இருக்கும். முந்தையப் பதிவுகள்.

 
சரி...இப்பொழுது நண்பர் ஒருவரின் கருத்தினைத் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது.

//ஆதியில் தோன்றிய அனுவான பரம அனு முதல் பஞ்சபூதங்கள் வரை, அதன் கூட்டு உயிர் வரை அனைத்துமே பரிணாமத்தின் விளைவு தான். ஓரறிவு உயிரி, தன் சுயத் தேவையால் விளைந்திட்ட எண்ணத்தால், வேண்டுதலால் இரறிவாகி அதன் தொடர்ச்சியே 6 அறிவு உயிரியாக பரிணாமம் கொண்டுள்ளது. உயிர் தான் ஆன்மா. அதை எப்படி மறுக்க முடியும்?உயிரின் மீது போர்வைப் போல் போர்த்தி இருப்பது தான் பரிணாமத்தினால் ஏற்பட்ட இன்ப மயக்கம்/ துன்பப் பதிவுகள் தான் உயிரை சுற்றி மாயையாக இருந்து செயல்படுத்துகிறது.//

இது நண்பர் ஒருவரின் கருத்து. இவரின் கூற்றின் படி பரிணாமத்தின் விளைவின் படி தான் உயிர் தோன்றி பல்வேறு அறிவு நிலைகளை எட்டி இருக்கின்றது. அதாவது இன்றைக்கு ஐரோப்பிய அறிவியல் கூறும் கருத்தினை இவர் கூறி இருக்கின்றார். ஆனால் கூடுதலாக ஆன்மா, மாயை போன்ற கூற்றுகளையும் வேறு கூறி இருக்கின்றார். இங்கு தான் குழப்பமே எழுகின்றது.

அதாவது பரிணாம வளர்ச்சி என்பது இறைவன் உலகைப் படைத்தான் என்ற கருத்திற்கு முற்றிலுமாக மாற்றுக் கருத்தாகும். அது ஒரு நாத்திகக் கொள்கை. இன்னும் நிரூபிக்கப்படாத ஒரு கூற்று. அக்கூற்றினைத் தான் இன்றைக்கு ஐரோப்பிய அறிவியல் சுமந்துக் கொண்டு இருக்கின்றது.

ஆனால் ஆன்மா, மாயை என்பன எல்லாம் இறைவன் தொடர்புடைய விடயங்கள்...இவற்றை பரிணாம வளர்ச்சிக் கொள்கையினை உடையவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களின் பார்வையில் ஆன்மா மாயை போன்றவைகள் எல்லாம் முட்டாள்தனம். வெறும் கற்பனை. அவ்வளவே.

அதாவது இறைவனை நம்புவர்கள் பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரை உலகமும் உயிர்களும் இறைவன் படைத்தது. இறைவனை நம்பாதவர்கள் ஆன்மாவையும் மாயை என்பதனையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்நிலையில் பரிணாம வளர்ச்சியையும் ஆன்மா மாயை போன்ற விடயங்களையும் இணைத்து நண்பர் தமது கருத்தினை வெளி இட்டு இருப்பது தான் இங்கே கவனிக்கத்தக்கது.

இக்கூற்றினை இறைவனை நம்பும் சமயங்களும் ஏற்றுக் கொள்ளாது...அறிவியலும் ஏற்றுக் கொள்ளாது. இருந்தும் இத்தகைய கருத்துக்கள் சமூகத்தில் பரவலாக இருப்பதற்கு காரணம் ஒரு அரசியல்...அதனைப் பற்றி நாம் பின்னர் காண்போம். இப்பொழுது நாம் காண்பதற்கு முக்கியமான விடயங்கள் சில இருக்கின்றன.

"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது" என்ற வாக்கியத்தையே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. இவ்வாக்கியத்தின் பொருள் உலகத்தில் ஏது இருக்கின்றதோ அது நமது உடலிலும் இருக்கின்றது என்பதே.

அண்டம் - உலகம்
பிண்டம் - உடல்
 
ஏன் அவ்வாறுக் கூறுகின்றார்கள்...அது சரியா? என்றே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் பஞ்ச பூதங்களைப் பற்றிக் காண வேண்டி இருக்கின்றது.

இறை நம்பிக்கையாளர்களின் கூற்றின் படி இறைவன் உலகை பஞ்ச பூதங்களைக் கொண்டு உருவாக்கினான். அறிவியலாளர்களின் கூற்றின் படி உலகம் பஞ்ச பூதங்களால் உருவாகி இருக்கின்றது.

உருவாக்கப்பட்டதா அல்லது உருவானதா என்ற விடயத்தில் இறை நம்பிக்கையாளர்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பீனும் பஞ்ச பூதங்களைக் கொண்டு உலகம் இருக்கின்றது என்பதில் அவர்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அப்பஞ்ச பூதங்கள் எனப்படுபவை,

நீர்
நெருப்பு
காற்று
நிலம்
ஆகாயம்

ஆகிய ஐந்தாகும். இவைகளைக் கொண்டு தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டு இருக்கின்றது என்பதனை யாரும் அறிவர். எனவே அண்டத்தில் உள்ளன யாவை என்றுக் கண்டால் இவைகள் ஐந்தும் விடையாய் வரும். இவைகளைக் கொண்டே அண்டம் இருக்கின்றது...இவைகளன்றி ஒன்றும் இல்லை. சரி இருக்கட்டும்.

இப்பொழுது அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்கின்றார்களே அது சரியா என்பதனை நாம் காண வேண்டி இருக்கின்றது.

நெருப்பு - நம்முடைய உடல் ஒரு குறிப்பிட்ட அளவு சூட்டுடனேயே இருக்க வேண்டி இருக்கின்றது. வெப்பம் கூடினாலோ குறைந்தாலோ (காய்ச்சல் அல்லது நோய்கள்) உடலுக்கு தீங்கு வந்து விடுகின்றது. வெப்பமே இல்லாத உடல் சடலமாக மாறி விடுகின்றது. எனவே உடல் இயங்க வெப்பம் தேவைப் படுகின்றது. அதாவது நெருப்பு. அது உடலில் இருக்கின்றது.

நீர் - திரவங்கள் நமது உடலில் இருக்கின்றன. அவைகள் இல்லாது போனால் உடலின் இயக்கம் நின்று விடும்.உடல் பழுதடைந்து அழிந்து விடும். எனவே நீரும் உடலின் இயக்கத்திற்கு இன்றியமையாது இருக்கின்றது.

காற்று - உடல் இயங்க காற்று மிக முக்கியமானதொன்றாகும். காற்று இல்லையெனில் சுவாசிக்க முடியாது. சுவாசிக்காது உடலால் இயங்க முடியாது.

ஆகாயம் - வெற்றிடம். உடலினுள் வெற்றிடங்கள் இருக்கின்றன...சுவாசப் பைகள் போன்றவைகள் உதாரணத்திற்கு. வெற்றிடங்களும் உடலின் இயக்கத்திற்கும் அமைப்பிற்கும் இன்றியமையாது இருக்கின்றன.

நிலம் - உலகம் நிலத்தால் அமைந்து இருப்பதனைப் போல மனித உடலும் நிலத்தைப் போலவே அமைந்து இருக்கின்றது. உயிர் இருக்கும் வரை இயங்கிக் கொண்டு இருக்கும் உடல், உயிர் பிரிந்தப் பின்னர் சில நாட்களுக்குள் மண்ணோடு மண்ணாகி விடுகின்றது. அதாவது நிலம் நிலத்தைச் சேர்ந்து விடுகின்றது. நிற்க

இதன் மூலம் உலகம் எதனைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கின்றதோ அவற்றை வைத்தே தான் உடலும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது என்பது தெரிகின்றது.

அதாவது,
 
உலகம் - பேருடல் - பெரிய உடல்
மனித உடல் - சிற்றுடல் - சிறிய உடல்
 
என்றே நாம் கொள்ளலாம். (இங்கே நாம் உடலைப் பற்றி மட்டுமே கண்டுக் கொண்டு இருக்கின்றோம்...உயிர் மற்றும் ஆன்மாவைப் பற்றிக் காணவில்லை என்பதை நினைவிற் கொள்ளவும்)

உயிர் இருக்கும் வரை இயங்கிக் கொண்டு இருக்கும் மனித உடல் உயிர் எப்பொழுது பிரிகின்றதோ அப்பொழுது பேருடலான உலகத்துடன் கலந்து விடுகின்றது. இதனை அனைவரும் அறிவர். நிற்க

இங்கே தான் நாம் உயிரைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது. நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் உடல் ஒரு மாபெரும் மகத்தான இயந்திரம் என்று. பல்வேறு செயல்களை செம்மையாக செய்யக் கூடிய கருவிகள் பல இருக்கின்றன உடலினுள். ஆனால் உயிர் இல்லை என்றால் அவைகள் இயங்குமா என்றால் இயங்காது என்பதே பதிலாக வரும்.

எனவே ஒரு உடல் இயங்க உயிர் இன்றியமையாதத் தேவையாக இருக்கின்றது. உயிர் இருந்தால் தான் உடல் இயங்கி உயிரினம் ஆகின்றது. இந்நிலையில் தான் நாம் உடலின் இயக்கத்தைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.
 
நமது உடல் இயங்கிக் கொண்டே இருக்கின்றதா இல்லை எப்பொழுதாவது இயங்காது இருக்கின்றதா என்ற கேள்வி எழுந்தால் உயிர் உள்ள வரை நமது உடல் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது என்றே பதில் வரும். உண்மையும் அது தான். நாம் அசையாது ஒரு இடத்தில் நின்றாலும் நமது உடல் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. நம்முடைய அனுமதியோ கட்டளையோ உடலிற்கு தேவை இல்லை. நாம் உறங்கும் பொழுதும் உடல் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது.

சரி இயங்குகின்றது...ஆனால் எவ்வாறு இயங்குகின்றது..தாறுமாறாக வரையறை அற்று இயங்குகின்றதா அல்லது ஒரு நெறிக்கு உட்பட்டு இயங்குகின்றதா என்றால் உடல் அதற்கென்று இருக்கும் நெறிப்படியே இயங்குகின்றது என்பது புலனாகும். உடலின் எந்தஒரு செயலும் காரணமின்றி அமைவதில்லை என்பதை நாம் கூர்ந்து பார்த்தால் அறிவோம். அதன் இயக்கத்திற்கு என்று ஒரு விதி இருக்கின்றது. அதன் படியே உடல் இயங்குகின்றது.

அவ்விதிக்கு மாறாக ஒரு விடயம் நேர்ந்தால் உடல் பாதிப்பிற்கு உள்ளாகின்றது. உதாரணத்திற்கு உடலிற்கு தகாத ஒரு பொருளை நாம் உண்டோம் என்றால் உடல் முதலில் அப்பொருளை வெளியேற்றப் பார்கின்றது அவ்வாறு இயலாத நிலையில் நோய் வாய்ப்படுகின்றது. நோய் வாய்ப்பட்ட நிலையிலும் தன்னைத் தானே சரி செய்துக் கொள்ள தன்னிடம் இருக்கும் கருவிகளை (வெள்ளை அணுக்கள்...இதர இதர) பயன்படுத்த முயற்சிச் செய்துக் கொண்டு தான் இருக்கின்றது. உயிர் அதனை இயக்கிக் கொண்டு இருக்கின்றது. இச்செயல்கள் அனைத்தும் தன்னிச்சையாக நிகழப் பெறுவன. ஆனால் இச்செயல்களை நம்மால் ஓரளவு கட்டுப்படுத்தவும் முடியும்.

எவ்வாறு தகாத பொருளை உட்கொண்டதன் மூலம் உடலின் செயலைப் பாதித்தோமோ அதைப் போன்றே அதனை சரி செய்யவும் நம்மால் சில செயல்களை செய்ய முடியும். அதற்கு உடல் எவ்வாறு இயங்குகின்றது என்ற அவ்விதியினை நாம் அறிந்து இருக்க வேண்டும். அவ்வாறு உடல் எவ்வாறு இயங்குகின்றது என்ற விதிகளை அறிவதன் பெயர் தான் மருத்துவம். நிற்க.

இப்பொழுது நாம் உடல் என்பது ஒரு அற்புத இயந்திரம் என்றும், உயிர் அதனை இயக்குகின்றது என்றும், அது விதிகளின் படி இயங்குகின்றது என்றும், அவ்விதிகளை நாம் அறிந்துக் கொள்ள முடியும் என்றும், அதன் இயக்கத்தை சீராக்கவும் அல்லது பழுது படுத்தவும் நம்மால் முடியும் என்றும் நாம் கண்டு இருக்கின்றோம்.

உயிர் இருக்கும் வரை சிற்றுடல் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது. இங்கே தான் நாம் பேருடல் என்று வழங்கப்படும் உலகினைப் பற்றி காண வேண்டி இருக்கின்றது.
 
காணலாம்...!!!

தொடரும்...

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

நீண்ட இடைவெளிக்கு வருந்துகிறேன். வேறு சில வேலைப் பணிகளின் காரணமாக எழுத முடியாத ஒரு சூழல். சரி இப்பொழுது நாம் மீண்டும் தலைப்பிற்கு வர வேண்டி இருக்கின்றது.

உயிரும் ஆன்மாவும் ஒன்றல்ல...இரண்டும் வேறானவை என்றே நமது முந்தையப் பதிவுகளில் கண்டு இருந்தோம். ஆனால் அக்கூற்றினில் தான் நண்பர்கள் பல சந்தேகங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் கூறி இருந்தனர். இப்பொழுது அக்கருத்துக்களையும் அவற்றிற்குரிய விடைகளையும் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது.

அதற்கு முன்னர் முந்தையப் பதிவுகளை இதற்கு முன்னர் படித்து இருக்கவில்லை என்றால் படித்து விடுவது நலமாக இருக்கும்.


அப்பதிவுகளின் வாயிலாக உயிரினங்கள் அனைத்திற்கும் உயிர் இருக்கின்றது என்றும், அவற்றை புலன்களின் அடிப்படையில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை தமிழ் அறிவியல் பிரித்து வைத்து இருக்கின்றது என்றும், அதில் ஆறாவது அறிவு என்பது என்ன- அதற்கு உரிய புலன் என்ன என்பதில் குழப்பங்கள் பொதுவாக நிலவுகின்றன என்றும் நாம் கண்டு இருக்கின்றோம்.

சரி...இப்பொழுது ஒரு கேள்வி...!!!

உயிர் இருப்பதை யாராலும் மறுக்க முடியுமா?

இறை நம்பிக்கையாளராக இருந்தாலும் சரி இறை நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும் சரி உயிர் இருப்பதை அவர்களால் மறுக்க முடியாது. உயிர் உள்ள உயிரினத்திற்கும் உயிர் அற்ற சடலத்திற்கும் உள்ள வேறுபாட்டினை அவர்கள் நிச்சயம் அறிவர். உயிர் இருக்கின்றது என்பதனை அறிவதற்கு இறைவனை அறிய வேண்டும் என்ற கோட்பாடுகள் எல்லாம் கிடையாது. உயிரை அனைவரும் அறிவர்.

அதனால் தான் இறை மறுப்புச் சமயமான சமணமும், இறைவனை அறியாத சமயமான பௌத்தமும் (நாத்திக சமயங்கள்), இறைவனைப் பற்றி எதுவும் அறியாத பொழுதும் உயிரினை அடிப்படையாகக் கொண்டு அனைத்து உயிரினங்களும் ஒன்றே என்று தங்களது கோட்பாடுகளைக் கொண்டு விளங்குகின்றன. அச்சமயங்கள் இறைவனை ஏற்றுக் கொள்ளாது...ஆனால் உயிரினை ஏற்றுக் கொள்ளும்.

அதனால் தான் அனைத்து உயிர்களும் ஒன்றே என்ற நிலையில் மனிதன் விலங்காகப் பிறக்கலாம், விலங்கும் மனிதனாகப் பிறக்கலாம் என்ற பிறவிச் சுழற்சிக் கொள்கையை அவைகள் கொண்டு விளங்குகின்றன. காரணம் விலங்குகளுக்கும் உயிர் இருக்கின்றது...மனிதனுக்கும் உயிர் இருக்கின்றது. எனவே மனிதனும் விலங்கும் அடிப்படையில் ஒன்றே என்று அவைகள் கூறுகின்றன.

அச்சமயங்கள் இறைவனை ஏற்றுக் கொள்வதில்லை...அவ்வாறே ஆறாவது அறிவையும் தான். இதைத் தான் நாம் சமண சமயத்தினைச் சார்ந்த பவணந்தி முனிவரின் கூற்றுகளில் முன்னரே கண்டு இருக்கின்றோம்.

"வானவர் மக்கள் நரகர் விலங்கு புள்
ஆதிசெவி அறிவோ டையறி வுயிரே" - நன்னூல் 449

உயிர் இருப்பதை ஏற்றுக் கொள்ளும் அவர் ஆறாவது அறிவை மறுக்கின்றார். மனிதனும் விலங்கும் ஒன்றே என்றும் கூறுகின்றார். தவறில்லை...அவரது சமயத்தின் கோட்பாடே அக்கருத்து தான். ஆனால் மனிதனும் விலங்கும் ஒன்றே என்றுக் கூறும் அவரே மனிதன் விலங்கினைக் காட்டிலும் சிறந்தவன் என்று தமிழின் திணை இலக்கணத்தை வகுக்கும் பொழுது கூறுகின்றார்.

"மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை" நன்னூல் 261

ஏன் இந்த வேறுபாடு என்பதை நாம் முந்தையப் பதிவுகளில் கண்டு இருக்கின்றோம். நிற்க

எனவே உயிரினை அறிவதற்கு இறைவனை அறிய வேண்டும், இறைவன் வழி காட்ட வேண்டும் என்றெல்லாம் கிடையாது. உயிர் இருப்பதை எவர் வேண்டும் என்றாலும் அறிந்துக் கொள்ள முடியும். உயிரை மறுக்க முடியாது.

இங்கே தான் நாம் ஆன்மாவைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது. உயிரை ஏற்றுக் கொள்வதனைப் போல் ஆன்மாவை அனைவரும் ஏற்றுக் கொள்வதில்லை. இறை நம்பிக்கையாளர்கள் மட்டுமே ஆன்மாவை நம்புகின்றனர்...ஏற்றுக் கொள்கின்றனர். இறை நம்பிக்கையை அடிப்படையாக வைத்து இருக்கும் சமயங்கள் மட்டுமே ஆன்மாவினைப் பற்றிக் கூறுகின்றன.

அதாவது உயிரினை அனைவரும் ஏற்றுக் கொள்வதனைப் போல் ஆன்மாவினை அனைவரும் ஏற்றுக் கொள்வது இல்லை. இதைத் தான் மெய்கண்டார்,

"உளது இலது என்றலின் எனது உடல் என்றலின்
....
மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா" - சிவஞானபோதம் 3

என்று கூறி இருக்கின்றார்.

"உளது இலது என்றலின்" - சிலர் ஆன்மா இருக்கின்றது என்கின்றனர்....சிலர் இல்லை என்கின்றனர் என்பதே இதன் பொருள் ஆகும் (விரிவான விளக்கம்)

அதாவது ஆன்மாவினை மறுக்கும் கருத்துக்களும் இருக்கின்றன என்பதனை நாம் மேலே உள்ள சூத்திரத்தின் வாயிலாக அறிந்துக் கொள்கின்றோம். அதாவது உயிரினை ஏற்றுக் கொள்ளும் அனைவரும் ஆன்மாவினை ஏற்றுக் கொள்வது இல்லை.

மேலும் தனது நூலான சிவஞானபோதத்தில்,

"மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா" - சிவஞானபோதம் 3
"சந்தித்தது ஆன்மா சகசமலத் துணராது" - சிவஞானபோதம் 4
"இருதிறன் அறிவுளது இரண்டலா வான்மா" - சிவஞானபோதம் 7

என்று ஆன்மாவை 'ஆன்மா' என்ற சொல்லின் மூலம் குறித்து இருக்கும் மெய்கண்டார்,

"விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு" - சிவஞானபோதம் 5
"காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்" - சிவஞானபோதம் 11

என்ற சூத்திரங்களில் ஆன்மாவைக் குறிக்க 'உளம்', 'உள்ளம்' என்றச் சொற்களை பயன்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதாவது ஆன்மா, உளம், உள்ளம் என்பன வெவ்வேறு பொருளைக் குறிக்கும் சொற்கள் அல்ல...ஒரே பொருளைக் குறிக்கும் வேறு சொற்கள்.

ஆன்மா = உள்ளம் என்ற பொருளிலேயே மெய்கண்டார் தனது சிவஞானபோத நூலினை அமைத்து உள்ளார்.

உயிரும் ஆன்மாவும் ஒன்றே என்ற கருத்தினைக் கொண்டவர்கள் கூட உயிரும் உள்ளமும் வேறு என்பதனை அறிந்து இருப்பர். இந்நிலையில் ஆன்மாவை குறிப்பிட உள்ளம் என்ற சொல்லினை மெய்கண்டார் பயன்படுத்தி இருப்பது உயிரும் ஆன்மாவும் வேறு என்பதை பறைச்சாட்டுகின்றது.

மேலும் நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்,

"உளது இலது என்றலின் எனது உடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின்..." - சிவஞானபோதம் 3
"ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்" - சிவஞானபோதம் 8

என்ற சூத்திரங்களின் வாயிலாக ஆன்மாவானது ஐம்புலன்களோடு உடலினுள் இருக்கின்றது என்று.

அதாவது ஆன்மா உடலினுள் இருக்கின்றது என்றுக் கூறும் மெய்கண்டார் அது ஐம்புலன்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு அரசாண்டுக் கொண்டு இருக்கின்றது என்றே சேர்த்துக் கூறுகின்றார். இதன் வாயிலாக ஐம்புலன்கள் இல்லாத உயிரினங்களுக்கும் ஆன்மாவிற்கும் தொடர்பு இல்லை என்றே நாம் அறியப் பெறுகின்றோம். அதாவது அவ்வுயிரினங்களுக்கு உயிர் இருந்தும் அவற்றிற்கும் ஆன்மாவிற்கும் துளியும் தொடர்பில்லை.

இப்பொழுது எஞ்சி இருப்பது ஐம்புலன்களைக் கொண்ட விலங்குகளும் மனிதர்களும் தான். ஆனால் விலங்குகளுக்கு ஐம்புலன்களைத் தவிர்த்து வேறு சிறப்பு இருப்பதாக கூறப்படவில்லை. மேலும் அவைகளும் மற்ற உயிரினங்களைப் போல அஃறிணை யாகத் தான் தமிழ் இலக்கணத்தால் பிரிக்கப்பட்டு உள்ளன.

மேலும்,

"ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே." - சிவஞானபோதம் 8

என்ற சூத்திரத்தின் வாயிலாக ஐம்புலன்களின் துணையுடன் செயல்பட்டுக் கொண்டு இருந்த ஆன்மாவிற்கு இறைவன் உணர்த்த, தன்னைப் பற்றி இருந்த மாயையை விட்டு இறைவனின் அடி நாடி ஆன்மா செல்லும் என்று மெய்கண்டார் கூறி இருக்கின்றார்.

நாம் வரலாற்றில் கண்டு இருக்கின்றோம், இறைவனை மறுத்த சிலர் தீவிர இறை அடியவர்களாக மாறி இறை சேவை செய்து இருப்பதை...நாயன்மார்கள், ஆழ்வார்கள், அபோசுதளர்கள், சித்தர்கள் ஆகியோர் இறைவனை எண்ணியே இறை சேவைகள் செய்து இருக்கின்றனர்.

"குதிரைகள் வாங்கச் சென்ற மாணிக்கவாசகர்இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு இறை சேவையை மேற்கொள்ள ஆரம்பித்தார். இயேசுவின் சீடர்களைத் தேடிக் கண்டு பிடித்து கொலை புரியும் பணியினை மேற்க் கொண்டு இருந்த பவுல், தூய பவுலாய் இறை பணியை அவரே மேற்கொண்டு இறுதியில் உயிரைத் துறந்தார்."

இத்தகைய வரலாறு மனிதர்களுக்கு மட்டுமே இருக்கின்றது. ஆயிரமாயிரம் காலங்கள் கடந்தாலும் விலங்குகளின் பழக்க வழக்கங்கள் மாறாது இருக்கின்றன. ஆனால் மனிதன் மாறிக் கொண்டே இருக்கின்றான். மேலும் இவ்வுலகம் முழுவதையும் அவன் ஆட்சி செய்யும் வல்லமையும் பெற்று இருக்கின்றான். அவனே இறைவனை மறுக்கவும் செய்கின்றான்...இறைவனுக்காக உயிரையும் கொடுக்கின்றான்.

இதையேத் தான் திருமந்திரத்தில் திருமூலரும்

"பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரான் அடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரிய பேறு இழந்தாரே." - திருமந்திரம் 2090


என்று கூறுகின்றார். அதாவது இறைவனின் அடியினை அடையக் கூடிய மனிதராய் பிறந்து இருந்தும் இறைவனின் அடியினை நாடாது விலங்குகளைப் போல் திரிந்து இறைவனின் அருளினை இழக்கின்றனரே என்றே திருமூலர் மனிதர்களைப் பற்றிக் கூறுகின்றார்.

எனவே இந்நிலையில் இறைவன் உணர்த்தி ஆன்மா அவன் அடி நாடி சென்றது என்பதற்கு நாம் மனிதர்களிடம் இருந்து மட்டுமே சான்றுகளைப் பார்க்க முடியும். விலங்குகள் விலங்குகளாகவே இருக்கின்றன. மனிதனால் மட்டுமே இறைவனை உணர முடியும். அதுவும் இறைவன் உணர்த்தினால் மட்டுமே உணர முடியும். அவ்வாறு இறைவன் உணர்த்தி அவனை உணர உதவும் கருவியாய் இருப்பதே ஆன்மா. அதுவே தான் ஆறாவது அறிவிற்குரிய உறுப்பு. அது மனிதர்களுக்கு மட்டுமே இருக்கின்றது.

உயிர் அனைத்து உயிரினங்களுக்கும் இருக்கின்றது. ஆனால் ஆன்மா என்பது மனிதனுக்கு மட்டுமே சிறப்பாக இருக்கின்றது. எவ்வாறு உயிர் உடலில் எங்கு இருக்கின்றது என்று சுட்டிக் காட்ட முடியாதோ அவ்வாறே ஆன்மாவையும் உடலில் எங்கு இருக்கின்றது என்று சுட்டிக் காட்ட முடியாது.

எனவே உயிர் வேறு ஆன்மா வேறு என்றே நாம் அறிய முடிகின்றது தானே...!!!

சரி இப்பொழுது மேலும் சில நண்பர்கள் சில விடயங்களைக் குறித்து கேள்விகள் எழுப்பி இருந்தனர்...அவைகளைக் காண முயற்சிக்கலாம்...!!!

தொடரும்...!!!

பி.கு:

1) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) சிவஞானபோதத்தின் கருத்துக்களை அறிந்துக் கொள்ள,

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி