முந்தையப் பகுதி

தமிழ் அறிவியலில் உயிரை புலன்களின் அடிப்படையில் பிரித்து வைத்து இருக்கின்றனர் சரி. தொடு உணர்வு மட்டுமே இருக்கும் உயிர்களை ஓரறிவு உயிர்கள் என்றும் ஐம்புலன்களும் இருக்கும் உயிர்களை ஐந்தறிவு உயிர்கள் என்றும் கூறி உள்ளனர் சரி. ஆனால் மனிதனை மட்டும் ஆறறிவு படைத்த உயிரினமாக கூறி இருக்கின்றனரே...அது ஏன்? அவன் ஆறாவது அறிவினை உடையவன் என்றால் அந்த அறிவிற்கு உரிய உறுப்பு ஏது? ஆறாவது அறிவு என்றால் என்ன?

இப்பொழுது இக்கேள்விகள் தான் நம் முன்னே நின்றுக் கொண்டு இருக்கின்றன.நியாயமான கேள்விகள் தான். புலன்களின் வழியாக உயிர்களைப் பிரித்து இருக்கின்றார்கள் என்று கூறும் பொழுது ஆறாவது அறிவு என்று ஒன்று உள்ளது என்று நாம் கூறினால் ஆறாவது அறிவிற்குரிய உறுப்பு எது என்றும் நாம் நிச்சயமாகக் கூறித் தானே ஆக வேண்டி இருக்கின்றது.

சரி இப்பொழுது அக்கேள்விக்கான விடையினைக்காண முயலலாம்.

ஐந்தறிவு படைத்த உயிரினங்கள் இருக்கின்றன. மனிதனும் ஐம்புலன்கள் கொண்டவனாக இருக்கின்றான். ஆனால் அவன் மற்ற உயிரினங்களில் இருந்து வேறுபட்டு நிற்கின்றான். மற்ற உயிரினங்கள் மாறாது இருக்கும் பொழுது இவன் மட்டும் மாறிக் கொண்டே இருக்கின்றான். இதற்கு என்ன காரணம் என்று கண்டால் மனிதனுக்கு பகுத்தறியும் தன்மை இருக்கின்றது என்பதே சிலர் கொடுக்கும் விடையாகும்.

அதாவது மனிதனால் நன்மை தீமை என்று பகுத்தறிய முடியும் ஆனால் மிருகங்களால் அவ்வாறு பகுத்தறிய முடியாது, எனவே தான் மனிதன் மிருகங்களில் இருந்து மாறுபட்டு இருக்கின்றான் என்றும் அந்த பகுத்தறியும் தன்மையே ஆறாவது அறிவு என்பதுமே இன்று பரவலாகப் பரவி இருக்கும் விடயமாகும்.

ஆனால் உண்மை என்னவென்றால் விலங்குகளாலும் பகுத்தறிய முடியும். ஒரு நாயின் முன்னே மெழுகினால் செய்த ரொட்டியினை நாம் வைத்தோம் என்றால் அது அதனுடைய புலன்களைப் பயன்படுத்தி (முதலில் முகர்ந்து பார்க்கும் பின்னர் நாவினால் சோதித்துப் பார்க்கும்) அந்த ரொட்டி சாப்பிட தகுந்தது அல்ல என்று அறிந்துக் கொண்டு அந்த ரொட்டியினை உண்ணாது நகர்ந்துச் சென்று விடும். அதாவது அதனுடைய புலன்களை பயன்படுத்தி ஒரு பொருளானது தனக்கு நல்லதா இல்லை கெட்டதா என்று பகுத்தறிந்துக் கொண்டு நாயானது சென்று விடுகின்றது.

எனவே பகுத்தறிவு என்பதுமனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதும் அதுவே தான் ஆறாவது அறிவு என்பதும் சரியான ஒரு விடயமாக அமையாது.

இந்நிலையிலேயே தான் உண்மையிலேயே ஆறாவது அறிவு என்ற ஒன்று இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. ஆறாவது அறிவு என்ற ஒன்று இல்லை என்றுக் கூறும் நாத்திக நண்பர்களும் இருக்கின்றனர். அவர்கள் இக்கால அறிவியலை வைத்துக் கொண்டு ஆறாவது அறிவு இல்லை என்று கூறுகின்றனர்.

மனிதனும் ஒரு விலங்கு தான். ஆறாவது அறிவு என்பது எல்லாம் வெறும் கதை என்பதே அவர்களின் வாதமாக இருக்கின்றது.

ஆனால் ஆச்சர்யவசமாக இதே கருத்தைத் தான் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த பவணந்தி முனிவரும் கூறிச் சென்றுள்ளார்... அவரது தமிழ் நூலான நன்னூலில்!!!

"மெய்ந் நா மூக்கு நாட்டம் செவிகளின்
ஒன்று முதலாக் கீழ்க் கொண்டுமேல் உணர்தலின்
ஓர் அறிவாதியா உயிர் ஐந்தாம்" - நன்னூல் 444

என்று உயிர் ஐந்து வகைப் படும் என்று நன்னூலில் கூறி இருக்கும் அவர்,

"வானவர் மக்கள் நரகர் விலங்கு புள்
ஆதிசெவி அறிவோ டையறி வுயிரே" - நன்னூல் 449

என்று விலங்குகளும் மனிதர்களும் ஐந்தறிவுப் படைத்தவர்கள் என்றே கூறிச் சென்று உள்ளார். அதாவது இவர் ஆறாவது அறிவு என்ற ஒன்று இருப்பதை மறுத்து உள்ளார்.

ஆச்சர்யவசமாக இவரும் ஒரு நாத்திகரே!!! நாத்திக சமயமான சமண சமயத்தைச் சார்ந்தவர் இவர்.

சிந்திக்கத்தக்க விடயம் தானே இது.

"மக்கள் தாமே ஆறறிவுயிரே" (தொல்காப்பியம் - 1532)

என்று தொல்காப்பியரால்ஆறறிவு படைத்தவனாகக் கூறப் பெறும் மனிதனை, அவனது ஆறாவது அறிவு என்ற விடயத்தை மறுத்து அவனை ஐந்தறிவு விலங்குகளோடு பவணந்தி முனிவர் கூறி இருக்கின்றார்.

மேலும் தொல்காப்பியரும் "மாவும் மாக்களும் ஐயறிவினவே" என்பதன் வாயிலாக மக்கள் சிலரை விலங்குகளுடனே வைத்து ஒப்பிட்டு இருக்கின்றார்.

இந்நிலையில் நாம் எவருடையக் கூற்றினை ஏற்றுக் கொள்வது? தொல்காப்பியரின் கூற்றையா அல்லது பவணந்தி முனிவரின் கூற்றையா என்றே நாம் எண்ணிக் குழம்பிக் கொள்ள மனம் இல்லாத தமிழ் அக்கேள்விக்கும் விடையினை சுமந்துக் கொண்டே இருக்கின்றாள்.

ஆம்...தமிழ் உயிரினை புலன்களின் அடிப்படையில் மட்டுமே பிரித்து இருக்கவில்லை. மாறாக திணைகளின் அடிப்படையிலும் பிரித்து தான் வைத்து இருக்கின்றாள்.

தமிழர்களின் திணை இலக்கணம் உயிர்களை இரண்டாகப் பிரிக்கின்றது.

1) உயர்திணை (மனிதர்கள்)
2) அஃறிணை (மனிதர்கள் அல்லாத மற்ற உயிரினங்கள்)

இப்பிரிவுகள் தமிழில் மட்டுமே இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழர்களின் திணை இலக்கணம் மனிதர்களை மற்ற உயிரினங்களிடம் இருந்து சிறப்பாகப் பிரித்துக் கூறுகின்றது.

இந்நிலையில் தான் நாம் மீண்டும் பவணந்தி முனிவரைச் சந்திக்க வேண்டி இருக்கின்றது. காரணம் மனிதர்களை ஐந்து அறிவு உடையவர்கள் என்று கூறிய அவர் தமிழ் திணை இலக்கணத்தை விளக்க வேண்டிய தருணத்தில்

"மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை" நன்னூல் 261

என்று மக்களை மற்ற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்தி உயர்த்திக் கூறி இருக்கின்றார்.

அதாவது மனிதனுக்கு ஆறறிவு என்ற ஒன்றுக் கிடையாது என்று அவனை ஐந்தறிவு படைத்தவன் என்று விலங்குகளுடன் ஒப்பிட்டுக் கூறிய பவணந்தி முனிவர், தமிழின் திணை இலக்கணத்தைக் கூறும் பொழுது மனிதன் விலங்குகளிடம் இருந்து மேலானவன் என்றே கூறிச் சென்றுள்ளார். இந்நிலையில் தான் நாம் சில விடயங்களைக் காண வேண்டி இருக்கின்றது.

கடவுள் நம்பிக்கையுள்ள தொல்காப்பியர் ஆறாவது அறிவு இருக்கின்றது என்றும் அதனை உடையவர்கள் மனிதர்கள் என்றும் கூறிச் சென்று உள்ளார். மேலும் அவரும் சில மனிதர்களை ஐந்தறிவு படைத்த மிருகங்களோடு வைத்தே கூறி உள்ளார்.

நாத்திகரான பவணந்தி முனிவரோ ஆறாம் அறிவை மறுத்து மனிதனும் விலங்கும் ஐந்தறிவு உடையவரே என்றே கூறி இருப்பினும் தமிழர்களின் திணை இலக்கணத்தைக் கூற விழையும் பொழுது மனிதர்களை விலங்குகளிடம் இருந்து பிரித்து உயர்த்திக் கூறி உள்ளார்.

இந்நிலையில் சில விடயங்களை நாம் கவனிக்க வேண்டி இருக்கின்றது.

1) மனிதன் விலங்குகளை விட உயர்ந்தவன் என்பதனை இருவருமே ஏற்றுக் கொள்கின்றனர்.
2) தொல்காப்பியர் ஆறாம் அறிவைப் பற்றிக் கூறும் பொழுது அதனை பவணந்தி முனிவர் மறுக்கின்றார்.
3) தொல்காப்பியரும் அனைத்து மனிதர்களும் ஆறாம் அறிவை உடையவர்களாகக் கூறிச் செல்ல வில்லை.

இதனடிப்படையில் நாம் சிந்தித்தோம் என்றால் மனிதன் மற்ற உயிர்களை விட உயர்ந்தவன் என்ற எண்ணம் ஒன்றாக இருந்தாலும் ஆறாம் அறிவைக் குறித்த நிலையில் கருத்து வேறுபாடுகள் இருப்பது தெரிகின்றது. ஏன் இந்த வேறுபாடு என்று நாம் கண்டோம் என்றால் ஆறாவது அறிவினை அனைத்து மக்களும் அறிவதில்லை என்றே தொல்காப்பியர் கூறிச் சென்று உள்ளார்.

அதாவது ஆறாவது அறிவு என்ற ஒன்று இருக்கின்றது என்று கூறிய அவர் அனைத்து மக்களும் ஆறறிவோடு இருக்கின்றனர் என்றுக் கூறவில்லை. சிலரை ஐந்தறிவு நிலையில் தான் வைத்து உள்ளார்.

"அட என்னடா இது...ஆறாவது அறிவு இருக்கு அப்படினு சொல்றாங்க ஆனா எல்லாராலும் உணர முடியாது அப்படின்னு சொல்றாங்க...இவங்க என்னதான் சொல்ல வராங்க" என்று நாம் குழம்புவதை விரும்பாது விடையினை தந்து தான் சென்றுள்ளார் மெய்கண்டார் அவர்கள், அவரது நூலான சிவஞானபோதத்தில்.

"மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா" சிவஞானபோதம் 3 (விளக்கம்)

என்று உடலினுள் ஆன்மா இருக்கின்றது என்றுக் கூறும் அவர்,

"ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்" சிவஞானபோதம் 8 (விளக்கம்)

என்பதன் வாயிலாக ஆன்மா ஐம்புலன்களோடு வளர்ந்து இருக்கின்றது என்றும்,

"...ஆன்மா சகசமலத் துணராது" சிவஞானபோதம் 4 (விளக்கம்)
"...உணர்த்த உணர்தலின்" சிவஞானபோதம் 3 (விளக்கம்)

அந்த ஆன்மாவானது தன்னை அறியாது இருக்கின்றது என்றும் கூறுகின்றார்.

அதாவது உடலினுள் இருக்கும் ஆன்மாவானது, ஐம்புலன்களுடன் இணைந்து தன்னை அறியா நிலையில் இருக்கின்றது என்பதே அவர் கூறும் கருத்தாகும்.

ஐம்புலன்களுடன் இருக்கின்றது என்றால் நிச்சயம் அந்த உயிரினம் ஐந்தறிவு பெற்றதாக இருக்க வேண்டும். அவ்வாறுப் பார்த்தோம் என்றால் விலங்குகளும் மனிதர்களுமே தான் வருகின்றனர். ஆனால் விலங்குகள் வெறும் ஐந்தறிவுப் படைத்தவையாகவே அறியப்பட்டு இருக்கின்றன. ஆனால் மனிதனோ விலங்குகளை விட உயர்ந்தவனாகவும், ஆறாவது அறிவினை உடையவனாகவும் அறியப்பட்டு இருக்கின்றான்.

இந்நிலையில் மனிதனை மற்ற உயிரினங்களிடம் இருந்து பிரித்து அவனைச் சிறப்பிக்கும் ஆறாவது அறிவு என்பது ஆன்மா தான் என்றே நாம் கருத வாய்ப்பு இருக்கின்றது தானே.

அந்த வாய்ப்பைத் தான் நாம் சிறிது ஆராய வேண்டி இருக்கின்றது.

ஆறாவது அறிவு ஆன்மாவா?

காண்போம்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2 கருத்துகள்:

அருமையான பதிவு உங்களுக்கும் ஆய்வாளர் தெய்வநாயகம் அய்யாவுக்கும் நன்றி ,தங்கள் பணி தொடரட்டும்

ஆதியில் தோன்றிய அனுவான பரம அனு முதல் பஞ்சபூதங்கள் வரை, அதன் கூட்டு உயிர் வரை அனைத்துமே பரிணாமத்தின் விளைவு தான். ஓரறிவு உயிரி, தன் சுயத் தேவையால் விளைந்திட்ட எண்ணத்தால், வேண்டுதலால் இரறிவாகி அதன் தொடர்ச்சியே 6 அறிவு உயிரியாக பரிணாமம் கொண்டுள்ளது. உயிர் தான் ஆன்மா. அதை எப்படி மறுக்க முடியும்? உயிரின் மீது போர்வைப் போல் போர்த்தி இருப்பது தான் பரிணாமத்தினால் ஏற்பட்ட இன்ப மயக்கம்/ துன்பப் பதிவுகள் தான் உயிரை சுற்றி மாயையாக இருந்து செயல்படுத்துகிறது. ஞான வாழ்வு என்பது கற்பனையானது அன்று. நானே தான் எல்லாமுமாக இங்கே அதன் பின்னமாக இருக்கிறேன் என்பதையும், தானக்கும் பிறர்க்கும் துன்பமின்றி வாழ்தலும் தான்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு