முந்தையப் பதிவு

சூத்திரம் 3: கடவுளாட்சியில் ஆன்மாவின் உண்மை

உளது இலது என்றலின் எனது உடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படில்
உண்டி வினை இன்மையின் உணர்த்த உணர்தலின்
மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா.

பதவுரை:

இலது என்றலின் - இல்லை என்று கூறுவதாலும்

எனது உடல் என்றலின் - என்னுடைய உடல் என்று (பிரித்துச்) சொல்வதாலும்

ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் - மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளின் வழியாகச் செயல்படுகின்ற ஐம்புலன்களின் ஒடுக்க நிலைகளை அறிகின்ற காரணத்தாலும்

கண்படில் - கண்ணுறக்கத்தில்

உண்டிவினை இன்மையின் - உணவும் வேலையும் இல்லாததாலும்

உணர்த்த உணர்தலின் - பிறிதொருவர் உணர்த்த உணர்தலாலும்

மாயா இயந்திர தனுவினுள் - மாயா இயந்திரமாகிய உடலுக்குள்

ஆன்மா உளது - ஆன்மா உள்ளது.

விளக்கம்:

இல்லை என்று மறுக்கின்ற காரணத்தினால் ஆன்மா உண்டு. என்னுடைய உடல் என்றுப் பிரித்துச் சொல்கின்றகாரணத்தினால் உடலுக்கு வேறாகிய ஆன்மா உண்டு. மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளின் வழியாகச் செயல்படுகின்ற ஐம்புலன்களின் ஒடுக்க நிலைகளை அறிவதால் ஐம்புலன்களுக்கு வேறான ஆன்மா உண்டு.

கண்ணுறக்கத்தில்(கனவில்) உடலுக்கு உணவும் வேலையும் இல்லாதிருப்பீனும், உணவும் வேலையும் இருந்ததாக அறிந்த ஆன்மா உண்டு. தானே அறிய இயலாமல் பிறிதொருவர் உணர்த்தியப் பின்பு அதை உணரக்கூடிய நிலையிலும் மாயா இயந்திரமாகிய உடலுக்குள் ஆன்மா இருக்கின்றது.

இங்கே நாம் முக்கியமாக காண வேண்டிய ஒரு விடயம் 'உணர்த்த உணர்தலின்' என்றச் சொல்லாடலையே ஆகும். உணர்த்த உணர்தலின் என்றால் - உணர்த்தினால் மட்டுமே உணர்ந்துக் கொள்ளும் என்றே பொருள் ஆகும்.

இறைவனை அறியாத நிலையில் ஆன்மா இருக்கின்றது. இந்நிலையில் ஆன்மா இறைவனை உணர வேண்டும் என்றால் இறைவனே ஆன்மாவிற்கு உணர்த்த வேண்டும். இறைவன் உணர்த்தாமல் ஆன்மாவால் இறைவனை அறிய முடியாது.

ஆன்மிகம் பேசுவோர் என்றுமே இறைவனை அறியலாம் என்றோ இறைவனைக் காட்டுகின்றேன் என்றோ கூறியது கிடையாது...மாறாக இறைவனை உணர மட்டுமே முடியும் அதுவும் அவன் உணர்த்தினால் மட்டுமே உணர முடியும் என்றே கூறி இருக்கின்றனர்.

மாணிக்கவாசகர் - 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்றே பாடிச் சென்றுள்ளார். அதாவது இறைவனின் தாளினை அறிந்து வணங்குவதற்கு இறைவனின் அருள் வேண்டும் என்றே அவர் கூறி உள்ளாரே அன்றி இறைவனை அவர் தேடிச் சென்று அறிந்துக் கொண்டார் என்றுக் கூறவில்லை.

ஆன்மிகம் பேசுவோர் 'இறைவன் எம்மை ஆட்க்கொண்டான்' என்றே தான் கூறி இருக்கின்றனர். அதைப் போன்றே இயேசுவின் சீடர்கள் யாரும் இயேசுவைத் தேடிச் செல்லவில்லை....அவரே தான் அவர்களைத் தேர்வு செய்தது. அதைப் போன்றே தான் பவுலின் கதையும், இயேசுவின் சீடர்களை கொலை செய்துக் கொண்டு இருந்த பவுல் பின்னர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு இறைத் தூதனாக மாறி சேவைப் புரிந்ததை வரலாற்றில் அறிகின்றோம்.

எனவே இறைவன் உணர்த்தாமல் ஆன்மாவால் அதனையும் சரி இறைவனையும் சரி அறிய முடியாது. அந்த அறியா நிலையில் தான் ஆன்மா இல்லை, இறைவன் இல்லை என்ற கருத்துக்களும் சரி மந்திரத்தால் இறைவனை கட்டுப்படுத்தலாம், மந்திரங்களும் சடங்குகளும் வலிமை வாய்ந்தவை என்ற எண்ணங்களும் சரி எழுந்து உழன்றுக் கொண்டு இருக்கின்றன.

தொடரும்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு