முந்தையப் பதிவு

சூத்திரம் 6: கடவுளை உணர இயலுமா?

உணர்வு உரு அசத்து எனின் உணராது இன்மையின்
இருதிறன் அல்லது சிவசத்தாம் என
இரண்டு வகையின் இசைக்கும் மன் உலகே.

பதவுரை:

உணர்வு உரு எனின் - (கடவுள்) ஐம்பொறிகளால் அளந்து அறிந்து உணரக்கூடிய உருவப் பொருளே என்றால்

அசத்து - நிலை இல்லாத அழியும் பொருள் ஆவான்

உணராது - கருவிகளால் உணர முடியாதவன் என்றால்

இன்மையின் - இல்லாத பொருள் ஆவான்

சிவசத்து - என்றும் நின்று நிலைபெறும் அன்பாகிய கடவுள்

இருதிறன் - உணரக்கூடியதும், உணரக் கூடாததும் ஆகிய இரண்டு தன்மைகளையும்

அல்லது என - அல்லாதவன் என்று

மன்உலகு - நிலைபேறுடைய மெய்யுணர்வு பெற்ற சான்றோர்கள்

இரண்டு வகையின் - இரண்டு வகையாலும்

இசைக்கும் - சொல்லுகிறார்கள்

விளக்கம்:

கடவுள் ஐம்பொறிகளால் அளந்து அறிந்து உணரக்கூடிய உருவப்பொருள் என்றால் உருவப் பொருள் யாவும் அழியக் கூடியதாய் இருப்பதைப் போன்று, கடவுளும் நிலை இல்லாத அழியும் பொருள் ஆவான். கடவுள் நமது கருவிகளால் உணர இயலாதவன் என்றால் இல்லாத பொருள் ஆவான். என்றும் நின்று நிலைபெறும் அன்பாகிய கடவுள், உணரக்கூடியதும், உணரக்கூடாததும் ஆகிய இரண்டு தன்மையையும் அல்லாதவன் என நிலைபேறுடைய மெய்யுணர்வு பெற்ற சான்றோர்கள் இரண்டு வகையாலும் சொல்கின்றார்கள். கடவுளுடைய அருள் பெற்றவர்களால் கடவுளை உணர இயலும். அருள் பெறாதவர்களால் கடவுளை உணர இயலாது.

கடவுள் உணர்த்தும் பொழுது மட்டுமே கடவுளை உணரக் கூடியது ஆன்மா என்பதாகப் பார்த்தோம். அப்படியானால் கடவுள் ஆன்மாவினால் உணரக்கூடிய பொருளா என்ற கேள்வி எழுகின்றது. கடவுள் உணரக்கூடிய பொருள் என்றால் அவனுடைய அழியாத்தன்மை கேள்விக்குரியதாக மாறி விடுகின்றது. எவ்வாறெனில், உலகத்துப் பொருள்களை எல்லாம் நமது ஐம்புலன்களால் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறிகின்றோம். அவ்வாறு அறியக்கூடிய பொருளாக, கடவுள் இருப்பானானால், உலகத்துப் பொருட்களைப் போல அவன் அழியக்கூடிய தன்மை உடையவன் என்று ஆகிறது. அது கடவுளுடைய தன்மைக்கு இழுக்காகும். கடவுள் அழியக்கூடிய பொருளாகிய அசத்து அல்லன். என்றும் அழியாப் பொருளாகிய சத்தாக நிற்பவனே கடவுள்.

அப்படியானால், கடவுள் அறிந்து உணர முடியாப் பொருளா? என்ற கேள்வி எழுகின்றது. அறிந்து உணர முடியாப் பொருள் என்றால் அப்படி ஒரு பொருள் உலகில் இருக்க இயலாது என்பது தெளிவு. ஆகவே கடவுள் இல்லாப் பொருளாகி விடுவான்.

உலகில் என்றும் நிலைபெறும் பெரியவர்களை இதைப் பற்றிக் கேட்டால், அவன் உணரக்கூடிய பொருளும் அல்லன்; உணர இயலாப் பொருளும் அல்லன்; உணர்தல், உணராமை ஆகிய இரண்டிற்கும் அப்பாற்பட்டு விளங்குபவன் கடவுள் என்று கூறுகின்றனர்.

இது எவ்வாறு பொருந்தும்? என்ற எண்ணம் ஏற்படலாம். அவன் தன்னை யாருக்கு உணர்த்துகின்றானோ அவர்களால் மட்டுமே அவனை உணர முடியும். மற்றவர்களால் அவர்கள் எவ்வளவு முயன்றாலும் அவனை உணர்தல் இயலாது.

இதே கருத்து கிருத்துவத்திலும் வருவது குறிப்பிடத்தக்கது.

// சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.// - மத்தேயு 11:27

சிவம் என்பது அன்பைக் குறிக்கும்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!

அன்பு என்ற உணர்வைப் பெற்றவர்களுக்கே அதன் தன்மை விளங்கித் தோன்றும். அன்பை உணராதவர்களுக்கு அன்பை விளக்கிக் காட்டவோ, நிலை நிறுத்தவோ மற்றவர்களால் முடியாது. என்றும் நிலை பெற்று விளங்கும் கடவுளாகிய சத்துப் பொருளும் அன்பாகிய சிவசத்தாகவே இருக்கின்றது. ஆகவே கடவுளை உணரக்கூடியவன் என்றும், உணர இயலாதவன் என்றும் இரண்டு வகையாகக் கூறலாம் என நிலைப் பெற்ற பெரியோர் விளக்கிக் கூறுகின்றனர்.

தொடரும்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

முந்தையப் பதிவு

சூத்திரம் 5: தன்னை உணரா ஆன்மா

விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு
அளந்தறிந் தறியா ஆங்கவை போலத்
தாந்தம் உணர்வின் தமியருள்
காந்தக் கண்ட பசாசத் தவையே.

பதவுரை:

விளம்பிய - முன் சூத்திரத்தில் சொல்லப்பட்ட

உள்ளத்து - உள்ளே இருக்கும் ஆன்மாவினால்

மெய்,வாய்,கண்,மூக்கு - மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளும்

அளந்து அறிந்து - தமக்கு முன்னுள்ள பொருள்களை இப்படிப்பட்டவை என அளவிட்டு அறிந்தும்

அறியா ஆங்கவை போல - தம்மையும் தம்மைச் செயல்பட வைக்கும் ஆன்மாவையும் அறியாதிருக்கும் ஐம்பொறிகளைப் போல

தாம் - ஆன்மாக்கள் தாமும்

தம் உணர்வின் - தமது உணர்வில் விளங்குகின்றன

தமி - முதல்வனாகிய கடவுளின்

அருள் - திருவருளினால்

காந்தம் கண்ட - காந்தத்தால் இழுக்கப்பட்ட

பசாசத்து அவையே - இரும்பினை ஒத்து ஆன்மாக்கள் செயல்படுகின்றன.

விளக்கம்:

முன் சூத்திரத்தில் சொல்லப்பட்ட உள்ளே இருக்கும் ஆன்மாவினால் மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளும் தமக்கு முன்னுள்ள பொருள்களை இப்படிப்பட்டவை என அறிந்தும், தம்மையும் தம்மைச் செயல்பட வைக்கும் ஆன்மாவையும் அறியாது இருக்கும் அவற்றைப் போல ஆன்மாக்கள் தாமும் தமது உணர்வில் விளங்குகின்றன. முதல்வனாகிய கடவுளின் திருவருளினால் காந்தத்தால் இழுக்கப்பட்ட இரும்பினை ஒத்து ஆன்மாக்கள் செயல்படுகின்றன. இரும்பிற்குத் தானே இயங்கும் இயக்கம் இல்லாதது போல, ஆன்மாக்களுக்கும் தாமே தம்மை உணரும் ஆற்றல் இல்லை. காந்தம் இழுக்க இரும்பு அதனோடு இணைவதைப் போன்று, கடவுள் உணர்த்த உணரும் ஆற்றலை உடையது ஆன்மா.

உடலின் உள்ளே இருக்கும் ஆன்மா 'உள்ளம்' என்றே அழைக்கப்படுகின்றது. உள்ளே இருக்கும் உள்ளமாகிய ஆன்மாவினால் இயக்கப்பட்டு, உலகத்திலுள்ள எல்லாவற்றையும் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று ஆன்மாவிற்கு அறிவிப்பவை ஐம்புலன்கள். அவ்வைம்புலன்களும் தமக்கு முன்னுள்ள பொருள்களை இப்படிப்பட்டவை என அளவிட்டு அறிந்தும், தம்மையோ தம்மைச் செயல்படவைக்கும் ஆன்மாவையோ அறியும் ஆற்றல் அற்றவைகளாய் இருக்கின்றன. அவற்றைப் போலவே ஆன்மாவும் தன்னையோ தன்னைச் செயல்பட வைக்கும் இறைவனையோ உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றது. இவ்வாறு ஆன்மா தன்னை உணர்ந்துக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதற்குக் காரணம், அதை மூடி இருக்கும் சகசமலம் என்பதை முந்திய சூத்திரத்தில் சகசமலத்து உணராது என்ற பகுதியால் அறிந்தோம்.

அறியக்கூடிய ஆற்றல் ஆன்மாவிற்கு எப்பொழுதுமே இல்லாமல் போய் விட்டதா? என்ற கேள்வி எழுப்பப்படுமானால், அதற்கு விடை, 'நிலையாகப் போய்விடவில்லை' என்பதாகும். கடவுள் உணர்த்தினால் அதை உணரக் கூடிய தகுதி ஆன்மாவிற்கு உண்டு. ஆனால் கடவுள் உணர்த்தாமல் தானாக, கடவுளை உணரக்கூடிய ஆற்றல் ஆன்மாவிற்கு இல்லை. இதை ஒரு எடுத்துக்காட்டின் வழி கூற வேண்டுமானால் கடவுளை காந்தத்திற்கும் ஆன்மாவை இரும்பிற்கும் ஒப்பிடலாம். இரும்பு தானாகச் சென்று காந்தத்தை அடைய இயலாது, காந்தம் இழுக்கும் பொழுது காந்தத்தோடு இணையும் ஆற்றல் இரும்பிற்கு உளது.

காந்தத்தின் முன்னால் ஒரு இரும்பையும் ஒரு மரக்கட்டையையும் வைத்தால், இரும்பு காந்தத்தை அடைகின்றது. மரக்கட்டை அடைவதில்லை. இதைப் போல ஆன்மாவே கடவுளை உணர முடியும். மற்றப் பொருள்களுக்கு கடவுளை உணரும் ஆற்றல் இல்லை.

கடவுள் தம்முடைய திருவருளினால் ஆன்மாக்களுக்கு உணர்த்தும் பொழுது மட்டுமே, அவை தம்மையும் தம் தலைவனாகிய கடவுளையும் உணரும் ஆற்றலைப் பெறுகின்றன. அதுவரை அவை தம்மை உணரா ஆன்மாவாகவே உள்ளன.

தொடரும்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

முந்தையப் பதிவு


சூத்திரம் 4: வீழ்ந்த ஆன்மா செயல்படும் விதம்

அந்தக்கரணம் அவற்றின் ஒன்று அன்று அவை
சந்தித்தது ஆன்மா சகசமலத் துணராது
அமைச்சர சேய்ப்ப நின்று அஞ்சவத்தைத்தே.

பதவுரை:

ஆன்மா - ஆன்மாவானது

அந்தக்கரணம் - மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய அந்தக் கரணங்களாகிய

அவற்றின் ஒன்று அன்று - அவற்றில் ஒன்று அன்று

சகசமலத்து உணராது - சகசமல மறைப்பின் காரணமாக ஆன்மா தன்னை உணர மாட்டாமல் நிற்கிறது

அமைச்சரசு ஏய்ப்ப நின்று - அமைச்சர்களைக் கொண்டு ஆட்சி செய்யும் அரசனைப் போல் நின்று

அவை - அந்தக்கரணங்களை

சந்தித்தது - சந்தித்துச் செயல்படுவது

அஞ்சவத்தைத்தே - நனவு, கனவு, துயில், அறிதுயில், இன்துயில் ஆகிய ஐந்து அனுபவங்களில் ஆகும்.

விளக்கம்:

ஆன்மாவானது மனம், புத்தி அகங்காரம் சித்தம் ஆகிய அந்தக்கரணங்களாகிய அவைகளில் ஒன்று அன்று. சகசமல மறைப்பின் காரணமாக ஆன்மா தன்னை உணர மாட்டாமல் நிற்கின்றது. அமைச்சர்களைக் கொண்டு ஆட்சி செய்யும் அரசனைப் போல நின்று அந்தக்கரணங்களை ஆன்மா சந்தித்துச் செயல்படுவது நனவு, கனவு, துயில், அறிதுயில், இன்துயில் ஆகிய ஐந்து அவத்தைகளிலே ஆகும்.

மாயா இயந்திரமாகிய உடலுக்குள் இருக்கின்ற ஆன்மாவை அது உடலின் செய்கைகளை அறிவதாலும், உணர்த்த உணர்வதாலும் இருப்பதாக அறியலாம் என்று கூறுவது சரிதானா? பற்றுவது, சிந்திப்பது, துணிவது, தன்கண் கொள்வது முதலிய செயல்கள் உடலுக்கு உள்ளேயுள்ள மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய அந்தக்கரணத்தின் செயலாகும் அல்லவா! என்ற சந்தேகம் எழலாம்.

அறிவது, பற்றுவது, முடிவெடுப்பது, துணிவது முதலியன மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய அந்தக்கரணங்களின் செயல்களே என்பதில் சந்தேகமில்லை.

நான் அறிந்தேன்! நான் பற்றினேன்! நான் முடிவெடுத்தேன்! நான் துணிந்தேன்! என்றுக் கூறும் பொழுது அந்தக்கரணங்களின் இயக்கத்திற்குக் காரணமான ஆன்மா ஒன்று உளது என்பது விளங்குகின்றது.

அந்தக்கரணம் ஆன்மாவின் செயலுக்குக் கருவியாகுமே தவிர, ஆன்மாவாகாது. கண் முதலிய கருவிகளின் வழியாகக் காணப்படுவதைப் பற்றுவது மனம். அதை இன்னதெனச் சிந்திப்பது சித்தம். சிந்தனையின் கண் இது தான் எனத் துணிவேன் என எழுவது அகங்காரம். துணிந்து தன் கண் கொள்வது புத்தி. இவ்வகையில் மனம் முதலிய நான்கும் ஆன்மாவாகிய அரசனுக்கு அமைச்சர்கள் போல் நின்று உதவுகின்றன.

ஆன்மாவிற்கு தன்னை உணரும் ஆற்றல் இல்லை என்பதை முன்னரே கண்டோம். தன்னை உணரும் ஆற்றல் அதற்குத் தோன்றாமல் போனதற்குக் காரணம், அது பிறக்கும் பொழுதே அதை மூடி மறைத்து இருக்கும் ஜென்மப் பாவமாகிய சகச மலமாகும். ஆகவே சகச மலத்திற்குட்ப்பட்ட ஆன்மா தன்னை உணரா நிலையில் அந்தக்கரணங்களின் துணைக் கொண்டு செயல்படுகின்றது. அந்தக்கரணங்கள் ஆன்மாவாகிய அரசனுக்கு ஏற்ற அமைச்சர்களாயிருந்து செயல்படுகின்றன. கண் இருப்போன் நோயின் காரணமாகக் காண இயலாமல் இருப்பது போன்று, சகசமல மறைப்பின் காரணமாக ஆன்மா தன்னை உணர மாட்டாமல் இருக்கின்றது.

தொடரும்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

முந்தையப் பதிவு

சூத்திரம் 3: கடவுளாட்சியில் ஆன்மாவின் உண்மை

உளது இலது என்றலின் எனது உடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படில்
உண்டி வினை இன்மையின் உணர்த்த உணர்தலின்
மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா.

பதவுரை:

இலது என்றலின் - இல்லை என்று கூறுவதாலும்

எனது உடல் என்றலின் - என்னுடைய உடல் என்று (பிரித்துச்) சொல்வதாலும்

ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் - மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளின் வழியாகச் செயல்படுகின்ற ஐம்புலன்களின் ஒடுக்க நிலைகளை அறிகின்ற காரணத்தாலும்

கண்படில் - கண்ணுறக்கத்தில்

உண்டிவினை இன்மையின் - உணவும் வேலையும் இல்லாததாலும்

உணர்த்த உணர்தலின் - பிறிதொருவர் உணர்த்த உணர்தலாலும்

மாயா இயந்திர தனுவினுள் - மாயா இயந்திரமாகிய உடலுக்குள்

ஆன்மா உளது - ஆன்மா உள்ளது.

விளக்கம்:

இல்லை என்று மறுக்கின்ற காரணத்தினால் ஆன்மா உண்டு. என்னுடைய உடல் என்றுப் பிரித்துச் சொல்கின்றகாரணத்தினால் உடலுக்கு வேறாகிய ஆன்மா உண்டு. மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளின் வழியாகச் செயல்படுகின்ற ஐம்புலன்களின் ஒடுக்க நிலைகளை அறிவதால் ஐம்புலன்களுக்கு வேறான ஆன்மா உண்டு.

கண்ணுறக்கத்தில்(கனவில்) உடலுக்கு உணவும் வேலையும் இல்லாதிருப்பீனும், உணவும் வேலையும் இருந்ததாக அறிந்த ஆன்மா உண்டு. தானே அறிய இயலாமல் பிறிதொருவர் உணர்த்தியப் பின்பு அதை உணரக்கூடிய நிலையிலும் மாயா இயந்திரமாகிய உடலுக்குள் ஆன்மா இருக்கின்றது.

இங்கே நாம் முக்கியமாக காண வேண்டிய ஒரு விடயம் 'உணர்த்த உணர்தலின்' என்றச் சொல்லாடலையே ஆகும். உணர்த்த உணர்தலின் என்றால் - உணர்த்தினால் மட்டுமே உணர்ந்துக் கொள்ளும் என்றே பொருள் ஆகும்.

இறைவனை அறியாத நிலையில் ஆன்மா இருக்கின்றது. இந்நிலையில் ஆன்மா இறைவனை உணர வேண்டும் என்றால் இறைவனே ஆன்மாவிற்கு உணர்த்த வேண்டும். இறைவன் உணர்த்தாமல் ஆன்மாவால் இறைவனை அறிய முடியாது.

ஆன்மிகம் பேசுவோர் என்றுமே இறைவனை அறியலாம் என்றோ இறைவனைக் காட்டுகின்றேன் என்றோ கூறியது கிடையாது...மாறாக இறைவனை உணர மட்டுமே முடியும் அதுவும் அவன் உணர்த்தினால் மட்டுமே உணர முடியும் என்றே கூறி இருக்கின்றனர்.

மாணிக்கவாசகர் - 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்றே பாடிச் சென்றுள்ளார். அதாவது இறைவனின் தாளினை அறிந்து வணங்குவதற்கு இறைவனின் அருள் வேண்டும் என்றே அவர் கூறி உள்ளாரே அன்றி இறைவனை அவர் தேடிச் சென்று அறிந்துக் கொண்டார் என்றுக் கூறவில்லை.

ஆன்மிகம் பேசுவோர் 'இறைவன் எம்மை ஆட்க்கொண்டான்' என்றே தான் கூறி இருக்கின்றனர். அதைப் போன்றே இயேசுவின் சீடர்கள் யாரும் இயேசுவைத் தேடிச் செல்லவில்லை....அவரே தான் அவர்களைத் தேர்வு செய்தது. அதைப் போன்றே தான் பவுலின் கதையும், இயேசுவின் சீடர்களை கொலை செய்துக் கொண்டு இருந்த பவுல் பின்னர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு இறைத் தூதனாக மாறி சேவைப் புரிந்ததை வரலாற்றில் அறிகின்றோம்.

எனவே இறைவன் உணர்த்தாமல் ஆன்மாவால் அதனையும் சரி இறைவனையும் சரி அறிய முடியாது. அந்த அறியா நிலையில் தான் ஆன்மா இல்லை, இறைவன் இல்லை என்ற கருத்துக்களும் சரி மந்திரத்தால் இறைவனை கட்டுப்படுத்தலாம், மந்திரங்களும் சடங்குகளும் வலிமை வாய்ந்தவை என்ற எண்ணங்களும் சரி எழுந்து உழன்றுக் கொண்டு இருக்கின்றன.

தொடரும்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

சிவஞானபோதம்...!!!

தமிழ் கண்டதோர் மற்றுமொரு மாபெரும் படைப்பு. கி.பி 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்டார் அவர்களால் இயற்றப்பட்ட இந்த நூலைப் பற்றித் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. காரணம் இக்காலத்திலும் வெறும் அறிவியலை மட்டுமே மற்ற மொழிகள் அனைத்தும் ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருக்கும் பொழுது, அறிவியலின் அடுத்த நிலையான ஆன்மவியலைப் பற்றி தெளிவாக விளக்கிக் கொண்டு இருக்கின்றது இந்நூல்...அதுவும் 12 சூத்திரங்களில். எனவே ஆன்மாவைப் பற்றி நாம் அறிய வேண்டும் என்றால் நிச்சயம் இந்த நூலினைப் பற்றிக் கண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது. சரி...இப்பொழுது சிவஞானபோதம் என்ன கூறுகின்றது என்றே காண்போம்.

சூத்திரம் 1: உலகத் தோற்றமும் வீழ்ச்சியும்

"அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்"

பதவுரை:

அவன் - முதல் மனிதன்

அவள் - முதல் பெண்

அது - உலகம்

எனும் அவை - எனப்பட்ட அவை

மூவினைமையின் - மனிதனைப் படைத்தல், பெண்ணைப் படைத்தல், உலகைப் படைத்தல் ஆகிய மூன்று வெவ்வேறு செயல் திறனால்

தோற்றிய திதியே - படைக்கப்பட்டு இருக்கும் நிலையில்

ஒடுங்கி - தமது தூய நிலையில் இருந்து ஒடுங்கி

மலத்து உளதாம் - பாவத்தில் வீழ்ந்ததாகிய

அந்தம் - தூய நிலையின் முடிவே

ஆதி - பாவ நிலையின் தொடக்கம்

என்மனார் - என வழிவழியாகக் கூறுவர்

புலவர் - வேத அறிவில் புலமை பெற்றோர்.

விளக்கம்:

இறைவன் உலகையும் முதல் மனிதனையும் முதல் பெண்ணையும் மூன்று வகையான செயல்களால் படைக்கின்றார். அவர் மனிதனைப் படைத்த நிலை வேறு...பெண்ணைப் படைத்த நிலை வேறு...உலகைப் படைத்த நிலை வேறு. அவ்வாறு படைக்கப்பட்ட அவை, அவற்றிடம் இருந்த இயல்பான தூய நிலையில் இருந்து ஒடுங்கி தாழ்ந்த நிலைக்கு சென்று பாவத்தில் வீழ்ந்தது தான் பாவ நிலையின் தொடக்கம் என்று இறையறிவாளர் வழிவழியாகக் கூறி வருகின்றனர்.

இதனையே சைவ சித்தாந்த சாத்திரங்களில் முதல் சாத்திரமாகிய திருஉந்தியார்,

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடி படர்ந்து
அத்தி பழுத்தது என்று உந்தீ பற
அப்பழம் உண்ணாதே உந்தீ பற - 41

என்று கூறுகின்றது.

சூத்திரம் 2: வீழ்ச்சியில் கடவுளது ஆட்சி

அவையே தானே ஆயிரு வினையின்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே.

பதவுரை:

அவையே ஆய் - ஆண் பெண் உலகம் ஆகிய அவற்றைத் தோற்றுவித்தும்

தானே ஆய் - அவற்றைத் தன் ஆணையால் மறைத்துத் தானேயாகியும்

இரு வினையின் - தோற்றுவித்தல் மறைத்தல் ஆகிய இரு செயல்களால்

போக்கு - தம்மை விட்டுப் போக்குதலாகிய தோற்றுவித்தல்

வரவு - தம்மிடத்தில் சேர்த்தலாகிய மறைத்தல்

புரிய - ஆகியவற்றைச் செய்ய

ஆணையின் - அவை கடவுளது ஆணையிலிருந்து

நீக்கம் இன்றி - நீக்கம் இல்லாமல்

நிற்கும் அன்றே - நிலைத்து நிற்கும்.

விளக்கம்:

ஆண், பெண், உலகம் ஆகியவற்றைப் படைத்தும், அவற்றைத் தன் ஆணையால் மறைத்துத் தானேயாக நின்றும், படைத்தல் மறைத்தல் ஆகிய இரு செயல்களால் தம்மை விட்டுப் போக்குதலாகிய பிறப்பித்தல், தம்மிடத்துச் சேர்த்தலாகிய மறைத்தல் ஆகியவற்றைச் செய்யும் கடவுளது ஆணையில் இருந்து எதுவும் நீங்காமல் நிலைத்து நிற்கும்.

முதல் சூத்திரத்தில் பாவமாகிய மலத்தில் வீழ்ந்தமையால் இறைவனை அறியாத நிலைக்கு படைப்புகள் சென்றன என்றுக் கண்டோம். இப்பொழுது சில கேள்விகள் எழலாம், பாவத்தில் உள்ள அவற்றிற்கும் இறைவனுக்கும் தொடர்பு உண்டா? அவ்வாறு தொடர்பு இல்லை என்றால் அவை கடவுளின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டவையா இல்லையா? இக்கேள்விக்கான விடையைத் தான் இங்கே விளக்கி இருக்கின்றார் மெய்கண்டார்.

இறைவனை உணராத நிலையில் மலத்தால் சூழப்பட்டு அவை இருப்பினும் இறைவனின் அதிகாரத்துக்கு அவை உட்பட்டவையே ஆகும். அப்படைப்புகளை உலகில் தோற்றுவிப்பதும் சரி பின்னர் மீண்டும் தன்னிடமே சேர்த்துக் கொள்வதும் சரி இறைவனின் ஆணையின் படியே நடக்கும். அவனின் ஆணையை மீறி எதுவும் இயங்குவது இல்லை.

தொடரும்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

"பொதுவுடைமை என்பது ஒரு தோற்ற சித்தாந்தம்" என்பது நண்பர் ஒருவரின் கருத்து. அதற்கு ஒரு அழகான எடுத்துக்காட்டையும் அவர் தந்து இருந்தார்.

சோவியத் நாட்டிலே இரண்டு நபர்கள் பேசிக் கொண்டே சென்றுக் கொண்டு இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் சோவியத் நாட்டு விவசாயி. அவரிடம் இரண்டு வாத்துக்கள் இருந்தன. மற்றொருவர் இங்கிலாந்து நாட்டுப் பத்திரிகையாளர். அவர் வெறும் கையினை வீசிக் கொண்டு நடந்துக் கொண்டு இருக்கின்றார்.

"சோவியத் அருமையான நாடு. இங்கே அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கின்றது என்கின்றார்களே அது உண்மையா." என்று அந்த பத்திரிக்கையாளர் பேச்சினை ஆரம்பிக்கின்றார்.

"ஆமாம்...ஆமாம்...இதோ இரண்டு வீடுகள் வைத்து இருந்தவர்களிடம் இருந்து ஒரு வீட்டினைப் பறித்து வீடில்லாத எங்களுக்குத் தந்து இருக்கின்றார்களே...அனைவரையும் சமம் என்ற நிலைக்கு எங்களுடைய தேசம் சென்றுக் கொண்டு இருக்கின்றது. இது நல்லது" என்றார் அந்த விவசாயி.

"ஆமாம்...இருப்பவர்களிடம் இருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு தருவது என்பது அருமையான செயல் தான். சரி தோழரே...உங்களிடம் இரண்டு வாத்துக்கள் இப்பொழுது இருக்கின்றன...ஆனால் என்னிடம் ஒன்றுக் கூட இல்லை...எனக்கு உங்களின் வாத்துகளில் இருந்து ஒன்றைத் தருகின்றீர்களா" என்றே அப்பத்திரிகையாளர் கேட்க,

உடனே பதறிப் போய் "இல்லை...என்னுடைய வாத்துக்களை எதற்காக நான் உங்களுக்குத் தர வேண்டும். இதனை வைத்து நான் பல்வேறு திட்டங்கள் வைத்து இருக்கின்றேன். மன்னிக்கவும் இவை என்னுடையவை. இவற்றை உங்களுக்கு பங்கிட்டு தர இயலாது." என்றே அந்த விவசாயி மறுக்கின்றார்.

உடனே அந்த பத்திரிக்கையாளர் சிரிக்கின்றார். "பாருங்கள்...அடுத்தவரிடம் இருந்து உங்களுக்கு வாங்கித் தந்தால் ஏற்றுக் கொள்வீர்..ஆனால் உங்கள் பொருளை அடுத்தவரிடம் பகிர்ந்துக் கொடுக்க வேண்டும் என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டீர். நல்ல கொள்கையையா உமது..." என்றுக் கூறியே நகர்கின்றார்.

இது தான் நண்பர் கூறிய எடுத்துக்காட்டு. "பொது உடைமை என்பது அடுத்தவனிடம் இருந்து நமக்கு எடுத்து தரும் பொழுது இனிக்கும்...அதே நேரம் நம்முடையதை அடுத்தவனுக்கு தர வேண்டும் என்றால் கசக்கும். இந்நிலையில் அது தோற்ற சித்தாந்தமே...அனைத்து நிலைகளிலும் அதனால் நிலைத்து நிற்க முடியாது...அதனால் தான் உலகில் அதற்கு பின்னடைவு ஏற்பட்டு இருக்கின்றது. பொது உடைமை தோற்று போய் விட்டது" இது தான் அவரின் கருத்து. நிற்க.

சோவியத் நாட்டினை எதிர்த்து மேற்கத்திய உலகத்தில் எழுந்த கதைகள் பலவற்றுள் இக்கதை ஒன்றாக இருக்கலாம். இந்த கதையினை மறுத்து நம்மால் நிச்சயமாய் பல காரணங்களையும் சித்தாந்தங்களையும் கூறி விளக்க முடியலாம்.

இருந்தும் ஒரு கேள்வி நிச்சயம் எஞ்சி இருக்கும்...!!!

அடுத்தவனின் நிலையைப் புரிந்துக் கொண்டு அவனது வலியை தனக்கு வந்த ஒன்றாக பாவித்து அவனது வலியைப் போக்க தன்னால் இயன்றனவற்றை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினை ஒரு மனிதனுக்குள் எவ்வாறு கொண்டு வர முடியும்?

சட்டங்களால் முடியுமா இல்லை சித்தாந்தங்களால் முடியுமா?

எதனை வைத்து ஒரு மனிதனை அடுத்த மனிதனின் மேல் உண்மையிலேயே அக்கறைக் கொள்ள வைக்க முடியும்?

அன்பினால் மட்டுமே முடியும். இங்கு தான் நாம் ஆன்மீகத்தினைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

"என்னது பொதுவுடைமையைப் பற்றிப் பார்க்கணும் அப்படினா ஆன்மீகத்தைப் பார்க்கணுமா...தெளிவாத் தான் பேசுறீங்களா..." என்ற எண்ணம் நம்மில் பலருக்கு வரலாம். காரணம் எளிது. பொதுவுடைமைக் கொள்கை இன்று இறைவனை ஏற்றுக் கொள்வது இல்லை...பொதுவுடைமை பேசும் நண்பர்களும் தான். இந்நிலையில் ஆன்மீகத்திற்கும் பொது உடைமைக் கொள்கைக்கும் தொடர்பு இருக்கின்றது என்றால் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும்.

இருந்தும் நாம் அவ்விடயத்தினைப் பற்றிப் பார்க்கத்தான் வேண்டி இருக்கின்றது. காரணம் இன்றைக்கு பொது உடைமைக் கொள்கையும் சரி, அக்கொள்கை உடையவர்களும் சரி பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து தான் இருக்கின்றனர். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கொள்கை உடையவர்களே ஒற்றுமையாக இல்லாத நிலையில், ஏன் அந்த நிலை இருக்கின்றது என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் ஆன்மீகத்தைப் பற்றி பார்த்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

ஆன்மிகம்....இறைவனை அன்பின் வடிவமாகவே காணுகின்றது.

அன்பே சிவம் என்கின்றது சைவம்.

"நான் உங்களுக்குச் சொல்கின்றேன்; உங்கள் எதிரிகளை நேசியுங்கள்...உங்களைச் சபிக்கின்றவர்களை ஆசிர்வதியுங்கள்; உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துபவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்தில் இருக்கின்ற உங்கள் பிதாவுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தமது சூரியனை உதிக்கப் பண்ணி, நீதி உள்ளவர்கள் மேலும் அநீதி உள்ளவர்கள் மேலும் ஒரு சேர மழையைப் பெய்யப் பண்ணுகின்றார்." - மத்தேயு 5:44,45

"இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்து இருக்கின்றது. இவைகளில் பெரியது அன்பே" - கொரிந்தியர் I 13:13

என்றே கிருத்துவக் கருத்துக்களும் கூறுகின்றன. இதன் மூலம் இறைவன் அன்பின் வடிவமாகவே இருக்கின்றான் என்றே நாம் அறிய முடிகின்றது. நிற்க.

இங்கே தான் நாம் வள்ளுவரின் ஒரு குரளினைக் காண வேண்டி இருக்கின்றது.

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு."

அன்பில்லாதவர்கள் எல்லாம் தங்களைப் பற்றிய எண்ணத்தினை மட்டுமே கொண்டு இருப்பர்...ஆனால் அன்பினை பெற்றவர்களோ அவர்களின் உடலினைக் கூட அடுத்தவருக்காக தர ஆயுத்தமாக இருப்பர் என்பதே அக்குறளின் பொருள் ஆகும்.

முன்னர் நாம் அன்பே சிவம் அல்லது இறைவன் அன்பின் வடிவாகவே இருக்கின்றான் என்றே கண்டோம்.

அதாவது,

அன்பு = இறைவன்.

இப்பொழுது இந்த அர்த்தத்துடன் வள்ளுவரின் அக்குறளை மீண்டும் காண்போம்.

இறைவனைப் பெறாதவர்கள் எல்லாம் தங்களைப் பற்றிய எண்ணத்தினை மட்டுமே கொண்டு இருப்பர். ஆனால் இறைவனைப் பெற்றவர்களோ அவர்களின் உடல்/உயிரினைக் கூட அடுத்தவருக்காக தர ஆயுத்தமாக இருப்பர்.

அதாவது இறைவனை உணர்ந்தவர்கள்/ பெற்றவர்கள் தமக்காக மட்டும் வாழாது...உலக மக்கள் அனைவருக்காகவும் தங்களது வாழ்வினை வாழ்வர்.

இதற்கு சான்றாக இயேசுவின் சீடர்களைப் பற்றிக் காணலாம்...பயந்துக் கொண்டும் சந்தேகத்தினைக் கொண்டும் இருந்து வந்தவர்கள் பரிசுத்த ஆவியினை (இறைவனின் அருள் என்றும் கொள்ளலாம்) பெற்றவுடன் பொதுவுடைமை கொள்கை உடையவர்களாக மாறுகின்றனர்.

"விசுவாசிகள் எல்லாரும் ஒன்றாக இருந்து, அனைத்தையும் பொதுவாக வைத்து அனுபவித்தார்கள். தங்கள் சொத்துக்களையும் பொருட்களையும் விற்று ஒவ்வொருவனின் தேவையும் சந்திக்கும்படி அவைகளில் அனைவருக்கும் பகிர்ந்துக் கொடுத்தார்கள்." - அப்போஸ்தலர் 2:44,45

உண்மையான ஆன்மிகம் அடுத்தவர்களுக்காக வாழ வைக்கும். அனைத்தும் அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தினை வளர்க்கும். இயேசுவின் சீடர்கள் யாரும் தங்களுக்காகவென்று வாழவில்லை....சித்தர்கள் யாரும் தங்களுக்கென்று வாழவில்லை...மக்களுக்காகவே வாழ்ந்தனர்.


இதைத்தானே இன்றைக்கு பொது உடைமைக் கொள்கைக்காக உண்மையாக போராடும் நண்பர்கள் செய்கின்றார்கள்/விரும்புகின்றார்கள்.

உண்மையில், உண்மையான இறைத் தத்துவம் என்பது பொதுவுடைமையே ஆகும்.

"அட என்னங்க...பொது உடைமை பேசுறவன் கடவுள் இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருக்கான்...ஆனா நீங்க கடவுள் கொள்கையே பொதுவுடைமைக் கொள்கைன்னு சொல்றீங்க. எப்படிங்க?" என்ற கேள்விகள் இங்கே நிச்சயமாக எழலாம். அக்கேள்விக்கான விடையை நாம் நிச்சயமாய் கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது.

காணலாம்...!!!

தொடரும்....

தொடர் பதிவுகள் இட்டுக் கொண்டு இருக்கும் பொழுது அப்பதிவுகளை வெளியிடுவதில் ஒரு இடைவெளியை ஏனோ தவிர்க்க இயலவில்லை. நண்பர்கள் அவ்விடயத்தில் என்னை பொறுத்துக் கொள்ளுங்கள். சரி இப்பொழுது திருக்குறளினைப் பற்றிய நமது பார்வையைத் தொடர்வோம். அதற்கு முன்னர் முந்தையப் பதிவுகளையும் நீங்கள் படித்து இருந்தீர்கள் என்றால் நலமாக இருக்கும்.

தொண்டை நாடு சான்றோர் உடைத்து...!!!
திருக்குறள் என்ற உலகப் பொதுமறை- ஐந்தவித்தான்!!!

சரி...!!! திருவள்ளுவரின் கருத்துக்கள் கிருத்துவின் கருத்துக்களின் அடிப்படையில் அமைந்துள்ளவையா என்றே கண்டுக் கொண்டு வருகின்றோம். இப்பொழுது அதன் அடிப்படையில் தான் வள்ளுவரின் குறள் ஒன்றினை நாம் காண வேண்டி இருக்கின்றது.

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" - திருக்குறள் 5

பொதுவாக இக்குறளுக்கு விளக்கம் அளிப்பவர்களின் கூற்று 'இறைவனின் அடி சேர்ந்தாருக்கு அறியாமையால் வரும் இரு வினைகளாகிய நல்வினையும் தீவினையும் சேருவதில்லை' என்பதே ஆகும். அதாவது இருவினை என்றால் அது நல்வினை மற்றும் தீவினை என்பதே அவர்களின் பார்வையாக இருக்கின்றது. நிற்க.

ஆனால் வள்ளுவர் வெறும் இருவினைகள் என்றுக் கூறிச் செல்லவில்லை....மாறாக இருள் சேர்க்கும் இரு வினைகள் என்றே கூறிச் சென்று உள்ளார். அதன்படி அவ்விரு வினையானவை ஒருவனை இருளில் சேர்த்து விடும் என்பதே பொருளாகும். இங்கே தான் நமக்கு கேள்விகள் வருகின்றன.

தீவினை இருள் சேர்க்கும் சரி....நல்வினையுமா இருள் சேர்க்கும்? இரு வினைகளுமே இருள் சேர்த்தால் பின்னர் அவ்விரண்டு வினைகளுக்கும் வேறுபாடுகள் யாது?

ஒருவன் நல்லது செய்தாலும் இருளில் தான் சேரப் போகின்றான்...தீமை செய்தாலும் இருளில் தான் சேரப் போகின்றான் என்றால் எதற்காக நன்மைகளை செய்ய வேண்டும்...மகிழ்ச்சியாக தீய காரியங்களையையே செய்துக் கொள்ளலாம் தானே. நற்செயல்கள் தீச்செயல்கள் ஆகியவற்றுக்கு வேறுபாடுகள் இல்லை என்றால் எதற்காக வள்ளுவர் அவரது பல்வேறுக் குறள்களில் அறத்தினை வலியுறுத்த வேண்டும்?

எதனை செய்தாலும் இருள் தான் என்றால் வள்ளுவனின் மற்றக் குரள்களே அக்கருத்திற்கு முரணாக அல்லவா போய் விடும். இந்நிலையில் முரணானக் கருத்தினையா வள்ளுவர் கூறிச் சென்று இருக்கின்றார் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு வள்ளுவர் கூறிச் சென்றுள்ள இரு வினைகளைப் பற்றி நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் கிருத்துவத்தையும் சைவ சித்தாந்தத்தையும் காண வேண்டி இருக்கின்றது. காரணம் அங்கும் இரு வினைகளைப் பற்றிக் கூறப் பட்டு இருக்கின்றது.

சைவ சித்தாந்தத்தில் இறைவன் வினைகளைப் போக்குவோனாகவே பெரிதும் அறியப்படுகின்றான் (வினை தீர்க்கும் விநாயகன்...வேலுண்டு வினையில்லை...போன்ற வரிகள் இங்கே குறிப்பிடத்தக்கவை). அவ்வினைகள் இருவகைப்படும்.

ஒன்று ஒரு மனிதன் பிறக்கும் பொழுதே வரும் வினையாகிய ஜென்ம பாவம்...சைவத்தில் அதனை சகச மலம் என்று அழைப்பர். மற்றொன்று அவரவர் செய்கின்ற செயல்களால் வரும் பாவமாகிய கர்ம பாவமும் ஆகும். இவ்விரண்டு வினைகளும் தான் ஒரு மனிதனை இறைவனிடம் இருந்து பிரித்து வைத்து இருக்கின்றன என்பதே சைவ சித்தாந்தத்தின் கருத்து.

இருவினைகளைப் பற்றி ஆன்மீகம் பேசுவோர் கூறி இருக்கும் சில பாடல்கள் இதோ...

“பற்றி தொடரும் இரு வினை அன்றி வேறு ஒன்றும் இல்லை பராபரமே” – தாயுமான சுவாமிகள்.


"கருவினில் கருவதாய் எடுத்தஏழு தோற்றமும்
இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும்..." - சிவவாக்கியர்

நிற்க. இப்பொழுது இரு வினைகள் என்றால் ஒருவன் பிறக்கும் போதே தொடர்ந்து வரும் பாவமும்....அவன் அவனது பிறப்பில் செய்கின்ற பாவமுமே ஆகும் என்ற ஒரு பொருளினைக் கண்டு இருக்கின்றோம். ஆனால் இக்கூற்றிலேயும் கேள்விகள் எழத் தான் செய்யும்.

எவ்வாறு ஒருவன் பிறக்கும் போதே பாவத்துடன் பிறப்பான்...என்பது அக்கேள்விகளில் முக்கியமான ஒன்றாகும். இக்கேள்விக்கு விடையாய் கூறப்படும் பொதுக் கருத்துக்கள் யாதெனில், ஒருவன் சென்ற பிறப்புகளில் செய்த பாவமே அவனை இப்பிறப்பிலும் தொடர்ந்து வருகின்றது...அதனால் தான் அவன் பிறக்கும் பொழுதே பாவத்துடன் பிறக்கின்றான் என்பதே ஆகும். இக்கூற்று மறுபிறவிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.

ஆனால் சைவ சித்தாந்தமோ மறுபிறவிக் கொள்கையைக் கொண்டது அல்ல. உதாரணத்திற்கு சிவவாக்கியாரின் பாடல் கூறும் செய்தியைக் காணுங்கள். இறந்தவர் மீண்டும் பிறப்பதில்லை என்றே அவர் கூறுகின்றார்.

கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா,
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா,
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே - சிவவாக்கியர்


இறந்தவர் பிறப்பதில்லை என்றால் அதாவது பிறவி சுழற்சி இல்லை என்றால் ஒருவன் போன பிறவியில் செய்த பாவங்கள் அவனை இப்பிறவியில் தொடர்வதால் அவன் பிறக்கும் பொழுதே பாவத்துடன் பிறக்கின்றான் என்பது சரியான விளக்கமாக அமையாது.

எனவே இந்நிலையில் ஒருவன் பிறக்கும் பொழுதே பாவத்துடன் பிறக்கின்றான் என்றால் அது எவ்வாறு என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு விடை கிருத்துவத்திலும் சரி சைவ சித்தாந்தத்திலும் சரி இருக்கத்தான் செய்கின்றது.

கிருத்துவத்தில் முதல் மனிதன் செய்த பாவம் அவன் தொடர்ச்சியாக அனைத்து மனிதர்களையும் பற்றியது என்ற கருத்து இருக்கின்றது.

"இப்படியாக ஒரே மனிதனாலே பாவமும்...பாவத்தினாலே மரணமும் உலகத்தில் நுழைந்தது போலவும் அனைத்து மனிதரும் பாவஞ் செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று - ரோமர் 5:12"

அக்கருத்தினை ஒத்த கருத்தே சைவ சித்தாந்தத்திலும் வருகின்றது...

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்
அத்தி பழுத்த தருளென்னுங் – கத்தியினால்
மோகக் கொடியறுக்க முத்திப் பழம் பழுக்கும்
ஏகக் கொடி எழுங்காண் இன்று’ – திருக்களிற்றுப்படியார் – 93


உலகின் முதல் மனிதனுக்கே பாவம் படர்ந்து அவன் துன்பப்பட ஆரம்பித்தான் என்றும் அவ்வாறுப் படர்ந்த பாவத்தை அறுக்கும் ஒருவன் இன்று எழுந்து இருக்கான் என்றும் மேலே உள்ள வரிகள் கூறுகின்றன...!!! ஆனால் அவற்றைப் பற்றி விரிவாக நாம் இங்கே காண வேண்டியதில்லை. இங்கே நமக்கு வேண்டியதெல்லாம் முதல் மனிதனால் தீமை மற்ற மக்கள் அனைவருக்கும் பரவியது என்ற ஒரு கருத்து தான். நிற்க.


இதன் மூலம் வள்ளுவர் கூறும் இரு வினைகள் என்பன நல்வினை/தீவினை அல்ல என்றும் அவ்வினைகள் சைவ சித்தாந்தமும் கிருத்துவமும் கூறும் ஜென்ம பாவமும்/கர்ம பாவமுமே ஆகும் என்றே நாம் கருத முடிகின்றது.

மனிதர்களை சூழ்ந்து அவனை இருளில் தள்ளும் அவ்விரு வினைகள், அவன் இறைவனின் அடி சேர்ந்து விட்டால் அவனை பாதிக்காது என்பதே வள்ளுவரின்

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" என்ற குறளுக்கு உரிய விளக்கமாகும்.

தொடரும்...!!!

பி.கு:

1) இங்கே நாம் திருக்குறளை விளக்க கிருத்துவம், சைவ சித்தாந்தம் ஆகியவைகளின் கருத்துக்களை மேற்கோளாக எடுத்துக் கொள்வதற்கு இம்மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவையாக இருப்பதே காரணம் ஆகும்.

இத்தொடர்பினை நாம் அறிந்துக் கொள்ளாது நம்மால் மெய்யான ஆன்மீகத்தையும் சமயங்களின் கருத்துக்களையும் அறிந்துக் கொள்ள முடியாது. எனவே அத்தொடர்பினை நாம் அறிந்துக் கொள்ள நாம் முயலத் தான் வேண்டி இருக்கின்றது.

அதற்கு நாம் சிவஞானபோதத்தைக் காண வேண்டி இருக்கின்றது.

2) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

உலகம் தோன்றியது எவ்வாறு? மனிதன் தோன்றியது எவ்வாறு? உயிர் என்றால் என்ன?

இக்கேள்விகளை ஒரு மனிதர் கேட்பாராயினில் அவருக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை அறிவியல் பேசுவோருக்கும் இருக்கின்றது...ஆன்மிகம் பேசுவோருக்கும் இருக்கின்றது. அக்கடமையை அவர்கள் தட்டிக் கழிக்க முடியாது. நிச்சயம் பதில் கூறியே ஆக வேண்டும்.

இந்நிலையில் அவர்கள் கூறும் விடையினைக் கண்டோம் என்றால் ஆன்மிகம் பேசுவோர் இறைவன் உலகைப் படைத்தான் என்றும் அறிவியல் பேசுவோர் இறைவன் படைக்கவில்லை மாறாக உலகம் 'பெரு வெடிப்பு' முதலிய சில காரணியால் இயல்பாகவே உருவாயிற்று என்றும் கருதுவது புலனாகின்றது. இக்கருத்துக்களிடையே மாபெரும் சண்டைகளும் நீண்டக் காலமாக முடியாது ஓடிக் கொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில் கடவுள் இருக்கின்றார்...உலகையும் மனிதனையும் படைத்தது அவர் தான் என்றுக் கூறும் நம் மீதும் அக்கேள்விக்கான விடையினைக் கூறும் கடமை விழத் தான் செய்கின்றது. அதன் விளைவாக அக்கேள்விகளுக்கான விடைகளையும் நாம் காணத் தான் வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் அறிவியலையும் காண வேண்டி இருக்கின்றது ஆன்மீகத்தையும் காண வேண்டி இருக்கின்றது...காண்போம்...!!!

"அறிவியலின் துணை இல்லாத சமயங்கள் குருடாகும்
  சமயங்களின் துணை இல்லாத அறிவியல் ஊனமாகும் - ஐன்ஸ்டீன்!!!"

பொதுவாக இன்று அறிவியல் பேசுவோர் முன் வைக்கும் கூற்று 'வலிமையானது பிழைக்கும்' என்பதே ஆகும். அதாவது காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு உயிர் பிழைக்க வல்லமை உள்ள உயிரினம் உயிர் பிழைக்கும். அவ்வாறு பிழைக்கும் தன்மை அற்ற உயிரினங்கள் அழிந்து போகும் என்ற ஒரு கூற்றே அது ஆகும்.

இக்கூற்றினைத் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

ஒரு உயிரினம் பிழைத்து இருக்க, அது அந்த குறிப்பிட்ட சூழலில் அதற்குரிய குணாதிசயங்களைக் கொண்டு எவ்வாறு தாக்கு பிடிக்கின்றது என்பதே முக்கியமான காரணம்.. அவ்வாறு தாக்கு பிடிக்க முடியாத உயிர்கள் அழிந்து போகின்றன என்ற கருத்தினை நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.

இப்பொழுது ஒரு எடுத்துக்காட்டினைப் காண்போம்.

கொசு இருக்கின்றது. நமக்கு அது தொல்லையாக இருப்பதினால் அது உயிர் வாழ முடியாத வண்ணம் ஒரு சூழலை மருந்துகள் கொண்டு உருவாக்குகின்றோம். அந்த மருந்தின் நச்சுத் தன்மை தாங்காது அதனை முழுமையாக உட்கொண்ட கொசுக்கள் முதலில் மாளுகின்றன.

ஆனால் பின்னால் நடப்பது என்ன, அந்த மருந்தினை சிறிதளவே உட்கொண்ட கொசுக்கள் பின்னர் அந்த மருந்தினை எதிர்க்கும் ஆற்றலைப் பெற்றுக் கொண்டு நாம் உருவாக்கிய அந்த சூழலில் வாழத் தொடங்குகின்றன. இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய விடயம் அவை எவ்வாறு அந்த எதிர்ப்பு சக்தியினைப் பெற்றன என்பது தான். இங்கே தான் நாம் உடலினைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

உடல் – ஒரு இயந்திரம்.

அதற்கென்று சில வேலைகள் இருக்கின்றன. நிற்காது இயங்கிக் கொண்டு இருக்கும் இந்த உலகம் போல் உடலும் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. அது நம்மை கேட்டு வேலை செய்வதில்லை. தனக்கு எது தேவை எது தேவை இல்லை என்பதும் எது நல்லது எது கெட்டது என்பதும் உடலிற்கு நன்றாகத் தெரியும். பல உணவுகள் நாம் உண்ணுகின்றோம், அதில் தனக்கு தேவையானதினை எடுத்து கொண்டு தேவை அற்றதை கழிக்கும் வல்லமை உடலிடம் உண்டு. அதேப் போல் தனக்கு எதிரி ஒருவன் வருகின்றான் என்றால் அவனை எதிர்க்கும் ஆற்றலும் உடலுக்கு உண்டு. அதை தான் நாம் வெள்ளை அணுக்கள் என்றுக் கூறுகின்றோம்.

உடலுக்கு ஒவ்வாத ஒன்று எப்பொழுது உடலினுள் நுழைகின்றதோ அதனை அறிந்து அதை எதிர்க்க உடல் தயாராகின்றது. ஒரு வேளை அந்த எதிரியினை உடலினால் அழிக்க முடியவில்லை என்றால் உடல் அழிகின்றது. அல்லது அந்த எதிரியினை உடலினால் அழிக்க முடிந்தால் அந்த எதிரியினைப் பற்றியப் பாடத்தினை அது கற்றுக் கொள்கின்றது. மீண்டும் ஒரு முறை அந்த எதிரி அதனைத் தாக்காதவாறு உடல் தன்னை வளர்த்துக் கொள்கின்றது.

அதாவது முன்னர் இருந்த செயல்பாடுகளுடன் உடல் புதிதாக இன்னொரு செயல்பாட்டினை சேர்த்துக் கொள்கின்றது…தான் பிழைப்பதற்கு.
மேலே சொன்ன அந்த உடலின் இயக்கம் தன்னிச்சையான இயக்கம். எதிரி வருகின்றான் அவனிடம் போய் மோது என்று உடலுக்கு நாம் கட்டளை இடத் தேவை இல்லை. அது உடலின் பணி. இது அனைத்து உயிர்களின் உடல்களுக்கும் பொருந்தும்.

உடல் ஒரு மாபெரும் அதிசயம் தான்.

ஆனால் எல்லாக் காலங்களிலும் உடலினால் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியாது. அதன் இயக்கத்திற்கு சில தேவைகள் இருக்கின்றன. உதாரணம் நீர்…உணவு!!!

இவற்றினை தானே உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் உடலுக்கு இல்லை. இங்கே தான் உடல் நம்மை எதிர்ப்பார்கின்றது. இங்கே தான் அறிவு களத்திற்கு வருகின்றது. ஒவ்வொரு உயிரினமும் தனது அறிவினைப் பயன்படுத்தி தன் உடல் இயங்குவதற்கு ஆவன செய்யத் தொடங்குகின்றன. தன் உடலுக்கு எது உகந்தது என்பது அந்த உயிரினங்களுக்கு தெரிந்து இருக்கின்றது.

உதாரணத்திற்கு,

ஒரு மரம் தனக்குத் தேவையானது நீர் என்று அறிந்து அதன் வேர்களை நீரினைத் தேடி அனுப்புகின்றது. பாறைகள் பல இருந்தாலும் தனக்கு எது நல்லது என்று அறியும் அறிவு மரத்திற்கு இருக்கின்றது. இறுதியில் நீரினை சென்று அடைகின்றது.

அதே போல் ஒரு நாயினை எடுத்து கொள்ளுங்கள். அதன் முன் மெழுகினால் செய்யப்பட்ட ஒரு ரொட்டித் துண்டினைப் போடுங்கள். அந்த நாய் அந்த ரொட்டித் துண்டினை முகர்ந்து விட்டு அது அதற்கு ஒவ்வாது என்பதினை அறிந்துக் கொண்டு உண்ணாமல் சென்று விடும். மெழுகு அதன் உடலிற்கு உகந்தது அல்ல என்பது அந்த நாயிற்கு தெரிந்து இருக்கின்றது.

அதேப் போல் குளிர்காலத்தில் கிழக்கில் வெப்பமாக இருக்கும் என்று அறிந்து பறவைகள் பல தூரம் வருடா வருடம் பயணிப்பது அவற்றின் அறிவினை வைத்துத் தான். அவ்வாறு பயணித்து அவை தங்களைக் காத்துக் கொள்கின்றன.நிற்க.

இப்பொழுது நாம் இரு வேறு சூழ்நிலைகளில் ஒரு உயிர் பாதுகாக்கப்படுவதனைக் கண்டு இருக்கின்றோம். ஒன்று, அந்த உயிரினத்தின் உடலே சூழ்நிலைகேற்ப தன்னை பாதுகாத்துக் கொள்ளல். இரண்டு தன் அறிவை பயன்படுத்தி உயிரினம் தன்னை பயன்படுத்திக் கொள்ளல். இந்த இரண்டு சூழ்நிலையிலும் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியாத உயிரினம் அழிகின்றது.

ஐரோப்பிய அறிவியல் மேலே உள்ள அந்த இரண்டு சூழ்நிலைகளையும் மட்டுமே அறிந்த நிலையில் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டினை ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருக்கின்றது.

ஆனால் உடல் இயங்குகின்றது என்று கூறும் அறிவியல் உடல் எதனால் இயங்குகின்றது என்பதனைக் கூற முடியாது நிற்கின்றது. அறிவினை அறிந்த அறிவியல் அந்த அறிவின் பிரிவுகளை அறியாது நிற்கின்றது. இந்த நிலையில் தான் பரிணாம வளர்ச்சி என்னும் தத்துவத்தினை ஐரோப்பிய அறிவியல் முன் வைக்கின்றது. இந்த நிலையில் தான் அது மனிதனும் மிருகம் என்கின்றது. இந்த நிலையில் தான் நாம் அதனை எதிர்க்க வேண்டி இருக்கின்றது.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது, பரிணாம வளர்ச்சியில் வந்தவை என்று அறிவியல் கூறும் அனைத்தையும் நாம் அதற்கு பல காலம் முன்னரே அறிவின் அடிப்படையில் பிரித்து வைத்து இருக்கின்றோம்.

ஓரறிவு – மரம் – தொடு உணர்வு – உடல்.

ஈரறிவு – நத்தை – தொடு உணர்வு, சுவை உணர்வு – உடல்,வாய்.

மூன்றறிவு – எறும்பு – தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகரும் உணர்வு – உடல்,வாய்,நாசி(மூக்கு)

நான்கறிவு – நண்டு – தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகரும் உணர்வு, பார்வை உணர்வு – உடல், வாய், நாசி, கண்.

ஐந்தறிவு – குரங்கு, மாக்கள் - தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகரும் உணர்வு, பார்வை உணர்வு, கேட்கும் உணர்வு – உடல், வாய், நாசி, கண்,காது.

ஆறறிவு – மனிதன் – மேலே உள்ள அனைத்து உணர்வுகளுடன் ஏதோ ஒன்று இவனுக்கு சிறப்பாக இருக்கின்றது.

இதுவே தமிழ் அறிவியல் உயிரினங்களை பிரித்து இருக்கும் முறையாகும். இப்பொழுது நாம் மேலே கண்ட எடுத்துக்காட்டுகளை இந்த அறிவுப் பிரிவுகள் மூலம் பார்க்கலாம்.

மரம் தனக்குத் தேவையான தண்ணீரை தேடி வேர்களை அனுப்புகின்றது. வேர் நீரினை தொடுவதன் மூலம் அறிந்துக் கொள்கின்றது. ஒரு வேளை நீர் இல்லாவிடில் மரம் இறந்துப் போகுமே அன்றி என்னத்தான் முயன்றாலும் அதனால் அடுத்த அறிவிற்கு உரிய உறுப்பினை பெற முடியாது. அதன் அறிவு என்பது அதன் உடலினை அடிப்படையாகக் கொண்டது.

அதேப் போலவே மற்ற உயிர்களும் தங்களிடம் உள்ள புலன்களின் மூலம் மட்டுமே தங்களின் பிழைப்பிற்கு வழித் தேடுமே அன்றி மற்றொரு அறிவு நிலைக்கு உரிய புலன்களை அவை பெறுவதில்லை. அவற்றின் புலன்கள் அனைத்தும் பயனற்று போகும் நிலையில் அவை மரணத்தினைச் சந்திக்கின்றன.

இங்கேத் தான் நாம் மனிதனை சற்று பார்க்க வேண்டி இருக்கின்றது. அவனை ஆறறிவு படைத்த நிலையிலும் வைத்து இருக்கின்றனர். ஐந்தறிவு படைத்த நிலையிலும் வைத்து இருக்கின்றனர்.

மேலும் ஐந்தறிவு வரை புலன்களின் அடிப்படையில் உயிரினங்களை பிரித்து இருந்தோம். அந்த அந்த புலன்களுக்கு என்ன உறுப்புகள் என்பது நமக்கு தெரியும். ஆனால் மனிதனை ஆறாம் அறிவினை உடையவனாக கூறி இருக்கின்றனர். ஆனால் அந்த அறிவிற்கு உரிய உறுப்பு எது?

இந்தக் கேள்விக்கு பதில் தெரியாமல் தான் ஐரோப்பிய அறிவியல் மனிதனும் விலங்கு தான் என்கின்றது. காரணம் விலங்குகளின் உள்ள அதே உறுப்புகள் தான் மனிதனிடமும் இருக்கின்றன. அதன் செயல்பாடுகளும் ஒன்றினைப் போலவே இருக்கின்றன. ஆனால் காலப் போக்கில் மனிதன் பரிணாம வளர்ச்சியின் படி ஏதோ நிலையில் சற்று உயர்ந்தவனாகி விட்டான் என்கின்றது. ஏன் மனிதன் அவ்வாறு இருக்கின்றான் என்று அதற்கு தெரியவில்லை. காரணம் ஐரோப்பிய அறிவியல் உயிரினை அறியவில்லை. மனதினையும் அறியவில்லை!!!

எனவே தான் உடலினைப் பற்றி ஆராய்ந்துக் கொண்டு இருக்கும் ஐரோப்பிய அறிவியலால் உடல் எவ்வாறு இயங்குகின்றது என்றக் கேள்விக்கு பதில் சொல்ல முடிகின்றது ஆனால் உடல் எதனால் இயங்குகின்றது? என்றக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.மேலும்  உயிருடன் பேசிக் கொண்டு இருக்கும் ஒருவனுக்கும் உயிரற்ற ஒருவனுக்கும் என்ன வித்தியாசம்? என்றும் அதனால் பதில் கூற முடியவில்லை.

அந்தக் கேள்விகளுக்கு தமிழ் அறிவியலில் விடை இருக்கின்றதா…அதனை இன்னொரு பதிவில்  காண்போம்…!!!

தொடரும்...!!!

இணையத்தில் நீண்ட நாட்களாகவே ஒரு தகவல் உலாவிக் கொண்டு இருக்கின்றது.ஆங்கிலேயர்களில் ஒருவரான திரு.மெக்காலே அவர்கள் எவ்வாறு இந்திய மக்களின் கல்வி முறையை மாற்றியதன் மூலம் இந்திய மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடித்து விட்டு அவர்களை அடிமைகளாக்கினார் என்பதனைக் கூறும் ஒரு தகவல் தான் அது. அதனை அடிப்படையாகக் கொண்டே இன்று 'மெக்காலே வழிக் கல்வி' என்ற சொல்லும் பரவலாக பயன் படுத்தப்படும் சொல்லாக மாறிக் கொண்டு தான் வருகின்றது. இப்பொழுது அந்தச் செய்தியினைத் தான் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.

மெக்காலே அவர்கள் பெப்ருவரி 2 ஆம் தேதி 1835 ஆம் வருடத்தில் கூறியதாக கூறப்படும் கருத்துக்கள் இவை தான்.

"இந்திய தேசத்தின் அனைத்து எல்லைகளுக்கும் நான் பயணித்து விட்டேன். என்னால் ஒரு திருடனையோ அல்லது பிச்சைக்காரனையோக் கூடக் காண முடியவில்லை. அப்படிப்பட்ட செல்வமும் தகுதி வாய்ந்த மக்களும் குண நலன்களும் இந்நாட்டினில் திகழ்கின்றன. இந்நிலையில் நாம் இந்த மக்களின் முதுகெலும்பான ஆன்மீகம் மற்றும் கலாச்சாரப் பண்பாட்டினை உடைக்கவில்லை என்றால் நம்மால் இவர்களை ஆள முடியாது. எனவே நான் முன் மொழிவது என்னவென்றால் இவர்களின் பழமையான கல்வி முறையினை மாற்றி அவர்களுக்கு ஆங்கிலம் கற்பது தான் சரியான ஒன்று, அது அவர்களுக்கு மிக்க நலனைத் தரும் என்றுக் கூறி அந்நிய முறையினை அவர்கள் சிறப்பான ஒன்றாக கருதச் செய்ய வேண்டும். அவ்வாறு நாம் செய்தோம் என்றால் அம்மக்கள் அவர்களின் சுய மரியாதையை இழந்து, அவர்களின் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றினை மறந்து நமக்கு கீழ் வாழத்தலைப்படுவர். அப்பொழுது நாம் இத்தேசம் முழுமையும் நமக்குக் கீழ் கொண்டு வந்து விடலாம்."

இந்தத் தகவல் தான் இணையத்தில் உலாவிக் கொண்டு இருக்கின்றது. ஆனால் இத்தகவலினைக் கண்ட பொழுது ஒரு சிறிய சந்தேகம் எழத் தான் செய்தது. காரணம் மெக்காலே அவர்கள் இந்தியாவிற்கு வந்ததாக சொல்லப்படும் காலம் கி.பி 1835. அக்காலத்தில் இந்திய மக்களுள் பெரும்பான்மையானோர் தீண்டத்தகாதவர்களாகவும் தாழ்த்தப்பட்டவர்களாகவும் கல்வி அறிவு மறுக்கப்பட்டு மூட நம்பிக்கைகளில் உலாவிக் கொண்டு இருந்தவர்களாகவும் வாழ்ந்துக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் ஒருவர் வந்து இந்திய மக்கள் அனைவரும் நன்றாக வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர் என்று கூறினால் அது உண்மையான நிலவரத்திற்கு முரணான கருத்தாக அமையும். எனவே இந்நிலையில் தான் மெக்காலே அவர்கள் உண்மையிலேயே மேலே கூறிய கூற்றினைக் கூறினாரா இல்லையா என்பதனை நாம் காண வேண்டி இருக்கின்றது.

அவ்வாறுக் கண்டோம் என்றால் அவர் அவ்வாறுக் கூறவில்லை என்றே வரலாறு நமக்குக் காண்பிக்கின்றது.

மெக்காலே 2/2/1835 ஆம் தேதி அன்று இந்தியாவினைப் பற்றி பேசி இருக்கின்றார். கல்வி முறையைப் பற்றியும் பேசி இருக்கின்றார். ஆனால் மேலே கூறிய கருத்தினை அவர் கூறி இருக்கவில்லை. அன்றைய நிலையில் இந்தியாவில் நிலவிய சூழலினை முன்னேற்ற அவர் பார்வையில் அவர் அவரது கருத்துக்களைக் கூறி இருக்கின்றார். அவற்றுள் சிலவற்றினை இங்கே நாம் காண்பது நலமாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.

1) அன்றைய ஆங்கிலேய அரசு சமசுகிருதம் மற்றும் அரேபிய மொழி ஆகியவற்றினை படிக்கும் மாணவர்களுக்கு மானியம் வழங்கிக் கொண்டு வந்தது. அதாவது அம்மொழிகளைப் படிக்கும் மாணவர்கள் அரசிடம் இருந்து பணத்தினைப் பெற்றுக் கொண்டு அம்மொழிகளைப் படித்துக் கொண்டு வந்தனர். அதனை தேச மொழிகளைப் பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாகவே அது கண்டது. ஆங்கிலம் கற்க விரும்பிய மாணவர்களோ பணத்தினைச் செலுத்தி ஆங்கிலம் கற்றுக் கொண்டு வந்தனர். மேலும் சமசுகிருதம் மற்றும் அரேபிய மொழி மற்றும் இலக்கியங்கள் படித்த மாணவர்கள் அவர்கள் படிக்கும் காலம் முடிந்தப் பின் அரசிடம் 'தாங்கள் படித்த படிப்பிற்கு வேலை இல்லை எனவே அரசு தங்களுக்கு வேலையினைத் தர வேண்டும்' என்று விண்ணப்பித்த நிலையும் இருந்து வந்து இருக்கின்றது.

இந்நிலையில் தான் மெக்காலே அவர்கள் "எதற்காக சமசுகிருதம் மற்றும் அரேபிய மொழிகளுக்கு நாம் மானியம் வழங்க வேண்டும்?...மானியமும் தருகின்றோம் பின்னர் அதனைப் படித்த மாணவர்களுக்கு நாம் தான் வேலையும் தர வேண்டி இருக்கின்றது. அவர்கள் படிக்கும் படிப்பால் தெளிவான பயன் என்று ஒன்றுமே இல்லாத பொழுது எதற்காக அரசாங்கப் பணத்தினை விரயம் செய்ய வேண்டும்?. மேலும் அம்மொழியின் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் பதிக்கப் பெறும் நூல்களும் நூலகத்தில் சேர்ந்த வண்ணமே இருக்கின்றனவே ஒழிய அவற்றைப் படிப்போரும் எவரும் இலர்...இந்நிலையில் எவரும் படிக்காத நூல்கள் ஆயிரம் இருந்தால் என்ன பத்தாயிரம் இருந்தால் என்ன...நாம் எதற்காக பயன் இல்லாது எவரும் படிக்காத நூல்களை அச்சுப் பதித்துக் கொண்டே இருக்க வேண்டும்?" என்றுக் கூறி அம்மொழிகளுக்கு அரசு வழங்கிக் கொண்டிருந்த மானியத்தினை நிறுத்த வலியுறுத்தி இருக்கின்றார்.

2) அம்மொழிகளுக்கு செலவளிப்பதற்கு மாற்றாக உலகம் முழுவதும் பரவி இருந்த ஆங்கிலத்தையும் அதுக் கொண்டு இருந்த அறிவியல், மருத்துவம் போன்ற விஞ்ஞானத்தையும் மக்களுக்கு மத்தியில் கொண்டு சென்று அறிவை வளர்பதற்கு உதவ பயன் படுத்த வேண்டும் என்றுமே அவர் கூறி இருக்கின்றார். நிற்க

இங்கே அவர் கூறி இருக்கும் கருத்திற்கும் அவர் கூறியதாக கூறப்பட்டு இருக்கும் கருத்திற்கும் தொடர்பு ஏதேனும் உள்ளதா?

அவர் சமசுகிருதம் கற்க சிலர் பெற்று வந்த மானியத்தை நிறுத்தி இருக்கின்றார். சமசுகிருதத்தினை இந்தியாவில் கற்பவர்கள் பெரும்பாலும் யாராக இருப்பர்? அதுவும் கி.பி பதினெட்டாம் நூற்றாண்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எவர் சமசுகிருதத்தினை கற்று இருப்பர்? பொது மக்களா அல்லது பிராமணர்களா?

பிராமணர்கள் தான். பொது மக்களுக்குத் தான் கல்விக் கற்கவே அன்று உரிமை இல்லையே. பின்னர் அவர்கள் எங்கனம் போய் சமசுகிருதம் கற்பது. இந்நிலையில் சமசுகிருதம் பெற்றுக் கொண்டு வந்த மானியத்தினை நிறுத்துவது என்பது சில பிராமணர்களை பாதிக்கும் ஒரு செயலாகவே அமையுமே அன்றி ஒட்டுமொத்த இந்தியர்களையும் பாதித்த ஒரு விடயமாக அமையாது.

மேலும் இந்திய மொழிகளைப் பற்றிய அவர் கொண்டு இருந்த கருத்திலேயும் நாம் குறைக் கூறுவதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை. அவர் வந்து கண்ட பொழுது இந்திய மக்கள் எந்த நிலையில் இருந்தனரோ அதனை அடிப்படையாக வைத்துத் தான் அவர் அவரது கருத்தினைக் கூறி இருக்கின்றார்.

அன்றைக்கு இந்திய மக்களுக்கே இந்திய வரலாறு முழுமையாக தெரிந்து இருக்குமா என்பது கேள்விக்குறியே? அவர்களது மொழியின் பெருமை வரலாறு போன்றவற்றை அறியாது அறியாமையில் மூடிக் கிடந்த ஒரு சமூகம் தான் அன்று இம்மண்ணில் வாழ்ந்துக் கொண்டு இருந்தது. தமிழின் வரலாறோ...தமிழர்களின் வரலாறோ...இராச இராச சோழன் போன்ற அரசர்களைப் பற்றியோ அன்று தமிழர்களுக்கு தெரிந்து இருக்குமா என்பதே சந்தேகம் தான். காமராஜர் போன்றவர்கள் வந்து ஐம்பது ஆண்டுகள் ஆனப் பின்னரும் நமக்கு நம்முடைய வரலாறு முழுமையாகத் தெரியாத பொழுது அடிமையாகக் கிடந்த அக்காலத்தில் என்ன தெரிந்து இருக்கும்?

நமக்கே ஒன்றும் தெரியாத பொழுது எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயனுக்கு என்ன தெரிந்து இருக்கும்? ஒன்றும் தெரிந்து இருக்காது. அதன் அடிப்படையிலேயே அவன் பேசி இருக்கின்றான். அவ்வளவே!!!

எனவே மெக்காலே அவர்கள் கண்ட பொழுது மக்கள் மூட நம்பிக்கைகளில் உலாவிக் கொண்டு இருந்து இருக்கின்றனர்...அதில் இருந்து அவர்களை வெளிக் கொணர ஆங்கிலம் உதவும் என்றே கருதி அவர் அவரதுக் கருத்தினை வெளி இட்டு இருக்கின்றார். அதைத் தவிர வேறு காழ்புணர்ச்சி இருப்பதாகப் படவில்லை. நிற்க.

"அட என்னங்க...ஆங்கிலேயனுக்கும் ஆங்கிலத்துக்கும் போய் இப்படி வக்காலத்து வாங்கி ஒரு பதிவ போட்டு இருக்கீங்க?...அந்நிய மோகத்தில் இருந்து வெளியேறி நம்முடைய மக்கள் நம்முடைய செல்வங்களையும் பெருமைகளையும் அறிந்துக் கொள்வது நல்லது தான...அப்படி இருக்கும் பொழுது எதுக்காக இப்படி ஒரு பதிவு" என்று நிச்சயமாய் நண்பர்கள் சிலர் எண்ணக் கூடும்.

அந்நிய மோகத்தில் இருந்து விடுபட்டு நாடும் மக்களும் உண்மையாக முன்னேற வேண்டும்...உண்மையான வரலாற்றையும் அறிவையும் அவன் மொழியின் சிறப்பையும் மக்கள் அறிந்துக் கொண்டு வாழ வேண்டும் என்ற கருத்தில் சிறிதளவு கூட மாற்றுக் கருத்துக்கள் என்னிடம் கிடையாது. அப்படி இருக்க இந்த பதிவை எழுதியதற்கு காரணம்....ஒரு சூழ்ச்சி!!!

ஆம்...ஒரு சூழ்ச்சி தான். இன்று மெதுவாக நம்முள், இந்தியாவும் இந்திய மக்களும் தாழ்ந்த நிலைக்கு காரணம் மொகலாயர்கள் படையெடுப்பும் ஆங்கிலேயர்களின் படையெடுப்பும் தான் என்ற ஒரு கருத்து மெதுவாக கட்டமைக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அவர்கள் வரும் முன் இந்தியா மிகவும் சிறப்பாக இருந்தது என்றும் அவர்கள் தான் இந்தியாவினை ஒன்றுமில்லாது ஆக்கி விட்டனர் என்ற கருத்துக்களும் வெகுவாகப் பரப்பப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

உதாரனத்திற்க்கு மெக்காலே கூறியதாக பரப்பப்பட்ட கருத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன்...பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் பாலாரும் தேனாறும் ஓடியதாம்...அதனை ஆங்கிலேயன் வந்து கெடுத்து விட்டானாம் என்பதனைப் போல் அக்கருத்து இருக்கின்றது. ஆனால் உண்மையில் நிலைமை அப்படியா இருந்தது?

பார்க்கத் தகாதவர்களாக, தீண்டத் தகாதவர்களாக, தாழ்த்தப்பட்டவர்களாக, கல்வி அறிவு இல்லாதவர்களாக மக்களை ஒடுக்கி வைத்து இருந்தது யார்? ஏன் அதனைக் கூற மறுக்கின்றனர். மனு நூல் என்று ஒன்றைக் கூறி மக்கள் தாழ்த்தப்பட்டு இருப்பது இறைவன் வகுத்தது என்றுக் கூறி மக்களை ஒடுக்கியவர்கள் ஏன் இன்று "ஆம்...அது இறைவன் வகுத்தக் காரியம் தான்...இறைவனின் காரியத்தை நாங்கள் செய்தோம்...இனியும் செய்வோம்..." என்று உரிமைப் பாராட்ட முன் வர மாட்டேன்கின்றார்கள்? ஏன் அந்த நிகழ்வுகளை மறைத்து ஆங்கிலேயனையும் இசுலாமியரையும் எதிரிகளாக சித்தரிக்க முயல வேண்டும். மேலும் சமசுகிருதத்திற்கு வழங்கப் பட்ட மானியத்தை எதிர்த்ததற்காகவா மெக்காலேவை இங்கே வம்பிற்கு இழுத்து பொய்யான தகவலை பரப்பி இருக்கின்றனரா என்றும் நாம் சிந்திக்கத் தான் வேண்டி இருக்கின்றது.

அது தான் சூழ்ச்சி.

அடுத்தவனை எதிரி என்றுக் காட்டுவதன் மூலம் நம்மை உத்தமன் என்றுக் காட்டிக் கொள்ளலாம்....பறித்த குழிகளை மூடியும் கொள்ளலாம். அதற்குத் தான் சிலர் முயன்றுக் கொண்டு இருக்கின்றனர். அதனால் தான் நாம் இத்தகைய பதிவுகளை எழுத வேண்டி இருக்கின்றது.

அந்நிய மோகம் நீங்க வேண்டும், மக்கள் உண்மையிலேயே தெளிவடைந்து சுதந்திரம் பெற வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்துக்கள் சிறிதும் இல்லை. அது நமது கடமை...காலத்தின் தேவையும் கூட.

ஆனால் அதனை நிறைவேற்ற பொய்கள் நமக்குத் தேவை இல்லை. பொய்கள் என்றுமே உதவுவதும் இல்லை. மெய்யான தத்துவங்கள் பலவற்றினைக் கொண்டு நீண்ட நெடிய வரலாற்றினோடு தமிழ் தாய் எங்களுக்கு வழி காட்டிக் கொண்டு இருக்கின்றாள். மெய்யின் துணைக் கொண்டே நாம் வெல்வோம்.

உண்மை நம்மை விடுவிக்கும்...!!!

பி.கு:

மெக்காலேவின் முழு உரையினைக் காண இந்தச் சுட்டியினை அழுத்தவும்.
மெக்காலே உரை

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி