சென்ற பதிவில் எவ்வாறு சோழர்கள் எவ்வாறு சூழ்ச்சிக்கு வீழ்ந்து இருக்கலாம் என்றே கண்டோம். இப்பொழுது இன்னொரு விடயத்தினை நாம் இங்கே காண வேண்டி இருக்கின்றது. அது, இராச இராச சோழனின் காலத்தில் மக்களுள் வருணப் பாகுபாடுகளோ அல்லது பிறப்பால் ஏற்றத் தாழ்வு முறைகளோ இருந்ததா இல்லையா என்பதே அது.

இதனைக் குறித்து நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டு இருந்தேன். என்னுடைய பார்வை இராச இராச சோழனின் காலத்தில் வருணப் பாகுபாடுகளோ அல்லது பிறப்பால் ஏற்றத் தாழ்வுகளோ தமிழக மண்ணில் இருந்ததில்லை என்பதே. இதனை நான் அத்தோழரிடம் கூறிய பொழுது அவர் ஏற்கவில்லை. அவர் அக்கருத்துக்கு மாற்றுக் கருத்துக்களை கொண்டு இருந்தார்.

பின்னர் சில நாட்கள் கடந்தன...மீண்டும் அந்த நண்பரிடம் பேசும் வாய்ப்பு கிட்டியது. அப்பொழுது பேசுகையில் அவர் இராச இராச சோழனின் காலத்தில் சாதி ஏற்றத் தாழ்வுகளோ அல்லது வருணப் பாகுபாடுகளோ இல்லாது இருந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றது என்றே கூறினார். அதற்கு அவர் கூறிய காரணம்,

இரு நாடுகள் இருக்கின்றன. இரண்டிலும் நூறு மக்கள் இருக்கின்றனர் என்றே வைத்துக் கொள்வோம். இப்பொழுது ஒரு நாட்டினில் திறமையின் அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்கின்றனர். அதாவது நூறு பேரில் சண்டை இடும் திறமையும் வலிமையையும் ஒரு நாற்பது பேரிடம் இருக்கின்றது என்றே வைத்துக் கொள்வோம். அந்த நாற்பது பேரினை வைத்துக் கொண்டு ஒரு படையினை ஒரு நாடு உருவாக்குகின்றது. மற்றொரு நாடோ பிறப்பின் அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்து படையினை உருவாக்குகின்றது. அதாவது நூறு பேரில் நாற்பது பேர் போர் செய்யும் குலத்தில் பிறந்து இருக்கின்றார்கள். அப்படிப் பிறந்த அவர்கள் அனைவருமே போர் செய்ய வல்லுனர்களாக இருக்க முடியுமா? வாத்தியார் பையன் மக்கு என்பதனைப் போல் அந்த நாற்பது பேரினில் பலர் போர் செய்யும் தகுதி இல்லாது தான் இருப்பர். அது தான் நியதி.

இந்நிலையில் இந்த இரண்டு நாடுகளும் போர் புரிந்தன என்றால் எந்த நாடு வெல்லும்? திறமையின் அடிப்படையில் படையினை வைத்து இருந்த நாடா அல்லது பிறப்பின் அடிப்படையில் படையினை வைத்து இருந்த நாடா?

திறமையின் அடிப்படையில் படையினை வைத்து இருந்த நாடு தானே வெல்லும். இதனைக் கொண்டு பார்க்கும் பொழுது இராச இராச சோழன் பெற்ற வெற்றிகள் யாவையும் பிறப்பின் அடிப்படையில் அமைந்த படையினை வைத்து பெற்று இருக்க முடியாது. திறமையின் அடிப்படையில் படையினை அவன் வைத்து இருந்தான் என்றால் தான் அவ்வெற்றிகளை அவன் பெற்று இருக்க முடியும். எனவே இராச இராச சோழனின் காலத்தில் தமிழகத்தில் வருணப் பாகுபாடுகளோ அதன் தாக்கமான பிறப்பால் ஏற்றத் தாழ்வு முறைகளும் இல்லை என்றே நாம் கருத முடியும்.

இது தான் அவர் கூறியக் காரணம். சரியான காரணம் தானே. இப்பொழுது இந்தக் காரணத்தினைத் நாம் இன்னும் விரிவாகக் காண வேண்டி இருக்கின்றது, ஆனால் அதனைப் பின்னர் காண்பது நலமாக இருக்கும் என்பதினால் இப்பொழுது சோழர்களுடன் நம் பயணத்தினைத் தொடரத் தான் வேண்டி இருக்கின்றது.

இராச இராசன் பிறப்பால் வேற்றுமைகளைக் காணும் அரசினை வைத்து இருந்தான் என்றால் அவன் பெற்ற வெற்றிகளை அவன் பெற்று இருக்க முடியாது, எனவே அவன் காலத்திலும் சரி அவனின் மகனின் காலத்திலும் அத்தகைய நடைமுறை அதாவது பிறப்பால் ஏற்றத் தாழ்வினைக் காணும் நடைமுறை தமிழ் மண்ணில் இருந்து இருக்க வாய்ப்பு இல்லை என்றே நாம் கருத முடிகின்றது அல்லவா. இதனை மெய்ப்பிப்பதனைப் போல் அவர்கள் காலத்தில் சோழ பேரரசின் புகழ் சிறந்து விளங்குகின்றது.

அதனைப் போலவே எப்பொழுது சாளுக்கிய சோழனாக குலோத்துங்கன், இறுதி சோழனான அதி இராசேந்திர சோழனின் மர்மமான மரணத்தினைத் தொடர்ந்து அரியணை ஏறுகின்றானோ அப்பொழுது இருந்து சோழர்களின் ஆட்சி வீழ்ச்சிப் பாதைக்குச் சென்று இருக்கின்றது.

சூழ்ச்சியினால் வந்த அரசன் வலுவான அரசனாக இருக்க முடியாது. அவனை வைத்துக் கொண்டு மற்றவர்கள் பல காரியங்களை செய்துக் கொள்ள முடியும். அரசன் நமது கைகளுக்குள் இருந்தால் நம் விருப்பப்படி அரசியலில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும்....ஆன்மீகத்திலும் மாற்றங்களைக் கொண்டு வர முடியும்....என்ன சரி தானே.

அது தான் தமிழகத்தில் நடந்து இருக்கின்றது என்கின்றனர் சில ஆய்வாளர்கள். அரசனைக் கைக்குள் வைத்து இருந்தால் அவனை மட்டுமே கட்டுப் படுத்த முடியும், ஆனால் ஆன்மீகத்தினை கையில் வைத்து இருந்தால் யாரை வேண்டும் என்றாலும் கட்டுப்படுத்தலாம் என்ற உண்மை ஆரியர்களுக்கு நன்கு தெரிந்து இருந்தது. அதனால் அரசனின் துணையுடன் ஆன்மீகத்தினை தங்களின் பிடிக்குள் கொண்டு வர முயல்கின்றனர்.

ஒரு நாட்டினைப் பிடிக்க வேண்டும் என்றால் அந்நாட்டின் அரசனை வெல்ல வேண்டும். அதனைப் போன்று ஆன்மீகத்தை தங்களுக்கு உரிய ஒன்றாக மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஆன்மீகத் தலைவர்களைக் கொல்ல வேண்டும். அது தான் தமிழக வரலாற்றில் நிகழ்ந்து இருக்கின்றது. சித்தர்கள் கொலை செய்யப்படுகின்றனர்.
பிராமணர்களை எதிர்த்த சித்தர்கள் காடுகளுக்குள் விரட்டப்படுகின்றனர். பின்னர் அதுவும் போதாதென்று உயிருடன் குகைகளுள் அடைக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களுக்கு 'ஜீவ சமாதி' அடைந்தார் என்று பட்டத்தையும் தந்து சிறப்பித்தனர் என்பது வரலாறு. மேலும் சிலரை உயிருடன் எரித்து விட்டு அவர் முக்தி அடைந்து விட்டார் என்றப் பட்டத்தையும் தந்து அவர்கள் கொலை செய்யப்பட்டதை மறைத்த செயல்களும் இங்கே நிகழத் தான் பெற்று இருக்கின்றன.


அதனைப் போன்றே இறுதி நாயன்மாரான நந்தனாரின் கொலையும், இறுதி ஆழ்வாரான திருப்பாணாழ்வாரின் கொலையும் நிகழப் பெற்று சைவ கோவிலின் தலைமையிடமான சிதம்பரமும், வைணவக் கோவிலின் தலைமையிடமான திருவரங்கமும் பிராமணர்களின் வசம் செல்லுகின்றது.

சோழர்களின் வீழ்ச்சியும், தமிழக கோவில்கள் பிராமணர்களின் கைகளின் செல்வதும் தற்செயலான செயல்களா அல்லது ஒரு மிகப் பெரிய சதியின் பகுதிகளா என்பதனை நாம் சிந்தித்துப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. நிற்க.

சோழர்களின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து பாண்டியர்கள் சிறிது வலு பெறுகின்றார்கள். ஆனால் அவர்களும் என்ன செய்ய முடியும், நேரிடையாகப் போர் புரியும் எதிரியை வெல்லலாம் ஆனால் சூழ்ச்சியினால் முதுகில் குத்துபவனை எவ்வாறு அறிவது? பாண்டியர்களும் சிறிதுக் காலத்தில் வீழ்ச்சியினைத் தான் அடைகின்றனர்.

இக்காலத்தில் தான் பிராமணர்களின் முழு செல்வாக்கினைப் பெற்ற விசய நகரப் பேரரசு தமிழகத்தினைக் கைப்பற்றுகின்றது. தமிழர்களின் நிலை அடிமை நிலைக்குச் செல்லுகின்றது.


கோவில்கள் பிராமணர்களின் கைகளுக்கு மாற்றப்படுகின்றன...

"அபிசேகப் பண்டாரம் என்னும் பார்ப்பனர் அல்லாத சாமியார் நிர்வாகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருந்து வந்தது. பார்பனர் தம் பாதம் தாங்கியான திருமலை நாயக்கன் அப்பண்டாரத்தை அச்சுறுத்தியும் நிலம் பணம் முதலியன கொடுத்தும் மீனாட்சி அம்மன் கோவில் ஆளுகையினைப் பறித்துக் கொண்டான். பரிதாபத்துக்குரிய பண்டாரமும் அரசு ஆணைக்குக் கட்டுப்பட்டுப் பயந்து ஒதுங்கிக் கொண்டார்.

திருமலை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினை ஏற்றுக் கொண்ட பின் முதல் வேலையாகக் கோவில் வழிபாட்டிற்கு என்று பார்ப்பனர்களான குலசேகரப் பட்டன் வகையறாவினரையும் விக்கிரம பட்டன் வகையறாவினரையும் நியமித்துக் கொழுக்க வைத்தான்" என்றே பார்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும் என்ற நூலினில் புலவர். கோ. இமயவரம்பன் கூறுகின்றார்.

இதைப் போன்ற நிலை தான் பழனிக் கோவிலிலும் நிகழ்ந்து இருக்கின்றது என்றே நாம் கண்டு இருக்கின்றோம்.

மன்னராட்சிக் காலத்தில் அரசன் நமக்குத் துணை நின்றான் என்றால் நாம் கூறுவது தானே உண்மை. அவ்வாறே உண்மைகள் புனையப்படுகின்றன...தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றனர். இக்கொடுமைகளை எதிர்த்த ஆன்மீகத் தலைவர்கள், அறிஞர்கள், வீரர்கள் ஆகியோர் அனைவரும் தாழ்த்தப்படுகின்றனர். அவர்கள் பஞ்சமர்கள் என்று முத்திரைக் குத்தப் பெற்று நாடுகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். அவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்கள் தான் இன்றைக்கு தாழப்பட்டவர்களாக இருப்பவர்கள். மேலும் தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகள் பிறப்பின் அடிப்படையிலான ஒன்றாக மாற்றம் பெறத் துவங்கியது இக்காலத்தில் தான் என்பதும் சிலரும் கூற்று.

பிராமணர்களின் இச்செயல்களுக்கு உறுதுணையாக இருந்து அதிகாரங்களையும் செல்வங்களையும் பெற்ற தமிழர்கள் உயர்ந்தவர்கள் என்றே மாற்றப்பட்டார்கள். இன்றுக் கூட சைவ வைணவ மடங்களில் இருப்பவர்கள் பிராமண செல்வாக்கு உடனேயே இருப்பதும், சமசுகிருதத்தை மீறி தமிழ் வர கூடாது என்று இருப்பதும், அம்மடங்களில் குறிப்பிட்ட சாதியினரே இருக்கலாம் என்று பிறப்பின் அடிப்படையில் பிரிவினையை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பதனையும் நாம் காணத் தானே செய்கின்றோம். அவர்கள் அவ்வாறு இருப்பதற்காக அவர்களுக்கு பிராமணர்கள் கொடுத்த பட்டம் தான் சற்சூத்திரர். அதாவது சிறந்த அடிமைகள் என்றே பொருள் வரும்.

தமிழன் பிராமணனோ, சத்திரியனோ அல்லது வைசியனோ கிடையாது...அவன் சூத்திரன் அல்லது பஞ்சமன். அதன் அடிப்படையில் தான் பிராமணர்கள் தங்களுக்கு உதவிய தமிழர்களை சிறந்த அடிமைகள் என்ற பொருள் படி 'சற் சூத்திரர்' என்றும்...ஒன்றுமே செய்யாது இருந்த சாதாரண மக்களை அடிமைகள் என்னும் பொருள் படி 'சூத்திரர்' என்றும், அவர்களை எதிர்த்த தமிழ் அறிஞர்களை பஞ்சமர்கள் என்றும் பிரித்து வைக்கலாயினர்.

அரசனின் செல்வாக்கினைப் பெற்ற பிராமணர்களை மக்களால் ஒன்றும் செய்ய இயலாது போயிற்று. தமிழர்கள் தம் உரிமைகளை இழந்து அடிமைகளாயினர். கல்வியினைக் கண்ணாக மதித்து வந்த ஒரு சமூகம் அறியாமை இருளில் மூழ்கத் தொடங்கியது....இன்று வரை அது அவ்வாறு தான் இருக்கின்றது.

தொடரும்....!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு