இராச இராச சோழன்!!!

என்ன தான் சொல்லுங்க... இந்தப் பெயரைக் கேட்ட உடன் ஒரு பெருமித உணர்ச்சி தமிழர்களுக்குள் வருவதனைத் தடுக்க முடியாது தான். காரணம் அவன் செய்த செயல்கள் அத்தகையவை. தமிழர்களின் புகழை மீண்டும் உலகறியச் செய்தவன் அவன்....செந்தமிழை வளர்த்தவன் அவன்...தமிழரின் பெருமையை நிலை நாட்டியவன் அவன்... என்று இராச இராச சோழனை கொண்டாடுவதற்கு இங்கே ஆயிரம் காரணங்களைக் கூறுவதற்கு ஆட்கள் இருக்கின்றனர்.

அதைப் போலவே அக்கூற்றுக்களை மறுப்பதற்கும் ஆட்கள் இருக்கின்றனர். அவர்களின் கூற்றின் படி இராச இராச சோழன் என்ற மன்னன் ஒரு பிராமண அடிவருடி என்றும் அவனின் காலத்தில் தான் தமிழர்களும் சரி பெண்களும் இழிவுப்படுத்தப் பட்டு அடிமைகளாயினர் என்றே அவர்கள் கருதுகின்றனர் என்று நமக்குப் புலனாகின்றது.

அட என்னடா இது...ஒரு தரப்பினர் இராச இராச சோழனை தமிழ் இனக் காவலனாகக் காணுகின்றனர்...அதே சமயம் அவனை மற்ற சிலரோ தமிழ் இனத்தினை இழிவுப் படுத்த வந்த ஒருவனாகப் பார்கின்றனரே..ஏன் இந்த முரண்பாடு என்ற எண்ணம் நிச்சயம் நம்முள் எழும்...அந்நிலையில் ஏன் அந்த முரண்பாடுகள் என்றக் கேள்விக்கு நாம் விடையினைத் தேடத் தான் வேண்டி இருக்கின்றது. இருந்தும் சாதி ஏற்றத் தாழ்வுகளைக் குறித்து நாம் கண்டுக் கொண்டு வரும் இத்தொடரில் அக்கேள்விக்கான விடையினைத் தேடுவது என்பது தொடர்பில்லாது சென்று விட வாய்ப்புகள் இருப்பதினால் அதனைப் பற்றி வேறொரு பதிவில் விரிவாகக் காண முயலலாம். இருந்தும் இராச இராச சோழனுக்காக அம்முரண்பாடுகளைக் குறித்து நாம் இங்கே சிறிது பார்த்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

௧) இராச இராச சோழன் பிராமண அடிவருடி என்றால்.... அவன் ஆட்சியில் கோவில்கள் அனைத்திலும் பிராமணர்களே இருந்து இருக்க வேண்டும்... ஆனால் உண்மை என்னவென்றால் கி.பி பன்னிரெண்டாம் நூற்றாண்டிலும் அதற்கு பின்னர் அமைந்த விசய நகரப் பேரரசிலும் தான் கோவில்கள் பிராமணர்களின் கைவசம் செல்லுகின்றது. அது வரை கோவில்களில் தமிழர்களே இருந்து இருக்கின்றார்கள். மேலும் கோவில்களில் தமிழே ஒலித்து இருக்கின்றது. அவ்வாறு இருக்கையில் அவனை எவ்வாறு பிராமண அடிவருடியாக கருத முடியும்.

௨) இராச இராசன் தேவ அடியார்கள் முறையை அறிமுகப்படுத்தினான். அதன் மூலம் பெண்களைத் தாழ்த்தினான் என்ற ஒரு கூற்று இருக்கின்றது...

இக்கேள்விக்கு விடையினைக் காண நாம் பிரபாகரனையும் புலிகளையும் காண வேண்டி இருக்கின்றது. புலிகளில் பெண்களுக்கு என்று இடம் தனியே இருந்தது. அவ்வீர தமிழ் மகளிர் பெண் புலிகள் என்றே அழைக்கப்பட்டனர். புலிகளின் காலத்தில் அவர்களுக்கு நிச்சயம் சிறப்பான நிலை இருந்து இருக்கும்...ஆனால் அதே நிலை இன்று நிலவும் என்றா கூற முடியும்? இழிவான நிலைக்கு அவர்கள் சிங்களவர்களால் தள்ளப் பட்டு இருப்பார்கள் தானே. அதற்காக புலிகளின் காலத்திலேயும் பெண் புலிகள் இன்று இருந்த நிலையிலேயே இருந்தார்கள் என்றுக் கூற முடியுமா? அதே நிலையைத் தான் நாம் தேவ அடியார்கள் முறையிலும் காண வேண்டி இருக்கின்றது.

சமணசமயத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடையாது. அவள் அடுத்தப் பிறவியில் ஆணாக பிறந்தால் ஒழிய அவளுக்கு முக்தி கிடையாது. ஆனால் சைவ வைணவ சமயங்களிலோ பெண்ணுக்கு சிறப்பான இடம் இருந்தது. அவ்விடத்தை கோவிலிலும் கொண்டு வந்தவன் தான் இராச இராச சோழன். கோவில் என்பது இறைவனை நாம் நினைக்கும் இடம். அங்கே ஆணும் பெண்ணும் சமம் தான் என்று அவன் கொண்டு வந்த ஒரு திட்டம் தான் தேவ அடியார்கள் திட்டம். ஆனால் பிற்காலத்தில் தமிழர்களின் கோவில்களையும் சமயத்தினையும் ஆட்க்கொண்ட ஆரியர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய விசய நகரப் பேரரசின் மன்னர்கள் அத்திட்டத்தினை அவ்வாறே வைத்து இருப்பரா அல்லது அவர்களின் வசதிக்கேற்ப மாற்றி இருப்பரா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. (இதனைப் பற்றியும் விரிவாக வேறு பதிவில் காணலாம்)

சுருக்கமாக கூற வேண்டும் என்றால் இராச இராச சோழன் கோவிலினுள் பெண்களுக்கு இடம் கொடுத்து அவர்களின் நிலையை உயர்த்தினானே ஒழிய தாழ்த்தவில்லை. அப்பெண்களின் நிலை தாழ்த்தப்பட்டது விசய நகர பேரரசின் காலத்திலேயே ஆகும்.

௩) இராச இராசன் சமசுகிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தான்...தமிழை அவன் வளர்க்கவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தமிழன் உருவாக்கிய ஒரு மொழிக்கு தமிழன் முக்கியத்துவம் கொடுத்தது என்ன தவறு? மேலும் அவனின் காலத்தில் கோவிலுள் சமசுகிருதம் இருந்ததா இல்லை தமிழ் இருந்ததா? தமிழ் தானே இருந்தது. அப்படி இருக்க இராச இராசன் தமிழை வளர்க்கவில்லை என்று நாம் எவ்வாறு கருதுவது.

எனவே இராச இராச சோழன் பிராமண அடிவருடி என்பதற்கோ அவன் தமிழை வளர்க்க வில்லை என்பதற்கோ சான்றுகள்பெரிதாய் ஏதும் இல்லை. மேலும் இத்தலைப்பினைப் பற்றி நாம் பின்னர் விரிவாக காணலாம். இப்பொழுது நாம் மீண்டும் ஆதித்தக் கரிகாலனின் மரணத்திற்கு செல்ல வேண்டி இருக்கின்றது.

ஆதித்த கரிகாலன்...சோழர்களின் பட்டத்து இளவரசன். இவன் சதியால் கொலை செய்யப்பட்டு இருக்கின்றான் என்றே நாம் கல்வெட்டுச் சான்றுகள் மூலம் அறிகின்றோம். பட்டத்து இளவரசனை யார் கொலை செய்வார்?

ஆட்சியினைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் கொலை செய்வார்கள். அந்நிலையில் ஆதித்த கரிகாலனைக் கொன்றால் நன்மை யாருக்கு வரும் என்று பார்த்தால் பொதுவாக அடிபடும் பெயர்கள் எவை என்றால்

குந்தவை
மதுராந்தகன்
இராச இராச சோழன்
பாண்டிய ஆபத்துதவிகள்

ஆச்சர்யமாக இருக்கின்றது அல்லவா...இன்றைய வரலாறு இராச இராச சோழனையும் சந்தேகக் கண்ணுடன் தான் பார்த்துக் கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் தான் நாம் உடையாளூர் கல்வெட்டுக்களைக் காண வேண்டி இருக்கின்றது.

உடையாளுர்க் கல்வெட்டுக்கள் ஆதித்தக் கரிகாலனை பிராமணர்கள் கொன்று விட்டனர் என்றும் அவர்களின் நிலங்களை இராச இராசன் பறிக்க உத்தரவிட்டான் என்றும் இருக்கின்றது. இதன் மூலம் பிராமணர்களே ஆதித்தக் கரிகாலனை கொன்று இருக்கின்றனர் என்ற ஒரு கருத்து நம்மிடையே வருகின்றது.

இந்நிலையில் தான் இன்னொரு கல்வெட்டுக் கூறும் செய்தியினை நாம் காண வேண்டி இருக்கின்றது. அக்கல்வெட்டு இராச இராசனின் காந்தளூர்ச் சாலைப் போரினைப் பற்றிக் கூறுகின்றது.

காந்தளூர்ச் சாலைப் போர் என்பது இராச இராசன் அரசனாக முடியேற்றப் பின்னர் நடத்திய முதல் போர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. காந்தளூர்ச் சாலை என்பது ஒரு பாட சாலை. அங்கே போர் கலைகள் பயிற்றுவிக்கப் பட்டுக் கொண்டிருந்தன என்றும் அது பிராமணர்களின் (ஆரியர்கள்) கட்டுக்குள் இருந்த ஒரு அமைப்பு என்றும், அங்கிருந்த நபர்களின் சூழ்ச்சியால் தான் தனது அண்ணன் கொலை செய்யப்பட்டான் என்பதினால் தான் தனது முதல் யுத்தத்தினை காந்தளூர்ச் சாலைக்கு எதிராக நடத்தினான் இராச இராச சோழன் என்றே ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். (புத்தகம்: இராச இராச சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர் - அலைகள் பதிப்பகம். மேலும் பல கருத்துக்களும் இப்போரினைப் பற்றி இருக்கத் தான் செய்கின்றன...ஆனால் அவற்றை நாம் வேறொரு பதிவில் பின்னர் காணலாம்).

இப்போதைக்கு இராச இராசன் அவனது அண்ணனை பிராமணர்கள்/ஆரியர்கள் கொன்று விட்டார்கள் என்றும் அதனால் தான் அவன் காந்தளூர் சாலையின் மீது போர் தொடுத்தான் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது என்பதனை நாம் அறிகின்றோம்.

இங்கே தான் நாம் மற்றொரு விடயத்தினையும் காண வேண்டி இருக்கின்றது. சோழர்கள் அவர்களின் ஆட்சிக் காலத்தில் நிம்மதியாக இருக்கவில்லை. போர்கள் அவர்களை அழைத்துக் கொண்டே தான் இருந்தன. அதுவும் வடக்கில் இருந்து யுத்தம் அவர்களுக்கு தூது விட்டுக் கொண்டே இருந்தது. (வடக்கே ஆரியர்களின் செல்வாக்கு ஏற்கனவே பலமாக இருந்தது என்று நாம் கண்டிருக்கின்றோம்)

இந்நிலையில் சோழ மன்னர்களின் வீழ்ச்சி வடக்கில் இருந்தவர்களுக்கு நிச்சயம் உதவும் தானே. அப்படிப்பட்ட ஒரு வீழ்ச்சிக்காக சோழ மன்னர்களை சதியால் கொல்ல முயலலாம் தானே...அதனால் தான் ஆதித்த கரிகாலன் சூழ்ச்சியால் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் நாம் கருதலாம் தானே. நிற்க

ஆனால் அந்த சூழ்ச்சிகளானது இராச இராச சோழனின் காலத்திலும் சரி அவனின் மைந்தன் இராசேந்திர சோழனின் காலத்திலும் எடுபடாமல் சென்று விட்டதினை நாம் வரலாற்றினில் காணுகின்றோம். ஆனால் பின்னர் வந்த சோழர்கள்அத்தகைய சதிகளை கண்டறிந்து வென்றார்களா என்பது மிகப் பெரிய கேள்வியாகவே இருக்கின்றது. காரணம் சாளுக்கியர்களும் சோழர்களும் ஒன்றிணைந்து சாளுக்கிய சோழர்கள் என்று உருவாகி இருக்கின்றனர். சாளுக்கியர்களுடன் போரிட்டு வந்துக் கொண்டிருந்த சோழர்கள் அவர்களுடன் இணைந்ததற்கு காரணம் என்ன?

சோழ அரசனான அதி இராசேந்திர சோழன் மர்மமான நிலையில் வாரிசின்றி இறக்க சாளுக்கிய வம்சத்தைச் சார்ந்த முதலாம் குலோத்துங்கன் அரியணை ஏறுகின்றான். எதனால் அதி இராசேந்திர சோழன் இறந்தான்? சாளுக்கியர்கள் அரியணை ஏற அவன் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட்டானா? என்பதெல்லாம் ஆராய வேண்டிய விடயங்களாகத் தான் இருக்கின்றன. ஆராய வேண்டியக் காரணம்...அதற்குப் பின்னர் தமிழ் நாட்டினை தமிழரே முழுமையாக ஆண்ட நிலை இன்று வரை பெருமளவு வரவே இல்லை என்ற உண்மை தான்.

தமிழர்களுள் சாதி ஏற்றத் தாழ்வுகளும், தமிழர்கள் தாழ்த்தப்பட்டமையும் ஏற்படத் தொடங்கியது அக்காலத்தில் இருந்து தான் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதைத் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது.

காணலாம்...!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

3) தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார்.
(தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005)

கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.
இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்

நிலம் உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
(மேலது நூல்)

இதன் மூலம் இராச இராசனின் காலத்தில் பெண்கள் தாழ்தப்பட வில்லை என்று நாம் அறிய முடிகின்றது தானே. (தகவல் அறிய உதவிய ம. செந்தமிழன் அவர்களுக்கு நன்றி)

1 கருத்துகள்:

https://youtu.be/Hk2tbjHy4VU

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு