சென்ற பதிவில் தமிழர்கள் அனைவரும் சூத்திரர்கள் அல்லது பஞ்சமர்கள் தாம் என்றே கண்டு இருந்தோம். இங்கே தான் சில நண்பர்கள் சில கேள்வியினை எழுப்புகின்றனர். "அதெப்படி தமிழர்கள் அனைவரையும் சூத்திரன் அல்லது பஞ்சமன் என்றுக் கூறுகின்றீர்?...நாங்கள் ஆண்ட இனம்...அப்படி என்றால் நாங்கள் சத்திரியர்கள் அல்லவா? அவ்வாறு இருக்கையில் சத்திரியர்களான எங்களை எவ்வாறு சூத்திரர் மற்றும் பஞ்சமர் என்று கூறுகின்றீர்?"

இது தான் அக்கேள்வி. இக்கேள்விக்குத் தான் நாம் விடையினைத் தேட வேண்டி இருக்கின்றது. காரணம் இன்றைக்கு நம்முடைய நாட்டினில் 'யார் ஆண்ட இனம்' என்றும் 'நாங்கள் ஆண்ட இனத்தவர்' என்றும், கேள்விகளும் சரி முழக்கங்களும் சரி எல்லாத் திசைகளில் இருந்தும் கேட்ட வண்ணம் தான் இருக்கின்றது. அக்கேள்விகளுக்கு சரியான விடையினை அறியாது நம்மால் தமிழ் இனத்தை ஒன்றிணைக்க முடியாது.

சரி இப்பொழுது இக்கேள்விகளுக்கு விடையினைத் தேட நாம் இரு விடயங்களைக் காண்பது நலமாக இருக்கும்.

ஒன்று...மருத்துவர் இராமதாசு அவர்களின் ஒரு கூற்று. வன்னியர்கள் சத்திரியர்கள் என்றும் அவர்கள் அக்னி குண்டத்தில் இருந்து தோன்றியவர்கள் என்றும் அவர் கூறி இருந்தார்.

இப்பொழுது இக்கூற்றினைத் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது. தமிழர்கள் இறை நம்பிக்கை உடையவர்கள். சைவ வைணவ சமயங்களைப் பின்பற்றும் அவர்கள், இறைவன் உலகினையும் மனிதர்களையும் படைத்தான் என்ற கருத்தினை உடையவர்கள். அவ்வாறு இருக்க அக்னி குண்டத்தில் இருந்து மனிதன் தோன்றினான் என்பது இறைவன் மனிதனைப் படைத்தான் என்றக் கோட்பாட்டிற்கு ஏதுவான ஒன்றா அல்லது எதிரான ஒன்றா? நிச்சயம் எதிரான ஒன்று தான்.

அவ்வாறு இருக்க இறைவன் மனிதனைப் படைத்தான் என்ற நம்பிக்கையினைக் கொண்டவர்கள் எதற்காக நாங்கள் அக்னி குண்டத்தில் இருந்து தோன்றினோம் என்றுக் கூற வேண்டும்?

இக்கேள்விக்கான விடை நமக்காக கி.பி ஏழாம் நூற்றாண்டில் காத்துக் கொண்டு இருக்கின்றது. நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் அக்காலத்தில் தான் வடக்கே இருந்த இந்திய அரசனைக் கொன்று விட்டு ஆரியர்கள், இந்தியாவில் அவர்கள் பிடித்த பகுதியினை ஆரியவர்த்தம் என்றுப் பெயரிட்டு ஆட்சிப் புரியலாயினர் என்றும் அவர்கள் அவர்களுள் அமைத்துக் கொண்ட பிரிவுகள் தாம் பிராமணர், சத்திரியர் மற்றும் வைசியர் என்றும். சத்திரியர்கள் என்பவர்கள் ஆரியர்களுள் போர் செய்யும் பிரிவினைச் சார்ந்தவர்கள்.

அவ்வாறு வட இந்தியாவின் ஒரு பகுதியினை பிடித்த அவர்கள் அவர்களுக்கென்று இட்டுக் கொண்ட கதை தான் 'நாங்கள் அக்னி குண்டத்தில் இருந்து தோன்றியவர்கள்' என்பது. ஆரியர்கள் இறைவனை அறியாதவர்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் தீ வழிபாடு தான். அதனால் தான் அவர்கள் மேலான பொருளாக கருதிய நெருப்பில் இருந்து அவர்கள் தோன்றியதாக அவர்கள் கதையினைக் கட்டி விட்டனர். "நாங்கள் உயர்ந்தவர்கள்...நாங்கள் மேலான தேவனாக வணங்கும் அக்னியில் இருந்து நாங்கள் தோன்றி இருக்கின்றோம்" என்ற பொருளிலேயே அவர்கள் அக்கதையினைப் புனைந்துக் கொண்டனர்.

பிற்காலத்தில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பிராமணர்கள் சூழ்ச்சியினால் நுழைய, அவர்கள் பரப்பிய கதைகளும் பரவுகின்றது. ஒரு காலத்தில் மக்கள் பிராமணர்களின் வர்ணாசிரமதர்மம் (இறைவன் மனிதனை நான்கு வர்ணமாகப் படைத்தான்) என்ற ஒரு கூற்றினை ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டப் பொழுது, அரசர்கள் என்றால் அவர்கள் சத்திரியர்கள் என்றக் கருத்து பரவ ஆரம்பித்தது.

அதாவது அரசையும் சரி ஆன்மீகத்தையும் சரி பிராமணர்கள் பிடித்தாயிற்று. அவர்கள் சொல்வது தான் ஆன்மிகம்/சட்டம் என்ற நிலையும் வந்தாயிற்று. மேலும் அவர்கள் சொல்வதனை சரி பார்க்க நூல்களைப் படிக்கலாம் என்றால் நூல்களை பிராமணர்கள் தவிர எவரும் படிக்கக் கூடாது என்ற சட்டம் வேறு இருக்கின்றது. இந்நிலையில் பிராமணர்கள் கூறுவது/கூறியது தானே உண்மை என்ற நிலை இருக்கும்.

அவர்கள் சொன்னார்கள் "பிராமணர்கள் உயர்ந்தவர்கள்...அரசர்கள் சத்திரியர்கள்...வணிகர்கள் வைசியர்கள்...அடிமைகள் சூத்திரர்கள்...இது இறைவன் கூறியது" என்று, அடிமையாய் இருந்த மக்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். எதிர்த்தவர்கள் பஞ்சமர்கள் என்று முத்திரைக் குத்தப் பெற்று அழிக்கப்பட்டனர்/ ஒடுக்கப்பட்டனர்.

பிராமணர்கள் கூறிய அக்கூற்றினை வேறு வழியில்லாது நம்பிய மக்கள் அரசர்கள் என்றால் சத்திரியர்கள் என்றே எண்ணிக் கொண்டனர். சத்திரியர்கள் எங்கே இருந்து தோன்றினர்....?அக்னிக் குண்டத்தில் இருந்து தோன்றினர்... எனவே நான் சத்திரியன் என்றால் நானும் அக்னிக் குண்டத்தில் இருந்து தோன்றி இருக்க வேண்டும் என்றே மக்களும் எண்ணிக் கொள்ளத் தலைப்பட்டனர்.

அதன் விளைவு தான் இன்று தமிழர்கள் தங்களை சத்திரியர்கள் என்றும் தாங்கள் அக்னிக் குண்டத்தில் இருந்து தோன்றியவர்கள் என்றும் கூறிக் கொண்டு இருப்பது.

சத்திரியர்கள் என்பது ஆரியர்களின் ஒரு பிரிவு, அதற்கும் தமிழர்களுக்கும் சரி இந்தியாவிற்கும் சரி சைவ வைணவ சமயங்களுக்கும் சரி யாதொரு தொடர்பும் இல்லை. இது பிராமணர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் தமிழன் சத்திரியன் என்றுக் கூறினால் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களின் கூற்றின் படியும் மனு நீதியின் படியும் இன்று இந்தியாவில் இருப்பது இரண்டே வகை மக்கள் தான்...ஒரு சாரார் பிராமணர் மற்றொருவர் சூத்திரர். ஒருவர் ஆரியர் மற்றொருவர் திராவிடர். அவ்வளவே.

ஆனால் நம் மக்கள் தான் அறியாது தங்களை சத்திரியர்கள் என்றுக் கூறிக் கொண்டு இருக்கின்றனர். காரணம் தெளிவான வரலாற்றுப் பார்வையும் ஆன்மீக அறிவும் இன்னும் நம் மக்களிடையே பரவவில்லை...காரணம் இன்னும் நம் இனம் முழுமையாக விடுதலை அடையவில்லை.

பாண்டியர்களோ, சோழர்களோ, சேரர்களோ, பல்லவர்களோ சத்திரியர்கள் கிடையாது. அவ்வாறு இருக்கையில் அவர்களின் வம்சாவளியினர் மட்டும் எவ்வாறு சத்திரியர்களாக இருப்பார்கள்?

ஒரு எடுத்துக்காட்டுக்கு ரஷ்ய நாடு தமிழர்களின் மீது படை எடுத்து வந்து வென்று விட்டது. ரஷ்யர்களின் அரசனின் பொதுப் பெயர் ஜார் என்பது ஆகும். இந்நிலையில் ஆள்பவர்களை ஜார் என்று அழைக்கின்றனர், நானும் ஒரு காலத்தில் ஆட்சி புரிந்தவன் தான்...எனவே நானும் ஜார் தான் என்று ஒரு தமிழன் கூறுவான் ஆயினில் அது சரியான ஒன்றாக அமையுமா?

அதனைப் போன்று தான் தமிழன் தன்னை சத்திரியன் என்று அழைத்துக் கொள்வதும் பொருந்தாத ஒன்றாகும்...தமிழன் தன்னை தமிழ் அரசன் என்றுக் கூறிக்கொள்ளலாம்...பாண்டியன் என்றோ சோழன் என்றோ சேரன் என்றோ பல்லவன் என்றோ இன்னும் அநேக தமிழ் அரச பெயர்களின் மூலமாகவோ அவனை அழைத்துக் கொள்ளலாம்...அது சரியானதொன்றாக இருக்கும்.

அதனை விடுத்து தான் ஆண்ட இனம் அதனால் நான் சத்திரியன் என்று ஒருவன் கூறுகின்றான் என்றால் அது அவர்களது அறியாமையைத் தான் காட்டும். ஒரு மனிதன் எப்பொழுது தன்னை சத்திரியன் என்று அழைத்துக் கொள்கின்றானோ அப்பொழுதே அவன் மனு நீதியையும் வருணாசிரமத்தையும் சாதி ஏற்றத் தாழ்வினையும் ஏற்றுக் கொள்கின்றான்.

அது தமிழர்களுக்கு உரியதல்ல....இத்தெளிவினை நாம் நமது சமயங்களின் வாயிலாகவே அறிந்துக் கொள்ள முடியும்.

சத்திரியன், அரசன், ஜார் (TSAR), பாரோ (Pharoah) - போன்ற சொற்கள் ஆட்சிப் புரிபவர்களைக் குறிக்கும். ஆனால் இவை அனைத்தும் பொருளில் ஒன்றாய் இருந்தாலும் வெவ்வேறு இனங்களுக்கு உரிய சொற்கள்.

எனவே எவ்வாறு ஒரு தமிழன் ஜார் இனத்தைச் சார்ந்தவனாக இருக்க முடியாதோ அதனைப் போன்றே அவன் சத்திரிய இனத்தினைச் சார்ந்தவனாக இருக்க முடியாது.

சரி இருக்கட்டும்...இப்பொழுது இரண்டாவது விடயத்தினைப் பற்றி சற்றுக் காண்போம்...!!!

தொடரும்...!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

3) முந்தையப் பதிவுகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |

2 கருத்துகள்:

nanbare kula murai aariyar kaalathil thondiyathu endral piragu een indhukkalin punitha noolil pirivugalippatri koorappattullathu.
ex
partha nee sathriyan sathriyan porida piranthavan .nee seiyum karumangal ennaiye saarum.

@ Palani Ganesan,

நண்பரே....இன்று நம்மிடையே இருக்கும் கீதை பல மாற்றங்கள் செய்யப்பட்ட கீதை...பல இடைச் செருகல்கள் அதனில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. எனவே தான் நீங்கள் கூறும் விடயங்கள் அதில் இன்று இருக்கின்றன...ஆனால் அவ்விடயங்கள் மூல கீதையில் இருந்தனவா என்பது கேள்விக்குறியே.

மேலும் கீதை என்பது மகா பாரதத்தின் ஒரு பகுதி அல்ல...கீதை என்பது தனி நூல் அதனை பிற்காலத்தில் மகாபாரதத்துடன் இணைத்துக் கதை கட்டி விட்டனர் என்ற ஆராய்ச்சியாளர்களின் கூற்றும் இருக்கின்றது.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி