இயேசுவின் இரண்டாம் வருகை அவர் உயிர்தெழுந்தப் பின்னர் பரிசுத்த ஆவியாக உலகிற்கு வந்ததே என்ற கருத்தினைக் கண்டு கொண்டு வருகின்றோம்...அக்கருத்தினைக் குறித்து மேலும் காண்பதற்கு நாம் பரிசுத்த ஆவியினைக் குறித்து இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்...!!!

இயேசு அவர்கள் அவருடைய மரணத்திற்கு முன்னர் அவருடைய சீடர்களிடம் பேசும் பொழுது அவர் பலியாகிச் சென்றால் தான் பரிசுத்த ஆவியானவர் உலகினில் வர முடியும் என்றும் அவர் அவ்வாறு பலியாகா விட்டால் பரிசுத்த ஆவியானவர் உலகினில் வர இயலாது என்று கூறுவதனைப் போல் வருகின்றது.

"நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்."  யோவான் 16:7

மேலும் அவ்வாறு வரும் ஆவியானவரே மக்களை வழிநடத்துவார் என்றும் கூறுகின்றார்.

"சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." யோவான் 16:13

மேலும் விவிலியத்தில் உள்ள கூற்றின் படி பரிசுத்த ஆவியானவர் நம்முடைய உடலினுள் வாசம் செய்கின்றார் என்றக் கூற்றும் வருகின்றது.

//உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6

கூடுதலாக பரிசுத்த ஆவியினை அறியாது இருக்கின்ற காரணத்தினால் மக்களால் அவரைப் பெற்றுக் கொள்ள முடியாது என்றும் இயேசு கூறுவதனைப் போல் வருகின்றது.

 "உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." யோவான் 14:17

நிற்க...!!! இப்பொழுது இந்த கருத்துக்களை சற்று வரிசையாகப் பார்ப்போம்.

1) இறைவனின் ஒரு பகுதியான பரிசுத்த ஆவி மனிதனின் உடலினுள் இருக்கின்றார்.

2) ஆதியிலே பாவம் செய்த முதல் மனிதனின் காரணமாக பாவம் உலகில் நுழைந்து மனிதன் இறைவனிடம் இருந்து விலகிப் போகின்றான். அதன் காரணமாக அவனுள் இருக்கும் பரிசுத்த ஆவியினை அவன் அறியாமல் இருக்கும் நிலை ஏற்படுகின்றது.

3) மனிதன் அவன் பாவத்தின் காரணமாக, அவனது பாவத்தினையும் இறைவனையும் உணராது இருக்கும் நிலையில் அவனது பாவத்தினைப் போக்கி அவனுக்கு நல்வழி காட்ட இறைவன் பலியாக உலகிற்கு வருகின்றார்.

4) அவ்வாறு பலியாவதன் மூலம் மனிதனை அவனது பாவக் கட்டினில் இருந்து விடுவித்து, பரிசுத்த ஆவியினை அவன் அடைந்துக் கொள்ளும் நிலைக்கு அவனை உயர்த்த முடியும். அதனால் தான் அங்கே பலி முக்கியமாகின்றது.

5) பாவத்தில் சிக்கிய மனிதனால் உணர முடியா நிலையில் இருக்கும் பரிசுத்த ஆவியானவர், உலகிற்கு வந்து பலியாகி மனிதனின் பாவங்களை இறைவனின் மைந்தன் நீக்கிச் சென்றப் பின்னர் தான் மனிதனால் உணரப்படக் கூடியவராக இருக்கின்றார். அதனால் தான் இயேசு அவர்கள் அவர் பலியாகி செல்லாவிட்டால் ஆவியானவர் வர இயலாது என்று கூறி இருக்கின்றார்.

"ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்." கொரிந்தியர் 2:14

6) அவ்வாறு பாவம் தீர்க்கப்பட்டு பரிசுத்த ஆவியினைப் பெற்ற மனிதனோ, இறைவனை உணர்ந்து இறைவனுக்கான செயல்களை செய்ய தொடங்குவர். பரிசுத்த ஆவியினைப் பெறாமல் இறைவனை உணர முடியாது.


"தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ரோமர் 8:9

"பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்." யோவான் 15:26

நிற்க...!!!

சுருக்கமாக கூற வேண்டுமெனில் பாவத்தினால் இறைவனை அறியாது இருந்த மனிதனுக்கு நெறியினைக் காட்டி அவனை பாவ விலங்கில் இருந்து விடுவிக்க பலியாகிய இறைவன் பின்னர் பரிசுத்த ஆவியாக அவனை ஆட்கொள்ள வந்ததே இரண்டாம் வருகை. அவ்வாறு பரிசுத்த ஆவியின் அருளினைப் பெறாது இருக்கும் வரை இறைவனை உணர முடியாது என்பதே அவர்கள் கூறும் கருத்து ஆகும். மேலும் நாம் விவிலியத்தின் உள்ள குறிப்பின் படி இயேசுவும் ஆவியானவரும் ஒருவரே என்றே அறிந்தும் இருக்கின்றோம் (அது சரி மூஒருமைக் கோட்பாடு என்றால் ஒரே இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றார் என்று தானே பொருள்)

"கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு." கொரிந்தியர் II 3:17

எனவே பரிசுத்த ஆவியாய் இயேசு உயிர்த்தெழுந்தப் பின்னர் வந்தது/வருவது தான் இரண்டாம் வருகை. அவ்வருகை நிகழ்ந்து முடிந்து விட்டது. இறைவன் பரிசுத்த ஆவியாக உலகிற்கு வந்த பொழுது இயேசுவின் சீடர்களுள் யூதாசு மரணம் அடைந்து இருந்தான். எனவே

" இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." - மத்தேயு 16:28

 என்ற வசனம் உண்மையாகும்படி யுதாசினைத் தவிர மற்றவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் பொழுதே பரிசுத்த ஆவியாக இறைவன் வந்து விட்டார்.

இந்நிலையில் தான் நாம் இன்றைய கிருத்துவர்கள் இயேசுவின்இரண்டாம் வருகையினை சரியாகப் புரிந்துக் கொள்ளாது 'இயேசு வருகின்றார்' என்றுக் கூறிக் கொண்டு இருக்கின்றனரோ என்றே எண்ண வேண்டி வருகின்றது.

ஆனால் இங்கே வேறுக் கேள்விகளும் எழலாம்...நாம் மேலே கண்டுள்ள கருத்துக்களும் அவற்றின் விளக்கங்களும் எவ்வாறு சரியானதொன்றாக இருக்கும் என்ற சந்தேகங்களும் எழலாம்... அவ்வாறு இருக்க நாம் அக்கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில்கள் வேறு இடத்தில் இருக்கின்றதா என்றே காண வேண்டி இருக்கின்றது.

அவ்வாறு தேடினோம் என்றால் 'அக்கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விடைகள் இருக்கின்றன' என்றே பதில் நமக்கு கிட்டுகின்றது. அத்தகைய பதில்களை நமக்குத் தருபவை ... சைவ சித்தாந்த சாத்திரங்கள்.

ஆம்...சைவ சித்தாந்த சாத்திரங்களில் தான் தெளிவான விடைகள் ஒளிந்திருக்கின்றன. விவிலியத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள விடயங்களுக்கு சைவ சித்தாந்த சாத்திரங்களில் விரிவான விளக்கங்களும் விடையும் இருக்கின்றதா?... ஏன் அவ்வாறு இருக்கின்றது? போன்றக் கேள்விகள் இங்கே நம்முள் இயல்பாகவே தோன்றலாம்...அக்கேள்விகளுக்கே நாம் இப்பொழுது விடையினைக் காண வேண்டி இருக்கின்றது.

//உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6

என்று புதிய ஏற்பாட்டில் வரும் கருத்தினைப் போன்றே,

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. – திருமந்திரம்


உடம்பினைப் பெற்ற பயன் ஆவது எல்லாம்
உடம்பினில் உத்தமன் காண். - ஔவையார்

தமிழ் இலக்கியங்களிலும் சரி சைவ சித்தாந்த சாத்திரங்களிலும் சரி, கருத்து வருகின்றதே அவற்றின் பொருள் யாதாக இருக்கலாம்?

அறிய முயல்வோம்....!!!

தொடரும்...!!!

பின்குறிப்பு:

1) இத் தொடர் ஒரு தேடல் முயற்சியே...மாற்றுக் கருத்துகளும் விவாதங்களும் வரவேற்கப்படுகின்றன.

2) (இதற்கு முந்தைய பகுதிகளைக் காண இச் சுட்டியினை சொடுக்கவும் - சமயங்கள்-முகப்பு)

3) நான் அறிந்த அறிஞர்களின் கருத்தினை நான் அறிந்துக் கொண்ட வண்ணம் இங்கே இட்டு உள்ளேன். அவ்வளவே.

5 கருத்துகள்:

nallthor muyarchi..thodarattum..

//இந்நிலையில் தான் நாம் இன்றைய கிருத்துவர்கள் இயேசுவின்இரண்டாம் வருகையினை சரியாகப் புரிந்துக் கொள்ளாது 'இயேசு வருகின்றார்' என்றுக் கூறிக் கொண்டு இருக்கின்றனரோ என்றே எண்ண வேண்டி வருகின்றது.//
நீங்கள்தான் சரியாக புரிந்துகொள்ளவில்லை. இரண்டாவது வருகையைப்பற்றி புதிய ஏற்பாட்டில் தெளிவாக சொல்லப்படுள்ளது. எதற்கும் இன்னொரு முறை வாசித்துப் பாருங்கள்

@Robin,

நண்பருக்கு வணக்கங்கள்...!!!நான் எடுத்துக்காட்டியுள்ள வசனங்களும் புதிய எற்பாட்டினில் வருபவைகளே என்றே எண்ணுகின்றேன்...!!! இங்கே நாம் கண்டுள்ள விளக்கம் தவறெனில், யாது சரியான விளக்கம் என்றும், அவ்வசனங்களுக்குரிய சரியான பொருள் யாதென்றும் தாங்கள் கூறினால் நலமாக இருக்கும்...!!!மேலும் விவிலியத்தினைக் குறித்து சில வினாக்களும் இத்தொடரினில் எழுப்பப்பட்டு இருக்கின்றன... அதற்கும் தாங்கள் விடையினைக் கூறினால் மிக்க நலமாக இருக்கும்...நன்றிகள்...!!!

வணக்கம் ஐயா!!! உங்கள் கூற்றுப்படி இயேசுவின் இரண்டாம் வருகை முடிந்து விட்டது என்பதுதானே? இரண்டாம் வருகை முடிந்து விட்டால் கீழே உள்ள வசனங்கள் எல்லாம் மூன்றாம் வருகைக்குரிய வசனங்களா? தயவு செய்து இதில் எது உண்மை என்பதை கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்.

மத்தேயு 24:37நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.38எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும்,39ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.

மத்தேயு 24:34இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 35வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. 36அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.

மத்தேயு 26:29 இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ‘என்றார்.

மாற்கு 13:17அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ!
18நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலே சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
19ஏனெனில் தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும்.
24அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்.
25வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும்.
26அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
27அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்.

மாற்கு 14: 62அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார்.

இன்னும் நிறைய வசனங்கள் உள்ளன. இவை எல்லாம் மூன்றாம் வருகையில் நடக்க வேண்டியவையா? இல்லை இரண்டாம் வருகையில் நடந்து முடிந்து விட்டதா?

@Venkat Raja,

இரண்டாம் வருகை என்றால் என்ன என்பதனைப் பற்றிய பதிவுத் தொடரே இது நண்பரே...உங்களின் கேள்விகளுக்கு விடையினைக் வரும் பதிவுகளில் கண்டிப்பாகக் காணுவோம்...!!! இருந்தும் உங்களின் சிந்தனைக்கு சிறு விடயத்தினை இங்கே கூற விரும்புகின்றேன்...

இரண்டாம் வருகை என்பது 'ஒரு மனிதனுள் மாயையினால் இறைவனை அறியாது இருக்கும் ஆன்மாவிற்கு அதன் உண்மை நிலையை உணர்த்தி, ஆன்மாவினை இறைவனை உணர வைக்கும் செயலே ஆகும்'...அதாவது அறியாமையில் இருக்கும் ஆன்மாவினை விடுவிக்க வரும் இறைவனின் வருகையே இரண்டாம் வருகை எனப்படும்.

ஆன்மாவானது மாயையில் கட்டுண்டுக் கிடக்கும் நிலையான மனிதப் பிறப்பில் இருக்கும் மனிதனுக்கு, இறைவன் மாயையினை நீக்கி அவனை தன் பால் ஆட்கொள்வதே இரண்டாம் வருகை.

முதல் பிறப்பு - மனிதப் பிறப்பு.
இறைவன் உணர்த்தியப் பின் வரும் பிறப்பு - ஆன்மீகப் பிறப்பு.

இதற்கும் இன்று சிலர் தங்களை இருப்பிறப்பாளர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்வதற்கும் தொடர்பு இருக்கின்றது... அதனைப் பற்றியும் விரிவாகப் பார்போம் நண்பரே!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி