உணவு.Inc : (Food.Inc)

"கடந்த 10000 வருடங்களில் நம்முடைய உணவுப் பழக்கங்களில் நிகழ்ந்த மாற்றங்களை விட கடந்த 50 ஆண்டுகளில் மிகுந்த மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. இன்று காலங்கள் பாராது அனைத்து வகைப் பழங்களும் சரி காய்கறிகளும் சரி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கின்றன. எலும்பில்லாத இறைச்சி உங்களை எதிர்பார்த்து பல் பொருள் அங்காடிகளில் காத்துக் கொண்டு இருக்கின்றது.

பல்வேறு நிறுவனங்கள் அவற்றின் உணவுத் தயாரிப்பினை நீங்கள் வாங்குவதற்காக வரிசைப்படுத்தி வைத்திருக்கின்றன. அவைகளுக்கு நீங்கள் அப்பொருட்களை வாங்க வேண்டும்..தொடர்ந்து வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவே.

ஆனால் அந்த நிறுவனங்கள் நீங்கள் உண்ணும் உணவினைப் பற்றிய உண்மைகளை நீங்கள் அறிந்துக் கொள்வதை விரும்புவதில்லை...ஏனெனில் உண்மையினை நீங்கள் அறிந்தீர்கள் என்றால் அந்த உணவினை உண்பதற்கு நீங்கள் விரும்பாது போகலாம். அதனால் அவைகள் உங்களிடம் இருந்து உண்மையினை மறைப்பதை முக்கியமான ஒரு விடயமாகக் கொண்டே இயங்குகின்றன.

இந்தப் படம் அவ்வாறு மறைக்கப்பட்ட உண்மைகளைப் பற்றியே...பெரு நிறுவனங்கள் உங்களிடம் இருந்து மறைப்பவைகளைப் பற்றியே இந்தப் படம்" என்றுக் கூறியே தொடங்கும் இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் அதிர்ச்சி அடையத் தான் வைக்கின்றன.

விதைகளில் இருந்துத் தொடங்கி பல்பொருள் அங்காடிகளில் விற்பனைக்காக வரும் நிலை வரை உணவினை சில பெரு நிறுவனங்கள் எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன, மக்களின் உரிமைகளை அவைகள் எவ்வாறு பறிக்கின்றன, அந்த நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கங்கள் எவ்வாறு அந்த நிறுவனங்களுக்குச் சார்பாக செயல்படுகின்றன, விவசாயிகளை அந்த பெரு நிறுவனங்கள் எவ்வாறு எல்லாம் பாடு படுத்துகின்றன என்பதனைப் பற்றி எல்லாம் விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறும் இந்தப் படம் உணவு அரசியலைப் பற்றிப் புரிந்துக் கொள்ள எண்ணுவோர் மற்றும் நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்கள் எங்கே சென்றுக் கொண்டு இருக்கின்றன என்பதனைப் பற்றி அறிந்துக் கொள்ள விரும்புவோர் ஆகியயோர் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு படம்.

இப்பொழுது இந்த படம் கூறும் சில முக்கியமான விடயங்களைப் பார்த்து விடுவோம்... (இந்தப் படம் அமெரிக்காவில் உள்ள நிலையினைப் பற்றி எடுக்கப்பட்டதால் நம்முடைய நாட்டில் நிகழும் முறைக்கு சற்று மாறாகத் தெரியும்....ஆனால் நம்முடைய முறைகளையும் அமெரிக்காவினைப் போல் மாற்ற துடித்துக் கொண்டு இருக்கும் அரசை வைத்துக் கொண்டு இருப்பதால் நாமும் இவற்றை அறியத்தான் வேண்டி இருக்கின்றது)

1 ) நாம் எண்ணுவதனைப் போல் நம்முடைய உணவு இன்றுத் தோட்டங்களில் இருந்தோ அல்லது வயல்களில் இருந்தோ பெறப்படுவதில்லை...மாறாக தொழிற்சாலைகளில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன.

2 ) இன்று பல் பொருள் அங்காடிகளில் வரிசை வரிசையாக அடுக்கப்பட்டு இருக்கும் உணவுப் பொருட்கள் பலவற்றிலும், ஒன்று சோளம் முக்கியமான கருப்பொருளாக இருக்கும் அல்லது சோயா பீன் முக்கியமான கருப்பொருளாக இருக்கும். பெரும்பாலும் அவை இரண்டுமே முக்கியமான கருப்பொருள்களாக இணைந்தே இருக்கும். காரணம் அந்த இரண்டுப் பொருட்களை எளிதாக வேதியல் மாற்றங்கள் மூலம் பல்வேறுப் பொருள்களாக மாற்றி விடலாம். அதனால் தான் கிட்டத்தட்ட அமெரிக்காவின் 30 சதவீத நிலப்பரப்பில் சோளம் பயரிடப்படுகின்றது. அரசாங்கமும் சோளத்திற்கு என்று மானியமும் அதிகமாக வழங்குகின்றது. அதனால் தான் சோளத்தின் விலை அதன் தயாரிப்பு விலையினை விட மிகவும் கம்மியாக இருக்கின்றது. அதனால் தான் சோளத்தினை முக்கிய கருப்பொருளாக கொண்ட பொருட்களின் விலைகள் கம்மியாக இருக்கின்றன. இந்த நடைமுறையால் கொள்ளை இலாபம் அடைவது சில தனியார் நிறுவனங்களே, அதனால் தான் அந்த நிறுவனங்களுக்கு சாதகமான அமெரிக்க அரசு சோளத்திற்கு மானியம் அதிகமாக வழங்கி வருகின்றது.

3) தனியார் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு சாதகமாக இருப்பதற்கு காரணம், அந்த நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்களே பின்னர் அரசில் முக்கிய பொறுப்புகளுக்கு சென்று அமெரிக்க அரசினை கைப்பற்றியது தான். அதாவது நிறுவனங்களே மறைமுகமாக அரசினை கட்டுப்படுத்துகின்றன. (இதனைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள ஜான் பெர்கின்ஸ் அவர்கள் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்றப் புத்தகத்தினைப் படிக்கவும்)

4 ) சோளத்தின் உற்பத்தி அதிகமாக இருப்பதும் அதற்கு அரசு மானியம் அளிப்பதும் சோளத்தினைக் பெருவாரியாக கொண்டு இருக்கும் பொருட்களின் விலையை குறைக்கின்றன. அதனால் தான் சோளத்தினைக் கொண்டுள்ள பர்கரின் விலையினை விட பழங்களின் விலை அதிகமாக இருக்கின்றது. 'எங்களிடம் ஒரு டாலர் இருக்கின்றது...அதற்கு இரு பர்கர்கள் கிடைக்கும் ஆனால் ஒரு பழம் கூட கிடைக்காது...இந்நிலையில் நாங்கள் விலைக் குறைந்த உணவினைத் தானே உண்ணுவோம்...அப்படி சாப்பிட்டால் தானே எங்கள் குடும்பம் முழுவதும் உண்ண முடியும்' என்றே கூறுகின்றனர் இத் திரைப்படத்தில் வரும் ஒரு குடும்பத்தினர்.

5 ) "நாங்கள் இங்கே கோழிகளை உருவாக்கவில்லை...கோழிகளைப் போன்ற உணவினைத் தான் நாங்கள் உருவாக்குகின்றோம்.." என்று ஒரு உணவுத் தொழிற்சாலையின் உறுப்பினர் கூறுகின்றார். மேலும் மக்கள் அனைவரும் கொழுத்த கோழிகளை விரும்புவதனால் கோழிகளுக்கும் சோளத்தினைப் போட்டே வளர்கின்றனர். சோளம் உயிர்களை கொழுக்க வைக்கின்றது.

6) அதே முறையினைத் தான் பசுக்களிலும் பயன்படுத்துகின்றனர். சோளத்தைச் சாப்பிடும் பசுக்கள் விரைவில் கொழுக்கின்றன...ஆனால் அதனுடன் மனிதர்களுக்கு தீங்கினை விளைவிக்கும் ஒரு புது பாக்டீரியாவையும் உருவாக்கத் தான் செய்கின்றன.

7 ) உணவின் மேல் தன்னுடைய செல்வாக்கினை நிறுவ முயன்றுக் கொண்டு இருக்கும் பெரும் நிறுவனங்கள் சாதாரண விவசாயிகள் மீது தொழில்நூட்பம் என்ற ஒன்றை திணித்து அவர்களைக் கடனாளியாக ஆக்கி எவ்வாறு உணவு உற்பத்தியின் மீது தன்னுடைய ஆதிக்கத்தினை நிலை நிறுத்திக் கொள்கின்றன என்பதனை பல்வேறு எடுத்துக்காட்டுக்களின் மூலம் இப்படம் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

இன்னும் பல பல மிக முக்கியமான விடயங்கள் இப்படம் முழுவதுமே கூறப்பட்டு உள்ளன. சமூக சிந்தனை உள்ள அனைவரும் நிச்சயம் காண வேண்டியதொரு படம் இது. காண மட்டும் அல்ல, கண்ட பின் மற்ற நண்பர்களுக்கு பகிர்வதற்கும் ஏற்றதொரு படம்.

சில நண்பர்களுக்கு இங்கே ஒரு கேள்வி எழலாம்..."சும்மா தொழில்நூட்பத்தை குறைகூறுவதே இவர்களுக்கு பொழப்பா போச்சி...வேகமாக வளர்ந்துக் கொண்டு இருக்கும் மக்கள் தொகைக்கு உணவு வேணும்னா உணவுல தரத்தை எதிர்பார்த்தா ஆகுமா?" என்றக் கேள்வித் தான் அது. இக்கேள்விக்கு விடையாய் ஒரு சிறு சம்பவத்தினை கூற விரும்புகின்றேன்.

நான் கைதராபாடில் இருந்தத் தருணம் நண்பர்களுடன் ஒரு இயற்கை விவசாயியினை காணச் சென்று இருந்தேன். எங்களுக்கு தெலுகு தெரியாது என்பதனை அறிந்த அவர் ஆச்சர்யமாய் தமிழிலேயே பேசத் தொடங்கினார். அவருடன் நீண்ட நேரம் உணவு, விவசாயம் போன்றத் தலைப்புகளில் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது இதே கேள்வியினை அவரிடம் கேட்டோம். அதற்கு அவர் கூறிய பதில்...

"பொதுவா ஒரு மூட்டை விதைய போட்டா இருவத்தஞ்சி இல்லைனா முப்பது மூட்டை அரிசி கிடைக்கும்...ஆனால் இயற்கை விவசாயத்தினை முறைப்படி செய்தால் 90 மூட்டை வரை எடுக்கலாம்...நான் எடுத்து இருக்கேன்...அதற்காக அரசிடம் இருந்து பட்டமும் வாங்கி இருக்கேன்...அமெரிக்க சனாதிபதி என்னுடைய தோட்டத்துக்கு வந்து பார்த்துட்டு பாராட்டிட்டு போயிருக்காரு. ஆனா இவ்வளவு நடந்தும் நம்முடைய அரசு இத மக்கள்கிட்ட கொண்டு போக மாட்டேங்குது...காரணம் இதக் கொண்டு போனா பூச்சிக் கொல்லி நிறுவனங்க, உர நிறுவனங்க எல்லாம் அடிப்பட்டுப் போகும்...வெளிநாட்டுக் காரனுக்கு காசு கிடைக்காது...அதனால இத மக்கள் கிட்ட கொண்டு போக மாட்டேங்கிறாங்க...நான் விவசாயிங்க என்னால விவசாயம் தான் பண்ண முடியும்...அதுல ஆராய்ச்சி பண்ண முடியும்...நீங்க தான கணினி, இணையம் அப்படி இப்படின்னு பல பேர்கிட்ட பேசுறீங்க...நீங்க இந்த செய்திய எல்லாம் மக்கள் கிட்ட பரப்பலாமே...செத்து போன மனுசனுக்குத் தான் உசுரக் கொடுக்க முடியாது...ஆனா செத்துப் போன மண்ணுக்கு உசுரக் கொடுக்க முடியும்...இளைஞர்கள் முன்னாடி வந்தா நிச்சயம் நம்ம மண்ணுக்கு உயிர் கொடுக்கலாம்."

அவர் பெயர் நாக இரத்தின நாயுடு...அவரின் தோட்டத்தினைப் பற்றி ஒரு இணையமே ஆரம்பித்து இருக்கின்றார் (http://www.srinaidu.com/). நம்மாழ்வாரின் நண்பர் என்றே நினைக்கின்றேன். சரி அது நமக்கு முக்கியமில்லை.

உலகம் இது வரைக் கண்டிராத அதிகாரம் படைத்த மனிதர்கள் நம்முடைய உணவினைக் கட்டுப்படுத்த முயல்கின்றனர்...அவர்களுக்கு நம்முடைய பதில் என்ன என்பதே முக்கியம்.

நம் உணவு நம் உரிமை!!!

2 கருத்துகள்:

Super Maple, Last week I wanted to talk to you abt this food culture, and wanted you to write something on this issue. This culture is expanding to Tamilnadu and did u know, First this corporates targetted Rich Indian Fools and now they are concentrating on Middle Class people. Did u see the KFC ad : 25 rupee combo!!!

Super maple, I wated to talk to you on this issue last week, and also wanted you write something on this issue, Did u See the KFC Ad : 25 Rs Combo!! First they targetted Rich Indian Fools, now they are concentrating on Middle Class People, as Rich are becoming aware.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு