1) சிங்களவர்கள் இலங்கையின் பூர்வீகக் குடியினரா?

இல்லை. சிங்களவர்கள் என்பவர்கள் கி.மு நான்காம் நூற்றாண்டு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்த கலிங்கத்துப் பகுதியில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டு இலங்கைக்கு பிழைத்துப் போன இளவரசன் விஜய சிங்கனின் வம்சாவழியினரே ஆவர்.

அவர்கள் இலங்கைக்குப் போவதற்கு முன்னரே அங்கே தமிழர்கள் வாழ்ந்துக் கொண்டு தான் வந்திருக்கின்றனர். இதனை விளக்கும் வண்ணம் இலங்கை அரசாங்கமே ஒரு தபால் தலையினை வெளியிட்டு உள்ளது.2) அப்படி என்றால் அங்கே தமிழர்களும் வசித்து வந்தார்கள் என்றுக் கூறுகின்றீர்களா?

ஆம். கி.பி 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் இலங்கை முழுவதையும் பிடிக்கும் வரை இலங்கையில் தமிழர்கள் தனியாக ஆண்டுக் கொண்டு இருந்தனர்...சிங்களவர்கள் தனியாக ஆண்டுக் கொண்டு இருந்தனர். இலங்கை என்றுமே ஒரே நாடாக இருந்தது கிடையாது. பல்வேறு நாடுகள் இலங்கையில் இருந்து வந்துக் கொண்டு தான் இருந்தன.3) இலங்கை ஒரே நாடாக இருந்தது கிடையாது என்றுக் கூறுகின்றீர்களே...ஆனால் இன்று அது ஒரே நாடாகத் தானே இருக்கின்றது. இது எவ்வாறு எப்பொழுது நிகழ்ந்தது?

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இலங்கை ஒரே நாடாக மாற்றப்படுகின்றது. இது நடக்கும் காலம் 1831 ஆம் ஆண்டு. தமிழர்கள் ஆண்ட பகுதியினையும், சிங்களவர்கள் ஆண்ட பகுதியினையும் ஒன்றாக இணைத்து ஒரே நாடாக மாற்றியவர்கள் ஆங்கிலேயர்களே.

4) தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடியினர் என்றுக் கூறுகின்றீர்கள். ஆனால் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பிழைக்கச் சென்றவர்கள் தான் தமிழர்கள் என்றும் அவ்வாறு பிழைக்கச் சென்றவர்கள் எவ்வாறு தனி நாடுக் கோரலாம் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றனவே...அது ஏன்?

இலங்கையில் இன்று இரு வகையான தமிழர்கள் இருக்கின்றனர். ஒரு வகையினர் ஈழத்தினையே பூர்வீகமாகக் கொண்டத் தமிழர்கள். மற்றொரு வகையினர் இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்களால் இலங்கையின் மலைத் தோட்டங்களின் பணிப்புரிய அழைத்துச் செல்லப்பட்ட இந்தியத் தமிழர்கள். இவர்கள் இருவருக்கும் வேறுபாடுகள் உண்டு.

அந்த வேறுபாட்டினை அறியாது தான் இலங்கையில் இருக்கும் அனைத்து தமிழர்களும் இந்தியாவில் இருந்துச் சென்ற தமிழர்கள் என்ற தவறானக் கருத்து இங்கே நிலவிக் கொண்டு இருக்கின்றது.

மேலும் 1964 ஆம் ஆண்டு இந்தியாவுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 7 இலட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியாவிற்கு திரும்ப அனுப்பப்பட்டும் விட்டனர்.

5) சரிங்க...தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடியாகவே இருக்கட்டும்...ஆனால் அனைவரும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்று கருதாமல் தனி நாடுக் கோருவது சரியா?

தனி நாடு என்றக் கோரிக்கை திடீரென்று எழுந்த ஒன்று அல்ல. மேலும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து வாழவே எண்ணினர். ஆனால் காலங்கள் செல்ல செல்ல சிங்களவர்களின் செயல்களால் தமிழர்கள் தாங்கள் தங்களது உரிமைகளோடு வாழ்வதற்கு தனி நாடினைப் பெறுவதனைத் தவிர வேறு வழி இல்லை என்பதனை உணர்ந்தே 'தனி ஈழம்' என்றக் கோரிக்கையை முன் வைக்க ஆரம்பித்தனர்.

இலங்கை சுதந்திரம் பெற்றது 1948 ஆம் ஆண்டில். தமிழர்கள் தனி ஈழம் என்றக் கோரிக்கையினை முன் வைக்க ஆரம்பித்தது 1973 ஆம் ஆண்டில் இருந்து தான். அதாவது சுமார் 25 ஆண்டுகள் அமைதியாக ஒன்றாக வாழ முயற்சிகள் செய்து, அவைகள் அனைத்தும் பலன் தராது சென்ற பின்னர் தான் தனி நாடு வேண்டும் என்றக் கோரிக்கையை தமிழர்கள் அங்கே முன் வைக்கின்றனர்.

6) அதற்காக ஆயுதப் போராட்டத்தினை தான் முன்னெடுக்க வேண்டுமா?

ஈழத் தமிழர்கள் கிட்டத்தட்ட 30 வருடங்கள் அமைதியான காந்திய முறையில் தான் தங்களது கருத்துக்களையும் எதிர்ப்புக்களையும் தெரிவித்துக் கொண்டு வந்தனர். தந்தை செல்வா என்ற ஒரு காந்தியவாதியின் தலைமையில் தான் 30 ஆண்டுகளாக தமிழர்கள் போராடினார்கள்.

ஆனால் அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்தும், தமிழர்களின் மேல் வன்முறையினை பயன்படுத்தியும் சிங்கள அரச தொடர்ந்து தமிழர்களை ஒடுக்கியதைக் கண்ட இளைஞர்கள் சிலர் தான் பின்னர் ஆயுதப் போராட்டங்களில் இறங்கினர்.

எனவே தமிழர் போராட்டங்கள் என்பது ஆரம்பத்தினில் இருந்தே வன்முறையினை அடிப்படையாகக் கொண்டு இருந்த ஒரு போராட்டம் அல்ல...காந்திய வழியிலான போராட்டம் நீண்ட காலங்களுக்கு பின்னரே ஆயுதப் போராட்டமாக மாறி இருக்கின்றது.

காந்தி வாழ்ந்த மண்ணில் தான் பகத் சிங்கும் சுபாஷ் சந்திர போசும் செம்பகராமன் பிள்ளையும் தோன்றி இருக்கின்றார்கள்.

7) தனி ஈழம் தான் தீர்வு என்கின்றீர்களா?

ஒன்றரை இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். பிஞ்சுகள் என்றுக் கூட பார்க்காது பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். சரணடைந்த மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். போர் முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு பின்னரும் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல வழி இல்லாமல் அகதிகளாக தமிழர்கள் அலைந்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களின் இடங்களின் சிங்களர்கள் இடம் பெயர்ந்து நாட்கள் பல ஓடி விட்டன.

இன்றும் சிங்களப் படைகளில் பெரும்பான்மையானவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே நிலைப் பெற்று இருக்கின்றன. சுதந்திரம் இல்லாத அடிமைகளாகவே தமிழர்கள் அங்கே உலாவிக் கொண்டு இருக்கின்றனர்.

இத்தனை இழப்புகளுக்கு பின்னரும் சிங்களவர்களோடு சேர்ந்து தமிழர்கள் வாழ முடியுமா இல்லை வாழ்ந்தாகத் தான் வேண்டுமா?

ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு சிங்களவர்களும் தமிழர்களும் தனித் தனி நாடுகளைக் கொண்டு ஆண்டு வந்தவர்கள் தானே. அப்படி இருக்க தமிழர்கள் ஆண்ட பகுதியை தமிழர்களே மீண்டும் பெறுவது என்பது நியாயமான கோரிக்கை தானே.

மாபெரும் இழப்புகள் இலங்கையில் நம் இனம் கண்டிருக்கின்றது. ஒரு இனப் படுகொலையே அங்கே நிகழ்த்தப்பட்டு இருக்கின்றது. இதில் இருந்து மீளவும் சுய மரியாதையுடன் சுதந்திரமாக தமிழர்கள் வாழவும் அவர்களுக்கு அவர்களின் உரிமை வேண்டும்.

அவர்களுக்கு உரிமை வேண்டும் என்றால் தனி ஈழம் மலர வேண்டும்.

அதற்கு நமது குரல்கள் வேண்டும்...!!!

தமிழர்களின் தாகம்... தனி ஈழத் தாயகம்...!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி