ஒரு கேள்வி...!!!

ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர் இங்கே இந்தியா என்று ஒரே ஒரு தேசம் இருந்ததா அல்லது பல்வேறு தேசங்கள் இன்று இந்தியா என்றிருக்கும் நிலப்பரப்பில் இருந்துக் கொண்டு வந்தனவா?

வடக்கே சிலரின் ஆட்சி...தெற்கே வேறு சிலரின் ஆட்சி...கிழக்கிலும் சரி மேற்கிலும் சரி பல்வேறு மன்னர்கள்/இனங்களின் ஆட்சி என்று தானே இருந்தது. அவை அனைத்தையும் வென்ற பின்னர், அத்தேசங்கள் அனைத்தையும் இணைத்து ஐரோப்பியர்கள் உருவாக்கியது தானே இன்றிருக்கும் ஒன்றிணைந்த இந்தியா. நிற்க

அதே வரலாறு தான் இன்றிருக்கும் இலங்கைக்கும் இருக்கின்றது. அந்த வரலாற்றினைக் காண நாம் இப்பொழுது கி.பி 16 ஆம் நூற்றாண்டிற்கு செல்ல வேண்டி இருக்கின்றது. காரணம் அக்காலத்தில் தான் ஐரோப்பியர்கள் இந்தியாவினைத் தேடி வர ஆரம்பிக்கின்றனர்.

அவ்வாறு இந்தியாவினைத் தேடிக் கிளம்பிய ஐரோப்பியர்களுள் முதன் முதலாக இந்தியாவினை வந்தடைந்தது போர்துகேசியர்கள் என்றும் அவர்கள் இன்றைக்கு இந்தியாவின் தென் மேற்குப் பகுதியான கேரளத்தில் வந்திறங்கினர் என்றும் நாம் நம்முடைய வரலாற்றுப் பாடங்களில் படித்து இருக்கின்றோம்.

அதே போர்துகேசியர்கள் தான் இலங்கையிலும் முதன் முதலாக காலினை வைக்கின்றனர். அதுவும் குறிப்பாக மேற்கு இலங்கையிலேயே அவர்கள் காலினை ஊன்றுகின்றார்கள். (இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி அவர்கள் மேற்குப் பகுதியிலேயே வந்திறங்கியதற்கு காரணம் அவர்கள் பயணித்த வழித்தடம் அவ்வாறு இருந்தது தான்... தென் ஆப்பிரிக்காவினை சுற்றிக் கொண்டு கடலில் அவர்கள் பயணித்த வழி அவர்களை இந்தியாவின் மேற்கில் தான் கொண்டு வந்து சேர்த்தது...சரி இது இருக்கட்டும்).

இலங்கையில் இறங்கிய போர்துகீசியர்கள் பார்கின்றனர். சிறியத் தீவு தான்...ஆனால் பல்வேறு மக்கள் இருக்கின்றனர்...பல்வேறு ஆட்சிகள் நடக்கின்றன...மக்கள்களுக்குள் பழக்கவழக்கங்கள், மொழி, வழிபாட்டு முறைகள் போன்றனவைகளில் மாற்றங்கள் பல காணப்படுகின்றன. அனைத்தையும் குறித்துக் கொள்கின்றனர். பின்னர் அது ஒருவேளை அவர்களுக்கு பயன்படலாம்...ஒருவேளை அம்மக்களை அவர்கள் ஆள வேண்டி இருந்தால்...நிச்சயமாக அந்த விடயங்கள் அனைத்தும் அவர்களுக்குத் தேவைப்படும் தானே...!!!

போர்துகீசியர்கள் இலங்கையில் இறங்கியப் பொழுது இலங்கையில் பல்வேறு ஆட்சிகள் நடந்துக் கொண்டு இருக்கின்றன.

மேற்கில் - கோட்டை (Kottai) அரசு (சிங்களம்)
தெற்கில் - கண்டி (Kandi) அரசு (சிங்களம்)
கிழக்கில்/வடக்கில் - யாழ்ப்பாண அரசு (தமிழ்)
மேலும் 'மூர்கள்' எனப்படும் அரேபியர்களும் சிறிய அளவு இருக்கின்றனர். நிற்க

மேற்கில் வந்திறங்கிய போர்துகீசியர்களை அன்புடன் வரவேற்றது கோட்டை அரசு. "வணிகம் செய்ய விரும்புகின்றீர்களா...நல்லது நல்லது...தாராளமாகச் செய்யலாமே.." என்றவாறே போர்துகீசியர்களுக்கு தாராளமான வரவேற்பினை வழங்குகின்றார் அன்றைய கோட்டை அரசர்.

போர்துகீசியர்கள் பார்கின்றனர்...'நல்ல அரசராகத் தோன்றுகின்றது...ஆனால் பாவம் வாரிசு இல்லை...அதனால் என்ன, அரச பதவிக்காக பல ஓநாய்கள் காத்துக் கொண்டு இருக்கின்றன...நல்லது...மிகவும் நல்லது...ஓநாய்கள் என்றைக்குமே நமக்கு நட்பு மிருகங்கள் தானே...' புன்னகைக்கின்றனர்... "தங்களின் ஆதரவிற்கு நன்றி அரசே...நாங்கள் வேண்டியவனவற்றை செய்ய ஆரம்பிக்கின்றோம்..." என்றவாறே விடைப் பெற்றுக் கொள்கின்றனர்.

விரைவில் கோட்டை அரசில் நல்ல செல்வாக்கினைப்  பெற்று விடுகின்றனர் போர்துகீசியர்கள்...ஆனால் செல்வாக்கு மட்டும் போதுமா நமக்குத் தேவை ஆட்சி என்ற வண்ணமே அவர்கள் செயலாற்ற ஆரம்பிக்க விரைவில் கோட்டை அரசு போர்துகீசியர்களின் கைகளுக்கு வருகின்றது. அதனை எதிர்த்து கிளர்ச்சி செய்வோர் தோற்கடிக்கப்படுகின்றனர். கோட்டை... போர்துகீசியர்களின் கோட்டை ஆகின்றது.

சரி கோட்டையைப் பிடித்தாயிற்று...அடுத்து என்ன என்று அவர்கள் பார்க்கும் பொழுது தான் எதிர்த்து நிற்கின்றன கண்டியும் யாழ்ப்பாண அரசும்.

போர்துகீசியர்கள் சிந்திக்கின்றனர்... 'கண்டி தற்பொழுது வலுவாக இருக்கின்றது...அதனைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்...முதலில் அந்த யாழ்ப்பாண அரசினை ஒரு கை பார்த்து விட்டு வந்து விடலாம்...நாம் மதம் மாற்ற அனுப்பிய நபர்களை கொலை செய்து இருக்கின்றான் யாழ்ப்பாண அரசன் சங்கிலி... மேலும் அவர்களை விட்டு வைத்தால் இந்தியாவில் இருந்து கடல்வழி மார்கமாக உதவியினைப் பெற்றுக் கொண்டு கண்டிக்கும் உதவிக் கொண்டே இருப்பர்....இவை போதாதென்று சில நேரம் ஒலாந்தியரும் அங்கே வந்து சேரும் அபாயமும் இருக்கின்றது. ஏன் வீண் பிரச்சனைகள்...பேசாமல் யாழ்ப்பாண அரசினை பிடித்து விட வேண்டியது தான்.'

போர்துகீசியர்கள் யாழ்ப்பாணத்தின் மீது படை எடுக்கின்றனர். சில வெற்றிகள் சில தோல்விகள் என்று போராடி இறுதியில் யாழ்ப்பாணம் வீழ்கின்றது. அதன் அரசன் இரண்டாம் சங்கிலி கோவாவில் தூக்கில் இடப்படுகின்றான். யாழ்ப்பாணமும் போர்துகீசியரின் செல்வாக்குக்கு உட்படுகின்றது. மிஞ்சி இருப்பது கண்டி மட்டுமே. இது நடந்தது கி.பி 17 ஆம் நூற்றாண்டு.

ஆனால் கண்டிக்கு ஏற்கனவே புரிந்து விட்டது. தனித்து நின்று போரிட்டால் இந்தப் போரினை நாம் நிச்சயம் வெல்ல முடியாது. நமக்குத் தேவை உதவி...அதுவும் எதிரியைப் போன்றே பலம் வாய்ந்த உதவி. அப்பொழுது தான் அங்கே ஒலாந்தியர்கள் வருகின்றனர்.

ஏற்கனவே ஐரோப்பியாவில் போர்துகீசியர்களுக்கும் (Portuguese) ஒலாந்தியர்களுக்கும் (dutch/Holland people) பிரச்சனை நிலவி வந்தது (அங்கே யாருக்குத் தான் யார் கூடத் தான் பிரச்சனை இல்லாமல் இருந்தது)...அப்பிரச்சனை இலங்கையிலும் தொடர ஆரம்பித்தது. சிறிதுக் காலம் நிகழ்ந்தப் போரினில் ஒலாந்தியர்கள் வெற்றிப் பெற இலங்கையில் போர்துகீசியர்களின் செல்வாக்கு ஒரு முடிவிற்கு வந்தது.

ஆனால் போர்துகீசியர்களுக்கு பதிலாக இப்பொழுது அங்கே ஒலாந்தியர்களின் செல்வாக்கு ஓங்கி இருக்கின்றது...இதன் காலம் கி.பி 17 ஆம் நூற்றாண்டு. (போர்கள் என்றால் ஒப்பந்தங்கள் இருக்கும்...துரோகங்கள் இருக்கும்...அரசியல் இருக்கும்...இன்னும் பல பல விடயங்கள் இருக்கும். இவை அனைத்தும் இலங்கையின் வரலாற்றிலும் இருக்கின்றது...ஆனால் நம்முடையப் பயணத்தில் அவை தேவை இல்லை என்பதால் அவற்றைச் சுருக்கமாகக் கண்டுக் கொண்டே சென்றுக் கொண்டு இருக்கின்றோம்.)

கிட்டத்தட்ட 130 வருடங்கள் இலங்கை ஒலாந்தியர்களின் செல்வாக்கிலேயே இருக்கின்றது. ஆனால் பொடியன்களே பயங்கர ஆட்டம் ஆடும் பொழுது அன்றைய பெரிய அண்ணன் சும்மா இருப்பாரா என்ன?

"மிகப்பெரிய இந்தியாவினையையே பிடித்தாயிற்று...பின்னர் ஏன் அதன் காலுக்கு கீழ் இருக்கும் தீவினை மட்டும் விட்டு வைக்க வேண்டும்? சில நேரம் பிரெஞ்ச் வீரர்கள் அதனைக் கைப்பற்றிக் கொண்டால் தேவை இல்லாத தலைவலியே மிஞ்சும்...ஏனப்பா நமக்குத் தலைவலி... விடு அத்தீவையும் தான் பிடித்து விடலாமே...என்னத் தான் குறைந்துப் போய் விடும்...அப்பா...தீவில் யார் இருக்கின்றீர்கள்...ஓ..ஒலாந்தியரா...அண்ணன் வருகின்றேன்...மரியாதையாக வழி விடுகின்றீர்களா...நன்றிகள் ஆயிரம்" என்றவாறே இலங்கைக்குள் நுழைகின்றது இங்கிலாந்து. அக்காலம் கி.பி 18 ஆம் நூற்றாண்டு.

இலங்கையின் இன்றையப் பிரச்சனைகளுக்கு எல்லாம் அடித்தளம் அமைத்து வைத்த ஒரு நூற்றாண்டு...!!!

தொடரும்...!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி