திருக்குறள் என்ற உலகப் பொதுமறை:

திருக்குறளினைப் பற்றியக் கடந்தப் பதிவில் (திருக்குறள்) திருக்குறளில் கிருத்துவின் கருத்துக்கள் அடங்கி உள்ளன என்றுச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர் என்றுக் கூறி இருந்தேன். எளிதில் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததும் நம்ப முடியாததுமான ஒருக் கருத்து தான் அது....சந்தேகமே இல்லை. அந்நிலையில் அக்கூற்றின் நம்பகத்தன்மையினை அறிய நாம் சற்று ஆராயத் தான் வேண்டி இருக்கின்றது....கேள்விகளும் எழுப்பத் தான் வேண்டியிருகின்றது. அதேப் போலே நண்பர்களும் சில கேள்விகளை எழுப்பி இருந்தனர்...அக்கேள்விகளுக்கு நாம் விடையினைத் தேடும் முன் நாம் முந்தையப் பதிவில் கண்ட விடயங்களை மேலோட்டமாகக் கண்டு விடலாம்.

1) தோமா வந்து வாழ்ந்து மரித்த இடமாக அறியப்படும் மயிலாப்பூரில் இருந்து வள்ளுவர் தோன்றி உள்ளார் என்ற விடயம்.
2) சிறப்பாயிரம் பகுதியில் கடவுள் வாழ்த்துப் பகுதியோடு 'வான் சிறப்பு' மற்றும் 'நீத்தார் பெருமை', 'அறன் வலியுறுத்தல்' போன்ற பகுதிகளை சேர்த்து இருப்பது இறைவன் மூன்று நிலைகளில் விளங்குகின்றான் என்றக் கூற்றினை விளக்கவே அதாவது 'மூ ஒருமைக் கோட்பாடு' என்ற விடயம்.
3) 'வான் சிறப்பு' என்பது மழையைக் குறிக்காது கடவுளின் அருள் சக்தியைக் குறிக்கும் என்பதும் 'நீத்தார் பெருமை' என்பது துறவு மேற்கொண்டவர்களைக் குறிக்காது 'மண்ணுலகில் மக்களுக்காக வந்து உயிர் நீத்த இறைவனைக்' குறிக்கும் என்ற விடயம்..

ஆகிய விடயங்களைத் தான் இதற்கு முந்தையப் பகுதியில் நாம் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது இதனை நாம் சற்று விரிவாக காண முயற்சிக்கலாம்.

ஐந்தவித்தான்:

வள்ளுவர் எந்த ஒரு வார்த்தையையும் தேவை இன்றி பயன் படுத்தி இருக்கவில்லை என்பதனை நாம் கடந்த பதிவினில் கண்டோம். அந்நிலையில் தான் நாம் ஐந்தவித்தான் என்ற சொல்லினைக் காண வேண்டி இருக்கின்றது. வள்ளுவர் இந்தச் சொல்லினை இரண்டே இரண்டுக் குறள்களில் தான் பயன் படுத்தி இருக்கின்றார்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். - 6 (கடவுள் வாழ்த்து)

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி - 25 (நீத்தார் பெருமை)

இப்பொழுது நமதுக் கேள்வி இறைவனைக் குறிக்க பயன்படுத்திய சொல்லினை ஏன் நீத்தார் பெருமையிலும் வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார் என்பதே? ஆனால் இதற்கு முன்னரே நண்பர்கள் சிலர் வேறு ஒரு கேள்வியினை வைத்து உள்ளனர்... "வள்ளுவர் ஐந்தவித்தான் என்றச் சொல்லின் மூலம் இறைவனைத் தான் குறித்தார் என்று எவ்வாறு கூற இயலும்" என்பதே அந்தக் கேள்வி.

இறைவன் என்பவன் ஐம்புலன்களையும் கடந்தவன்...அவனே அனைத்திற்கும் முதலாக இருப்பவன்...அப்படிப்பட்டவனை ஐந்தவித்தான் என்று கூறுவது எங்ஙனம் பொருந்தும், ஐந்தவித்தான் - ஐம் புலன்களையும் அடக்கியவன் என்றே பொருள் தருவது... இது இவ்வாறு இருக்க எவ்வாறு நாம் ஐந்தவித்தான் என்றச் சொல் இறைவனைக் குறிக்கின்றது என்று கருதலாம்? அது ஒரு மனிதனைத் தானே குறிக்க பயன் படலாம் என்பதே அந்த நண்பர்களின் வாதம். சரியான ஒன்று தானே... முழுமுதலாய் அறியப்படும் இறைவனை ஐம்புலன்களை அடக்கியவன் என்றுக் கூறுவது பொருந்தாதல்லவா...அவ்வாறு இருக்க வள்ளுவர் அங்கே கடவுள் வாழ்த்தில் எதனால் ஐந்தவித்தான் என்றச் சொல்லினை பயன்படுத்தி உள்ளார்? அது சரியானதா? மேலும் ஏன் அதே வார்த்தையை நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தினிலும் பயன் படுத்தி உள்ளார்? காண்போம்.

"இறைவன் மனிதனாக வந்தார்...மனிதர்களுக்காக பலி ஆனார்." - இந்தக் கோட்பாடு சைவ வைணவ சமயத்திலும் சரி கிருத்துவ சமயத்திலும் சரி அடிப்படையாகக் காணப்படுகின்றது.

இறவா இன்பத்து எமை இருத்த வேண்டிப்
பிறவா முதல்வன் பிறந்தான். – போற்றிப்பற்றொடை -69

//அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.// - பிலிப்பியர் 2: 6-7

அத்தத்துவங்களின் மூலம் இறைவன் மனிதனாக உலகிற்கு வந்தான் என்று நாம் அறியப் பெறுகின்றோம். மனிதனாக வந்த இறைவன் ஐம்புலன்களுக்கு உட்பட்டவனாகத் தான் இருந்திருக்க முடியும். இந்த விடயத்தையே நாம் கிருத்துவத்தில் இருந்தும் சைவ வைணவ சமயங்களில் இருந்தும் அறியப் பெறுகின்றோம்.

எனவே இறைவன் மனிதனாக உலகில் வந்தமையைக் குறிக்கவே 'ஐந்தவித்தான்' என்றச் சொல்லினை வள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பகுதியில் பயன்படுத்தி உள்ளார்.

இங்கே நாம் இப்பொழுது காண வேண்டியது அதே சொல்லினை வள்ளுவர் நீத்தார் பெருமையிலும் பயன்படுத்தி உள்ளார். அந்நிலையில் அத்தகைய பயன்பாடு இரு அர்த்தங்களுக்கு வழி வகுக்கும்...

1) நீத்தார் என்பது துறவறம் பூண்டவர்களைக் குறிக்கும் என்றால் ஐந்தவித்தான் என்றச் சொல்லின் மூலம், துறவறம் பூண்டவர்கள் எல்லாம் இறைவனாவார்கள் என்ற அர்த்தம் வரும்...
2) இல்லையெனில் இறைவனே மனிதனாக வந்து ஐம்புலன்களையும் அடக்கி உயிர் நீத்தான் என்ற அர்த்தம் வரும்.

இந்த இரண்டு அர்த்தங்களில் எந்த சமயமும் முதல் அர்த்தத்தினை ஏற்றுக் கொள்ளாது. அது இறைக் கொள்கைக்கு எதிரான கருத்து. அவ்வாறு இருக்கையில் இரண்டாவது அர்த்ததினையே நாம் காண வேண்டி இருக்கின்றது.

மனிதனாக வந்த இறைவன் உயிர் நீத்ததாக சமயங்கள் கூறுகின்றனவா என்றால் ஆம் என்றே விடை நமக்கு கிட்டுகின்றது. எனவே ஐந்தவித்தான் என்ற சொல்லின் மூலம் மனிதனாக வந்த இறைவனையும் அவர் மக்களுக்காக பலி ஆனதையும் திருவள்ளுவர் கூறி இருக்கின்றார் என்றே நாம் காண முடிகின்றது.

அதாவது கடவுள் வாழ்த்தும், நீத்தார் பெருமையும் இறைவனைக் குறித்து எழுதியவையே ஆகும். சரி இருக்கட்டும்... ஆனால் இரண்டிற்கும் இடையில் வான் சிறப்பு என்றொரு அதிகாரம் வருகின்றதே அது ஏன்? என்றொருக் கேள்வி இங்கே எழலாம்...!!!

கடவுள் வாழ்த்தும் இறைவனைப் பற்றியது...நீத்தார் பெருமையும் இறைவனைப் பற்றியது...அவ்வாறு இருக்க வள்ளுவர் ஏன் அவர்களுக்கு இடையில் மழையை சிறப்பித்து இருக்கின்றார்? என்றக் கேள்வி வருவது இயல்பே. ஆனால் இங்கே நாம் காண வேண்டியது வள்ளுவர் மழையைத் தான் சிறப்பித்து இருக்கின்றாரா என்பதே!!!

சென்ற பதிவிலே நாம் மேலோட்டமாகக் கண்டு விட்டோம்... வான் என்பது கடவுளின் சக்தியை குறிக்கும் ஒரு உருவகமே என்று. கிருத்துவத்தில் தூய ஆவி நீர் வடிவிலே உருவகம் செய்யப்பட்டு இருப்பதும்... இங்கே அம்மனும் 'மாரிஅம்மன்' என்று மழை மற்றும் நீரோடு தொடர்புப்படுத்தப்பட்டு இருப்பதும் இங்கே சிந்திக்கத்தக்கது. மேலும் கடவுளின் சக்தியைப் பற்றி நாம் முன்னரே பல விடயங்களைக் கண்டு விட்டதினால் இங்கே அவற்றைக் கூற வேண்டியதில்லை என்றே கருதுகின்றேன்.

எனவே வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் வள்ளுவர் மழையை சிறப்பிக்காது கடவுளின் சக்தியையே சிறப்பித்து உள்ளார் என்றே நாம் அறிகின்றோம்.

இதன் மூலம் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை என்ற மூன்று அதிகாரங்களில் இறைவனையே வள்ளுவர் வாழ்த்தி உள்ளார் என்றும் நாம் அறிந்துக் கொள்ளலாம். பொதுவாக கடவுள் வாழ்த்து மட்டுமே பாயிரத்தில் இருக்கும் ஆனால் இறைவன் மூன்று வடிவங்களில் திகழ்கின்றான் என்பதினால் வள்ளுவர் மூன்று அதிகாரங்களை இறைவனுக்கென்று இயற்றி உள்ளார் என்றே நாம் அறிந்துக் கொள்ள இயல்கின்றது.

இந்த நிலை மூஒருமைக் கோட்பாட்டினை குறிக்கின்றது. அதாவது ஒரே இறைவன் மூன்று நிலைகளிலே இருக்கின்றான் என்ற நிலை.

மேலும்,

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்"

என்று வள்ளுவர் கூறி இருக்கின்றார். அது என்ன பொறிவாயில் ஐந்தவித்தான்? என்றுக் கண்டோம் என்றால்... மனிதனாக வந்த இறைவன் மக்களுக்காக பொறியினில் (கருவியினில்) உயிர் துறந்தார். அப்படிப்பட்ட இறைவன் காட்டிய ஒழுக்க நெறியினில் நின்றார் நீடு வாழ்வார் என்றே பொருள் வருகின்றது.

தொடரும்...!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு