கடந்து வந்த காலத்துல
கண்டு வச்ச கனவுகள
உனக்கெனத்தான் தொகுத்து வைச்சேன்
ஒரு உலகத்தையே படைச்சி வைச்சேன்!!!
 *
மரங்கள் சூழ நீளுமடி
ஒரு ஒத்தை அடிப் பாதையடி…
அதில் நீயும் நானும் நடக்கையிலே
சிரித்தே வழி ஒதுங்குமடி கான மயில் கூட்டமடி!!!
 *
மாலை நேரம் வந்துப்புட்டா
வயலோரம் தென்றலுந்தேன் வீசுமடி….
உன் பேர மெல்ல சொல்லிப்புட்டா
நாணலுந்தேன் கொஞ்சம் நாணுமடி!!!
 *
ஊரெங்கும் நல்ல சனம் நெறஞ்சிருக்கும்
வாயார நம்மையுந்தேன் வாழ்த்தி இருக்கும்…
அங்கே உறவுக்கும் கணக்கு இருந்ததில்ல
மன நிறைவுக்கும் பஞ்சம் என்றுமில்ல…!!!
 *
வண்ண வண்ண பூக்களுந்தேன்
ஊரெங்கும் பூத்திருக்கும்..
பேர் ஒண்ணும் சூடாமலே
சூடாமணி நீ பேர் வைக்கக் காத்திருக்கும்…!!!
 *
ஊருப் பொடுசுகளெல்லாம் ஆட்டம் போட
நதி ஒண்ணும் அங்கிருக்கும்…
ஆத்தோரமா ஆலமரம்
நமக்கெனத்தான் காத்திருக்கும்…!!!
 *
இன்னும் கனவாயிரம் இருக்குதடி
அதுல எத நான் சொல்வதடி…
மறந்து ஒண்ண விட்டாலும்…
மற்றதெல்லாம் திட்டுமடி!!!
 *
அப்படி ஒரு உலகந்தேன்
உனக்காக எண்ணி வச்சேன்…
இராப்பகலா கண்ட கனவத்தேன்
அங்கங்கே விதைச்சி வச்சேன்…!!!
 *
என்ன பண்ணி என்னவடி…
கண்ட கனவின்றுக் கலையுதடி…
ஊர விக்கும் ஒருக் கூட்டம்
என் கனவத்தேன் திருடுதடி…!!!
 *
விழுது விட்ட ஆலமரம்
விறகாகச் சாய்ந்ததடி…
பேர மட்டும் விட்டுப்புட்டு
ஆறுந்தேன் வறண்டதடி…
 *
ஆட்டம் போட்ட பொடுசெல்லாம்
பட்டணந்தேன் போயாச்சி…
பொடுசுகளை எண்ணியே
பெருசுகளும் திண்ணையிலே தல சாச்சாச்சி
 *
வயலெல்லாம் காயுதடி
தென்றலையும் காணோமடி…
பேரில்லா பூக்களுந்தேன்
அனாதையா வாடுதடி…
 *
கான மயில் கூட்டமெல்லாம்
மரிச்சி போயி நாளாச்சி…
மரம் ஒன்றும் இல்லாம
குயிலைக் கண்டும் நாளாச்சி…!!!
 *
முதல போட்ட மொதலாளி
காசத்தான் தேடுறான்…
கனவைத் தொலைச்ச சராசரியோ
வாழ்வைத் தான் தேடுறேன்…
நீ வாழ
நல்ல உலகம் படைக்கத் தான் ஏங்குறேன்!!!
 *
மீண்டும் ஆறெல்லாம் ஓடணும்…
தென்றலுந்தேன் வீசணும்…
வாடிப் போன வயலிளெல்லாம்
முப்போகம் விளையணும்..
விழுது விட்ட ஆலமரம்
பல தலைமுற காணணும்…
நீ சூடிக் கொள்ளவே
பல பூக்களும் பூக்கணும்…!!!
 *
இம்பூட்டையும் செய்யாம
உன்ன மட்டும் காதலிச்சா…
அவளுக்கேத்த உலகத்துல
அவள வாழ வைக்கலையேன்னு
எம் மனசுந்தேன் என்னக் குத்தும்…
அதுவே தான் தெய்வக் குத்தம்!!!
 *
எனவே உனக்காகத்தான் வாழுறேன்…
உசுர கொடுத்து வாடுறேன்…
கனவக் கொல்லும் உலகுக்குள்ள
வேற என்ன செய்ய நானும் புள்ள…!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி