முதலாம் உலக யுத்தம்...!!!

நீண்ட காலமாக பல்வேறு நாடுகள் தமக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டிருத்த வெறுப்பு உணர்ச்சிகள் வெடித்து எரிமலையாய் சிதறியதொரு தருணம்...!!! நாடு பிடிக்கும் ஆசையில் உலகத்தில் இருந்த பலம் பொருந்திய நாடுகள் அனைத்தும் தங்களது இராணுவத்தினை களம் இறக்கிக் கொண்டிருந்தன.

அனைத்தையும் செம்பகராமன் கண்டுக் கொண்டு இருந்தான்.

'நீண்ட நெடியப் போராக இது இருக்கப் போகின்றது...அதில் சந்தேகமே இல்லை...அதுவும் குறிப்பாக இங்கிலாந்து இந்தப் போரினில் மிகத் தீவிரமாகவே ஈடுபடும்...ஈடுப்பட்டே ஆக வேண்டும்...அதற்கு வேறு வாய்ப்புகள் கிடையாது...இது தான் சரியான தருணம்...இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தினை முழு மூச்சாய் தொடங்க காலம் கனிந்து இருக்கின்றது. ஆரம்பிப்போம்...!!!" என்று எண்ணிக் கொண்டே செம்பகராமன் தனது செயல் திட்டத்தினை ஆரம்பிக்கின்றான்.


இந்திய சுதந்திரத்திற்காக போராடும் ஒரு இந்திய இராணுவத்தினை அமைப்பதே அவனது முதல் இலக்காய் இருந்தது. அவனது இலக்கிற்கு செர்மனி உதவிப் புரிந்தது...செம்பகராமனின் செயலும் பேச்சும் ஆட்களை கவர்ந்தன...வெகு விரைவில் ஒரு தோற்றம் பெற்றது இந்தியாவின் முதல் இராணுவம்...'இந்தியத் தேசியத் தொண்டர் படை (Indian National volunteers Corps)' என்றப் பெயரினைக் கொண்டே.

யுத்தம் காத்து இருக்கின்றது...படையும் தயாராக இருக்கின்றது...போதாது. களத்தில் குதித்தான் செம்பகராமன்...நேரடியாகவே. முதலாம் உலக யுத்தத்தில் செர்மனியின் புகழ் பெற்ற நீர் மூழ்கிக் கப்பலான எம்டன் (Emden) என்றக் கப்பலின் பொறியாளராகவும் இரண்டாம் பொறுப்பதிகாரியாகவும் செயல் புரிந்தது செம்பகராமனே ஆகும்.

அன்றைய காலத்தில் இந்தியப் பெருங்கடல் முழுமையும் ஆங்கிலேயக் கப்பல் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. ஆங்கிலேயப் படைகளின் செல்வாக்கு அப்படி. அப்படி இருந்தும், ஆங்கிலேய கப்பல் படையிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய எம்டனில் இந்தியாவினை வலம் வந்து, சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை, நீதி மன்றம் மற்றும் எண்ணெய்க் கிடங்குகள் போன்றவற்றின் மீது ஆங்கிலேய அரசிற்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் தாக்குதல் நிகழ்த்தி விட்டு சென்றான் செம்பகராமன்.

ஆங்கிலேயர்களின் செல்வாக்கு மிகுந்த கடற்பரப்பில் தைரியமாக கப்பலினை எடுத்து வந்து அவர்கள் கொண்டாடிய சென்னையின் மீதே தாக்குதல் நிகழ்த்தி வெற்றிக்கரமாக செம்பகராமன் திரும்பிச் சென்று ஆண்டுகள் பல ஆகலாம்...ஆனால் அந்தச் செயல்...அந்தத் தைரியம் வரலாற்றில் பதிந்து விட்டது,ஒரு வட்டாரச் சொல்லாய்...'எம்டன்' என்றச் சொல்லாய்...இன்றும் அந்தச் சொல் திறமைசாலிகளைக் குறிக்கும் ஒருச் சொல்லாக தமிழகம் அதுவும் குறிப்பாக சென்னைப் பகுதிகளில் வழங்கப்பட்டு வந்துக் கொண்டு இருக்கின்றது.

இது போதாதென்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1915 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இன்றைக்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகராக உள்ள காபூலில் இந்தியாவின் சுதந்திர அரசினை நிறுவவும் அவன் செயலாற்றினான். அதாவது இந்தியாவினை ஆண்டுக் கொண்டு இருந்த ஆங்கிலேய அரசிற்கு எதிராக இந்தியாவிலேயே சுதந்திரமாக இந்திய அரசினை அமைத்தான். அவ்வாறு அமைந்த அந்த அரசினில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தான் அவன்.

அனைத்தும் நன்றாகத் தான் தொடக்கத்தினில் சென்றுக் கொண்டு இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல செர்மனியின் வலுக் குறைய ஆரம்பித்தது...வெற்றிகள் இங்கிலாந்தின் வசம் செல்ல ஆரம்பித்தன...முடிவில் இங்கிலாந்தே போரில் வெல்ல செம்பகராமனின் முயற்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருந்தும் செர்மனியில் இருந்துக் கொண்டே தொடர்ந்து செயலாற்றத் தொடங்கினான் செம்பகராமன்.

பின்னர் செர்மனி மீண்டும் ஹிட்லரின் கீழ் எழுச்சிப் பெற்ற பொழுதும் செர்மனியில் ஒரு முக்கிய நிலையில் தான் செயலாற்றிக் கொண்டு இருந்தார் அவர்.

1933 ஆம் ஆண்டில் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் செர்மனியில் இருக்கும் வியன்னா என்னும் நகரில் ஒரு மாநாட்டிற்குச் சென்றிருந்த பொழுது செம்பகராமனைக் கண்டு வெகு நேரம் பேசி இருவரும் தங்களது கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். செம்பகராமனின் அனுபவங்களையும் சிந்தனைகளையும் கேட்ட பின்பு தான் 'இந்தியாவிற்கென்று தனி இராணுவம்' என்ற தனது சிந்தனையினை மேலும் விரிவாக்கிக் கொண்டார் சுபாஷ் சந்திர போஸ் என்ற கருத்துக்களும் இருக்கின்றன.

மிராவதி என்பவர் அவரது 'Lest We forget' என்னும் நூலிலே 'இந்தியா சுதந்திரம் பெற்று இருக்கும் இந்த நாளினை காண சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருந்து இருப்பார் எனில் நிச்சயமாக அவருடைய குருவான செம்பகராமன் பிள்ளைக்கு உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் அவர் வழங்கி இருப்பார்" என்றே குறிப்பிடுகின்றார். சரி இருக்கட்டும்...இப்பொழுது நாம் மீண்டும் செர்மனிக்கே செல்ல வேண்டி இருக்கின்றது.

செர்மனி அசுர வேகத்தில் வளர்ந்துக் கொண்டு இருக்கின்றது...அதனுடையே நாஜிக்களும் தான். இரண்டையும் வளர்த்துக் கொண்டு இருக்கின்றார் ஹிட்லர் ஒரு கனவோடு...ஒரே கனவோடு. அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் தான் இந்தியாவைப் பற்றியும், இந்தியர்களால் சுயமாக அவர்களை அவர்களே ஆழ முடியாது என்பதனைப் போன்றும் தவறாக ஹிட்லர் பேசி விட...அங்கேயே ஹிட்லரை எதிர்கின்றான் செம்பகராமன்.

"ஹிட்லர் பேசியது தவறு...இந்தியர்களின் வரலாற்றினை அறியாது கருத்தினைக் கூறி இருக்கின்றார்...அதற்கு ஹிட்லர் நிச்சயமாக மன்னிப்பு கேட்டாக வேண்டும்..."

செம்பகராமன் அவனது நிலையில் உறுதியாக நின்றான். இறுதியாக ஹிட்லர் அவன் தெரிவித்தக் கருத்துக்களுக்காக செம்பகராமனிடன் மன்னிப்புக் கோரினான்.

ஆனால் காலம் போக போக செர்மனியில் ஹிட்லரின் செல்வாக்கு வேறு யாருக்கும் இல்லாத அளவிற்கு உயர ஆரம்பித்தது....எங்கும் அவன் குரல்...எங்கும் நாஜிக்கள்...எங்கெங்கும் ஹிட்லர். அந்த நிலையிலே மற்ற தலைவர்களின் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது.

செர்மானியத் தலைவர்களின் செல்வாக்கே குறைந்தப் பொழுது இந்தியனான செம்பகராமனின் செல்வாக்கு மட்டும் சரியாமல் இருக்குமா? செம்பகராமனின் செல்வாக்கும் செர்மனியில் சரிய ஆரம்பித்தது.
 ஏற்கனவே ஹிட்லரை மன்னிப்பு கேட்க வைத்ததற்காக செம்பகராமனின் மீது பகை உணர்வுடன் இருந்த நாஜிக்கள் சிலர் அந்தத் தருணத்தினை பயன் படுத்திக் கொள்கின்றனர்.

செம்பகராமனின் உணவில் விஷம் இடப்படுகின்றது.

ஆங்கிலேயர்களுக்கு தனது சிறு வயதில் இருந்தே ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த அந்த வீரன் இறுதியாக சூழ்ச்சிக்கு பலியாகின்றான்...தனது 43 ஆம் அகவையில். அது 1934 ஆம் ஆண்டு. இந்திய சுதந்திரப் போராட்டம் ஒரு மாவீரனை இழந்த ஒரு ஆண்டு. சூழ்ச்சிக்கு பலியான தமிழர்களில் அவன் முதலானவனும் அல்ல...இறுதியானவனும் அல்ல...தமிழர்களின் வரலாற்றில் அவனும் ஒரு பகுதி ஆகின்றான்.

சாகும் தருவாயில் அவனது மனைவியிடம் அவன் கூறிய இறுதி வார்த்தைகள்

"பதினேழு வயதிலே பிறந்த நாட்டினை விட்டு, பிற நாடு ஓடி வந்தேன்; 26 ஆண்டுகள் கழிந்தன. எனது பிறந்த நாட்டினில் அடி எடுத்து வைக்கும் பாக்கியமில்லாது இறக்கப் போகின்றேன்...எனது தாய் நாட்டு மக்களை எனது வாழ்நாளில் காணாது சாகப் போகின்றேன்... சாகத்தான் போகின்றேன்...நான் செத்த பிறகாவது... எனது அஸ்தியை செந்தமிழ்நாட்டு வயல்களிலே தூவுங்கள்... எனது எண்ணத்தை நீராக...எனது அஸ்தியை உரமாகக் கொண்டு அந்தப் பச்சைப் பசும் பயிர்கள் வளரட்டும். அந்தப் பயிர்கள் விடுக்கும் கதிர்கள்... அந்தக் கதிர்கள் கொடுக்கும் கொடுக்கும் மணிகள்... அந்த மணிகளை உண்ணும் மக்கள்... அந்த மக்களின் இரத்தத்தோடு இரத்தமாக...சித்தத்தோடு சித்தமாகக் கலந்து விடுகின்றேன்...அங்கே, என்னைப் போல் ஆயிரமாயிரம் செம்பகராமன்கள் தோன்றட்டும்...!!!"

அவர் இறந்து 34 ஆண்டுகளுக்கு பின்னர் அவரது அஸ்தி இந்தியாவில் கரைக்கப்பட்டது. 17 வயதில் தனது நாட்டினை விட்டு போராட சென்ற வீரன் ஒருவனின் வரலாறும் அத்துடன் முடிவிற்கு வருகின்றது.

மேலும் சில குறிப்புகள்:

1) 'ஜெய் ஹிந்த்' என்றொரு முழக்கத்தினை நாம் இன்று அறிந்து இருப்போம்...அந்த முழக்கத்தினை அறிமுகப்படுத்தியது ஒரு தமிழன் என்றச் செய்தி நம்மில் பலரும் அறிந்து இருக்க மாட்டோம். அந்தத் தமிழன் வேறு யாரும் இல்லை... செம்பகராமன் தான் அது. அவனது 16 ஆம் வயதில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மேடையில் முழங்கியப் பொழுது அவன் பயன்படுத்திய அந்த முழக்கம் தான் இன்று இந்திய தேசம் முழுவதும் பரவி இருக்கின்றது.

2) செம்பகராமன் ஆரம்பித்த இராணுவமான 'இந்தியத் தேசியத் தொண்டர் படை'யினைத் பின்பற்றித் தான் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் பின்னாளில் தமது இந்தியத் தேசிய இராணுவத்தினை அமைக்கின்றார்.

3) செர்மனியின் உயர்ந்தப் பட்டமான 'வான் (Von)' என்றப் பட்டத்தினை செம்பகராமனுக்கு வழங்கி பெருமைப்படுத்தி இருக்கின்றது செர்மானிய அரசு. சுதந்திர இந்தியா அமையுமானால் அதன் முதல் சனாதிபதியாக செம்பகராமன் வர வேண்டும் என்றே செர்மானிய சக்கரவர்த்தியான கெய்செர் அவர்கள் கூறி உள்ளார்.

இப்படிப்பட்ட ஒருவனுக்கு 2008 ஆம் ஆண்டில் சென்னை கிண்டியிலுள்ள காந்தி மண்டப வளாகத்தில் தமிழக அரசால் ஒரு முழு உருவச் சிலைத் திறக்கப்பட்டு உள்ளது. அதைத் தவிர வேறு ஏதாவது செய்யப்பட்டு உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.

இப்படிப்பட்ட ஒரு வீரனின் வரலாற்றினை மக்களை அறியச் செய்து இருக்க வேண்டியது யார் கடமை? ஏன் இந்த வீரனின் வரலாறு மக்களிடம் சென்றடையவில்லை... இதனைப் போன்று இன்னும் எத்தனைப் பேர்கள் வரலாற்றின் இருண்டப் பக்கங்களில் உலாவுகின்றனரோ?

தெரியவில்லை...இருந்தும் அவர்களை அறிய முயல்வோம்...!!!

தொடர்புடைய இடுகைகள்:
1) வீரன் செண்பகராமன் - தமிழோசை பதிப்பகம்
2) http://www.frontlineonnet.com/fl2621/stories/20091023262112500.htm
3) http://en.wikipedia.org/wiki/SMS_Emden_%281908%29#Madras_to_Penang
4) http://en.wikipedia.org/wiki/Chempakaraman_Pillai
5) http://en.wikipedia.org/wiki/Bombardment_of_Madras

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றுப் பக்கங்களை திருப்பிப் பார்க்கும் பொழுது ஒரு வருத்தமான விடயம் கண்ணுக்கு புலனாகின்றது. அப்பக்கங்களில் சில இருட்டடிக்கப்பட்டு இருக்கின்றன. இருண்ட அப்பக்கங்களில் சிலர் மறக்கப்பட்டு கிடக்கின்றனர். சிலர் மறைக்கப்பட்டுக் கிடக்கின்றனர். ஏன் சற்று உற்றுப் பார்த்தால் இந்தியாவின் வரலாறே இவ்வாறு பல இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்களைக் கொண்டு தான் விளங்குகின்றது.

சரி இருக்கட்டும், இருட்டடிப்பு செய்யப்பட்ட அனைத்துப் பக்கங்களைப் பற்றியும் அவற்றின் காரணிகளைப் பற்றியும் பேசினால் பேசிக் கொண்டே போகலாம். ஆனால் நமக்கு இப்பொழுது அவற்றிற்கு நேரமில்லை. காரணம் நீண்ட காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்களில் இருந்த ஒருவர் இப்பொழுது நம்மை சந்திக்க ஆவலுடன் காத்து இருக்கின்றார்.

அவர் பெயர் செம்பகராமன் பிள்ளை.

1891 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் பிறந்து 1934 இல் செர்மனியில் மரணம் அடைந்த இவரின் வரலாற்றினைப் பார்க்கும் பொழுது சற்று பிரமிக்க தான் வைக்கின்றது. அப்படி என்ன செய்து விட்டார் இவர்... காண்போம்!!!.

இன்றைக்கு போராட்டம், சுதந்திர வேட்கை போன்றச் சொற்கள் நம்மிடையே வெறும் வார்த்தைகளாக மட்டுமே பெரும்பாலும் இருந்துக் கொண்டு வருகின்றன...ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சொற்கள் தான் சிலருக்கு வாழ்க்கையாகவே இருந்து வந்தன...அதுவும் குறிப்பாக இளைஞர்களிடம்...மாணவர்களிடம்!!!

செம்பகராமனும் அப்படி ஒரு மாணவன் தான்...!!!

"வேண்டும் புரட்சி... திறமையான மக்கள் இங்கே நம் நாட்டிலேயே இருக்க அன்னியர்கள் எதற்காக நம்மை ஆள வேண்டும்...அடிமையாய் இருப்பதும் ஒரு வாழ்க்கையா?...இந்த நிலை மாற வேண்டும்...நிச்சயமாய்!!! மாற்றங்கள் தானாக என்றுமே வந்ததில்லை...எனவே நாம் தான் மாற்ற வேண்டும்...சுதந்திரத்தினை வென்றெடுக்க வேண்டும்...வருவாய் தோழனே...கடமைகள் நமக்காக காத்துக் கொண்டு இருக்கின்றன" என்று சுதந்திர வேட்கையுடன் இந்தியத் தெருக்களில் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்த மாணவர்களின் தலைவனாய் இருந்தான் செம்பகராமன்...!!!

"பதினைந்தே வயது சிறுவன் நம்மை எதிர்த்துப் பேசுகின்றான்...செயல் புரிகின்றான்...வெறும் பேச்சாக இருந்தால் கூட விட்டு விடலாம்...ஆனால் இவன் பேச்சு மக்களை கவருகின்றதே...மக்கள் ஒன்று சேருகின்றார்களே...இவனை இப்படியே விட்டால் நமக்கு பின்னால் பிரச்சனைகள் எழலாம்...எனவே இவன் மக்களிடம் பேசுவதற்கு தடை விதிப்பது சரியானதொன்றாக இருக்கும்" என்று எண்ணி ஆங்கிலேய அரசும் செம்பகராமன் பொது இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு தடையினை அறிவித்தது. செம்பகராமனும் ஆங்கிலேய காவல்துறையின் கண்காணிப்பிற்கு கீழ் வந்தான்.

ஆனால் எத்தனை நாள் தான் சுதந்திர வேட்கை அடுக்குமுறைக்கு கட்டுப்பட்டுக் கிடக்கும்...சுதந்திரமாக செயலாற்ற எத்தனித்த செம்பகராமனுக்கும் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு வருகின்றது... ஒரு ஐரோப்பிய தாவரவியல் அறிஞர் வாயிலாக.

அவர் பெயர் சர். வால்டர் வில்லியம் ஸ்ட்ரிக்லேன்ட்!!! ஆங்கிலேய பரம்பரையினைச் சார்ந்தவராக அவர் இருந்தாலும் அவரது தாயார் செர்மனி நாட்டினைச் சார்ந்தவர். எனவே அவர் அக்காலத்தில் மறைமுகமாக செர்மானிய அரசுக்காக இந்தியாவில் உளவுப் பார்த்துக் கொண்டு வந்தார் ஆராய்ச்சி என்றப் பெயரில். அவர் கண்ணில் தான் துடிப்பான இளைஞனான செம்பகராமன் சிக்குகின்றார்.

"ஆங்கிலேயர்கள் ஆளும் நாட்டில் இருந்துக் கொண்டே அவர்களை எதிர்ப்பது கடினமான ஒரு செயல் என்று உனக்குத் தெரியாதா?"

"தெரியும்...ஆனால் அதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கு இல்லை...!!!" என்றான் செம்பகராமன்.

சிரித்தார் ஸ்ட்ரிக்லேன்ட்...!!!

"உன்னிடம் வேகமும் விவேகமும் இருக்கின்றது இளைஞனே...ஆனால் ஆங்கிலேயர்களை மீறி நீ போராட வேண்டும் என்றால் அவை மட்டுமே உனக்குப் போதாது... நீ இன்னும் அநேக விடயங்களைக் கற்க வேண்டும்...அதற்கு உனக்குச் சுதந்திரம் வேண்டும்" என்றார்.

அவரை உற்றுப் பார்த்தான் செம்பகராமன்.

"இதனை தாங்கள் என்னிடம் சொல்வதற்கு காரணம்...?"

மீண்டும் சிரித்தார் ஸ்ட்ரிக்லேன்ட்...!!!

"பழைய கோட்பாடு தான் இளைஞனே...எதிரிக்கு எதிரி நண்பன்...அது தான் காரணம்" என்றார்.

"புரியவில்லையே...!!!" என்றான் செம்பகராமன்.

"உலகில் ஆங்கிலேயர்களுக்கு பகை நாடுகளும் இருக்கின்றன...அவைகளுக்கு இங்கிலாந்து வீழ வேண்டும்...அவ்வளவே...அதற்காக அவைகள் பல காரியங்களை செய்வதற்கு தயாராக இருக்கின்றன. அந்த நாடுகள் உனக்கு...உன்னுடைய குறிக்கோளுக்கு உதவி நிச்சயமாய் செய்யும்...! உனக்கு உன்னுடைய நாடு விடுதலை அடைய வேண்டும்...எங்களுக்கு இங்கிலாந்தின் செல்வாக்கு குறைய வேண்டும்...அவ்வளவே...!!! இலக்கு ஒன்றாக இருக்கும் பொழுது ஒன்றாக செயலாற்றலாம் தானே... என்ன சொல்கின்றாய்..." என்றுக் கூறி செம்பகராமனின் பதிலுக்காக காத்திருக்க ஆரம்பித்தார் ஸ்ட்ரிக்லேன்ட்.

யோசித்தான் செம்பகராமன்.

"என்னை இப்பொழுது என்ன செய்ய சொல்லுகின்றீர்...?"

"கிளம்பு...ஐரோப்பா உனக்காக காத்திருக்கின்றது... அறிவை வளர்த்துக் கொள்...அங்கே உனக்கு உதவிகள் செய்ய நண்பர்கள் பலர் இருக்கின்றனர்..."
இதற்கு மேல் சிந்திப்பதற்கு ஒன்றும் இருப்பதுப் போன்று செம்பகராமனுக்குத் தோன்றவில்லை.

அவன் முடிவெடுத்து விட்டான்.

"சரி...கிளம்பலாம்...!!!"

ஸ்ட்ரிக்லேன்ட் அவர்களுடன் கப்பலேறி ஐரோப்பாவினை நோக்கி1908 ஆம் ஆண்டு செப்டெம்பர் 22 ஆம் தேதி பயணிக்க ஆரம்பித்தப் பொழுது அவனது வயது 17!!!

முதலில் இத்தாலி...அங்கே ஒரு பட்டப்படிப்பு...பின்னர் சுவிச்சர்லாந்து...அங்கும் படிப்பு...பின்னர் செர்மனி...அங்கும் கல்வி...பட்டம்...சாதாரண செம்பகராமன் ... டாக்டர். செம்பகராமன் ஆகின்றான். ஆனால் படிப்பினை மட்டுமே அங்கே அவன் கவனிக்கவில்லை... சென்ற இடங்களில் எல்லாம் மாணவர்கள் மத்தியில் கூட்டம் போடுவது...ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தினை தோலுரிப்பது... இந்தியர்களின் நியாயமானமான கோரிக்கைகளை உலக மக்களின் முன்னர் கொண்டு சேர்ப்பது போன்ற வேலைகளையும் கல்வியுடன் சேர்த்து அவர் செய்துக் கொண்டு தான் இருந்தார். இவரது இந்தச் செயல்கள் இந்தியாவின் குரலினை உலக மக்களிடையே கொண்டு போய் சேர்த்தன.

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாக பெர்லினில் 'இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி' என்ற ஒரு இயக்கத்தினை ஆரம்பித்து அதன் தலைவராகவும் செயலாற்றினார். அந்த இயக்கத்தின் வழி 'ப்ரோ இந்தியா' என்ற ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையும் நடத்தி உலக மக்களின் பார்வைக்கு இந்திய மக்களின் கோரிக்கைகளையும் நியாயங்களையும் கொண்டு சேர்த்தார்.

செயல் வேகம் இருக்கின்றது... அறிவாற்றலும் இருக்கின்றது...அதனுடன் திறமையும் இருக்கின்றது...போதாதா...செர்மனியின் அரசியல் தலைவர்கள் செம்பகராமனின் நண்பர்களாக விருப்பம் கொள்ள, செர்மனியில் செம்பகராமனின் செல்வாக்கு உயர்கின்றது.... செர்மனியின் சக்கரவர்த்தியான கெய்சர் அவர்கள் அவரது நெருங்கிய நண்பனாக கருதும் அளவுக்கு அவனின் செல்வாக்கு உயர்கின்றது. செர்மனியின் சக்கரவர்த்தி எந்த ஒரு முடிவு எடுக்கும் முன்னும் செம்பகராமனின் ஆலோசனையைக் கேட்கும் அளவு இருந்தது செம்பகராமனின் திறமை.

அத்தோடு அவன் நிற்கவில்லை...உலகில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அவன் குரல் எழுப்ப விரும்பினான்... அதற்காக அவன் ஆரம்பித்த இயக்கங்கள் தான் 'ஒடுக்கப்பட்ட மக்களின் சங்கம்' மற்றும் 'கீழ் நாட்டவர் சங்கம்'. இந்த இயக்கங்கள் மூலம் உலகின் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்டோருக்கும் அவன் குரல் எழுப்ப ஆரம்பித்தான்.

இங்கிலாந்தோ அவன் தலைக்கு ஒரு விலை (ஒரு இலட்சம் பொன்) வைத்து உலகம் முழுவதும் காத்துக் கொண்டு இருந்தது...ஆனால் அதனை துளிக் கூட பொருட்படுத்தாது உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டு இருந்தான் செம்பகராமன்... தென் ஆப்பிரிக்கா, பர்மா, அமெரிக்கா, சீனா, எகிப்து...இப்படி பல நாடுகளுக்குச் சென்று அங்கே மக்களுக்காக குரல் எழுப்பினான்.

அமெரிக்காவில் சென்று அங்கிருந்த ஆப்பிரிக்க மக்களின் நலனுக்காக குரல் எழுப்பினான். அன்று இருந்த அமெரிக்க சனாதிபதியான உட்ரோ வில்சனை நேரில் கண்டு ஆப்பிரிக்க மக்களின் நலனுக்காக பேசினான். சுதந்திரம் என்பது ஒவ்வொரு தனி மனிதருக்கும் உரிய உரிமை என்று எண்ணியே அவன் மனிதத்திற்காக குரல் கொடுத்தான்.

கூடவே இந்தியாவில் இருந்த தலைவர்கள் மற்றும் போராளிகளுடனும் அவன் தொடர்பில் இருந்துக் கொண்டே தான் இருந்தான். போராளிகளுக்கு செர்மனியில் இருந்து ஆயுதங்களை பெற்றுத் தருவது, தலைவர்களின் குரல்களை உலகிற்க்குக் கொண்டுச் செல்வது என்று அவனால் இயன்ற அனைத்தையும் அவன் செய்துக் கொண்டே தான் இருந்தான். இந்தியத் தலைவர்களின் அகிம்சை வழிப் போராட்டத்தினை அவன் ஏற்றுக் கொண்டாலும், ஆயுதங்களுடன் இருக்கும் ஆங்கிலப் படையினர் அவர்களை நொடியில் அடக்கி விடுவர் என்றும் அவன் அறிந்து வைத்து இருந்தான்...அந்த எண்ணத்திலேயே இந்தியாவிற்காக போரிடும் ஒரு படையினையும் அவன் உருவாக்கத் திட்டம் தீட்டிக் கொண்டு இருந்தான்.

அவன் எதிர்பார்த்தக் காலமும் வந்தது.

1914 ஆம் ஆண்டு...முதலாம் உலக யுத்தம் தொடங்கப்பெருகின்றது.

23 வயதான வீரன் செம்பகராமன் தன்னுடைய திட்டத்தினை செயல்படுத்த ஆரம்பிக்கின்றான்.

தொடரும்...!!!

காமராஜர் கொலை முயற்சி சரித்திரம்...!!!

தலைப்பினை படித்தவுடன் அதிர்ச்சியுடன் ஆச்சர்யமும் கலந்த ஒரு உணர்வு தான் என்னுள் மேலோங்கி இருந்தது...உங்களுக்குள்ளும் அதே உணர்வு தான் மேலோங்கி இருக்க வேண்டும் என்றே எண்ணுகின்றேன். காரணம் தலைப்பு அப்படிப்பட்ட ஒன்று.

காமராஜர் என்றாலே மக்களுக்காகவே வாழ்ந்து அவர்களுக்காகவே தன்னுடைய வாழ்வினை அர்பணித்த ஒரு உன்னத தலைவர் என்ற எண்ணமே நம் அனைவரது மனதினிலும் தோன்றும்...உண்மையும் அது தான். 'ஏழைகளின் பங்காளனாய்' 'கல்விக் கண் திறந்த வள்ளலாய்' அவர் ஆற்றிய பணிகள் தான் இன்று நமது சமூகம் முன்னேறி இருப்பதற்கு அடிப்படைக் காரணங்களாகும். இன்றுவரை அவர் ஆண்ட காலமே பொற்காலமாக தமிழக வரலாற்றில் இருந்து வந்திருக்கின்றது என்றால் அதுவே அவர்தம் பெருமையைப் புலப்படுத்துவதாகும். அப்படிப்பட்ட ஒரு தலைவரை, கருப்பு காந்தி என்று அழைக்கப்பட்ட ஒரு மாபெரும் மனிதரை கொலை செய்ய முயற்சி நடந்து இருக்கின்றது என்றால் அத்தகைய ஒரு விடயம் நிச்சயம் நம்முள் அதிர்ச்சி அலைகளை எழுப்பத்தான் செய்யும். அதிர்ச்சிகளை மட்டுமல்லாது பல கேள்விகளையும் சேர்த்தே அந்த விடயம் எழுப்பத்தான் செய்யும்...

காமராஜரை கொலை செய்ய முயன்றார்களா? யார் முயன்றார்கள்? எப்பொழுது அது நடந்தது? என்ன காரணம்? அவ்வாறு ஒரு சம்பவம் நடந்து இருந்தால் நாம் அதனைப் படித்து இருக்க வேண்டுமே ஏன் அதனைப் பற்றி எந்த ஒரு தகவலும் பெருவாரியாக கிட்டப்பெற வில்லை?... இன்னும் பல கேள்விகள் எழலாம்... அக்கேள்விகளுக்கு எல்லாம் விடையினைக் கொண்டு விளங்குகின்றது திராவிடர் கழகத்தின் 'காமராசர் கொலை முயற்சி சரித்திரம்' என்ற புத்தகம். அப்புத்தகம் கூறும் விடயங்களை சற்றே நாம் கண்டுவிடுவது நன்றாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.

காலம் : 7 - 11 - 1966
இடம் : புது தில்லி

அன்று தான் இந்தியப் பாராளுமன்றத்தின் மீது சங்கராச்சாரியார்களின் தலைமையில் சாதுக்கள் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொள்வோர் தாக்குதல் நிகழ்த்துகின்றனர்....ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜன சங்கம் போன்ற மத அமைப்புகளின் துணையுடன் (அட காந்தியைக் கொன்ற அதே கூட்டம் தான் கருப்புக் காந்தியையும் கொலை செய்ய முயன்று இருக்கின்றன).

தாக்குதலுக்கு பெரிய காரணம் என்று ஒன்றும் இல்லை... 'பசு வதைத் தடுப்புச் சட்டத்தினை' இந்திய நாட்டில் சட்டமாக அமுலாக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையே ஆகும். இந்தக் கோரிக்கையினை நிறைவேற்ற பாராளுமன்றத்தின் உறுப்பினர்களை வேண்டியே தில்லியின் வீதிகளில் சூலாயுதங்கள், பெட்ரோலில் நனைக்கப்பட்ட துணிகளோடு இன்னும் பல ஆயுதங்களுடன் 'அமைதியான' நிர்வாண சாமியார்கள் கூட்டம் அன்றுக் கூட்டம் போடுகின்றது.

ஒரு சனநாயக நாட்டினில் சட்டத்தினை கொண்டு வருவதற்கு ஆயுதங்கள் எந்தளவு பயன்படுத்தப்படும் என்று எனக்குத் தெரியவில்லை...ஆனால் அன்றைக்கு சாதுக்கள் ஆயுதங்களுடன் தான் களம் இறங்கி இருக்கின்றனர்....அதனுடையே வானொலி நிலையத்தினை தாக்குவது, தபால் நிலையத்தினை கொளுத்துவது, பாராளுமன்றத்தின் மீது கல் எரிந்துத் தாக்குவது, பேருந்துக்களை எரிப்பது போன்ற செயல்களையும் அவர்கள் செய்து இருக்கின்றனர்.

ஆனால் பசுவதைக்காக அவர்கள் ஏன் இந்தளவு ஆர்ப்பாட்டம் பண்ணினர் என்பது தான் புரியாதப் புதிராக இருக்கின்றது. காரணம் அவர்கள் புனிதமாக கருதும் வேதங்களிலேயே பசுவினைக் கொன்று விருந்து நடத்தி அதன் மாமிசத்தினைப் புசித்த பகுதிகள் எல்லாம் இருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது இவர்கள் ஏன் திடீர் என்று பசுவின் மேல் இத்தனைப் பாசம் கொண்டு எழுந்து இருக்கின்றனர் என்பதும் சிந்திக்கத்தக்கதான ஒன்றாக இருக்கின்றது.

இவை அனைத்துடனே அவர்கள் செய்த மற்றுமொரு விடயம் பாராளுமன்றத்தில் இருந்து விலகி இருந்த காமராசரின் இல்லத்தில் அவர் உள்ளே இருக்கும் பொழுதே தீ வைத்து தாக்குதல் நிகழ்த்தியது தான். மதிய உணவினை அருந்தி விட்டு காமராசர் ஓய்வு எடுக்கும் பொழுது அந்தத் தாக்குதல் நிகழ்ந்து இருக்கின்றது. அதில் மயிரிழையில் உயிர் பிழைத்து இருக்கின்றார் காமராசர்.

இந்த சம்பவத்திற்கு முன்னர் அவர் ஆற்றிய உரைகளில் நாட்டின் சில பணக்காரர்களுக்கும் மத அமைப்பாளர்களுக்கும் தொடர்பு இருக்கின்றது என்றும் கூறி இருக்கின்றார்.

"பணக்காரனும் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களும் தான் சோசியலிசத்திற்கு எதிரிகள். பிறப்பால் உயர்ந்தவர்கள் ஏன் சோசியலிசத்தை எதிர்கின்றார்கள் தெரியுமா? பணக்காரர்களோடு சேர்ந்து சோசியலிசத்தை வர விடாது தடுத்து விட்டால் தங்களுடைய சாதியின் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்டிக் கொள்ளலாம் என்று நினைகின்றார்கள். நாம் விட்டு விடுவோமா என்ன?" - நவசக்தி (3-11-1966)

பின்னர் அவர் வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்திற்கு பின்னர் சேலத்தில் ஆற்றிய உரையில்,

"குறிப்பாக அவர்களுக்கு பயம் என்னைப் பற்றித்தான். இந்த காமராஜ் தான் சோசியலிச சமுதாயத்தினை அமைத்தே தீருவேன் என்று சொல்கின்றான். அவன் தான் அதிலே தீவிரமாக இருக்கின்றான் என்று நினைகின்றார்கள். என் வீட்டுக்கு தீ வைக்கின்றான். ஆனால் நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். கடமையை நான் செய்தே தீருவேன்..." - 11-12-1966 சேலம் பேரூரை - நவசக்தி - 15-12-1966

இன்னும் பல தகவல்கள் அந்த புத்தகத்தினில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. அந்தச் சம்பவத்தினை முன்னிட்டு செய்தித்தாள்களில் வெளியான குறிப்புகள்...உள்நாடு மட்டுமன்றி அயல்நாட்டுச் செய்திகளிலும் வந்த குறிப்புகள், காமராசரின் உரை, புகைப்படங்கள், காமராசரின் வீட்டிற்கு தீ வைத்து அவரைக் கொல்ல முயற்சித்த பொழுது காமராஜரின் உடன் இருந்த உதவியாளரின் குறிப்புகள்...மற்றும் இன்ன பிற விடயங்களையும் கொண்டு விளங்குகின்றது இந்தப் புத்தகம்.

இந்தியாவின் வரலாற்றில் மறைக்கப் பட்ட பக்கங்களைப் படிக்க/அறிந்துக் கொள்ள விரும்புவோர் நிச்சயமாக இந்தப் புத்தகத்தினை படிக்க வேண்டும்.

அனைத்து திராவிடர் இயக்க நூல் நிலையங்களிலும் இந்த நூல் கிடைக்கப்பெறும் என்றே எண்ணுகின்றேன். நான் வாங்கியது கோயம்பேடு பேருந்து நிலையத்தினுள் இருக்கும் நூல் நிலையத்தில் இருந்தே.

இறுதியாய் சில கேள்விகள்:

1) பாராளுமன்றத்தினை தாக்கிய நபர்களின் மீது நடவடிக்கைகள் ஏதேனும் எடுக்கப்பட்டதா? இசுலாமியர்கள் தாக்கினாலும் சரி இந்து சமயத்தினர் தாக்கினாலும் சரி தண்டனை ஒன்றாகத் தானே இருக்க வேண்டும்... அவ்வாறு இருந்ததா?

2) சட்டத்தினைக் கொண்டு வர வன்முறையினை மத அமைப்புகள் கையில் எடுத்த காரணம் என்ன? அவற்றிக்கு சங்கராச்சாரிகள் முன் நின்று வழி நடத்தியதன் காரணம் என்ன?

3) காமராசரின் வீட்டின் மீது திட்டமிட்டு ஏன் தாக்குதலிட வேண்டும்? அவரைக் கொள்வதைத் தவிர வேறுக் காரணங்கள் ஏதேனும் கூற முடியுமா? ஏன் சூத்திரன் ஒருவன் அரசாளுகின்றானே என்ற பகை உணர்ச்சியா?

4) பசு வதையும் பசு மாமிசத்தினை உண்பதையும் வேதங்களே கூறி உள்ளனவே அவ்வாறு இருக்கையில் ஏன் இந்தத் திடீர் நாடகம்?

புத்தகத்தின் பெயர் : காமராஜர் கொலை முயற்சி சரித்திரம்
வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு
விலை: 50.00

திருக்குறள் என்ற உலகப் பொதுமறை:

திருக்குறளினைப் பற்றியக் கடந்தப் பதிவில் (திருக்குறள்) திருக்குறளில் கிருத்துவின் கருத்துக்கள் அடங்கி உள்ளன என்றுச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர் என்றுக் கூறி இருந்தேன். எளிதில் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததும் நம்ப முடியாததுமான ஒருக் கருத்து தான் அது....சந்தேகமே இல்லை. அந்நிலையில் அக்கூற்றின் நம்பகத்தன்மையினை அறிய நாம் சற்று ஆராயத் தான் வேண்டி இருக்கின்றது....கேள்விகளும் எழுப்பத் தான் வேண்டியிருகின்றது. அதேப் போலே நண்பர்களும் சில கேள்விகளை எழுப்பி இருந்தனர்...அக்கேள்விகளுக்கு நாம் விடையினைத் தேடும் முன் நாம் முந்தையப் பதிவில் கண்ட விடயங்களை மேலோட்டமாகக் கண்டு விடலாம்.

1) தோமா வந்து வாழ்ந்து மரித்த இடமாக அறியப்படும் மயிலாப்பூரில் இருந்து வள்ளுவர் தோன்றி உள்ளார் என்ற விடயம்.
2) சிறப்பாயிரம் பகுதியில் கடவுள் வாழ்த்துப் பகுதியோடு 'வான் சிறப்பு' மற்றும் 'நீத்தார் பெருமை', 'அறன் வலியுறுத்தல்' போன்ற பகுதிகளை சேர்த்து இருப்பது இறைவன் மூன்று நிலைகளில் விளங்குகின்றான் என்றக் கூற்றினை விளக்கவே அதாவது 'மூ ஒருமைக் கோட்பாடு' என்ற விடயம்.
3) 'வான் சிறப்பு' என்பது மழையைக் குறிக்காது கடவுளின் அருள் சக்தியைக் குறிக்கும் என்பதும் 'நீத்தார் பெருமை' என்பது துறவு மேற்கொண்டவர்களைக் குறிக்காது 'மண்ணுலகில் மக்களுக்காக வந்து உயிர் நீத்த இறைவனைக்' குறிக்கும் என்ற விடயம்..

ஆகிய விடயங்களைத் தான் இதற்கு முந்தையப் பகுதியில் நாம் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது இதனை நாம் சற்று விரிவாக காண முயற்சிக்கலாம்.

ஐந்தவித்தான்:

வள்ளுவர் எந்த ஒரு வார்த்தையையும் தேவை இன்றி பயன் படுத்தி இருக்கவில்லை என்பதனை நாம் கடந்த பதிவினில் கண்டோம். அந்நிலையில் தான் நாம் ஐந்தவித்தான் என்ற சொல்லினைக் காண வேண்டி இருக்கின்றது. வள்ளுவர் இந்தச் சொல்லினை இரண்டே இரண்டுக் குறள்களில் தான் பயன் படுத்தி இருக்கின்றார்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். - 6 (கடவுள் வாழ்த்து)

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி - 25 (நீத்தார் பெருமை)

இப்பொழுது நமதுக் கேள்வி இறைவனைக் குறிக்க பயன்படுத்திய சொல்லினை ஏன் நீத்தார் பெருமையிலும் வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார் என்பதே? ஆனால் இதற்கு முன்னரே நண்பர்கள் சிலர் வேறு ஒரு கேள்வியினை வைத்து உள்ளனர்... "வள்ளுவர் ஐந்தவித்தான் என்றச் சொல்லின் மூலம் இறைவனைத் தான் குறித்தார் என்று எவ்வாறு கூற இயலும்" என்பதே அந்தக் கேள்வி.

இறைவன் என்பவன் ஐம்புலன்களையும் கடந்தவன்...அவனே அனைத்திற்கும் முதலாக இருப்பவன்...அப்படிப்பட்டவனை ஐந்தவித்தான் என்று கூறுவது எங்ஙனம் பொருந்தும், ஐந்தவித்தான் - ஐம் புலன்களையும் அடக்கியவன் என்றே பொருள் தருவது... இது இவ்வாறு இருக்க எவ்வாறு நாம் ஐந்தவித்தான் என்றச் சொல் இறைவனைக் குறிக்கின்றது என்று கருதலாம்? அது ஒரு மனிதனைத் தானே குறிக்க பயன் படலாம் என்பதே அந்த நண்பர்களின் வாதம். சரியான ஒன்று தானே... முழுமுதலாய் அறியப்படும் இறைவனை ஐம்புலன்களை அடக்கியவன் என்றுக் கூறுவது பொருந்தாதல்லவா...அவ்வாறு இருக்க வள்ளுவர் அங்கே கடவுள் வாழ்த்தில் எதனால் ஐந்தவித்தான் என்றச் சொல்லினை பயன்படுத்தி உள்ளார்? அது சரியானதா? மேலும் ஏன் அதே வார்த்தையை நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தினிலும் பயன் படுத்தி உள்ளார்? காண்போம்.

"இறைவன் மனிதனாக வந்தார்...மனிதர்களுக்காக பலி ஆனார்." - இந்தக் கோட்பாடு சைவ வைணவ சமயத்திலும் சரி கிருத்துவ சமயத்திலும் சரி அடிப்படையாகக் காணப்படுகின்றது.

இறவா இன்பத்து எமை இருத்த வேண்டிப்
பிறவா முதல்வன் பிறந்தான். – போற்றிப்பற்றொடை -69

//அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.// - பிலிப்பியர் 2: 6-7

அத்தத்துவங்களின் மூலம் இறைவன் மனிதனாக உலகிற்கு வந்தான் என்று நாம் அறியப் பெறுகின்றோம். மனிதனாக வந்த இறைவன் ஐம்புலன்களுக்கு உட்பட்டவனாகத் தான் இருந்திருக்க முடியும். இந்த விடயத்தையே நாம் கிருத்துவத்தில் இருந்தும் சைவ வைணவ சமயங்களில் இருந்தும் அறியப் பெறுகின்றோம்.

எனவே இறைவன் மனிதனாக உலகில் வந்தமையைக் குறிக்கவே 'ஐந்தவித்தான்' என்றச் சொல்லினை வள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பகுதியில் பயன்படுத்தி உள்ளார்.

இங்கே நாம் இப்பொழுது காண வேண்டியது அதே சொல்லினை வள்ளுவர் நீத்தார் பெருமையிலும் பயன்படுத்தி உள்ளார். அந்நிலையில் அத்தகைய பயன்பாடு இரு அர்த்தங்களுக்கு வழி வகுக்கும்...

1) நீத்தார் என்பது துறவறம் பூண்டவர்களைக் குறிக்கும் என்றால் ஐந்தவித்தான் என்றச் சொல்லின் மூலம், துறவறம் பூண்டவர்கள் எல்லாம் இறைவனாவார்கள் என்ற அர்த்தம் வரும்...
2) இல்லையெனில் இறைவனே மனிதனாக வந்து ஐம்புலன்களையும் அடக்கி உயிர் நீத்தான் என்ற அர்த்தம் வரும்.

இந்த இரண்டு அர்த்தங்களில் எந்த சமயமும் முதல் அர்த்தத்தினை ஏற்றுக் கொள்ளாது. அது இறைக் கொள்கைக்கு எதிரான கருத்து. அவ்வாறு இருக்கையில் இரண்டாவது அர்த்ததினையே நாம் காண வேண்டி இருக்கின்றது.

மனிதனாக வந்த இறைவன் உயிர் நீத்ததாக சமயங்கள் கூறுகின்றனவா என்றால் ஆம் என்றே விடை நமக்கு கிட்டுகின்றது. எனவே ஐந்தவித்தான் என்ற சொல்லின் மூலம் மனிதனாக வந்த இறைவனையும் அவர் மக்களுக்காக பலி ஆனதையும் திருவள்ளுவர் கூறி இருக்கின்றார் என்றே நாம் காண முடிகின்றது.

அதாவது கடவுள் வாழ்த்தும், நீத்தார் பெருமையும் இறைவனைக் குறித்து எழுதியவையே ஆகும். சரி இருக்கட்டும்... ஆனால் இரண்டிற்கும் இடையில் வான் சிறப்பு என்றொரு அதிகாரம் வருகின்றதே அது ஏன்? என்றொருக் கேள்வி இங்கே எழலாம்...!!!

கடவுள் வாழ்த்தும் இறைவனைப் பற்றியது...நீத்தார் பெருமையும் இறைவனைப் பற்றியது...அவ்வாறு இருக்க வள்ளுவர் ஏன் அவர்களுக்கு இடையில் மழையை சிறப்பித்து இருக்கின்றார்? என்றக் கேள்வி வருவது இயல்பே. ஆனால் இங்கே நாம் காண வேண்டியது வள்ளுவர் மழையைத் தான் சிறப்பித்து இருக்கின்றாரா என்பதே!!!

சென்ற பதிவிலே நாம் மேலோட்டமாகக் கண்டு விட்டோம்... வான் என்பது கடவுளின் சக்தியை குறிக்கும் ஒரு உருவகமே என்று. கிருத்துவத்தில் தூய ஆவி நீர் வடிவிலே உருவகம் செய்யப்பட்டு இருப்பதும்... இங்கே அம்மனும் 'மாரிஅம்மன்' என்று மழை மற்றும் நீரோடு தொடர்புப்படுத்தப்பட்டு இருப்பதும் இங்கே சிந்திக்கத்தக்கது. மேலும் கடவுளின் சக்தியைப் பற்றி நாம் முன்னரே பல விடயங்களைக் கண்டு விட்டதினால் இங்கே அவற்றைக் கூற வேண்டியதில்லை என்றே கருதுகின்றேன்.

எனவே வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் வள்ளுவர் மழையை சிறப்பிக்காது கடவுளின் சக்தியையே சிறப்பித்து உள்ளார் என்றே நாம் அறிகின்றோம்.

இதன் மூலம் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை என்ற மூன்று அதிகாரங்களில் இறைவனையே வள்ளுவர் வாழ்த்தி உள்ளார் என்றும் நாம் அறிந்துக் கொள்ளலாம். பொதுவாக கடவுள் வாழ்த்து மட்டுமே பாயிரத்தில் இருக்கும் ஆனால் இறைவன் மூன்று வடிவங்களில் திகழ்கின்றான் என்பதினால் வள்ளுவர் மூன்று அதிகாரங்களை இறைவனுக்கென்று இயற்றி உள்ளார் என்றே நாம் அறிந்துக் கொள்ள இயல்கின்றது.

இந்த நிலை மூஒருமைக் கோட்பாட்டினை குறிக்கின்றது. அதாவது ஒரே இறைவன் மூன்று நிலைகளிலே இருக்கின்றான் என்ற நிலை.

மேலும்,

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்"

என்று வள்ளுவர் கூறி இருக்கின்றார். அது என்ன பொறிவாயில் ஐந்தவித்தான்? என்றுக் கண்டோம் என்றால்... மனிதனாக வந்த இறைவன் மக்களுக்காக பொறியினில் (கருவியினில்) உயிர் துறந்தார். அப்படிப்பட்ட இறைவன் காட்டிய ஒழுக்க நெறியினில் நின்றார் நீடு வாழ்வார் என்றே பொருள் வருகின்றது.

தொடரும்...!!!

மூஒருமைக் கோட்பாடு:

1) ஒரே கடவுள் மூன்று நிலைகளில் விளங்குகின்றார் என்பது கிருத்துவக் கொள்கை...அப்படி இருக்க அதனைப் போன்றே சைவ வைணவ சமயத்திலும், மகாயான பௌத்ததிலும் கொள்கை காணப்படுவதன் அர்த்தம் யாது? சைவ இலக்கியங்கள் முழுவதிலுமே 'ஆதியான மூவரை' 'மூவராகிய ஒருவனை' என்றே குறிக்கப்பட்டு உள்ளன...கிமு காலத்தில் காணப்படாத இக்கொள்கை கி.பி காலத்தில் காணப்படும் காரணம் யாது?

2) விவேகானந்தர் நிலைகளிலே தாழ்ந்த நிலை துவைதம் என்றும் மிகவும் உயர்ந்தது திரியேக நிலை என்றும் கூறுகின்றார் (திரியேக நிலை - ஒன்று தான் ஆனால் மூன்றாக இருக்கின்றது). அதாவது கடவுள், ஆன்மா, உலகம் ஆகிய மூன்றும் ஒன்றுதான் ஆனால் வேறுவேறு நிலையில் உள்ளது என்கின்றார்...மேலும் இந்த திரியேக நிலை கிருத்துவ மூஒருமைக் கோட்பாட்டினை ஒத்து இருக்கின்றது என்றும் கூறுகின்றார்.

3) இன்று திரியேக நிலை என்றால் அது கடவுள் ஆன்மா உலகம் இவை மூன்றுமே ஒன்று தான் என்ற விளக்கம் கொடுக்கப்படுகின்றது…மேலும் அவை மூன்றும் ஒன்று தான் என்பதை அறிந்துக் கொள்ளாத வண்ணம் மாயைத் தடுக்கின்றது என்றும் கூறுகின்றனர். அதாவது இறைவனை மாயை மறைக்கின்றதாம்…அப்படி என்றால் இறைவனை மறைக்கும் வல்லமைப் பெற்ற மாயையை யார் தோற்றுவித்தது என்றக் கேள்விக்கு அங்கே விடை இல்லை…மேலும் இந்தக் கூற்றினை சைவ சித்தாந்தமும் மறுக்கின்றது. அவ்வாறு இருக்க திரியேக நிலை என்றால் என்ன என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

சைவ சித்தாந்தக் கருத்துக்கள்:

1) மேலும் கிருத்துவக் கருத்துக்களும் சைவ சித்தாந்தக் கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்றைப் போலவே இருக்கின்றன…

//உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6 - இது பவுலின் கூற்று.

இந்தக் கூற்றினை ஒத்த கருத்தையே திருமூலரும் கூறி இருக்கின்றார்.

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. – திருமந்திரம்

இதுவும் வெறும் ஒற்றுமையா?

//இறவா இன்பத்து எமை இருத்த வேண்டிப்
பிறவா முதல்வன் பிறந்தான். – போற்றிப்பற்றொடை -69

அருளுரு என்ற பொருளினை ஆயின்
மாயா உருவினன் மாயா உருவினை
ஏயான் எய்ந்தவர் எம்ம னோரே – சங்கற்ப நிராகரணம் – 25 – 27

அகலமாய் யாரும் அறிவரி தப்பொருள்
சகலமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற – திருஉந்தியார் 1

போன்ற வரிகள் இறைவன் உலகில் வந்து மனித உருவில் பிறந்தான் என்றுக் கூறுகின்றன…அதனைப் போலவே அவ்வாறு வந்த இறைவன் அவனாகவே அவனைத் தந்தான் என்று கூறுகின்றன.

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்
அத்தி பழுத்தது என்று உந்தீ பற
அப்பழம் உண்ணாதே உந்தீ பற – திருஉந்தியார் – 41

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்
அத்தி பழுத்த தருளென்னுங் – கத்தியினால்
மோகக் கொடியறுக்க முத்திப் பழம் பழுக்கும்
ஏகக் கொடி எழுங்காண் இன்று’ – திருக்களிற்றுப்படியார் – 93

உலகின் முதல் மனிதனுக்கே பாவம் படர்ந்து அவன் துன்பப்பட ஆரம்பித்தான் என்றும் அவ்வாறுப் படர்ந்த பாவத்தை அறுக்கும் ஒருவன் இன்று எழுந்து இருக்கான் என்றும் மேலே உள்ள வரிகள் கூறுகின்றனவே…!!! இதனையே சிவஞானபோதமும் விளக்குகின்றது.

“குருவடி வாகிக் குவலயந் தன்னில்
  திருவடி வைத்துத் திறமிது பொருளென
  வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
  கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே”


இந்தப் பாடல் மூலம் அவ்வையார் விநாயகரை ‘குருவாக இந்த உலகில் பிறந்து மக்கள் மகிழ்ச்சியாக இருக்க அவர்களின் பாவத்தினை கோடு ஆயுதத்தால் நீக்கினார்’ என்று கூறுகின்றார். ஆச்சர்யமாக இதுவும் இயேசு கிருத்துவின் கதையோடு பொருந்துகின்றது.

இப்பாடல்களுக்கு சைவம் கூறும் பொருள் யாது? இத்தகையக் கருத்துடைய பாடல்கள் கி.மு வில் காணப்படவில்லையே…

தமிழர்கள் தாழ்த்தப்பட்டமை:

மேலும் இந்த நூல்களை இயற்றியவர்களும் சரி வேறு சித்தர்களும் சரி பஞ்சமர்கள் என்றுக் கூறப்பட்டு உள்ளனரே? அது ஏன்?

உலகப் பொதுமுறையை தொகுத்த வள்ளுவன் எவ்வாறு பஞ்சமனானான்? என்ன தான் நடந்தது தமிழகத்தில்? இந்தியாவில்?

நந்தனாரும், திருப்பாணாழ்வாரும் தமிழில் பூசை செய்த கருவரைகளுள் என்றில் இருந்து தமிழுக்கும் தமிழர்களுக்கும் இடம் இல்லாது போயிற்று? அவர்களின் குடிகளான பறையர்களும் பாணர்களும் இன்று எவ்வாறு தாழ்த்தப்பட்டு இருக்கின்றனர்?

கிபி பதினைந்தாம் நூற்றாண்டு வரை, அதாவது கிருசுன தேவராயரின் படையெடுப்பின் வரை பழனிக் கோவிலில் தமிழர்களே பூசை செய்து வந்தனர் என்றும் அவர்களின் படையெடுப்புக்கு பின்னரே தமிழர்கள் வெளியேற்றப் பட்டனர் என்றும் வரலாறுகள் கூறுகின்றனவே...அது ஏன்?

தமிழ்:

மேலும் நாம் உலகின் வரலாற்றினை தெளிவாக அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால் தமிழையும் தமிழின் வரலாற்றையும் அறிந்து இருக்க வேண்டியத் தேவை இருக்கின்றது. உதாரணமாக ஒரு வார்த்தையைக் காணலாம்…

கோவேறு கழுதை = கோ + ஏறிய + கழுதை… அதாவது அரசன் ஏறிய கழுதை என்றே பொருள் தரும் ஒரு தமிழ் சொல்.

இதனை ஒன்று ஒரு காலத்தில் அரசர்கள் கழுதையில் வலம் வரும் பழக்கத்தினை உடையவர்களாக இருந்தனர் என்று பொருள் கொள்ளலாம்… அல்லது ஒரு காலத்தில் வாழ்ந்த மாபெரும் அரசர் அல்லது தலைவர் கழுதையில் ஏறி உலா வந்தார் … அதனைக் குறிக்கவே அக்கழுதை கோவேறுக் கழுதை என்று பெயர் கொண்டது என்றும் பொருள் கொள்ளலாம்…!!!

விவிலியத்தில் இயேசு கழுதை மீது ஏறிச் சென்றார் என்றும் அவரை அரசர் என்றே மக்கள் அழைத்தனர் என்றும் குறிப்புகள் வருகின்றன…இந்நிலையில் கோவேறுக் கழுதை என்றச் சொல்லுக்கு காரணம் என்ன? அப்பெயர் எக்காலத்தில் இருந்து பயனில் இருக்கின்றது என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

இதனைப் போன்றே பல விடயங்கள் இருக்கின்றன…சங்க காலப் புலவர்களில் ஒருவருக்கு மட்டுமே ‘திரு’ என்னும் சிறப்பு பட்டம் வழங்கப்பட்டு இருக்கின்றது… அவரது பெயர் ‘திருத்தாமனார்’…இது தோமாவைக் குறிக்குமா என்பது ஆராய்ச்சிகளுக்கு உட்பட்டது.

மேலும் இன்றைக்கு இந்தியாவில் அதிக அளவில் கிடைக்கப்பட்டு இருக்கும் கல்வெட்டுகளும், சுவடிகளும் தமிழிலேயே கிட்டப்பட்டு இருக்கின்றன…ஆயினும் அவைகள் படிக்கப்படாமலும் பராமரிக்கப் படாமலும் அழிந்துக் கொண்டு இருக்கின்றன இல்லையேல் திட்டமிட்டு அழிக்கப் பட்டுக் கொண்டு இருக்கின்றன. அவைகள் அனைத்தும் படிக்கப்படாமல் நாம் வரலாற்றினை முழுமையாக அறிந்துக் கொள்ள முடியாது.

தொடரும்...

வணக்கம் நண்பர்களே...!!!

வரலாற்றினைப் பற்றிய தொடரில் சமயங்களைப் பற்றி எழுதிக் கொண்டு வந்து இருக்கின்றேன். நன்றாகவே தெரியும்...வில்லங்கமான தலைப்புத் தான். இருந்தும் எழுதித் தான் ஆக வேண்டி இருக்கின்றது இயன்ற அளவு. காரணம் இன்று உலகம் இருக்கும் கவலைக்கிடமான நிலைக்கு ஒரே தீர்வு ஆன்மிகம் தான் என்று நான் உறுதிப்பட நம்புவதே ஆகும்.

ஆனால் சமயங்கள் என்று வரும் பொழுது ஒவ்வொரு சமயத்தினரும் ஒவ்வொரு கருத்துக்களைக் கொண்டு இருக்கின்றனர். அவை மட்டுமே உண்மை என்றும் அவர்கள் நம்பவும் செய்கின்றனர். பிழை இல்லை...அவர்களின் சமயத்தினைச் சார்ந்தவர்கள் அவ்வாறு தான் அவர்களுக்கு கூறி இருக்கின்றனர். ஆனால் நான் அனைத்துச் சமயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பினை உடையவை என்றும் இறைவன் ஒருவனே என்றும் நம்புகின்றேன். அனைத்துச் சமயங்களையும் நான் காணும் போதும் அந்த உண்மையையே காணுகின்றேன்.

அனைத்துச் சமயங்களுக்கு இடையிலும் மாபெரும் ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆனால் அந்த ஒற்றுமைகளை மறைத்த வண்ணம் மாபெரும் அரசியலும் இருக்கின்றது. அந்த அரசியலினைப் புரிந்துக் கொண்டால் தான் அந்த ஒற்றுமைகளை நாம் காண முடியும். நான் என்னால் இயன்ற அளவு நான் அறிந்தவனவற்றை நான் உண்மைகள் என்று நம்புவனவற்றை, அறிந்துக் கொண்டு இருப்பதை உங்களுடன் பகிரவே முயல்கின்றேன். காரணம் ஒரு நம்பிக்கை.... என்னுடைய பதிவுகளில் ஆழ்ந்தக் கருத்துக்களாக இருப்பது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றக் கோட்பாடும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றக் கோட்பாடுமே என்ற உண்மைகளே ஆகும் என்பதனை படிப்பவர்கள் அறிந்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை தான்.

இன்றுள்ள சமயங்கள் எவ்வாறு இருக்கின்றன என்றால் அரசியல் கட்சிகளைப் போலவே இருக்கின்றன.

கலைஞர் தவறு செய்கின்றார் என்றுக் கூறினால்... 'அப்படினா ஜெயலலிதா யோக்கியமா' என்றே பதில் வரும்... அவ்வாறே ஜெயலலிதாவைப் பற்றிப் பேசினால் 'உங்க கலைஞரப் பத்தி தெரியாதா'... என்றே பதில் வரும். அதாவது நாம் ஒரு கருத்தினை கூற விரும்பினால் உடனே நாம் எதிர் அணியினைச் சார்ந்தவராக மாற்றப்பட்டு விடுகின்றோம். திமுகவினைக் குறைக் கூறினோம் என்றால் நாம் அதிமுகவாக கருதப்படுகின்றோம். அவ்வாறே அதிமுகவினைக் குறைக் கூறினோம் என்றால் திமுகவாக கருதப்படுகின்றோம். இவ்வாறு மாறி மாறி மற்றவர்களைக் குறைக் கூறிக் கொள்வார்களே தவிர தாங்கள் தவறு செய்கின்றோம் என்பதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு பின்னர் திமுகவில் இருந்து பிரிந்தது தான் அதிமுக என்று கூறினால் அவ்வாறு கூறியவர் அன்று முட்டாளாகவே கருதப்படக் கூடுமாயிருக்கும். மேலும் அவ்விருகட்சிகளும் பெரியாரின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே எழுந்தவை என்றுக் கூறினோம் என்றால் நம்மை அன்று உலகம் பார்க்கும் பார்வையே வேறாக இருக்கக் கூடும். இன்றே பலர் திமுக தோன்றியதின் காரணத்தை மறந்து விட்டார்கள்...இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பின் அக்காரணம் அவர்களுக்கு நினைவில் இருக்கவா செய்யும்? வரலாற்றினை மட்டும் மறைக்கும் வல்லமை அப்பொழுது கிடைத்தால் அக்காலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தாங்களே முதலில் வந்த கட்சி என்றே கூற ஆரம்பித்து விடுவர்.

அதே நிலைமை தான் இன்று அனைத்துச் சமயங்களுக்கும்...அனைத்துச் சமயங்களும் அந்தந்த சமயங்களே உண்மையான சமயங்கள் என்றும் மற்ற சமயங்கள் எல்லாம் காலத்தில் எப்படியோ சிலரால் அரசியல் நோக்கிற்காக தோற்றுவிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றே கருதுகின்றன.

ஆனால் உண்மை என்ன? அனைத்து சமயங்களும் தொடர்பில்லாமல் தனித்தனியாகவா தோன்றின? சமயங்களுக்குள் தொடர்பே இல்லையா? என்று நாம் காண வேண்டும் என்றால் அனைத்து சமயங்களைப் பற்றியும் நாம் நன்கு அறிய முயற்சி செய்ய வேண்டி இருக்கும்…சமயக் கருத்துகள், அன்றைய சூழலில் நிலவிய அரசியல் கொள்கைகள்…வரலாறு…போன்றியவற்றினை நாம் கேள்விகளோடே அணுக வேண்டி இருக்கும்.

காரணம் சமயங்கள் என்பவை அந்தளவு விடயங்களைக் கொண்டு விளங்குபவை… அத்துடன் நாம் காணுகின்ற கால அளவும் சாதாரணது அல்ல. உலகத் தொடக்கத்தில் இருந்து வரலாற்றினைக் காண்பது, சரியாகப் புரிந்துக் கொள்வது என்பது எளிதான ஒரு செயல் அல்ல…!!! அதுவும் இன்று சமயங்கள் அனைத்தும் அரசியலினால் சிறைப் பிடிக்கப்பட்டு உள்ள நிலையில் ஏற்கனவே கடினமான அந்தச் செயல் மேலும் கடுமையானதொன்றாக ஆகின்றது.

எனவே சும்மா எடுத்தோம் கவிழ்த்தோம் என்றுக் கூறுவது யாதொரு பயனையும் தாராது மாறாக அந்தக் கூற்றுகள் விரைவில் அழிந்தும் போகும். அவ்வாறு இருக்க உண்மையினைத் தேடுவோர் அனைத்து விதத்திலும் ஆராய வேண்டித்தான் இருக்கின்றது. இறைவனையும் உண்மையான வரலாற்றையும் நம்புவோர்/விரும்புவோர் இத்தகைய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தான் வேண்டி இருக்கின்றது.

என்னுடைய பதிவுகளும் அப்படிப்பட்ட ஒரு முயற்சியே…!!! எனது பதிவுகளை அப்படியே தாங்கள் நம்ப வேண்டும் என்று நான் கருதவில்லை. மாறாக அதனைக் குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். சிந்திக்க வேண்டும் கேள்வி கேட்க வேண்டும்…உண்மையினைத் தேட வேண்டும் என்பதே எனது எண்ணம்.

நமக்கு நமது நூல்களில் உள்ள கருத்துக்கள் தெரியாது…ஏன் நமது சமய நூல்களையேத் தெரியாது…அவ்வாறு தான் நாம் வளர்க்கப்பட்டு இருக்கின்றோம். ஆனால் அந்த நிலை போதும். உண்மையிலேயே நமது சமயம் என்ன சொல்கின்றது, இறைவன் இருக்கின்றானா இல்லையா? வாழ்கை என்றால் என்ன என்றும் நாம் தேடி ஆக வேண்டிய நிலை இன்று நம்மிடையே இருக்கின்றது. சமயங்களைக் கடந்து இறைவனைத் தேடுவோம்…ஒன்று அனைவரையும் சமமாக படைத்த ஒரே இறைவன் இருக்கின்றான் என்றுக் கூறுவோம் இல்லையேல் இறைவனே இல்லை என்றுக் கூறுவோம்.

காரணம் இறைவன் என்று ஒருவன் இருந்தான் என்றால் அவன் அனைவரையும் சமமாகவேத் தான் படைத்து இருப்பான்.

நம்முடைய பயணங்களில் முக்கியமாக இரண்டு சமயங்களைப் பற்றி நாம் கண்டு கொண்டு வந்து இருக்கின்றோம்…இறுதியாக அவற்றைப் பற்றி சில கேள்விகள்/விடயங்கள் ஆகியவற்றை உங்களின் சிந்தைக்கு விட்டுச் செல்ல முயல்கின்றேன்…முதலில் இந்து சமயத்தில் இருந்தே ஆரம்பிப்போம்…!!!

கல் வழிபாடு/இயற்கை வழிபாடு:

1) சிந்து சமவெளியில் காணப்படும் கல் வழிபாடு, விவிலியத்திலும் காணப்படுகின்றது....இசுலாமியச் சமயத்திலும் காணப்படுகின்றது. கிருத்துவர்கள் இயேசுவை 'வாழும் கல்' என்கின்றனர். மெக்காவில் 'மா கல்' என்று கல்லினை வழிப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். - இது எல்லாம் வெறும் அர்த்தமில்லா ஒற்றுமைகளா?

திருநீறு:

1) இன்று திருநீறு என்றாலே அது சைவர்களின் சின்னம்...கிருத்துவர்களுக்கும் திருநீறுக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்று கருதுவதற்கு வாய்ப்பே இல்லை...அவ்வாறு இருக்கும் பொழுது விவிலியத்தில் திருநீற்றினைப் பற்றிய குறிப்புகளும் அவைகள் சமய சின்னமாக அணியப்பட்ட செய்திகளும் காணப்படுவது - வெறும் தற்செயலான ஒற்றுமைகளா?

2) மேலும் ‘நீறு செவ்வே யிடக்காணில் நெடுமாலடி யார் என்றுத் துள்ளும்” என்று நம்மாழ்வார் அவர்களும் பாடி உள்ளார். நண்பர் ஒருவர் 'செவ்வே' என்பது நேராக இடப்படும் சின்னம். எனவே இது சின்னம் தான் என்றார். சரி தான். நேராக மூன்று கோடுகளை இட்டால் அது வைணவச் சின்னம் தான். ஆனால் இங்கே திருநீற்றினை அல்லவா நேராக சூடி இருப்பதாக குறிக்கப்பட்டு உள்ளது. ஏன் அவ்வாறு கூறப்பட்டு உள்ளது - தற்செயலான ஒற்றுமையா அல்லது பிழையா?

3) இன்று சைவ சின்னமானது படுக்கை வசமாக திருநீற்றினால் மூன்று கோடுகள் போடுவது…அவற்றில் நடுக் கோட்டினில் குங்குமம் இட்டுக் கொள்வது. வைணவ சின்னமோ செங்குத்தாக மூன்றுக் கோடுகள் இட்டுக் கொள்வது அதன் நடுக் கோடு செந்நிறமாக இடப்படும்? – இந்த சின்னங்களுக்கு அர்த்தம் யாது?… ஏன் மூன்றுக் கோடுகள்?

4) மேலும் திருஞானசம்பந்தர் ‘வேதத்தில் உள்ளது நீறு’ என்று திருநீற்றினைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் இன்று வேதங்கள் என்றுக் கருதப்படுவனவற்றில் திருநீற்றினைக் குறித்து ஒரு வார்த்தைக் கூட கிடையாது. அப்படி இருக்க ஞானசம்பந்தர் குறிப்பிட்ட வேதம் யாது?

கடவுளின் சக்தி ஆணா பெண்ணா:

1) சக்தியின் ஆண் வடிவம் தான் பெருமாள் என்று சைவ ஆகமங்கள் கூறுவதாக சைவ அறிஞர்கள் கூறுகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் படி சிவனுக்கு சக்தியோடு இரு பிள்ளைகளும், அவ்வாறே பெருமாளோடு இரு பிள்ளைகளும் கூறப்பட்டு உள்ளார்களே? - அது தற்செயலான ஒற்றுமையா அல்லது பிழையா? இல்லை சைவ ஆகமங்கள் தவறாக கூறுகின்றனவா?

2) “அரியலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே” என்றே திருநாவுக்கரசர் கூறுகின்றார்…அதாவது அம்மனும் பெருமாளும் ஒன்றே என்றே கூறுகின்றார். அது ஏன்?

3) மேலே உள்ள கூற்றுகளை மெய்ப்பிப்பது போல ஏன் புராணங்களில் பெருமாளுக்கு மட்டும் மோகினி வடிவம் காணப்படுகின்றது?

இறைவனின் பிள்ளை:

1) பிள்ளையார் - ஒருவர் சக்தி பிள்ளையாரை அழுக்கினைக் கொண்டு உருவாக்கியதாக கூறுகின்றார்...மற்றொருவர் சிவன் ஒரு யானையாகவும் சக்தி மற்றொரு யானையாகவும் மாறி பிள்ளையாரைப் படைத்ததாக கூறுகின்றார்...இன்னொரு கருத்தோ பௌத்தர்களால் அழிக்கப்பட்ட சைவர்களை எண்ணி பிள்ளையார் உருவாக்கப்பட்டார் என்று கூறுகின்றார்...ஆனால் இக்கருத்துக்களுக்கு எல்லாம் முன்னரே சமணத்தில் பிள்ளையாரைப் போன்ற தோற்றம் உடைய ஒரு இயக்கன் இருந்து இருப்பது ஏன்? அவ்வாறே புத்தர் இருந்த அரச மரத்தின் அடியில் பிள்ளையார் வந்தது எப்படி? - இவற்றில் எவை உண்மை... என்ன தான் நடந்தது?

2) வரலாற்றுச் சான்றுகளின்படி முருகன் என்றப் பெயர் பிள்ளையாருக்கு முன்னரே காணப்பட்டு இருக்க, எவ்வாறு பிள்ளையார் அண்ணன் ஆனார், எப்படி முருகன் தம்பி ஆனார்?

3) மேலும் பிரமனும் சிவனுக்கும் பெருமாளுக்கும் மகனாக அறியப் பெறுகின்றான். அது ஏன்? பிரமனுக்கும் பெருமாளுக்கும் தொப்புள் கொடி உறவு ஏன்?

4) ஏன் விநாயகரும் முருகனும் வினைத் தீர்க்கும் கடவுளராய் குறிக்கப் படுகின்றனர்? விநாயகர் - வினைத் தீர்க்கும் விநாயகர் என்று வழங்கப்பெருகின்றார்... முருகனோ - வேலுண்டு வினையில்லை என்று வழங்கப்பெருகின்றார். ஏன் இறைவனின் பிள்ளைகளாக அறியப் பெறுவோர் வினையினைத் தீர்பவராய் அறியப்படுகின்றார்கள்?

5) மேலும் பிரமன் - 'பாவியர் பாவம் தீர்க்கும் பரமன் ஆய் பிரமன் ஆய்' என்ற வரிகளின் மூலம் பாவம் தீர்பவனாய் அறியப்பட்டு இருக்கின்றான்... அது ஏன்?

பாவம் போக்குதல்:
*
1) நீரில் மூழ்கினால் பாவம் போகும் என்பது இன்றைக்கு இந்துக்களின் நம்பிக்கை. ஆனால் அதே கருத்தும் கொள்கையும் விவிலியத்தில் காணப்படுகின்றதே. ஆற்றினில் மூழ்க வைத்து ஒருவரின் பாவங்களை போக்குவது என்பது விவிலியத்தில் குறிக்கப்பட்டு உள்ள ஒரு விடயமாயிற்றே... இவ்வாறு இருக்க இவையும் தற்செயலான ஒற்றுமையா? இந்த பழக்கங்களுள் எது முன்னர் வந்தது?

வேதங்களும் அவைகளின் காலமும்:

1) மேலும் சைவ வைணவ சமயங்கள் வேதத்தில் இருந்தே தோன்றின என்றே இது வரை கருதியும் கூறப்பட்டும் வந்துள்ளது. ஆனால் சமீப காலத்தில் தான் சைவ வைணவ சமயங்களுக்கும் இந்த ரிக்,யசுர்,சாம, அதர்வண ஆகிய வேதங்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. சமீப காலத்திலேயே இக்கருத்துகள் தோன்றுவதற்கு காரணம் அது வரை வேதங்களை மற்ற மக்கள் படிக்க கூடாது என்று இருந்த சட்டமே ஆகும். ஒரு சமயத்தின் புனித நூல்கள் என்று கூறப்படுவனவற்றை மற்றவர் படிக்கக் கூடாது என்று கூற வேண்டியதன் அவசியம் என்ன?

2) மேலும் திருஞானசம்பந்தர் 'வேதத்தில் உள்ளது நீறு' என்று திருநீற்றினைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் இன்று வேதங்கள் என்றுக் கருதப்படுவனவற்றில் திருநீற்றினைக் குறித்து ஒரு வார்த்தைக் கூட கிடையாது. அப்படி இருக்க ஞானசம்பந்தர் குறிப்பிட்ட வேதம் யாது?

3) மேலும் வேதங்கள் என்றாலே அவை நான்கு என்பது தான் எண்ணிக்கை. அவ்வாறு இருக்க மனு நீதி சாஸ்திரத்தில் அனைத்து இடங்களிலும் மூன்று வேதம் ஒதினவர்கள், மூன்று வேதங்கள் என்றே கூறப்பட்டு உள்ளதே அது ஏன்?

4) மேலும் மனு நீதியின் காலம் 10000 ஆண்டுகளுக்கு முன்னர் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அப்புத்தகத்தினில் புத்தரைப் பற்றி குறிக்கப்பட்டு உள்ளது, அர்த்த சாஸ்திரம் என்னும் நூலினைப் பற்றிக் குறிக்கப்பட்டு உள்ளது... மேலும் அந்நியர்களால் இந்தியாவின் வடக்குப் பகுதியில் கி.பி ஏழாம் நூற்றாண்டில் பிடிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்ட ஆர்ய வர்த்தம் என்ற இடத்தினைப் பற்றியும் குறிப்பு வருகின்றது. அவ்வாறு இருக்க மனு நூல் எவ்வாறு 10000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டு இருக்க முடியும்?

இராமாயணக் காலம்:

1) அதே போல் இராமாயணத்திலும் புத்தர்களைப் பற்றிக் குறிப்பு வருகின்றது. அப்படி என்றால் அந்த நூலும் புத்தர் தோன்றிய காலத்திற்கு பின்னர் தோன்றிய நூலாகத் தானே இருக்க வேண்டும்? புத்தர் தோன்றியதற்கு பின்னரா குரங்குப் படை இலங்கையை துவம்சம் பண்ணியது?

1. இராமனைப் பார்க்க வந்த பரதனிடம் ராமன் கேட்கும் பொழுது 'பவுத்தன் சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்களுடன் பழகாமலிருக்கிறாயா? புராணங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் பெரியோர்களுடைய சம்பிரதாயப் பரம்பரைப்படி அர்த்தம் செய்யாமல் கேவலம் தர்க்கத்தைப் பிரயோகித்து அவை இகத்திலும், பரத்திலும் பயனற்றவை என்று வாதிப்பவர்கள் அவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.

(அயோத்தி காண்டம் 100ஆவது சர்க்கம் 374 ஆவது பக்கம்)

2. ராமன் ஜாபாலி என்ற புரோகித ரிஷியிடம் கூறும்பொழுது, 'திருடனும் பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும், நாஸ்திகனுக்கும் பேதமில்லை' என்று சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(மேற்படி காண்டம், 106 ஆவது சர்க்கம்; 412 ஆவது பக்கம்)

3. சீதையைத் தேடிச் சென்ற அனுமான் இலங்கையில் சீதை இருந்த வனத்திற்குச் சற்று தூரத்திற்கப்பால் புத்தர் ஆலயம் போல் கட்டப்பட்ட ஒரு உப்பரிகையைக் கண்டார்.

(சுந்தரகாண்டம் 15ஆவது சர்க்கம்; 69 ஆவது பக்கம்)

(சி.ஆர்.சீனிவாசய்யங்கார் மொழிபெயர்ப்பு) - ராமாயணம் சில குறிப்புகள்- பெரியார்
*
மகாயான பௌத்தம்:

1) மகாயான பௌத்தம் இந்துக்களின் செல்வாக்கில் உருவான பௌத்தமாக இருந்தால் அதில் இந்துக் கொள்கைகள் தானே இருக்க வேண்டும்...மாறாக கிருத்துவின் கருத்துக்கள் அவற்றில் காணப்பட வேண்டியத் தேவை என்ன?

2) சிலர் மகாயான பௌத்தம் கி.மு விலேயே தோன்றிவிட்டது என்று கூறுகின்றனர்...ஆனால் வரலாற்றின் படி குசானப் பேரரசன் ஆன கனிஷ்கனின் காலத்தில் தான் மகாயான பௌத்தம் தோற்றுவிக்கப் படுகின்றது. அவன் காலத்தில் தான் புத்த சங்கத்தின் நான்காவது மாநாடு நடக்கப்பெருகின்றது. அதில் தான் மகாயான புத்தம் முழு உருப் பெறுகின்றது என்பதே இன்றைய ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள். அவனின் காலம் கி.பி முதல் நூற்றாண்டே.

தொடரும்...!!!

முதலில் இந்தப் பதிவுகளை முன்னரே படிக்கவில்லை என்றால் படித்து விடுங்கள்

வணிகமான மருத்துவமும் நமது கடமையும்
அழகுச் சாதனத்தில் அரசியல்
சரி இப்பொழுது தொடர்வோம்…!!!
இரு செய்திகள்…!!

ஒன்று….டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க அரசு மருத்துவமனைகளில் சித்த மருந்தான நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கப்படுகின்றது.
http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=35520

இரண்டு…புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகமான ‘ஸ்கை வாக்’ கினால் ஏற்படும் நெரிசலைத் தவிர்ப்பதற்காக நீண்ட காலமாக இருந்து வரும் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனையினை இடிக்க அரசு திட்டமிட்டு வருகின்றது.
http://savukku.net/home1/1676-2012-10-19-16-49-32.html

இந்த இரண்டு செய்திகளைப் பற்றித் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது. அதாவது ஆங்கில மருத்துவ முறையில் இல்லாத மருந்துகள் சித்த மருத்துவத்தில் இருக்கின்றது. ஆனால் அப்படிப்பட்ட மருத்துவ முறையை வளர்த்து எடுக்க அரசு எவ்வித முயற்சியும் செய்யாது மாறாக அம்மருத்துவ முறையினை சிறிது சிறிதாக அழிக்கும் வண்ணமே செயல்களைப் புரிந்துக் கொண்டு வருகின்றது. அரசு ஏன் அவ்வாறான செயல்களைப் புரிகின்றது என்பதனை நாம் அறிய வேண்டும் என்றால் இன்றைக்கு நம் மத்தியில் இருக்கும் மருத்துவத் துறையினைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவம் என்பது மக்களின் வாழ்வில் நீண்ட காலமாகவே இன்றியமையாத ஒன்றாக இருந்து வந்துக் கொண்டு இருக்கின்றது. காரணம் எளிதான ஒன்று தான். நம்முடைய உடல் சில நேரங்களில் நோய் வாய்ப்பட்டு விடுகின்றது, சில நேரங்களில் உடலில் காயங்களும் ஏற்பட்டு விடுகின்றன…அந்நேரங்களில் அந்தக் காரணிகளால் நாம் இன்னலுக்கு ஆளாகின்றோம்…அந்த நேரத்தில் உடலில் ஏற்பட்டுள்ள அந்த இன்னலினை நீக்கி மீண்டும் உடலினை சீரான நிலைக்குக் கொண்டு வர மருத்துவத்தின் உதவித் தேவைப்படுகின்றது. அக்காரணத்தினாலேயே மருத்துவம் மனிதர்கள் சென்ற இடம் எல்லாம் அவர்களுடன் சென்று அவர்களுடனேயே வளர்ந்து உள்ளது.

நோயும் காயமும் எவ்வாறு மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்கின்றனவோ அவ்வாறே மருத்துவமும் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்கின்றது. அதாவது பிறந்தக் குழந்தை முதல் இறக்கும் தருவாயில் உள்ள மனிதர் வரைக்கும் மருத்துவம் என்ற ஒன்று இன்றியமையாதுத் தேவைப்படுகின்றது. இந்த உண்மை அனைவருக்கும் தெரியும்…மக்களுக்குத் தெரியும், அரசுக்குத் தெரியும், மருத்துவ நிறுவனங்களுக்கும் தெரியும்.

மருத்துவம் அனைத்து மக்களும் ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் தேவைப்படுகின்றது…மேலும் மருத்துவம் என்றுக் கூறினாலே மக்கள் பலரும் கேள்விக் கேட்க மாட்டார்கள். இந்த உண்மையும் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையிலேயே நாம் நமது நாட்டினைக் காண வேண்டி இருக்கின்றது.
100 கோடி மக்கள் இங்கே வாழ்கின்றனர். அவர்களை சமூகமாகவும் பார்க்கலாம் அல்லது சந்தையாகவும் பார்க்கலாம்…ஆனால் எப்படிப் பார்த்தாலும் ஒரு மாபெரும் எண்ணிக்கையில் மக்கள் இங்கே வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவமும் தேவைப்படத் தான் செய்கின்றது.

இந்நிலையில் அப்படிப்பட்ட ஒரு சந்தையை நாம் பிடித்தோம் என்றால், அதாவது அவர்களுக்கு எந்த நோய் வந்தாலும் நம்முடைய மருந்துகள் மற்றும் மருத்துவ முறைகளையே நாடி வரும் வண்ணம் செய்தோம் என்றால், நாம் இலாபம் பெறுவோமா மாட்டோமா?…பணம் கொட்டுமா அல்லது கொட்டாதா?… கொட்டும் தானே. அந்த நிலையைத் தான் மருத்துவ நிறுவனங்கள் விரும்புகின்றன…அந்த நிலையைக் கொண்டு வருவதற்கே அவைகள் செயலும் புரிகின்றன. 100 கோடி மக்கள் உள்ள இந்தச் சந்தையைப் பிடிக்க அவைகள் அடித்துக் கொள்கின்றன…காரணம் பணம்!!! நம் கற்பனைக்கு எட்டாத பணம்…அவ்வளவே…!!! அந்த பணத்தினைப் பெறுவதற்கு அந்த மருத்துவ நிறுவனங்கள் விலையாய் காவுக் கொள்வது நம்முடைய ஆரோக்கியத்தையும் நல்வாழ்வினையுமே!!! அது எவ்வாறு…காண்போம்!!!

இன்று நம்முடைய சமூகத்தினுள் முக்கியமாக மூன்று மருத்துவ முறைகள் திகழ்கின்றன…ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம். இதில் ஆங்கில மருத்துவ முறை ஆங்கிலேயர்களோடு நம் மண்ணில் நுழைந்த ஒன்று…மற்ற இரண்டு மருத்துவ முறைகளும் நம்முடைய மண்ணிலேயே விளைந்த மருத்துவ முறைகள். ஆங்கில மருத்துவ முறையில் செலவுகள் அதிகமாக இருக்கும்…மேலும் மருந்துக்களும் முக்கியமான இடத்தினைப் பிடித்து இருக்கும். ஆனால் நம்முடைய மருத்துவ முறைகள் பெரும்பாலும் உணவினையும், இயற்கை மூலிகைகளையுமே அடிப்படையாகக் கொண்டு இருக்கின்றன. செலவும் கம்மியான அளவே இருக்கின்றது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், நம்முடையது ‘உணவே மருந்து’ என்ற நிலையில் இருக்கும் மருத்துவமாகத் திகழ்கின்றது…ஆங்கில மருத்துவமோ ‘மருந்தே உணவாகும்’ நிலையில் இருக்கின்றது. இங்கே தான் நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது.

‘உணவே மருந்து’ என்ற நிலையில் நாம் உண்ணும் உணவே நமது உடலுக்கு தேவையான வலுவினையும் மற்ற ஆற்றல்களையும் வழங்கி விடுகின்றது. உடல் நலத்திற்கென்று நாம் தனியாக வேறு எந்த மருத்துவப் பொருட்களையும் நாம் தேட வேண்டியதும் இல்லை அவற்றை நம்பி இருக்கவும் வேண்டியது இல்லை.

உடல் நலம் சரி இல்லை என்றால் வெறும் கஞ்சியினைக் குடித்து விட்டு படுத்துக் கொள்வது, உடலில் காயம் ஏற்பட்டால் மஞ்சளை எடுத்துப் பூசிக் கொள்வது, காய்ச்சல் என்றால் வெறும் இட்லியோடு கருப்பட்டி சாறினை வைத்து உண்ணுவது (இந்தக் கருப்பட்டி ஆனது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் ஆங்கிலேயர்கள் அவர்களின் பொருளான சீனியை வியாபாரம் செய்வதற்காக கருப்பட்டியினை பின்னுக்கு தள்ளி விட்டனர். அதாவது மற்ற பல பொருள்களைப் போல நல்லதான கருப்பட்டி பின்னுக்கு சென்று விட்டது, தீயதான சீனி முன்னுக்கு வந்து விட்டது வெறும் வணிக நோக்கிற்காக), மற்றும் ஆரோக்கியமான உணவு முறைகள், உணவு உண்ணும் காலங்களை சரியாகப் பின்பற்றுதல்…இன்னும் பல.

இவைகள் தாம் ‘உணவே மருந்து’ என்று நமது மண்ணில் இருந்த முறைகள் ஆகும். இந்த முறைகளில் செலவுகள் இல்லை…எவரையும் நாம் நம்பி இருக்க வேண்டியத் தேவையும் இல்லை. நமக்குத் தேவையான மருந்துகள், மருத்துவப் பொருட்கள் போன்றவைகளை நாமே எளிதாய் பெற்றும் கொள்ளலாம் வளர்த்தும் கொள்ளலாம். எனவே இந்நிலையில் மருத்துவத்தினை அறிவாக மட்டுமே காண முடியுமே அன்றி வணிகமாகக் காண முடியாது. இவ்வகையான மருத்துவம் வளர நாம் அதனைப் பற்றிய அறிவே போதுமானதொன்றாக இருக்கின்றது.

ஆனால் ஆங்கில மருத்துவ முறையோ முற்றிலும் மாறான ஒன்றாக இருக்கின்றது. அம்முறையில் நாம் மருந்துக்களை நம்பி இருக்க வேண்டிய நிலையே நிலவுகின்றது. அந்த மருந்துகள் ஏதாவது மருந்து நிறுவனத்தினைச் சார்ந்த ஒன்றாக இருக்கின்றன. அந்த மருந்துக்களை நாமே உருவாக்கிக் கொள்ளவோ அல்லது அம்மருந்துக்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதனைப் பற்றியோ நமக்கு எதுவும் தெரியாது. மருத்துவர் பரிந்துரைப்பார்…நாம் வாங்குவோம்…அவ்வளவு தான். இந்நிலையில் நாம் மருந்துக்களுக்கு அந்த நிறுவனத்தினைச் சார்ந்தே இருக்க வேண்டிய நிலை வருகின்றது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் அங்கே அறிவு முக்கியத்துவத்தினை இழந்து வணிகம் முக்கியமடைய ஆரம்பிக்கின்றது.

நம்முடைய நாட்டினில் பல மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. அவைகள் அனைத்தும் பல நோய்களுக்குரிய மருந்துக்களை தயார் செய்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் நம்மால் அனைத்து நிறுவனங்களின் மருந்துக்களையும் வாங்கி உண்ண முடியாது. நாம் நம்முடைய மருத்துவர் என்ன மருந்தினைக் கூறுகின்றாரோ அந்த மருந்தினை மட்டுமே வாங்கி அருந்துவோம். இது அந்த மருந்து நிறுவனங்களுக்கும் தெரியும். இந்நிலையில் அம்மருந்து நிறுவனங்களின் மருந்துக்கள் விற்பனை ஆக வேண்டும் என்றால் மருத்துவர்கள் அந்நிறுவனங்களின் மருந்துக்களை பரிந்துரைக்க வேண்டும். அதற்கு அந்த நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்? குறிப்பிட்ட மருத்துவர்களிடம் கூட்டு வைக்க வைக்கலாம்….அம்மருத்துவர்கள் அந்த நிறுவனங்களின் மருந்துக்களை பரிந்துரைக்க வேண்டும் என்றும் அதற்காக அந்த நிறுவனங்கள் அவர்களுக்கு ஏதேனும் கைமாறு செய்யும் என்றும் மறைமுகமாக ஒப்பந்தங்கள் இட்டுக் கொள்ளலாம்…அவ்வாறு செய்வதன் மூலம் மருந்துச் சந்தையில் தங்களின் பிடியினை பலப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு நிகழ வாய்ப்புகள் இருக்கின்றனவா இல்லையா என்பதனை உங்களின் அனுபவத்தில் இருந்து கிட்டப் பெற்று இருக்கும் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.

இவ்விடத்தில் நண்பர் ஒருவரின் கதையினை இங்கே காண்பதும் நலமாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன். நண்பருக்கு நீண்ட நாட்களாக கால் வலி இருந்துக் கொண்டே இருக்க அவர் ஒரு மருத்துவரிடம் சென்று இருக்கின்றார். நண்பரின் காலினை பரிசோதித்த மருத்துவரும், நண்பருக்கு இரண்டு மருந்துக்களை பரிந்துரை செய்து உள்ளார். ஒரு மருந்து கால் வலியினை குணமாக்க…ஆனால் அந்த மருந்தினால் குடல் அரிப்பு (அல்சர்) ஏற்படுமாம், எனவே அல்சருக்காக இரண்டாம் மருந்தாம்(எப்படி இருக்கு இலவசமா ஒரு நோயையும் தந்து அதுக்கு மருந்தையும் தாரானுங்க).

இப்பொழுது நாம் கண்டு உள்ள ஆங்கில மருத்துவமுறையில் நம்முடைய அறிவிற்கு வேலை மிகவும் குறைவாகவே உள்ளது….மாறாக நமது பணத்திற்குத் தான் வேலை அதிகமாக இருக்கின்றது. நிற்க.

இப்பொழுது நாம் கண்டு உள்ள இரு மருத்துவமுறைகளில், ஒன்று அறிவினைச் சார்ந்தும் மக்கள் அனைவருக்கும் எளிதாய் இயல்பாகவே கிட்டும் வண்ணம் இருக்கின்றது. மற்றொன்றோ வணிகமயமாக்கப் படுவதற்கு மிகவும் உகந்ததாய் இருக்கின்றது. பணம் அதனில் அதிகமாகத் தேவைப் படுகின்றது. இதனில் எந்த முறையினைத் தாங்கள் தேர்வு செய்வீர்கள்?
பணமும் அதிகமாகச் செலவாகி அடுத்தவரை நம்பி இருக்க வேண்டிய மருத்துவ முறையினையா அல்லது பணச் செலவு அதிகம் இன்றி இயல்பாகவே கிட்டும் மருத்துவ முறையினையா?
பணச் செலவு அதிகமில்லாத முறையினைத் தானே தாங்கள் தேர்வு செய்வீர்கள். அது தானே மனிதரின் இயல்பான போக்காக இருக்கும். அவ்வாறு இருக்க இன்றைக்கு நம்முடைய நாட்டினில் பார்க்கும் பொழுது, அத்தகைய இயற்கை மருத்துவ முறைகள் மலிந்துப் போயும், ஆங்கில மருத்துவ முறைகள் பெருமளவு பரவி இருப்பதையுமே நாம் காணுகின்றோம். வித்தியாசமான நிலை தான் அல்லவா…இப்பொழுது ஏன் இந்த நிலை இருக்கின்றது என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

இந்த நிலை ஒன்று, இயற்கை மருத்துவத்தில் நோய்களுக்கு மருந்துக்கள் இல்லாத காரணத்தினால் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். அதாவது ஒரு மருத்துவ முறையில் நோய்களுக்கு மருந்துக்கள் இல்லாத நிலையில் மக்கள் வேறு முறைகளுக்கு செல்வது இயல்பு தானே. ஆனால் நாம் சில நிகழ்வுகளையும், ஆராய்ச்சிகளையும் காணும் பொழுது இயற்கை மருத்துவத்தினில் நோய்களுக்கு தீர்வுகள் இருப்பதாகவே அறியப்பெருகின்றோம். எனவே நோய்களுக்கு மருந்தில்லை அதனால் இயற்கை மருத்துவ முறைகள் மலிந்துப் போயின என்ற வாதத்தினை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே வேறு ஏதேனும் காரணிகள் இருக்கக் கூடுமா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் இயற்கை மருத்துவம் என்பது அறிவினைச் சார்ந்தது…பழக்க வழக்கங்களைச் சார்ந்தது…ஒருவேளை அந்தச் சிந்தனைகள், மருத்துவ முறைகள் குறித்த அறிவுகள் மறைந்துப் போயிருந்தால் இந்த மருத்துவ முறையும் மலிந்து போயிருக்கலாம் அல்லவா…? அதாவது என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாவிட்டால் எந்த முறையும் நிலைத்து நிற்காது அல்லவா…ஒருவேளை காலத்தில் மக்கள் இயற்கை மருத்துவத்தினை புறக்கணிக்க ஆரம்பித்து இருப்பர்…அல்லது புறக்கணிக்க வைக்கப்பட்டு இருப்பர்…அந்நிலையில் கவனிப்பார் எவரும் இன்றி காலப்போக்கில் அம்மருத்துவ முறையும் மலிந்துப் போய் இருக்கலாம் அல்லவா. இந்த வாதம் ஓரளவு சரி என்றே படுகின்றது. ஆனால் நோய்களுக்கு மருந்துகளும் இருக்கின்றது… செலவும் இல்லை என்று இருக்கும் மருத்துவ முறையினை மக்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்றுக் கண்டோம் என்றால் அதற்கு விடையாய் நமக்கு கிட்டுவது ஒன்றே ஒன்று தான்.

அரசியல்…!!! இதனைப் பற்றி நாம் இந்தப் பதிவில் விரிவாக காண வேண்டாம்….சுருக்கமாகவே கண்டு விடலாம்.

மக்கள் என்றுமே மன்னன் எவ்வழியோ அவ்வழியே தான்…(அன்றும் சரி…இன்றும் சரி சமூகத்தில் பெருவாரியான மக்கள் அவ்வாறு தான் இருக்கின்றனர்). ஆங்கிலேயர் இங்கே வணிகத்திற்காகத் தான் வந்தனர். அவ்வாறு வந்த அவர்கள் இங்கே நீண்ட காலம் ஆட்சியையும் புரிகின்றனர். நிலைமை அப்படி இருக்கும் பொழுது ஆங்கிலேயர் எவ்வித மருத்துவத்தினை வளர்த்து இருப்பர்? எவ்வித மருத்துவத்தினை கற்றவர்களுக்கு முன்னிலை அளிக்கப்பட்டு இருக்கும்? ஆங்கிலேயரின் மருத்துவத்தினை பயின்றவருக்கா அல்லது மாற்று மருத்துவத்தினைப் பயின்றவருக்கா? அவர்களின் மருத்துவத்தினை கற்றவர்களுக்குத் தானே முன்னுரிமை வழங்கப்பட்டு இருக்கக் கூடும். அப்படி இருக்கும் பொழுது மாற்று மருத்துவங்கள் பின் தள்ளப்பட்டுத் தானே இருக்கும். அப்படிப் பார்க்கும் பொழுது எவ்வாறு இயற்கை மருத்துவ முறைகள் மலிந்துப் போய் இருக்கின்றன என்பதனை நாம் கணிக்க முடிகின்றது தானே. (ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னர் மருத்துவத் துறை எவ்வாறு இருந்தது…அது அப்பொழுதும் ஓடுக்கப்பட்டு இருந்ததா இல்லையா என்பது வேறு வரலாறு…அது இங்கேத் தேவை இல்லை).

சரி ஆங்கிலேயர்கள் ஆங்கில மருத்துவத்தினை வளர்த்தார்கள்…பிழையில்லை…அவர்கள் எதனை உருவாக்கினார்களோ அதனை அவர்கள் வளர்த்தனர்…அவர்களின் பார்வையில் அது சரிதான். விட்டு விடலாம். ஆனால் இப்பொழுது கேள்வி நம்முடைய ஆட்சியாளர்களை நோக்கித் திரும்புகின்றது.

சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் ஏன் நாமும் ஆங்கில மருத்துவ முறையையே வளர்த்துக் கொண்டு இருக்கின்றோம்? நம்முடைய பிள்ளைகள் கவனிப்பாரற்று இருக்கும் பொழுது எதற்காக நாம் அடுத்த வீட்டுப் பிள்ளைகளையே ஏந்திக் கொண்டும் கொஞ்சிக் கொண்டும் இருக்கின்றோம். கொஞ்ச வேண்டாம் என்று சொல்லவில்லை…ஆனால் சொந்தப் பிள்ளைகளை பட்டினி போட்டு விட்டா வேறு பிள்ளைகளுக்கு விருந்துப் படைக்க வேண்டும்?

நம்முடைய அரசு அவ்வாறு தான் செய்துக் கொண்டு இருக்கின்றது. ஆங்கில மருத்துவத்தினை வளர்க்க காட்டும் ஆர்வத்தில் பத்தில் ஒரு பங்கே அது நமது சொந்த மருத்துவ முறைகளில் காட்டுகின்றது. தவறு தான்…போய்த் தொலையட்டும்…ஏதோ ஒரு மருத்துவத்தினையாவது மக்களுக்காக வளர்க்கின்றதே என்று நாம் எண்ணலாம் என்றால் அதற்கும் வழி செய்ய மாட்டேன் என்கின்றது அரசு. காரணம் அரசு மக்களுக்காக ஆங்கில மருத்துவத்தினை வளர்ப்பதில்லை…மாறாக வணிகத்திற்காகவே வளர்க்கின்றது.

அதனால் தான் அரசு மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள், மருத்துவர்களின் சட்டங்கள் போன்றவைகள் புறக்கணிக்கப்பட்டு அவற்றுக்கு மாறாக தனியார் மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவர்கள் போன்றவைகளை அரசு ஊக்குவிக்கின்றது. காரணம் அரசே மருத்துவ வசதிகளை தரமாக வழங்கினால் எவ்வாறுக் காசு பார்க்க முடியும்? அரசு மக்களுக்கு சேவைகள் வழங்கக் கடமைப்பட்டு இருக்கின்றது…ஆனால் தனியார்கள் அவ்வித கடமை ஏதும் அற்றவர்கள்…அவர்களைக் கேள்விக் கேட்க மக்களால் முடியாது…அரசாலே மட்டுமே முடியும். ஆனால் அரசில் இருப்பவர்களே தனியார்களாகச் செயல் பட்டால் யார் யாரைக் கேள்விக் கேட்பது? அது தான் இங்கே நடக்கின்றது.
வணிகமாக பயன்படுத்தப்பட முடியாத ஒரே காரணத்தினால் இயற்கை மருத்துவ முறைகள் இங்கே புறக்கணிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன…அவ்வாறே அரசு சார் நிறுவனங்களும், மருத்துவமனைகளும் இலாபம் தரமாட்டாது என்றே ஒரேக் காரணியினாலே புறக்கணிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

அனைத்திற்கும் காரணம் ஒன்றே ஒன்று தான்…பணம்…கனவிலும் கற்பனைப் செய்ய முடியாத அளவு பணம்.

அதற்காகத்தான் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இங்கே காளான்களைப் போல் முளைக்கின்றன…அதனால் தான் தனியார் மருத்துவமனைகள் பல இயங்குகின்றன…அதனால் தான் ஆங்கில மருத்துவம் தழைத்து விளங்குகின்றது. அதனால் தான் இன்றைக்கு மருத்துவத்திற்கு ஆகும் செலவுகள் எகிறிக் கொண்டே போகின்றன…ஆயினும் உடல் முற்றிலுமாக குணமாக மாட்டேன் என்கின்றது.

காரணம் இன்றைய சமூகத்தில் உள்ள மருத்துவ முறை நோயாளிகளை வாடிக்கையாளர்களாக மாற்றுகின்றதே அன்றி அவர்களை குணப்படுத்த மாட்டேன் என்கின்றது. நீங்கள் நோயாளியாக இருக்கும் வரை தான் அவர்கள் பிழைப்பினை நடத்த முடியும். இன்று மருத்துவம் என்பது சேவையாக இல்லாது ஒரு வணிகமாகவே மாறி விட்டது.

இதனைத் தடுக்க வேண்டிய அரசாங்கமோ, அந்த வணிகத்தில் இலாபத்தினைப் பார்க்கும் பங்குதாரராகவே தன்னை இன்று வைத்துள்ளது. அதனால் தான் புதியக் கல்லூரிகளை அது திறக்காமல் தனியார்களிடம் விடுகின்றது…அவ்வாறே மருத்துவமனைகளையும் தான். இன்று மருத்துவம் பயில வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் பலரும் ஆங்கில மருத்துவத்தினையே அவர்களின் சிந்தையில் கொண்டு இருக்கின்றனர். இதனையும் மாற்றாது பேணிப் பாதுகாத்துக் கொண்டு வருகின்றது நம்முடைய அரசு.

காரணமாக அது கூறுவது ஒரு வேடிக்கையான விடயம்…”அனைத்து துறைகளையும் எவ்வாறு அரசாங்கமே ஏற்று ஒழுங்காக நடத்த முடியும்…அது கடினமான ஒரு செயல்” என்று சாக்குபோக்கு சொல்கின்றனர். ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்று தான் அவர்களுக்கு வாக்களித்து ஆட்சியினை கையில் தந்து இருக்கின்றார்கள் மக்கள்…அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால் எதற்காக இவர்கள் முன்னே வந்தனர்…தாராளமாக பதவியினை விட்டு விலகி விட வேண்டியது தானே…ஏனெனில் அரசு செய்வதுக் கடினம் என்றுக் கூறும் விடயங்களை செம்மையாகச் செய்யும் மக்கள் இங்கே பலர் உள்ளனர். வாய்ப்புகள் தான் அவர்களுக்கு கிட்டப்பெற மாட்டேன் என்கின்றது. அதனை விடுத்து எங்களால் முடியவில்லை நாங்கள் தனியாரிடம் தந்தோம் என்றுக் கூறுவது எல்லாம் காசு பார்க்கும் செயலே அன்றி வேறு இல்லை.

அரசின் இந்த நிலையினால் தான் காலாவதியான மருந்துகள் கூட நாட்டினுள் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. மருந்துகள் விற்பனையாகவில்லை என்றால் இலாபம் போய் விடுமே என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே காலாவதியான மருந்துக்களை அவை மக்களின் உயிர் பறிக்கும் என்று அறிந்தும் கூட சிலர் நாட்டினில் விற்பனை செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் பண மயம். மேலும் அவர்களே அரசிலும் பங்கு வகித்தும் கொண்டு இருக்கலாம்…எனவே அவர்களின் மேல் அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதினை நாம் நம்பலாமா அல்லது கூடாதா என்பதனை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

இந்நிலையில் தான் நம்முடைய பொறுப்புகள் அதிகமாகின்றது. நம்முடைய உடல் நலத்தினை மட்டும் அன்றி நம்முடைய சமூகம், நமக்கு பின் வரக் கூடிய தலைமுறை அவர்களின் உடல் நலத்தினையும் நாம் கருத்தில் கொண்டே செயல் ஆற்ற வேண்டி இருக்கின்றது.

நம்முடைய இயற்கை அறிவினை, மருத்துவ முறையினை பற்றிய தெளிவினை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது…அதற்காக முயற்சிகளாவது செய்ய வேண்டி இருக்கின்றது. அத்துறைகளில் ஈடுபட்டோரை அணுகி, அவர்கள் கூறும் முறைகள் சரியானவைகளாகத் தெரிந்தால் அவற்றை நாம் மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டியக் கடமையும் இருக்கின்றது. மருத்துவம் வணிகம் என்ற நிலையில் இருந்து சேவை என்ற நிலைக்கு கொண்டு வருவது சரியான ஒன்று தானே…காசிருந்தால் மட்டுமே உயிர் காக்கும் மருத்துவம் மருத்துவமா? மருத்துவம் பணத்தின் அடிப்படையிலா கட்டப்பட்டு இருக்க வேண்டும்? மனிதத்தின் அடிப்படையில் அல்லவா அது கட்டப்பட்டு இருக்க வேண்டும். நாம் பெற்ற கல்வி, சிந்தனைத் திறன் ஆகியவை அந்த இலக்கிற்கும் சிறிது பயன்படலாமே…தவறில்லையே….!!!

நம் உடல்நலம்…நம் மருத்துவம்…நம் உரிமை அல்லவா!!!

பி.கு:

1) இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும்.

2) அதனைப் போன்றே இயற்கை மருத்துவ முறையினை வளர்க்கவோ அல்லது அதனைப் பற்றி அறிந்துக் கொள்ளவோ ஏதேனும் வழிமுறைகள் தங்களுக்கு தோன்றியது என்றால் அதனையும் பகிர்ந்துக் கொள்ளலாம். நிச்சயமாக உதவும்.

3) இந்தப் பதிவில் ஆங்கில மருத்துவத்தினை முற்றிலுமாக மறுத்து பேசவில்லை. அதுவும் ஒரு மருத்துவ முறை தான். ஆனால் பெரும்பாலும் வணிகத்திற்கு அடிமையாய் கிடக்கின்றது. இருந்தும் அதனை நாம் எப்பொழுது பயன் படுத்த வேண்டி இருக்கின்றதோ அப்பொழுது பயன் படுத்தலாம். நம்மிடையே இருக்கும் முறைகளில் இல்லாத தீர்வு வேறொரு முறையில் இருந்தால் ஏற்றுக் கொள்வது முறைதானே. அனைத்துக் குழந்தைகளையும் நாம் கொஞ்சலாம்…ஆனால் அதற்கு அடிப்படையாக அவர்கள் அனைவரையும் நாம் நல்லவர்களாக சமமானவர்களாக வளர்க்க வேண்டும் அல்லவா.

4) இயற்கை மருத்துவக் குறிப்புகளைப் பற்றி தமிழக அரசு வெளி இட்ட ஒரு புத்தகத்தில் இருந்துச் சில குறிப்புகளை நண்பர்களுக்கு இயன்ற நாள்தோறும் அனுப்பி வருகின்றேன். ஒரு விழிப்புணர்வாக இருக்கட்டுமே என்றுக் கருதியே அனுப்புகின்றேன். அவை என் எண்ணப்படி குறிப்புகளுக்காக மட்டுமே இப்பொழுது பயன்படும். அவற்றினை எவ்வாறு செயல் படுத்துவது? எவ்வாறு நடைமுறைக்கு கொண்டு வருவது? அவை சரியானதொன்றாக இருக்குமா என்பதனைக் குறித்து சிந்தனைகள் போய்க் கொண்டு இருக்கின்றன…பல்வேறுக் கனவுகளோடு ஒருக் கணவாய் இதுவும் சுற்றிக் கொண்டு இருக்கின்றது…காண்போம்…என்ன செய்ய முடிகின்றது என்பதனைப் பற்றி!!!

கடந்து வந்த காலத்துல
கண்டு வச்ச கனவுகள
உனக்கெனத்தான் தொகுத்து வைச்சேன்
ஒரு உலகத்தையே படைச்சி வைச்சேன்!!!
 *
மரங்கள் சூழ நீளுமடி
ஒரு ஒத்தை அடிப் பாதையடி…
அதில் நீயும் நானும் நடக்கையிலே
சிரித்தே வழி ஒதுங்குமடி கான மயில் கூட்டமடி!!!
 *
மாலை நேரம் வந்துப்புட்டா
வயலோரம் தென்றலுந்தேன் வீசுமடி….
உன் பேர மெல்ல சொல்லிப்புட்டா
நாணலுந்தேன் கொஞ்சம் நாணுமடி!!!
 *
ஊரெங்கும் நல்ல சனம் நெறஞ்சிருக்கும்
வாயார நம்மையுந்தேன் வாழ்த்தி இருக்கும்…
அங்கே உறவுக்கும் கணக்கு இருந்ததில்ல
மன நிறைவுக்கும் பஞ்சம் என்றுமில்ல…!!!
 *
வண்ண வண்ண பூக்களுந்தேன்
ஊரெங்கும் பூத்திருக்கும்..
பேர் ஒண்ணும் சூடாமலே
சூடாமணி நீ பேர் வைக்கக் காத்திருக்கும்…!!!
 *
ஊருப் பொடுசுகளெல்லாம் ஆட்டம் போட
நதி ஒண்ணும் அங்கிருக்கும்…
ஆத்தோரமா ஆலமரம்
நமக்கெனத்தான் காத்திருக்கும்…!!!
 *
இன்னும் கனவாயிரம் இருக்குதடி
அதுல எத நான் சொல்வதடி…
மறந்து ஒண்ண விட்டாலும்…
மற்றதெல்லாம் திட்டுமடி!!!
 *
அப்படி ஒரு உலகந்தேன்
உனக்காக எண்ணி வச்சேன்…
இராப்பகலா கண்ட கனவத்தேன்
அங்கங்கே விதைச்சி வச்சேன்…!!!
 *
என்ன பண்ணி என்னவடி…
கண்ட கனவின்றுக் கலையுதடி…
ஊர விக்கும் ஒருக் கூட்டம்
என் கனவத்தேன் திருடுதடி…!!!
 *
விழுது விட்ட ஆலமரம்
விறகாகச் சாய்ந்ததடி…
பேர மட்டும் விட்டுப்புட்டு
ஆறுந்தேன் வறண்டதடி…
 *
ஆட்டம் போட்ட பொடுசெல்லாம்
பட்டணந்தேன் போயாச்சி…
பொடுசுகளை எண்ணியே
பெருசுகளும் திண்ணையிலே தல சாச்சாச்சி
 *
வயலெல்லாம் காயுதடி
தென்றலையும் காணோமடி…
பேரில்லா பூக்களுந்தேன்
அனாதையா வாடுதடி…
 *
கான மயில் கூட்டமெல்லாம்
மரிச்சி போயி நாளாச்சி…
மரம் ஒன்றும் இல்லாம
குயிலைக் கண்டும் நாளாச்சி…!!!
 *
முதல போட்ட மொதலாளி
காசத்தான் தேடுறான்…
கனவைத் தொலைச்ச சராசரியோ
வாழ்வைத் தான் தேடுறேன்…
நீ வாழ
நல்ல உலகம் படைக்கத் தான் ஏங்குறேன்!!!
 *
மீண்டும் ஆறெல்லாம் ஓடணும்…
தென்றலுந்தேன் வீசணும்…
வாடிப் போன வயலிளெல்லாம்
முப்போகம் விளையணும்..
விழுது விட்ட ஆலமரம்
பல தலைமுற காணணும்…
நீ சூடிக் கொள்ளவே
பல பூக்களும் பூக்கணும்…!!!
 *
இம்பூட்டையும் செய்யாம
உன்ன மட்டும் காதலிச்சா…
அவளுக்கேத்த உலகத்துல
அவள வாழ வைக்கலையேன்னு
எம் மனசுந்தேன் என்னக் குத்தும்…
அதுவே தான் தெய்வக் குத்தம்!!!
 *
எனவே உனக்காகத்தான் வாழுறேன்…
உசுர கொடுத்து வாடுறேன்…
கனவக் கொல்லும் உலகுக்குள்ள
வேற என்ன செய்ய நானும் புள்ள…!!!

கையில் கிட்டிய காகிதத்தில் எல்லாம்
கிறுக்கித் தள்ளுகின்றது
என் காதல்…!!!
*
கிறுக்கிய அனைத்தையும் கவிதை என்றே
ஏற்றும் கொள்ளுகின்றது
உன் காதல்…!!!
*
“கிறுக்கல்கள் எல்லாம் கவிதையா?”
என்று வினவும் தோழிக்கு
“கிறுக்கல்கள் அல்ல…முயற்சிகள்!!!”
என்றுக் கூறியே நகர்கின்றாய்…
*
சிரித்துக்கொண்டே என் முயற்சிகளை கவிதைகளாய்
மொழிப்பெயர்த்துக் கொண்டிருக்கின்றது
நம் காதல்…!!!
*
கா(ஆ)தலால் நானும் கவிஞனாகின்றேன்!!!
என்ன செய்ய…
உலகில் காதல் இருக்கும் வரை
கவிஞர்களுக்குப் பஞ்சம் இருப்பதில்லை தான்!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி