மு.கு:
நீண்ட நாட்களுக்கு முன்னர் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் படித்தக் கதை இது. நீண்ட நாட்களாகவே இதனை மொழிப்பெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துக் கொண்டே இருந்தது. இன்ற நேரம் கிட்டியமையால் மொழிபெயர்த்து உள்ளேன். இப்பொழுது அந்தக் கதைக்குச் செல்லலாம்…!!!

ஒரு கடனின் கதை:

அழகிய கிராமம் அது.

பசுமையான புல்வெளிகள், நீரோடைகள், வயல்கள் என்று எந்த ஒரு வளத்திற்கும் குறைவில்லாத கிராமம் அது. மேலும் அன்பே உருவான மக்களும் அக்கிராமத்தில் வசித்து வந்தனர். அமைதியான வாழ்க்கை மகிழ்ச்சியான தருணங்கள் என்றே சென்றுக் கொண்டு இருந்த அந்த மக்களின் வாழ்வில் திடீர் என்று அவர்கள் எதிர்பார்க்காத ஒரு சோதனை பொருளாதார நெருக்கடி என்ற வடிவில் வருகின்றது. எப்படி வந்தது எதனால் வந்தது என்று தெரியவில்லை, இருந்தும் அந்த ஊரில் ஒவ்வொருவரும் மற்றொருவருக்கு கடன் பட்டு இருக்கின்றனர்.

விடுதிக்காரர் தனது விடுதிக்கு வாங்கிய காய்கறிகளுக்காக மளிகைக் கடைக்காரரிடம் கடன்பட்டு இருக்கின்றார். மளிகைக் கடைக்காரரோ விவசாயியிடம் கடன்பட்டு இருக்கின்றார். அந்த விவசாயியோ தனது மகளுக்காக வாங்கிய உடைக்காக துணித் தைப்பவரிடம் கடன்பட்டு இருக்கின்றார். அந்தத் துணித் தைப்பவரோ நூலும் துணியும் வாங்கியதற்காக நூல் விற்பவருக்கு கடன்பட்டு இருக்கின்றார். அந்த நூல் விற்பவரோ, தனது இல்லத்தில் நிகழ்ந்த விழாவிற்கு வந்து இருந்த உறவினர்களை விடுதியில் தங்க வைத்த செலவிற்காக விடுதிக்காரரிடம் கடன்பட்டு இருந்தார்.

இவ்வாறு ஊரே ஒருவரிடம் ஒருவர் கடன் பட்டு இருக்கும் நிலையில் தான் அந்த ஊருக்கு சுற்றுலாப் பயணி ஒருவர் வருகின்றார். அவருக்கு தங்குவதற்கு இடம் வேண்டி இருப்பதினால் நேராக விடுதிக்கு சென்று “விடுதிக்காரரே வந்தனங்கள்…!!! நான் உங்கள் ஊரில் சில நாட்கள் தங்கிச் செல்லலாம் என்று எண்ணி உள்ளேன். ஆனால் தங்குவதற்கு வேறு இடங்கள் இல்லாததால் உங்களின் விடுதியில் தங்கலாமா என்று சிந்தித்துக் கொண்டு இருக்கின்றேன். நான் சிந்திப்பதற்கு காரணம் பொதுவாக நான் தூய்மையான இடங்களிலேயே தங்குவேன், ஆனால் உங்களின் விடுதி தூய்மையாக இருக்கின்றதா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. எனவே முதலில் உங்களின் விடுதியைக் கண்டுவிட்டு பின்னர் நான் இங்கே தங்கலாமா அல்லது வேண்டாமா என்று முடிவு செய்துக் கொள்ளலாம் என்றே எண்ணுகின்றேன். இதோ முன்பணமாக 100 உருபாயினைப் பெற்றுக் கொள்ளுங்கள். நான் உங்களின் விடுதியினைச் சுற்றிப் பார்த்துவிட்டு, ஒருவேளை எனக்கு பிடிக்கவில்லை என்றால் திரும்பி வந்து இந்த முன்பணத்தினைப் பெற்றுக் கொள்கின்றேன்…இதில் உங்களுக்கு சம்மதமா” என்று விடுதிக்காரரிடம் கேட்டார்.

விடுதிக்காரருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு வாடிக்கையாளர் வந்து இருக்கின்றார். எனவே மகிழ்ச்சியுடன் “வந்தனங்கள் ஐயா…எனக்குச் சம்மதமே…தாராளமாய் நீங்கள் அறைகளைப் பாருங்கள்…அவ்வாறு உங்களுக்கு அறைகள் பிடிக்க வில்லை என்றால் நிச்சயமாக திரும்பி வரும் பொழுது தங்களின் முன்பணத்தினைப் பெற்றுக் கொள்ளுங்கள்…ஆனால் உங்களுக்கு அறைகள் பிடிக்கும் என்றே நான் எண்ணுகின்றேன்.” என்றுக் கூறி அந்தப் பயணியிடம் இருந்து முன்பணத்தினைப் பெற்றுக் கொண்டார். அந்தப் பயணியும் முன்பணத்தினை தந்து விட்டு அறைகளைப் பார்வையிடுவதற்காக சென்றார்.

பணத்தினை வாங்கிக் கொண்ட விடுதிக்காரர் நேராக மளிகைக் கடைக்காரரிடம் சென்று தான் அவருக்கு கொடுக்க வேண்டியக் கடனான 100 உருபாயினைத் தந்து அடைக்கின்றார். அந்த மளிகைக் கடைக்காரரும் உடனடியாக விவசாயியிடம் சென்று தான் அவருக்குத் தர வேண்டியத் தொகையான 100 உருபாயினைத் தந்து தனதுக் கடனை அடைக்கின்றார். அவ்வாறே அந்த விவசாயியும் தான் துணித் தைப்பவருக்குத் தர வேண்டியத் தொகையினை உடனடியாக சென்று தருகின்றார். அவ்வாறே துணித் தைப்பவரும் நூல் விற்றவருக்கு தான் பட்டு இருந்த கடனாகிய 100 உருபாயினை அடைக்க, இறுதியில் நூல் விற்பவரும் தான் விடுதிக்காரருக்கு தர வேண்டியத் தொகையான 100 உருபாயினை சென்று தந்து அடைக்கின்றார். இவ்வாறு ஊரில் உள்ள அனைவரும் அவர்களின் கடனினைத் தீர்த்து விடுகின்றனர்.

அந்நேரத்தில் விடுதியினை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பிய அந்தப் பயணி தனக்கு அறைகள் பிடிக்கவில்லை என்றுக் கூறி தான் முன்பணமாக கொடுத்து இருந்த 100 உருபாயினை விடுதிக்காரரிடம் இருந்துப் பெற்றுக் கொண்டு தங்குவதற்கு வேறு ஏதாவது இடம் கிடைக்குமா என்றுத் தேடக் கிளம்புகின்றான். விடுதிக்காரரும் மகிழ்ச்சியுடன் அவனது முன்பணத்தினை திருப்பி தந்து அவனை வழி அனுப்பி வைக்கின்றார்.

இவ்வாறு அந்த ஊர் மக்கள் புதிதாக எந்த ஒரு பொருளையும் உற்பத்தி செய்யவில்லை…எந்த ஒரு செல்வதையும் ஈட்டவும் இல்லை…ஆனால் அனைவரும் அவர்களின் கடன்களில் இருந்து விடுபட்டு எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளத் தயார் ஆயினர்.

பி.கு:

இது ஒரு கதை தான். ஆனால் இந்தக் கதை அனைத்து மக்களும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கும் சமூகத்திற்கே பொருந்தும்.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு