ஈழம் அமைதியாக இருந்தது...!!!

 இரு மங்கிலும் மரங்கள் அணிவகுத்து நிற்க அவற்றைப் பிரித்துக் கொண்டே நீண்ட ஒரு சாலையும் பயணித்தது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை. அந்த சாலையில் தான் இன்று பயணித்துக் கொண்டு இருந்தான் மைத்ரேய புத்தன்.

"பாவம் பெருகினால் வருவான் மைத்ரேயன்" என்றே கூறுகின்றன புத்த சமய நூல்கள். உலகில் மக்கள் அனைவரும் தவறிழைக்கும் பொழுது அவர்களைத் திருத்த புத்தன் வருவான் என்றே புத்த சமயமும் கூறுகின்றது. அவற்றின் கூற்றுகள் பொய்யாகுமோ. வந்து தான் இருந்தான் மைத்ரேயன்....ஈழத்திற்கு.

புத்த உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டி இருந்த மைத்ரேயனை மௌனமே வரவேற்றது ஈழத்தில். அவன் திரும்பிய இடம் எங்கும் ஒரே அமைதி...மயான அமைதி.

மைத்ரேயன் "அமைதி நல்லது என்றேன்...மனிதன் அதை அவனுக்கு ஏற்றார்ப் போல் மொழி பெயர்த்து விட்டான்...இப்பொழுதும்" என்று தனக்குள்ளே எண்ணிக் கொண்டே அவனது பாதையில் தொடர்ந்து பயணித்தான்.

சிறிது தொலைவில் மரங்கள் எல்லாம் வழி கொடுக்க பரந்து விரிந்து இருந்த புல்வெளி ஒன்றை எட்டியதோடு முற்றுப் பெற்றது மைத்ரேயன் பயணித்த பாதை.

ஒரு காலத்தில் அது அழகிய சமமான ஒரு புல்வெளியாக இருந்து இருக்கக்கூடும். ஆனால் இன்று அது அவ்வாறு இருக்கவில்லை. புதிதாய் பல குழிகள் அதில் முளைத்து இருந்தன. மைத்ரேயன் அந்த புல்வெளியை சற்று உற்றுப் பார்த்தான். அந்த புல்வெளிகளின் நடுவே சில புத்த சிலைகள் நின்றுக் கொண்டு இருந்தன. அவற்றைத் தாண்டி சிறிது தூரத்தில் இராணுவ வீரன் ஒருவன் சில சடலங்களை ஒரு குழியில் தள்ளி மூடிக் கொண்டு இருந்தான்.
மைத்ரேயன் அந்த சிலைகளை நோக்கி நடக்க ஆரம்பித்தான். விரைவில் அந்த சிலைகளையும் வந்து அடைந்தான். கண்கள் மூடிய புத்த சிலைகள் அவனது வருகையை அறியாது கண்களை மூடியே இருந்தன. மைத்ரேயன் சிரித்தான்.


"புத்தர்களே விழியுங்கள்" என்றான் மைத்ரேயன்.

அதுவரை கண் மூடி இருந்த முதல் சிலை மெதுவாக "யார்...யார் என்னை அழைத்தது..." என்றுக் கூறியவாறே அதனது ஒரு கண்ணைத் திறந்துப் பார்த்தது.

"மைத்ரேயன்" என்றான் மைத்ரேயன்.

"மைத்ரேயனா... அதற்குள்ளா... காலம் அவ்வளவு கெட்டு விட்டதா" என்று கூறிக்கொண்டே ஆச்சர்யத்துடன் அதன் இரு கண்களையும் திறந்துக் கொண்டு மைத்ரேயனை நோக்கியது முதல் புத்த சிலை. அதற்குள்ளே "மைத்ரேயன்" என்ற வார்த்தை மற்ற புத்த சிலைகளின் காதுகளிலும் விழ அவைகளும் மைத்ரேயனை நோக்கி ஆர்வத்துடன் திரும்பின.

"ஆம்...மைத்ரேயன் தான்...!!! கண்கள் மூடிக் கொண்டு இருந்தால் காலங்கள் ஓடுவது தெரியாமலே தான் போய் விடும் புத்தர்களே...ஆனால் நாம் கண்கள் மூடி இருப்பதற்கு வரவில்லையே. அவ்வாறு இருக்க நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு இருக்கும் காரணம்?" என்றான் மைத்ரேயன்.

புத்த சிலைகள் ஒன்றை ஒன்று குற்ற உணர்ச்சியுடன் பார்த்துக் கொண்டன. பின்னர் அவற்றுள் ஒரு புத்த சிலை ஆரம்பித்தது.

"மனிதர்கள் மைத்ரேயா...மனிதர்கள்...!"

"மனிதர்களா..?" வினவினான் மைத்ரேயன்.

"ஆம்... மைத்ரேயா...!!! அவர்களுக்கு புத்தன் தேவை...ஆனால் அவனது கருத்துக்கள் தேவை இல்லை. பிறப்பிலே தோன்றி இறப்பிலே வாழ்க்கை முடிந்து விடுவதாகவே எண்ணிக் கொண்டே காலத்தை அவர்கள் கடத்துகின்றனர். இந்நிலையில் கண்களை மூடிக் கொண்டவர்கள் புத்தர்கள் ஆக்கப்படுகின்றனர். கண்களைத் திறந்து கொண்டவர்கள் பித்தர்கள் ஆக்கப்படுகின்றனர்.... எனவே"

"எனவே...???"

"எனவே... புத்தம் தான் இல்லை.... புத்தனாவது இருக்கட்டுமே என்று நாங்களும் கண்களை மூடிக் கொண்டோம். இதோ புத்தனாக நின்றுக் கொண்டு இருக்கின்றோம். கண்கள் மூடிய புத்தர்கள் தாம் இவர்களுக்குத் தேவை" என்றுக் கூறி முடித்தது ஒரு புத்த சிலை.

மைத்ரேயன் சிரித்தான்.

"புத்தமின்றி புத்தன் ஏது புத்தர்களே... அவ்வாறு அவன் நிலைத்து இருக்க வேண்டிய தேவையும் யாது? . மனிதன் மனம் கல்லாய் போனது... அதனால் புத்தனும் கல்லானோம் என்பது எங்கனம் பொருந்தும் புத்தர்களே. புத்தன் மனிதத்தில் இருக்கின்றான். மனிதம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றது. அவ்வாறு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் புத்தனை அவனை அறியச் செய்து மனிதத்தை தழைக்கச் செய்ய வேண்டியது புத்தனின் கடமையா அல்லது அவனை அறியாமை இருளிலேயே வைத்து இருப்பது புத்தனின் கடமையா?... சிந்தியுங்கள் புத்தர்களே... உலகம் இன்று எங்கேயோ சென்றுக் கொண்டு இருக்கின்றது... ஆனால் உண்மையைக் கூற வேண்டும் என்றால், அதன் இயக்கத்தின்
அடிப்படையான அன்பினை மட்டும் செல்லும் வழியில் எங்கேயோ தொலைத்து விட்டு அது தடுமாறிக் கொண்டு இருக்கின்றது. அன்பிற்கே ஏங்குகின்றது மனித இனம். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் புத்தர்களே... அன்பினைக் கொண்டு செல்லுங்கள்... அன்பினையே கொண்டு செல்லுங்கள். மக்களுள் இருக்கும் புத்தன் உங்களை அன்பின் மூலமாகவே அறிந்துக் கொண்டு விடுவான். உலகே அன்பின் மயமாகும். மனிதம் தழைக்கட்டும் புத்தர்களே. கல்லாய் இருப்பதற்கு நாம் வரவில்லை. நாம் வந்ததிற்கு ஒரு காரணம் இருக்கின்றது. அன்பாய் பரவுங்கள்... அன்பை பரப்புங்கள்...அன்பே புத்தம். அன்பே புத்தன்.!!!" என்று மைத்ரேயன் கூறி முடிக்க அதுவரை கல்லாய் இருந்த புத்தர்கள் அனைவரும் மைத்ரேயனின் கூற்றினை மதித்து ஒவ்வொரு திசையாக பரவுகின்றனர். அன்பினை ஏந்திக் கொண்டே.
 மைத்ரேயன் சற்று நேரம் அவர்களையே கண்டுக் கொண்டு நிற்கின்றான். அப்பொழுது அவன் பின்னே இருந்து ஒருக் குரல் அவனை நோக்கி ஒலிக்கின்றது.

"ஒய்... யாரது அங்கே"

மைத்ரேயன் திரும்பிப் பார்க்கின்றான். சிறிது தொலைவில் சடலங்களை ஒரு குழியில் தள்ளி புதைத்துக் கொண்டு இருந்தானே அந்த இராணுவ வீரன் மைத்ரேயனை நோக்கி வந்துக் கொண்டு இருந்தான். அவன் தான் அழைத்தும் இருக்க வேண்டும்.

"நீ யாரப்பா..." என்றார் மைத்ரேயன்.

"நான் என் நாட்டு இராணுவ வீரன்...உடையினைப் பார்த்து தெரியவில்லையா உமக்கு" என்றான் அவன்.

"இல்லையப்பா...தெரியவில்லை. சரி...சற்று தொலைவில் சிலரை புதைத்துக் கொண்டு இருந்தாயே அவர்கள் யார்?" தொடர்ந்தார் மைத்ரேயன்.

"ம்ம்ம்... எதிரிகள்..." என்றுக் கூறியவாறே அந்த இராணுவ வீரன் ஒரு ஏளனச் சிரிப்பினை உதிர்த்தான்.

"தவறு...அவர்களும் மனிதர்கள்" என்றார் மைத்ரேயன்.

"மனிதர்களா...!!!" சிரித்தான். "இப்பொழுது அவர்கள் சடலங்கள். இறந்து விட்டார்கள். இனி அவர்களைப் பற்றிப் பேசி என்ன பயன்"

"தவறு இளைஞனே. மரணம் முடிவுமல்ல... தீர்வும் அல்ல...!!! இதனை அறியாது உயிர்களைப் பறிப்பது சரியான செயல் அல்ல." என்றார் மைத்ரேயன் அமைதியாய்.

"உமக்குப் புரியவில்லை. இந்த உலகில் சரியான செயல் என்றும் தவறான செயல் என்றும் எதுவும் இல்லை... சரி தவறு என்பதெல்லாம் மாயை. நாங்கள் வென்று விட்டோம். அவ்வளவு தான்" என்றான் அந்த இராணுவ வீரன் சிறிது கோபத்துடன்.

"இளைஞனே... சரி என்றும் தவறென்றும் ஒன்றுமில்லை என்பது, உன் மனதினில் இருக்கும் மிருகத்தினை எந்தக் கட்டுப்பாடும் இன்றி நீ விடுவிக்கும் ஒரு செயலாகும். வெறி பிடித்த ஒரு மிருகம் அது காணும் அனைத்தையும் அழித்து விட்டு பின்னர் தன்னை ஏவியவனையே தாக்கி அழிக்க கூடும். அவ்வாறே தான் உன்னுடைய மனமும். அதன் போக்கிற்கு உன்னை என்று அது அலைக்கழிக்க ஆரம்பிக்கின்றதோ பின்னர் என்ன நிகழும் என்பது உன்னுடைய கையில் இல்லாது போய் விடும். மனம் அவ்வாறு செய்யும் வல்லமைப் பெற்றது தான். அதனிடம் சற்று சூதானமாக இரு. உன்னை மனிதன் ஆக்குவதும் மனம் தான். மிருகம் ஆக்குவதும் மனம் தான்" என்று மைத்ரேயன் கூறி முடிக்க அந்த இராணுவ வீரன் அவனது பொறுமையை இழக்கின்றான்.

"போதும் உங்கள் உபதேசங்கள்... எல்லாம் எங்களுக்குத் தெரியும். சொல்லுங்கள் நீங்கள் யார்"

"புத்தன்"

இராணுவ வீரன் சிரிக்கின்றான்.

"புத்தனா...!!! பின்னர் எதற்காக ஐயா வீழ்ந்த இம்மக்களுக்காக குரல் கொடுக்கின்றீர். இவர்கள் புத்த சமயத்தினர் அல்லவே"

"புத்தன் அனைத்து மக்களுக்கும் புத்தனே. அவர்களும் எம்மக்களே" என்றார் மைத்ரேயன் அமைதியாக.

"இல்லை....புத்தன் எங்களவன்..."

"உங்களவனாக மட்டும் இருப்பவன் புத்தன் அல்ல. புத்தனை சுருக்காதீர்கள்....!!!"

"போதும் நிறுத்தும். புத்தனை கேலி செய்யும் நீர் நிச்சயம் புத்தனில்லை. யார் நீ ... உண்மையைக் கூறும்" என்றான் அந்த இராணுவ வீரன் கோபத்துடன்.

"புத்தன்" என்றான் மைத்ரேய புத்தன் மீண்டும் அமைதியாய்.

"பொய்...!!!" என்று முழங்கினான் அந்த இராணுவ வீரன்.

புத்தன் மறுமொழி கூறவில்லை. அதற்கு முன்னர் முழங்கி இருந்தது அந்த இராணுவ வீரனின் துப்பாக்கி.

புத்தன் மௌனமாகி இருந்தான்.

கண் திறந்த புத்தர்கள் அவர்களுக்கு தேவை இல்லை தான்!!!

ஆனால்,
பனிக் காலத்தில் உலகம் முழுவதும் பனி நிறைந்து இருந்தாலும் வேர்கள் மண்ணுக்கு அடியில் வேரூன்றி இருக்கும். அவற்றுக்கென வசந்தமும் மலரும். அன்று பூக்கள் மீண்டும் பூக்கும். அதுப்போல புத்தன் அன்பாய் நாம் மனதில் புதைந்து இருப்பான். என்று நம் மனம் வசந்தத்தை உணருகின்றதோ அப்பொழுது அன்பாய் அவன் ஊற்றெடுப்பான்.

அன்பே புத்தன்!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு