நண்பர் ஒருவர் அருமையான கேள்வி ஒன்றினை கேட்டு இருந்தார்.

தமிழர்களின் திணைப் பிரிவுகளில் முருகனின் பெயர் காணப்படுகின்றது…திருமால் என்ற பெயர் காணப்படுகின்றது…ஆனால் சிவன் என்ற பெயரோ அல்லது விநாயகர் என்ற பெயரோ காணப்படவில்லையே அது ஏன் என்று வினவி இருந்தார். சமயங்களைப் பற்றிய நமது பயணத்தில் இந்தக் கேள்வி ஒரு மிக முக்கியமானதொருக் கேள்வி. சரி இப்பொழுது இந்தக் கேள்விக்கான விடையினைக் காண்போம். அதற்கு தமிழர்களின் திணைப் பிரிவுகளைப் பற்றி நாம் காண வேண்டி இருக்கின்றது.

தமிழர்கள் நிலத்தினை ஐந்தாகப் பிரித்து இருந்தனர் என்பதனை நம்மில் பெரும்பாலானோர் அறிவோம். அவைகளைத் தான் ஐந்திணைகள் என்று நாம் வழங்குகின்றோம். அதாவது,

குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும்
முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை – சுரமும் சுரம் சார்ந்த இடமும்

என்பனையே அந்த ஐந்துப் பிரிவுகள். தமிழ் பாட நூல்களுள் இவற்றைப் பற்றி நாம் நிச்சயம் பார்த்து இருப்போம். மேலும் இந்தப் பிரிவுகளுக்கு என்றே உரித்தான தனி கருப் பொருள்களையும் தமிழர்கள் வரையறை செய்து வைத்து இருந்தனர். அதாவது ஒவ்வொரு நிலத்திலும் வாழும் மக்கள், அங்கு காணப்படும் மிருகங்கள் மற்றும் பறவைகள், நீர் நிலைகள், வணங்கப்படும் கடவுளர், இசைக்கும் கருவிகள், பண், மரங்கள்… மற்றும் இன்ன பிற விடயங்களை ஒவ்வொரு நிலத்திற்கும், இவை இவை இந்த நிலத்திற்குரிய கருப்பொருள்கள் என்று தமிழர்கள் பிரித்து வைத்து இருந்தனர். நிற்க
இப்பொழுது நாம் காண வேண்டியது அந்தந்த நிலங்களில் வழிப்படப்பட்ட தெய்வங்களைப் பற்றியே. அதற்கு நமக்கு தொல்காப்பியரின் பாடல் உதவுகின்றது.

“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே”


இந்தப் பாடலில் தொல்காப்பியர் நிலங்களின் பிரிவையும் அவற்றிற்குரிய கடவுளரையும் குறிப்பிட்டு இருக்கின்றார்.

முல்லை நிலக் கடவுளாக ‘மாயோன்’ அறியப்படுகின்றான்.
குறிஞ்சி நிலக் கடவுளாக சேயோன் அறியப்படுகின்றான்.
மருத நிலக் கடவுளாக வேந்தன் அறியப்படுகின்றான்.
நெய்தல் நிலக் கடவுளாக வருணன் அறியப்படுகின்றான்.


பாலையைப் பற்றி தொல்காப்பியர் கூறாதது அந்தப் பிரிவானது அவர் காலத்திற்கு பின்னாலேயே தோன்றி இருக்கக் வேண்டும் என்று நாம் கருத வாய்ப்பளிக்கின்றது.

பாலை நிலக் கடவுளாக கொற்றவை அறியப்படுகின்றார். இவையே அந்த ஐந்திணைகளில் வழங்கப்படும் கடவுளரின் பெயர்கள் ஆகும்.

இங்கே நாம் இப்பொழுது காண வேண்டிய விடயம் என்னவென்றால் இங்கே குறிக்கப்பட்டு உள்ள கடவுளர்கள் அனைவரும் அந்தந்த நிலத்திற்குரிய கடவுளர்களே அன்றி முழுமுதற் கடவுளர் அல்லர். அதாவது,
மாயோன் முல்லை நிலத்துக்கான கடவுளாகவே அறியப்படுகின்றான். 

அதேப்போல் சேயோன் குறிஞ்சி நிலத்துக்குரிய கடவுளாகவே அறியப்படுகின்றான். மற்ற நிலங்களில் இவர்கள் வணங்கப்படவில்லை. ஒவ்வொரு திணைக்குரிய மக்களும் அவர்களுக்கென தனிக் கடவுளரை கொண்டு இருந்தனர். அதாவது இன்று நாம் முழுமுதற் கடவுளாக சிவனையோ அல்லது பெருமாளையோ வணங்குகின்றோம். இவர்களும் சரி இவர்கள் பிள்ளைகளாக கூறப்படும் முருகன், பிள்ளையார், பிரமன், ஐயப்பன் போன்றியவர்களும் குறிப்பிட்ட நிலத்துக்குரிய கடவுளராக இல்லாது அனைவருக்கும் உரியக் கடவுளராக விளங்குகின்றனர். ஆனால் இது போல் தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ள கடவுளர் காணப்படவில்லை.

“அட என்னங்க அப்படினா அந்தக் காலத்துல அனைத்து திணை மக்களும் தனித்தனி கடவுளரை வழிப்பட்டனர் என்றால் பொதுக் கடவுள் என்று எவருமே அப்பொழுது இல்லையா?” என்ற ஒரு கேள்வி இப்பொழுது எழலாம். இந்தக் கேள்விக்கு பதில் ‘இல்லை…மக்கள் பொதுவானக் கடவுள் வழிப்பாட்டையும் கொண்டு தான் இருந்தனர். நினைவுக் கல் நாட்டி வழிபடும் பழக்கம் மக்கள் அனைவர் உள்ளும் ஒன்றைப் போலவே இருக்கத் தான் செய்தது. அந்த நினைவுக் கல்லுக்கு அக்காலத்தில் வழங்கப்பட்ட பெயர் கந்து’. (அந்தக் கந்து என்ற பெயர் தான் பிற்காலத்தில் சிவலிங்கம் என்ற பெயர் பெற்று இன்று நம்மிடையே தொடர்ந்து இருந்துக் கொண்டு வருகின்றது.) நிற்க.

சரி இதுவரை நாம் கண்ட விடயங்களை சற்று உன்னிப்பாக கவனித்தோம் என்றால் நம்மிடையே இன்று வழங்கிக் கொண்டு இருக்கும் கடவுளர்களின் பெயர்களான ‘பெருமாள், சிவன், பிள்ளையார், முருகன், சக்தி, பிரமன்’ போன்ற பெயர்கள் அக்காலத்திலே இல்லாது இருப்பதை நம்மால் காண முடியும். மேலும் அந்தக் காலத்தில் வணங்கப்பட்ட கடவுளருக்கும் இன்று நாம் வணங்கிக் கொண்டு இருக்கும் கடவுளருக்கும் பொருள் அளவிலும் வித்தியாசங்கள் இருப்பதையும் நாம் காணலாம்.

இன்று சிவனும் பெருமாளும் முழுமுதற் கடவுளாக அறியப்படுகின்றனர். ஆனால் அந்தக் காலத்தில் அப்படிப்பட்ட கடவுளைப் பற்றியக் குறிப்புகள் இல்லை.

முருகன், பிள்ளையார், பிரமன், ஐயப்பன் போன்றோர் முழுமுதற் கடவுளரின் பிள்ளைகளாக அறியப்படுகின்றனர் இன்று. ஆனால் அக்காலத்தில் அப்பேர்ப்பட்ட உறவுமுறைகள் இருந்ததாக சான்றுகள் இல்லை.

நில்லுங்கள் நில்லுங்கள்…அந்தக் காலக் கடவுளருக்கும் இன்றைய கடவுளருக்கும் தொடர்புகள் காணப்படவில்லை என்று கூறுகின்றீர்களே…ஆனால் மாயோன் தான் ‘திருமால்’ என்றும் சேயோன் தான் முருகன் என்றும் ஆய்வுகள் கூறுகின்றனவே அதற்கு என்ன கூறுகின்றீர் என்று சில நண்பர்கள் கேட்கலாம். இக்கேள்விக்கு பதிலினை காண நாம் அந்தக் கடவுளரைக் காண வேண்டி இருக்கின்றது.

மாயோன் என்ற பெயர் – கருமை நிறத்தினை உடையவன் என்ற பொருளினைத் தருவதாகவே அமைந்து உள்ளது. (மால் – கருமை). முல்லை நிலத்தின் கருப்பொருளான கார்காலத்தினில் தோன்றும் கரிய மேகங்களைப் போன்றவன் என்ற அர்த்தத்தினாலேயே அவன் அப்பெயரினைப் பெற்று இருக்கின்றான். இதைத் தவிர்த்து இன்று நாம் காணும் திருமாலுக்கும் முல்லை நிலக்கடவுளான மாயோனுக்கும் தொடர்புகள் இருப்பதாக சான்றுகள் இதுவரை இல்லை.

அதேப் போல் சேயோன் என்ற பெயர் - சிவந்தவன் என்ற பெயரினையே தருகின்றது. இவனை பொதுவாக மக்கள் முருகன் என்றே கருதுகின்றனர். ஆனால் சேயோன் என்றப் பெயர் சிவனையும் குறிக்கும் ஒன்றாக விளங்குகின்றது. (இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் சங்க இலக்கியங்களிலும் சரி சில சிற்பங்களிலும் சரி முருகனும் சிவனும் ஒரே மாதிரியாக சித்தரிக்கப்பட்டு இருக்கின்றனர். இது ஆராயத் தக்க ஒரு விடயமாகும்). ஆனால் மாயோனைப் போலவே சேயோனுக்கும் இன்றைய முருகன்/சிவன் ஆகியோருக்கும் ஒற்றுமைகள் சிறிதளவே இருக்கின்றன.

எடுத்துக்காட்டுக்கு – இன்றைய சிவனுக்கும் முருகனுக்கும் பலிகள் கிடையாது. ஆனால் சங்க இலக்கியத்தில் ‘கந்து’ வழிப்பாட்டுக்கும் சரி முருகன் வழிப்பாட்டுக்கும் சரி பலிகள் இருந்து இருக்கின்றன. அவர்களை மக்கள் பலியிட்டே வணங்கியும் இருக்கின்றனர்.

இந்தப் பலி வழிப்பாட்டு முறை எவ்வாறு பலி இல்லாத வழிப்பாட்டு முறையாக மாறியது என்றும் எவ்வாறு இந்தத் திணைக் கடவுளர் வழிப்பாட்டு முறை போய் இன்றைய வழிப்பாட்டு முறை நம்மிடையே வந்தது என்பதும் எண்ணிப்பார்க்க/ஆராயத் தக்கது. நிற்க.

எனவே இன்று நாம் காணும் திருமாலும், முருகனும் தொல்காப்பியக் காலத்தில் மக்களின் மத்தியில் வணங்கப்பட்ட கடவுளர் அல்ல என்பதும், அக்காலத்தில் இருந்த முறைகளில் இருந்து இன்று நாம் கொண்டு இருக்கும் வழிப்பாட்டு முறைகள் மாற்றங்கள் பல கொண்டு இருக்கின்றன என்பதும் நாம் மேலே கண்ட விடயங்கள் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

சரிங்க… மாயோன், சேயோன் போன்றவர்களைப் பற்றி கூறி விட்டீர்கள். மருத நிலக் கடவுளைப் பற்றியும் நெய்தல் நிலக் கடவுளைப் பற்றியும் கூற வில்லையே என்கின்றீர்களா…

மருத நிலத்தின் கடவுள் வேந்தன் எனப்படுகின்றான். வேந்தன் என்றால் அரசன்/தலைவன் என்றுப் பொருள். எனவே மக்கள் அந்நிலத்தில் தங்களது தலைவனையே வழிப்பட்டனர் என்றும் நாம் கருத முடிகின்றது(இதனைக் குறித்து ஆராய்ச்சிகள் தேவை). தமிழில் இந்திரன் என்றால் தலைவன் என்றே பொருள் தரும்.

தேவேந்திரன் – தேவர்களின் தலைவன்.
கஜேந்திரன் – யானைகளின் தலைவன்.
நரேந்திரன் – மனிதர்களின் தலைவன்.

எனவே தலைவன் என்றப் பொருளிலே வேந்தன் என்றப் பெயர் மருத நிலக் கடவுளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

அதைப்போலவே கடல் சூழ்ந்த நெய்தல் நிலத்து கடவுளாக வருணன் அறியப்படுகின்றான்.

இப்பொழுது வேறு சில கேள்விகள் தோன்றலாம் ‘இந்திரன் மற்றும் வருணன் ஆகியோர் வேதங்களில் வருகின்றனரே…அவர்கள் ஆரியக் கடவுளர் என்றும் கூறுகின்றனரே. ஆனால் தமிழ் திணைக் கடவுளரிலும் அப்பெயர்கள் வருகின்றதே. இவ்விரண்டு கடவுளரும் ஒருவரே ஆவரா அல்லது இருவரும் வேறானவரா” என்றக் கேள்வி நிச்சயம் தோன்றும். இதற்கு விடையினை நாம் வரும் பதிவுகளில் காண முயற்சிக்கலாம்.

இப்போதைக்கு இதுவே பண்டைய காலங்களில் தமிழ் மக்கள் தம்மிடையே கொண்டு இருந்த வழிப்பாட்டு முறைகள் ஆகும்.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது… 29 ஜூலை, 2012 அன்று AM 2:24  

நல்லதொரு விளக்கமான பதிவுகள் .. மாயோனும் சேயோனும் முறையே பெருமாள், முருகன் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. பிற்காலத்தில் எழுந்த வைதிக மதத் தாக்கத்தால் ஏற்பட்டவையாகவே இருக்க வேண்டும் ....!

தமிழர்கள் போல சிங்களர்வர்களும் ஐந்திணைக் கடவுளை வைத்துள்ளார்கள் .. ஆனால் அவற்றிலும் வைதிக மதத் தாக்கங்கள் நிறைய உள்ளன ... குறிப்பாக நெய்தல் கடவுள் வருணன் என தமிழர்களும், உப்பிலவன் என சிங்களவர்களும் கூறுகின்றார்கள் .. வரும் பதிவுகளுக்காக காத்திருக்கின்றேன் .. தொடர்க.

தொல்கப்பியத்திற்கும் மனுஸ்ம்ருதிக்கும் உள்ள தொடர்பு என்ற பல்கலைக் கழகங்கள் ஏற்ற ஆய்வுக்கட்டுரை.
http://www.mayyam.com/talk/viewlite.php?t=8496

@மாயாண்டி
இணைப்பினை பகிர்ந்தமைக்கு நன்றி. இதனைப் படித்துவிட்டு எனது கருத்தினைக் கூறுகின்றேன்.

@மாயாண்டி

அதே போல் தாங்கள் இந்த இணைப்பையும் படித்துவிட்டு தங்களின் கருத்தினைக் தெரிவித்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்,

http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/06/blog-post.html

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு