நண்பர் ஒருவர் அருமையான கேள்வி ஒன்றினை கேட்டு இருந்தார்.

தமிழர்களின் திணைப் பிரிவுகளில் முருகனின் பெயர் காணப்படுகின்றது…திருமால் என்ற பெயர் காணப்படுகின்றது…ஆனால் சிவன் என்ற பெயரோ அல்லது விநாயகர் என்ற பெயரோ காணப்படவில்லையே அது ஏன் என்று வினவி இருந்தார். சமயங்களைப் பற்றிய நமது பயணத்தில் இந்தக் கேள்வி ஒரு மிக முக்கியமானதொருக் கேள்வி. சரி இப்பொழுது இந்தக் கேள்விக்கான விடையினைக் காண்போம். அதற்கு தமிழர்களின் திணைப் பிரிவுகளைப் பற்றி நாம் காண வேண்டி இருக்கின்றது.

தமிழர்கள் நிலத்தினை ஐந்தாகப் பிரித்து இருந்தனர் என்பதனை நம்மில் பெரும்பாலானோர் அறிவோம். அவைகளைத் தான் ஐந்திணைகள் என்று நாம் வழங்குகின்றோம். அதாவது,

குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும்
முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை – சுரமும் சுரம் சார்ந்த இடமும்

என்பனையே அந்த ஐந்துப் பிரிவுகள். தமிழ் பாட நூல்களுள் இவற்றைப் பற்றி நாம் நிச்சயம் பார்த்து இருப்போம். மேலும் இந்தப் பிரிவுகளுக்கு என்றே உரித்தான தனி கருப் பொருள்களையும் தமிழர்கள் வரையறை செய்து வைத்து இருந்தனர். அதாவது ஒவ்வொரு நிலத்திலும் வாழும் மக்கள், அங்கு காணப்படும் மிருகங்கள் மற்றும் பறவைகள், நீர் நிலைகள், வணங்கப்படும் கடவுளர், இசைக்கும் கருவிகள், பண், மரங்கள்… மற்றும் இன்ன பிற விடயங்களை ஒவ்வொரு நிலத்திற்கும், இவை இவை இந்த நிலத்திற்குரிய கருப்பொருள்கள் என்று தமிழர்கள் பிரித்து வைத்து இருந்தனர். நிற்க
இப்பொழுது நாம் காண வேண்டியது அந்தந்த நிலங்களில் வழிப்படப்பட்ட தெய்வங்களைப் பற்றியே. அதற்கு நமக்கு தொல்காப்பியரின் பாடல் உதவுகின்றது.

“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே”


இந்தப் பாடலில் தொல்காப்பியர் நிலங்களின் பிரிவையும் அவற்றிற்குரிய கடவுளரையும் குறிப்பிட்டு இருக்கின்றார்.

முல்லை நிலக் கடவுளாக ‘மாயோன்’ அறியப்படுகின்றான்.
குறிஞ்சி நிலக் கடவுளாக சேயோன் அறியப்படுகின்றான்.
மருத நிலக் கடவுளாக வேந்தன் அறியப்படுகின்றான்.
நெய்தல் நிலக் கடவுளாக வருணன் அறியப்படுகின்றான்.


பாலையைப் பற்றி தொல்காப்பியர் கூறாதது அந்தப் பிரிவானது அவர் காலத்திற்கு பின்னாலேயே தோன்றி இருக்கக் வேண்டும் என்று நாம் கருத வாய்ப்பளிக்கின்றது.

பாலை நிலக் கடவுளாக கொற்றவை அறியப்படுகின்றார். இவையே அந்த ஐந்திணைகளில் வழங்கப்படும் கடவுளரின் பெயர்கள் ஆகும்.

இங்கே நாம் இப்பொழுது காண வேண்டிய விடயம் என்னவென்றால் இங்கே குறிக்கப்பட்டு உள்ள கடவுளர்கள் அனைவரும் அந்தந்த நிலத்திற்குரிய கடவுளர்களே அன்றி முழுமுதற் கடவுளர் அல்லர். அதாவது,
மாயோன் முல்லை நிலத்துக்கான கடவுளாகவே அறியப்படுகின்றான். 

அதேப்போல் சேயோன் குறிஞ்சி நிலத்துக்குரிய கடவுளாகவே அறியப்படுகின்றான். மற்ற நிலங்களில் இவர்கள் வணங்கப்படவில்லை. ஒவ்வொரு திணைக்குரிய மக்களும் அவர்களுக்கென தனிக் கடவுளரை கொண்டு இருந்தனர். அதாவது இன்று நாம் முழுமுதற் கடவுளாக சிவனையோ அல்லது பெருமாளையோ வணங்குகின்றோம். இவர்களும் சரி இவர்கள் பிள்ளைகளாக கூறப்படும் முருகன், பிள்ளையார், பிரமன், ஐயப்பன் போன்றியவர்களும் குறிப்பிட்ட நிலத்துக்குரிய கடவுளராக இல்லாது அனைவருக்கும் உரியக் கடவுளராக விளங்குகின்றனர். ஆனால் இது போல் தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ள கடவுளர் காணப்படவில்லை.

“அட என்னங்க அப்படினா அந்தக் காலத்துல அனைத்து திணை மக்களும் தனித்தனி கடவுளரை வழிப்பட்டனர் என்றால் பொதுக் கடவுள் என்று எவருமே அப்பொழுது இல்லையா?” என்ற ஒரு கேள்வி இப்பொழுது எழலாம். இந்தக் கேள்விக்கு பதில் ‘இல்லை…மக்கள் பொதுவானக் கடவுள் வழிப்பாட்டையும் கொண்டு தான் இருந்தனர். நினைவுக் கல் நாட்டி வழிபடும் பழக்கம் மக்கள் அனைவர் உள்ளும் ஒன்றைப் போலவே இருக்கத் தான் செய்தது. அந்த நினைவுக் கல்லுக்கு அக்காலத்தில் வழங்கப்பட்ட பெயர் கந்து’. (அந்தக் கந்து என்ற பெயர் தான் பிற்காலத்தில் சிவலிங்கம் என்ற பெயர் பெற்று இன்று நம்மிடையே தொடர்ந்து இருந்துக் கொண்டு வருகின்றது.) நிற்க.

சரி இதுவரை நாம் கண்ட விடயங்களை சற்று உன்னிப்பாக கவனித்தோம் என்றால் நம்மிடையே இன்று வழங்கிக் கொண்டு இருக்கும் கடவுளர்களின் பெயர்களான ‘பெருமாள், சிவன், பிள்ளையார், முருகன், சக்தி, பிரமன்’ போன்ற பெயர்கள் அக்காலத்திலே இல்லாது இருப்பதை நம்மால் காண முடியும். மேலும் அந்தக் காலத்தில் வணங்கப்பட்ட கடவுளருக்கும் இன்று நாம் வணங்கிக் கொண்டு இருக்கும் கடவுளருக்கும் பொருள் அளவிலும் வித்தியாசங்கள் இருப்பதையும் நாம் காணலாம்.

இன்று சிவனும் பெருமாளும் முழுமுதற் கடவுளாக அறியப்படுகின்றனர். ஆனால் அந்தக் காலத்தில் அப்படிப்பட்ட கடவுளைப் பற்றியக் குறிப்புகள் இல்லை.

முருகன், பிள்ளையார், பிரமன், ஐயப்பன் போன்றோர் முழுமுதற் கடவுளரின் பிள்ளைகளாக அறியப்படுகின்றனர் இன்று. ஆனால் அக்காலத்தில் அப்பேர்ப்பட்ட உறவுமுறைகள் இருந்ததாக சான்றுகள் இல்லை.

நில்லுங்கள் நில்லுங்கள்…அந்தக் காலக் கடவுளருக்கும் இன்றைய கடவுளருக்கும் தொடர்புகள் காணப்படவில்லை என்று கூறுகின்றீர்களே…ஆனால் மாயோன் தான் ‘திருமால்’ என்றும் சேயோன் தான் முருகன் என்றும் ஆய்வுகள் கூறுகின்றனவே அதற்கு என்ன கூறுகின்றீர் என்று சில நண்பர்கள் கேட்கலாம். இக்கேள்விக்கு பதிலினை காண நாம் அந்தக் கடவுளரைக் காண வேண்டி இருக்கின்றது.

மாயோன் என்ற பெயர் – கருமை நிறத்தினை உடையவன் என்ற பொருளினைத் தருவதாகவே அமைந்து உள்ளது. (மால் – கருமை). முல்லை நிலத்தின் கருப்பொருளான கார்காலத்தினில் தோன்றும் கரிய மேகங்களைப் போன்றவன் என்ற அர்த்தத்தினாலேயே அவன் அப்பெயரினைப் பெற்று இருக்கின்றான். இதைத் தவிர்த்து இன்று நாம் காணும் திருமாலுக்கும் முல்லை நிலக்கடவுளான மாயோனுக்கும் தொடர்புகள் இருப்பதாக சான்றுகள் இதுவரை இல்லை.

அதேப் போல் சேயோன் என்ற பெயர் - சிவந்தவன் என்ற பெயரினையே தருகின்றது. இவனை பொதுவாக மக்கள் முருகன் என்றே கருதுகின்றனர். ஆனால் சேயோன் என்றப் பெயர் சிவனையும் குறிக்கும் ஒன்றாக விளங்குகின்றது. (இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் சங்க இலக்கியங்களிலும் சரி சில சிற்பங்களிலும் சரி முருகனும் சிவனும் ஒரே மாதிரியாக சித்தரிக்கப்பட்டு இருக்கின்றனர். இது ஆராயத் தக்க ஒரு விடயமாகும்). ஆனால் மாயோனைப் போலவே சேயோனுக்கும் இன்றைய முருகன்/சிவன் ஆகியோருக்கும் ஒற்றுமைகள் சிறிதளவே இருக்கின்றன.

எடுத்துக்காட்டுக்கு – இன்றைய சிவனுக்கும் முருகனுக்கும் பலிகள் கிடையாது. ஆனால் சங்க இலக்கியத்தில் ‘கந்து’ வழிப்பாட்டுக்கும் சரி முருகன் வழிப்பாட்டுக்கும் சரி பலிகள் இருந்து இருக்கின்றன. அவர்களை மக்கள் பலியிட்டே வணங்கியும் இருக்கின்றனர்.

இந்தப் பலி வழிப்பாட்டு முறை எவ்வாறு பலி இல்லாத வழிப்பாட்டு முறையாக மாறியது என்றும் எவ்வாறு இந்தத் திணைக் கடவுளர் வழிப்பாட்டு முறை போய் இன்றைய வழிப்பாட்டு முறை நம்மிடையே வந்தது என்பதும் எண்ணிப்பார்க்க/ஆராயத் தக்கது. நிற்க.

எனவே இன்று நாம் காணும் திருமாலும், முருகனும் தொல்காப்பியக் காலத்தில் மக்களின் மத்தியில் வணங்கப்பட்ட கடவுளர் அல்ல என்பதும், அக்காலத்தில் இருந்த முறைகளில் இருந்து இன்று நாம் கொண்டு இருக்கும் வழிப்பாட்டு முறைகள் மாற்றங்கள் பல கொண்டு இருக்கின்றன என்பதும் நாம் மேலே கண்ட விடயங்கள் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

சரிங்க… மாயோன், சேயோன் போன்றவர்களைப் பற்றி கூறி விட்டீர்கள். மருத நிலக் கடவுளைப் பற்றியும் நெய்தல் நிலக் கடவுளைப் பற்றியும் கூற வில்லையே என்கின்றீர்களா…

மருத நிலத்தின் கடவுள் வேந்தன் எனப்படுகின்றான். வேந்தன் என்றால் அரசன்/தலைவன் என்றுப் பொருள். எனவே மக்கள் அந்நிலத்தில் தங்களது தலைவனையே வழிப்பட்டனர் என்றும் நாம் கருத முடிகின்றது(இதனைக் குறித்து ஆராய்ச்சிகள் தேவை). தமிழில் இந்திரன் என்றால் தலைவன் என்றே பொருள் தரும்.

தேவேந்திரன் – தேவர்களின் தலைவன்.
கஜேந்திரன் – யானைகளின் தலைவன்.
நரேந்திரன் – மனிதர்களின் தலைவன்.

எனவே தலைவன் என்றப் பொருளிலே வேந்தன் என்றப் பெயர் மருத நிலக் கடவுளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

அதைப்போலவே கடல் சூழ்ந்த நெய்தல் நிலத்து கடவுளாக வருணன் அறியப்படுகின்றான்.

இப்பொழுது வேறு சில கேள்விகள் தோன்றலாம் ‘இந்திரன் மற்றும் வருணன் ஆகியோர் வேதங்களில் வருகின்றனரே…அவர்கள் ஆரியக் கடவுளர் என்றும் கூறுகின்றனரே. ஆனால் தமிழ் திணைக் கடவுளரிலும் அப்பெயர்கள் வருகின்றதே. இவ்விரண்டு கடவுளரும் ஒருவரே ஆவரா அல்லது இருவரும் வேறானவரா” என்றக் கேள்வி நிச்சயம் தோன்றும். இதற்கு விடையினை நாம் வரும் பதிவுகளில் காண முயற்சிக்கலாம்.

இப்போதைக்கு இதுவே பண்டைய காலங்களில் தமிழ் மக்கள் தம்மிடையே கொண்டு இருந்த வழிப்பாட்டு முறைகள் ஆகும்.

ஏன் வரலாறு... அதுவும் அசுர வேகத்தில் அறிவியல் வளர்ந்து கொண்டு இருக்கும் இந்த காலத்தில் நாளை என்ன நடக்கும் என்பதை குறித்து ஆய்வு செய்யாமல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நடந்தது, என்ன நடந்து இருக்கும் என்பதைக் குறித்த ஆய்வு ஏன்... இதனால் என்ன பயன்? போன்ற கேள்விகள் பொதுவாக 'வரலாறு' என்று கூறினாலே மக்களின் மனதில் எழுவது இயல்பே. இந்நிலையில் 'வரலாறு முக்கியம் அமைச்சரே' என்று கூறுவோர் மக்களின் இக்கேள்விகளுக்கு விடையினை கூற கடமைப்பட்டு உள்ளனர். அதன் விளைவாகவே இந்தப் பதிவு.

ஒரு மனிதன் இரவிலே ஒரு மின்விளக்கின் கீழ் எதையோ நீண்ட நேரம் தேடிக் கொண்டு இருந்தான். அதனை கண்டுக் கொண்டு இருந்த விவசாயி ஒருவர் 'ஐயோ பாவம் எதையோ தொலைத்து விட்டு தேடிக் கொண்டு இருக்கின்றார் போல் இருக்கின்றதே. நாமும் போய் சற்று உதவுவோம்' என்று எண்ணியவாறே தேடிக் கொண்டு இருக்கும் அந்த மனிதனின் அருகில் சென்றார். விசாரித்துப் பார்த்த பொழுது அந்த மனிதன் தான் வாங்கிய சம்பளத்தை தனது பையில் வைத்து இருந்ததாகவும் அதனை தற்போது காணவில்லை என்றும் எனவே வழியில் எங்காவது தவறவிட்டு இருக்கலாமோ என்றுத் தேடிக் கொண்டு இருப்பதாகக் கூறினான்.

அதனைக் கேட்ட விவசாயியோ "சரி ஐயா...ஆனால் நீண்ட நேரமாக ஒரே இடத்திலேயே தேடிக் கொண்டு இருக்கின்றீர்களே. இங்கே தான் தொலைத்தீர்கள் என்று நிச்சயமாக தெரியுமா?" என்றார்.

அதற்கு அந்த மனிதன் "இல்லை இல்லை... நான் இங்கே தொலைக்கவில்லை... அதோ அங்கே இருள் சூழ்ந்து இருக்கின்றதே அந்தப் பாதையில் தான் தொலைத்து இருக்க வேண்டும். ஆனால் இங்கே வெளிச்சம் இருப்பதால் இங்கேயே தேடிக் கொண்டு இருக்கின்றேன்" என்று பதில் கூற அந்த விவசாயியோ தனது தலையில் அடித்துக் கொண்டார். "ஐயோ அப்பனே..தொலைத்து ஒரு இடம்..தேடுவது மற்றொரு இடம்...பின் எவ்வாறு ஐயா உனது பொருள் உனக்குக் கிட்டும். ஒன்று இருளில் சென்று தேடு. அல்லது தொலைத்த பொருளை மீண்டும் ஈட்டிக் கொள். அதுவன்றி நீ இங்கேயே தேடிக் கொண்டு இருப்பது கால விரயமே அன்றி வேறில்லை" என்றுக் கூறிக் கொண்டு அவ்விடம் விட்டு அகன்றார். அந்த மனிதனும் சற்று சிந்தித்து சரி சென்ற பொருள் செல்லட்டும் நாம் மீண்டும் பொருள் ஈட்டிக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு நகர்கின்றான். சில நாட்கள் நகர்கின்றன.

மீண்டும் அதே விளக்கின் அடியில் அந்த மனிதன் எதையோ தேடிக் கொண்டு இருப்பதை விவசாயி காணுகின்றார். "அட என்னப்பா இது...இன்றும் இம்மனிதன் எதையோ தேடிக் கொண்டு இருக்கின்றானே" என்று அவன் அருகே சென்று விசாரிக்க மீண்டும் அவன் பணத்தினை தொலைத்து இருப்பது அவருக்கு தெரிய வருகின்றது. அட என்னடா இது... ஒவ்வொரு முறையும் இவன் தொலைத்துக் கொண்டு இருக்கின்றானே என்று சற்றே அந்த விவசாயி ஆராய, அம்மனிதனின் பையில் சிறு துளை ஒன்று இருப்பது அவருக்கு தெரிய வருகின்றது. அதன் மூலமாகவே அவன் ஈட்டிய பொருள் அனைத்தும் கீழே விழுந்து இருக்க வேண்டும் என்றும் அறிந்த அவர் முதலில் அவனை அவன் பையில் இருந்த துளையை சரி பார்க்க சொல்லிவிட்டு கிளம்ப அவனும் அவனிடம் இருந்த தவறினை திருத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றான். நிற்க.

சற்றே பிரபலமான கதைதான் அல்லவா. முல்லாவின் கதை என்றே எண்ணுகின்றேன். இதை நாம் இங்கே பார்த்ததற்கு ஒரு காரணம் இருக்கின்றது.

முதலில் அந்த மனிதன் அவனுடைய பொருளினை இழக்கின்றான். ஆனால் ஏன் அந்தப் பொருளினை அவன் இழந்தான் என்பதனைப் பற்றி அவன் சிந்திக்கவில்லை. அதன் விளைவாகவே அவன் மீண்டும் அவனுடைய பொருளினை இழக்க வேண்டிய நிலை வந்தது. ஒரு வேளை அவன் இரண்டாம் முறையும் அவனின் இழப்பிற்குரிய காரணத்தைப் பற்றி ஆராயவில்லை என்றால் மீண்டும் மீண்டும் அவனுடைய பொருளினை அவன் இழந்துக் கொண்டே இருப்பான். அவன் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் சரி, எவ்வளவு முயன்றாலும் சரி அவனுடைய இந்த நிலை மாறாது. வெறுமையே அவனிடம் சேர்ந்து இருக்கும். காரணம் அவனின் துயருக்குரிய காரணியை அவன் அறியவில்லை. அறிந்தால் தானே அதற்குரிய பதிலினை அவனால் தேட முடியும். இங்கு தான் வரலாற்றின் தேவை வருகின்றது. வரலாறு என்பவை நமக்கு முந்தைய காலத்தில் நடந்த சம்பவங்களே அன்றி வேறல்ல என்பதனை நாம் அனைவரும் அறிவோம். இப்பொழுது ஒரு செயல் நிகழ்ந்து இருக்கின்றது. அதனால் நமக்குத் தீங்கும் வந்து இருக்கின்றது. இந்நிலையில் ஏன் அந்த செயல் நிகழ்ந்தது அதனால் நமக்கு ஏன் தீங்கு வந்தது என்று ஆராய்ந்தால் தானே பிற்காலத்தில் மீண்டும் அதே துயர் நமக்கு வாராது நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும். அவ்வாறு அல்லாது 'சரி வந்தது வந்துடுச்சி...இனி நடப்பதைக் காண்போம்' என்றே நாம் இருந்து விட்டால் மீண்டும் அந்தத் துயர் நம்மிடம் வாராது போய்விடுமா என்ன? அவ்வாறு அத்துயர் மீண்டும் நம்மிடம் வந்தால் அதனை சமாளிக்க நமக்கு அவ்வேளையில் வழிகளும் தான் கிட்டிடுமா என்ன? இல்லை தானே.

ஒருவன் முதல் முறையாக சாலையில் உள்ள பள்ளத்தில் அறியாது விழுகின்றான். இது ஒரு செயல். சரி தெரியாது விழுந்து விட்டான். மன்னித்து விடலாம். ஆனால் மீண்டும் மீண்டும் அதே பாதையில் அதே பள்ளத்தில் அவன் விழுந்தான் என்றால் அச் செயலினை நாம் என்ன என்று சொல்வது. 'அந்த சாலையில் பள்ளம் இருக்கின்றது அதில் நாம் ஏற்கனவே விழுந்து இருக்கின்றோம் எனவே பார்த்துச் செல்ல வேண்டும் என்று அவனின் அனுபவத்தில் இருந்து அவன் அறிந்துக் கொள்ளாததை எவ்வாறு கூறுவதுஅவனின் அறியாமை என்றா...அல்லது மடத்தனம் என்றா?. வரலாற்றில் இருந்து அவன் கற்றுக் கொள்ளவில்லை என்றே நாம் கருத வேண்டி இருக்கின்றது.

இன்று நம் நிலையும் அவ்வாறு தான் இருக்கின்றது. முன்னர் வணிகத்துக்காக வந்தவர்கள் நம்மை அடிமையாக்கி ஆண்டார்கள். இன்றும் வணிகம் மூலமாக நம்மை மறைமுகமாக அடிமையாக்கி ஆண்டுக் கொண்டு இருக்கின்றனர். மேலும் என்றோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக நம்மில் பெரும்பான்மையினரான மக்களை தாழ்த்தப்பட்டோர் என்று சமயங்களைக் கொண்டு சிலர் அடக்க இன்றும் அந்த நிலை தொடருகின்றது. அந்த நிலையும் மாற வேண்டும் என்றால் அந்த நிலை எவ்வாறு தோன்றியது, ஏன் தோன்றியது என்பதையும் நாம் காண வேண்டும். அவற்றைக் காணாதுவிடின் பிற்காலத்தில் மீண்டும் அந்த நிலைகள் தலைத் தூக்கலாம். அந்த வேளையில் நமக்கு பிந்தைய சந்ததியினர் ஏன் அவர்கள் அந்தப் பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்பதனை அறியாமலே மீண்டும் இன்னல் பட ஆரம்பிப்பர். அவற்றைத் தவிர்க்கத் தான் நாம் வரலாற்றினைப் பார்க்க வேண்டி இருக்கின்றது. வரலாற்றிடம் இருந்து கற்று அதனை கற்பிக்கவும் வேண்டி இருக்கின்றது.

"வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளாமல் அனைத்து பிரச்சனைகளுக்கும் மீண்டும் மீண்டும் புதிதாய் விடையினைத் தேடும் பயணத்தை நாம் மேற்கொள்ள நம்முடைய வாழ்நாளில் நேரம் இல்லை. நம்முடைய பிரச்சனைகள் பெரும்பாலானவை பழமையானவை. எனவே அவற்றுக்கான விடையினை வரலாற்றின் உதவியோடு தேடுவதே பலன் தரும் செயலாக அமையும்." எனவே வரலாறு என்பது நாம் அனைவரும் கண்டிப்பாக அறிந்துக் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது.


ஈழம் அமைதியாக இருந்தது...!!!

 இரு மங்கிலும் மரங்கள் அணிவகுத்து நிற்க அவற்றைப் பிரித்துக் கொண்டே நீண்ட ஒரு சாலையும் பயணித்தது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை. அந்த சாலையில் தான் இன்று பயணித்துக் கொண்டு இருந்தான் மைத்ரேய புத்தன்.

"பாவம் பெருகினால் வருவான் மைத்ரேயன்" என்றே கூறுகின்றன புத்த சமய நூல்கள். உலகில் மக்கள் அனைவரும் தவறிழைக்கும் பொழுது அவர்களைத் திருத்த புத்தன் வருவான் என்றே புத்த சமயமும் கூறுகின்றது. அவற்றின் கூற்றுகள் பொய்யாகுமோ. வந்து தான் இருந்தான் மைத்ரேயன்....ஈழத்திற்கு.

புத்த உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டி இருந்த மைத்ரேயனை மௌனமே வரவேற்றது ஈழத்தில். அவன் திரும்பிய இடம் எங்கும் ஒரே அமைதி...மயான அமைதி.

மைத்ரேயன் "அமைதி நல்லது என்றேன்...மனிதன் அதை அவனுக்கு ஏற்றார்ப் போல் மொழி பெயர்த்து விட்டான்...இப்பொழுதும்" என்று தனக்குள்ளே எண்ணிக் கொண்டே அவனது பாதையில் தொடர்ந்து பயணித்தான்.

சிறிது தொலைவில் மரங்கள் எல்லாம் வழி கொடுக்க பரந்து விரிந்து இருந்த புல்வெளி ஒன்றை எட்டியதோடு முற்றுப் பெற்றது மைத்ரேயன் பயணித்த பாதை.

ஒரு காலத்தில் அது அழகிய சமமான ஒரு புல்வெளியாக இருந்து இருக்கக்கூடும். ஆனால் இன்று அது அவ்வாறு இருக்கவில்லை. புதிதாய் பல குழிகள் அதில் முளைத்து இருந்தன. மைத்ரேயன் அந்த புல்வெளியை சற்று உற்றுப் பார்த்தான். அந்த புல்வெளிகளின் நடுவே சில புத்த சிலைகள் நின்றுக் கொண்டு இருந்தன. அவற்றைத் தாண்டி சிறிது தூரத்தில் இராணுவ வீரன் ஒருவன் சில சடலங்களை ஒரு குழியில் தள்ளி மூடிக் கொண்டு இருந்தான்.
மைத்ரேயன் அந்த சிலைகளை நோக்கி நடக்க ஆரம்பித்தான். விரைவில் அந்த சிலைகளையும் வந்து அடைந்தான். கண்கள் மூடிய புத்த சிலைகள் அவனது வருகையை அறியாது கண்களை மூடியே இருந்தன. மைத்ரேயன் சிரித்தான்.


"புத்தர்களே விழியுங்கள்" என்றான் மைத்ரேயன்.

அதுவரை கண் மூடி இருந்த முதல் சிலை மெதுவாக "யார்...யார் என்னை அழைத்தது..." என்றுக் கூறியவாறே அதனது ஒரு கண்ணைத் திறந்துப் பார்த்தது.

"மைத்ரேயன்" என்றான் மைத்ரேயன்.

"மைத்ரேயனா... அதற்குள்ளா... காலம் அவ்வளவு கெட்டு விட்டதா" என்று கூறிக்கொண்டே ஆச்சர்யத்துடன் அதன் இரு கண்களையும் திறந்துக் கொண்டு மைத்ரேயனை நோக்கியது முதல் புத்த சிலை. அதற்குள்ளே "மைத்ரேயன்" என்ற வார்த்தை மற்ற புத்த சிலைகளின் காதுகளிலும் விழ அவைகளும் மைத்ரேயனை நோக்கி ஆர்வத்துடன் திரும்பின.

"ஆம்...மைத்ரேயன் தான்...!!! கண்கள் மூடிக் கொண்டு இருந்தால் காலங்கள் ஓடுவது தெரியாமலே தான் போய் விடும் புத்தர்களே...ஆனால் நாம் கண்கள் மூடி இருப்பதற்கு வரவில்லையே. அவ்வாறு இருக்க நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு இருக்கும் காரணம்?" என்றான் மைத்ரேயன்.

புத்த சிலைகள் ஒன்றை ஒன்று குற்ற உணர்ச்சியுடன் பார்த்துக் கொண்டன. பின்னர் அவற்றுள் ஒரு புத்த சிலை ஆரம்பித்தது.

"மனிதர்கள் மைத்ரேயா...மனிதர்கள்...!"

"மனிதர்களா..?" வினவினான் மைத்ரேயன்.

"ஆம்... மைத்ரேயா...!!! அவர்களுக்கு புத்தன் தேவை...ஆனால் அவனது கருத்துக்கள் தேவை இல்லை. பிறப்பிலே தோன்றி இறப்பிலே வாழ்க்கை முடிந்து விடுவதாகவே எண்ணிக் கொண்டே காலத்தை அவர்கள் கடத்துகின்றனர். இந்நிலையில் கண்களை மூடிக் கொண்டவர்கள் புத்தர்கள் ஆக்கப்படுகின்றனர். கண்களைத் திறந்து கொண்டவர்கள் பித்தர்கள் ஆக்கப்படுகின்றனர்.... எனவே"

"எனவே...???"

"எனவே... புத்தம் தான் இல்லை.... புத்தனாவது இருக்கட்டுமே என்று நாங்களும் கண்களை மூடிக் கொண்டோம். இதோ புத்தனாக நின்றுக் கொண்டு இருக்கின்றோம். கண்கள் மூடிய புத்தர்கள் தாம் இவர்களுக்குத் தேவை" என்றுக் கூறி முடித்தது ஒரு புத்த சிலை.

மைத்ரேயன் சிரித்தான்.

"புத்தமின்றி புத்தன் ஏது புத்தர்களே... அவ்வாறு அவன் நிலைத்து இருக்க வேண்டிய தேவையும் யாது? . மனிதன் மனம் கல்லாய் போனது... அதனால் புத்தனும் கல்லானோம் என்பது எங்கனம் பொருந்தும் புத்தர்களே. புத்தன் மனிதத்தில் இருக்கின்றான். மனிதம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றது. அவ்வாறு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் புத்தனை அவனை அறியச் செய்து மனிதத்தை தழைக்கச் செய்ய வேண்டியது புத்தனின் கடமையா அல்லது அவனை அறியாமை இருளிலேயே வைத்து இருப்பது புத்தனின் கடமையா?... சிந்தியுங்கள் புத்தர்களே... உலகம் இன்று எங்கேயோ சென்றுக் கொண்டு இருக்கின்றது... ஆனால் உண்மையைக் கூற வேண்டும் என்றால், அதன் இயக்கத்தின்
அடிப்படையான அன்பினை மட்டும் செல்லும் வழியில் எங்கேயோ தொலைத்து விட்டு அது தடுமாறிக் கொண்டு இருக்கின்றது. அன்பிற்கே ஏங்குகின்றது மனித இனம். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் புத்தர்களே... அன்பினைக் கொண்டு செல்லுங்கள்... அன்பினையே கொண்டு செல்லுங்கள். மக்களுள் இருக்கும் புத்தன் உங்களை அன்பின் மூலமாகவே அறிந்துக் கொண்டு விடுவான். உலகே அன்பின் மயமாகும். மனிதம் தழைக்கட்டும் புத்தர்களே. கல்லாய் இருப்பதற்கு நாம் வரவில்லை. நாம் வந்ததிற்கு ஒரு காரணம் இருக்கின்றது. அன்பாய் பரவுங்கள்... அன்பை பரப்புங்கள்...அன்பே புத்தம். அன்பே புத்தன்.!!!" என்று மைத்ரேயன் கூறி முடிக்க அதுவரை கல்லாய் இருந்த புத்தர்கள் அனைவரும் மைத்ரேயனின் கூற்றினை மதித்து ஒவ்வொரு திசையாக பரவுகின்றனர். அன்பினை ஏந்திக் கொண்டே.
 மைத்ரேயன் சற்று நேரம் அவர்களையே கண்டுக் கொண்டு நிற்கின்றான். அப்பொழுது அவன் பின்னே இருந்து ஒருக் குரல் அவனை நோக்கி ஒலிக்கின்றது.

"ஒய்... யாரது அங்கே"

மைத்ரேயன் திரும்பிப் பார்க்கின்றான். சிறிது தொலைவில் சடலங்களை ஒரு குழியில் தள்ளி புதைத்துக் கொண்டு இருந்தானே அந்த இராணுவ வீரன் மைத்ரேயனை நோக்கி வந்துக் கொண்டு இருந்தான். அவன் தான் அழைத்தும் இருக்க வேண்டும்.

"நீ யாரப்பா..." என்றார் மைத்ரேயன்.

"நான் என் நாட்டு இராணுவ வீரன்...உடையினைப் பார்த்து தெரியவில்லையா உமக்கு" என்றான் அவன்.

"இல்லையப்பா...தெரியவில்லை. சரி...சற்று தொலைவில் சிலரை புதைத்துக் கொண்டு இருந்தாயே அவர்கள் யார்?" தொடர்ந்தார் மைத்ரேயன்.

"ம்ம்ம்... எதிரிகள்..." என்றுக் கூறியவாறே அந்த இராணுவ வீரன் ஒரு ஏளனச் சிரிப்பினை உதிர்த்தான்.

"தவறு...அவர்களும் மனிதர்கள்" என்றார் மைத்ரேயன்.

"மனிதர்களா...!!!" சிரித்தான். "இப்பொழுது அவர்கள் சடலங்கள். இறந்து விட்டார்கள். இனி அவர்களைப் பற்றிப் பேசி என்ன பயன்"

"தவறு இளைஞனே. மரணம் முடிவுமல்ல... தீர்வும் அல்ல...!!! இதனை அறியாது உயிர்களைப் பறிப்பது சரியான செயல் அல்ல." என்றார் மைத்ரேயன் அமைதியாய்.

"உமக்குப் புரியவில்லை. இந்த உலகில் சரியான செயல் என்றும் தவறான செயல் என்றும் எதுவும் இல்லை... சரி தவறு என்பதெல்லாம் மாயை. நாங்கள் வென்று விட்டோம். அவ்வளவு தான்" என்றான் அந்த இராணுவ வீரன் சிறிது கோபத்துடன்.

"இளைஞனே... சரி என்றும் தவறென்றும் ஒன்றுமில்லை என்பது, உன் மனதினில் இருக்கும் மிருகத்தினை எந்தக் கட்டுப்பாடும் இன்றி நீ விடுவிக்கும் ஒரு செயலாகும். வெறி பிடித்த ஒரு மிருகம் அது காணும் அனைத்தையும் அழித்து விட்டு பின்னர் தன்னை ஏவியவனையே தாக்கி அழிக்க கூடும். அவ்வாறே தான் உன்னுடைய மனமும். அதன் போக்கிற்கு உன்னை என்று அது அலைக்கழிக்க ஆரம்பிக்கின்றதோ பின்னர் என்ன நிகழும் என்பது உன்னுடைய கையில் இல்லாது போய் விடும். மனம் அவ்வாறு செய்யும் வல்லமைப் பெற்றது தான். அதனிடம் சற்று சூதானமாக இரு. உன்னை மனிதன் ஆக்குவதும் மனம் தான். மிருகம் ஆக்குவதும் மனம் தான்" என்று மைத்ரேயன் கூறி முடிக்க அந்த இராணுவ வீரன் அவனது பொறுமையை இழக்கின்றான்.

"போதும் உங்கள் உபதேசங்கள்... எல்லாம் எங்களுக்குத் தெரியும். சொல்லுங்கள் நீங்கள் யார்"

"புத்தன்"

இராணுவ வீரன் சிரிக்கின்றான்.

"புத்தனா...!!! பின்னர் எதற்காக ஐயா வீழ்ந்த இம்மக்களுக்காக குரல் கொடுக்கின்றீர். இவர்கள் புத்த சமயத்தினர் அல்லவே"

"புத்தன் அனைத்து மக்களுக்கும் புத்தனே. அவர்களும் எம்மக்களே" என்றார் மைத்ரேயன் அமைதியாக.

"இல்லை....புத்தன் எங்களவன்..."

"உங்களவனாக மட்டும் இருப்பவன் புத்தன் அல்ல. புத்தனை சுருக்காதீர்கள்....!!!"

"போதும் நிறுத்தும். புத்தனை கேலி செய்யும் நீர் நிச்சயம் புத்தனில்லை. யார் நீ ... உண்மையைக் கூறும்" என்றான் அந்த இராணுவ வீரன் கோபத்துடன்.

"புத்தன்" என்றான் மைத்ரேய புத்தன் மீண்டும் அமைதியாய்.

"பொய்...!!!" என்று முழங்கினான் அந்த இராணுவ வீரன்.

புத்தன் மறுமொழி கூறவில்லை. அதற்கு முன்னர் முழங்கி இருந்தது அந்த இராணுவ வீரனின் துப்பாக்கி.

புத்தன் மௌனமாகி இருந்தான்.

கண் திறந்த புத்தர்கள் அவர்களுக்கு தேவை இல்லை தான்!!!

ஆனால்,
பனிக் காலத்தில் உலகம் முழுவதும் பனி நிறைந்து இருந்தாலும் வேர்கள் மண்ணுக்கு அடியில் வேரூன்றி இருக்கும். அவற்றுக்கென வசந்தமும் மலரும். அன்று பூக்கள் மீண்டும் பூக்கும். அதுப்போல புத்தன் அன்பாய் நாம் மனதில் புதைந்து இருப்பான். என்று நம் மனம் வசந்தத்தை உணருகின்றதோ அப்பொழுது அன்பாய் அவன் ஊற்றெடுப்பான்.

அன்பே புத்தன்!!!

முன் குறிப்பு:


அனைத்து சமயங்களுக்குள்ளும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன என்று நாம் கண்டுக் கொண்டு இருக்கின்றோம். இப்பொழுது ஒரு குறிப்பிட்ட ஒற்றுமையைப் பற்றி நாம் காணலாம்.

இறைவனின் உலக வருகை… அதாவது சமயங்கள் சில, அவற்றின் இறைவன் உலகில் எப்பொழுது பாவங்கள் பெருகுகின்றதோ அப்பொழுது மக்களைக் காப்பாற்ற மீண்டும் உலகினில் தோன்றுவான் என்றே நம்புகின்றன.

புத்தம் – மைத்ரேய புத்தனுக்காக காத்துக் கொண்டு இருக்கின்றது.

இந்து – கல்கிக் காக காத்துக் கொண்டு இருக்கின்றது.

கிருத்துவம் – கிருத்துவின் இரண்டாம் வருகைக்காக காத்து இருக்கின்றது.

இந்தக் கடவுளரின் வருகை என்பது ஒரே கடவுளை குறிப்பதா அல்லது அத்தனைக் கடவுளும் ஒவ்வொரு முறையாக உலகின் மக்களின் பாவம் தீர்க்க தனித் தனியே வரப்போகின்றனரா என்பது எனக்குத் தெரியவில்லை. சிந்திப்போம். விடைக் கிட்டினாலும் கிட்டும்.

இருந்தும் அவர்கள் உலகிற்கு வருவதனைப் போலவும் அவர்கள் வந்தால் என்ன நடக்கலாம் என்றும் எண்ணியே இந்தக் கற்பனைப் பதிவுகள்.

இயேசுவின் இரண்டாம் வருகை:


ஊரெங்கும் ஒரே பேச்சு
”இன்று இயேசு வருகின்றாராம்!!!”
ஈராயிரம் ஆண்டுகள் காத்திருப்பு
முடிந்தது என்று தேவதூதன் சொன்னானாம்!!!
**********************************************
என்றோ மறந்த வசனங்களை
நினைவூட்டிக் கொண்டே
மந்தையோடு மந்தையானேன்…
மேய்ப்பவனை எதிர்பார்த்தே!!!
*********************************************
“அதோ வருகின்றார்…” என்றான் ஒருவன்.
உறைந்திருந்த நேரம் விரையத் தொடங்கியது…
திசைகள் எட்டும் ஒன்றாக அவரும் வந்தார்
பாவிகளை நாடி காவியில்…திருநீறோடு!!!
**************************************************
பாவீகளின் ரட்சகன் காவியிலா?
“யார் நீர்” என்றேன்
“இயேசு” என்றார்
“சிலுவை சுமக்காதவர் இயேசு அல்லர்” என்றேன்.
சிரித்தார்…”மீண்டுமா”
அருகில் இருந்த மலையில் புதிதாய் பூத்ததொரு சிலுவை.
இறைவன் மூன்றாம் வருகைக்கு ஆயுத்தமானார்.
**********************************************
நான் இரண்டிலே நின்றிருந்தேன்.
உயிர்த்தெழுந்தால்
மூன்றாக்கி கொள்ளலாம்.
************************************

பின்குறிப்பு:

என்ன இயேசு திருநீறோடு வந்தாரா? இயேசுவைக் அவமதிக்கின்றீர்களா என்று சில நண்பர்கள் எண்ணினீர்கள் என்றால் இந்தப் பதிவுகளை முதலில் படித்து விடுங்கள். படித்துவிட்டு தங்களது கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

கிருத்துவமும் திருநீறும்
என் கடவுள் உன் கடவுள் நம் கடவுள்

அனைத்து சமயங்களும் ஒன்றோடொன்று தொடர்புக் கொண்டவையாகவே இருக்கின்றன என்றும் அவை அனைத்தையும் இணைத்துக் கொண்டு சில விடயங்கள் பொதுவாக இருக்கத் தான் செய்கின்றன என்றும் நாம் கூறினோம் என்றால் அவற்றுக்கு தக்க சான்றுகளையும் நாம் காண்பிக்க வேண்டி இருக்கின்றது. அவ்வாறு ஒற்றுமைகளை நாம் காண்பிக்கத் தவறினோம் என்றால் நமது கூற்றுகள் வெறும் பெயரளவுக் கூற்றுக்களாகவே சென்று விடும். எனவே இப்பொழுது நமது பயணத்தில் மேலும் சில ஒற்றுமைகளை நாம் காண வேண்டி இருக்கின்றது.

ம்ம்ம்ம்... இம்முறை நாம் எங்கிருந்து பயணத்தை தொடங்கலாம்...? சரி... சிந்து சமவெளியில் இருந்தே தொடங்கலாம்... சென்ற முறை நாம் சிந்து சமவெளியை பற்றி கண்டப் பொழுது அந்த நாகரீகம் தமிழர்களின் நாகரீகம் என்றும் அங்கிருந்தே சென்ற மக்கள் மேசொபோடமியா மற்றும் சுமேரிய நாகரீகத்தினை உருவாக்கினர் என்றக் கருத்துக்களை மையமாக வைத்தே கண்டதால் அங்கே மக்கள் கொண்டு இருந்த வழிப்பாட்டு முறையைப் பற்றி நாம் காண முடியாது சென்று விட்டது. கவலை இல்லை...அவற்றை இப்பொழுது காண்போம்.

சிந்து சமவெளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மூலமாக பல விடயங்கள் நம்முடைய பார்வைக்கு வந்து உள்ளன. முதலில் அந்த இடங்களில் அதிக அளவில் நினைவுக்கற்கள் கிடைக்கப்பட்டு உள்ளன. நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் கல்லினை நட்டி வைத்து வழிபடுவது தமிழர்களின் வழக்கம் என்று. இதனையே ஆராய்ச்சியாளர் இரா. ஜெசிந்தர் எபினேசர் என்பவரும் அவரது 'நினைவுக்கல் வழிப்பாடும் விவிலியமும் என்ற நூலில் பின் வருமாறு கூறுகின்றார்

"அக்கற்கள் ஆனவை பொது நன்மையின் வடிவாக விளங்கும் இறைவனையும் பொது நன்மையின் பொருட்டு தன்னையே தியாகம் செய்த மனிதனையும் நினைத்துக் கல் கட்டி வழிபடுவது நினைவுக்கல் வழிப்பாடாகும்".

மேலும் இந்த நினைவுக் கல் வழிபாடே இசுலாமிய சமயத்திலும் காணப்படுகின்றது என்றே 'இசுரவேளர் சமயம்' என்ற தனது நூலில் ஞான ராபின்சன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.


"பழங்கால அரபுக் கோவில்களில் அப்புனிதக் கல், தொழுகைக்கு இன்றியமையாத ஒன்றாகக் கருதப்பட்டது. இக்கல் ஒரு குறிப்பிட்ட கடவுளைக் குறிப்பதாக இராமல் அனைத்துக் கடவுளையும் குறிப்பிட்டு நின்றது. கற்களின் மேல் இரத்தம் பூசப்பட்டது."


இந்த நினைவுக் கல் வழிபாட்டு முறை தான் சமணம் மற்றும் புத்த சமயங்களில் 'தூபி' என்று பெயர்பெற்றும் தமிழ் சங்க இலக்கியங்களில் 'கந்து' என்று பெயர் பெற்றும் விளங்கிக் கொண்டு இருக்கின்றது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அட என்னய்யா இது நினைவுக் கல் அப்படின்னு கேட்குறீங்களா... அட அது வேற ஒண்ணும் இல்லைங்க இன்று நாம் சிவலிங்கம் என்ற பெயரில் வழிபடுகின்றோமே அதேக் கல் வழிப்பாட்டு முறை தான் அந்தக் காலத்தில் நினைவுக் கல் வழிபாடு என்ற பெயரில் இருந்து இருக்கின்றது.

மக்கள் அனைவருக்கும் பொதுவான இறைவனை கல்லினை நட்டி வைத்து வணங்கி வந்தனர். இந்தப் பழக்கம் அனைத்து நாகரீகங்களிலும் பொதுவாக இருந்தமையை நாம் முந்தையப் பதிவுகளில் ஏற்கனவே கண்டு இருக்கின்றோம். ஆனால் அக்காலத்தில் சிவலிங்கம் என்றப் பெயர் தோன்றி இருக்காத காரணத்தினால் நாம் அக்கல் வழிப்பாட்டு முறையினை நினைவுக் கல் வழிப்பாட்டு முறை என்றே நாம் இந்தப் பதிவில் அழைக்கின்றோம்.

சரி... நினைவுக் கல் வழிபாடு சிந்து சமவெளி மக்களிடம் இருந்தது... சுமேரிய மக்களிடமும் இருந்தது... அதனைப் பற்றிய குறிப்புகள் விவிலியத்திலும் காணப்படுகின்றது என்பதனையும் நாம் முந்தையப் பதிவுகளில் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது இன்னொரு ஒற்றுமைகளையும் நாம் கண்டு விடுவோம்...

சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட படிமங்களில் பல பெண் தெய்வங்களின் வடிவங்கள் கிடைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பல உருவங்கள் கொம்பினை உடைய உருவங்களாகவே காணப்படுகின்றன. கொம்புகள் அந்த உருவங்களின் தெய்வத்தன்மையை உருவகப்படுத்துவதாகவே அறிஞர்கள் கருதுகின்றனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அத்தகைய கொம்பினை உடைய உருவங்கள் சுமேரிய நாகரீகத்திலும் சரி விவிலியத்திலும் சரி ஒன்று போலவே நமக்கு கிட்டப்பெருகின்றன. இதனை

"சிந்துவெளியில் கொம்புடன் காணப்படும் உருவங்களை ஒத்து, சுமேரியாவிலும் பாபிலோனியாவிலும் கொம்புடைய உருவங்கள் காணப்படுகின்றன. அங்கு இக் கொம்பு அரசனையோ, குருவையோ, கடவுளையோ குறிப்பதாக கொள்ளப்பட்டு இருக்கின்றது." என்று சான் மார்ஷல் அவர்கள் அவரது ;மோகஞ்சடாரோவும் சிந்து சமவெளி நாகரீகமும் என்ற புத்தகத்தில் கூறி உள்ளது மூலமும் நாம் அறிந்துக் கொள்ளலாம்.

மேலும் இன்றும் கூட இந்தியப் பழங்குடி மக்களுள் தலைவராக உள்ளவர்கள் அவர்களது தலைமைக்கு அடையாளமாக எருமைக் கொம்பைத் தலையில் அணிந்து இருப்பதும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகவே இருக்கின்றது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிற்க


இன்றும் நம்முடைய சமுகத்தில் ஒரு சொற்தொடர் நிலவிக் கொண்டு இருக்கின்றது மேலே உள்ள வாக்கியத்தினை மெய்ப்பிப்பது போல.

"நீ என்ன பெரிய கொம்பனா டே...? "உனக்கு மட்டும் என்னவே ரெண்டு கொம்பா மொளச்சி இருக்கு" என்ற வாக்கியங்கள் தான் அவை. உற்றுப் பார்த்தோம் என்றால் அவற்றின் அர்த்தம் 'நீ என்ன பெரியவனா' என்றே வருகின்றது. அதாவது கொம்பினை வைத்து இருக்கின்றவன் பெரியவன் என்ற மறைமுகப் பொருளினையே அவை தருகின்றன. இந்தச் சொற்தொடர் என்றில் இருந்து நம்மிடையே இருக்கின்றன... தெரியவில்லை...இருந்தும் இவையும் சிந்தித்துப் பார்க்கத் தக்கவையே.சரி... சிந்துசமவெளியில் கிடைக்கும் கொம்புகள் உடைய உருவங்கள் சுமேரிய நாகரீகத்திலும் பாபிலோனிய நாகரீகத்திலும் கிடைக்கின்றன...ஆனால் விவிலியத்திலும் இவற்றைப் பற்றியக் குறிப்புகள் உள்ளன என்றுக் கூறினீர்களே அது என்ன என்றுக் கேட்கின்றீர்களா... சரிதான் அதையும் கண்டு விடலாம். முந்தையப் பதிவுகளில் நாம் கண்டது போலவே மீண்டும் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் உள்ள சில பக்கங்களை நாம் இதற்காக திருப்ப வேண்டி இருக்கின்றது.

"யோசேப்பின் அலங்காரம் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப் போலவும் அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகள் போலவும் இருக்கும். அவைகளாலே சனங்களை ஏகமாய்த் தேசத்தின் கடையாந்தரங்கள்மட்டும் முட்டித் துரத்துவான்" - உபாமகம் (33:17)

"சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக ஜனங்களை நொறுக்கிப்போடுவாய்;" - மீகா (4:13)

"அவர் வெஞ்சினம் கொண்டு
இஸ்ரயேலின் கொம்பை முற்றிலும் வெட்டிவிட்டார்;" - புலம்பல் (2:3)


மேலே உள்ள இவ்வரிகள் மூலமாக கொம்புகள் ஆற்றலையும் அரசாட்சியையும் குறிப்பதாக இசுரவேலரின் சமயத்திலும் விளங்கியதை நாம் அறியலாம்.

சரி...பழைய நாகரீகங்களுள் நினைவுக் கல் வழிபாடும் ஒன்றுப் போலவே இருக்கின்றது... கொம்பு வைத்த உருவங்களும் சரி அவற்றிற்குரிய அர்த்தங்களும் சரி ஏறக்குறைய ஒன்றுப் போலவே இருக்கின்றது...இவற்றைப் போலவே இன்னும் பல பழக்கங்கள் அந்த பழைய நாகரீகங்களுக்குள்ளே பொதுவானதாக விளங்குகின்றன.

மர வழிபாடு, விலங்குகள் வழிபாடு , இயற்கை தெய்வங்கள் வழிபாடு, மலைகளில் இறைவன் இருப்பதாக நம்பிக்கை... மேலும் இன்ன பிற பழக்க வழக்கங்களும் இந்த நாகரீகங்களுள் ஏறக்குறைய ஒன்றைப் போலவே இருக்கின்றன. அட மறந்து விட்டேன்... உலகத் தோற்றக் கதையும் வெள்ளத்தால் உலகம் அழிந்தக் கதையும் கூட இவற்றில் ஒரே போலவே இருக்கின்றன.

இந்த ஒற்றுமைகள் தற்செயலானவையா அல்லது ஒரு இடத்தில தோன்றிய மக்கள் பல இடங்களுக்கு நகர்ந்தமையால் அவர்களுடனேயே இந்தப் பழக்கங்களும் நகர்ந்தமையால் காணப்படும் ஒற்றுமைகளா என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. அது அவர்கள் கடமை... அதனை அவர்களிடமே விட்டுவிடுவோம்.

நாம் இப்பொழுது அறிந்துக் கொள்ள வேண்டியது பண்டைய காலத்தில் மக்களிடையே பல பழக்க வழக்கங்கள் ஒன்றுப் போலவே இருந்து இருக்கின்றன. அவற்றின் தொடர்ச்சிகளை இன்றும் நமது சமுகத்தில் நாம் கண்டுக் கொண்டு தான் இருக்கின்றோம் என்பதே!!!

பயணம் தொடரும்....!!!


பி.கு:

இந்தத் தகவல்கள் நான் தெ. தேவகலா என்பவரது 'தமிழ் பக்தி இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (விவிலிய ஒளியில்)' என்னும் ஆராய்ச்சி நூலின் இருந்தே அறிந்து கொண்டவைகளாகும்.


இன்றைக்கு நம்முடைய உலகத்தினை சற்று உற்றுப் பாருங்கள்.

௧) பல்லாயிரக்கணக்கான கோடிகள் செலவு செய்து நிலவுக்கு மனிதனை அனுப்புகின்றனர். ஆனால் பக்கத்துக்கு வீட்டில் உணவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவிட பாவம் அவர்களிடம் பணம்... மன்னிக்கவும் மனம் இருப்பதில்லை.

௨) பல லட்சங்கள் செலவு செய்து விமான நிலையத்தில் உள்ள கழிவறைகளை மேம்படுத்துவர், ஆனால் எலிகளால் உண்ணப்பட்டு வீணாகும் தானியங்களை சேமிக்க புது சாக்குத் துணிப்பைகளை வாங்குவதற்கு பணம் இருப்பதில்லை.

௩) அண்டை நாட்டிலே லட்சக்கணக்கான சகோதர சகோதிரிகள் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்படுவர், இருந்தும் பலரின் கவலை அதுவல்லை, அந்த நாட்டிடம் மட்டைப் பந்து விளையாட்டில் தோற்பதே பலரின் கவலையாக இருக்கின்றது.

சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் மனம் இருக்கின்றது ஆனால் மனிதம்....?. அதனால் பணமில்லை எனவே அது தேவை இல்லை.

எனவே இந்நிலையில் அனைத்துப் பிரச்சனைகளும் இரண்டாக பிரிகின்றன. ஒன்று என்னை பாதிக்கின்ற பிரச்சனைகள்...மற்றொன்று மீதம் உள்ள அனைத்துப் பிரச்சனைகளும். அவற்றைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என்று அவை என்னை பாதிக்குமோ அன்று நான் பார்த்துக் கொள்ள வேண்டும். அது வரையிலும் அது என் பிரச்சனை அல்ல. அதனைப் பற்றி நான் கவலைப்படவும் வேண்டியது இல்லை. உதாரணத்துக்கு பன்னாட்டு நிறுவனங்கள் நம்முடைய நீர் நிலைகளை அழித்துக் கொண்டு இருப்பது எப்பொழுது நம்முடைய பிரச்சனை ஆகும் என்றால் நாம் அருந்த நீர் கிட்டாத நிலை வரும் போது தான் அது நம்முடைய பிரச்சனை ஆகும். அது வரையிலும் அதாவது நாம் குடிக்க நம்மால் நீரினைப் பெற்றுக் கொள்ளும் நிலை இருக்கும் வரை அந்தப் பிரச்சனை நம்முடைய பிரச்சனை ஆகாது. அவ்வாறு சிந்திக்கத் தான் இந்தச் சமூகமும் நம்மைச் சொல்கின்றது.

உண்மையைச் சொல்லுங்கள் நாளைக்கே கூடங்குளம் அணு மின் உலை வெடித்து ஆயிரக்கணக்கான மக்கள் மரணம் என்ற செய்தி வந்தால் உண்மையிலையே நம்முடைய மனம் அந்த மக்களுக்காக துடிக்குமா அல்லது 'ஐயகோ...இனிமேல் மின் வெட்டு பழையப்படி வந்து விடுமே' என்று மட்டுமே வருந்துமா?. சில செய்திகளின் படி சப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு அந்த நாடே பேரழிவினை சந்தித்த பொழுது, அமெரிக்காவில் சப்பானியர்களின் உயிருக்கு மக்கள் வருந்தியதை விட 'ஐயகோ பங்குச் சந்தை சாய்ந்து விடுமே' என்று வருந்தியது தான் அதிகமாம். மனித உயிர்களை விட இக்காலத்தில் பங்குச் சந்தைகளும் பணமும் தான் அதிக மதிப்பினை பெற்று இருக்கின்றன. அதன் விளைவாக வாழ்வினை அமைதியாக வாழ வேண்டிய மனிதன் வாழ்வினை அவனை சுற்றி இருக்கும் நுகர்வுக் கலாசாரம் போன்ற பல வலைகளில் தவற விட்டுவிட்டு வெறுமையாக நிற்கின்றான். அவனின் வாழ்கை அவனை மீறிய வேகத்தில் அவன் விரும்பாத பாதையில் அவனை மீறியே பணம் என்ற ஒன்றைச் சுற்றி ஒரு முடியா வட்டத்தினுள் சுற்றிக் கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் அவனது வாழ்க்கை அர்த்தம் ஏதுமற்ற ஒரு புதிராக போகின்றது. பயம் அவனை ஆள்கின்றது. இந்த நிலை மாறவே நாம் சமயங்களைக் காண வேண்டி இருக்கின்றது.சமயங்கள் எனப்படுபவை பொதுவாக மக்களிடத்தில் அன்பையும் இறை பக்தியையும் சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டிய கடமைகள் உடையவை ஆகும். மக்களுக்கு வாழ்வினைப் பற்றி விளக்கி இறைவனின் கருத்துக்களை பரப்பி உலகம் முழுவதும் அமைதியும் அன்பும் பரவச் செய்வதே அவற்றின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றுமே நாம் அறிவோம். எனவே மக்கள் அமைதியின்றி ஒவ்வொருவரும் தனித்தனியாக அவர்களுள் மனித நேயம் சுருங்கிக் கொண்டு இருக்கும் இந்தக் காலத்தில் "ஐயா பிரச்சனைகள் இவ்வளவு இருக்கின்றனவே...அமைதியின்றி மக்கள் வாடுகின்றனரே...இந்நிலையை போக்குவதற்கு நீங்கள் என்ன செய்கின்றீர்" என்றக் கேள்விகளோடு சமயங்களை நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.

ஆனால் சமயங்களை நோக்கினால் பதில்களை விட கேள்விகளே மேலும் அதிகமாக கிடைக்கின்றன. அனைத்து சமயங்களும் தனித்தனியாக பிரிந்து நின்று அவற்றுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ளும் நிலையையே நாம் காணுகின்றோம். ஒவ்வொரு சமயத்தினையும் அடிப்படையாகக் கொண்டே பெரும் அரசியல் கோட்டைகள் கட்டி எழுப்பப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் சமயங்களும் மக்களை ஏமாற்றும் ஒரு அரசியல் கருவியாக மாறி விட்டதை நாம் வரலாற்றில் காணுகின்றோம். அன்பையும் சகோதரத்துவத்தையும் பரப்ப வேண்டிய சமயங்கள் வெறியையும் வேற்றுமை உணர்ச்சிகளையுமே பரப்புகின்றன. அவ்வாறு சமயங்கள் மூலமாக மக்களைப் பிரித்து அதன் மூலமாக ஆதாயமடையும் அரசியல் நிறுவனங்கள் உலகம் முழுவதும் இன்று நிலைப்பெற்று நின்றுக் கொண்டு இருக்கின்றன. அவற்றின் உண்மையான நோக்கம் மக்களின் நலன் அல்ல ... மாறாக அவற்றின் நலனே அந்த சமய நிறுவனங்களுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. இதனால் தான்,

லட்சக்கணக்கான இந்துக்கள் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட பொழுது எந்த ஒரு இந்து அமைப்பும் எதிர்த்து ஒரு குரல் கூட கொடுக்கவில்லை.

புத்த மதத்தினை பின்பற்றுபவர்கள் மற்ற மக்களை படுகொலை செய்யும் பொழுது எந்த ஒரு புத்த அமைப்பும் அதனை எதிர்த்து ஒரு குரலும் எழுப்பவில்லை.


கிருத்துவின் பெயரினைக் கொண்டு பெரிய நாடுகளுள் சில அநேக சிறு நாடுகளை தாக்கி அங்குள்ள மக்களை அடிமைப்படுத்தி அவற்றின் வளங்களைக் கொள்ளை அடிப்பதை எந்த ஒரு கிருத்துவ அமைப்பும் எதிர்க்கவில்லை.
 

அல்லாவின் பெயரினைக் கொண்டு இசுலாமியர்கள் சிலர் செய்யும் வன்முறைகளை எந்த ஒரு இசுலாமிய அமைப்பும் எதிர்ப்பதில்லை.

அந்த சமய நிறுவனங்களுக்கு மக்கள் தேவை. அவர்களின் நம்பிக்கைத் தேவை. ஆனால் மக்களின் உண்மையான முன்னேற்றம்...? அது அவர்களுக்கு ஒரு பொருட்டு அல்ல. அவ்வாறு மக்களின் உண்மையான நலன்களில் அவர்களுக்கு அக்கறை இருந்து இருக்குமாயின் மக்களின் இன்றைய இழி நிலை என்றோ மாறி இருக்கும். ஆனால் கொடுமையான விடயம் என்னவென்றால் எதனால் மக்கள் அனைவரும் நலம் பெற்று நல்ல எண்ணங்கள் மேலோங்கி ஒற்றுமையாக இருந்திருக்க வேண்டுமோ, அவற்றினாலையே பல பிரிவுகளாக பிரிந்துக் கொண்டு சுய நலமாக மாக்களாக வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் தான் கடவுளைப் பற்றிய கேள்வி வருகின்றது. கடவுள் என்று ஒருவர் உண்மையிலேயே இருக்கின்றாரா இல்லை அவரும் ஒரு கற்பனையா?. இக்கேள்விக்குரிய விடையை சமயங்களிடம் கேட்டோம் என்றால் அவர்களின் பதில்கள் மேலும் நம்மை பிரிக்கத் தான் செய்கின்றன.

இந்துக்கள் அவர்கள் கடவுளை அன்றி வேறொரு கடவுள் இல்லை என்கின்றனர்.
கிருத்துவர்கள் அவர்கள் கடவுளை அன்றி வேறொரு கடவுள் இல்லை என்கின்றனர்.
இசுலாமியர்களும் அவர்கள் கடவுளை அன்றி வேறொரு கடவுள் இல்லை என்கின்றனர்.

இந்தப் பதில்களை இரண்டு விதமாக காணலாம்.

௧) அனைத்து சமயங்களும் மற்ற சமயங்களின் கடவுள் இல்லை என்றுக் கூறுகின்றன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் கடவுள் என்ற ஒருவர் இல்லை என்பதே சமயங்களின் அந்தக் கூற்றுகளின் மூலம் நமக்கு புலனாகும். எனவே கடவுள் என்ற ஒருவர் இல்லை என்றும் அவர்களின் கூற்று மூலம் நாம் கருதலாம். இது நாத்திக கூற்றாகும்.

௨) அனைத்து சமயங்களும் அவற்றிற்குரிய கடவுள் இருக்கின்றார் என்றே கூறுகின்றன. இந்நிலையில் அனைத்து சமயங்களும் ஒரே கடவுளைத் தான் கூறுகின்றனவா? அந்தச் சமயங்களுள் ஒற்றுமைகள் ஏதேனும் இருக்கின்றனவா என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது. ஏனெனில் ஒரு காலத்தில் தோன்றிய ஒரு இயக்கம் அல்லது ஒரு கருத்து நாளடைவில் பல பிரிவுகளாக பிரிந்து பின்னர் அவைகளுக்குள்ளையே சண்டை இட்டுக் கொள்ளும் நிகழ்வுகளை நம்முடைய காலத்திலேயே நாம் காணுகின்றோம். எனவே இந்த சமயங்கள் எவ்வாறு தோன்றின, அவற்றினுள் ஒற்றுமைகள் இருக்கின்றனவா,
அவை அனைத்தும் ஒரே இறைவனைத் தான் தொழுகின்றனவா என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது. அவ்வாறுக் கண்டால் தான் இன்றைய சமயங்கள் எவ்வாறு திரிபு பெற்று மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றன என்பதையும் அறிந்துக் கொண்டு, அதனை சீர்படுத்தி, சமயங்களின் உண்மையான இலக்கினை அவற்றினை அடைய செய்யலாம்.

அந்த இரண்டாவதுக் கருத்தை நோக்கியே நம்முடைய பயணம் சென்றுக் கொண்டு இருக்கின்றது. சமயங்கள் அனைத்தும் ஒரே இறைவனையே குறிக்கின்றன, ஆனால் காலத்தில் சிலரால் அவை ஆட்கொள்ளப்பட்டு அவற்றின் நிலை மாறி மக்களை ஏமாற்றும் இன்றைய நிலைக்கு வந்து விட்டன என்பதே நம்முடைய கருத்து. அந்த கருத்தினை மெய்ப்பிக்கவே நாம் வரலாற்றினைக் காண வேண்டி இருக்கின்றது. நம்முடைய தேடல்களுக்கு எதாக பல கருத்துக்கள் அந்தந்த சமயங்களின் புனித நூல்களிலேயே மறைந்து இருப்பதும் நம்முடைய இந்தத் தேடலை மேலும் ஆர்வத்துடன் தொடரச் செய்கின்றது. உதாரணத்துக்கு,


 

இன்று சைவ சமயத்தில் காணப்படும் சிவலிங்க/கல் வழிபாடு போன்ற வழிபாடுவிவிலியத்திலும் காணப்படுவதும்
(இணைப்பு)


 

அதே போன்ற ஒரு கல்லைத் தான் மெக்காவில் (மெக்கா - 'மா' கல் என்ற சொல்லின் திரிபு என்றே மா.சோ. விக்டர் கருதுகின்றார் - மா கல் - பெரிய கல் - பெரிய இறைவன்) இசுலாமியர்களும் சுற்றி வந்து வணங்குகின்றனர் போன்ற செய்திகளும் வெறும் ஒற்றுமையாக சிலரின் பார்வைக்குப் பட்டாலும் அனைத்து சமயங்களும் ஒன்று தான் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற தத்துவங்களை அடிப்படையாக நம்புவோரால் அவ்வொற்றுமைகள் நன்றாக ஆராயப்பட்டு மக்களிடையே சமயங்களால் ஏற்பட்டு உள்ள வேற்றுமைகள் களையப்பட வேண்டிய தேவை இன்றியமையாததாக இன்று இருக்கின்றது.

மேலும் கிருத்துவம் மற்றும் இசுலாமிய மதத்தில் முக்கியமான இடத்தை வகிக்கும் ஆப்பிரகாம் என்பவன் 'ஊர்' என்ற இடத்திலே இருந்து சென்றான் என்ற செய்தியும் அந்த சமயங்களில் குறிக்கப்பட்டு உள்ள மனிதர்கள் தமிழர்களா என்றும் நம்மை எண்ண வைக்கின்றன. ஆராயவும் வைக்கின்றன.
நிற்க.

நம்முடைய சமயங்கள் அனைத்திலும் பல ஆன்மீகக் கருத்துகளையும் வாழ்வியல் கருத்துக்களும் புதையுண்டு கிடக்கின்றன. அவற்றை மறைத்து பல அரசியல் கோட்டைகளும் கட்டப்பட்டு உள்ளன. இந்நிலையில் நம்முடைய வாழ்வினை புரிந்துக் கொள்ளவும், உண்மையான ஆன்மீகத்தை அறிந்துக் கொள்ளவும் நாம் வரலாற்றினைக் கண்டுக் கொள்ள தான் வேண்டி இருக்கின்றது. நம்முடைய செல்வங்களையும் உரிமைகளையும் மீட்டெடுக்க வேண்டித் தான் இருக்கின்றது.

மீட்டெடுப்போம்... உண்மைகளையும் வாழ்வினையும்!!!

பி.கு:

சைவ வைணவ சமயங்கள் கிருத்துவ தாக்கத்தில் எழுந்தன என்று கூறினால் நாம் கிருத்துவத்தை பரப்புவதாக அர்த்தம் அல்ல. அவ்வாறு கிருத்துவத்தை பரப்புவதாக இருந்தால் கிருத்துவின் தந்தை சிவன் என்றும் கிருத்துவர்களின் சின்னம் சிலுவை அன்று திருநீறு தான் என்றும் கூறி இருக்கத் தான் தேவை இல்லையே. (இணைப்பு)

நண்பர்களே இந்த பயணம் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கோட்பாட்டினை அடிப்படையாக கொண்ட ஒன்றே அன்றி எந்த ஒரு சமயத்தினையும் குறிப்பாக தனிப்பட்ட முறையில் ஆதரித்து எழுதப்படும் ஒன்று அல்ல என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர் என்ற நம்பிக்கையிலையே தொடருகின்றேன். நன்றி.

ஒவ்வொரு பயணத்தையும் 
ஒரு பயணியாகவே தொடங்குகின்றேன்…
இருந்தும் தனித்திருக்கும் அமைதியில்
சாளரம் தாண்டிய தென்றல் தீண்ட
எங்கோ என்னுள் நீ புகுந்துத் தான் கொள்கின்றாய்… ஒவ்வொரு முறையும்!!!
 
பயணியாய் தொடங்கிய நானும்
ஏனோ ஒரு புதுக் கவிஞனாகவே
என் பயணத்தை முடித்துக் கொள்கின்றேன்… அவ் ஒவ்வொரு முறையும்!!!
 
நான் கவிஞனா…???
அல்லது கவிஞன் ஆக்கப்பட்டவனா…???
விடைத் தேடுதல்களில் பிறக்கின்றது
மற்றுமொரு கவிதை!!!
 
******************************************
நீண்ட நெடிய இரவு ஒன்று
நினைவுகள் என்ற சாட்டையினைச் சுழட்ட
என் நினைவுப் படிமங்களில் புதைந்திறந்த அவள்
ஒவ்வொரு படிமமாய் கடந்து வருகின்றாள்
சிறு புன்னகையில்
மீண்டும் தொடங்கிற்று ஒரு பழைய பயணம்.
 
என்றோ ஒரு மழைக்காலத்தில்
சிதறிய மழைத் துளிகளோடு…அவள் சிந்திய முதல் புன்னகை…
என் முதல் கவிதை… தொடங்கி
ஏதோ ஒரு இலையுதிர்க்காலத்தில்
சிதறிய சருகளோடு…மறைந்த அவள் காலடித் தடம் வரை
எங்கேயோ நான் தொலைத்த உலகங்களில்
மீண்டும் ஒரு காலச் சுழலில் உலா வரத் தான் செய்கின்றேன்…நான்!!!
 
பயணத்தின் முடிவில் இன்று
எஞ்சி இருப்பது நானும்…ஒரு வெற்றுக் காகிதமும் தான்.
எழுதப்படாத அக்காகிதமும் நாளை
என் கவிதை புத்தகத்தினொரு பக்கமாகும்…
நான் அறிந்தக் கவிதை ஒன்றை
நான் மட்டுமே அறிய ஏந்திக் கொண்டு!!!
***************************************

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி