சென்ற பதிவில் இந்தியாவினை கி.பி காலத்தின் தொடக்கத்தில் விட்டு விட்டு வந்தோம். அப்பொழுது இந்தியாவில் அன்னியர்கள் பலர் இருந்ததாகவும் மேற்கு பகுதிகள் முழுமையாகவே அவர்களிடம் இருந்ததையும் நாம் கண்டோம். இனி கி.பி யில் நடந்தது என்ன என்றுக் காண்போம்.

இந்தியாவின் மேற்குப் பகுதியில் பார்தியர்கள் ஆண்டுக் கொண்டு வந்தனர் என்றுக் கண்டோம் அல்லவா. ஆனால் அவர்களின் ஆட்சி நீண்டக் காலம் நீடிக்க வில்லை. காரணம் - குஷானர்களின் படையெடுப்பு. நாம் சென்ற பதிவில் கண்டு இருந்தோம் அல்லவா சகர்களை மத்திய ஆசியாவில் இருந்து குசானர்கள் துரத்தி அடித்தனர் என்று, அதே குசானர்கள் தான் இப்பொழுது மத்திய ஆசியாவினைப் பிடித்து இந்தியாவின் மேற்கே வந்து இருக்கின்றனர். இவர்களின் முன் தாக்குப் பிடிக்க முடியாது பார்தியர்களின் அரசு வீழ மேற்கு இந்தியா இப்பொழுது குசானர்களின் வசம் செல்கின்றது.

இந்த குசானர்கள் என்பவர்கள் கிழக்கு மத்திய ஆசியாவில் இருந்து கிளம்பிய ஒரு சீன நாடோடிக் கூட்டம் ஆகும். அதாவது பிற்காலத்தில் வரலாற்றில் புகழ் பெற்ற மங்கோல் இனத்தவரின் முன்னோடிகள் இவர்கள் என்றும் சொல்லலாம். ஆயிரம் வருட முன்னோடிகள். அப்பேர்ப்பட்ட இவர்களின் வலிமைக்கு முன்னால் நிற்க முடியாது வரிசையாக மத்திய ஆசிய நாடுகள் வீழ இறுதியில் பார்தியர்களின் அரசும் வீழ்கின்றது. இந்தியாவின் மேற்குப் பகுதி சீன நாடோடி இன மக்களின் கட்டுப்பாட்டுக்கு வருகின்றது.

இத்தனைப் படையெடுப்புகளிலும் நாம் காண வேண்டியது இந்தியாவின் மேற்குப் பகுதியினைப் பிடித்தவர்கள் பெரும்பாலும் நாடோடி இன மக்களே. அவ்வாறு பிடித்தவர்கள் அங்குள்ள மக்களுடன் கலந்து கொண்டே ஆட்சியினைத் தொடருகின்றனர். அதாவது மக்களுடன் அவர்கள் கலந்தே விடுகின்றனர். இதன் காரணமாக மேற்கில் பல இனக் குழுக்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. சரி இப்பொழுது மீண்டும் குசானர்களிடம் வருவோம்.

குசானர்கள் கிட்டத்தட்ட மேற்கு இந்தியா முழுவதையுமே பிடித்து விடுகின்றனர். ஏன் மத்தியிலும் அவர்களின் செல்வாக்கினை விரிவு படுத்துகின்றனர். மத்திய இந்தியாவில் சாதவாகனர்கள் வலிமையுடன் இருந்தாலும் குசானர்களை ஒரு அளவு கட்டுப்படுத்த முடிகின்றதே தவிர அவர்களை முழுமையாக விரட்ட முடியவில்லை. இவ்வாறே காலங்கள் ஓட கி.பி மூன்றாம் நூற்றாண்டும் வந்து விடுகின்றது. இக்காலத்திலேயே குசானர்கள் மற்றும் சாதவாகனர்களின் ஆட்சிகள் ஒரு முடிவுக்கு வருகின்றன.

சாதவாகனர்கள் இந்தியாவின் மேற்கில் குசானர்களின் ஆதரவில் வீற்று இருந்த ஒரு சகர் அரசால் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது. குசானர்களின் ஆட்சியோ மேற்கில் மீண்டும் வலுப்பெற்று எழுந்த பெர்சியர்களின் அரசால் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது. ஆனால் குசானர்கள் முழு ஆட்சியையும் இழக்கவில்லை. பஞ்சாப் பகுதியினை அவர்கள் அப்பொழுதும் அவர்களின் ஆட்சியில் வைத்து இருந்தனர். மத்திய இந்தியாவில் குப்தர்களின் ஆட்சி வரும் வரை குசானர்களின் ஆட்சி இந்தியாவில் மறையவில்லை. ஆனால் இந்தக் காலத்தில் தமிழகத்தின் சரித்திரம் ஒரு இருண்டக் காலத்தினுள் நுழைகின்றது. தமிழகம் களப்பிரர்களின் கைகளுக்கு செல்கின்றது. இருண்டக் காலம் என்றுக் கூறுவதன் காரணம் அக்காலத்தில் தமிழகத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. களப்பிரர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? என்ன நடந்தது என்று ஆய்வுகள் தான் கூற வேண்டும். சரி இப்பொழுது நாம் மீண்டும் குப்தர்களை காண செல்வோம்.

குப்தர்கள் ஆட்சி மலருவது கி.பி நான்காம் நூற்றாண்டில். குப்தர்களின் காலம் மீண்டும் இந்தியாவின் ஒரு பொற்காலம். இக்காலத்தில் தான் இழந்த பகுதிகள் அனைத்தையும் இந்தியா திரும்ப பெறுகின்றது. சந்திர குப்தர், சமுத்திர குப்தர் போன்ற மாபெரும் வீரர்கள் தோன்றுகின்றனர். பெர்சியர்களை வீழ்த்தி மேற்குப் பகுதியில் பெருன்பான்மையான பகுதிகள் மீட்கப் படுகின்றன. கிட்டத்தட்ட முழு இந்தியாவுமே இந்தியர்களின் கையில் வருகின்றது. மேற்குப் பகுதியில் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்து வந்தாலும் குப்தர்களின் முன் அவை தோற்றே போகின்றன. ஆனால் வலிமையுடன் இருப்பவன் வலிமையாகவே இருக்க முடியுமா. குப்தர்களின் ஆட்சியிலும் அவர்கள் சறுக்கும் காலம் வருகின்றது. இந்த சறுக்கம் கி.பி ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்குகின்றது. காரணம் ஹுன்னேர்கள் (Huns). வட ஆசியப் பகுதிகளில் இருந்துக் கிளம்பிய மற்றுமொரு நாடோடி இனத்தவர். இவர்களைப் பற்றி சாதாரணமாக எண்ணி விட முடியாது. குதிரை வில்லாளிகளையே முக்கிய ஆயுதமாகக் கொண்டு இருந்த இவர்கள் கிட்டத்தட்ட அனைத்து ஆசிய நாடுகளுக்கும் சரி ரோமப் பேரரசுக்கும் சரி தலைவலியாகத் தான் திகழ்ந்தனர். அப்பேர்ப்பட்ட இவர்கள் தான் இந்தியாவின் மேற்குக் கதவினை இப்பொழுது தட்டிக் கொண்டு இருக்கின்றனர். எத்தனைக் காலம் தான் குப்தர்களாலும் அக்கதவினைக் கட்டிக் காத்துக் கொண்டு இருக்க முடியும். குப்தர்கள் பின் வாங்குகின்றனர். ஹுன்னேர்கள் இந்தியாவின் உள்ளே நுழைகின்றனர். இது நடப்பது கி.பி ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில்.

இந்நிலையில் இந்தியாவின் மேற்குப் பகுதியில் ஹுன்னேர்களின் ஆதிக்கம் பெருகுகின்றது. குப்தர்கள் வலு இழக்கின்றனர். பஞ்சாப் முதற்கண்ட பகுதிகளில் ஹுன்னேர்கள் பரவுகின்றனர். இறுதியாக கி.பி ஆறாம் நூற்றாண்டில் குப்த வம்சம் பல சிறு சிறு பிரிவுகளாக பிரிகின்றது. அத்தருணத்தில் தான் வரதர்கள் ஆட்சிக்கு வருகின்றனர். சிதறிக் கிடக்கும் பிரிவுகளை ஒன்றிணைத்து ஹுன்னேர்களை எதிர்க்கின்றனர். ஆனால் எவ்வாறு இறுதி மௌரியப் பேரரசன் சதியினால் வீழ்த்தப்பட்டு இறந்தானோ அவ்வாறே இறுதி வரத மன்னனும் சதியினால் இறக்கின்றான். அவனை கொள்பவன் அவனது அமைச்சன். அவனுடன் சேர்ந்தே அவனது இரு மகன்களும் கொல்லப்பட வரத அரசும் அதன் முடிவுக்கு வருகின்றது. இதன் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு.

எவ்வாறு பிரகதரத்தன் மரணத்தோடு மௌரியப் பேரரசு ஒரு முடிவுக்கு வந்ததோ. அதேப்போல் இறுதி வரத மன்னனான ஹர்ஷ வரதனின் (Harsha vardhan) மரணத்தோடு வட இந்தியாவில் திராவிடர்களின் இறுதிப் பேரரசும் ஒரு முடிவுக்கு வந்தது. அவனே இறுதியாக வட இந்தியாவினை ஆண்ட ஒரு உண்மையான இந்திய அரசன்.

அவனின் மறைவுக்குப் பின் வட இந்தியா ஒரு குழப்பமான நிலைக்குச் செல்கின்றது. பெரிய அரசர்களோ அரசுகளோ இல்லாத ஒரு நிலை வட இந்தியாவினில் இருக்கின்றது. தெற்கே அப்பொழுது தான் பல்லவர்கள் நிலைப்பெற்று இருக்கின்றனர்.

இந்நிலையில் தான் புதிதாய் ஒரு பெயரினை வைத்துக் கொண்ட சிறு குழுக்கள் வட மேற்குப் பகுதியில் இருந்து தோன்றுகின்றன. இனி வட இந்தியாவினை அடுத்த ஐநூறு ஆண்டுகள் ஆளப்போவது இந்த குழுவினரே. இக்குழுக்களின் பெயர்களை நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர்கள். அட அது என்ன பெயர் அப்படின்னு கேட்கின்றீர்களா.

அது தான் ராஜ்புட்ஸ் (Rajputs). இன்றைய வட இந்தியாவிலும் பிரபலமான ஒரு பெயர். வட மேற்கில் பல காலத்தில் இந்தியா மீது படையெடுத்து வந்து இந்தியாவிலேயே தங்கி இருந்த சகர்கள், குசானர்கள் மற்றும் ஹுன்னேர்கள் போன்றவர்களே ஒன்றிணைந்து, குழப்பம் மிக்க அன்றைய இந்திய அரசியலிலில் தங்களுக்கு ஆதாயம் கிடைக்க ராஜ்புட்ஸ் என்ற பெயரில் வருகின்றனர். அரச வரதனின் மரணத்துக்கு பின் இவர்கள் வலு பெற்று வெளியே வருவதை வைத்து அரச வரதனின் கொலையில் இவர்களுக்கும் தொடர்பு இருக்குமா என்றே அறிஞர்கள் எண்ணுகின்றனர். அதுவும் குறிப்பாக அக்காலம் தொடங்கி இசுலாமியர்களின் படையெடுப்பு வரை வட இந்தியாவின் காலம் ராஜ்புட்ஸ் காலம் என்றே அழைக்கப் பெருவதும் இங்கே கவனிக்கத் தக்கது.

"ராஜ்புட்ஸ் என்பவர்கள் இந்தியா வந்து அங்கேயே தங்கிய சகர்கள், ஹுன்னேர்கள் மற்றும் குசானர்களின் வம்சாவளியினரே ஆவர். காலப்போக்கில் முற்றிலுமாக இந்திய மக்களுள் அவர்களை இணைத்துக் கொண்டு அவர்களின் தனித்தன்மையை இழந்து விட்டனர்." என்கின்றார் கே.ல.குரானா தான் எழுதிய 'இந்தியாவின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாறு' என்ற நூலில.

மேலும் இன்றும் உள்ள ராஜ்புட்டுக்களின் இன வரலாற்றினை ஆராய்ந்தோம் என்றால் அவை நம்மை சகர்களுக்கோ அல்லது ஹுன்னேர்களுக்கோ அல்லது குசானர்களுக்கோ .. ஏன் கிரேக்கர்களுக்கு கூட நம்மை இட்டுச் செல்லும் என்கின்றனர் ஆய்வாளர்கள். சில ராஜ்புடுக்களின் இனமே 'ஹுனா ஜட் (Huna Jat)' என்று இருக்கின்றது...ஹுன்னேர்களுக்கு சாட்சியாக. நிற்க. இப்படிப்பட்ட ராஜ்புட்டுக்களைத் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது. காரணம் அவர்களைக் காணாது இன்றைக்கு நம் நாட்டில் நாம் காணும் வருணாசிரம தருமத்தை நாம் அறிந்துக் கொள்ள முடியாது.

இவ்வாறு கி.பி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவில் திகழும் ஒரு அரசியல் குழப்பமான தருணத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அது வரை இந்தியாவை வெவ்வேறு தருணங்களில் படையெடுத்து வந்து ஆண்டு பின்னர் மக்களுடன் கலந்த அன்னியர்கள் ராஜ்புட்ஸ் என்ற பெயரில் ஒன்று சேருகின்றனர். நீண்ட நாட்கள் இந்தியாவினை அவர்கள் கண்டு இருக்கின்றனர். இந்தியா மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கின்றது. ஆன்மீக ரீதியிலும் சரி அரசியல் ரீதியிலும் சரி. நிலைமை அவர்களுக்கு தோதாக இருக்கின்றது. வட இந்தியாவினை அவர்கள் கைக்கு கொண்டு வருகின்றனர். வட இந்தியாவில் அவர்களின் ஆட்சியை அமைக்கின்றனர்.

அந்த ஆட்சி தான் ஆரியவர்தம். ராஜஸ்தானில் உள்ள அபு மலையில் தான் ஆரியவர்த்தம் தொடங்கப்பெருகின்றது. இந்தியாவின் மீது படை எடுத்து வந்த சகர்கள், குசானர்கள், ஹுன்னேர்கள், பெர்சியர்கள், கிரேக்கர்கள் ஆகியோரின் வம்சத்தினரும் இந்தியாவுடன் வணிகம் செய்ய வந்து அங்கேயே தங்கி இருந்த ரோமர்களும் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் இந்த ஆரியவர்த்தம் என்றும் அவர்கள் தான் ஆரியர்கள் என்றும் இக்காலத்திலேயே மனு தர்மமும், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என்றப் பிரிவுகளும் பிறந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பிராமணர்கள் - மத சம்பந்த செயல்களைச் செய்யும் ஆரியர்கள்.
சத்திரியர்கள் - யுத்தம் செய்யும் ஆரியர்கள்.
வைசியர்கள் - வணிகம் செய்யும் ஆரியர்கள்.
சூத்திரர்கள் - இந்தியர் அனைவரும்.

என்பதே அந்தப் பிரிவுகளின் அர்த்தம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இப்பிரிவுகளைக் கொண்டே சதிகளால் மக்களை ஏமாற்றி அவர்களின் சமயங்களைப் பிடித்து இந்திய மக்களை அடிமையாக்க அவர்களுக்கு அமைதியான ஐநூறு கால ஆண்டுக் காலங்கள் கிடைக்கின்றன என்றும் அக்காலங்களிலேயே சமய நூல்களின் அர்த்தங்களும் சரி வரலாறும் சரி மாற்றப் படுகின்றது, மேலும் காலப்போக்கில் சூத்திரர்கள் என்ற பிரிவுகளில் தங்களுக்கு ஏற்றார்ப்போல் பல பிரிவுகளை உருவாக்கிக் கொள்கின்றனர் அதாவது,

சிவாச்சாரியார் - பிராமண மயமாக்கப்பட்டவர்கள்.
சற்சூத்திரர் - ஆரியருக்கு துணை போனவர்கள்.
சூத்திரர் - ஆரியருக்கு அடிபணிந்தவர்.
பஞ்சமர் - ஆரியரை எதிர்த்தவர்கள்.
மலை சாதியினர் - மலைக்குத் தப்பி ஓடிப் போனவர்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதற்கு அவர்களுக்கு துணை போகும் பல விடயங்களில் ஒன்று தமிழர்கள்/இந்தியர்கள் உருவாக்கிய சமசுகிருத மொழியும் அவர்கள் உருவாக்கிய சைவ வைணவ சமயங்களுமே.

பல இனத்து மக்கள் கூடி இருக்கும் இந்தியாவில் கருத்துக்களைப் பரப்புவதற்கு தோதாக அனைத்து மொழிகளையும் கலந்த ஒரு மொழியை இந்தியர்கள் உருவாக்குகின்றனர் என்றும் அம்மொழியே பின்னர் அவர்களுக்கு எதிராய் பயன்படுகின்றது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூற்றினை மெய்ப்பிப்பது போல் கி.பி நூற்றாண்டுகளிலேயே அதுவும் ஐந்தாம் நூற்றாண்டுக்கு பின்னரே தெளிவான சமசுகிருத படைப்புகள் நமக்கு கிடைக்கின்றன. மேலும் சமசுகிருதத்தில் பல மொழிச் சொற்கள் இருப்பதும் அவர்களின் கூற்றுக்கு சான்றாகத் தான் அமைகின்றது. அதாவது சமசுகிருதத்தில் தமிழ், பாலி, அர்த்தமாகதி, கிரேக்கம், லத்தின், பாரசீகம் மற்றும் அரமேயச் சொற்கள் இருப்பது இது அந்த மொழிகளின் கலப்பில் உருவாக்கப்பட்ட ஒரு மொழியே ஆகும் என்றும் நாம் கருத வழி செய்கின்றது. சரி... இம்மொழியினை தங்களுக்கு உதவுமாறு ஆரியர் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதனை நாம் ஆராய்ந்துப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

எனவே இந்தியாவின் மீது படை எடுத்து வந்த சகர்கள் (Scythian), குசானர்கள் (Kushan), ஹுன்னேர்கள் (Huns), பெர்சியர்கள் (சுங்கர்கள் கன்வர்களை நினைவில் கொள்க), கிரேக்கர்கள் ஆகியோரின் வம்சத்தினரும் இந்தியாவுடன் வணிகம் செய்ய வந்து அங்கேயே தங்கி இருந்த ரோமர்களும் தான் ஆரியர்கள் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

முற்றும்.

வரலாற்றினை நாம் திருப்பிப் பார்க்கும் பொழுது ஒன்று நமக்குத் தெளிவாகப் புலனாகின்றது.
சில விடயங்கள் மறக்கப்பட்டு இருக்கின்றன.
சில விடயங்கள் மறைக்கப்பட்டு உள்ளன.

அதுவும் இந்தியாவின் வரலாற்றினைப் பார்க்கும் பொழுது தெளிவானப் பக்கங்களை விட குழம்பிய பக்கங்கள் தான் அதிகம் தெரிகின்றது. குழம்பிய பக்கங்களில் பொதுவாக யாரும் அக்கறை எடுத்துக் கொள்வது இல்லை. ஆனால் நமது பயணத்திற்கான சில விடயங்கள் அந்த குழம்பியப் பக்கங்களில் இருப்பதினால் நாம் அப்பக்கங்களை இப்பொழுது கண்டுத் தான் ஆக வேண்டி இருக்கின்றது. அதற்கு முன் ஒருக் கேள்வி...

இந்தியாவின் மேல் இது வரை எத்தனை பேர் படை எடுத்து வந்து இருக்கின்றனர்?. இக்கேள்விகளுக்கு நாம் வரலாற்றில் படித்த பதில்கள் அனேகமாக முஹம்மது கோரியில் தொடங்கி ஆங்கிலேயர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள் வரை சென்று முடியும். அதாவது கி.பி 11 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றைய தேதி வரை இப்பட்டியல் நீளும். இல்லை கோரிக்கு முன்னரும் படையெடுத்து வந்தவர்கள் தெரியும் என்கின்றீர்களா. நல்லது தான். ஏனெனில் நாம் அவர்களைத் தான் இப்பொழுது பார்க்கப் போகின்றோம். அதற்கு முதலில் கி.மு ஆறாம் நூற்றாண்டுக்கு செல்ல வேண்டி இருக்கின்றது. நமக்காக அங்கே பெர்சியப் பேரரசர் சைருஸ் இந்தியாவின் மேற்கு பகுதியான காந்தாரப் பகுதியில் காத்துக் கொண்டு இருக்கின்றார் ஒரு பெரும் படையோடு. வரலாற்றுக் குறிப்புகள் படி இந்தியாவின் மேல் படையெடுக்கும் முதல் அந்நிய அரசர் இவர். பொதுவாக இந்தியாவின் தெற்குப் பகுதிகளை விட வட மேற்குப் பகுதிகளே அதிகமாக தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. காரணம் தெற்கினை தாக்க வேண்டும் என்றால் கடல் வழியே வருவதை தவிர வேறு வழி இல்லை. ஆனால் வட மேற்கோ அவ்வாறு இல்லை. திறந்தே இருக்கின்றது.

இந்நிலையில் தான் பெர்சியாவின் அரசர் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துகின்றார். வெற்றியும் பெறுகின்றார். இந்தியாவின் மேற்குப் பகுதிகளான காந்தாராவில் பெர்சிய ஆதிக்கம் தொடங்குகின்றது. காலப்போக்கில் இன்றைய ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பகுதிகள் முழுக்கவும் பெர்சியாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது. இது நடப்பது கி.மு 520 ஆம் ஆண்டு. நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் இவர்கள் பின்னர் அலெக்ஸாண்டரின் இந்தியப் படை எடுப்பின் பொழுது தோற்க்கடிக்கப்படுகின்றனர். அவர்களின் கீழே இருந்தப் பகுதி இப்பொழுது கிரேக்கர்களின் வசம் போகின்றது. இதன் காலம் கி.மு நான்காம் நூற்றாண்டு. அலெக்சாண்டர் இந்தியாவின் மீது போர் தொடுத்த நூற்றாண்டு. இந்தியாவில் அலெக்சாண்டர் பல வெற்றிகள் பெற்றதும் பின்னர் பின் வாங்கியதும் வரலாறு. அது நமக்கு இப்பொழுது முக்கியமில்லை. முக்கியம் என்னவெனில் இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் வேற்றவர்களின் தாக்குதல்கள் இருந்து இருக்கின்றது.

கி.மு ஆறாம் நூற்றாண்டில் பெர்சியர்களும், கி.மு நான்காம் நூற்றாண்டில் கிரேக்கர்களும் இந்தியாவின் மேற்குப் பகுதியினை தாக்கி இருக்கின்றனர். முதலில் பெர்சியர்களுக்கும் காந்தாரப் பகுதியில் இருந்த இந்தியர்களுக்கும் யுத்தம் நடந்து இருக்கின்றது. அதில் வெற்றிப் பெற்ற பெர்சியர்கள் அங்குள்ள இந்தியர்களை ஆளுகின்றனர். அவர்களை தங்களுடைய மற்ற போர்களுக்கும் பயன்படுத்துகின்றனர். பின்னர் கி.மு நான்காம் நூற்றாண்டில் அலெக்சாண்டர் பெர்சியர்களை தோற்கடித்து காந்தாரப் பிரதேசத்தினைக் கைப்பற்றுகின்றார். இவ்வாறு முதலில் பெர்சியர்களின் தாக்கத்திற்கு உட்பட்ட காந்தாரம் பின்னர் கிரேக்கர்களின் தாக்கத்திற்கு உட்படுகின்றது. நிற்க.

மேலே உள்ள செய்திகள் மூலம் நாம் பல யுத்தங்கள் கி.மு ஆறாம் நூற்றாண்டில் இருந்து வடக்கே நிகழ்ந்துள்ளன என்று அறியப் பெறுகின்றோம். இவற்றை நாம் காண்பதற்கு காரணம் இந்த யுத்த காலத்திலேயே தான் ரிக் வேதத்தில் குறிக்கப்பட்டு உள்ள சில யுத்தத் தொடர்பான பாடல்கள் பாடப்பட்டு உள்ளன என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

"ஆரியர்கள் இரானியர்களுடன் மிக நெருங்கிய தொடர்பினை பெற்று இருந்தனர் என்பது அவர்களது செய்யுள்களான அவேசுடாவிலும்(Avesta Scriptures) (ஈரானியர்கள் அல்லது பெர்சியர்கள்) ரிக் வேதத்திலும் காணப்படும் வழிபாட்டு முறைக்கும் மொழிக்கும் உள்ள ஒற்றுமையை வைத்தே நன்கு புலனாகின்றது." என்கின்றார் எ.வ. தோம்ப்சன் தனது 'இந்தியாவின் வரலாறு' என்ற புத்தகத்தில் (E.W.Thompson - History of India). மேலும் ர.ச. ஷர்மாவின் " சோம பானம் என்னும் பயன்பாடு ஹோம (Haoma) என்று அவேசுட மொழியில் வழங்கப்படும். இந்தப் பயன்பாடு ஆரியர்கள் மத்தியிலும் சரி இரானியர்கள் மத்தியிலும் சரி ஒன்று போல் இருக்கின்றது." என்றக் கூற்றும் கவனிக்கத்தக்கது (புத்தகம் - ஆரியர்களைத் தேடி) (R.S.Sharma - Looking for the Aryans).

டேவிட் பிரௌலே தனது 'ஆரியர் படையெடுப்பு என்றொரு கற்பனை (David Frawley - The Myth of the Aryan Invasion of India)' என்ற தனது புத்தகத்திலே 'ஆஸ்கோ பர்பொலோ வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள யுத்தங்கள் இந்தியாவில் நடை பெற்ற யுத்தங்களே அல்ல அவை ஆப்கானிஸ்தானில் இரு வேறு இந்திய - ஈரானிய இனக்குழுக்களுக்குள் நடந்தவையே ஆகும் என்று கூறுகின்றார்' என்று குறிப்பிட்டு உள்ளார்.

இங்கே நாம் காண வேண்டி இருக்கின்றது இந்திய- ஈரானிய இனக்குழுக்கள் என்ற சொல்லையே. ஆய்வாளர்களின் கூற்றின் படி காந்தாரத்தை படை எடுத்து வென்ற பெர்சியர்கள் அங்கே இருந்தவர்களோடு திருமண முறைப்படி கலக்கின்றனர். அவ்வாறு மேற்கு இந்தியாவில் பல இனக்குழுக்கள் அக்காலத்தில் தோன்றின. அவர்களின் மூலமே இந்தியாவின் அரசியல் அமைப்புகள் வெளியே கசிந்து பின்னர் கிரேக்கம் மற்றும் பக்ட்ரியன் இனத்தவரும் இந்தியாவின் மேல் படை எடுத்தனர் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கு சான்றாக தட்சசீலத்தை ஆண்ட அம்பி என்ற அரசன் தான், இந்தியா அரசனான புருசோதமனின் மேல் தான் கொண்ட பொறாமைக் காரணமாக அலேசேண்டேருக்கு இந்தியாவின் மேல் படை எடுத்து வர ஒரு ஓலை அனுப்புகின்றான் என்பது வரலாறு. அந்த அம்பியும் ஒரு பெர்சிய கலப்பினத்தவன் என்று கே.ல.குரானா தான் எழுதிய 'இந்தியாவின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாறு' என்ற நூலில் குறிப்பிடுகின்றார் (K.L.Khurana - The Political and Cultural History of India).

"பெர்சிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவின் அரசியலில் உள்ள பலவீனங்களை உலகுக்கு வெளிப்படுத்தினர். இதுவே கிரேக்கர்களையும் பின்னர் பக்ட்ரியன்களையும் இந்தியாவின் மீது படையெடுத்து பின்னர் வரச் செய்தது."

"அம்பி பண்டைய இந்திய வரலாற்றில் தனது அரசியல் சுய நலத்துக்காக புருசோதமனுக்கு தோற்கடிக்க அலேசேண்டேரை இந்தியா வரக் கூறி ஓலை அனுப்பிய ஒரு துரோகியாகவே குறிக்கப்படுகின்றான்."

சரி... இப்பொழுது இந்தியாவின் மேற்கில் பல இனக்குழுக்கள் தோன்றிவிட்டன. அலேசேண்டேரும் இந்தியாவின் மீது போரிட்டு சென்று விட்டார். கிரேக்க தாக்கமும் பெர்சிய தாக்கமும் இந்தியாவின் மேற்கில் இருக்கின்றன. இக்காலத்தில் தான் இந்தியாவின் வரலாற்றில் குறிக்கப்பட்ட ஒரு மாபெரும் வீரன் தோன்றுகின்றான்.

சந்திர குப்த மௌரியன். - தோன்றி மௌரியப் பேரரசினை நிறுவுகின்றான். இவன் காலத்தில் சிதறுண்ட இந்தியாவின் மேற்குப் பகுதிகள் இவனது பேரரசில் இணைய ஆரம்பிகின்றன. அவற்றுடனே அந்த இந்திய - ஈரானிய இனக்குழுவினரும் தான். சந்திரா குப்தனுக்கு பின்னர் அவன் மகன் பிந்துசாரா வருகின்றான். அவன் பின்னர் இந்தியா கண்ட மாபெரும் சக்கரவர்த்தி அசோகன் வருகின்றார். கிட்டத்தட்ட முழு இந்தியாவுமே மௌரியப் பேரரரசின் கீழ் வருகின்றது. தெற்கே பாண்டியர்களையும் சோழர்களையும் தவிர்த்து. மௌரியப் பேரரசு அதனது பொற்காலத்தை அடைகின்றது. அந்த காலத்துடனையே ஒரு மாற்றமும் வருகின்றது.

அசோகன் புத்தத்தை தழுவுகின்றான். வன்முறையை கை விடுகின்றான். அன்பினைக் கைப் பிடிக்கின்றான். அன்பு வளர ஆரம்பிக்கின்றது. அதன் கூடவே பௌத்தமும். ஆனால் பேரரசு தளர்கின்றது. சிறு மன்னர்கள் தங்களை மௌரியப் பேரரசில் இருந்து பிரித்துக் கொள்ள தொடங்குகின்றனர்.

இந்நிலையில் தான் காலங்கள் ஓடுகின்றன. மௌரியப் பேரரசு இறுதியில் பிரகதரத்தனை வந்து அடைகின்றது. அவனுடைய பரமரையில் யாருக்கும் கிட்டாத ஒரு பெயர் இவனுக்கு கிட்டுகின்றது - 'மௌரியப் பேரரசின் கடைசி அரசன்' என்று. அதற்கு காரணமாக அமைவது புஷ்யமித்ர சுங்கன் (Pushyamitra sunga) என்ற இவனது படைத் தளபதி ஆவான்.

தன்னுடைய படை அணிவகுப்பை பிரகதரத்தன் காண சென்று இருந்த பொழுது அவனால் மிகவும் நம்பப்பட்ட படைத் தளபதியான புஷ்யமித்ர சுங்கனால் கொலை செய்யப்படுகின்றான். மன்னனைக் கொன்ற புஷ்யமித்திரன் சதியால் அரசைப் பிடிக்கின்றான். இந்த புஷ்யமித்ர சுங்கன் - ஒரு பெர்சிய வம்சாவளியைச் சார்ந்தவன் என்பது வரலாறு. நமது மொழியில் சொல்ல வேண்டும் என்றால் ஒரு ஆரியன்.

இவ்வாறு கடைசி மௌரியப் பேரரசனைக் கொன்று மௌரியப் பேரரசை ஒரு முடிவுக்கு கொண்டு வந்த இவன் சுங்க அரசை நிறுவுகின்றான். இதுவே இந்திய மண்ணில் அமைந்த முதல் ஆரிய அரசு. காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு.

புத்தத்தை ஆதரித்த மண்ணில் புஷ்யமித்திரன் வேத வேள்விக் கொள்கைகளை வளர்க்கின்றான். இவனது காலத்திலையே இந்தியாவில் முதல் முறையாக வேத கால வழிபாட்டு முறைக்கு சான்றுகள் கிடைக்கின்றன. இக்காலத்துக்கு முன்னால் வேத வேள்விப் பழக்கம் இந்தியாவில் இருந்ததற்கு சான்றுகளே இல்லை. மேலும் இவனே இந்திய வரலாற்றில் அசுவமேத யாகம் செய்த முதல் ஆளாகவும் அறியப்படுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இவனின் காலத்தில் மீண்டும் மேற்குப் பகுதி கிரேக்கர்களின் வசம் செல்கின்றது. பக்ட்ரியன்(Bactria) இடத்தை ஆண்டு வந்த டெமெத்ரிஉஸ் (Demetrius) என்ற கிரேக்க அரசன் காந்தாரத்தை பிடிக்கின்றான். அதில் இருந்து நீண்ட காலத்துக்கு தட்சசீலம் கிரேக்கர்களின் கையிலேயே இருக்கின்றது. சரி இப்பொழுது மீண்டும் புஷ்யமித்ர சுங்கனிடம் வருவோம். புஷ்யமித்ரனின் பின்னர் அவனுடைய மகன் அக்னிமித்திரன் அரியணைக்கு வருகின்றான். அவ்வாறே சுங்கர்களின் ஆட்சி தொடர்கின்றது. வேத வேள்வியும் தான்.
ஆனால் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதைப் போல சுங்கர்களும் ஆட்சியையும் சூழ்ச்சியால் ஒரு முடிவுக்கு வருகின்றது.

இம்முறை ஆட்சியை பிடிப்பவர்கள் கன்வர்கள் (Kanvar). ஒற்றுமை என்னவெனில் இவர்களும் ஒரு பெர்சிய இனக் குழுவை சேர்ந்தவர்கள் தான். இது நடப்பது கி.மு முதல் நூற்றாண்டில். இம்முறை ஆட்சியைப் பிடிப்பவன் வாசுதேவன் எனப்படும் ஒரு கன்வன். ஆனால் இவர்களின் ஆட்சியையும் நீண்ட நாள் நீடிக்கவில்லை கி.மு 75 இல் ஆரம்பித்த இவர்கள் ஆட்சி கி.மு 26 இல் முடிவடைகின்றது.

முடித்து வைப்பவர்கள் தெற்கில் இருந்து வந்த சாதவாகனர்கள் (Satavahanas). மௌரியப் பேரரசினை அடுத்து அன்னியரின் ஆட்சியினால் நிலவி வந்த குழப்பத்தை இவர்கள் ஒரு முடிவுக்கு கொண்டு வருகின்றனர்.அந்நியர்களின் ஆட்சி ஒரு முடிவுக்கு இந்தியாவில் வருகின்றது. தற்காலியமாக.

கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை இவர்கள் ஆண்டு வந்தக் காலத்தில் இந்தியா அமைதி நிலவும் ஒரு தேசமாக இருக்கின்றது. ஆனால் கிரேக்கர்கள் கைப்பற்றி இருந்த மேற்குப் பகுதியிலோ இன்னும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. மேற்கில் இருந்தும் சரி... மத்திய ஆசியாவிலும் இருந்தும் சரி அப்பகுதி எப்பொழுதும் தாக்குதலுக்கு உட்பட்டுக் கொண்டே இருந்தது.

கி.மு ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி ஒன்றாம் நூற்றாண்டு வரை மேற்குப் பகுதி பல மாற்றங்களைச் சந்தித்து வந்து இருக்கின்றது. கிரேக்கர்களின் வசம் இருந்த காந்தாரப் பகுதியை கி.மு ஒன்றாம் நூற்றாண்டில் சகர்கள் (Sakar or Scythian) தாக்கிக் கை பற்றுகின்றனர். சகர்கள் என்பவர்கள் ஒரு ஈரானிய நாடோடி இனத்தவர். மத்திய ஆசியாவில் இருந்த அவர்களை குஷானர்கள் (Kushanars) என்ற சீன நாடோடி இனத்தவர் தோற்கடித்து துரத்த சகர்கள் இந்தியாவின் மேற்குப் பகுதியில் நுழைகின்றனர். இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் இவர்களிடம் அக்னியை வழிபடும் பழக்கம் இருக்கின்றது. அவ்வாறு மேற்குப் பகுதியில் நுழைந்து இன்றைய ஆப்கானிஸ்தான் பகுதியை பிடிக்கின்றனர்.

ஆனால் இவர்களால் நீண்ட காலம் அங்கே ஆட்சியில் நீடித்து இருக்க முடியவில்லை. காரணம் பார்தியர்களின் (Parthian) படை எடுப்பு. பார்தியர்கள் என்பவர்கள் இன்னொரு இரானிய நாடோடி இனத்தவரே. சகர்களை விட பலம் பொருந்திய இவர்களின் முன் சகர்கள் தோற்கின்றனர். காந்தாரம் பார்தியர்களின் கை வசம் செல்கின்றது. கி.மு முடிவில் இருந்து கி.பி முதல் நூற்றாண்டு வரை இவர்கள் வடமேற்கு இந்தியாவினை ஆட்சி செய்கின்றனர். இவ்வினத்தில் தான் நாம் முன்னர் கண்டு இருந்த கொண்டாபோராஸ் (Gondophares) என்ற அரசன் இருக்கின்றான். கொண்டாபோராஸ் இவனைத் தான் தோமா சென்று சந்தித்தார் என்று வரலாறு கூறுகின்றது.

இதுவே கி.மு வின் முடிவில் இந்தியா இருந்த நிலைமை.
வடமேற்கில் பல இரானிய படையெடுப்புக்கள் நிகழ்ந்து இருந்து இறுதியில் பார்தியர்கள் ஆட்சியில் இருக்கின்றனர். மத்தியில் சாதவாகனர்கள் இருக்கின்றனர். தெற்கில் பாண்டியர்களும் சோழர்களும் இருக்கின்றனர். மேலும் நாம் புஷ்யமித்திர சுங்கனைக் கண்டதுப் போல் பல பல இந்திய - இரானிய இனத்தவர் வடக்கே மக்களுள் இருக்கின்றனர். தெற்கே வணிகத்திற்காக வந்த ரோமர்கள் சிலர் தமிழ் மண்ணிலேயே தங்கியும் இருக்கின்றனர்.

பொதுவாக இந்தியாவில் அன்னியர்கள் அதிகமாக இருக்கின்றனர். இதுவரை சமசுகிருதம் குறித்தோ அல்லது பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்ற பிரிவுகள் இந்தியாவில் நிலவியதாகவோ எந்த ஒரு சான்றும் இல்லை.

இந்நிலையில் கி.பி யில் நடந்தது என்ன என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்...!!!

'சமசுகிருதம் முதலில் தோன்றியதா...அல்லது தமிழ் முதலில் தோன்றியதா' - நீண்ட காலமாக நீண்டுக் கொண்டு இருக்கும் ஒரு விவாதம்.இதனை நாம் இப்பொழுது பார்க்க வேண்டியதன் காரணம் இம்மொழிகளைப் பற்றி அறியாமல் இந்தியாவின் அரசியல் வரலாற்றினையோ அல்லது ஆன்மீக வரலாற்றினையோ நாம் இன்று நிச்சயம் முழுவதுமாக அறிந்துக் கொள்ள முடியாது. சரி...இப்பொழுது பதிவுக்கு செல்வோம்.

இன்று பெரும்பாலான மக்கள் சமசுகிருதத்தினையே முதல் மொழி என்றுக் கருதிக் கொண்டு இருக்கின்றனர். இதற்கு முழு முதற்க் காரணம் நாம் முதல் பதிவில் கண்ட சர் வில்லியம் ஜோன்சும் மாக்ஸ் முல்லேருமே அவர். அவர்கள் தான் சமசுகிருதத்தினை ஆராயும் பொழுது அதனில் கிரேக்கச் சொற்கள், லட்டின் சொற்கள் போன்ற பல ஐரோப்பியச் சொற்கள் இருப்பதனைக் கண்டு வியந்து "இவர்கள் வேதங்கள் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் பழமையானவை என்று கூறுகின்றனர்...மேலும் இவர்கள் பழைமையான நாகரீகத்தினைச் சார்ந்தவர்கள் தாம்... அவ்வாறு நிலை இருக்க இவர்களின் இந்த மொழியில் நம்முடைய சொற்கள் பல தென் படுகின்றனவே... ஒரு வேளை இம்மொழியில் இருந்தே நம்முடைய மொழிகள் தோன்றி இருக்குமோ" என்று எண்ணி சமசுகிருதமே முதல் மொழியாக இருக்கலாம் என்ற தங்களது கருத்தினை உலகிற்கு முதலில் பரப்புகின்றனர். இது நடப்பது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில். அதில் தொடங்கியது தான் சமசுகிருதம் உலகின் பழமையான மொழி என்றக் கோட்பாடு. இது சரியான கோட்பாடா என்பதனை நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

ஒரு மொழி என்பது முதலில் பேசப்பட்டே வந்து இருக்கும். பின்னரே காலத்தில் அதற்கு எழுத்துரு கிட்டி இருக்கும் என்பது வரலாறு. பல மொழிகள் இன்றும் எழுத்துரு பெறாது பேசப்பட்டு மட்டுமே வந்துக் கொண்டு இருப்பது அதற்கு நல்ல சான்று. இந்நிலையில் ஒரு மொழியின் வரலாற்றினை எவ்வாறு நாம் அறிவது. அதன் வயதினைக் கணக்கிடுவது எவ்வாறு?

இப்பொழுது தமிழுக்கு செம்மொழி நிலை வழங்கி இருக்கின்றார்கள். காரணம் தமிழ் இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மொழியாக இருக்கின்றது எனவே அதனைச் சிறப்பித்து அதற்கு செம்மொழி நிலை வழங்கி இருக்கின்றனர். இங்கே நாம் கவனிக்க வேண்டியது அவர்கள் கணக்கிட்ட முறையைத் தான். இராண்டாயிரம் ஆண்டுகள் பழமை என்று சொல்கின்றார்கள்... எதன் அடிப்படையில் சொல்கின்றனர்.. கல்வெட்டுக்கள், நூல்கள் மற்றும் பல குறிப்புகள் போன்றவை கிடைத்துள்ளதால் சொல்கின்றனர். அதன் அடிப்படையிலேயே செம்மொழி நிலையும் வழங்கி உள்ளனர். ஆனால் தமிழ் அதற்கு பல நூற்றாண்டுகள் முன்னரே பேசப்பட்டுக் கொண்டு வந்து இருக்கலாம். ஆனால் ஆய்வாளர்கள் அவற்றை சான்றுகள் இல்லாது எடுத்துக் கொள்ள முடியாது. அவ்வாறு சான்றுகள் இல்லாது எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் உலகில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் செம்மொழி விருதென்ன உலகின் முதல் மொழி விருதே கொடுக்கலாம்.

எடுத்துக்காட்டுக்கு, தெலுங்கு மொழியினை எடுத்துக் கொள்ளலாம். இம்மொழியில் கல்வெட்டுக்கள் கி.பி காலத்திலேயே கிடைக்கின்றன. ஆனால் "அதற்காக இம்மொழி அதற்கு முன்னர் உலகில் இல்லை என்று நீங்கள் கருத முடியாது...எங்கள் தெலுங்கு மொழி பேச்சு வழக்கில் மட்டுமே இருந்து வந்தது...நாங்கள் இதற்கு எழுத்துரு பின்னர் தான் தந்தோம்...ஆனால் ஆதிக் காலத்தில் இருந்தே எங்கள் மொழி இருந்தது....எங்கள் மொழியில் இருந்தே மற்ற மொழிகள் தோன்றின" என்று ஒரு தெலுங்கு நண்பர் கூறினால் நம்மால் மறுக்க முடியாது. ஏன் எந்த மொழியினையுமே மறுக்க முடியாது 'பேசிக் கொண்டு மட்டுமே இருந்தோம்... ஆனால் எழுதவில்லை' என்ற காரணம் பாரபட்சமின்றி அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்.

அவ்வாறு கூறிவிட்டால் சரி மொழியின் காலத்தினை நாம் எவ்வளவு வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம்... 'நாங்கள் மொழியை _______ இத்தனை வருடங்களாக பேசிக்கொண்டு வந்தோம். ஆனால் இப்பொழுது தான் அதனை எழுத்துருவில் கொண்டு வந்தோம் என்றுக் கூறலாம்.
அந்த இடைப்பட்ட இடத்தை ஆயிரம் என்றோ லட்சம் என்றோ ஏன் இன்னும் எத்தனை வருடங்களோ என்றும் போட்டு நிரப்பிக் கொள்ளலாம். அதை நிரூபிக்கத் தான் சான்றுகள் தேவை இல்லையே.

அந்நிலையில் ஒரு மொழியினைப் பற்றி முழுதும் அறிய அந்த மொழியினைப் பேசிய மக்கள் எங்கே இருந்தனர்...அவர்கள் இருந்தமைக்கு சான்றுகள் இருக்கின்றனவா என்று பலதும் ஆராய வேண்டி இருக்கின்றது. ஏனெனில் பேசினோம் ஆனால் அதற்கு சான்றுகள் இல்லை என்று கூறுவது என்றுமே தகுந்த கூற்றாக அமையாது. இன்றும் கூட அலுவலுகத்திலும் சரி வேறு இடங்களிலும் சரி நீங்கள் ஏதேனும் முக்கியமான விடயங்களைப் பற்றிப் பேசுகின்றீர்கள் என்றால் அதற்கு சான்றாக எழுத்து வடிவத்தில் ஏதேனும் ஒன்றை வைத்துக் கொள்ளத் தான் வேண்டி இருக்கின்றது. எனவே ஆயிரம் ஆயிரம் வருடங்கள் பேசிக் கொண்டு வந்த மொழி என்றுக் கூறினாலும் அது எப்பொழுது எழுத்துருவில் கிடைக்கின்றதோ அப்பொழுது இருந்து தான் ஒரு மொழியின் வயதினை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். அதுவே முறை.

சரி...இப்பொழுது நாம் அசோகரை கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சந்திக்க வேண்டி இருக்கின்றது. இந்திய வரலாற்றில் நாம் முக்கியமாக அறிந்துக் கொள்ள வேண்டிய ஒருவர் இவர். இவரை பற்றி நாம் முன்னரே மூன்றாம் பதிவில் கண்டு இருக்கின்றோம். புத்தத்தினைத் தழுவி இருக்கும் அவர் புத்த மதக் கொள்கைகளையும் பலி கூடாது என்றக் கொள்கைகளையும் மக்களிடம் பரப்ப பல மொழிகளில் கல்வெட்டுக்களைத் தயார் செய்கின்றார். அவர் அன்று செய்த கல்வெட்டுக்களே இன்று இந்தியாவின் வரலாற்றினை நாம் அறிந்துக் கொள்ள உதவும் மேலும் ஒரு கருவிகளாகத் திகழ்கின்றன. எனவே நாம் அவற்றினைக் காண வேண்டிய அவசியம் வருகின்றது. அசோகரின் கல்வெட்டுக்கள் பின் வரும் மொழிகளிலேயே கிடைக்கப்பட்டு உள்ளன.

பாலி
அர்த்தமாகதி
தமிழ்
கிரேக்கம்
அரமேயம்


ஆச்சர்யவசமாக சமசுகிருதத்தில் ஒரு கல்வெட்டுகள் கூட இது வரை கிட்டவில்லை. இதில் ஆச்சர்யப்படுவதற்கு என்ன இருக்கின்றது என்று பார்த்தால், அசோகர் பலிகள் இடும் பழக்கத்தை தடுப்பதற்கே முக்கியமாக கல்வெட்டுக்களை உருவாக்குகின்றார். வேதங்களோ பலியினை உடைய வழிபாட்டு முறையினை உடையதாக உள்ளன. மேலும் வேதங்கள் அனைத்தும் சமசுகிருதத்திலேயே உள்ளன. இந்நிலையில் வேதங்களை போற்றும் மக்கள் மத்தியில் உள்ள பலி இடும் பழக்கத்தினை மாற்ற அசோகர் நிச்சயம் அம்மொழியில் கல்வெட்டுக்களை அமைத்து இருக்க வேண்டும் தானே. ஆனால் அசோகரின் கல்வெட்டுக்கள் ஒன்றுக் கூட சமசுகிருதத்தில் காணப்பட வில்லை.

"அட என்னங்க சமசுகிருதம் தெய்வ மொழி... அதனை பொது மக்கள் அறிந்துக் கொள்ளுமாறு எவ்வாறு கல்வெட்டினை வடித்து வைப்பர்" என்று பார்த்தோமானால், கி.பி இரண்டாம் நூற்றாண்டில் நமக்கு முதல் சமசுகிருதக் கல்வெட்டுக் கிடைக்கின்றது. அதுவும் சந்திர குப்த மௌரியர் கட்டிய ஒரு அணையை பழுது பார்த்த செய்தியை சுமந்துக் கொண்டு கிடைக்கின்றது. ஆனால் இங்கு கிடைக்கும் சமசுகிருதம் தனது முழுமையான வடிவத்தினை அடையவில்லை என்றே ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர். செப்பமான சமசுகிருத கல்வெட்டுக்கள் மற்றும் எழுத்துக்கள் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தே கிடைக்கப் பெறுகின்றன.

அதாவது முதல் சமசுகிருதக் கல்வெட்டே கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தான் கிடைக்கின்றது. அதுவும் செப்பமான வடிவில் அல்லாது கிடைக்கின்றது. இந்நிலையில் ஒரு கேள்வி எழுகின்றது...

அணையை பழுது பார்த்த செய்தியை தெரிவிக்க சமசுகிருதம் பயன்பட்டு இருக்கும் பொழுது அதனை விட உயர்ந்த செயலான புத்தரின் கொள்கையை பரப்ப அசோகரால் ஏன் அம்மொழி பயன்படுத்தப் படவில்லை. அதுவும் வேதங்களில் பலி இருக்கும் பொழுது அசோகர் நிச்சயம் அதனை எதிர்த்து சமசுகிருதத்தில் எழுதி இருக்க வேண்டும் தானே. ஏன் சமசுகிருதத்தில் அசோகரின் கல்வெட்டுக்கள் காணப்படவில்லை. காரணமாக ஆய்வாளர்கள் கூறுவது, அசோகர் சமசுகிருதத்தை பயன்படுத்த வில்லை காரணம் அவர் காலத்தில் சமசுகிருதம் என்ற மொழியே இல்லை. எளிதாக சொல்லி விட்டார்கள். ஆனால் நம்புவது அவ்வளவு எளிதானக் காரியம் அன்று. இந்நிலையில் நாம் இன்னும் சற்று உன்னிப்பாக பார்க்க வேண்டி இருக்கின்றது.

ஒன்று கி.பி இரண்டாம் நூற்றாண்டின் வரை சமசுகிருதம் என்ற சொல் எங்கேயும், எந்த இலக்கியத்திலும் சரி கல்வெட்டுக்களிலும் சரி காணப்படவில்லை. நான் சமசுகிருத எழுத்துக்களைச் சொல்ல வில்லை, சமசுகிருதம் என்ற சொல்லையே எங்கும் காண முடியவில்லை. வேதங்களை வாய் மொழியில் சொன்னார்கள் சரி... அப்படி அவர்கள் சொன்னார்கள் என்றத் தகவலாவது காணப்பட வேண்டும் அல்லவா...இது வரை அத்தகைய வேதங்கள் கி.மு காலங்களில் இருந்ததாகவும் சரி வேதங்களின் படி மக்கள் பிரிந்து இருந்தார்கள் என்பதற்கும் சரி சான்றுகளே இல்லை.

மேலும் அசோகர் காலத்து எழுத்துக்களை பிராகிருத எழுத்துக்கள் என்பர்.
பிராகிருதம் என்றால் - இயற்கையாகவே எழுந்த மொழிகள் என்று பொருள்.
அனால் சமசுகிருதமோ - நன்கு செய்யப்பட்டது என்ற பொருளினைத் தருகின்றது. நன்கு செய்யப்பட்டது என்றால் என்ன... யாரால் செய்யப்பட்டது என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

அதாவது ஒரு மொழி இருக்கின்றது. ஆனால் அம்மொழியின் எழுத்துக்களோ...அல்லது அம்மொழியை பற்றிய தகவல்களோ, அதனை யார் பேசினர்... எங்கு பேசினர் என்றத் தகவல்களோ கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை கிட்டவில்லை. அவ்வாறு சான்றுகளே இல்லாத மொழி எதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாமே. நாம் முன்னர் கண்டது போல ஒரு லட்சம் வருடங்கள் முந்தியும் இருந்து இருக்கலாம். ஆனால் காலத்தில் அது அழிந்து இருக்கலாம். அதற்கு பின்னர் வந்த மொழிகள் இருந்தமைக்கு சான்றுகள் அழியாது கிடைக்கின்றன... ஆனால் இம்மொழி இருந்த வரலாற்றை மட்டும் அழித்து விட்டனர்...அல்லது அழிந்து விட்டது. இதற்கு எல்லா மொழிகளுமே பொருந்துமே.

இல்லை... சமசுகிருதத்தில் வேதப்பாடல்கள் உள்ளனவே. எனவே சமசுகிருதம் பழமையானதான ஒன்றாகத் தான் இருக்க வேண்டும் என்றக் கருத்தும் இப்பொழுது எழலாம். உண்மை தான்.

வேதங்கள் இன்று சமசுகிருதத்தில் இருக்கின்றன. ஆனால் அவை வெறும் பாடல்களாய் இருந்தப் பொழுது சமசுகிருதத்தில் தான் இருந்தன என்று எவ்வாறு நாம் சொல்ல முடியும். பின்னால் தொகுக்கப்பட்டு இருக்கலாம் அல்லவா.

ஏன் எனில் இந்திரன், வருணன் ஆகிய கடவுள்கள் தமிழில் மொழியில் தினைக் கடவுள்களாக அறியப்பட்டு உள்ளனர். மேலும் வேதத்தில் உள்ள 'தியெளஸ்' என்ற வான் கடவுள் கிரேக்கத்தில் உள்ள 'சுஸ்' கடவுளை நினைவுபடுத்துகின்றார். மேலும் பெர்சியர்களின் வழிப்பாட்டுப் பழக்கங்களும் சரி கடவுள்களின் பெயர்களும் சரி வேதங்களில் காணப்படும் சில பெயர்களையும் வழிபாட்டு முறைகளையும் ஒத்தே இருக்கின்றன. அந்த வழிபாட்டுப் பழக்கங்கள் எல்லாம் சமசுகிருதத்தின் காலத்துக்கு முன்னரே காணப்படுவதால் அப்பாடல்களே பின்னர் வேதங்களாக தொகுக்கப்பட்டன என்றும் நாம் கருத வாய்ப்பிருக்கின்றது.

உதாரணத்துக்கு, இன்று ஆங்கிலம் இருக்கின்றது. நம்முடைய நூல்கள் பலவற்றை மக்கள் பலரும் அறிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கின்றோம். பல மொழி பேசும் மக்களின் இலக்கியங்கள், பாடல்கள், வழிபாட்டு பழக்கங்கள் ஆகியவை ஆங்கிலத்தில் இப்பொழுது காணப்படுகின்றன. ஆனால் அதை வைத்துக் கொண்டே ஆங்கிலத்தில் இருந்து தான் அம்மொழிகளின் இலக்கியங்கள் எல்லாம் வந்தது என்றுக் கருதுவது சரியாகுமா? அப்பொழுது எந்த மொழியில் இருந்து எந்த மொழி வந்தது என்று அறிவதற்கு மொழியின் காலத்தை கணக்கிட்டுத் தான் பார்க்க வேண்டும். ஆனால் அப்பொழுது ஆங்கிலம் எழுதப்படவே இல்லை வாய் வழியாகவே நாங்கள் அந்தப் பாடல்களைக் கூறிக் கொண்டு வந்தோம் பின்னரே அவற்றை எழுத நேர்ந்தது என்று கூறினால் அதை மறுக்க முடியுமா அல்லது ஏற்றுக் கொள்ளத் தான் முடியுமா?

எனவே சான்றுகள் இன்றி ஒரு மொழியின் காலத்தை கணிக்க முடியாது. சமசுகிருத மொழி உலகில் கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் வரை இருந்ததற்கு சான்றுகளே இல்லை. எனவே சமசுகிருதத்தின் காலத்தினை கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு பின் தான் வைக்க முடியும் மாற்று ஆதாரங்கள் கிட்டும் வரை.


முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31

மெகஸ்தனீஸ்.
 
பேரைக் கேட்ட உடனே ‘இது எங்கேயோ கேள்விப் பட்ட ஒரு பெயர் போல இருக்கின்றதே’ என்ற எண்ணம் நம்மில் பலருக்கு வரத் தான் செய்யும். காரணம் நாம் பள்ளியில் பயின்ற நமது வரலாற்றுப் புத்தகங்களில் இவரை நாம் கடந்து தான் வந்து இருப்போம். சரி அப்பொழுது கண்ட இம்மனிதரை நாம் இப்பொழுது மீண்டும் காண வேண்டியத் தேவை என்ன….? காண்போம்.
 
வரலாற்றின் பக்கங்கள் என்றுமே மர்மமான ஒன்றாகத் தான் இருந்து இருக்கின்றன. காரணம் இன்று இருப்பது போன்று அன்று வரலாற்றினை சேகரித்து வைக்க விடயங்கள் பல இருக்க வில்லை. மேலும் அவ்வாறு சேகரித்து வைத்த விடயங்களும் பல போர்களாலும் இயற்கையாலும் காலம் தோறும் அழிக்கப்பட்டே வந்து இருக்கின்றன. இந்நிலையில் மிஞ்சி இருக்கும் நூல்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள் போன்றியவற்றினை வைத்தே நம்முடைய இன்றைய வரலாறு கணிக்கப்பட்டு இருக்கின்றது. இவ்வாறு கணிக்கப்பட்டு இருக்கும் வரலாற்றில் மிக முக்கிய பங்கினை ஆற்றியோர் பயணிகளும் வணிகர்களும் தான்.
 
இவர்கள் தான் தாங்கள் செல்லும் ஒவ்வொரு ஊரினைப் பற்றியும் அதன் சிறப்புகள் வளங்கள் அரசுகள் போன்றவற்றினைப் பற்றியும் குறிப்புகளை எடுத்துக் கொண்டு பல நாகரீகங்களுக்கு இடையில் ஒரு இன்றி அமையாத இணைப்பாக விளங்கினர். அவர்களின் குறிப்புகளைக் கொண்டே ஒவ்வொரு நாகரீகமும் மற்ற நாகரீகங்களுடன் தொடர்பினை பலப்படுத்திக் கொண்டன. வணிகர்களும் பயணிகளுமே நாகரீகங்களுக்கு மத்தியில் தொடர்புக் கருவியாக அன்று செயலாற்றி வந்தனர். இன்றைய வரலாற்றில் பல விடயங்கள் இவர்களின் குறிப்புகள் மூலமாகவே நமக்கு கிடைக்கப்பட்டவை. நிற்க.
 
இப்பொழுது நாம் காணப் போகும் பயணியும் அப்பேர்ப்பட்ட பயணி தான். 
பெயர் : மெகஸ்தனீஸ் (Megasthenes).
ஊர் : கிரேக்கம்.
வந்த ஊர் : இந்தியா.
காலம் : கி.மு நான்காம் நூற்றாண்டு (இல்லை இது கி.பி நான்காம் நூற்றாண்டு என்றும் கூறுவோர் இருக்கின்றனர்).
சந்தித்த அரசன் – சந்திரகுப்த மௌரியன் – மௌரியப் பேரரசு (இல்லை இது சந்திரகுப்தன் – குப்தப் பேரரசு என்றும் கூறுவோரும் உளர்)
 
கிரேக்க சிற்றரசன் செலேயுகிசின்(Seleucus) சார்பாகவே இவர் இந்தியா வருகின்றார். சுற்றுப் பயணமும் செய்கின்றார். இவர் எத்தனை காலம் இங்கே தங்கி இருந்தார் என்று உறுதிப்பட தெரியவில்லை. ஆனால் இவர் பல முறை இந்தியா வந்ததாகவும் பாடலிபுத்திரம் (அன்றைய மௌரியப் பேரரசின் தலைநகரம்) மற்றும் மதுரை மாநகருக்கும் வந்ததாக இவரின் நூல்கள் கூறுகின்றன. அவ்வாறு அவர் தங்கி இருந்த பொழுது அவர் இந்தியாவினைப் பற்றியும் அதன் அன்றைய அரசியல் நிலைப் பற்றியும் எழுதிய குறிப்புகளை எல்லாம் தொகுத்து ‘இந்திக்கா (Indika)’ என்னும் நூலினையும் தொகுக்கின்றார். அவர் காலத்தில் இருந்த இந்தியாவினைப் பற்றி அறிந்துக் கொள்ள அந்நூல் இன்றும் ஆய்வாளர்களுக்கும் சரி வரலாற்றில் ஆர்வம் மிக்கவர்களுக்கும் சரி ஒரு சிறந்தக் கருவியாகவே திகழ்கின்றது. நிற்க.
 
அந்நூலினை முழுக்கவே ஆராய்ந்து மொழிபெயர்த்து பதிவிட வேண்டும் என்ற ஆவல் இருப்பினும், தற்பொழுது இந்த பின்வரும் பகுதியினை மட்டும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கலாம் மற்றதை பின்னர் கண்டுக் கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கியதாலேயே இந்தப் பதிவு. அவர் காலத்தில் மக்களின் மத்தியில் இருந்த பிரிவுகளை அவர் விவரித்ததின் மொழிபெயர்ப்பே பின் வரும் பதிவு.
 
இந்தியாவின் ஏழு சாதிகள் பற்றி,
                                                                                                                                                                          
௧) மொத்த இந்திய சனத்தொகையும் ஏழு சாதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. அவற்றுள் முதன்மையான இடத்தினில் இருப்பது தத்துவஞானிகளின் குழு. இவர்கள் எண்ணிகையில் மற்ற பிரிவினரைக் காட்டிலும் சிறியராக இருப்பினும் அவர்களின் மதிப்பு மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்து இருக்கின்றது. அனைத்து பொது கடமைகளிலும் இருந்தும் விடுவிக்கப்பட்டு இருக்கும் இவர்கள் யாருக்கும் அடிமைகளும் அல்லர் யாருக்கும் முதலாளிகளும் அல்லர். இருந்தும் இவர்கள் சில தனி நபர்களால் இறந்தவர்களுக்கு உரிய கடன்களை செய்யவும், ஒருவரது வாழ்நாளில் செய்யவேண்டிய தானங்களை செய்யவும் பயன்படுத்தப்படுகின்றார்கள். ஏனெனில் இந்த தத்துவஞானிகள் இறைவனுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களாக நம்பப்படுகின்றார்கள். மேலும் இவர்கள் ஹதேஸ் (கிரேக்க மரணக் கடவுள்) உடன் தொடர்புடைய விடயங்களைப் பற்றி அதிகம் பேச முடிபவர்களாகவும் அறியப்படுகின்றனர். அவர்கள் அவ்வாறு செய்யும் கடனுக்கு பதிலாக பரிசுகளையோ சலுகைகளையோ பெற்றுக் கொள்கின்றனர். மேலும் இந்திய மக்களுக்கு இவர்கள் வேறு பெரும் பேற்றினையும் அளிக்கின்றனர், வருடத்தின் தொடக்கத்தில் இவர்கள் குழு கூடும் பொழுது மக்களுக்கு அவ்வருடம் வரக்கூடிய வானிலை, வறட்சி, நோய், காற்றின் திசை போன்றியவற்றோடு இன்ன பிற விடயங்களையும் கூறுகின்றனர். அதற்க்கேற்றார்ப் போல் மக்களும் அரசனும் தகுந்த நடவடிக்கை எடுத்து எது வருமோ அதை எதிர் கொள்ள ஆயுத்தமாகிக் கொள்கின்றனர். அவர்களின் கூற்றால் பின்னால் வரப் போகும் ஆபத்தை உணராது இவர்கள் தயார் நிலையில் இல்லாது இருக்கும் நிலையே இல்லாது இருக்கின்றது. அப்படி பிற்காலத்தில் வரப் போகும் விடயத்தை தப்பாக கணித்துக் கூறிய ஒருவருக்கு விமர்சனத்தை தவிர வேறு தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. அவர் தன் வாழ்வில் பின்னர் எப்பொழுதும் மௌனத்தையே கடைப்பிடிக்க வேண்டும் என்பது சட்டமாக உள்ளது. ஒரு வேளை அவரின் கணிப்பு சரியானதான ஒன்றாக இருப்பின் அவருக்கு வரி விலக்கு முற்றிலுமாக அளிக்கப்படுகின்றது.
 
௨) இரண்டாவது சாதி விவசாயிகளால் அமைக்கப்பட்டு இருக்கின்றது. மற்ற பிரிவினரை விட இவர்களே எண்ணிக்கையில் அதிகமாக காணப்படுகின்றனர். மற்ற பொது கடமைகளிலும் இருந்தும் போர் செய்வதில் இருந்தும் விடுவிக்கப்பட்டு இருக்கும் இவர்கள் தங்கள் காலத்தில் பெரும் பகுதியை நிலத்தினை உழுதே செலவிடுகின்றனர். மேலும் ஒரு விவசாயி அவனது நிலத்தில் உழுதுக் கொண்டு இருக்கும் பொழுது ஒரு எதிரி கூட அவனைத் தாக்க மாட்டான், காரணம் இவர்கள் பொது நலனுக்காக பாடுபடுபவர்களாக அறியப்படுகின்றனர். ஆகையால் எதிரிகள் கூட இவர்களுக்கு தீங்கு விளைவிப்பது இல்லை. மாறாக அனைத்து வித இன்னல்களிலும் இருந்தும் இவர்கள் பாதுகாக்கப் படுகின்றனர். இதன் மூலமாக, நிலமும் அழிக்கப்படாது பெரும் விளைச்சலைத் தந்து, அனைத்து மக்களும் அவர்கள் தேவைகள் அனைத்தும் பெறப் பெற்று வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ வழி செய்கின்றது. விவசாயிகளும் கிராமப்புறங்களிலேயே தங்களது மனைவி மக்களுடன் வாழத் தான் நினைக்கின்றனர். நகரத்துக்கு செல்ல அவர்கள் விரும்புவது இல்லை. அதை தவிர்க்கவும் பார்க்கின்றனர். அவர்கள் தங்களது நிலத்துக்கு நில வரியினை அரசனுக்கு கட்டுகின்றனர். காரணம் இங்கே அனைத்து நிலங்களும் அரசுடமை, தனி உடைமை என்று எங்கும் இல்லை. தனி நபர் சொந்தமாக நிலம் வைத்து இருப்பதற்கு உரிமை இல்லை. நில வரி போக அரசாங்க கருவூலத்திற்கு அவர்கள் மண்ணில் இருந்து விளைந்த விளைச்சலில் நான்கில் ஒரு பங்கு செலுத்தி விடுகின்றனர்.
 
௩) மூன்றாவது சாதி ஆடு மேய்ப்பவர்களாலும் மாடு மேய்ப்பவர்களாலும், பொதுவாக நகரத்திலும் சரி கிராமத்திலும் சரி தங்காது குடில் இட்டு தங்கும் மேய்ப்பவர்களாலும் 
அமைக்கப்பட்டு இருக்கின்றது. வேட்டையாடுவதன் மூலமும் பொறி வைத்து மிருகங்களைப் பிடிப்பதன் மூலமும் அவர்கள் தீய மிருகங்களிடம் இருந்தும் பறவைகளிடம் இருந்தும் நாட்டினைக் காக்கின்றனர். இப்பணிகளில் தங்களை முழுவீச்சில் இவர்கள் இவர்களையே ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் விவசாயிகளின் தானியங்களுக்கும் சரி மக்களுக்கும் சரி தொல்லைத் தரும் வன வினங்குகளில் இருந்து இவர்கள் பாதுகாப்பு அளிக்கின்றனர். இதற்கு பலனாக அரசனிடம் இருந்து இவர்கள் உணவுப் பொருட்களும் வாங்கிக்கொள்கின்றனர்.
 
௪) நான்காவது சாதி ஆசாரியார்களாலும் வணிகர்களாலும் உருவாக்கப்பட்டு உள்ளது. இவர்களுள் சிலர் ஆயுதம் செய்பவர்களாக இருக்கின்றனர், சிலர் விவசாயிக்கு தேவையான பொருள்களை செய்பவர்களாக இருக்கின்றனர் மேலும் மற்றவர்கள் பல் வேறு செயல்களுக்குத் தேவையான பல்வேறுப் பொருள்களை உருவாக்குபவர்களாக இருக்கின்றனர். கப்பல் செய்பவர்களும் மாலுமிகளும் இந்த சாதியிலையே இருக்கின்றனர்.
இந்த சாதியினரில் போர் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பொருட்கள் செய்பவர்கள் மட்டும் முழு வரி விலக்கு பெற்று இருக்கின்றனர். மேலும் இவர்கள் அரசிடம் இருந்து மானியமும் பெறுகின்றனர். சிலர் அரசுக்கு வரி கட்டி அரசு அனுமதித்த சில சேவைகள் செய்கின்றனர். கப்பல் படைத் தலைவன் படகுகளை மக்களின் போக்குவரத்துக்கும் சரி வணிகத்துக்கும் சரி வாடகைக்கு தருகின்றான்.
 
௫) ஐந்தாவது சாதியாக போர்வீரர்கள் இருக்கின்றனர். போர் முறைகளில் நேர்த்தியாகவும் கட்டுப்பாட்டோடும் இருக்கும் இவர்கள் யுத்தத்திற்கு  ஆயுதங்களுடன் ஆயுத்தமாகியும், எண்ணிக்கையில் விவசாயிகளுக்கு அடுத்த நிலையிலும் இருக்கின்றனர். அமைதிக் காலங்களில் களிப்பு நிகழ்சிகளில் பங்கு எடுத்துக் கொண்டும் குடித்துக் கொண்டும் தங்களின் நேரத்தினை இவர்கள் கழிக்கின்றனர். முழுப்படையும், அதாவது காலாட்படை,போர்க்குதிரைகள், போர்யானைகள் மற்றும் இன்ன பிற படை அனைத்தும் அரசனின் செலவிலேயே இயங்குகின்றன. அவர்கள் எப்பொழுது போர் என்று அழைப்பு வந்தாலும் அதற்கு ஆயுத்தமாகவே இருக்கின்றனர். காரணம் அவர்கள் அவர்களின் உடல்களைத் தவிர அவர்களின் பொருள் என்று வேறு எதையும் சுமந்து கொள்வது இல்லை.
 
௬) ஆறாவது சாதி ஒற்றர்களால் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இவர்களின் பொறுப்பில் நாட்டில் நடக்கும் அனைத்து விடயங்களை ஆராய்வதும், அவற்றை மேற்ப்பார்வைப் பார்த்து அனைத்தையும் ரகசியமாக அரசனிடம் கொண்டு வந்து சேர்ப்பதும் ஆகிய செயல்கள் அடங்கும். சிலர் நாட்டினை கவனிக்கும் பொறுப்பில் இருக்கின்றனர். சிலர் படைகளை ரகசியமாக கவனிக்கின்றனர். அவர்கள் அந்த அந்த முகாம்களிலேயே இருந்து தங்களது பணியை ரகசியமாக செய்கின்றனர்.எனவே மிகவும் திறமை உடையவர்களே அப்பணிகளுக்கு
 தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். அரசன் இல்லாத நிலையில் இவர்கள் தங்களின் தகவல்களை அந்தந்த ஊர் நீதிபதியிடம் தெரிவிப்பர்.
 
௭) ஏழாவது சாதியில் பொதுக் கடமைகளை நிர்வாகம் பண்ணுபவர்களும், ஆலோசகர்களும் ஆய்வாளர்களும் இருக்கின்றனர். அளவில் மிகவும் சிறியதாக இருந்தாலும் அதிகம் மதிக்கப்படும் ஒரு சாதியாக இவர்கள் இருக்கின்றனர். காரணம் இவர்களின் உயர்ந்த குணமும் அறிவுமே ஆகும். இவர்களில் இருந்தே அரசின் ஆலோசகர்களும் பொருளாளர்களும் நாட்டுக்கு தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். மேலும் விவாதங்களைத் தீர்த்து வைக்கும் நபர்களும் இவர்களிடம் இருந்தே தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். படைத் தளபதிகளும், நீதிபதிகளுமே கூட இவர்களிடம் இருந்தே தேர்வு செய்யப் படுகின்றனர்.
 
இவையே, அரசியல் அமைப்பில் இந்தியா பிரிந்து இருக்கும் பல்வேறு பாக நிலைகள் ஆகும். ஒரு சாதியில் இருந்து மற்றொரு சாதியில் பெண்ணெடுக்க அல்லது மணம் முடிக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. அதேப் போல் ஒருவர் செய்யும் ஒரு செயலை மற்றொருவர் செய்யவும் அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு போர்வீரன் விவசாயி ஆக முடியாது. அதேப் போல் ஒரு ஒரு பொருள் உற்பத்தியாளன் தத்துவ ஞானியாக முடியாது. மேலும் ஒருவன் பல வணிகம் செய்வதற்கும் அனுமதி கிடையாது. ஒருவன் ஒரு வியாபாரம் தான் செய்ய வேண்டும். இந்த நியதி தத்துவ ஞானிகளுக்கு மட்டும் தளர்த்தப்பட்டு உள்ளது.
 
மொழிபெயர்ப்பு முடிந்தது.
 
மேலே கூறியவை தான் மெகஸ்தனீஸ் கண்ட இந்தியாவில் இருந்த மக்கள் பிரிவுகள். நாம் இன்றுக் காணும் பிரிவுக்கும் அன்று நிலவியது என்று நாம் அறியப்படும் பிரிவுகளுக்கும் உள்ள வேறுபாடுகள் சிந்திக்க வைக்கின்றன.
 
மெகஸ்தனீஸ் கூறிய கருத்துக்கள் சரியானவையா?…அல்லது அவை தவறானவையா… பண்டைய இந்தியா எவ்வாறு இருந்தது…ஆராய வேண்டும். இந்தியாவினை நேசிப்பவர் அனைவரும் ஆராய்ந்து பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. உண்மை என்ன என்று அப்பொழுது தான் நாம் அறிய முடியும்.
 
வரலாற்றின் பக்கங்கள் பெரியவை…இருந்தும் முயல்வோம்…!!!
 

சில கேள்விகள் சில பதில்கள்...!!!

பல பதிவுகள் கண்டாயிற்று. அவற்றினோடு பல கேள்விகளும் தான். சில கேள்விகளுக்கு பதில்கள் தந்து இருந்தாலும் பல கேள்விகளுக்கு 'பின்னர் காண்போம்' என்ற ஒரே பதிலே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் சரி ஒரு சில கேள்விகளுக்கு பதில்களை தனியாகவே கூறி விடலாம் என்ற எண்ணம் தோன்றவே இந்தப் பதிவு.

கேள்வி : தோமா தமிழ்நாட்டில் கிறித்துவம் பேசினால், பிள்ளையார் – கிறிஸ்து ஒன்று என்றால்பிள்ளையார் தமிழ்நாட்டில்தானே தோன்றியிருக்கவேண்டும்? அதுவும் தோமையார் வந்து கொஞ்ச காலத்தில்? ஆனால், பிள்ளையார் தமிழ்நாட்டிற்கு வந்ததே 10-ம் நூற்றாண்டு. இதற்கு என்ன விளக்கம் சொல்கிறீர்கள்?

பதில்: தோமா தமிழகத்திற்கு மட்டுமே வரவில்லை. அவர் 20 வருடங்கள் இந்தியா முழுவதும் சுற்றி கருத்துக்களை பரப்பி இருக்கின்றார். சரி இப்பொழுது பிள்ளையார் வடக்கில் இருந்து தெற்கே வந்ததன் காரணத்தினைக் காண்போம். அதற்கு முன் கீழே உள்ள படத்தைக் காண்போம்.
காண்பதற்கு பிள்ளையாரினைப் போன்றே தோற்றம் கொண்டு இருந்தாலும் இவர் பிள்ளையார் இல்லை. இவர் பார்சுவநாதர். சமண சமயத்தின் இருபத்தி மூன்றாம் தீர்த்தங்கரர். காலம் ஏறக்குறைய கி.மு ஏழாம் நூற்றாண்டு என்று கருதப்படுகின்றது. இவர் மகாவீரருக்கு முந்தியவர். இவருக்கு சமண சமயத்தில் பல கதைகள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்றில் இவர் ஒரு பிறவியில் யானையாக பிறந்ததாகவும் அப்பிறவியில் இவரின் பகைவன் பாம்பாகப் பிறந்து இவரின் தலையில் கொட்டி இவர் அமைதியாக மரணமுற்றதாகவும் கூறப்படுகின்றது. அக்கதையின் படியே இவருக்கு யானைத் தலையும் தலைக்கு மேல் பாம்பு நிற்பது போலவும் வடிவம் அமைந்து இருக்கின்றது. மேலும் யானையை வழிப்பட்ட சில குழுக்களும் வட இந்தியாவில் இருந்து இருக்கின்றனர். நிற்க.

இந்நிலையில் தான் பிற்காலத்தில் கிருத்துவின் கருத்துக்களை சுமந்துக் கொண்டு தோமா இந்தியா வருகின்றார். புது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதுவும் அவர்களின் பழக்க முறைக்கு ஏற்றார் போலவே கொண்டு செல்ல வேண்டும். இந்நிலையில் தான் இறைவன் மக்களுக்காக தன் உயிரினைத் துறந்தான் என்ற செய்தியை பரப்ப மக்களிடம் அன்று இருந்த யானை வழிபாடு முறையையும் பர்சுவனாதரின் இந்தக் கோலத்தையும் மக்கள் பயன்படுத்திக்கொண்டனர் என்றே நாம் கருத முடிகின்றது. இதன் அடிப்படையில் தான் பிள்ளையார் வடக்கே இருந்து தெற்கே வருகின்றார்.
**********************************************************************************
கேள்வி: சைவ வைணவம் மட்டுமே இந்து சமயங்களாக பண்டைய தமிழகத்தில் இல்லை அல்லவா. அப்படி இருக்க அவற்றினை நாம் சைவ வைணவ சமயங்களாக கருத முடியுமா?

பதில்: உண்மை தான் நண்பரே. இந்து சமயங்கள் எனப்படுபவை மொத்தம் ஆறு சமயங்கள் ஆகும். ஆனால் அவற்றில் நான்கு சமயங்களுக்கு சிவன் முழுமுதற் கடவுளாக இருக்கின்றார். இரண்டிற்கு விஷ்ணு இருக்கின்றார்.
சிவன் முழுமுதற் கடவுளாக இருக்கும் சமயங்கள்.
சைவம் - சிவன் - அம்மை - மகன்
சாக்தம் - சிவன் - சக்தி - மகன்
கௌமாரம் - சிவன் - சக்தி - குமரன்
காணாபத்தியம் - சிவன் - சக்தி - கணபதி
விஷ்ணு முழுமுதற் கடவுளாக இருக்கும் சமயங்கள்.
வைணவம் - சிவன் - விஷ்ணு - பிரமன்
சௌரம் - சிவன் - விஷ்ணு - ஐயப்பன்.

அனைத்து சமயங்களும் சிவன் அல்லது விஷ்ணுவையே சார்ந்து இருப்பதால் இவை அனைத்தையுமே நாம் சைவ வைணவ சமயங்களாக கருதலாம்.
**********************************************************************************
கேள்வி: இந்து சமயத்தின் தத்துவம் சித்து - அசித்து - ஈசுவரன் அல்லது பதி - பசு - பாசம் தானே. இவை கிருத்துவத்தின் மூ ஒருமைக் கோட்பாடுக்கு வேறானதாக அல்லவா இருக்கின்றது. அவ்வாறு இருக்க கிருத்துவத்தின் மூ ஒருமைக் கோட்பாடு எவ்வாறு சைவ வைணவ சமயத்தில் இருக்கின்றது என்று சொல்லுகின்றீர்கள்.

பதில்: நண்பரே... பதி-பசு-பாசம் என்பதோ அல்லது சித் - அசித் - ஈசுவரன் என்ற தத்துவங்கள் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு நிலையை விளக்குவதாக இருக்கும் ஒன்றாகும். ஆனால் மூ ஒருமைக் கோட்பாடோ இறைவனின் நிலையை விளக்குவதாக இருக்கும் ஒன்றாகும். இதனை விளக்க பின் வரும் பாடல்களைக் காண்போம்.


மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
சாவம் உள்ளன நீக்குவானைத் தடம் கடல் கிடந்தான் தன்னை
தேவ தேவனைத் தென் இலங்கை எரி எழ  செற்ற வில்லியை
பாவ நாசனை பங்கயத் தடம் கண்ணனைப் பரவுமினோ - நம்மாழ்வார் - திருவாய்மொழி (3-6-2)

மூவராகிய ஒருவனை மூவுல குண்டு உமிழ்ந் தளந்தானை
தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத் தண் திருவயிந்திர புரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்துரைத்த பாவு
தண் டமிழ்ப் பத்திவை பாடிட பாவங்கள் பயிலாவே.  - திருமங்கை ஆழ்வார் (3-1-10).

அருவமோ உருவா ரூப மானதோ அன்றி நின்ற
உருவமோ உரைக்கும் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின்
அருவமும் உருவா ரூபம் ஆனது மன்றி நின்ற
உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக் குள்ள வாமே.  - சிவஞானசித்தியார்(1:38)

மேலே கண்ட வரிகள் மூலம் இறைவன் ஒருவன் தான் ஆனால் மூன்று நிலையில் விளங்குகின்றான் என்ற அவர்களின் கருத்து விளங்குகின்றது. இக்கருத்தும் கிருத்துவத்தின் கருத்தும் ஒன்று போல் இருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. ஏன் இந்த ஒற்றுமை என்று நாம் ஆராய வேண்டி இருக்கின்றது.


சரி...கேள்விகள் இப்போதைக்கு போதும். மற்ற கேள்விகளுக்கு பதிலினை நம்முடைய பயணத்தில் 'பின்னர் காண முயற்சிப்போம்...'

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30

வேதங்கள்!!!

இந்து சமயத்தின் அடிப்படை கருத்துக்களைக் கொண்டவை இவை என்று சிலரால் இன்று நம்பப்பட்டும் அவ்வாறே பரப்பப்பட்டும் இருப்பவை. நாம் முந்தைய பதிவுகளில் சைவ வைணவ சமயங்களே ஒன்றிணைக்கப்பட்டு இந்து சமயம் என்று வழங்கப்பெருகின்றன என்று கண்டோம். இந்நிலையில், அதாவது இந்து சமயத்தின் அடிப்படை வேதங்களே என்ற கருத்து நிலவும் பட்சத்தில் நாம் இந்த வேதங்களைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது. சைவ வைணவ சமயங்களின் அடிப்படை வேதங்களா... காண்போம்.

இன்று உங்களுக்கு பிடித்த கடவுள் யார் என்று மக்களிடம் கேள்விகள் கேட்டால் 'சிவன்,முருகன்,பிள்ளையார்,பெருமாள்,அம்மன்,இராமன்' போன்ற பெயர்கள் பதிலாக வருமே அன்றி 'இந்திரன்,வருணன்,அக்னி,வாயு,பிரசாசுபதி' போன்ற பெயர்கள் பதிலாக வரும் வாய்ப்புகள் மிக அரிது. இப்பொழுது நாம் இந்த கடவுளரின் பெயர்களைப் பற்றி பார்ப்போம்.

சிவன்,முருகன்,பெருமாள் போன்ற பெயர்கள் சைவ வைணவ சமயக் கடவுள்களின் பெயர்கள். இந்தப் பெயர்கள் எதுவும் வேதங்களில் குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்திரன்,வாயு,அக்னி போன்ற பெயர்கள் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுள்களின் பெயர்கள். இக்கடவுள்களுக்கே வேதத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவ்வாறு வேதத்தில் சிறப்பிக்கப்பட்டு இருக்கும் இக்கடவுள்கள் சைவ வைணவ சமயங்களில் ஏதோ ஒரு மூலையில் இருப்பதையே நாம் இன்று காண முடிகின்றது. ஏன் இந்த மாற்றம்... வேதத்தில் இருந்தே சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றால் வேதம் போற்றிய இந்திரன்,வருணன் போன்ற கடவுள்களைத் தானே சைவ வைணவ சமயங்களும் போற்றி இருக்க வேண்டும் மாறாக வேறு தெய்வங்களை முதன்மைப்படுத்தி அச்சமயங்கள் விளங்கிக் கொண்டு இருப்பது ஏன்?

சரி பெயர்கள் மாறி உள்ளன. இருக்கட்டும். இப்பொழுது இன்னொரு விடயத்தினை நாம் காண வேண்டி இருக்கின்றது.
பலி வழிபாடு...!!!

வேதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள தெய்வங்கள் அனைவருக்கும் பலி இட்டு வணங்கும் முறையே காணப்படுகின்றது. இறைவனை கவர பலி தேவை என்பதே வேதக் கொள்கை. வேதங்கள் இக்கருத்துக்களையே கூறுகின்றன. சரி இப்பொழுது இந்த பலி இடும் பழக்கம் சைவ வைணவ சமயங்களில் காணப்படுகின்றனவா என்று கண்டால் இல்லை என்பதே பதிலாக வருகின்றது.

சிவன் கோவில்களிலோ அல்லது பெருமாள் கோவில்களிலோ பலி இடும் பழக்கம் கிடையாது. அங்கே பலிபீடங்கள் இருக்கின்றன அனால் பலி கிடையாது. இப்பழக்கமே முருகன் கோவிலிலும் சரி பிள்ளையார் கோவில்களிலும் சரி கடைப்பிடிக்கப்படுகின்றன. அதாவது இன்று பெருவாரியான மக்களால் வணங்கப்படும் தெய்வங்களுக்கு பலி இட்டு வணங்கும் வழிபாட்டு முறை இல்லை.

அட என்னங்க இன்றும் நம்முடைய ஊர்களில் அய்யனாருக்கும் சரி மற்ற குல தெய்வங்களுக்கும் சரி விலங்குகளை பலியிட்டு வழிபடும் பழக்கம் இருக்கின்றதே இதுக்கு என்ன சொல்றீங்க என்ற கேள்வி இப்பொழுது எழலாம். நியாயமான கேள்வி தான். இந்தக் கேள்விக்கு விடையினை நாம் பின்னர் காண்போம். இப்பொழுது நாம் மீண்டும் சைவ வைணவ சமயத்துக்கும் வேதங்களுக்கும் வரலாம்.

வேதங்கள் - பலி வழிபாட்டு முறையினை உடையவை.
சைவ வைணவ சமயங்களிலோ பலி கிடையாது. ஏன் இந்த வேறுபாடு என்று வினவின் நமக்கு இரு தரப்புகளிடம் இருந்து இரு வேறு பதில்கள் வருகின்றன. ஒரு தரப்பினர் வேதங்களை நம்பிகின்ற தரப்பினர். மற்றொருவர் கடவுள் நம்பிக்கை அற்ற தரப்பினர். இப்பொழுது அவர்கள் கூறும் கூற்றினைக் காண்போம். முதலில் வேதங்களை நம்பும் தரப்பினரின் கூற்றினைக் காண்போம்.

இவர்களின் கூற்றின் படி வேதங்களில் பலி வழிப்பாட்டு முறை இருந்தாலும் வேதாந்தங்களில் பலி மறுப்பு கோட்ப்பாடுகள் இருக்கின்றனவே. எனவே பலி மறுப்பும் வேதங்களின் கோட்பாடுகளே என்கின்றனர். ஆனால் இப்பொழுது நமக்கு சில கேள்விகள் எழுகின்றன... ஏன் இந்த திடீர் மாற்றம். வேதாந்தங்கள் வேதத்தின் அடிப்படையில் எழுந்தன என்றால் திடீர் என்று கோட்பாடுகளின் ஏன் மாற வேண்டும். பலி என்ற விடயம் ஒன்று தான் என்று இல்லை பல விடயங்கள் வேதங்களுக்கும் வேதாந்தங்களுக்கும் இடையே மாறுபடுகின்றன. வேதத்தில் இருக்கும் இயற்கை வழிபாட்டு முறை வேதாந்தத்தில் இல்லை மாறாக ஒரு கடவுள் வழிபாட்டு முறை காணப்படுகின்றது. மேலும் வேதத்தில் இல்லாத ஆன்மா, மனிதன் இறைவனை அடைய வழி போன்ற பல கருத்துக்கள் வேதாந்தத்தில் காணப்படுகின்றது. வேதத்திற்கும் வேதாந்தங்களுக்கும் ஏன் இந்த வேறுபாடு என்ற கேள்விக்கு இது வரை பதில் இல்லை. சைவ வைணவத்துக்கும் வேதத்திற்கும் உள்ள வித்தியாசத்தை காண நாம் வேதாந்தங்களை அணுகினால் கேள்வி வேதத்திற்கும் வேதாந்தத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் ஏன் என்ற நிலைக்கு சென்று விட்டது. இக்கேள்விக்கு விடை இதுவரை கிட்டாததால் நாம் இப்பொழுது மற்ற கூற்றினைக் காண வேண்டி இருக்கின்றது.

அட கொஞ்சம் நில்லுங்க... வேதம் அப்படின்னு சொல்றீங்க சரி... அது தெரியும்... வேதாந்தங்கள் அப்படின்னு சொல்றீங்களே அப்படினா என்னனு சொல்லுங்க...அப்படினா தான படிக்குற எல்லாத்துக்கும் புரியும் அப்படின்னு கேட்குறீங்களா சரி தான்.


வேதாந்தங்கள் என்றச் சொல் - வேதா + அந்தங்கள் - அதாவது வேதத்தின் முடிவு பொருளைத் தருபவை என்று பொருள் தருவது. இதனை உபநிடங்கள் என்றும் வழங்குவர். இவை வேதங்களைத் தொடர்ந்து அவற்றை விளக்க எழுதப்பட்டவை. எழுதப்பட்டதின் காரணத்தை நாம் பின்னர் காண்போம். இப்பொழுது நாம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூறும் கருத்தினைக் காண்போம்.

அவர்களின் கூற்று நம்மை சமண புத்த சமய காலத்திற்கு அழைத்துச் செல்கின்றது. நாம் முன்னரே அம்மதங்களைப் பற்றிக் கண்டு இருக்கின்றோம். அவை பலி மறுப்பு கோட்பாடு உடைய சமயங்கள். கிமு ஆறாம் நூற்றாண்டில் இருந்து கிபி பத்தாம் நூற்றாண்டு வரை இந்திய மண்ணில் நிலை பெற்று சிறந்து விளங்கிய சமயங்கள். அதுவும் அசோகரின் காலத்தில் கொடி கட்டி பறந்த சமயங்கள். அக்காலத்தில் மக்கள் பலர் இச் சமயக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டு இருந்ததால் பலி இடும் பழக்கங்கள் சற்று நலிவடைந்து இருந்தன. சரி இப்பொழுது நாம் இவர்களின் கூற்றினைக் காண்போம்.

பலி வழிபாட்டினை உடைய மக்கள், பலி மறுப்பு சமயங்களான சமணத்திற்கும் புத்ததிற்கும் மக்களிடையே பெருகும் செல்வாக்கினைக் கண்டு, மக்களை தன் பால் இழுக்க பலி வழிப்பாட்டு முறையினை மாற்றி பலி இல்லா முறைகளை வகுத்துக் கொண்டனர். அவ்வாறு மாற்றி தங்களது செல்வாக்கையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொண்டனர். எனவே தான் இன்றைய சைவ வைணவ சமயங்களில் பலி என்பது இல்லை. இதுவே அவர்களின் கருத்தாக இருக்கின்றது.

ம்ம்ம்...ஏற்றுக் கொள்ள கூடிய கருத்து தான். மக்கள் மத்தியில் ஒரு கருத்து வலு பெற்று வருகின்றது என்றால் அக்கருத்துகளை வைத்து தங்களுக்கு ஆதாயம் தேடிக் கொள்ளும் வழிகளை உருவாக்கிக் கொள்கின்றவர்களை நாம் இன்றளவிலும் கண்டு கொண்டு தான் இருக்கின்றோம். எனவே சமண புத்தக் கொள்கைகளை சேர்த்துக் கொண்டு வேதக் கருத்துக்கள் உருமாறி இருக்கலாம் என்ற இவர்களின் கண்ணோட்டத்தை நாம் முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால் இவர்களின் கூற்றிலேயும் ஒரு கேள்வி எழுகின்றது.

௧) சமண புத்த சமயங்கள் பலி மறுப்புச் சமயங்கள். ஆனால் சைவ வைணவச் சமயங்களோ பலி நிறைவேற்றச் சமயங்கள். அதாவது பலி நிறைவேறி விட்டது இனிமேல் பலி தேவை இல்லை என்ற கொள்கை உடைய சமயங்கள். எனவே தான் அக்கோவில்களில் பலிபீடங்கள் இருக்கின்றன ஆனால் பலி இல்லை. எனவே சமண புத்த சமயத்தில் இருந்து இந்தக் கொள்கையை (பலி இல்லா வழிபாடு) சைவமும் வைணவமும் பெற்று இருந்தன என்றால் இவற்றில் ஏன் இந்த வேறுபாடு என்றும் நாம் ஆராய வேண்டி இருக்கின்றது. இதனை நாம் பின்னர் காண்போம்.

சரி இப்பொழுது நாம் கண்ட வரை...

௧) வேதக் கடவுள்கள் சைவ வைணவத்தில் சிறு நிலையில் இருப்பதும், சைவ வைணவக் கடவுள்களை பற்றி வேதத்தில் குறிப்புகள் காணப்படாது இருப்பதும்
௨) பலி கோட்பாடுடைய வேதத்தில் இருந்து எவ்வாறு பலி இல்லா வழிப்பாட்டுடைய சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்ற கேள்விக்கு விடை இல்லா காரணத்தினாலும்
௩) வேதத்தில் காணப்படும் பல கடவுள் வழிப்பாடு முறை மற்றும் இயற்கை வழிப்பாட்டு முறை போன்றவை சைவ வைணவத்தில் காணப்படாதமையும்
௪) சைவ வைணவத்தில் இருக்கும் ஒரு மூலக் கடவுள் (சைவம் -சிவன், வைணவம்-விஷ்ணு) என்ற கோட்பாடு வேதத்தில் காணப்படாதமையும்
௫) சைவ வைணவ சமயத்தின் அடிப்படையான இறைக் குடும்ப வழிப்பாட்டு பழக்கமும், அவதாரக் கோட்பாடும் வேதத்தில் காணப்படாதமையும்

சைவமும் வைணவமும் வேதங்களில் இருந்து தோன்றிய சமயங்கள் அல்ல என்று நாம் கூறுவதற்கு வழி வகுக்கின்றன. சரி வேதங்களில் இருந்து சைவ வைணவ சமயங்கள் தோன்றவில்லை என்றால் அவை எவற்றில் இருந்து தோன்றின...பின்னர் வேதங்கள் என்றால் என்ன...அவற்றின் காலங்கள் என்ன? ஏன் வேதங்களில் இருந்து சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றக் கருத்துக்கள் நிலவுகின்றன?

இக்கேள்விகளுக்கு நாம் விடையினை காண்போம்...!!!

பயணிப்போம்...!!!

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி