இந்தப் பதிவு இப்படத்தினைப் பற்றிய ஒரு விமர்சனம் அல்ல. ஏனெனில் இப்படத்தினை வெறும் பொழுதுப்போக்குத் திரைப்படமாக நான் கருதவில்லை மாறாக இக்காலத்தில் தமிழையும் தமிழர்களையும் அவர்கள் அறியாமலையே அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டு இருக்கும் ஒரு சதி வலையினைப் பற்றிய எச்சரிக்கை மணியாக நான் கருதுகின்றேன்.

போதிதர்மன் சீனத்துக்கு சென்று அங்கே தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தருகின்றான்.
நம் களரியும் வர்மக்கலையும் அங்கே சென்று வளர்கின்றன. அக்குப்பஞ்சர்...சூடோ... போன்று பல கலைகளாக மாறி அவை அங்கே அந்த மக்களால் போற்றப்படுகின்றன.
ஆனால் அந்தக் கலைகள் தோன்றிய மண்ணில் இன்று அந்தக் கலைகளைக் காணவில்லை.
காரணம் - அந்தக் கலைகளால் காசில்லை. காசில்லாக் கலைகள் பயனில்லை. எனவே அக்கலைகள் நமக்கு பயனில்லை என்று நாம் ஒதுக்கி விட்டோம். அவர்களுக்கு நல்லதாக போயிற்று. அக்கலைகளை அவர்களை செதுக்கி விட்டனர். இன்று நாம் "கராத்தே - சீனக் கலையாக்கும்... தமிழிலே இதுப் போல ஏதாவது உண்டா" என்று சீனதினை உயர்த்திப் பேசிக்கொண்டு இருக்கின்றோம்.

அவர்கள் அவர்கள் மொழியினை நேசித்தனர். அவர்கள் பண்பாட்டினை காத்தனர். ஒரு இனமாக இருந்தனர். அவர்களை அடுத்தவன் ஆள அவர்கள் ஒருக்காலும் அனுமதித்தது இல்லை. சில காலம் சப்பானுக்கு அடிமையாய் இருந்த பொழுதும் இன உணர்ச்சியுடன் போரிட்டார்களே அல்லாது சப்பானிடம் அடிப்பணிய வில்லை. அவர்கள் மொழியிலேயே பேசினர்...படித்தனர்...வளர்ந்தனர். அவர்கள் மொழியும் வளர்ந்தது...கலையும் வளர்ந்தது..; இனமும் வளர்ந்தது...புகழும் வளர்ந்தது.

ஆனால் வீரம், நேர்மை, கொடை என்ற மாபெரும் பண்புகளைக் கொண்டு வாழ்ந்த தமிழன் இன்று அடிமையாய், தம் பெருமையினை அறியாதவனாய் வாழுகின்றான். வந்தோரை எல்லாம் வாழ வைத்த தமிழன் இன்று அந்நிய நாட்டவரை அண்டி வாழுகின்றான். தமிழில் பேசினால் கேவலம் என்று எண்ணி அந்நிய மொழியினை பேசுகின்றான். அவனைப் பொறுத்தவரை அவன் இனத்தினை தவிர அனைவரும் உயர்ந்தவர்கள். கற்பது வேற்று மொழி...பேசுவது வேற்று மொழி...பிழைப்பிற்கும் வேற்று மொழி... பின் எவ்வாறையா அவன் மொழி வளரும்... அவன் இனம் வளரும்... அவன் வளர்வான்? ஆங்கிலம் பேச முடியவில்லையே என்ற ஆதங்கத்தினால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கு வரும் அளவிற்கு எப்படி ஐயா என் இனத்து மாணவர்கள் தன்னம்பிக்கை இழந்து போனார்கள்.? உன் மொழி நீச மொழி... உன் இனம் நீச இனம் என்று தமிழகத்தில் இருந்துக் கொண்டே சிலர் கூறுவதைக் கேட்டுக் கொண்டு எவ்வாறையா அவர்கள் உணர்ச்சி இன்றி இருப்பவர்களாக ஆனார்கள்?

இந்த நிலைமை எதனால் ஏற்பட்டது?... எப்படித் தாழ்ந்தான் தமிழன். சிந்திக்க இங்கே ஒருவரும் தயாரில்லை. சிந்திப்பவரை கவனிப்பாரில்லை. அடிமையாய் விடுவித்து விடலாம். அடிமையாய் இருப்பதில் சுகம் கண்டு விட்டவனை விடுவிக்க முடியாது.

படத்தில் நாயகி பேசுகின்ற வசனங்கள்...
"தமிழில் இருக்கும் ஒரே காரணத்திற்க்காக நீங்கள் தமிழ் கூறும் அறிவியலை மறுக்கின்றீகள். அதை காணக் கூட நீங்கள் தயாரில்லை."
"இந்தியன்னா உலகத்துல மதிக்க மாட்டான். தமிழன்னா இந்தியாவுல மதிக்க மாட்டான்."

இந்த வசனங்கள் உண்மையா... இல்லையா.?

தமிழில் அறிவியல் இருக்கின்றது என்று கூறினால் அதை நம்பக் கூட நம்மில் பலர் தயங்கும் நிலை தான் இன்று உள்ளது. திருமந்திரம், சிவஞானபோதம் போன்ற நூல்களில் உள்ள கருத்துக்களை ஆங்கில அறிவியல் அறிந்துக் கொள்ள எத்தனை யுகங்கள் ஆகுமோ நான் அறியேன். ஆனால் இந்த நூல்களைப் பற்றிய விழிப்புணர்வு எங்கே சென்றது?

ஐரோப்பிய அறிவியல் உடம்பினை இன்றும் ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருக்கின்றது. அனால் நம் முன்னோர்களோ உடம்பைப் பற்றிய ஆராய்ச்சியினை முடித்து, உயிரினைப் பற்றியும் ஆராய்ந்து முடித்து இறுதியில் ஆன்மாவினைப் பற்றியும் ஆராய்ந்து முடித்து விட்டார்கள். இதனை... இந்தக் கூற்றினை தமிழனே நம்ப மறுக்கும் சூழ்நிலை தான் இன்று நம் நாட்டில் நிலவுகின்றது.

கதாநாயகி தன்னுடைய அப்பாவினைப் பற்றி கூறும் காட்சி. அவளின் தந்தை ஒரு சித்த வைத்தியர். ஆங்கில வைத்தியர்களால் குணப்படுத்த முடியாத நோய்களை எளிதில் குணப்படுத்தி விடுகின்றார். அந்த ஒருக் காரணத்தினாலையே அவர் மேல் போலி மருத்துவர் என்று வழக்கினைப் போட்டு சிறையில் அடைக்கின்றனர். அவரது கலையும் திறமைகளும் அவரின் உயிர் செல்லும் பொது அவருடனையே மறைந்து விடுகின்றன.

இந்த வசனம் இக்கால அடக்குமுறையை குறிக்கின்றது. மருத்துவம் என்றோ சேவை நிலையில் இருந்து மாறி வணிகமாக மாறி விட்டது. இந்தியா என்பது அந்நிய மருந்து நிறுவனங்களின் சந்தையாக மாறி விட்டது. படிப்பிற்கு பணம் வேண்டும். போட்ட பணத்தினை எடுக்க மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதே இன்றைய நிலையாக மாறி விட்டது. ஒருக்காலத்தில் உணவே மருந்தாக இருந்த நிலைப் போய் இன்று மருந்தே உணவாகும் நிலை வந்ததற்கு யார் காரணம். நம்முடைய கலைகளை வளர்ப்பதற்கு பதிலாக அரசியல்வாதிகளும் பெரிய மருத்துவமனைகளும் சேர்ந்து அயல் நாட்டில் காசினை வாங்கிக் கொண்டு நம்மை அந்நிய மருந்துக்களுக்கு அடிமையாகுகின்றார்களே இதற்கு யாருடைய அறியாமைக் காரணம்? இந்த அறியாமையினால் இந்தியா நோய்வாய் பட்ட ஒரு நாடாக, அந்நிய நாடுகளின் சோதனைக் கூடமான ஒரு நாடாக மாறி வருவதனை நாம் என்று அறியப் போகின்றோம்?

பக்கத்துக்கு நாட்டினில் 7 பெரும் நாடுகள் சேர்ந்துக் கொண்டு நம் இனத்து மாவீரர்களைக் கொன்றுக் குவித்தனர். நம் போராட்டங்கள், குரல்கள் ஏதாவது ஒரு பலனைத் தந்ததா?... கடலில் தினமும் நம் மீனவர்களை கொன்று குவிக்கின்றார்கள்... அதையாவது தடுக்க முடிந்ததா?

ஆசுற்றளியாவில் ஒரு சிங்கின் தலைக் குல்லாவினைக் கழட்ட செய்த அதிகாரிக்கு இந்தியாவின் பிரதமர் கண்டனங்களைத் தெரிவிக்கின்றார். ஆனால் ஆயிரம் தமிழர்கள் பலி ஆனாலும் சிங்களம் நல்லவன். தமிழன் கெட்டவன்.

நாம் ஒரு மாபெரும் வரலாற்றின் சொந்த மக்கள் என்னும் உண்மையினை நாம் என்றையா அறிந்துக் கொள்ள போகின்றோம்?

உடனே சிலர் கூறி விடுவார்கள்...."இவனுங்க தமிழன் தமிழன் அப்படினே சொல்லுவானுங்க... இவங்களுக்கு வேற வேலையே கிடையாது... உலகமே முன்னேறிக் கொண்டு போகும் பொழுது இவனுங்க பின்னாடி நோக்கிச் செல்லுவானுங்க".

அவர்களுக்கு...

தமிழன் தமிழன் என்று கூறுவது கேவலம் கிடையாது. எங்கள் இனத்தினை நாங்கள் நேசிக்கின்றோம். எங்கள் உரிமைக்காக நாங்கள் குரல் கொடுக்கின்றோம். இப்படி குரல் குடுப்பதினால் நாங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்றோ சிறந்தவர்கள் என்றோ நாங்கள் கர்வம் கொள்ளவில்லை. அடிமையாய் கிடக்கும் எங்கள் இனத்தினை விடுவிக்க இந்த ஓலம் ஒவ்வொரு தமிழனின் கடமை.

உலகம் முன்னேறவில்லை. அப்படி நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறிவீனம். உலகம் அமெரிக்காவாகிக் கொண்டு வருகின்றது. அவன் வைத்தது தான் சட்டம். அவன் பயங்கரவாதி என்று சொல்லுகின்றவன் பயங்கரவாதி. கெட்டது என்று சொல்வது கெட்டது. அவன் கூற்று தான் வேத வாக்கு. இது தான் உங்கள் முன்னேற்றமா? மதிப்பெண்களையும் பணத்தினையும் மட்டுமே பெற கற்றுக் கொடுக்கும் இன்றைய கேவலமான கல்வி முறையின் பின் விழைவுகள் தான் உங்களின் இந்தக் கூற்று.

73 நாடுகளில் தடை செய்யப்பட்ட மரபணு மாற்றுப் பயிர்களை இந்தியாவில் கொண்டு வந்தே சேர்ப்போம் என்று குதிக்கும் மத்திய அரசின் தன்மைக்கு யார் காரணம்? மக்கள் நலமா... பணமா?

1000 வகையான நெல் கதிர்களை கண்டு வைத்து இருந்த நம்மிடம் பசுமை புரட்சி என்ற ஒன்றின் பயனாக 900 மேலான கதிர் வகைகள் அழிவுற்று விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக போனதிற்கு என்ன காரணம்? மக்கள் நலனா ... பணமா.?

சுதேசி இயக்கம் என்று தன்மானமுள்ள இந்தியர்களால் துவங்கப்பட்ட ஒரு இயக்கம் இன்று இருந்த இடம் தெரியாமல் அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு உடன் போய் விட்டதே இதற்கு என்ன காரணம்?... மக்கள் நலனா... பணமா?

குலக்கல்வி என்ற ஒன்றினை மீண்டும் கொண்டு வர ராசாசி எண்ணியதற்கு காரணம் என்ன?... மக்கள் நலனா?

பணம் என்ற ஒன்றிற்காக நம்முடைய மற்ற அனைத்துத் தகுதிகளையும் அடகு வைத்து விட்டோமே நண்பர்களே... இன்று நமக்காக இல்லாவிடினும் நம் இனத்திற்காக அடகு வைத்ததை மீட்க வேண்டி இருக்கின்றது.

12 நாட்களில் போதிதர்மன் திரும்பி வருவது ஒரு உவமை...

அதன் பொருள், நம் ஒவ்வொருவனுக்குள்ளும் ஒரு வரலாற்றினை உருவாகிடும் தன்மையினைக் கொண்ட ஒருவன் ஒளிந்துக் கொண்டு இருக்கின்றான். உன் இனத்தினைக் காக்க அவன் வெளி வர வேண்டும்... வந்தே ஆக வேண்டும்...!!!

இல்லையெனில் தமிழன் உலக அரங்கினில் நிமிர்ந்து நிற்கவே முடியாது போய் விடும்.

உன்னை வயிற்றினுள் கொண்ட நாள் முதலாக உன்னை கவனிக்க தொடங்கும் தாய் போல, நீ அம்மா என்று அழைக்க ஆரம்பித்த நாள் முதலாக உன்னை தமிழ் அன்னை தத்து எடுத்து விட்டாள். நீ வளர, அறிவையும் ஆற்றலையும் அவள் தன்னிடம் காத்து வைத்துக் கொண்டு இருக்கின்றாள்.... அன்புடன். அவளைப் புறக்கணித்தது போதும்...நாமின்றி அவளுக்கு வேறு துணை யார்?... எண்ணுவாய் தமிழா...எண்ணிப் பொங்குவாய்... அன்புடன்...பண்புடன்..தெளிவுடன்!!!

பொறுத்தது போதும் தமிழா...!!!

காசி ஆனந்தன் கூறியது போல ...

" இருப்பாய் தமிழா நெருப்பாய்!
  இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!".

இதை உணர ஏழாம் அறிவு தேவை இல்லை. ஆறாம் அறிவே போதும்...!!! என்ன செய்யப் போகின்றோம் நாம்?

12 கருத்துகள்:

ஏழாம் அறிவையும் தாண்டிய சரியான
விமர்சனம்.
வாழ்த்துக்கள் நண்பரே.

நான் படித்த விமர்சனங்களில் சிறந்தது இதுதான். நிறைய பேர் குறை தான் சொல்கிறார்கள்.இயக்குனர் முயற்சியை யாரும் பாராட்டுவதில்லை. நிச்சயமாக போற்றி பாதுகாக்க வேண்டிய படங்களில் ஒன்று ஏழாம் அறிவு.

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

இதை உணர்ந்துவிட்டல்தான் நாம் எப்போதோ முன்னேறி இருப்போமே? உலகில் முதலில் தோன்றிய புத்திசாலி இப்பொழுது அடிமுட்டாளாக இருப்பது, காலத்தின் கட்டாயம், ஆனால் இந்தநிலை மீண்டும் மாறும், தலைகீழ் மற்றம் தோன்றும் என்ற நம்பிக்கையோடு செயல்படுவோம்

மிக அருமையான பதிவு

வாழ்த்துகள் சகோ

migavum gavanikkathakkadhu indha katturai nalla padhivu vazhththukal
vanakkam
surendran
surendranath1973@gmail.com

அருமை,அருமை,அருமை.

Sirandha vimarsanam! Indha Thamizhanin kanavukal nanavaaka enadhu manamaarndha vaazhthukkal! Nivaas avarkalin varnanayai padikkumbothu, aangilathil koorappattulla oru pazhamozhi ninaivirkku varukirathu..."History Repeats Itself"...nadandhathae meendum nadakkum! Nambikkayudan iruppom! Murugadoss avargalukku thamizh samudhaayathin saarbaaka nandri! Vaazhka Thamizh! Valarga athan pugazh! Thamizh thaayae potri!

உலகாண்டவன் தமிழன். இனவது பெருந்தன்மை மனத்தால்தான் கெட்டுக்கொண்டிருக்கிறான். இன்னும் பெரிய அதிர்ச்சி தேவைப்படுகிறது போலும் இவனை எழுப்ப. என்ன செய்வது தோன்றியது முதல் தோன்றிய இடத்திலேயே வழ்ந்துவிட்டோமே. வெளியுலகம் தெரியவில்லை.

தமிழுக்கு வாழ்த்துக்கள் . தொடரட்டும் உங்கள் சேவை . ஈழத்தின் நிலை குறித்த உங்கள் கருத்துக்கள் மற்ற அரசியல்வாதிகளின் கருத்து போல் உள்ளது . அதை விட ஸ்ரீ லங்கவையே விலைக்கு வாங்குவோம் வெல்வோம் ஆள்வோம் .
என்று உறுதிமொழி ஏற்போம் . அதை உங்களைப் போன்ற சிறந்த எழுத்தாளர்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் . செய்யுங்கள் வாழ்த்துக்கள் .

சகோதரர் நிவாஸ்... நாம் அடி முட்டாளாக இல்லை. நம்மை இந்த நிலைக்கு தள்ளி வைத்துள்ளார்கள்.. இன் நிலையை மாற்ற செயல் படுவோம்.. தமிழனே உலகின் முதல் மனிதனாய் பிறந்தான். தலை சிறந்தவனாய் இருந்தான். இனி வரும் காலங்களிலும் நமது தலைமுறைகளுக்கு தமிழின் அவசியத்தை உணரவைபோம். நாம் ஒன்றாய் இணைந்து செயல் படுவோம்.

migavzum arumayana pativzu , idhai oworu thamilanum padikka vendum.

அருமையான பதிவு.
ஆனால் இதை உணர்ந்து புரிந்துகொள்ள தமிழர்களின் மனதில் தான் இடமில்லை.

சிவாஜி படத்தில் விவேக் ரஜினியிடம் கூறுவார், கதாநாயகி படித்தது M.A தமிழ், அந்த ஒரு காரணத்தாலேயே வேலை இல்லாமல் வேறு வேலை செய்வதாக, இதனை கேட்டு சிர்த்தவர்கள் தான் நம் மக்கள். இவர்களுக்கு அதில் இருக்கும் உண்மையும், தற்போதைய நம் நிலையை அறிந்துகொள்ளும் மனம் இல்லை என்பது தான் உண்மை.

உங்களை போல சிலராவது இப்படி பதிவிடுவது மனம் திறந்து பாராட்ட வேண்டியது.

இன்றைய இளம் தலைமுறையினர் தங்கள் குழந்தைகளுக்கு அப்பா, அம்மா சொல் என்று கூறுவதை விட, DADDY, MUMMY சொல்லு என்று தான் கற்றுத்தருகின்றனர். வெட்கப்பட வேண்டிய செயல் இது என்று யாருக்கும் புரிவதில்லை.

மாற்றங்கள் பிறந்தது நம்மிடம் தான், அதனை மாற்ற வேண்டியவர்களும் நாம் தான்.

நன்றி !!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி