இந்துவிற்கு ஒரு கடிதம்- லியோ டால்சுடாய்:

'சுதந்திர இந்தியா'வின் ஆசிரியருக்கு டால்சுடாய் எழுதிய பதில் கடிதம் தொடர்கின்றது. 

                                                  5                           

"நான் யார்? உன்னுடைய கண்கள் இந்த உலகத்தினை ஆச்சர்யத்துடன் பார்க்க தொடங்கிய நாளில் இருந்து நீ தேடிக் கொண்டு இருப்பவனும், இந்த உலகத்தின் எல்லைகளால் உன்னிடம் இருந்து மறைக்கப்பட்டு இருப்பவனும் நான் தான். என்னவென்று அறியாமலேயே உன்னுடைய பிறப்புரிமை என்று நீ உரிமையாய் கோரியதும் உன்னுடைய இதயத்திலே நீ வேண்டியதும் என்னையே ஆகும். உன்னுடைய ஆன்மாவினில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வீற்று இருப்பவனும் நானே. சில நேரங்களில், என்னை நீ உணரவில்லை என்பதினால் உன்னுள்ளே சோகமாய் வீற்று இருப்பேன். சில நேரங்களில், என்னுடைய தலையை உயர்த்தியும், கண்களைத் திறந்தும், உன்னை நோக்கி கை நீட்டியும், இந்த உலகத்தில் உன்னை கட்டிப் போட்டு இருக்கும் அந்த இரும்புச் சங்கிலிகளை எதிர்த்துப் புரட்சி செய்யுமாறு அமைதியாகவோ அல்லது உறுதியாகவோ உன்னை அழைத்துக் கொண்டு இருப்பேன்."- கிருசுனர்

அறிவியலின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றும் செயல் தொடர்ந்து உலகில் நடந்துக் கொண்டே இருந்தது, ஏன்... இன்னமும் கிருத்துவ உலகத்தினில் நடந்துக் கொண்டே தான் இருக்கின்றது. ஆனால், பரந்து விரிந்த இந்து, பௌதம் மற்றும் கன்புசிய உலகங்களில் இந்தப் புதிய அறிவியல் மூட நம்பிக்கைகள் நிலைப் பெறாது போய் விடும் என்றே நாம் நம்பி இருப்போம். இந்துக்களும், சீனர்களும் சப்பானியர்களும் வன்முறையினை ஆதரித்த அந்த மதப் பித்தலாட்டங்களை உணர்த்த பின், கிழக்கு உலகின் மாபெரும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததும், மனிதர்களுள் இயல்பாகவே இருக்கும் அன்பின் விதியை உணர்ந்து அதை நோக்கியே பயணித்து இருப்பர் என்றே நாம் எண்ணி இருப்போம். ஆனால் என்ன நடந்தது என்றால், அந்த மதப் பித்தலாட்டங்களின் மாற்றாக வந்த இந்த அறிவியல் மூட நம்பிக்கைகள் அந்த மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கிழக்கிலும் வலுவாக தம்மை நிலை நிறுத்திக் கொண்டன.

உங்களது இதழில் நீங்கள்( சுதந்திர இந்தியா இதழின் ஆசிரியர்) "வன்முறையை எதிர்ப்பது என்பது வெறும் நியாயப்படுத்தக்கூடிய ஒன்று மட்டுமல்ல அது முக்கியமானதும் கூட. எதிர்க்காமல் இருப்பது நம்முடைய மனிதாபிமானத்தையும் சுய மரியாதையும் பாதிக்கும்" என்றக் கூற்றினை மக்கள் தங்களின் செயல்களுக்கு வழிக்காட்டும் அடிப்படைக் கொள்கையாக கொள்ள வேண்டும் என்றுக் கூறி உள்ளீர்.

மனிதக்குலத்தை எல்லாவகையான நோய்களில் இருந்தும் காப்பாற்றக் கூடிய ஒரே வழி அன்பேயாகும். உங்கள் மக்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க கூடிய ஒரே வழியும் அன்பிலேயே தான் இருக்கின்றது.பழையக் காலங்களில் மனித வாழ்கையின் ஆன்மீக அடிப்படையாக அன்பே தான் உறுதியாகவும் தெளிவாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. அன்பும், தீமை செய்தோரை வன்முறையின் மூலம் எதிர்ப்பதும் என்றக் கருத்துகளில் உள்ள முரண்பாடு அன்பின் உண்மையான அர்த்தத்தை முற்றிலுமாக அழித்து விடும். அதன் பின், நம்பிக்கை உள்ள ஆன்மீக மக்களான நீங்கள், அந்த அறிவியல் கருத்துக்களை நம்பியும், வன்முறையை பயன்படுத்துவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு என்று எண்ணியும், மெலிதான இதயத்துடன் இந்த இருபதாம் நூற்றாண்டில் அன்பின் விதியினை மறுப்பீர்கள். உண்மைக்கு எதிரிகளும், முதலில் மதத்திற்கும் பின்னர் அறிவியலுக்கும் அடிமையாகி வன்முறையின் பயன்பாட்டினை ஆதரிக்கும் உங்களது ஐரோப்பிய ஆசிரியர்களைப் போலவே நீங்களும் இந்த வியக்க வைக்கும் முட்டாள்தனத்தை தொடருவீர்கள்.

ஆங்கிலேயர்கள் உங்கள் மக்களை அடிமைப்படுத்தியதும், தொடர்ந்து அவர்களை அடிமைகளாகவே வைத்து இருப்பதும், உங்கள் மக்கள் அவர்களை திடமாக எதிர்க்காததினாலும், வன்முறையினை வன்முறையைக் கொண்டே சந்திக்காததினாலேயுமே தான் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால் உண்மை நிலவரம் உங்கள் கூற்றுக்கு முற்றிலும் மாறாக இருக்கின்றது. ஆங்கிலேயர்கள் உங்கள் மக்களை அடிமைப்படுத்தி இருக்கின்றனர் என்றால் அதற்கு உங்கள் மக்கள், சமுதாயத்தின் அடிப்படையாக வன்முறையை கருதியதும், இன்றும் கருதிக் கொண்டு இருப்பதுவுமே காரணம் ஆகும். அந்தக் கொள்கைக்கேற்ப தான் அவர்கள் அவர்களது சிறிய ராசாக்களுக்கு முதலில் கட்டுப்பட்டு, அந்த ராசாக்களுக்கு ஏற்ப அவர்களுக்குள்ளேயே போராடிக் கொண்டும் ஐரோப்பியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் எதிராக சண்டையிட்டுக் கொண்டும் இருந்தனர். இப்பொழுது நீங்கள் மீண்டும் அவர்களுடன் சண்டை இட முயற்சி செய்கின்றீர்கள்.

ஒரு வணிக நிறுவனம், 20 கோடி பேர் கொண்ட ஒரு நாட்டினை அடிமைப்படுத்தி உள்ளது. இதை மூட நம்பிக்கைகளில் நம்பிக்கை இல்லாத ஒரு மனிதனிடம் சொல்லுங்கள், அவன் அந்த வாக்கியத்தின் அர்த்தத்தை புரிந்துக் கொள்ள கடினப்படுவான். அந்த வாக்கியத்தின் படி, 30,000 சாதாரண, வலுவில்லாத மக்கள், இருபது கோடி அறிவோடு உடற்வலுவும் அவற்றுடன்  சுதந்திர வேட்கையும் நிறைந்த மக்களை அடிமைப் படுத்தி உள்ளனர். இந்த எண்களே உங்களுக்கு புலப்படுத்த வில்லையா?... ஆங்கிலேயர்கள் அல்ல... இந்தியர்களே அவர்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு ஆட்படுத்திக் கொண்டு உள்ளனர்.

ஆங்கிலேயர்கள் தங்களை அடிமைப்படுத்தி இருப்பதாக இந்தியர்கள் குறைக் கூறும் பொழுது, குடிகாரர்கள் தங்களுக்கு மத்தியில் வந்து குடியேறிய மது வியாபாரிகள் தங்களை அடிமைப்படுத்தி விட்டதாக குறைக் கூறுவதைப் போன்றே உள்ளது. அவர்களிடம் நீங்கள் குடிப்பதை நிறுத்துங்கள் என்றுக் கூறினால், அந்தப் பழக்கத்தினை அவர்கள் மிகவும் பழகிவிட்டக் காரணத்தினால் அதில் இருந்து அவர்கள் விலக முடியாது என்றும் அவர்களது பலத்தினை அவர்கள் தக்க வைத்துக் கொள்ள அந்த மது மிகவும் அவசியம் என்றும் கூறுவர். கோடிக்கணக்கான மக்கள், ஆயிரக்கணக்கான அல்லது வெறும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கோ அல்லது ஒரே நாட்டவர்களுக்கோ கட்டுப்பட்டுக் கிடப்பது என்பதும் அந்த குடிகாரர்களை போன்ற ஒன்று தான் ... இல்லையா?

இந்திய மக்கள் வன்முறையினால் அடிமைகள் ஆக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்றால் அதற்குரிய ஒரே காரணம் அவர்கள் வாழ்க்கையை அவர்களே வன்முறையினை அடிப்படையாகக் கொண்டு  வாழ்ந்து வந்ததும் மனிதனுள் இயல்பாக இருக்கும் அன்பின் விதியினை அவர்கள் உணராததுவுமே காரணம் ஆகும்.

"தன்னிடம் ஏற்கனவே இருக்கும் ஒன்றை, அது தன்னிடமே இருக்கின்றது என்பதினை அறியாது வெளியில் தேடுபவன் பரிதாபத்துக்குரிய  ஒரு  முட்டாள் ஆவான். ஆம், ஒருவனைச் சூழ்ந்து இருக்குமாறு அன்பின் உலகத்தை நான் படைத்து இருந்தும் அந்த அன்பினை உணராத ஒருவன் பரிதாபத்துக்குரிய  ஒரு  முட்டாளே ஆவான்" - கிருசுனர்

வன்முறையின் முலம் ஒரு செயலை எதிர்ப்பதை முற்றிலுமாக துறந்த அன்பின் விதியானது மக்களின் இதயத்தில் இயல்பான ஒன்றாகும். அந்த  விதி இன்றும் மக்களுக்கு புலனாகிக் கொண்டு இருக்கின்றது. எப்பொழுது மக்கள் அனைவரும் வன்முறையினை முற்றிலுமாக துறந்து, இந்த அன்பின் விதிப் படி வாழ ஆரம்பிக்கின்றார்களோ அப்பொழுது, நூறு பேர் லட்சக்கணக்கான பேர்களை அடிமை செய்வது என்ன, லட்சக்கணக்கான பேர்களால் ஒரு தனிப்பட்ட மனிதனைக் கூட அடிமையாக்க முடியாது.

தீமை செய்பவனை வன்முறையால் எதிர்க்காதீர் அதே நேரம் அந்தத் தீய செயலில் எந்தப் பங்கும் கொள்ளாதீர். அது அரசாங்க நிர்வாகமாகட்டும் ,நீதி மன்றங்களாகட்டும், வரி வசூலிக்கும்  செயல்களாகட்டும், இவை அனைத்திற்கும் மேலே ராணுவப் பணியாகட்டும் எந்தப் பணியாக இருந்தாலும் அவை தீய செயல்களுக்கு உடந்தையாக இருக்குமானால் அதில் பங்குக் கொள்ளாதீர். அப்படி இருந்தால் இந்த உலகில் உங்களை வேறு  எவராலும் அடிமைப்படுத்த முடியாது.

தொடரும்...

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு