ஜாக்சன் 5!!!

மைக்கேலின் சகோதரர்கள் ஆரம்பித்த இந்த இசைக் குழுவில் மைக்கேல் பாட ஆரம்பித்த பொழுது அவனுக்கு 8 வயது. எட்டே வயது. அந்த வயதிலையே அவனது மூத்த அண்ணன் செர்மாயினுடன் சேர்ந்து பாடும் திறமையைப் பெற்று இருந்தான் மைக்கேல்.

இசை உலகில் கனவுகளோடு பறந்துகொண்டு இருந்த அவர்களுக்கு, அமெரிக்காவின் பரந்த வழிகள் திறந்தே கிடந்தன. அந்தக் கனவுகளுடன் தங்கள் இசைத் திறமையையும் சேர்த்து சுமந்து கொண்டு ஒவ்வொரு விடுதியாய் அலைந்தனர் அவர்கள்.

அவர்களுக்காக அவர்கள் செல்லும் எல்லா ஊர்களிலும் கருப்பு இன மக்கள் நடத்தும் விடுதிகள் திறந்தே இருந்தன.
"ஆகா... நம்ம பசங்க என்னமா பாடுறாங்க... பெரிய ஆளாய் வருவீர்கள் தம்பிகளா... அதுவும் அந்த பொடியன் மைக்கேல் நிச்சயம் ஏதோ சாதிப்பான் பாரேன்... இந்த வயசுலையே இப்படி பாடுறான்" என்று அந்த விடுதிகளுக்கு வருவோரும் அவர்களது திறமையை ஊக்குவிக்க, நம்பிக்கையோடும் புன்னகையோடும் அவர்கள் தங்கள் பயணத்தை தொடர்ந்தார்கள்.

அவர்களது அந்தப் பயணங்களில் அவர்கள் வெற்றிகளை எவ்வளவு சந்தித்தார்களோ அதே அளவு அவர்களின் கனவுகள் வார்த்தைகளால் தகர்க்கப்பட்ட சம்பவங்களையும் சந்தித்தார்கள். பெயரளவில் சுதந்திர இளைஞர்களாக இருந்த அவர்களுக்கு சில இடங்களுக்குள் செல்ல சுதந்திரம் அன்று இல்லாது இருந்தது.
ஆம், அவர்களின் கனவுகளுக்கு வெள்ளையர்களின் உலகத்திலும் விடுதிகளிலும் அன்று இடம் இருக்கவில்லை. அவற்றுக்கு மாறாக இனவெறிக்கும் ஆதிக்க மனோபாவத்திற்கும் இடம் இருந்தன.

"ஐயா ... வணக்கம்"
"ம்ம்ம்..."
"நாங்கள் இசைக் கலைஞர்கள்...!!!"
"ம்ம்ம்ம் ...."
"நன்றாக பாடுவோம்..."
"ம்ம்ம்..."
"உங்கள் விடுதியில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா?"
"கருப்பு நாய்களா... நீங்கள் பாடும் அளவிற்கு எங்கள் விடுதியின் தரம் குறைந்து விட்டதாக எண்ணமோ... மரியாதையாக சென்று விடுங்கள் இல்லையேல் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது... ஓடி விடுங்கள்...!!!".

இவ்வாறு அவர்கள் எவ்வளவு முயன்றும் வெள்ளையர்களின் உலகம் அவர்களின் பயணத்திற்கு மூடியே இருந்தது ... வெள்ளையர்களின் காதுகளும் அவர்களின் இசைக்கு மூடியே கிடந்தன.
மூடியிருந்த அந்த காதுகளுடன் மைக்கேலின் சகோதரர்களின் பெரிய இசைக் குழுவாக வேண்டும் என்ற கனவுகளும் அடைப்பட்டுக் கிடந்தன.

"அண்ணா..." என்றான் மைக்கேல்.
நிமிர்ந்து பார்த்தான் செர்மாயின்.
"என்ன மைக்கேல்" என்றான்.
"தட்டுங்கள் திறக்கப்படும்... இந்த வாசகத்தை நம்புகின்றீர்களா?" தொடர்ந்தான் மைக்கேல்.
"ஆம்... ஏன் திடீர் என்று இதைக் கேட்கின்றாய் மைக்கேல்" என்றான் செர்மாயின்.
"பின் ஏன் அண்ணா கவலைப் பட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள்... சிலக் கதவுகள் நாம் சொன்னாலே திறந்து கொள்ளும், ஆனால் சிலக் கதவுகளோ நாம் கைகள் கொண்டு அவற்றை தட்டினால் தான் திறக்கும். இப்பொழுது மூடி இருக்கும் இந்த கதவுகளை நாம் இசையினால் தட்டுவோம் அண்ணா... நம்முடைய இசை...எழுத்து... குரல்... இவற்றால் தட்டுவோம் அண்ணா... அவற்றிக்கு எதிரே எந்த கதவுகள் தாழிட்டுக் கொண்டு தாக்குப் பிடிக்கின்றன என்பதினை நாம் பார்ப்போம்... கவலையை விடுங்கள் அண்ணா...!!!" என்று முடித்தான் மைக்கேல்.
புன்னகைத்தான் செர்மாயின்.
"நிச்சயம் நீ சராசரி மனிதன் இல்லை மைக்கேல்... எங்கள் அனைவரையும் விட நீ பெரிய ஆளாய் வருவாய்" என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு மீண்டும் முழு மூச்சாய் பாடுவதில் ஈடு பட ஆரம்பித்தார் செர்மாயின்.

ஒரு வெற்றி... முதல் வெற்றி...!!!
1966 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறிய இசைத் திறமையை வெளிப்படுத்தும் போட்டியில் முதல் பரிசு...!!!
சிரித்தார்கள் சகோதரர்கள்.. சிறிய வெற்றி தான்...!!! இப்போதைக்கு இது போதும்... வானத்தை நோக்கி செல்லும் எங்களுக்கு இந்த சிறகும் ஒரு பலம் தான்!!!

அதைத் தொடர்ந்தே 1967 இல் 'சிடீல்டவுன்' (steel town) என்ற ஒரு இசை நிறுவனத்துடன் முதல் ஒப்பந்தம். சிறிய நிறுவனம் தான். ஆனால் அப்பொழுது அது அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.

அந்த நிறுவனத்துக்காக அவர்கள் பாடல்கள் இயற்றிக் கொண்டு இருந்த பொழுது தான் அவர்களுக்கு அந்த பெரிய வாய்ப்பு வந்தது. 'மோடவுன்" (Motown) என்ற நிறுவனம் அவர்களுக்கு ஒரு புதிய ஒப்பந்தத்தை தர 1968 இல் முன் வந்தது.

ஜாக்சன் சகோதரர்கள் புன்னகைத்தார்கள்!!! அவர்களின் இசை, பூட்டி இருந்த கதவுகளை திறக்க ஆரம்பித்து இருக்கின்றது!!!...

தொடரும்.... 


0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு