இந்துவிற்கு ஒரு கடிதம்- லியோ டால்சுடாய்:

'சுதந்திர இந்தியா'வின் ஆசிரியருக்கு டால்சுடாய் எழுதிய பதில் கடிதம் தொடங்குகின்றது.

                                 1 
"உலகில் நிறைந்து இருப்பவை எல்லாம் ஒன்றே. அந்த ஒன்றைத் தான் மக்கள் பலப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர்." - வேதங்கள்

"அன்பே கடவுள், அந்த அன்பின் வழி எவன் நிற்கின்றானோ அவன் கடவுளின் வழி நிற்கின்றான், கடவுளும் அவன் வழி நிற்கின்றார்" - 1 யோவான் 4:16 

"கடவுள் முழுமையானவர். நாம் அவரது பகுதிகள்" - விவேகானந்தர் 

"உங்களின் அமைதியையும் நிம்மதியையும், ஆசைகளையும் மாயைகளையும் தோற்றுவிக்கும் இந்த உலகப் பொருட்களில் தேடாதீர். அவை உங்களை என்னை விட்டு விலக்கி வாழ்கையின் கரடுமுரடான பாதைகளுக்கு இழுத்து சென்று விடும். எப்பொழுது எல்லாம் நீங்கள் வாழ்க்கையின் வேர்களோடு சிக்கிக் கொண்டு விலக முடியாதவாறு உணருகின்றீர்களோ அப்பொழுது எல்லாம் நான் உங்களுக்காக அமைத்து வைத்து இருக்கும் வழியில் இருந்து நீங்கள் விலகி சென்று விட்டதாக அறிந்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் உங்களுக்காக பூக்களால் ஆன பரந்த மிருதுவான சாலைகளையே உருவாக்கி வைத்து இருக்கின்றேன். அந்தப் பாதையில் நீங்கள் தடுமாறாது பின்பற்ற, உங்களுக்கு வழிகாட்டியாய் ஒரு விளக்கையும் உங்கள் முன்னே நான் வைத்து இருக்கின்றேன்." - கிருசுனர் 


உங்களது கடிதத்தையும் அதனுடனே வந்த உங்களது பத்திரிக்கையின் இரண்டு வெளியீடுகளையும் நான் பெற்றுக் கொண்டேன். அவை இரண்டுமே என்னுள் மிகுந்த ஆர்வத்தை உருவாக்கி உள்ளன. பெருன்பான்மையினராக இருக்கும் மக்களை சிறுபான்மையினராக இருப்போர் அடக்கி ஆள்வதும் அதன் மூலம் தோன்றும் மனத்தளர்ச்சியும் எனது சிந்தனையை எப்பொழுதும் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கும் ஒரு விசயம் ஆகும். அதுவும் குறிப்பாக இந்தக் காலத்தில் அவற்றைப் பற்றி நான் அதிகம் சிந்திக்க வேண்டி வருகின்றது. நீங்கள் உங்கள் கடிதங்களிலும் செய்திப் பிரசுரங்களிலும் எழுதி உள்ள கொடுமையான தீமைகள் எவ்வாறு தோன்றின, அவை தோன்றி எவ்வாறு வளருகின்றன என்று அந்த தீமைகளின் காரணியைப் பற்றியும், பொதுவாக நான் இந்த தலைப்பைப் பற்றி என்ன எண்ணுகின்றேன் என்பதனைப் பற்றியும் உங்களுக்கு விரிவாக விளக்க முயற்சி செய்கின்றேன்.

பெருவாரியான உழைக்கும் மக்கள் எவ்வாறு தங்கள் உழைப்பையும் வாழ்க்கையையும் சில முதலாளிகளின் கைகளின் கட்டுப்பாட்டிற்குள் விட்டு வைத்து இருக்கின்றனர் என்பதின் காரணம் எல்லா இடங்களிலேயும் ஒன்று தான். அது ஒடுக்கப்பட்டோரும் ஓடுக்குவோரும் ஒரே இனமாக இருந்தாலும் சரி அல்லது இந்தியாவினைப் போல அவர்கள் வெவ்வேறு நாட்டினைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. அதன் அடிப்படை காரணம் ஒன்று தான். 

அதுவும் இந்தியாவினைப் பொறுத்தவரை இந்த விசயம் சற்று விசித்திரமாக தான் தெரிகின்றது. ஏனெனில் உடலாலும் சரி அறிவாலும் சரி நன்றாக வாழ்த்தப்பட்டு சிறந்து விளங்கும் இருபது கோடி மககள், தங்கள் சிந்தனைக்கு சற்றும் தொடர்பில்லாத சிந்தனையை உடையவர்களும் தங்களை விட ஆன்மீகச் சிந்தனையிலும் நடத்தையிலும் மிகவும் பின் தங்கியுள்ள,  சிறு குழுவினரிடம் தங்களையே அடிமையாகக் கண்டுக் கொண்டு இருக்கின்றனர்.

நான் உங்களுடைய கடிதத்தையும், 'சுதந்திர இந்தியா' பத்திரிக்கையின் சில கட்டுரைகளையும், சுவாமி விவேகானந்தரின் சில ஆர்வமூட்டும் கட்டுரைகளையும் மற்றும் சில புத்தகங்களையும் படித்து இருக்கின்றேன். எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் பொழுது, இந்தக் காலத்தில் எல்லா நாட்டினையும் பிடித்து உள்ள இந்தப் பிணிக்கு காரணம் சரியான ஆன்மீக கருத்துகளைப் போதிக்காததே என்றுத் தெரிகின்றது. மக்களிடம் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை விவரிப்பதன் மூலம் அவர்களுக்கு வாழ்க்கையில் சரியான நடத்தைக்கு வழிகாட்ட ஒரு மாபெரும் விதி கிடைத்து இருக்கும். அந்த விதி எல்லாப் போலி மதங்களையும் போலி அறிவியலையும் தூக்கி எறிந்து மாற்றுவதோடு நில்லாமல் அந்த போலி மதங்களும் அறிவியலும் சொன்ன கருத்துகளின் மூலம் உருவாகி இருக்கும் 'நாகரீகம்' எனப்படும் தவறான நடத்தை முறைகளுக்கும் ஒரு முடிவினைக் கொண்டு வந்து இருக்கும்.

உங்களது கடிதமும், 'சுதந்திர இந்தியா' பத்திரிக்கையின் சில கட்டுரைகளும் இந்தியாவின் மற்ற அரசியல் சார்ந்த நூல்களும் பொதுவாக இப்பொழுது உங்கள் மக்களின் மத்தியில் உள்ளத் தலைவர்கள் எவரும் ஆன்மீகப் போதனைகளுக்கும் சிந்தனைகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாகக் காட்டவில்லை. உங்கள் மக்களால் தோற்றுவிக்கப்பட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் உள்ள அந்த சிந்தனைகளை உங்கள் தலைவர்கள் மக்களின் உண்மைச் சுதந்திரத்திற்கு வழி வகுக்கும் வழியாகப் பார்க்க வில்லை. அந்தத் தலைவர்கள், மக்களை அவர்கள் கட்டுண்டு கிடக்கும் இந்த அடக்குமுறையில் இருந்து விடுவிக்க, ஆங்கிலேயர்களும் மற்ற போலி கிருத்துவ நாடுகளும் எப்படி எந்த ஆன்மீக நெறியும் இல்லாத தவறான சமுக நடைமுறைகளின் வழியாக இக்காலம் இயங்குகின்றனவோ, அதே வழிகளைத் தவிர வேறு வழிகளை அறியாத நிலையில் உள்ளனர்.

இருந்தும், இந்திய மக்கள் ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப் பட்டதற்கு ஒரு முக்கிய காரணம், ஏன் ஒரே காரணம் என்னவெனில் அது அவர்களிடம் சரியான ஆன்மீக விழிப்புணர்ச்சியும், அந்த விழிப்புணர்ச்சியின் மூலம் எழுந்து இருக்கக் கூடிய வாழ்வின் நடத்தை விதியும் இல்லாததே ஆகும். இந்தக் குறைபாடு சப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பல கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளில் இன்று இருப்பது போன்றே இந்தியாவிலும் உருவாகி இருக்கின்றது.

கடிதம் தொடரும்...   


இந்துவிற்கு ஒரு கடிதம்- லியோ டால்சுடாய்:
 
இந்தப் பதிவு சுதந்திர இந்தியா என்னும் பத்திரிக்கையின் ஆசிரியர் எழுதிய கடிதத்திற்கு லியோ டால்சுடாய் அவர்கள் எழுதிய பதில் கடிதத்தின் மொழிபெயர்ப்பே ஆகும்.                     

கடிதத்திற்கு காந்தியின் முன்னுரை:

பின் வருவது 'சுதந்திர இந்தியா' பத்திரிக்கையின் ஆசிரியரினுடைய கடிதத்திற்கு, ரசிய மொழியில் டால்சுடாய் எழுதிய பதில் கடிதத்தின் மொழியாக்கமே ஆகும். பல கைகள் மாறி இந்தக் கடிதம் என் நண்பனின் வாயிலாக என்னிடம் வந்து சேர்ந்தது. இயல்பிலேயே டால்சுடாய் அவர்களின் எழுத்துக்களில் எனக்கு ஆர்வம் இருந்ததால் இந்தக் கடிதத்தை நாம் வெளியிடலாமா என்ற அந்த நண்பனின் கேள்விக்கு உடனேயே சரி என்று பதில் கூறி அதை குசராத்தி மொழியில் மொழிப்பெயர்க்கும் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொண்டேன். அதே போல் இந்தக் கடிதத்தை இந்தியாவின் மற்ற மொழிகளிலும் மொழிபெயர்க்க மற்றவர்களை உந்த வேண்டும் என்றும் நான் முடிவு எடுத்துக் கொண்டேன்.

என் கைக்கு வந்த இந்தக் கடிதம் தட்டச்சு மூலமாக அச்சிடப்பட்ட நகலாக இருந்தமையால் இந்தக் கடிதத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்துக் கொள்ள நான் டால்சுடாய் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர் இந்தக் கடிதம் அவருடையது தான் என்று உறுதி செய்ததோடு நில்லாமல் இந்தக் கடிதத்தை பிரசுரிக்க அவருடைய சம்மதத்தையும் வழங்கினார். நீண்ட காலமாக என்னுடைய வழிகாட்டிகளுள் ஒருவராக திகழும் அந்த ஆசானின் கடிதத்தை பிரசுரிப்பதில், அதுவும் குறிப்பாக இந்தக் கடிதத்தை உலகிற்காக பிரசுரிப்பதில் நான் பெருமை அடைகிறேன்.

ஒவ்வொரு இந்தியனிடத்தும், அவன் அதை ஏற்றுக் கொள்ளுகின்றானோ இல்லையோ, தேசியத்தைப் பற்றிய வேட்கையும் லட்சியமும் நிச்சயம் உள்ளது. அது உண்மை. அதைப் போலவே, எத்தனை தேசப் பக்தி மிக்கவர்கள் இருக்கின்றனரோ அதே எண்ணிக்கையில் அந்த இலட்சியத்தைப் பற்றியும் வேட்கையைப் பற்றியும் விதவிதமான கருத்துக்கள் உள்ளன என்பதும் உண்மை. அதுவும் குறிப்பாக அந்த இலட்சியத்தை அடையும் வழியினைப் பற்றிய கருத்துக்களில் உள்ள வேறுபாடுகள் அநேகம்.
அந்த வழிகளில், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, காலத்தால் போற்றப்பட்ட ஒரு வழி தான் வன்முறை. சர் கர்சன் வயலி (Sir Curzon Wylie) அவர்களின் கொலை அந்த வன்முறை வழியின் ஒரு வெறுக்கத்தக்க எடுத்துக்காட்டு ஆகும். டால்சுடாய் அவர்கள் சர்வாதிகாரத்தை ஒழிக்கவும் மாற்றங்களைக் கொண்டு வரவும், வன்முறைக்கு பதிலாக அன்பின் வழியாகவே தீமையை எதிர்ப்பதற்கு தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து இருக்கின்றார். அவர் வன்முறையின் மூலம் தோன்றும் வெறுப்பை, பிறருக்காக தன்னையே வருத்துவதினால் வெளிப்படும் அன்பின் மூலமே ஈடு கட்டலாம் என்ற விதியை மெய்பித்துக் கொண்டு இருக்கின்றார். இந்த புனிதமான அன்பின் விதியை அவர் எதற்காகவும் மாற்றிக் கொள்ளமாட்டார். இந்த விதியை அவர் மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் அனைத்து இன்னல்களுக்கும்  பொதுவான தீர்வாக கூறுகிறார். 

டால்சுடாய், மேற்கத்திய உலகம் கண்ட மிகச் சிறந்த எழுத்தாளர்கள் மட்டும் சிந்தனையாளர்களுள் ஒருவர். மேலும் தான் ஒரு போர் வீரனாக இருந்த காரணத்தினால் வன்முறை என்றால் என்ன என்பதனையும், வன்முறையின் விளைவுகள் என்ன என்பதனையும் மிகவும் தெளிவாக அறிந்தவர். அப்பேர்ப்பட்ட ஒருவர், "'நவீன அறிவியல்' என்று தவறாக கூறப்படும் ஒரு விதியைப் கண்மூடித்தனமாக சப்பான் பின் பற்றுகிறது என்றும் அதன் விளைவுகள் மிகவும் பயங்கர அழிவுகளாக இருக்கும்" என்றும் கூறும் பொழுது நாமும் சற்று நின்று யோசித்துப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

ஆங்கிலேயரின் ஆட்சியின் மேல் பொறுமை இல்லாத காரணத்தினால் நாம் அவசரப்பட்டு ஒரு தீமையைக் களைந்து விட்டு அதற்குப் பதிலாக அதை விட மிகவும் கொடிய ஒன்றை நிலை நிறுத்தும் செயலைச் செய்ய கூடாது. உலகில் உள்ள பல்வேறு நம்பிக்கைகளும் செழித்து விளங்கும் பள்ளியாக இருக்கும் இந்தியாவில், எப்பொழுது நாகரீகம் என்ற பெயரில் துப்பாக்கிச் தொழிற்சாலைகளும், ஐரோப்பிய மக்களை அடிமைகளாகச் சுருங்க செய்து இருக்கும் முதலாளித்துவமும் அனுமதிக்கப்படுகின்றதோ அன்று இந்தியாவின் தேச பக்தியும் , அது போற்றி காக்கும் மனித குடும்பத்தின் இயல்பான அன்பு உணர்ச்சிகளும் குறைந்து இறுதியில் அனைத்தும் அமைதியாகிப் போகும். 
நமது மண்ணில் ஆங்கிலேயர்கள் வேண்டாம் என்றால் அதற்குரிய விலையை நாம் கொடுத்தே ஆக வேண்டும். டால்சுடாய் குறிப்பிடுகின்றார் "தீமையை எதிர்க்காதீர்கள்... ஆனால் நீங்களும் தீமையில் பங்கு ஏற்காதீர்கள்.. அது வரிகள் வசூலிப்பதில் உள்ள தீமையாய் இருக்கட்டும், இல்லை நீதி மன்றங்களில் வெளியாகும் வன்முறை சட்டங்கள் ஆகட்டும், இல்லை போர் வீரர்களால் ஏற்படும் தீமைகள் ஆகட்டும். அந்த தீமைகளுக்கு பதிலாய் நீங்களும் தீமைகள் செய்யாமல், அவற்றை ஒன்றிணைந்து அன்பினால் எதிர் கொள்ளுங்கள். அப்படி செய்தால் இந்த உலகத்தில் உங்களை யாருமே அடிமையாக்க முடியாது" என்கிறார் யாசானையா போல்யானாவை  (Yasnaya Polyana) சேர்ந்த அந்தத் துறவி. 
"ஒரு வியாபார நிறுவனம், 20 கோடி பேர் கொண்ட ஒரு நாட்டினை அடிமைப்படுத்தி உள்ளது. இதை மூட நம்பிக்கைகளில் நம்பிக்கை இல்லாத ஒரு மனிதனிடம் சொல்லுங்கள், அவன் அந்த வாக்கியத்தின் அர்த்தத்தை புரிந்துக் கொள்ள கடினப்படுவான். அந்த வாக்கியத்தின் படி, 30,000 சாதாரண, வலுவில்லாத மக்கள், இருபது கோடி அறிவோடு உடற்வலுவும் அவற்றுடன்  சுதந்திர வேட்கையும் நிறைந்த மக்களை அடிமைப் படுத்தி உள்ளனர். இந்த எண்களே உங்களுக்கு புலப்படுத்த வில்லையா?... ஆங்கிலேயர்கள் அல்ல... இந்தியர்களே அவர்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு ஆட்படுத்திக் கொண்டு உள்ளனர்" என்று அவர் கூறும் போது அந்த கூற்றில் உள்ள உண்மையை மறுக்க நம்மால் இயலுமா?.
தற்போது நம் நாட்டில் உள்ள நிலைமையின் அடிப்படை உண்மையை நாம் உணர்ந்து கொள்ள டால்சுடாய் கூறும் அனைத்துக் கருத்தையும் ஒப்புக் கொள்ள வேண்டியதில்லை (அவருடைய சில கூற்றுகள் சரியான அடிப்படையில் அமையவில்லை). அன்பே நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டிய உண்மை. நமது ஆத்மாவின் ஒரு பகுதியான அன்பு நமது உடம்பின் மேல் தவிர்க்க முடியாத சக்தி வைத்து இருப்பதோடு நில்லாமல் நமக்குள் உண்டாகும் தீய எண்ணங்கள் வெளிப்படுத்தும் வன்முறை சக்தியின் மேலும் தனது ஆதிக்கத்தை வைத்து உள்ளது. அன்பின் மூலமே நாம் அவற்றை கட்டுப் படுத்த முடியும்.

டால்சுடாய் அவர்கள் போதிப்பதில் எந்த ஒரு புது கருத்துக்களும் இல்லை என்பதில் சந்தேகமே இல்லை என்றாலும் அந்த பழைய உண்மைகளை அவர் போதிக்கும் முறைகள் புத்துணர்ச்சி ஊட்டக்கூடியவை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அவருடைய ஏரணம்(Logic) வீழ்த்த முடியாதது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் எதை போதிக்கின்றாரோ அதையே அவர் பின்பற்றவும் செய்கின்றார். நம்மை தெளிவுப்படுத்துவதற்கே அவர் போதிக்கின்றார். நேர்மையாகவும் உறுதியாகவும் அவர் சொல்லுகின்ற கருத்துகளுக்கு நாம் நிச்சயம் நமது கவனத்தை கொடுக்க வேண்டும்.
                                                                                                                                       மோ.க.காந்தி
                                                                                                                                  நவம்பர் 19 , 1909 

கடிதம் தொடரும்...!

அடுத்தது என்ன?.
இன்றைய இளைஞர்களின் மனதில் நீங்காது இன்று நின்று கொண்டு இருப்பது இந்தக் கேள்வி தான்.
ஒரு சிலருக்கு இளநிலைப் பட்டம் வாங்கியாயிற்று, ஆனால் வேலை வாங்கியப்பாடில்லை.என்ற கவலை!
இன்னும் சிலருக்கு வேலை பிடிக்கவில்லையே என்ற கவலை!
மேலும் சிலருக்கு தங்கள் அறிவை வளர்த்துக் கொண்டு சாதிக்க சரியான இடம் அமையவில்லையே என்ற கவலை!
இவர்கள் அனைவரின் மனதிலும் இருப்பது ஒரு கேள்வி...ஒரே கேள்வி!!!
அடுத்தது என்ன... மேலே ஏதாவது படிக்கலாமா?.

எளிய கேள்வி தான். ஆனால் இந்த கேள்விக்குத் தான் இன்றைய இளைஞர்கள் முடிவெடுக்க திணறுகின்றார்கள். அல்லது பலக் காரணங்களால் திணரடிக்கப் படுகின்றார்கள். அதுவும் மதிப்பெண்களை மட்டுமே குறியாக வைத்து மாணவர்களைத் தயார் செய்யும் கல்லூரிகள் இந்த கேள்விகளுக்கான பதில்களை அறிய அவர்களுக்கு வழிகாட்ட மறந்து விட மாணவர்களும் சந்தையில் உலவும் மந்தைகளைப் போலவே தங்களின் தனித் தகுதியை மறந்து ஒவ்வொரு தலைநகரத்திலும் உலாவ ஆரம்பிக்கின்றனர்.

படிப்பதா... சரி நல்லது!!!
ஆனால் என்னப் படிப்பது?... எங்குப் படிப்பது?... படித்தால் வேலைக் கிடைக்குமா? போன்ற கேள்விகள் அவர்களை முடிவெடுக்க விடாது தடுக்கின்றன. 

அவை அனைத்திற்கும் மேலே பணம்!!!. 

ஐயோ, நாம் இது வரை படித்ததிற்க்கே இவளவு செலவாகி விட்டதே இதற்கு மேலும் நாம் படித்தால் அந்தப் பணத்தை நாம் எங்குச் சென்று சம்பாதிப்பது என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் பிடுங்கிச் சென்று விடுகின்றது.

இலவசமாக தொலைக்காட்சியையும் மற்ற பொருட்களையும் தரும் அரசாங்கம் கல்விக் கட்டணத்தை மட்டும் குறைக்காது வருடத்திற்கு வருடம் உயர்த்திக் கொண்டே போகின்றது.

பணம்... படிப்பதற்கு வேண்டும்... சரி!
படிப்பு?... முதலாக போட்ட பணத்தை மீண்டும் பெற வேண்டும் என்ற ஒரு முடியா வட்டத்தினுள் மாட்டிக் கொண்டு மாணவர்கள் முழிக்கின்றார்கள். அதுவும் குறிப்பாக பொறியியல் மாணவர்கள்.

இளநிலை பட்டதை முடிப்பதற்கே கிட்டத்தட்ட 4இல் இருந்து 5 லட்சம் வரை பணம் செலவழிந்த நிலையில் மேலும் படிக்கச் செல்ல அவர்கள் மிகுந்த யோசனை செய்ய வேண்டி இருக்கின்றது.
தமிழகத்தில் அவர்கள் பொறியியல் துறையில் மேற்படிப்பு படிக்கலாம் என்று எண்ணினால், அரசுக் கல்லூரிகளைத் தவிர மற்றக் கல்லூரிகளில் அதற்காக மேலும் ஒரு 3 லட்சத்தை எடுத்து வைக்க வேண்டி இருக்கின்றது.

சரி மேலாண்மைத் துறைக்கு செல்லலாம் என்றால், அதிலும் சிலத் தரமான கல்லூரிகளில் வருடத்திற்கு கல்விக் கட்டணம் மட்டுமே 3 இல் இருந்து 5 லட்சம் வரை!!! 

இவ்வளவு பணம் செலவு செய்தும் தரமான கல்வி பொதுவாகக் கிடைப்பதில்லை என்பதே கசப்பான உண்மை. 
இந்த நிலையில் தான் நாம் வெளி நாடுகளில் சென்று படிப்பதைப் பற்றியும் அறிய வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

"என்னடா இவன் நம்ம ஊர்ல படிச்சா 3 லட்சம் ஆகும் ,10 லட்சம் ஆகும் அத பசங்க கட்டுறதுக்கு யோசிக்கிறாங்க அப்படின்னு சொல்றான் ஆனா வெளிநாட்ல படிக்கிறத பத்தியும் சொல்லப் போறேன்னு சொல்றானே, அங்க படிச்சா மட்டும் என்ன கம்மியாவா செலவு ஆகும்" என்று நீங்கள் கேட்கலாம்.

செலவு நிச்சயம் கம்மி ஆகாது ஆனால் அந்தச் செலவை முழுதும் அவர்களே ஏற்றுக்கொள்ளும் பல்கலைகழகங்கள் உள்ளன.
ஏன், கல்வியை இலவசமாக வழங்கும் நாடுகளும் உலகத்தில் இருக்கின்றன. அவைகளைப் பற்றி நமது மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அறிந்து பயன் பெற வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்தத் தொடர்ப் பதிவு.

வெளிநாடுகளில் உள்ள கல்வி முறை, பல்கலைக்கழகங்கள், அவற்றில் நுழைய நாம் எழுத வேண்டிய தேர்வுகள், கல்விக் கட்டணங்கள், கல்விக் கட்டணத் தள்ளுபடிகள், அந்தப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் ஆகியவற்றைப் பற்றியும் அந்த பல்கலைக்கழகங்கள் நம்மிடம் என்ன எதிர்ப்பார்கின்றன என்பதினைப் பற்றியும் நாம் தெளிவாகப் பார்ப்போம்.

நம்முடைய நாட்டில் வருடத்திற்கு ஒரு முறை தான் மாணவர் சேர்க்கை கல்லூரிகளில் நடை பெறுகின்றது. ஆனால் பெரும்பாலான வெளி நாடுகளில் வருடத்திற்கு இரண்டு முறை மாணவர் சேர்கை நடைபெறும். ஒன்று வசந்த கால மாணவர் சேர்கை(Spring intake) மற்றொன்று இலையுதிர் கால மாணவர் சேர்கை (fall intake).

இலையுதிர் கால சேர்க்கையின் பொழுது கல்லூரிகள் ஆகத்து (August -September) மாதம் பொதுவாக பாடத்தினைத் தொடங்குவார்கள். இதற்குரிய விண்ணப்பங்கள் டிசம்பர் அல்லது சனவரி மாதம் முதல் கொடுக்கத்  தொடங்கப்பட்டு பொதுவாக மார்ச் மாதத்தில் விண்ணப்பங்களை நிரப்பி அனுப்ப இறுதி நாள் நிச்சயிக்கப்படும். இந்த தேதிகள் கல்லூரிக்கு கல்லூரி, நாட்டிற்க்கு நாடு வேறுபடும்.  
 
வசந்தக் கால சேர்க்கையிலோ சனவரி அல்லது பிப்புரவரி (February) மாதம் கல்லூரிகள் தொடங்கப்படும். அதற்குரிய விண்ணப்பங்களோ ஆகத்து மாதம் தொடங்கப்பட்டு செப்டம்பர் மாதத்திற்குள் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு இறுதி நாள் நிச்சயிக்கப்படும். இதிலும் இந்த தேதிகள் கல்லூரிக்கு கல்லூரி, நாட்டிற்க்கு நாடு வேறுபடும்.

இந்த இரண்டு சேர்க்கையிலும் முக்கியமான வித்தியாசம் என்ன என்றால், இலையுதிர் கால சேர்கையில் ஒரு கல்லூரியில் இருக்கும் அனைத்துப் படிப்பிற்கும் ஆள் சேர்கை நடைபெறும். அதாவது எந்த படிப்பிற்கு வேண்டும் என்றாலும் ஒரு மாணவன் விண்ணப்பிக்கலாம்.இது தான் அந்த வருடத்தின் முதன்மையான சேர்கை.

ஆனால் வசந்த கால சேர்க்கையிலோ சில படிப்புகளுக்கு ஆள் சேர்கை நடை பெறாது. ஒரு சில பாடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

எனவே மாணவர்கள் தாங்கள் என்ன படிப்பிற்கு விண்ணப்பிக்கப் போவதாக இருந்தாலும், அந்த விண்ணப்பத்திற்கான தேதிகளையும் அது எந்த சேர்கை என்பதையும், ஒரு வேளை அது வசந்த கால சேர்கையாக இருந்தால் அவர் விண்ணப்பிக்கும் படிப்பிற்கு அந்த சேர்கையில் ஆள் சேர்கை நடைபெறுகின்றதா என்பதையும் தெளிவாக முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

அந்த செய்திகள் அனைத்தும் அந்த கல்லூரிகளின் இணையத்தளையங்களிலேயே  தெளிவாக கொடுக்கப்பட்டு இருக்கும். சரி வெளிநாடுகளின் சேர்கை முறைகளைப் பற்றி அறிந்துக் கொண்டோம். இனி ஒவ்வொரு நாடுகளைப் பற்றியும், அந்த நாட்டிற்க்கு விண்ணப்பிப்பதைப் பற்றியும் தெளிவாக பார்ப்போம்.

இளைஞர்களே,
 உலகத்தின் பெரிய பல்கலைக்கழகங்கள் நமக்காக கதவைத் திறந்து வைத்துக் காத்துக் கொண்டு நிற்கின்றன....!!! 

ஜாக்சன் 5!!!

மைக்கேலின் சகோதரர்கள் ஆரம்பித்த இந்த இசைக் குழுவில் மைக்கேல் பாட ஆரம்பித்த பொழுது அவனுக்கு 8 வயது. எட்டே வயது. அந்த வயதிலையே அவனது மூத்த அண்ணன் செர்மாயினுடன் சேர்ந்து பாடும் திறமையைப் பெற்று இருந்தான் மைக்கேல்.

இசை உலகில் கனவுகளோடு பறந்துகொண்டு இருந்த அவர்களுக்கு, அமெரிக்காவின் பரந்த வழிகள் திறந்தே கிடந்தன. அந்தக் கனவுகளுடன் தங்கள் இசைத் திறமையையும் சேர்த்து சுமந்து கொண்டு ஒவ்வொரு விடுதியாய் அலைந்தனர் அவர்கள்.

அவர்களுக்காக அவர்கள் செல்லும் எல்லா ஊர்களிலும் கருப்பு இன மக்கள் நடத்தும் விடுதிகள் திறந்தே இருந்தன.
"ஆகா... நம்ம பசங்க என்னமா பாடுறாங்க... பெரிய ஆளாய் வருவீர்கள் தம்பிகளா... அதுவும் அந்த பொடியன் மைக்கேல் நிச்சயம் ஏதோ சாதிப்பான் பாரேன்... இந்த வயசுலையே இப்படி பாடுறான்" என்று அந்த விடுதிகளுக்கு வருவோரும் அவர்களது திறமையை ஊக்குவிக்க, நம்பிக்கையோடும் புன்னகையோடும் அவர்கள் தங்கள் பயணத்தை தொடர்ந்தார்கள்.

அவர்களது அந்தப் பயணங்களில் அவர்கள் வெற்றிகளை எவ்வளவு சந்தித்தார்களோ அதே அளவு அவர்களின் கனவுகள் வார்த்தைகளால் தகர்க்கப்பட்ட சம்பவங்களையும் சந்தித்தார்கள். பெயரளவில் சுதந்திர இளைஞர்களாக இருந்த அவர்களுக்கு சில இடங்களுக்குள் செல்ல சுதந்திரம் அன்று இல்லாது இருந்தது.
ஆம், அவர்களின் கனவுகளுக்கு வெள்ளையர்களின் உலகத்திலும் விடுதிகளிலும் அன்று இடம் இருக்கவில்லை. அவற்றுக்கு மாறாக இனவெறிக்கும் ஆதிக்க மனோபாவத்திற்கும் இடம் இருந்தன.

"ஐயா ... வணக்கம்"
"ம்ம்ம்..."
"நாங்கள் இசைக் கலைஞர்கள்...!!!"
"ம்ம்ம்ம் ...."
"நன்றாக பாடுவோம்..."
"ம்ம்ம்..."
"உங்கள் விடுதியில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா?"
"கருப்பு நாய்களா... நீங்கள் பாடும் அளவிற்கு எங்கள் விடுதியின் தரம் குறைந்து விட்டதாக எண்ணமோ... மரியாதையாக சென்று விடுங்கள் இல்லையேல் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது... ஓடி விடுங்கள்...!!!".

இவ்வாறு அவர்கள் எவ்வளவு முயன்றும் வெள்ளையர்களின் உலகம் அவர்களின் பயணத்திற்கு மூடியே இருந்தது ... வெள்ளையர்களின் காதுகளும் அவர்களின் இசைக்கு மூடியே கிடந்தன.
மூடியிருந்த அந்த காதுகளுடன் மைக்கேலின் சகோதரர்களின் பெரிய இசைக் குழுவாக வேண்டும் என்ற கனவுகளும் அடைப்பட்டுக் கிடந்தன.

"அண்ணா..." என்றான் மைக்கேல்.
நிமிர்ந்து பார்த்தான் செர்மாயின்.
"என்ன மைக்கேல்" என்றான்.
"தட்டுங்கள் திறக்கப்படும்... இந்த வாசகத்தை நம்புகின்றீர்களா?" தொடர்ந்தான் மைக்கேல்.
"ஆம்... ஏன் திடீர் என்று இதைக் கேட்கின்றாய் மைக்கேல்" என்றான் செர்மாயின்.
"பின் ஏன் அண்ணா கவலைப் பட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள்... சிலக் கதவுகள் நாம் சொன்னாலே திறந்து கொள்ளும், ஆனால் சிலக் கதவுகளோ நாம் கைகள் கொண்டு அவற்றை தட்டினால் தான் திறக்கும். இப்பொழுது மூடி இருக்கும் இந்த கதவுகளை நாம் இசையினால் தட்டுவோம் அண்ணா... நம்முடைய இசை...எழுத்து... குரல்... இவற்றால் தட்டுவோம் அண்ணா... அவற்றிக்கு எதிரே எந்த கதவுகள் தாழிட்டுக் கொண்டு தாக்குப் பிடிக்கின்றன என்பதினை நாம் பார்ப்போம்... கவலையை விடுங்கள் அண்ணா...!!!" என்று முடித்தான் மைக்கேல்.
புன்னகைத்தான் செர்மாயின்.
"நிச்சயம் நீ சராசரி மனிதன் இல்லை மைக்கேல்... எங்கள் அனைவரையும் விட நீ பெரிய ஆளாய் வருவாய்" என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு மீண்டும் முழு மூச்சாய் பாடுவதில் ஈடு பட ஆரம்பித்தார் செர்மாயின்.

ஒரு வெற்றி... முதல் வெற்றி...!!!
1966 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறிய இசைத் திறமையை வெளிப்படுத்தும் போட்டியில் முதல் பரிசு...!!!
சிரித்தார்கள் சகோதரர்கள்.. சிறிய வெற்றி தான்...!!! இப்போதைக்கு இது போதும்... வானத்தை நோக்கி செல்லும் எங்களுக்கு இந்த சிறகும் ஒரு பலம் தான்!!!

அதைத் தொடர்ந்தே 1967 இல் 'சிடீல்டவுன்' (steel town) என்ற ஒரு இசை நிறுவனத்துடன் முதல் ஒப்பந்தம். சிறிய நிறுவனம் தான். ஆனால் அப்பொழுது அது அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.

அந்த நிறுவனத்துக்காக அவர்கள் பாடல்கள் இயற்றிக் கொண்டு இருந்த பொழுது தான் அவர்களுக்கு அந்த பெரிய வாய்ப்பு வந்தது. 'மோடவுன்" (Motown) என்ற நிறுவனம் அவர்களுக்கு ஒரு புதிய ஒப்பந்தத்தை தர 1968 இல் முன் வந்தது.

ஜாக்சன் சகோதரர்கள் புன்னகைத்தார்கள்!!! அவர்களின் இசை, பூட்டி இருந்த கதவுகளை திறக்க ஆரம்பித்து இருக்கின்றது!!!...

தொடரும்.... 


அமைதி...!!!

இது வரை அந்த அரங்கம் காணாத அமைதி!!!

பொதுவாக 100 பேர் ஒன்று கூடி இருந்தாலே அதிரும் அந்த அரங்கம் அன்று 50,000 பேர் நிறைந்து இருந்தும் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக காத்துக் கொண்டு இருக்கின்றது.... ஒருவனுக்காக!!!

அவனுக்காக...!

அமைதி நல்லது தான்.

அவனைக் கண்ட உடன் அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு எழும் சத்தத்தின் மதிப்பை உணர்த்த அந்த அமைதி நிச்சயம் வேண்டும்! 

அவன் புன்னகைக்கின்றான். அந்த நாள் நிச்சயம் வரலாற்றின் பக்கங்களில் எழுதப்படும். அதில் துளியும் அவனுக்கு சந்தேகம் இருக்கவில்லை.

அவர்கள் முன் அவன் தோன்றும் நேரம் நெருங்குகின்றது. மக்கள் அனைவரும் மேடையையே பார்த்துக் கொண்டு இருக்கும் போது யாரும் எதிர்பாரா வண்ணம் மேடையின் அடியில் இருந்து மேடையை பிளந்துக் கொண்டு வந்து மேடையின் மேல் நிற்கின்றான்.

என்ன நடந்தது என்பதை ஒரு கணம் உணர முடியாது அந்த கூட்டம் அதிர்ந்து நிற்கின்றது. மறு கணம், அவர்களின் சத்தத்தால் அந்த அரங்கம் அதிர்கின்றது.

இது வரை அந்த அரங்கம் கண்டிராத உற்சாகம், கேட்டிராத சத்தம் ... இப்பொழுது அங்கே கரை புரண்டோடிக் கொண்டு இருக்கின்றது... அவனுக்காக... அவன் குரலுக்காக.
அவன் பேசவில்லை.

ஏன், அவன் தலை முடி கூட இன்னும் அசையவில்லை.

இருந்தும் அவனைக் காணக் காண கூட்டத்தின் சத்தம் கூடுகின்றது.

புன்னகைக்கின்றான். இந்த கூட்டம் அவனுக்காகவே வந்த கூட்டம். அவன் குரலுக்காக வந்த கூட்டம்.

அவர்களின் ஆர்ப்பரிப்பு விண்ணைப் பிளக்கின்றது.

அவன் பாட ஆரம்பிக்கின்றான்.

இப்படி ஒரு கனவு அமெரிக்காவில் உள்ள சிகாகோ மாகாணத்தில் ஒரு சிறிய வீட்டில் தனது தந்தையிடம் தினம் திட்டும் அடியும் வாங்கிக் கொண்டு இருந்த அந்த சிறுவனின் மனதில் இருந்தது என்று சொன்னால் எவரும் எளிதில் நம்பி இருக்க மாட்டார்கள்.
அனால் மைக்கேல் அந்த கனவினைத் தான் கண்டுக் கொண்டு இருந்தான். அவன் வயதிற்கு மீறிய கனவு தான். இருந்தும் அவன் அந்தக் கனவை அலட்சியப்படுத்தவில்லை.

"இசை!!!... ஆகா எவ்வளவு அருமையாக இருக்கின்றது நிச்சயம் இதை நாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அது போதும். மற்றதை அதுப் பார்த்துக் கொள்ளும்" என்று எண்ணியவாறே அவன் காலத்தை நகர்த்திக் கொண்டு இருந்தான்.

அவன் தந்தை ஒரு சிறிய இசை கலைஞர் ஆக இருந்ததோ இல்லை அவனின் சகோதரர்கள் அனைவரும் இசைப் பிரியர்களாக இருந்ததோ என்னவோ இசை மைக்கேலின் வாழ்வோடு எப்பொழுதும் கலந்திருந்தது.

அவன் இசையை அவனது உணர்ச்சிகளின் வடிகாலாகப் பார்த்தான். இசை அவனது மகிழ்ச்சியையும் துக்கத்தையும் அவனது மனதிற்கேற்ப வெளிப்படுத்துவதை உணர்ந்தான். செம்புலம் சேர்ந்த நீர்ப் போல விரைவில் அவனும் இசையோடு கலக்க ஆரம்பித்தான்.

அவனது அந்த இசை ஆர்வமும் திறமையும் தான் அந்த சிறு வயதிலையே அவன் அவனது சகோதரர்களுடன் மேடையேறி பாடப் போவதை அவனது வீட்டில் யாரும் தடுக்க விடாது செய்தது. அவனது சகோதரர்களும் அவனை ஆவலுடன் அவர்களுடன் சேர்த்துக் கொண்டனர்.

அந்த காலத்தில், அமெரிக்காவில் உள்ள சிறு நகரங்களில் உள்ள உணவு விடுதிகளில் உணவு உண்ண வருவோரைக் கவரச் சிறு சிறு இசைக் குழுவினரை அழைத்துப் பாட வைப்பது என்பது வழக்கத்தில் இருந்தது. இசை ஆர்வம் உள்ளோர் அந்த மேடைகளை பயன்படுத்திக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிக் காட்டிக் கொண்டு இருந்தனர்.

அப்படிப்பட்ட ஒரு விடுதியில், 1965 ஆம் ஆண்டு தனது சகோதரர்களின் குழுவின் சார்பாக மைக்கேல் பாடுவதற்கு தயார் ஆனான்.

இசை உலகம் அது வரை தான் கண்டிராத புரட்சிக்கு தயார் ஆனது...!!!

தொடரும்....



பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு