இதோ மிகக் குறைந்த காலத்தில் இரண்டாவது பிரிவு. காலங்கள் வேகமாகத்தான் ஓடுகின்றன. நட்சத்திர கூட்டத்தினுள் ஒன்றாய் இருந்த பரணி நட்சத்திரத்திற்கு மட்டும் இன்று தரணியை சுற்றி பார்க்க ஆசை வந்து விட்டது.
சுற்றாது சூரியன் என்றும் பூமியை. இது விதி. அதை போல் நட்சத்திரங்களின் பாதையும் அவைகளின் விதிப்படியே. மாறாது.எனவே சோகத்திலும் அமைதி காத்தன மற்ற நட்சத்திரங்கள். சென்று வா பரணியே. உலகை வென்று வா!!! உன் பாதை வேறு. உன் பயணம் வேறு. மீண்டும் ஒரு நாள் நம் வழிகள் சந்திக்கும். அன்று சந்திப்போம் புன்னகையோடு. இன்று பிரிவோம் கண்ணீரோடு . 

"அறிவுரை வழங்கும் தரணியில்
    நல்லுரை உதிர்த்த பரணியே - பொய்யல்ல
தோழர்களின் நலனுக்காக
   அன்பால் கட்டும் அரண் நீ- என்றால்!!!

நாம் பிரியும் தருணம்
    நெருங்கிவிட்டதை உணர்கின்றேன்
ஆம்,
நம் அர்த்தமில்லா வார்த்தைகளை
இதோ
அர்த்தமாய் மௌனங்கள் நிரப்பிக் கொண்டிருக்கின்றன!!!
இது பிரிவுக் காலம் தான்!!!

எதை நோக்கி உன் பயணம்,
இலக்கின்றி காற்றில் பயணிக்க
     நீ மரம் துறந்த இலை அல்லவே...
நீ பறவை
   அதுவும் அண்டங்கள் அளக்க எத்தனிக்கும் பறவை!!!
காலத்தால் கட்டுண்ட சிறகுகள்
    இன்று காலத்தாலே விடுவிக்கப்பட்டு விட்டன...

உனக்காக,
உள்ளங்கள் காத்திருக்கின்றன வெல்ல
  செல்வங்கள் காத்திருக்கின்றன அள்ள
நேரம் கனிந்து விட்டது தோழனே-
   சிறகை விரிக்க ... தொலை தூரம் பறக்க!!!

புறப்படு...
 எட்டுத் திசையும் உன் சிறகு எட்ட வேண்டும்
    நீ பறக்கையில் இமயமும் உன் கால் தட்ட வேண்டும்!!!
இருந்தது போதும்,
இரவை அலங்கரிக்கும் நட்சத்திரமாய்...
  ஓர் அறை ஓரச்சித்திரமாய்...
மாறி விடு ஓர் கதிரவனாய்
   ஒளி வீசும் பகலவனாய்!!!
நாளை சொல்கின்றோம்....
அதோ அந்த தரணியின்
    உதயசூரியன் எங்கள் பரணி என்று!!!
புறப்படு...
 உன் பயணங்கள் காத்து இருக்கின்றன!!!
நேசத்துடன் வாழ்த்துகள்!!!"
                                                  - வழிப்போக்கன்

1 comments:

No more words to say...

பயணிகள்

Blog Archive

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி